Saturday, July 18, 2015

காலம் திருடிய கடுதாசிகள் !

வீட்டின் கூடத்தில், மேசையின் மீதோ, சுவற்றில் பொருத்தப்பட்ட மர ஷெல்பிலோ தூசி படிந்த, வெல்வெட் துண்டு போர்த்தப்பட்ட பெரிய மோர்பி ரேடியோ... சமையல் புகையினால் பழுப்பேறிய அந்த ரேடியோவுக்கு அருகில் ஒருசில பழைய இன்லாண்டு லெட்டர் மற்றும் காந்திதலை அச்சிட்ட மஞ்சள் நிற தபால் அட்டைகள்... அபூர்வமாய் ஒன்றிரண்டு வெளிநாட்டுத் தபால்கள் !...

ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் மேல் நடுத்தர மற்றும் நடுத்தரக் குடும்ப வீடுகளில் காணக்கிடைத்த அந்தக் காட்சியைத் தங்கள் மனப்பெட்டகத்தில் ஓவியமாய் ஒளித்துகொண்டவர்கள் அதனைச் சிரமம் பார்க்காமல் தேடி எடுங்கள் ...

இந்தப் பதிவு சொல்லப்போவது " விவித்பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு... " என வயலின் ஆக்ரோசத்துடன் தொடங்கி, ஒரு தலைமுறையின் சுகதுக்கங்களின் துணையாய் தவழ்ந்த, அந்த மோர்பி ரேடியோவின் வழியே கசிந்த, திரையிசை தூறலை அல்ல... அதற்கருகே அடுக்கப்பட்டிருக்கும், அந்தச் சுக துக்கங்களைப் பதிவு செய்த " கடுதாசிகளின் " கதையை !


தெருவுக்கு ஒரு தொலைபேசியே அதிகம் என்ற அந்தக் காலத்தில் அதிநவீன தனிமனித தகவல் தொடர்பாக இருந்தவை கடிதங்களும் தந்திகளும் !

" பொண்ணைப் புடிச்சிருக்கு... கொடுக்கல் வாங்கலும் சரிதான்.... இருந்தாலும் குடும்பத்துல கலந்துக்கிட்டுக் கடிதம் போடறோம் ! " எனச் சொல்லிவிட்டு எழுந்துபோகும் மாப்பிளை வீட்டாரின் சம்மதம் கடிதம் வந்து சேரும் வரை தூக்கம் தொலைத்த பெண்ணின் பெற்றோரையும், " தாயும் சேயும் நலம் " என்ற வரிகளைத் தாங்கிய கடிதம் கையில் கிடைக்கும் வரை கர்ப்பிணி மகளை நினைத்து அல்லும் பகலும் கலங்கிய தாயையும், " அப்பாவுக்குத்தான் உடல்நிலை சரியில்லை. நாங்கள் இருக்கிறோம். புகுந்த வீட்டில் நீ முகத்தைத் துக்கிவைத்துக்கொண்டிருக்காதே ! " என்பதைப் படித்துத் துக்கத்தைத் தொண்டைக்குழிக்குள் அடைகாத்த மகளையும் இன்றைய குறுஞ்செய்தி, முகநூல் தலைமுறைக்குத் தெரியுமா ?!

" காலணா கடுதாசிக்கு வக்கத்துப் போயிட்டேன்... இருக்காளா போயிட்டாளான்னு தெரிஞ்சிக்கக் கூட ஒரு கடுதாசி போடக்கூடாதா ?... " என்ற புலம்பல் பிள்ளைகளால் மறக்கப்பட்ட முதிய தாய்மார்களின் அன்றாட அங்கலாய்ப்பாய் இருந்த காலம் அது !

ன்றைக்கும் கடிதம் என்ற வார்த்தையைக் கேட்டாலே எனது பால்ய வயதின் நிகழச்சி ஒன்று மனதில் நிழலாடும்...

எங்கள் தெருவில் ஒரு பெட்டிக்கடை. தன் வீட்டு திண்ணையைக் கடையாக மாற்றியிருந்த அந்தக் கடையின் உரிமையாளரை தெருப்பிள்ளைகள் அனைவரும் மாமா என அழைத்ததால் அந்தக் கடைக்கு மாமா கடை என்றே பெயர் ! பெரியவர்களுக்கு அவர் கடை மாமா !

பாட்டிக்காக " லெட்டர் " வாங்க மாமா கடை சென்றேன்...

கடையில் நல்ல கூட்டம்.

" ஒரு இங்கிலாந்து லெட்டர் கொடுங்க ! "

எட்டணா என ஞாபகம்... நான் காசை நீட்டி கேட்க, என்னை ஏற இறங்க பார்த்தவர், வேறு வியாபாரத்தைக் கவனிக்கத் தொடங்கினார் !

" கொஞ்சம் இரு தம்பி !.... "

நான் மீன்டும் மீன்டும் கேட்க, அவரோ என்னைக் காக்கவைத்துவிட்டு மற்ற வியாபரங்களைப் பார்க்க, எனக்கு அழுகையும் ஆத்திரமும் முட்டியது !

" தம்பி என்னா கேட்டீங்க ?.... "

ஒரு வழியாய் அனைத்து வியாபரங்களையும் முடித்துவிட்டு அவர் கேட்க,

" ஒரு இங்கிலாந்து லெட்டர் !... "

நான் கோபமாய்க் கூற,

" இங்கிலாந்து லட்டரா ?... அதுக்குத்தான் நிக்கச் சொன்னேன்... அது இங்கிலாந்து லட்டர் இல்லம்மா... இன்லாண்டு லெட்டர்... இன்லாண்டுன்னா உள்நாடுன்னு அர்த்தம்... படிக்காத நாங்க வேணா தப்பா சொல்லலாம்... படிக்கற தம்பி நீங்க சரியா புரிஞ்சிக்கனுமில்ல ?.... "

அவரின் வாஞ்சையான வார்த்தைகள் இன்றும் மனதில் ஒளித்துக்கொண்டிருக்கின்றன !


புதிதாய் திருமணமான எதிர்வீட்டு அக்காவின் கணவருக்குத் துபாயில் வேலை...

" என்ன சொல்லி நான் எழுத... என் மன்னவனின் மனம் குளிர... "

" டேய்... அது என்னா படம்ன்னு தேடி கேசட் கொண்டு வரியா ?... "

வானம் குளிர்ந்து மாலை மயங்கிய ஒரு பொழுதில், தெருக்கோடி டீக்கடையிலிருந்து காற்றில் கலந்து காதுகளில் கசிந்த சினிமா பாடலை கண்களில் நீர் கட்ட லயித்துக் கேட்ட அக்கா கெஞ்சியது !

வாடகை வி சீ ஆர் கேசட் பிளேயர் பிரபலமான காலம்...

ராஜா ரெக்கார்டிங் சகாயம் அண்ணனிடம் படத்தை விசாரித்து, அப்போது ஊரிலிருந்த அனைத்து வீடியோ கேசட் கடைகளிலும் அலைந்து, அந்தப் படத்தைக் கொண்டு வந்தேன் !...

ராணிதேனி !

பார்க்க முடியாத பாடாவதி பிரிண்டை பரவசமாய்ப் பார்த்து, அந்தப் பாடலை மட்டும் பலமுறை ரீவைண்ட் பண்ண சொல்லி கேட்டது அக்கா !

" டேய்... அவருக்கு ஒரு லெட்டர் எழுதனும்... எனக்குச் சரியா எழுத வராதுடா... நான் சொல்றேன்... நீ எழுதறியா ? "

தயங்கி தயங்கி கேட்ட அக்காவுக்குக் கடிதம் எழுதி கொடுத்தேன்.

" டேய்... இதை யார் கிட்டேயும் சொல்லிடாதேடா ! "

காதலில் உருகி எழுதிய கடிதம் சொந்த கணவனுக்குத்தான் என்றாலும் சஙடமாய்க் கேட்டது அக்கா !

ஒவ்வொரு நாளும் காத்திருந்து, எதிர்பார்ப்பு பொய்த்த ஒரு பகலில் கணவனிடமிருந்து பதில் கடிதம் !

" டேய்... டேய்... படிச்சி சொல்லுடா... "

அன்பு மனைவி என ஆரம்பித்த கடிதத்தை, பொதுவான விசாரிப்புகளுக்குப் பிறகு,... நீ ஏதேதோ எழுதியிருக்கிறாய் அதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு எனக்குப் புத்தியும் இல்லை நேரமும் இல்லை என முடித்திருந்தார் !

படித்துவிட்டு அக்காவை பார்த்தேன்... சலனமற்ற முகத்துடன் கடிதத்ததை வாங்கி நான்காய் மடித்துக்கொண்டு விடுவிடுவெனப் போய்விட்டது அக்கா !

இப்படி எத்தனையோ அக்காக்களின் புரிந்துக்கொள்ளப்படாத பிரியங்களைச் சுமந்து திரிந்தன அன்றைய கடுதாசிகள் !


பால்காரர் அன்றாட வாழ்க்கையின் மிக முக்கிய அங்கத்தினராகத் திகழ்ந்த நாட்கள் அவை... பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவை கொண்டுவரும் தபால்காரரை தலையில் தூக்காத குறையாகக் கொண்டாடிய காலம் !

காலை நேர பரபரப்பு முடித்து, முந்தானையில் கை துடைத்தபடி பெண்கள் வீட்டு வாசலில் நிற்க தொடங்குவார்கள்... ஓய்வு பெற்ற திண்ணை தாத்தாக்களின் பார்வைகள் தெருக்கோடியை மொய்க்கும் ! ...

பதினொரு மணி வாக்கில் பழையைச் சைக்கிளின் முன்னும் பின்னும் பெரிய பைகளில் தபால்களும், பார்சல்களும் தளும்ப, பிரசன்னமாவார் தபால்காரர் !

