தலைநகர் டெல்லி, தொழில்நகர் மும்பையை அடுத்து சமீபத்தில் காரைக்காலில் பாலியல் பலாத்கார பயங்கரம். டெல்லியும் மும்பையும் தேசத்தின் வட பகுதியில் அமைந்த உலகறிந்த மாநகரங்கள். காரைக்காலோ தேசத்தின் தென்கோடியில், புதுவை யூனியனை சேர்ந்த ஊடக வெளிச்சம் பரவாத நகரம் ! இது வரையில் இப்படிப்பட்ட குழு பாலியல் பலாத்காரங்களை பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி வாயிலாக செய்தியாக மட்டுமே தெரிந்து கொண்டு, இங்கு அதெல்லாம் சாத்தியமில்லை என்ற மாயையான பாதுகாப்பு உணர்ச்சியுடன் வாழ்ந்த மக்களை கொண்ட ஊர் ! மேலும் மேற்சொன்ன சம்பவங்கள் ஊடகங்களின் மூலம் வெளிச்சத்துக்கு வந்ததவை ! வெளியே தெரியாமல், அல்லது ஊடங்கங்களுக்கு தெரிந்துவிடகூடாது என மறைக்கப்படும் பாலியல் வன்முறைகள் எத்தனையோ ! காரை சம்பவத்துக்கு பிறகு நாம் அறிந்து கொள்ள வேண்டிய பயங்கரம்... இந்தியாவின் உச்சி முதல் பாதம்வரை, தலைநகரம், மாநகரம், சிற்றூர், கிராமம் என காஸ்மோபாலிடன் கலாச்சாரம் முதல் கிராம வாழ்க்கை வரை மொழி வேற்றுமைகள் கடந்து, மாநில கலாச்சார பிரிவுகள் தாண்டி சமூகமெங்கும் புரையோட தொடங்கிவிட்ட பாலியல் வக்கிரம் !
பாலியல் பலாத்காரம், வன்புணர்ச்சி முதலியவை நேற்றிலிருந்து திடீரென தோன்றியவை இல்லைதான் ! இக்குற்றங்கள் நிகழாத நாடு என்று எதுவும் கிடையாதுதான் ! ஆனால் பாரத தேசத்தின் புகழ் பரப்பிய மேற்சொன்ன சம்பவங்கள் நடந்த சூழலும், ஒன்றுக்கும் மேற்பட்ட, மிக இளவயதுடைய இளைஞர்கள் இக்குற்றங்களில் ஈடுபட்டதும் மிக தாமதமாக நமக்கு கிடைத்திருக்கும், நம் எதிர்கால சமூகம் பற்றிய எச்சரிக்கைமணி ! அனைத்து சம்பவங்களிலும் குற்றம் செய்தவர்கள் மது போதையில் இருந்தார்கள் என்பதை நினைவில்கொள்ளும் போது ஒரு நீதிக்கதை ஞாபகத்துக்கு வருகிறது... ஒரு குழந்தையை கொல்வது, ஒரு பெண்னை பலாத்காரப்படுதுவது, மது அருந்துவது என மூன்றில் ஏதாவது ஒன்றை செய்யவேண்டும் என்று ஒருவன் கட்டாயப்படுத்தப்படும்போது மது அருந்தினால் அது தன்னைமட்டுமே பாதிக்கும் என்ற என்னத்தில் குடிக்க தொடங்கும் ஒருவன் போதையின் பிடியில் அந்த பெண்ணின் மீது மோகம் கொண்டு அவளை பலாத்காரப்படுத்த துவங்கி, அந்த நேரத்தில் பயந்து அழுது அவனுக்கு இடைஞ்சலாகும் குழந்தையையும் மூர்க்கமாக தாக்கி, அனைத்து படுபாதக செயல்களிலும் ஈடுபட்டுவிடுவதாக முடியும் அந்த கதையின் உண்மை நிகழ்வுகளாகிவிட்டன இந்த துயர சம்பவங்கள்.
