Monday, December 14, 2015

சென்னை நலமா ?

" நான் நலம் என்று சொல்வதே தற்போதைய சூழலில் அபத்தமாகத் தெரிகிறது... "

எனது நல விசாரிப்புக்கு நண்பர் காரிகனின் பதில் இது !

இதனைப் படித்ததும் எனக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த விமான விபத்து ஒன்றின் போது பத்திரிக்கைகளில் பார்த்த, அந்த விமானத்தின் சிதறிய பாகங்களுக்கிடையே பாதிக் கருகிய திருமணப் பத்திரிக்கையும் ஒரு கரடி பொம்மையும் கிடக்கும் புகைப்படம் ஒன்றும் , சுனாமி பேரிடரின் போது கடற்கரையில் ஓடிக்கொண்டிருக்கும் குழந்தை ஒரு பெரிய கடல் அலைக்குப் பிறகு மாயமாய் மறையும் காட்சியும் நினைவுக்கு வந்தன ...

விபத்தையும் அழிவையும் உணர்த்தக் கூக்குரல்களையும் சிதறிய உடல்களையும்தான் காட்சி படுத்த வேண்டும் என்பதில்லை. கருகிய திருமணப் பத்திரிக்கையும், தனியே கிடக்கும் ஒரு கரடி பொம்மையும் கூடப் பார்ப்பவருக்கு முழுப் பாதிப்பையும் உணர்த்தி அவரது ஆன்மாவை உலுக்கிவிட முடியும்.

காரிகனின் பதிலில் சென்னை மக்களின் உணர்வு முழுவதும் அடங்கி உள்ளதாகத் தோன்றுகிறது.

தலைநகர் என்பதால் சென்னையைப் பிரதானப்படுத்திக் குறிப்பிட்டாலும் தமிழ்நாடு, புதுவை மாநிலம் என இந்த ஊழி மழை ஏற்படுத்திய பாதிப்பும் இழப்பும் வரலாறு காணாதது. உலகின் ஆகப் பெரும் தேசங்கள் ஒன்றின் நான்காவது முக்கிய நகரம் தனித்தீவாய் துண்டிக்கப்பட்டு ஸ்தம்பித்து நிற்பதைப் பேசாத நாடுகளில்லை !

புயலும், பெருமழையும், பூகம்பமும் இயற்கையின் சீற்றங்கள். மனிதனின் இத்தனை விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், வளர்ச்சிகளுக்குப் பிறகும் அவை ஏற்படுத்த போகும் முதல்கட்ட பாதிப்பை துல்லியமாக மதிப்பிட அவனிடம் எந்த அளவுகோலும் கிடையாது என்பது நிதர்சனமான உண்மைதான் !

2011ம் ஆண்டு ஜப்பானில் நிகழ்ந்த சுனாமி பேரிடரில் பாதிப்புக்குள்ளான புக்கூஷிமா அணு உலையின் கதிரியக்க விபத்தை இன்றுவரை கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை ! அதே சுனாமியின்போது கடல் அலையினால் தூக்கி எறியப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று இரண்டு அடுக்குமாடி கட்டிடங்களுக்கு இடையே தொங்கி கொண்டிருந்த காட்சியைக் கண்டவர்களுக்கு இயற்கையின் முன்னால் மனிதனும் அவனது கண்டுபிடிப்புகளும் எத்தனை பலவீனம் என்பது புரியும் !

ஆனால் இதையெல்லாம் உதாரணமாகக் காட்டி சென்னையின் அவலத்தை நியாயப்படுத்தலாமா ?...

சென்னை ஒரு கடற்கரை நகரம். நகருக்கு நடுவே கூவம் நதி அமைந்த வசிப்பிடம். இயற்கையின் நியதிப்படி இதுபோன்ற நகரங்களுக்கு நீரினால் வரும் ஆபத்து கடல் ஏறுவதால் மட்டுமே நிகழ முடியும். மாற்றாய் மழைநீர் வேகமாய் வெளியேறி கடலில் கலக்க ஏதுவாக அமைந்த பகுதி !

சென்னை அமிழ்ந்திருப்பது வெள்ளத்தில் அல்ல... மழை நீர்த் தேக்கத்தில் ! ஆமாம் ! இத்தனை இழப்புக்கும் காரணம் மழைநீர் வேகமாக ஓடி வடிவதற்கான வழிகள் அடைக்கப்பட்டதும், புதிய கழிவு பாதைகள் தொலைநோக்கு பார்வையுடன் அமைக்கப்படாததும்தான் !