" தபால்காரரே.... நமக்கு..... "

" இன்னைக்காச்சும் மணியார்டர் உண்டா... "

" பாவிபய கடுதாசி போட்டிருக்கானா தம்பி ?.... "

ஒவ்வொருவீட்டு வாசலின் விசாரிப்புக்கும் ஒவ்வொருவிதமாய்ப் பதிலளிப்பார்... ஆனால் முகத்தின் சிரிப்பு மாறாது !

" இருக்கு !... இருக்கு... ! "

" தேதி பொறந்து ரெண்டு நாளுதானே ஆகுது தாத்தா... பென்சனெல்லாம் நாளைக்குத்தான் டிஸ்பேட்ச் பண்ணுவாங்க ! "

" ஏன் ஆத்தா கோபப்படறே... கடுதாசிதானே ... ? போட்டிருப்பான் !... நாளைக்கு வரும் ! "

தலைவாசலில் நின்று அவர் விசிறும் கடிதங்கள் மிகச் சரியாய் வீட்டினுள் விழும் !

சைக்கிளை ஸ்டாண்ட் போட்டுவிட்டுத் திண்ணையில் தபால்காரர் அமர்ந்தால் மணியார்டர்... ரெஜிஸ்டர் தபால் அல்லது பார்சல் !

" இருங்க தபால்காரரே... அடியேய்... காபி கொண்டா... "

" இல்லீங்க இருக்கட்டும் !.... "

" அட ஒரு வாய் மோர் இல்லேன்னா தண்ணியாச்சும் குடிச்சிட்டு போங்க ! "

மணியார்டர் பாரத்தை விரித்து, பணத்தை எண்ணுபவருக்கு உபசாரம் தூள் பறக்கும் ! வரும் தொகையின் அளவை பொறுத்து அவரின் கையில் கொஞ்சம் தினிப்பவர்களும் உண்டு ! காபியோ, மோரோ அல்லது சிறு பணமோ எதுவாக இருந்தாலும் சிரிப்புடன் பெற்றுக்கொள்வார் !

அப்போதெல்லாம் பார்சல்கள் மிக அரிதாக வருபவை ! தெருவில் யார் வீட்டுக்காவது பார்சல் வந்துவிட்டால், வந்தது என்ன என்பதை அறிந்துகொள்ளத் தெரு முழுவதும் விசாரணையில் இறங்கும்... அதுவும் வெளிநாட்டு பார்சலாக இருந்தால் தெருவே தூக்கமின்றிப் புரளும் !

சிங்கப்பூரிலிருந்து வந்தது ஒரு சாக்லெட் பட்டையானாலும், பங்கு வைக்கப்பட்டுத் தெருவின் அனைத்து வீடுகளுக்கும் வரும் !

" கொஞ்சம் படிச்சி சொல்லுப்பா.... "

" இரு ஆத்தா... லைனை முடிச்சிட்டு மதியமா வந்து எழுதி தரேன்... "

கண் பார்வை மங்கிய பாட்டியின் கடிதத்தைப் படித்துகாட்டிவிட்டு, பதில் எழுத மதிய உணவுக்குப் பின்னர் வருவார் !

" தபால்காரரே... அடுத்த ஞாயித்துக்கிழமை நம்ம பெரிய பொண்ணுக்கு வலைக்காப்பு... வீட்டுக்கு வந்து.... "

" அதெல்லாம் வேண்டாம்மா... அதான் சொல்லீட்டீங்களே... "

அதுநாள் வரையிலும் காக்கி யூனிபார்மில் மட்டுமே பார்த்த தபால்காரர் வேட்டியும் சட்டையுமாகக் குடும்பத்துடன் வந்து கலந்துக்கொள்ளுவார்.

கொடுப்பார்கள், அழைப்பார்கள் என அவர் நினைத்து பழகாத, காரியம் ஆகக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கும் இல்லாதிருந்த காலம். அரசு ஊழியர் என்ற நிலையைத் தாண்டி, ஒவ்வொரு நாளும் நம் வீடு வரும் சொந்தக்காரரை போலத் தபால்காரர் நடத்தப்பட்ட காலம் ! சம்பளத்துக்கு வேலை என்ற கடமையையும் தாண்டி தான் சுமந்து வரும் கடிதங்களில் பொதிந்த சுக துக்கங்களைத் தன்னுடையவைகளைப் போலப் பாவித்த அரசு ஊழியரின் காலம் !

" வீட்டு ஆம்பளைங்க யாரும் இல்லையா ?... "

தந்தியுடன் வருபவர் சன்னமான குரலில் கேட்டால் வீட்டுப் பெண்கள் பதற தொடங்கிவிடுவார்கள்...

" ஒண்ணுமில்லேம்மா... உடம்பு முடியலன்னுதான் இருக்கு.... "

காத்திருந்து குடும்பத்தில் மூத்தவர்களிடம் துக்கச் செய்தியை பக்குவமாய்ச் சொல்லிவிட்டு போவார்.

" .... ருக்காரா ? "

கோடையின் வெப்பம் தகித்த ஒரு மதியத்தில் என் பெயரை சொல்லி கூப்பிட்டார் தபால்காரர்...

என் பெயருக்கு வந்த முதல் கடிதம் !

" உனக்காடா ?... உனக்கு யாருடா கடிதம் போட்டது ?... "

பள்ளி ஹாஸ்டலில் தங்கி என்னுடன் படித்த அமீன் எழுதிய கடிதம் !

மூன்றாம் வகுப்புக் கோடை விடுமுறையில் இருந்த என்னை வீட்டினர் அனைவரும் சுற்றிக்கொள்ள, அந்தக் கடிதத்தைப் படித்தபோது உண்டான பரவசம் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது !

தீபாவளி, பொங்கல் விழாக்களின் போது பலருக்கு வாழ்த்து அட்டைகள் வரும்...

நானும் ஒரு பொங்கல் அட்டை வாங்கி என்னுடன் படித்த அய்யாக்கண்ணு அனுப்புவது போல, கையெழுத்தை மாற்றி எழுதி எனது முகவரிக்கே அனுப்பி, நண்பனிடமிருந்து வந்ததாக வீட்டில் பெருமைபட்டுக்கொண்டதை இன்று நினைத்தால் சிரிப்பு வருவதுடன் அன்று அப்படிச் செய்யத்தூண்டிய உளவியல் காரணத்தையும் அறிந்துக்கொள்ள ஆவல் எழுகிறது !

புதுவை மாநிலத்தின் பல குடும்பங்களைப் போல என் குடும்பமும் பிரெஞ்சு குடியுரிமை கொண்ட குடும்பம் என்பதால் பிரான்சிலிருந்து தாத்தா, சித்தப்பாக்களின் தபால்கள் தொடர்ந்து வந்தபடி இருக்கும்...

பிரான்சிலிருந்து அனுப்பப்பட்ட கடிதம் எங்களை வந்தடைய ஏறக்குறைய பதினைந்து நாட்கள் ஆகும். அந்தப் பதினைந்து நாள் கணக்கு என் சித்திமார்களுக்கு அத்துப்படி ! தபால்காரர் வரும்வரை காத்திருக்க முடியாமல் என்னைத் தபால்நிலையத்துக்கே விரட்டுவார்கள் !

காலை பத்துமணிவாக்கில் ஊரின் அனைத்து " போஸ்ட் மேன்களும் " அவரவர் " லைனுக்கான " தபால் கட்டுகளுடன் தபால் நிலையத்தைச் சுற்றி அமர்ந்துக்கொண்டு கட்டை பிரித்து அடுக்குவார்கள்.

" மாரியம்மன் கோவில் வீதி பத்தாம் நம்பர் இருக்கா சார்... "

" சார்.... பள்ளிவாசல் தெரு ரெண்டு... "

" சர்ச் ஸ்ட்ரீட் ரெண்டாம் நம்பர் வீடு ! "

சினிமா கொட்டகை டிக்கெட் கெளண்டர் போல அவரைச் சுற்றி மொய்த்து பரபரக்கும் கூட்டத்தில் புகுந்து லெட்டர் பெற்று திரும்புவது பெரும் சாதனை !

தெருக்கோடியில் வசித்த நந்தகுமார் அண்ணன் முதல் ஆளாய் தபால் ஆபீசில் நின்றால், எங்கள் வீட்டுக்கு அருகில் வசித்த பத்மா அக்கா கடிதம் எழுதியிருக்கிறது என அர்த்தம் ! குணிந்த தலை நிமிராமல் கல்லூரி சென்று வரும் அக்கா எந்தக் கடையில் லெட்டர் வாங்கி எங்கிருந்து போஸ்ட் செய்யும் என்பதும், அந்தக் கடிதம் கிடைக்கும் நாள் அண்ணனுக்கு எப்படித் தெரியும் என்பதும் எங்கள் தெருவின் சிதம்பர ரகசியம் !

தெருவில் நுழையும் தபால்காரரை எதிர்கொண்டு அண்ணனின் கடிதத்தை வாங்கித் தாவணியில் மறைத்துகொண்டு கொல்லைப்புறம் ஓடும் பத்மா அக்கா !

பத்மா அக்கா திருமணமாகி போகும் வரையிலும், அதுவரையிலும் டீ. ராஜேந்தரின் காதல் பாடல்களைக் கேட்டு ரசித்த நந்தகுமார் அண்ணன் ராஜேந்தரை போலவே தாடியும் வளர்த்துக்கொண்டு " நான் ஒரு ராசி இல்லா ராஜா " பாடலை தலை சிலுப்பிக் கேட்க ஆரம்பித்த வரையிலும் அவர்களின் காதலை சுமந்து பறந்த கடித பட்டாம்ப்பூச்சிகள் அவர்கள் வீட்டினர் எவரின் கைகளிலும் சிக்காமல் சுழன்றது ஆச்சரியமான அதிசயம் !