பாலியல் குற்றங்கள் ஒருபுறம் என்றால் இப்படிபட்ட சம்பவங்களுக்கு பிறகு திருவாய் மலரும், சட்டம் இயற்றும் அரசியல்வாதிகள் மற்றும் சட்டத்தை காக்கும் காவலர்களின் விளக்கங்களை கேட்டால் தேசம் என்றுமே ஒளிராமல் போய்விடுமோ என்ற அச்சமே மிஞ்சுகிறது ! இதற்கு காரைக்கால் சம்பவம் ஒரு உதாரணம். ஆரம்பகட்ட போலீஸ் காவலின் போது குற்றமிழைத்தவர்களாக கருதி கைது செய்யப்பட்டவர்களுக்கு சாதகமாக, " பாதிக்கப்பட்ட பெண்கள் விபசாரிகள் ! " என கூறியதாக வங்கிகட்டிக்கொண்டார் ஒரு எம்.எல்.ஏ. பின்னர் மீடியாவிடம் " நான் விசாரித்த காவலர் ஒருவர்தான் அது விபசார கேஸ் என கூறினார் ! " என விளக்கியுள்ளார் ! இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் ? பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண் என்றால் அவள் எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானலும் , யாராலும் பலாத்காரப்படுத்தபடலாமா ? பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்ணிடம் கூட அவளின் விருப்பத்துக்கு மாறான உறவில் ஈடுபடுவது குற்றமே என்ற சட்டம், சட்ட அளவிலாவது இருக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும் ? ! இது போன்ற சம்பவங்களுக்கு பிறகு ஜாதி மதம் தொடங்கி அரசியல், பணபல, புஜபல செல்வாக்கு என குற்றமிழைத்தவர்களை காக்க முயல்பவர்கள் புற்றீசல்களாய் கிளம்புவது இந்த தேசத்துக்கே உரிய துயரம் ! இன்னும் மோசம் பாலியல் துன்புறுத்தலுக்கு பெண்களின் ஆடையலங்கரங்களும் அவர்களின் நடத்தையுமே காரணம் என திருவாய் மலரும் அதிமேதாவிகள் !
மேல்நாட்டு கலாச்சார மோகத்தால் நம்மவர்கள் கெட்டழிகிறார்கள் என்ற பொதுவான புலம்பலை தாண்டி ஆழமாய் சிந்தித்தால்தான் நம்நாட்டில் பாலியல் பற்றிய தெளிவான புரிதலும், ஆரோக்கியமான விவாதங்களும் இல்லாததே இதுபோன்ற சீரழிவுகளுக்கு காரணம் என்பது புரியும். முத்தகாட்சிகளையும் உடலுறவு காட்சிகளையும் கொண்ட படங்கள் மேல்நாட்டு தொலைக்காட்சிகளில் கூட சகஜம். பத்து வயதுக்கு மேற்ப்பட்டவர்களுக்கானது, பதிணெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது என்ற அறிவிப்புகளுடன் ஒளிபரப்பபடும் நிகழ்ச்சிகளின் போது அறிவிக்கப்பட்ட வயதுக்கு கீழுள்ள குழந்தைகளும், சிறுவர்களும் அவர்களாகவே சானலை மாற்றிகொள்ளும் அளவுக்கான பக்குவத்தை அங்கு பள்ளிபருவத்திலிருந்தே கற்றுகொடுத்துவிடுகிறார்கள். பருவம் அடைந்ததிலிருந்தே காமம் என்றால் என்ன என்பதை தெளிவாக புரிந்துகொள்வதால் அவர்களின் கவனம் சதா சர்வகாலமும் பாலியல் யோசனைகளிலேயே கழிவதில்லை !