சென்னை போன்ற பழம்நகரத்தில் அமைந்த வடிகால்கள் எனப்படும் வாய்க்கால்கள் பல நூறுஆண்டுகள் படிப்படியாய் அமைந்தவை. ஒவ்வொரு மழையின் போதும் நீர்ப்பெருக்கு பூமியை ஊடறுத்து நதி மற்றும் கடல் நோக்கி ஓடி இயற்கையாய் அமைந்த வடிகால்கள் ஒருவகை என்றால் சென்னையின் ஆதி மனிதர்கள் அவ்வப்போது தோண்டி ஏற்படுத்திவைத்த வடிகால்கள் மறுவகை.

எத்தனையோ நூறு ஆண்டுகள், காலப்போக்கில் அமைந்த இந்த வடிகால்களையும் வாய்க்கால்களையும் முப்பதே ஆண்டுகளில் திட்டமிட்டு தூர்த்து, மேடு பள்ளம் பார்க்காமல் வீட்டுமனைகளாய் விற்பனை செய்ததின் விளைவை இன்று அனுபவிக்கின்றோம் ! மக்களின் அத்யாவசிய அடிப்படை தேவைகள், பாதுகாப்பு, பேரிடர் நிவாரணம் போன்றவற்றில் எந்த அக்கறையும் இல்லாத, கையாலாகாத, சுயநல அரசியல்வாதிகளை மாற்றி மாற்றி ஆளவிட்டதின் பலன் இது !

மழையினால் மக்கள் படும் இன்னல்களையும், நேர்ந்த இழப்புகளையும் மாற்றாந்தாய் கண்ணோட்டத்தில் பார்க்கும் மத்திய அரசு ! அயல்நாடுகளில் நிகழும் இயற்கை பேரிடர்களுக்கு வல்லரசு கனவுடன் மில்லியன் டாலர் கணக்கில் கொடுக்கும் இந்திய அரசாங்கம் தன் சொந்த நாட்டு அவலத்துக்கு என்ன செய்யத் திட்டம் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை ! தென்னாட்டில் எல்லாம் சுகம் என்பதாய் செய்தி வாசிக்கும் வடநாட்டு ஊடகங்கள் !

மாநில அரசு முற்றிலுமே மழை நீரில் மறைந்துவிட்டதோ எனப் பயப்படும்படியான அரசு செயல்பாடுகள் ! யாருமே வரவில்லை என மக்கள் அலறும் எதிர்க்கட்சிகளின் தொலைக்காட்சி தகவல்கள் ! மக்கள் வரிப்பணத்தில் கொடுக்கும் ஏனோதானோ நிவாரணப் பொருட்களில் கூட முதல்வர் படம் ஒட்டி அரசியல் ஆதாயம் தேடும் ஆளுங்கட்சி செய்திகள் ! முப்பது ரூபாய் பாலை ஆயிரம் ரூபாய்க்கு விற்கும் வியாபாரிகள் ! அனைத்தையும் இழந்து தவிப்பவனின் அரைஞாண் கயிற்றையும் உருவிக்கொண்டு ஓடும் கொள்ளையர்கள் !

இத்தனை அவலங்களையும்தாண்டி தெரியும் மனித நேயம் ! வழக்கம் போலவே சக மனிதனின் துயர்துடைத்து தோள் கொடுக்கும் சாமானிய மக்கள் ! தங்கள் ஜாதி மதம் மறந்து இரவு பகல் பாராமல், உயிரையும் பணையம் வைத்து நிவாரணப் பணிகளிலும், துயர்துடைப்புகளிலும் தொடர்ந்து ஈடுபடும் தன்னார்வலர்கள் !

இந்தத் தேசத்தின் முரண்கள் அனைத்தும் மனதை உறுத்துகின்றன !

மழையினால் பாதித்த மக்களின் கண்ணீர், சுனாமி அலையாய் எழுந்து, அறுபது ஆண்டுகளாக மக்களாட்சி என்ற பெயரில் மானங்கெட்ட பிழைப்பு பிழைக்கும் அரசியல்வாதிகளையும், அவர்களின் விரல் ஆட்டலுக்கு வளைந்தே அரசு இயந்திரத்தை அவலமாக்கிய அதிகாரிகளையும் அடித்துச் சுருட்டி வீசி விடாதா என மனம் ஏங்குகிறது !

சுனாமி பாதிப்புக்கு பிறகு எனது பூர்வீகமான காரைக்காலுக்குச் சென்றிருந்தேன்... அந்தப் பெரும் துயரம் நிகழ்ந்து ஒரு வருடம் கூட முடிந்திருக்கவில்லை...

புதிதாய் முளைத்திருந்த ஆடியோ ரெக்கார்டிங் செண்டரின் பெயர் " சுனாமி ரெக்கார்டிங் செண்டர் " என்றிருந்தது !

மறதிதான் நம் தேசிய குணமாயிற்றே !!!

சென்னை மிக விரைவில் நலம் பெறும்.





பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.