தொன்னூரின் ஆரம்பத்தில் எங்கள் தெரு தபால்காரர் ஓய்வில் செல்ல, முதல் முறையாக ஒரு பெண் தபால்காரராக வந்தார். வெயில் மழை என எந்தக் காலமாக இருந்தாலும் சைக்கிளை ஓட்டாமல் எநேரமும் தள்ளிக்கொண்டே வரும் அந்தப் பெண்ணுக்கு சைக்கிள் ஓட்ட தெரியும் தெரியாது எனத் தெருவே பிரிந்து பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்ததே தவிர அந்தப் பெண்ணிடம் நேரடியாகக் கேட்கும் தைரியம் யாருக்கும் இல்லை !

நானும் பிரான்ஸ் வந்து தாத்தா, சித்தப்பாக்களைப்போலப் பொறுப்பாய் கடிதம் எழுத தொடங்கினேன்...

தொழில்மயமாக்கலின் முக்கிய நிகழ்வாய் சர்வதேச தொலைபேசி வசதி வீடுகளுக்கு வர ஆரம்பித்தது.... பேஜரில் தொடங்கி அடுத்து ஆரம்பித்த அலைபேசி தொழில்நுட்பம் அதிவிரைவாய் உலகெங்கும் பரவத் தொடங்கியது....

சட்டெனத் தொடங்கிச் சர்வதேசமும் பரவிய தொழில்நுட்ப அலை சுகம், துக்கம், காதல், பிரிவு, நட்பு, துரோகம் என ஒரு தலைமுறையின் அனைத்து உணர்ச்சிகளையும் சுமந்து சுற்றிய கடுதாசிகள் அனைத்தையும் அடித்து ஒழித்துவிட்டது !

காலம் எப்போதுமே இப்படித்தான் !...

விரைவான பேருந்து பிரயாணத்தின் போது காற்றின் ஓசையை மீறி வேகமாய் நம் காதுகளுக்குள் தவழ்ந்து சட்டென வெளியேறி மறைந்துவிடும் சாலையோர டீக்கடை மோர்பி ரேடியோவின் கானத்தைப் போலவே நமக்கு அறிமுகப்படுத்தும் எதையும் நாம் எதிர்பாராத தருணம் ஒன்றில் சட்டெனத் திருடி தன்னுள் எங்கோ மறைத்துவிடும் !


ரு சில வருடங்களுக்கு முன்னர் ஊர் சென்றிருந்த போது தபால்கார பெண்மணியைப் பார்க்க நேர்ந்தது...

ஆளுக்கு ஒன்று என்பதையும் தாண்டி விரலுக்கு ஒன்று என்ற அளவுக்குக் கைப்பேசிகள் அதிகரித்துக் குறுஞ்செய்திகள் குப்பைகளாய் மலிந்த காலத்தில் வீடுகளின் திண்ணைகள் கார் பார்க்கிங்காய் மாறி, திண்ணை தாத்தாக்கள் எல்லோரும் முதியோர் இல்லங்களுக்கு மாறிவிட்டார்கள் !...

" ஏங்க... ? இந்த நேரத்துல போன் பண்ணாதீங்கன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன் ?... "

ஏதோ ஒரு வீட்டில், தொலைக்காட்சி தொடரின் அழுகை சத்தத்தைத் தாண்டி , தெருவில் தெரித்த அலைபேசும் பெண்ணின் குரல்... வெளிநாட்டு கணவனாக இருக்கலாம் !

" இந்த ஒரு தபாலுக்காக இத்தனை தூரம் வர வேண்டியிருக்கு.... ! "

பக்கவாட்டில் தபால்களும் பார்சல்களும் பிதுங்கி வழியும் பெரிய சாக்குப் பைகள் இல்லாத இளைத்துப்போன சைக்கிளை தள்ளிக்கொண்டு தனியாகப் பேசியபடி சென்றவரிடம் என்னை அறிமுகப்படுத்திகொண்டு அவருக்குச் சைக்கிள் ஓட்ட வருமா எனக் கேட்க தோன்றியது...

என்னைக் கடந்து சென்றுவிட்டவரை திரும்பி பார்த்தேன்... உக்கிரமான வெயிலில் நீண்டு தள்ளாடிய அவரின் நிழலை கண்டதும் பேச தோன்றவில்லை !

சாலையோர டீக்கடையின் கானத்தைப் போலவே காலம் திருடிய கடுதாசிகளும் காற்றில் கரைந்துவிட்டாலும் அந்தக் கடிதங்களின் வரிகள் இன்னும் பலரது மன சுவர்களில் அழியாமல்தான் இருக்கின்றன !


பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

63 comments:

  1. தபால் காலத்தைப் பற்றிய மலரும் நினைவுகள் எல்லோரிடமும் உண்டு. வேலைக்காக வெளியூரில் தனியாகத் தங்கி இருந்த காலங்களில் இவைதான் பெரும் ஆறுதல். காதல் காலங்களில் நாங்களே தபால் காரராகும்போதும் தனி சுவாரஸ்யம்! எங்களை நிறைய யோசிக்க விடாமல் நீங்களே எல்லாவற்றையும் எழுதி விட்டீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. மாம், பணி நிமித்தமாகவோ, கல்விக்காகவோ அன்று வெளியூர் தங்கியவர்களுக்கு கடிதம் கொடுத்த பரவசம் எழுத்தில் சொல்ல முடியாதது !

      காதல் காலங்களில் தபால்காரரான அனுபவங்களுக்கு தனி பதிவே போடலாம் இல்லையா ?!

      இல்லை, உங்களின் பின்னூட்டங்களையெல்லாம் படிக்கும்போது எழுத இன்னும் நிறைய இருப்பதாகவே தோன்றுகிறது !

      முதல் கருத்துக்கு நன்றிகள் பல நண்பரே !

      Delete
  2. அருமை. சாம் . தொழில் நுட்பங்களால் நாம் இழந்தவற்றில் கடிதக் கலையும் ஒன்று. இன்றைய தலைமுறை பள்ளிகளில் மதிபென்னுக்காக மட்டுமே கடிதத்தை அறிந்திருக்கிறார்கள்.கடிதங்கள் சுமந்து சென்ற உணர்வுகள் ஏராளம் அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள்
    நானும் இதைப் பற்றி கவிதை ஒன்றி எழுதி இருந்தேன். நேரம் கிடைக்குபோது வாசிக்கவும்
    நான் யார் தெரியுமா?

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே...

      உணர்வுப்பூர்வமாய் எழுதப்பட்ட கடிதங்கள் இன்று வெறும் மதிப்பெண்களுக்காக ஒடுங்கியது வேதனை !

      தங்களின் அருமையான கவிதைக்கு பின்னூட்டம் அளித்துவிட்டேன் !

      நன்றி

      Delete
  3. பதிவுகளை தமிழ் மணத்தில் இணைக்கவும் . உதவி தேவைப் படின் தெரிவிக்கவும் டிடியும் உதவுவார்
    எழுத்துகள் மிக சிறியனவாய் இருக்கின்றன சற்று பெரிதாக இருத்தல் நலம்

    ReplyDelete
    Replies
    1. காரிகன் தொடங்கி, ஊமைக்கனவுகள் ஜோசப், டி டி சார் என பலர் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்... வேலை பளுவினால் டி டி அவர்களை சரியான நேரத்தில் தொடர்பு கொள்ள இயலவில்லை...

      உங்களை போன்ற நல்ல உள்ளங்களின் அக்கறைக்கு வேண்டியாவது அடுத்த பதிவுக்கு முன்னர் தமிழ்மணத்தில் இணைந்துவிடுகிறேன்...

      உதவி வேண்டுமெனில் தயங்காமல் தொடர்பு கொள்வேன்....

      நன்றிகள் பல

      Delete
  4. இன்மையான நினைவுகள்... நானும் எழுதலாம் என்று நினைக்கிறேன்...

    (ஏன் தொடர்பு கொள்ளவில்லை...?)

    ReplyDelete
    Replies
    1. கடுதாசி பற்றிய உங்களின் மலரும் நினைவுகள் நிச்சயம் மிக சுவாரஸ்யமாக இருக்கும்... எழுதுங்கள்.

      நிச்சயம் அடுத்த பதிவுக்கு முன்னர் தொடர்பு கொண்டுவிடுவேன் அய்யா !

      நன்றிகள் பல.