குடியும் அப்படிதான் ! மேல்நாட்டினர் அனைவருமே சதா சர்வகாலமும் குடியில் திளைப்பவர்கள் என்ற பொது எண்ணமும் தவறு ! உணவுக்கு முன்னரோ அல்லது உணவின் போதோ மதுவருந்துவது அவர்களின் கலாச்சாரம் சம்மந்தபட்டது என்றாலும் மேல்நாட்டினர் அனைவருமே குடிகாரர்கள் அல்ல ! மது அருந்துவதற்கும் மதுவின் போதைக்கு அடிமை ஆவதற்கும் வித்யாசமுண்டு. ஒவ்வொரு காலநிலைக்கும், ஒவ்வொரு உணவு வகைக்கும் ஏற்றமாதிரி பல மதுவகைகளை கொண்ட அவர்கள் அருந்துவது அவ்வப்போது சிறிது மட்டுமே ! அங்கு டிஸ்கோதேக்களும்,பார்களும் வார இறுதி நாட்களிலும் விடுமுறைதினங்களிலும் மட்டுமே நிரம்பி வழியும். காலையில் கல்லூரி மாலையில் பகுதிநேர வேலை என வாரம் முழுவதும் பணியில் கழித்துவிட்டு அவர்கள் கூத்தாடுவது எல்லாம் வார இறுதியில்தான் ! அவர்கள் நம்நாட்டின் இளம் தலைமுறையை போல் பெர்றோர்களின் பாக்கெட் மணியில் குடிப்பதில்லை ! மது அருந்துவதும் கலாச்சாரமாக அன்றாட வழ்வில் கலந்த மேலைநாட்டின் அரசாங்கங்கள் கூட அங்கு நேரடியாக மது விற்பதில்லை ! அதன் கேட்டை பற்றியே அதிகம் விளம்பரம் செய்கின்றன ! இங்கு ...?! வெள்ளைய ஏகாதிபத்திய ஆட்சிக்கு ஈடாக மதுவையும் எதிர்த்த காந்தியை மகாத்மாவாக்கி காந்தி ஜெயந்தி கொண்டாடும் அதே அரசாங்கம் தான் தெருவுக்கு தெரு தானே முன்னின்று மதுகடைகளையும் நடத்துகிறது ! மறுபக்கம் மக்களின் வரிப்பணத்தில் குடியின் கேட்டை பற்றியும் பிரச்சாரம் செய்கிறது !
பாலியல் கல்வி என்றாலே ஏதோ ஆபாசப்பட ஒளிபரப்பு என்பது போல பதறும் பெற்றோர்கள் இன்னும் இருக்கிறார்கள் ! என் பள்ளி ஆசிரியர் ஒருவரிடம் பேசும்போதெல்லாம் ஒன்றை சொல்லி ஆதங்கப்படுவார்... " HUMAN REPRODUCTION பத்தி பாடம் கொண்டாந்து பல வருசம் ஆயிடிச்சிய்யா... இன்னைக்கும் இந்த பசங்களுக்கு அந்த பாடத்தை எடுக்கறதுன்னாவே பதறுது ! ரெண்டும் இணைஞ்சாதான் இனப்பெருக்கம்ங்கற விஞ்ஞான உண்மையை சொல்றதுக்குள்ள ஒருத்தன் சார்ங்கறான்..ஒருத்தன் சிரிக்கறான்... நம்ம ஸ்கூலை விடுய்யா...கோ எஜிகேசன்ல என்ன பாடுபடுவாங்கன்னு நினைச்சி பாரு ! "
