Saturday, August 2, 2014

விடுமுறை விண்ணப்பம் !

பிரான்சில் ஜூலை முதல் தேதியிலிருந்து கோடை விடுமுறை தொடங்கிவிட்டது  ! செப்டம்பர் முதல் தேதி வரை, இரண்டு மாதங்களுக்கு நாடே மந்தமாகிவிடும் !

" வருடத்தின் பத்து மாதங்களுக்கு மட்டும் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் ஒரே நாடு பிரான்ஸ் ! " என்றான் ஒரு அமெரிக்க பத்திரிக்கையாளன் ! உண்மைதான் !

தேசிய விழா நாளான ஜீலை 14 அன்று உலகின் மிக அழகிய சதுக்கம் என போற்றப்படும் சாம்ஸ் எலிசே சதுக்கத்தில் கொடியேற்றி ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டு சர்வதேச விருந்தினர்களுடன் மதிய உணவருந்திவிட்டு கோடை விடுமுறைக்கு பெட்டி படுக்கைளுடன் கிளம்பிவிடுவார் ஜனாதிபதி ! அவருடன் அரசு இயந்திரமும் இடம் மாறும் ! ( தமிழ்நாட்டின் கொடநாடு உங்களுக்கு ஞாபகம் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல ! )

பாரீஸ் மாநகரமே வெறிச்சோடி சுற்றுலா முனைகளில் மட்டுமே கூட்டம் அள்ளும் ! மற்ற இடங்களில் வணிகம் தொடங்கி மருத்துவசேவை வரை எங்கும் குறைந்தபட்ச ஊழியர்கள் மட்டுமே !

அவர்களுக்கு விடுமுறை தவிர்க்ககூடாத புனித யாத்திரை !

விடுமுறையை பற்றி பேசும் போதெல்லாம் என் பிரெஞ்சு தோழி கரோலினின் கண்கள் மின்னும் !

" நான் விடுமுறைகளின் பொழுதுகளில்தான் வளர்ந்தேன் ! "  என்பாள்

யக்கமும் இடம் பெயர்தலும் இயற்கையின் நியதி. உயிர்த்திருப்பதற்கான ஆதாரங்கள் ! ஆதிமனிதன் விடாது இடம்பெயர்ந்தான். கலாச்சாரங்கள் தோன்றி மொழிகள் வளமானதற்கு ஆதிமனிதர்களின் இடப்பெயர்வே காரணம்.

கலாச்சாரங்களும் மொழிகளும் ஸ்திரப்பட்டு நாடுகள் தோன்றிய பிறகு மனித வாழ்க்கையில் இடம் பெயர்தல்கள் குறைந்துவிட்டன ! போர்களின் பெயரிலும்,இன அழிப்பின் துயரிலும் இடம் பெயர்வது மரணிப்பதற்கு சமமானது !

ஆண்டு முழுவதும் வேலை வேலை என ஓடிவிட்டு விடுமுறையில் மட்டுமே சுதந்திரமாய் சுவாசிப்பதின் அருமையை உணரும் இன்றைய மனிதனின் நிலையை புரிந்துகொண்டால்  கரோலின் கூறியதின் அர்த்தம் புரியும். பணி நிமித்தமாய் பல நாடுகள் ஓடி பல்வேறு மனிதர்களை சந்திப்பதற்கும் எந்த கட்டுபாடுகளும் அற்ற விடுமுறை பொழுதுகளில் அந்நிய ஊர்களின், தேசங்களின் மனிதர்களுடன் பழகி அவர்களின் பண்பாடுகளை கற்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு !

சில ஆண்டுகளுக்கு முன்னர் பதிணெட்டு வயது பிரெஞ்சு இளைஞன் ஒருவன் பகுதிநேர ஊழியனாக என்னுடன் பணிபுரிந்தான். மது, போதை பொருட்கள் என வார‌ இறுதி முழுவதும் ஏதாவது ஒரு போதையில் திளைப்பான் ! சிக்கு தலையும் அழுக்கு உடையுமாக அவனை  காணும்போதெல்லாம் என் உயரதிகாரியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் என்றாலும் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாதபடி அவனின் வேலை சுத்தம் !

சட்டென ஒரு நாள் படிப்பையும் வேலையையும் ஒரு சேர உதறியவன் , பதிணெட்டு வயதில், அவனின் வயதையொத்த இளம் பெண்ணுடன்,  விமான டிக்கெட்டும் சில நூறு யூரோ டாலர்களுமாக இந்தியா போகிறேன் என கிளம்பினான்  !  ( கவனித்து வாசிக்கவும் ! அவர்கள் ஓடிப்போகவில்லை !! )



 ஆங்காங்கே தங்கி சிறுவேலைகள் செய்தபடி இமயம் முதல் குமரிவரை சுற்றிவிட்டு இரண்டு வருடங்களுக்கு பிறகு என்னை காண கோட்டும் டையுமாக வந்தான் !

" என்ன திருந்திவிட்டாய் போலிருக்கிறது ?! " என கேட்டேன் !

" திருந்தவில்லை ! தெளிந்துவிட்டேன் ! இரண்டு வருடங்கள் உலகம் சுற்றி படித்தேன் ! " என கண்ணடித்தான் !

மேலை நாட்டவர்கள் அப்படித்தான் ! அவர்களின் தெளிவு வேறொரு நிலை ! லாபமோ நட்டமோ அனுபவமே பிரதானம் ! பதிணென் பருவத்தின் இறுதிவரை கஞ்சா புகைத்துகொண்டிருப்பவன் இருபது, இருபத்துமூன்றாம் பிறந்த நாளன்று திடீர் ஞானம் பெற்றுவிடுவான் ! திருத்திய முடியும் டையுமாய் அவசரமாய் இறுதியாண்டு படிப்பை முடித்து, வேலை தேடி, கேர்ள் பிரெண்டுடன் தனிக்குடித்தனம் ஆரம்பித்துவிடுவான் !