      Delete
  5. இன்றும் மணப்பாறையில் எங்கள் வீட்டில் எப்.எம் ஒலித்தபடி தான் சமையல் நடக்கிறது.இங்கே நான் கைபேசியை பாடவைத்தபடி சமைப்பேன். என் அத்தை(மாமியார்) கேட்பார் இத்தனை காலைநேர பரபரப்பில் இந்த இரைச்சலும் வேண்டுமா? என. அந்த கானத்தின் போதையை சுவைத்தவர் மட்டுமே அறிவார்கள் இல்லையா? ஏதேதோ சொல்றேனா :) இல்ல அண்ணா, அதே மாதிரியான ஒரு உணர்வலையை நொடிக்குநொடி வரிக்குவரி மீட்டிசெல்கிறது உங்கள் எழுத்துகள். ஒரு தனிமை பயணத்தில் காதருகே கசியும் HEADSET இசையாய் மீளமுடியாத சுகம்!!!!! ஒருவேளை எனது பள்ளிப்ரயத்தை தொட்டுசிலிர்க்கவைத்த நெகிழ்வினால் கூட இருக்கலாம். என்னிடம் ஒரு கோப்பு நிறைய கடிதகளும், மற்றொரு கோப்பு நிறைய வாழ்த்து அட்டைகளும் இருக்கின்றன. அவை விடுதி நாட்களில் என் அம்மா எனக்கு எழுதியவை, அல்லது விடுமுறை நாட்களில் என் விடுதித் தோழிகள் எனக்கு எழுதியவை. நினைக்கும்போதே இதழில் குறுநகை பிறக்க செய்யும் அவை காதல் கடிதங்களுக்கு சற்றும் குறையாத கவர்ச்சி மிக்கவை. கஸ்தூரி(மது) ஒரு முறை என் தோழி அருணா எனக்கு எழுதிய ஒரு பழைய கடிதத்தை படித்துவிட்டு, ஏ! அவளா நீ??!! என கலாய்த்ததுண்டு:)))
    இப்படி ஒரு பதிவு எழுதுவதென்றால் அடிக்கடி எழுத முடியாதுதான். எழுதி எங்கும் புதைத்து வைத்திருந்தீர்களா அண்ணா:)))))

    ReplyDelete
    Replies
    1. ////இங்கே நான் கைபேசியை பாடவைத்தபடி சமைப்பேன்.///

      இங்கே சொற்பிழை இருக்கிறது சமைப்பேன் என்பதற்கு பதிலாக சமையல் அறையில் இருப்பேன் என்று வந்திருக்க வேண்டும் இங்கீலீஷ் டீச்சர்

      Delete
    2. அருமை சகோதரி...

      எனது பதிவு உங்கள் மனக்குளத்தில் நினைவலைகளை எழும்ப செய்ததில் பெரு மகிழ்ச்சி !

      உங்களின் பின்னூட்டங்களை படிக்கும்போது நாம் இருவருக்குமே ஒத்த பால்ய அனுபவம் வாய்த்திருந்திருப்பதாக தோன்றுகிறது...

      சமையலறையில் விவித்பாரதி கேட்டு வளர்ந்தவன் தான் நானும் ! சமையலில் ஆர்வமுள்ள எனக்கு இன்றும் அடுப்படியில் பால்யகால கானம் வேண்டும் !

      கடிதங்கள் தொடங்கி காமிக்ஸுகள் வரை பலவற்றை பாதுகாக்காமல்விட்ட குறை என்னிடம் இன்றும் உண்டு !

      உங்கள் கோப்புகளின் சுவாரஸ்யமான கடிதங்கள் பற்றி எழுதுங்களேன்...

      " இப்படி ஒரு பதிவு எழுதுவதென்றால் அடிக்கடி எழுத முடியாதுதான். எழுதி எங்கும் புதைத்து வைத்திருந்தீர்களா அண்ணா:))))) "

      எழுதி புதைக்கவில்லை சகோ... என் மனதில் புதைந்தவைகளையே தோண்டி எடுத்து எழுத்தாய் கொடுக்கிறேன் !

      தொடருவோம்... நன்றி

      Delete
  6. அண்ணா வணக்கம்.

    இருளில் நீண்டு கிளம்பும் ஒளிக்கோடொன்று வானில் எண்ணற்ற நட்சத்திரங்களைப் பல வண்ணத்துமிழ்வதைப் பிரமிப்போடு பார்க்கும் சிறு குழந்தையின் ஆர்வத்தோடு உங்கள் எழுத்தை ஒற்றை வாசிப்பில் கண்ணோட்டிப் போனேன்.

    அது உங்கள் எழுத்துகளைப் படிக்கும் ஒவ்வொரு முறையும் ஏற்படுகிறது என்பதைச் சொல்வது கூறியது கூறல்.

    காத்திருப்பின் சுகங்களைக் காதலுக்கு முன்பு எனக்கு ஏற்படுத்தியது தபால்காரரும், அவர் கொண்டுவந்து தரும் புத்தகங்களும்தான்.
    காதலைப் போல் என் காத்திருப்பை ஒருபோதும் தபால்காரர் வீணாக்கியதில்லை. அதற்காய் அவரிடத்தில் நன்றியுண்டு. :)

    ராஜூமுருகனின் எழுத்துகளுக்குப் பிறகு இப்படிப்பட்ட nostalgic feelings (தமிழில் சரியான பதம் கிடைக்கவில்லை. இறப்பின் இனிமையான நினைவுகள் எனலாமா.?! ) உங்கள் எழுத்தில் கிடைத்திருக்கிறது எனக்கு.

    என் வற்புறுத்தல் தாங்காமல், அப்பா, பூந்தளிர் போன்ற சில சிறுவர் இதழ்களுக்குச் சந்தா கட்டியிருந்தார்.

    தபால்காரர்தான் அவற்றைக் கொண்டுவருவார். வாரங்களில் வரும் வந்த குறிப்பிட்ட கிழமைக்காகக் காத்திருக்கும் ஆர்வத்தையும் பரபரப்பையும் வாழ்வில் வேறொன்றும் ஏற்படுத்தியதில்லை.

    உங்கள் எழுத்துகளைப் படித்துக் கடக்கும்போது, இதைச்சொல்லி இருக்கிறாரா இதைச் சொல்லி இருக்கிறாரா என என் அனுபவங்கள் ஒவ்வொன்றையும் இப்பதிவினுள் தேடிப்பார்த்தேன்.

    என்ன நினைத்துக் கைநுழைக்கிறோமோ அது கிடைக்கும் ஒரு மாயப்பெட்டியாய் இருக்கிறது இந்தப் பதிவு.

    ஒரு கால இயந்திரத்தின் வாயிலாக இறப்பின் உன்னதங்களை எட்டிப்பார்க்கச் செய்திருக்கிறது உங்கள் எழுத்து.

    வானொலியில் நெடுநாள் எதிர்பார்த்துக் காத்திருந்த விருப்பப்பாடல், திடீரென ஒலிக்கப்படுந் தருணம், மனம் அடையும் பரவசம்.
    அந்த நிமிடங்களை அப்படியே கடக்காமல் உறைந்திருக்க வேண்டும் என்னும் எதிர்பார்ப்பு.

    உலகை ஒதுக்கிய தனிமனிதனாய் அதன் ஒட்டுமொத்த இன்பத்தையும் தாங்கமுடியாமல் உடல் நடுங்குகின்ற தருணம்.

    அது உங்கள் எழுத்தின் பலம்.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே...

      உங்கள் தளத்தை வாசிக்கும் போதெல்லாம் எனக்கு ஏற்படும் வியப்பை நீங்கள் விவரித்துள்ளீர்கள் !...

      " காதலைப் போல் என் காத்திருப்பை ஒருபோதும் தபால்காரர் வீணாக்கியதில்லை... "

      வீணான காத்திருப்பு என்று ஒன்று உண்டா ?... காத்திருப்பு காதலுக்கு எனில் அது தரும் உணர்வே ஒரு சுகசிலிர்ப்புதானே ?...

      " அதற்காய் அவரிடத்தில் நன்றியுண்டு "

      ஆத்மார்த்தமான அழகிய வரி !

      நான் வலைப்பூவினை தொடங்கி ஒரு வருடம் வரையிலும் ஒற்றை பதிவுடன் நின்றிருந்தேன்... காரணம் எழுதும் ஆசை இருந்ததே தவிர, என்ன எழுதுவது என தெரியவில்லை. அப்போது ராஜிமுருகனின் " கற்றதும் பெற்றதும் " படிக்க நேர்ந்தது...

      அந்த நூல் என்னிடம் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். காரணம் இளமையின் ஆரம்பத்தில் சில நிர்பந்தங்களால் நான் நேசித்த மண்ணையும் மனிதர்களையும் விட்டு விலக நேர்ந்ததும் அப்படி விலகிய ஊருக்கு சில ஆண்டுகள் கழித்து திரும்பியபோது நான் கண்ட மாற்றங்களும் ! அவரும் என் தலைமுறையை ஒத்தவர் என்பதாலோ என்னவோ ... எங்கள் தலைமுறையோடு சமூகத்தால் தலைமுழுகப்பட்ட பலவற்றை பற்றிய அவரது தவிப்பு என்னையும் பற்றிகொண்டது !

      என் எழுத்தில் நீங்கள் அவரது சாயலை கண்டாலும் மறுப்பதற்கில்லை ! ஏதோ ஒரு வகையில் என் எழுத்துக்கு முதல் தூண்டுகோலாய் அவர் அமைந்தார் என்றே தோன்றுகிறது !

      " என்ன நினைத்துக் கைநுழைக்கிறோமோ அது கிடைக்கும் ஒரு மாயப்பெட்டியாய் இருக்கிறது இந்தப் பதிவு.

      ஒரு கால இயந்திரத்தின் வாயிலாக இறப்பின் உன்னதங்களை எட்டிப்பார்க்கச் செய்திருக்கிறது உங்கள் எழுத்து. "

      உங்களை போன்றவர்களிடமிருந்தெல்லாம் நான் கற்றுக்கொள்வதும் ஒரு காரணமாக இருக்கலாம்...

      தொடருவோம்.... நன்றி




      Delete
  7. என் நண்பர். பால்ய சிநேகர் உள்பட இங்கிலாந்து லெட்டர் என்றுதான் சொல்லிக் கொண்டு வந்திருக்கிறோம். இன்லெட்டர் என்பது இப்பத்தான் புரிந்தது. கொடுமைதான்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழரே...

      இந்தியா முழுவதுமே இந்த குழப்பம் இருக்கும் போல... நம்மை ஆண்ட இங்கிலாந்துக்காரர்களை நம்மால் மறக்க முடியாததும் ஒரு காரணமாக இருக்கலாம் !!!