இதுதான் உண்மை ! பாலியல் என்றாலே படுக்கையறை காட்சி ஞாபகம் வரும்படி சமூகத்தை வளர்த்திருக்கிறோம் ! பெண் என்றாலே படுக்கையை பகிர்ந்து கொள்பவள் என்ற எண்ணத்தை வளர்த்ததில் இந்திய சினிமாவின் பங்கை குறைத்துகூறிவிட முடியாதுதான் ! சினிமா கண்டுபிடிக்கப்பட்டு நூறாண்டு தொட்டுவிட்ட பிறகும் காதலுக்கும் காமத்துக்குமான வித்யாசம் நம் சினிமாகாரர்களுக்கு புரியவில்லை என்பது கொடுமை ! நம் சமூகத்துபெண் உடுத்தகூடாது என கண்டிக்கப்படும் கவர்ச்சி ஆடைகளை அணிந்து பெண்கள் ஆடும் சினிமா காட்சிகள் ! காதல் பாடல் என்ற பெயரில் கலவி பற்றிய இரட்டை அர்த்த வரிகள் ! பார்க்கக்கூடாது என சொல்லப்படதெல்லாம் பிட்டுபட போஸ்ட்டர்களாய் சுவர்களில் ! சினிமா, டிவி பெட்டி தொடங்கி இண்ட்டர்நெட், ஸ்மார்ட்போன் வரை அனைத்திலும் நாம் தேடுவது செக்ஸ், செக்ஸ் மற்றும் செக்ஸ்தான் !சென்ற ஆண்டில் செக்ஸ் என்ற சொல்லை தேடலாக இணையத்தில் அதிகம் உபயோகித்த நாடுகளில் நமக்கு இரண்டாம் இடம் ! முதலிடம் நம் அண்டைதேசமான இலங்கை ! இன்னொரு பெருமையான செய்தி... இணையத்தில் ஏற்றப்படும் செல்போன் மூலம் எடுக்கபட்ட ஆபாச காட்சிகளில் பெரும்பகுதி நம் தாய்த்திருநாட்டில் எடுக்கப்பட்டவை ! விட்டுக்குள்ளும், பள்ளி கல்லூரிகளிலும் கற்பிக்கப்படுவது ஒன்றும் வெளியே பார்ப்பது வேறொன்றுமாய் பிரிந்த தெளிவற்ற சமூகத்தால் பாராளுமன்றத்தில் செல்போன் ஆபாசப்படம் பார்க்கும் எம்.பிக்களைதான் உருவாக்க முடியும் !
ஒவ்வொரு சம்பவத்தின் போதும் பொதுமக்களும், ஊடகங்களும், தொண்டு நிறுவனங்களும் அரசு இயந்திரத்தை குறை கூற, ஓட்டு வங்கியையும், தேர்தல் அரசியலையுமே நோக்கமாக கொண்ட ஆளும் வர்க்கம் ஒன்றுக்கும் உதவாத விசாரணை குழுக்களையும், தொலைநோக்கற்ற அவசர சட்டங்களையும் அள்ளி வீச, அடுத்த சில நாட்களில் அனைத்தையும் மறந்துவிட்ட திருவாளர் பொதுஜனம் சினிமா, ஐபிஎல் கிரிக்கெட், டாஸ்மார்க் என எதேனும் ஒரு இந்திய வலிநிவாரணிகளில் ஐக்கியமாகிவிடுகிறார் ! ஊழல், அதிகாரவெறி, சுயலாப அரசியல் என சீரழிந்துவிட்ட ஆளும் வர்க்கம் சட்டென விழித்து சமூகசீர்த்திருத்தங்களில் ஈடுபட்டாலும், குடி, பாலியல் வன்முறை போன்ற சீரழிவுகளை சட்டத்தினால் மட்டுமே சரிசெய்ய முடியாது என்பதை உணர வேண்டும். சமூகம் என்பதே தனிமனிதனும் அவன் சார்ந்த குடும்பங்களும்தான். குடும்ப அடுக்கில் ஒருவனுக்கு பயிற்றுவிக்கப்படும் தனிமனித ஒழுக்கமே பிற்காலத்தில் அவனை சமூக பொறுப்புள்ளவனாக மாற்றும். ஆக, பாலியல் வன்முறை தொடங்கி குடி, போதை பழக்கம் வரை அனைத்து சீரழிவுகளையும் பெற்றோர்கள் முயற்சித்தால்மட்டுமே களைய முடியும் !