சரி, அது போகட்டும் !

ரு பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை கொடைநாள் திருவிழாக்கள், சந்தனகூடு வைபவங்கள், மேரிமாதாவின் ஊர்வல தினங்கள் என திருவிழாக்களால் நிறைந்தன‌ நம் விடுமுறைகள் !

கோடை விடுமுறைகளில் நகரங்களிளிருந்து ஊர் திரும்பிய பிள்ளைகள் கொண்டு வந்த ஆச்சரியங்கள் பல ! அதற்கு மாற்றாக கிணற்று நீச்சல், போர்வெல் குளியல், திருவிழா கொண்டாட்டங்களின் தூங்காத ராவுகள், தாத்தா பாட்டி, அத்தை மாமாமார்களின் அன்பு உபசரிப்பு என நீங்காத பல நினைவுகளுடனும், திரும்பி வரும் ஏக்கத்துடனும் ஊர் திரும்பினார்கள் !

இன்று நம்மை வரவேற்க ஆட்களில்லாமல் கிராமங்கள் வெறிச்சொடிவிட்டன ! தாத்தா பாட்டிகள் தங்களுக்கு பரிச்சயமில்லாத பெருநகரங்களின் அடுக்குமாடி குடியிருப்புகளில் பிள்ளைகளால் அன்புடன் அடைத்துவைக்கப்பட்டிருக்கின்றனர் ! மிச்சமிருக்கும் சித்தப்பா மாமாக்களெல்லாம் ஆன்லைன் வர்த்தகம், டாப் அப் பிசினஸ் என, கூட ஒரு வேலை தேடி வருமானத்தை பெருக்க வருடம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் ! சித்திகளும் அத்தைகளும் சின்னதிரையின் முன்னால், சீரியல்களினுள் வாழ்க்கையை தொலைத்துவிட்டார்கள் !

பிள்ளைகளுக்கு அடுத்த ஆண்டு படிப்பின் மினி வருடமாக மாறிவிட்டன கோடை விடுமுறைகள் ! மிச்சமிருக்கும் நேரத்தை கழிக்க கார்ட்டூன் சானலும் வீடியோ கேமும் ! கிராமத்து விழாக்கள் கூட தங்கள் காலகட்டத்தை சுருக்கிகொண்டுவிட்டன ! பல காவல்தெய்வங்கள் புழுதிபடிந்து வெறிச்சோடிய முற்றத்தை நோக்கியபடி நிற்கின்றன, மக்களைதேடி !




நாளை  இந்தியா கிளம்புகிறேன்...

எங்களை போன்ற வெளிநாடுவாழ் மக்களுக்கு விடுமுறைக்கு தாய்நாடு வருவது என்பது ஒரு கல்லில் மாமரத்தையே சாய்க்கும் திறமைக்கு ஈடான சாகசம் ! ஒரு வருட சேமிப்பின் கணிசமான பகுதியை செலவு செய்யும் போது, அங்கிருக்கும் ஒரு மாத காலகட்டத்தில் சொந்த பந்தங்களின் குடும்ப விழாக்கள் தொடங்கி ஊர் திருவிழா வரை எல்லாவற்றுக்கும் இருக்கும்படி திட்டமிட்டு, மிச்ச நாட்களில் பங்காளி பகையாளிகளை சந்தித்து, அடுத்து ஊர் திரும்பும் வரை அங்கே கிடைக்காத பொருட்களை இங்கே சேகரிப்பதுவரை ஒன்றையும் தவறவிட்டுவிடக்கூடாது !




 ஒரு சித்தப்புவை பார்க்க மறந்தால் கூட " வெளிநாட்டு சம்பாத்தியம்ல... எங்களையெல்லாம் கண்ணுக்கு தெரியாதப்பா ! " என்ற அவப்பெயரை சுமக்க‌ நேர்ந்து ஒரு மாத விடுமுறை சந்தோசமும் சட்டென மறைந்துவிடும் !

சென்ற ஆண்டு இந்தியா வந்தபோது உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்றிருந்தேன் ! என்னை திரும்பி பார்த்து வா என்றவர்கள் மீன்டும் டிவி சீரியலில் லயித்துவிட்டார்கள் !

சரிதான் ! நான் அடுத்த ஆண்டு மீன்டும் வரலாம் ஆனால் அன்றைய டிவி சீரியல் வருமா ?!

நேற்று கேம் பாய், நின்டென்டோ, ப்ளே ஸ்டேசன் என வீடியோ கேம்கள் தொடங்கி மடி கணினி வரை அனைத்தையும் தேடி தேடி பெட்டிக்குள் அடைத்துகொண்டிருந்தான் என் பத்து வயது மகன் !

" இதெல்லாம் வேண்டாம் ! அங்கு நீ படிக்க  நிறைய இருக்கிறது ! " என்றேன்.

" எதை படிக்க‌ ?! " என கேட்டான்.

" நம் மண்ணை, மனிதர்களை ! " என்றேன்

புரிந்தும் புரியாமலும் தலையாட்டினான் ! அவன் நன்றாக படிக்க‌ வேண்டும் !


வலைப்பூ என் ஆத்மார்த்தமானதாக மாறிவிட்டதால் விடுமுறையிலும் தொடர்வேன் !


 இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.