      தொடருங்கள் தோழரே
      நன்றி

      Delete
  8. கடிதம் - எத்தனை இனிமையான விஷயம்..... எத்தனை நினைவுகளை படிக்கும் அனைவரின் மனதிலும் உண்டாக்கிச் சென்றது உங்கள் பதிவு. வேலைக்குச் சேர்ந்து வெகு நாட்கள் வரை இப்படி கடிதம் மூலமாகத் தான் அப்பா/அம்மாவுடன் பேசினேன். தொலைபேசியும், அலைபேசிகளும் வந்து இந்த கடிதம் எழுதும் கலையையே அழித்து விட்டது.......

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்...

      யோசித்து யோசித்து எழுதியதும், பிரியமானவர்களுக்கு பிரியத்துடன் அனுப்பிவிட்டு பதிலுக்கு காத்திருந்த தருணங்களும்... எத்தனை இனியவை !

      கடித கலையுடன் சேர்ந்து காத்திருத்தல் என்ற பொறுமையும் போய்விட்டது !

      வருகைக்கு நன்றி அய்யா

      Delete
  9. வணக்கம்,
    நீண்ட நாட்களுக்கு பின் தங்கள் பதிவு,
    ஆனால் அமைதியான குளத்தில் சலனம் ஏற்படுத்திய பதிவு,,,,,,,,,
    மறக்கமுடியாத நினைவலைகள் இன்றும் காட்சிப்படுத்தும் அட்டைகள்,
    தபால் காரர் திட்டியதும் உண்டு,
    வாஞ்சையுடன் பார்த்ததும் உண்டு,
    நிறைய நிறைய, எதை எழுதுவது எதை விடுவது என்று கடிதத்தில் எழுதுவதுண்டு,
    அதுபோல்,,,,,,,,,,,
    இங்கும்,,,,,,,,,,,
    அருமை, வாழ்த்துக்கள், நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி...

      தனிப்பட்ட காரணங்களால் வலைப்பங்களிப்பு குறைகிறது...

      ஆனாலும் இந்த சிறுகல் படித்தவர்களின் மனக்குளத்தில் ஏற்படுத்தி சலன அலை நிறைவை தருகிறது !

      ஆமாம் சகோ... கடிதம் பற்றி எழுத இன்னும் நிறைய இருக்கிறது !

      நன்றி

      Delete
  10. இப்படி கடிதங்களை மட்டுமல்ல பல இனிய அனுபவங்களை இழந்துதான் இந்த சமுகம் ஒடிக் கொண்டிருக்கிறது நமக்கு அந்த அனுபவம் இனிமையாக இருக்கிறது காரணம் நாம் அந்த காலகட்டததில் வசித்து வளர்ந்து வந்தோம் ஆனால் இந்த காலத்தில் அது இல்லை இப்படி ஒன்றை இழந்துவிட்டோம் என்பதை கூட உங்கள் பதிவை பார்த்தபிந்தான் அறியமுடிகிறது

    ReplyDelete
    Replies
    1. " இப்படி ஒன்றை இழந்துவிட்டோம் என்பதை கூட உங்கள் பதிவை பார்த்தபிந்தான் அறியமுடிகிறது "

      இழப்பை விடவும் கொடியது ஒன்றை இழந்துவிட்டோம் என்ற பிரக்ஞை இன்றி இருப்பது ! நவீன உலகம் மனிதனை இந்த நிலைக்குதான் கொண்டு செல்கிறது !

      அழகான கருத்துக்கு நன்றி

      Delete
  11. ----சட்டெனத் தொடங்கிச் சர்வதேசமும் பரவிய தொழில்நுட்ப அலை சுகம், துக்கம், காதல், பிரிவு, நட்பு, துரோகம் என ஒரு தலைமுறையின் அனைத்து உணர்ச்சிகளையும் சுமந்து சுற்றிய கடுதாசிகள் அனைத்தையும் அடித்து ஒழித்துவிட்டது !-----

    சாம்,

    அற்புத வரிகள். திடீரெனத் துவங்கிய இந்த விஞ்ஞானப் புரட்சி புரட்டிப் போட்ட பல கலாச்சார விழுமியங்களுள் கடிதங்கள் மிக முக்கியமானவை. நான் அந்த நீல நிறக் காகிதங்களை உறவுமுறைகளையும், நட்பையும் காதலையும் அன்பையும் எழுத்து எழுத்தாக உருவாக்கிய பண்பாட்டுத் தூண்களாகவே பார்க்கிறேன். வாழ்த்து அட்டைகள் அடுத்த ஆனந்த அனுபவங்கள். யார் யாருக்கு எந்த வார்த்தைகள் கொண்ட வாழ்த்துக்களை வாங்குவது என்ற பலத்த போராட்டமே நடைபெறும்.

    90களின் இறுதியில் புயல் போன்று உருவான செல்போன் புரட்சி இந்த மகத்தான அனுபவங்களை அணுகுண்டு போல அழித்து விட்டது. நான் இன்னும் எனக்கு வந்த பல கடிதங்களை பத்திரப் படுத்தி வருகிறேன்.

    இசை விரும்பியான நான் இந்த கடிதம் தொடர்பான ஒரு அற்புதப் பாடலை குறிப்பிடாமல் இருக்க முடியுமா? கௌரி கல்யாணம் என்ற படத்தில் டி கே ராமமூர்த்தி அமைத்த "ஒருவர் மனதை ஒருவர் அறிய உதவும் சேவையிது " என்ற பாடல் உண்டு. ஜெய் ஷங்கர் சைக்கிள் ஓட்டியபடியே பாடிக்கொண்டு வருவார்.அருமையான விசிலோசை கொண்ட மிகச் சிறப்பான பாடல் அது. (கடுதாசி போர்சுகீசிய சொல் என்று எங்கேயோ எப்போதோ படித்த ஞாபகம். கடிதம் என்பதை விட கடுதாசி அதிகமாக பயன்படுத்தப்படும் சொல்லாக இருந்தாலும் எனக்கு கடிதம்தான் )

    நீங்கள் எழுதும் ஒவ்வொரு பதிவும் ஒரு அருமையான கருத்தை படிப்பவர்கள் மீது தெளித்துச் செல்கின்றன. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் காரிகன்...

      உண்மைதான், அந்த நீல காகிதங்கள் கட்டுவித்த,பலப்படுத்திய உறவு பாலங்கள்தான் எத்தனை எத்தனை !

      எனது பதிவில் விடுபட்ட ஒன்றை அழாகாக சொல்லியுள்ளீர்கள்...

      ஆமாம், வாழ்த்து அட்டைகள் தேடி கடை கடையாய் அலைந்து எதை தேர்ந்தெடுப்பது என குழம்பி, தேர்ந்தெடுத்தது சரியான தேர்வா என பண்டிகையின் முடிவுவரை மண்டை காய்ந்து.... அதுவும் நமது அட்டை காதலிக்கு என்றால்...

      இதுபோன்ற விசயங்களின் " சுகபடபடப்பு " இன்று நிறைய குறைந்துதான் விட்டது !

      நான் எழுதிய கடிதங்களை என் நண்பர்கள் இன்றும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். கேலிச்சித்த்ரங்களெல்லாம் தாங்கிய கடிதங்கள் அவை ! எனக்கு வந்த கடிதங்களை பாதுகாக்காமல்விட்ட குறை எனக்கு நிறைய உண்டு !

      கெளரி கல்யாணம் பாடலை இப்போதுதான் கேட்டு ரசித்தேன்... சிறப்பான பாடல்.

      கடுதாசி என்ற சொல் குறிப்பாக பாமரமக்களின் பயன்பாடாக தொடர்கிறது.

      நன்றி காரிகன்.

      Delete
  12. இப்பதிவை வாசிக்க பின்னோக்கி என் சிறுபராயதிற்கே சென்று வந்தேன். எத்தனை நெகிழ்ச்சியான தருணங்கள் அப்பப்பா. தப்பால்காரர் வரும் நேரம் வீடுகளிலுள்ளவர்கள் அனைவரையும் ஒரே சமயத்தில் வெளியில் காணலாம். எல்லோரும் ஆவலாக கடிதம் வாங்குவார்கள் நமக்கு பெரிதாக வருவதில்லை. நாம் சிறிய குடும்பம் அதிக உறவினர்கள் இருந்தாலும் கடிதம் போடுமளவிற்கு பெரிதாக யாரும் இருக்க வில்லை. ஆனால் என்னேரமும் உறவினர்கள் வந்து போவார்கள். அப்படிப் போகும் போது அவர்களிடம் போய் கடிதம் போடுங்கள் என்று சொல்லி சொல்லி விடுவேன். ஏனெனில் எல்லோர் வீட்டுக்கும் கடிதம் வரும் ஏன் எமக்கு மட்டும் வருவதில்லை என்ற ஏக்கம் இருந்தது தான் காரணம். கொஞ்சம் வளர்ந்த பின்னர் பார்த்தால். வீட்டுக்கு ஒருவராவது வெளி நாடுகளில் இருப்பார்கள் அப்போ வண்ண நிறத்தில் வரும் கடிதங்களைக் காண இன்னும் கவலையாக இருக்கும் நமக்கு யாரும் இப்படி இல்லையே என்று பல தடவை மனம் நொந்திருக்கிறேன். கடிதம் வராது என்று தெரிந்தாலும் நானும் வராதா என்ற ஏக் கதுடன் காத்திருக்கிறேன். ஆனால் பள்ளிக் காலங்களில் தீபாவளி வருடப் பிறப்பு காலத்தில் மட்டும் வாழ்த்துக்கள் அனுப்புவோம் ஒருவருக்கொருவர் அதுவும் அவ்வளவாக இல்லை. எல்லாம் ஒரு காலம். எத்தனை இனிய தருணங்களை இழந்து விட்டோம்.
    தங்கள் அனுபவங்களை அருமையான உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி உள்ளீர்கள் நன்றி வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. சகோதரி...