உலகின் அனைத்துவீட்டு ஜன்னல்களும் நம் படுக்கையறைக்குள் நுழைந்துவிட்ட இன்றைய நுகர்வோர் கலாச்சார கணினி யுகத்தில் நமது அருகாமை குழந்தைகளுக்கு என்றும் இல்லாத அளவுக்கு அவசியமாகிறது ! வட்டிக்கு ஒட்டியாணம் வாங்கி, பின்னர் வட்டி கட்ட ஒட்டியாணத்தை விற்ற கதை உண்மை நிகழ்வாக மாறகூடிய அளவுக்கு பணத்தை துரத்திகொண்டு ஆளுக்கு ஒரு திசையில் ஓடிகொண்டிருக்கும் இன்றைய நிலையில்தான் குடும்ப ஒற்றுமை அவசியம் தேவை ! நாளொன்றுக்கு அதிகபட்சம் ஒரு மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட்டு, அவர்களுடன் ஆதரவாக பேசி, அவர்களின் சந்தேகங்களை விளக்கி அவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்டாலே போதும் ! பல சமூக சீரழிவுகளிலிருந்து அவர்களை, வருங்கால சமூகத்தை காக்கலாம். ஒவ்வொரு பருவத்துக்கும், ஒவ்வொரு காலத்துக்கும் ஒரு விளையாட்டு என்றிருந்த சமூகத்தின் குழந்தைகளின் உலகம் இன்று நான்கு சுவர்களுக்குள் சுருங்கிவிட்டது. பிறக்கும் முன்பே பெற்றோர்களால் எதிர்காலதிட்டங்களுக்குள் சிறைவைக்கப்படும் இவர்களுக்கான வெளியுலக சாளரங்கள் தொலைக்காட்சியும் கணினி திரையும்தான் ! தாய் தகப்பன் இருவரும் வேலைக்கு செல்லும் குடும்பத்தின் குழந்தைகளுக்கு ஏற்படும் நட்பையும், அவர்கள் கற்றுகொள்ளும் பழக்க வழக்கங்களையும், கண்காணிக்கவேண்டியது பெற்றோர்களின் கடமை. பல லட்சம் நன்கொடையில் தனியார் பள்ளியில் சேர்த்துவிட்டோம், மாதாமாதம் குழந்தைகளின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்கிறோம் என்ற ரீதியில் சமூக அந்தஸ்த்துக்கான அடையாளங்களை மட்டுமே குழந்தை வளர்ப்பாக கருதி திருப்திபட்டுக்கொள்ளும் பெற்றோர்களின் பிள்ளைகள் தடம்புரள வாய்ப்புகள் அதிகம் !
பெண் என்பவள் போக பொருள் அல்ல, அவளும் ஆண்களை போலவே அனைத்து திறமைகளும் கொண்ட சக உயிர், அவளுக்கும் உடல் உபாதைகளும் பிரச்சனைகளும் உண்டு என்ற எண்ணத்தை சிறுவயதிலேயே விதைக்க வேண்டும். நம் வீட்டு பெண்களை போலவே மற்ற பெண்களுக்கும் அனைத்து உறவுகளும் உண்டு, அவள் ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கலாம், வேறொரு இளைஞனுக்கு சகோதரியாக இருக்கலாம் அனைத்துக்கும் மேலாக அவளுக்கென தனி ஆசாபாசங்கள் உண்டு என ஒவ்வொரு ஆணும் சிந்திக்கும் நிலை வர வேண்டும். புகை பிடித்தல் மற்றும் குடியினால் உண்டாகும் கேடுகளும், அதனால் ஏற்படும் இழப்புகளும் சிறுவயதிலேயே உணர்த்தப்பட வேண்டும். தனிமனித ஒழுக்கத்தை கற்பிக்க பெரிய படிப்பறிவோ பொருளாதாரமோ தேவையில்லை. இன்று யாருக்கோ ஏற்பட்ட பாதிப்பு நம் வீட்டு பெண்களுக்கும், பிள்ளைகளுக்கும் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்று உணர்ந்தாலே போதும் !
காந்தி என்ற தனிமனிதரின் பின்னால் பல லட்சம் மனிதர்கள் திரண்டதால்தான் சுதந்திரம் சாத்தியமாகியது. " என்று ஒரு பெண்ணால் நள்ளிரவில் பாதுகாப்பாக வெளியே சென்றுவர முடிகிறதோ அன்றுதான் தேசத்துக்கு உண்மையான சுதந்திரம் " என்ற அந்த மகாத்மாவின் வார்த்தைகளை, தனிமனிதர்கள் கூட்டாக முயற்சித்தால் இன்னும் ஒரு அறுபது வருடங்களிலாவது சாத்தியமாக்கலாம் !
இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.