      இசை, எழுத்து போன்றவற்றின் பலம் இதுதான்... மாயைதான் என்றாலும் நாம் கடந்து வந்த காலத்துக்குள் நம்மை சிலகணமேனும் கடத்தி செல்லும் மனோரசவாத காலயந்திரங்கள் !

      நமக்கு ஒன்றும் வரவில்லையே என்ற உங்களின் அதே கவலை எனக்கும் இருந்தது... அதே போல போதும் போதும் எனும் அளவுக்கு எனக்கு போஸ்ட் கார்டுகள் வந்து குவிந்த கதையும் நடந்தது ! அதனை வேறொரு பதிவில் பார்ப்போம் !

      ஆழ்ந்து வாசித்து தந்த பின்னூட்டத்துக்கு நன்றி

      Delete
  13. அருமை அருமை1 கடிதங்கள் சொல்லும் மனதிற்கினிய நமக்கு மட்டுமே சொந்தமான பல நிகழ்வுகள் அன்றய பொற்காலத்தின் நினைவுகளாய், பண்டையக்காலம் என்றாகிப் போனது. கடிதங்கள் தனே அன்று எங்கள் நட்ப்பை வலுவாக்கியது. இனிய நினைவுகளைச் சுமந்து நின்றது. ஆம் இங்கிலாந்து லெட்டர் என்று சொன்னதும் உண்டு...அந்த சுகம்...கடிதத்திற்காக காத்திருக்கும் அந்த நாட்கள்...அதன் பின் தொலைந்து போய் ....அந்த நினைவுகளில் இவ்வளவு வருடம் வாழ்ந்து கடிதங்களுக்கு நன்றி கூறும் அதே சமயம்

    இன்று இந்த டெக்னாலஜி தான் மீண்டும் எங்களைச் சந்திக்க வைத்து, அதே நட்பு அப்படியே இதோ வலைப்பூவும் தொடங்க வைத்து எழுதிக் கொண்டிருக்கின்றோம் என்றால் இதற்கும் நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும். அன்றைய அஞ்சல் இன்றைய மின் அஞ்சலாய்....

    அருமையான ஒரு பதிவு, எங்கள் நினைவுகளை மீட்டெடுத்தது...மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஆசானே...

      அன்றைய கடிதங்கள் எங்களை இணைத்தது... மின்னஞ்சல் மீன்டும் சந்திக்க வைத்தது..

      உங்களின் இந்த வரிகளில் மிக ஆழமான ஒரு சமூக செய்தி உள்ளது !

      இன்று அறுபதை தாண்டியவர்களுக்கு கடித காதல் ஒன்றே அனுபவமாய் இருக்கலாம்... இன்றைய இருபதுக்கோ இணைய காதல் மட்டுமே தெரியும்... ஆனால் இன்று நாற்பதிலிருக்கும் ஒருவருக்கு இரு காதல் அனுபவங்களும் வாய்த்திருப்பதற்கான வாய்ப்பு உண்டு !

      உண்மைதான் !

      அன்றைய கடிதங்கள் நம் இனிய நினைவுகளை சுமந்தன என்றால் இன்றைய இணய தொழில்நுட்பத்திலும் சுகானுபவங்களும் பரவசங்களும் உண்டுதான் !

      அருமையான பின்னூட்டத்துக்கு நன்றி ஆசானே !

      Delete
  14. எங்கள் வீட்டு மூலையில் சைக்கிள் போக்ஸ் கம்பிகளில் சொருகி வைத்த கடிதங்கள் நினைவுக்கு வருகின்றது! பொங்கல் வாழ்த்து அனுப்பிவிட்டு பதில் வாழ்த்து வருகிறதா என்று காத்துக்கிடந்த நாட்கள். வி.பி.பியில் புக் ஆர்டர் பண்ணிவிட்டு அந்த புத்தக பார்சலை வாங்கிய தினங்கள் என் முதல் சிறுகதை கோகுலத்தில் வெளியாகி தபால்காரர் புத்தகத்தை கொடுத்த தினம், பாட்டி வீட்டில் இருந்து அப்பாவுக்கு முதலில் எழுதிய கடிதம் என்று பல நினைவுகள் கிளம்புகின்றன. காலமாற்றம் இப்படி ஓரேடியாக கடிதங்களை குழி தோண்டி புதைத்திருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது. வீட்டில் இருக்கும் பழைய கடிதங்களை படிப்பது( அது தவறு என்றாலும்) ஓர் சுவாரஸ்யம்! மிகச்சிறப்பான பதிவு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சுரேஷ்...

      நாம் இருவருக்குமே ஏறக்குறைய ஒரே வயது... உங்களின் பதிவுகளின் வழியே, நீங்களும் சிறுவர் இதழ்கள் மற்றும் காமிக்ஸ்களில் திளைத்து வளர்ந்தவர் என்பது தெரிகிறது...

      உங்களின் கோகுலம் அனுபவம் போன்ற அனுபவங்கள் எனக்கும் உண்டு...

      தனிமனித தொடர்பு கடிதங்கள் ஒரேயடியாய் தொலைந்தது நம் நாட்டில்தான்... மேலை நாடுகளில் இன்றும் கடித போக்குவரத்து உண்டு. முக்கியமாய் விடுமுறைக்கு செல்பவர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஒரு அஞ்சல் அட்டையாவது அனுப்புவது அவர்களின் பண்பாடு சார்ந்தது !

      வருகைக்கு நன்றி... தொடருவோம் நண்பரே !

      Delete
  15. நெடு நாட்களுக்கு பிறகு நல்ல தமிழில் ஒரு அற்புதமான கட்டுரையை படித்த திருப்தி. பாராட்டுக்கள் சாம். அற்புதமான நடை உங்களுக்கு. கடித போக்குவரத்து இருந்த காலத்தில் யாராவது நமக்கு எழுத மாட்டார்களா என்று ஏங்கிய நினைவலைகளில் மூழ்கி விட்டேன். நீங்கள் முடித்திருந்த விதம் மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் குரு...

      மிக நல்ல தமிழ் நடையில், உணர்வுப்பூர்வமான கட்டுரைகள் எழுதும் மூத்த பதிவாளரான நீங்கள் எனது பதிவை பாராட்டுவதை பெருமையாக கொள்கிறேன்.

      நன்றி. தொடருவோம்...

      Delete
  16. கடிதம் எழுதுவதிலும் வாங்குவதிலும் இருந்த சுகமே தனிதான். குறிப்பாக வாழ்த்து அட்டைகள். எழுத்தில் இருந்த ஒரு நெருக்கம் இன்றைய தொழில்நுட்பங்கள் எதிலும் கிடைப்பதில்லை.

    ReplyDelete
    Replies
    1. கடிதம் என்றாலே எனக்கு நினைவில் வருவது நான் என் தாத்தாவிற்கு மூன்றாம் வகுப்பு படிக்கும் பொழுது எழுதியது. ஆங்கிலத்தில் எழுதியிருந்தேன். It's raining hear என்று எழுதிவிட்டேன். கடிதம் கிடைத்து அடுத்த வாரம் தாத்தா அதை எடுத்துக் கொண்டு கொடைக்கானல் வந்துவிட்டார். hear என்பது தவறு, here என்பதே சரி என்று! எப்பொழுதும் என் நினைவில் இருக்கும் தாத்தாவுடன் ஆன இனிய சம்பவம் இது.

      Delete
    2. " எழுத்தில் இருந்த ஒரு நெருக்கம் இன்றைய தொழில்நுட்பங்கள் எதிலும் கிடைப்பதில்லை. "

      உண்மை சகோதரி... இன்றைய தொழில்நுட்பத்தில் அந்த நெருக்கம் இல்லையென்பதே எனது உணர்வும் !

      தாத்தாவுடனான அனுபவம் சுவாரஸ்யம்... it's raining dear என்றாவது எழுதியிருந்தால் சமாளித்திருக்கலாம் இல்லையா ?!

      கருத்துக்கு நன்றி ச்கோதரி

      Delete
  17. அருமையான பதிவு. இன்னும் நான் கடிதப்போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளேன். அஞ்சலட்டையைப் பெரும்பாலும் பயன்படுத்துகிறேன். தங்களுக்கு வந்த அனுபவங்களைப் போல பலரும் இவ்வாறான அனுபவங்களைப் பெற்றிருப்பார்கள். நம் உள்ளத்து உணர்வுகளை அழகாக வெளிப்படுத்திப் பகிர்ந்துகொண்டவனவற்றில் கடிதம் எழுதுவதும் ஒன்றாகும். இதையும் தற்போது தொலைத்துவிட்டுக் கொண்டிருக்கிறோம், கொஞ்சம் கொஞ்சமாக.

    ReplyDelete
  18. Replies
    1. இன்னும் பதில் வரலையே... நீங்க இந்தியாவுலேருந்து அனுப்புனதால நம்ம போஸ்ட்மேன் என் காரைக்கால் முகவரிக்கு கொடுத்துட்டாரா.... ?!

      Delete
  19. கடிதத்தை எதிர்நோக்கிக் காத்திருந்து,வந்தவுடன் அவசரமாகப் பிரித்துப் படித்து மகிழ்ந்த அந்த சுகம்,இன்றைய மின்னஞ்சல்களில் இல்லையே!
    சில வீடுகளில் ஒரு கம்பி மாட்டி அதில் வந்த கடிதங்களைக் குத்தி வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. அய்யா...

      உண்மைதான் ! எழுதிய அடுத்த நொடியில் நம்மை வந்தடையும் மின்னஞ்சலில் கடிதத்தின் சுகம் இல்லைதான் !

      கம்பியில் கடிதம் காட்சியை நானும் கண்டிருக்கிறேன்... மோர்பி ரேடியோவை போலவே மர்றொரு மனதில் பதிந்த ஓவியம் !

      வருகைக்கு நன்றி

      Delete
  20. இண்லான்ட் லெட்டர், தந்தி, ட்ரன்க் கால் எல்லாம் அந்தக் காலம். இப்போ உள்ள மிடில் ஸ்கூல் பசங்ககிட்ட இதையெல்லாம் சொன்னீங்கனா.. நீங்க அந்தக் காலத்து ஆள்ணு ஒரு மாதிரியாப் பார்ப்பார்கள். இதெல்லாம் என்னிடம் ஏன் சொல்றீங்கனு முழிப்பார்கள்! அதனால நீங்களும், வாட்ஸப், ட்விட்டர்னு பேசிட்டு போயிடுறது நல்லது. :))

    வரும் காலத்தில் (30 வருடங்களில்?) கூகிலுக்கும் ஃபேஸ் புக்கும், ட்விட்டக்கும் இதே இண்லாண்ட் லட்டர் நிலைதான். இன்று நீ நாளை நான் எனறு தெரிந்து கொள்வது நல்லது. I think radio is an exception and will live long! :)

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வருண்...

      " பழையன களைதலும், புதியன புகுதலும் " காலத்தின் கட்டாயம் என்பதை விடவும் அவசியமும் கூடத்தான் !

      ஆனால் இந்த காலத்து " பிள்ளைகளுக்கு " அந்த காலத்து ஆளின் வாழ்க்கை எப்படி அமைந்திருந்தது என்பதை உணர்த்துவதும் அவசியம் ! ஏனென்றால் விஞ்ஞானத்தின் முதல் மைல் கல்லை தந்தியாக கொண்டோமானால் அதே பாதையில் நாம் இன்று வந்தடைந்த இடம்தான் இணையம் ! அன்று தந்தி கண்டுப்பிடிக்கப்பட்டதால்தான் இன்று இணையம் !!!

      " வரும் காலத்தில் (30 வருடங்களில்?) கூகிலுக்கும் ஃபேஸ் புக்கும், ட்விட்டக்கும் இதே இண்லாண்ட் லட்டர் நிலைதான் "

      மிகவும் உண்மை ! எதுவுமே சில காலம்தான் ! ஆனால் அன்று மற்றொரு சாமானியன் கூகில் பேஸ்புக்கின் பயன்பாடு குறித்து வாழ்வியல் பதிவு போடுவான் என்பதும் சத்தியம் ! ( உங்களின் கணக்கு 30 என்றால் எனக்கு எழுபது வயதாகும்... நம்பிக்கை கொள்ளக்கூடிய ஆயுள்தான் என்பதால் அந்த சாமானியன் நானேவாகவும் இருக்கலாம் ?! )

      I think radio is an exception and will live long! :)

      விளையாட்டாக குறிப்பிட்டீர்களா என தெரியவில்லை ஆனால் இந்த வரிகளில் தீர்க்கதரிசனமான ஒரு உண்மை இருக்கிறது !...

      விஞ்ஞான வளர்ச்சி எப்போதுமே முன்னோக்கி மட்டுமே செல்லும் என்ற நினைப்பிலேயே நாம் அனைவரும் இருக்கிறோம்... ஆனால் சிலபல காரணங்களால் ஒரு கட்டத்தில் இணைய இணைப்பே அழிந்துபோகும் நிலையும் ஏற்படலாம் தானே ?...

      தந்தி எனப்படும் மோர்ஸ் சேவையை உலகின் அனைத்து நாடுகளுமே நிறுத்திவிட்டது தெரியும்... ஆனால் வல்லரசுகள் அனைத்தும் ராணுவ தேவைக்காக ஒரு தந்தி இணைப்பை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன... காரணம் எதிரி நாடுகளாலோ அல்லது வேற்றுகிரக தாக்குதலாலோ நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் அழிக்கப்படுமானால் கைக்கொடுக்கக்கூடியது தந்தி ஒன்றுதான் !

      ரேடியோவும் இதே பயன்பாட்டுக்காக காக்கப்படுகிறது.

      நன்றி வருண்

      Delete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. சாமானியரே!

    இங்கிலாந்து சென்று படித்து வந்தாலும், சிலருக்கு இன்னமும் இங்கிலாந்து லெட்டருக்கும், இன்லாண்டு லெட்டருக்கும்,
    உள்ள வித்தியாசம் தெரியாமல்தான் இருக்கிறது. ஆஹா! அந்த கடைகாரர் அப்போது தந்த விளக்கம் இப்போது உங்களை இங்கிலாந்து பக்கத்து தேசத்தில் பிரான்ஸ் கொண்டு வந்து சேர்த்து விட்டதோ? என்று எண்ணத் தோன்றுகிறது.
    மேலும், தபால்காரர் குறித்து படித்தபோது, பத்திரிகைகளில் வெளியான எனது படைப்புக்கான சன்மானத் தொகையை "மணியார்டரை" பெறுவதற்கு அவரோடு ஆடிய கண்ணாம்பூச்சு ஆட்டம்! அப்பப்பா! இப்போது நினைத்தாலும் சிரிப்புத்தான் வருகிறது. சொல்லப்போனால்,

    உங்களது ஒவ்வொரு பதிவை படிக்கும்போதும், எனது நினைவுகள் மனம் என்னும் நீச்சல் குளத்தில் நீச்சல் அடிக்கின்றன.
    . நினைவுகளை மீட்டெடுக்கும் மீள் சக்தி அல்லது மின்காந்த சகித்திதான் உங்களது தனிச் சிறப்பு என்றே சொல்லுவேன்.
    எண்ணற்ற செய்திகளை எழில் ஓவியமாக்கி "காலம் திருடிய கடுதாசிகள்"! மூலம் படைத்தமைக்கு பாராட்டுக்கள்.
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நண்பரே...

      லட்டரில் தவறியது போலவே தேசத்திலும்.... இங்கிலாந்து என நினைத்து பிரான்ஸ் வந்துவிட்டேன் ! :-)

      சன்மான அனுபவம் எனக்கும் நிறைய உண்டு... அதனை ஒரு பதிவில் சொல்கிறேன் !

      என் எழுத்தின் சக்திக்கு உங்களை போன்றவர்களின் ஊக்கமும் ஒரு முக்கிய காரணம்

      நன்றி

      Delete
  23. சாம் சார்

    அருமையான பதிவு. மற்றவருக்கும் நமக்கும் இருந்த உறவை விட கடிதத்திற்கும் நமக்கும் இருந்த உறவு எவ்வளவு இனிமையானது என்பதை அழகாக ஞாபகப்படுத்தி உள்ளீர்கள் .

    இது போல் இழந்த போன நிஜங்கள் இன்னும் நிறைய உண்டு. அவையெல்லாம் ஏற்படுத்திவிட்டுப் போன தாக்கங்கள் நம் நெஞ்சக் குளத்தில் நீந்திக் கொண்டுதான் உள்ளன. நினைத்துப் பார்த்து இன்பமுறுவதா ... திரும்ப வாராமலேயே போனதை நினைத்து வருத்தமுறுவதா என்று தெரியவில்லை.

    நான் என் கசினுக்கு 30 வருடங்களுக்கு முன்பு எழுதிய கடிதங்களைப் பற்றி இப்போதும் பாராட்டிச் சொல்லுவான். அவன் ரசித்த அந்த எழுத்து நடையை ஏன் இப்போது வெளிப்படுத்தக் கூடாது என்று நான் யோசித்ததின் விளைவும் அவனுடைய வழிகாட்டுதலும்தான் இப்போது என்னை எழுதத் தூண்டுகிறது . பதிவுகளும் அதனால்தான் வெளிவருகின்றன. என்னை எழுதத் தூண்டிய கடிதங்களுக்கு நன்றி சொல்வதா அல்லது கசினுக்கு நன்றி சொல்வதா என தெரியவில்லை. கடிதம் ஒரு அழகியல் சார்ந்த விஷயம் என்பதை எடுத்துரைத்த உங்களுக்கும் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சார்லஸ்...

      " நமக்கும் இருந்த உறவை விட கடிதத்திற்கும் நமக்கும் இருந்த உறவு எவ்வளவு இனிமையானது என்பதை அழகாக ஞாபகப்படுத்தி உள்ளீர்கள் ."

      ஆழமான வரிகள் !

      நிலையற்ற உலகில் சில நிஜங்கள் மறையும்போதுதான் சாகாவரம் பெறுகின்றனவோ எனத்தோன்றூகிறது... கடிதம் இன்றூம் தொடர்ந்திருக்குமேயேனால் இந்த பதிவுக்கான வேலை இருந்திருக்காது இல்லையா ?

      " என்னை எழுதத் தூண்டிய கடிதங்களுக்கு நன்றி சொல்வதா அல்லது கசினுக்கு நன்றி சொல்வதா என தெரியவில்லை. "

      உங்களின் எழுத்து வட்டத்தை இன்னும் விரிவாக்குவது இருவருக்குமே நன்றி கூறுவதாக அமையும் என தோன்றுகிறது... !

      நன்றி

      Delete
  24. கடிதம் என்பது பால்யத்தில் என்னுடன் ஒன்றிவிட்ட ஒரு திடப் பொருள்... அந்தக் கால உணர்வுகளின் தொகுப்பை, தவிப்பின் வெளிப்பாடுகளை இப்பதிவில் படிக்கப் படிக்க ...
    அக்காலத்திற்கே சென்றுவிட்ட பிரமை...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நண்பரே...

      " கடிதம் என்பது பால்யத்தில் என்னுடன் ஒன்றிவிட்ட ஒரு திடப் பொருள்... அந்தக் கால உணர்வுகளின் தொகுப்பை, தவிப்பின் வெளிப்பாடுகளை "

      " அந்தக் கால உணர்வுகளின் தொகுப்பை "

      இரண்டே வரிகளில் இவ்வளவு அருமையான, ஆழமான பின்னூட்டம்.... கவிதை !

      நன்றீ

      Delete
  25. கடிதம் பற்றிய இப்பதிவின் மூலம் நானும் என் இளமை காலத்துக்குச் சென்று மீண்டேன். படித்து முடித்து வேலையை எதிர்பார்த்துக் காத்திருந்த போது தபால் காரர் எப்போது வருவார், நல்ல செய்தி எதுவும் வராதா என எதிர்பார்த்துக் காத்துக்கிடந்தது, அவர் வருவதைத் தூரத்தில் பார்த்து நமக்குத்தான் கடிதம் கொண்டுவருகிறார் என்று ஆவலோடு நோக்கியிருக்கும் சமயத்தில், நம் வீட்டைத் தாண்டி அவர் போகும் போது ஏற்படும் ஏமாற்றம், வெளியூரில் வேலையிலிருந்த போது அப்பாவிடமிருந்து வரும் கடிதத்தைப் பிரிப்பதற்குள் உற்சாகத்தில் மனம் துள்ளிக்குதித்த கணங்கள் என எனக்கும் சுவையான மற்றும் சோகமான மலரும் நினைவுகள் உண்டு. அனைத்தையும் மீட்டெடுக்க உதவிய உங்கள் பதிவுக்கு நன்றி. மிக அருமையாய் எழுதியுள்ளீர்கள். நாம் தொலைத்த எத்தனையோ நல்ல விஷயங்களில் கடிதமும் ஒன்று. சுவையான எழுத்துக்குப் பாராட்டுக்கள்!.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கலையரசி...

      ஆமாம்... நாம் தொலைத்தவை பல உண்டு...

      இந்த மாற்றங்கள் காலத்தின் தேவையல்லவா என தோன்றலாம்... உண்மைதான் ! ஆனால் காலத்தின் தேவையால் புதிதாக வந்த ஒன்றின் பூரிப்பில் அதே காலத்தின் தேவை ஒன்றினை பூர்த்தி செய்த ஒன்றினை தடயம் இன்றி அழித்துவிடுவதுதான் சோகம் !

      மேலைநாடுகளில் கடிதங்களுக்கென அருங்காட்சியகங்கள் கூட உண்டு !

      நன்றி

      Delete
  26. என்னுடைய பதிவில் உங்கள் கருத்தைப் படித்து எத்தனையோ நாள் உங்கள் பதிவுக்கு வர வேண்டுமென எண்ணுவேன் Tab ல் படித்தால் கருத்துப் போட முடியாதென்பதால் தொடர்ந்து தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தேன். நிறைவான மனம் நெகிழ்வித்த இந்தப் பதிவில் தொடங்குவதற்குத்தான இந்த கால நீட்டிப்பு.... கடிதங்கள் இன்று நாற்பதுகளுக்கு மேல் இருப்பவர்களின் மலரும் நினைவுகளில் கண்டிப்பாய் இடம் பிடித்திருக்கும் இன்று. பொங்கல் வாழ்த்து அட்டைகளிலும் பிறந்த நாள் வாழ்த்து அட்டைகளிலும் வாசகங்கள் தேடிப்பிடித்தது மறக்கவியலாது. எனக்கு வரும் கடிதத்தில் என் தோழி வரைந்தனுப்பும் பூ இன்னும் நினைவிலிருக்கிறது. என் தோழனின் முடிவில் போடும் சிறிய கையொப்பம் அழகானது. அதிலும் கல்லூரிக்காலங்களில் புதிதாய் வந்த ஸ்டிக்கர்... எதையும் மறக்கவியலாது... அதற்கான காத்திருப்புக்களையும்... அதிலிருந்த அன்பும், அன்னியோன்யமும் இப்போது குறைவே... ஆனால் இன்றைய தகவல் தொடர்புகள்தான் அந்த நட்புகளை எனக்கு மீட்டுக் கொடுத்த நன்றி எப்போதும் உண்டு. இன்னமும் வீட்டில் யாருமில்லாத போது எஃப் எம்மில் பாட்டைக் கேட்டுக் கொண்டே சமைக்கும் பழக்கம் என்னுடையது.... சமையலறையில் நிரந்தர இடமுண்டு ரேடியோவிற்கு.... நினைவுகளில் நீந்தச் செய்தமைக்கு நன்றி....

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரி...

      எந்த ஒரு புதிய அறிவியல் கண்டுபிடிப்பும் அது சார்ந்த பழைய தொழில்நுட்பத்தின் தொடர்ச்சியாகவோ அல்லது மீட்சியாகவோதான் அமையும் ! "

      என்பதை,

      " ஆனால் இன்றைய தகவல் தொடர்புகள்தான் அந்த நட்புகளை எனக்கு மீட்டுக் கொடுத்த நன்றி எப்போதும் உண்டு. "

      மிக அழகான உணர்வுப்பூர்வமான வரியில் அடக்கிவிட்டீர்கள் !

      நன்றி
      தொடருவோம் !

      Delete
  27. என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு என் மனமார்ந்த நன்றி நண்பரே!
    //அவ்ளோ பெரிய அப்பாடக்கராபா நான்... இல்லே மெய்யாலுமே அவ்ளோ பெரிய அப்பாடக்கராபா நான்?
    பத்தோடு பதினொண்ணா எழுதிக்கொண்டிருந்த என்னை பதினாறும் பெற்று சிறக்க பதினாறாவதாக அறிமுகப்படுத்திய உமக்கு என் நன்றிகள் நண்பரே!//

    கடிதங்கள்... இன்று மறைந்து போன ஒரு கலை!
    அதிலும் அந்த இண்லாண்ட் லெட்டரை பிரிப்பது என்பது அதை விட பெரிய கலை.
    கடிதத்தை முழுவதுமாக எழுதி முடித்துவிட்டு பின்னர் முக்கியமான விஷயத்தை "சைடில்" மடிக்கும் இடத்தில் எழுதி ரொப்புவது பலரும் செய்யும் ஒரு செயல்.
    அருமையான ஒரு பதிவுமட்டுமல்ல நெஞ்சை பிழிந்து நம் பழைய எண்ணங்களை நம் மூளைக்கு ஞாபகப்படுத்திய ஒரு அற்புத பயிற்சி.
    மீண்டும் வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள்...

      பெரிதாக நான் ஒன்றும் செய்துவிடவில்லை !

      ஆமாம், இண்லேன்ட் லெட்டர் போன்ற, மடித்து ஒட்டும் கடிதங்களை எழுத்து சிதையாமல் கவனமாய் பிரிப்பதே ஒரு கலைதான் !

      வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  28. "குழலின்னிசையின்"
    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. சுதந்திர தின வாழ்த்துக்கு குடியரசுதினம் நெருங்கும் காலத்தில் நன்றி நவில்கிறேன் !!!

      Delete
  29. அன்புடையீர்,

    வணக்கம்.
    தங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வருகை தந்து சிறப்பிக்கவும்.

    blogintamil.blogspot.in/2015/08/blog-post_16.html

    நன்றி

    அன்புடன்,

    எஸ்.பி.செந்தில்குமார்.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே !

      தாங்கள் எனக்கு செய்த பெருமைக்கு மூன்று மாதங்கள் கழித்து நன்றி கூற வருகிறேன்... மன்னிக்கவும் !

      மிக அருமையான முறையில் வலைச்சரத்தை தொகுத்தளித்து, சிறப்பானவர்களை மேலும் சிறப்பு செய்து, அதில் என்னையும் சேர்த்து பெருமைபடுத்தியமைக்கு நன்றி !

      தொடருவோம் !

      Delete
  30. வலைச்சர அறிமுகத்தின் மூலம் இங்கு வந்தேன்.
    அடடா! இத்தனை நாட்களாய் எப்படி தங்கள் வலை கண்ணில் சிக்காமல் போனது என்று எண்ணும்படியாக இருந்தது தங்கள் எழுத்து நடை. அப்படியே காலங்களை பின்நோக்கி நகர்த்தி பால்ய பருவத்திற்குள் அழைத்து சென்றது.
    நாங்கள் வசித்ததும் கிராமத்தில் பக்கத்து வீடோ அல்லது தெருவிலோ தான் மொத்த சொந்தங்களும் இதனால் கடிதப்போக்குவரத்து என்றால் என்னவென்றே அவ்வளவாக தெரியாத நிலை எனக்கு. மெல்ல மெல்ல பள்ளித்தோழர்களின் வாழ்த்து அட்டை இப்படியான அறிமுகங்கள் ஆனந்தமயமான நாட்கள் அவை. அதன் பிறகு என் அக்காவின் மேல்படிப்பு காரணமாக விடுதியில் தங்கிப்படித்தபோது மனதில் உறுதி வேண்டும் சுஹாசினி போல எங்க அக்காவின் மிரட்டல் கடிதங்கள் வரும்.அடடா என்னஇது என் கதையை சொல்ல ஆரம்பித்து விட்டேனோ?

    சரிங்க தொடர்கிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரி...

      உங்களின் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி.

      இனி தொடருவோம்

      Delete
  31. கடிதத்தகவல் என்றாலே ஒருவிதமான மகழிச்சி உண்டாகும். இப்ப அவைகளை மறந்து கைபேசிகளுடனும், கணினிவழிக் குறு செய்திகளுடனும் தான் பொழுதை வீணடிக்கின்றனர் நம் இளைய சமுதாயம்..

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...

      தங்களின் முதல் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி.

      தொடருவோம்

      Delete
  32. வருகைக்கும் அழைப்புக்கும் நன்றி அய்யா

    ReplyDelete