Sunday, July 7, 2019

என் முதல் தோழன்

ஜாதி மதங்களை தாண்டி மனிதர்களை நேசித்தவர்,
சகலரின் உணர்வுகளையும் மதித்தவர்.
வீட்டுக்கு வருபவர் யாராயினும் தான் உண்ணுமிடத்தில்,
தனக்கு பக்கத்தில் அமரவைத்து தன் உணவை பகிர்ந்துண்டவர்.
பெரியாரின் கொள்கைகளில் பெரும் ஈர்ப்பு கொண்டவர்,
மூடநம்பிக்கைகளை நம்பும் பேச்சுகளுக்கு மட்டுமே அவருக்கு கோபம் வரும்.

இடம், பொருள், ஏவல் அறிந்து நடப்பதில் என்றும் வழுக்காதவர்,
கடன் என்ற வார்த்தையை வெறுத்து கண்ணியம் காத்தவர்.
வாழ்க்கையின் எத்தருணத்திலும் நிதானம் இழக்காதவர்,
முதியவர்களை போற்றி இளையவர்களை வாழ்த்தி வாழ்ந்தவர்.
உணர்ச்சிவசப்படாமல் பலமுறை யோசித்து வாக்களித்தவர்,
கொடுத்த வாக்கிலிருந்து என்றும் பிழலாதவர்.

பிள்ளைகளை தோழர்களாய் பாவித்து வளர்த்தவர்,
எங்களுடன் அரசியல் முதல் தத்துவம் வரை அனைத்தையும் அளவளாவியவர்.
எங்களின் அறிவுத்தேடலுக்கு எந்நேரத்திலும் தடை போடாதவர்,
பொருளாதார நெருக்கடியில் கூடவாசிக்க கேட்ட அனைத்தையும் வாங்கி குவித்தவர்.
யதார்த்தமான வார்த்தைகளால் வாழ்வின் நிதர்சனத்தை புரியவைத்தவர்,
அவரது அறிவுரைகளால் வாழ்வில் வளம் பெற்றவர்கள் பலர்.




என் முதல் தோழனை, என் வாழ்வின் முதல் தருணம் முதல் தொடர்ந்த ஒரு நீண்ட நெடிய நட்பை இழந்த உணர்வில் என்னை தவிக்க வைக்கிறது என் தந்தையின் மறைவு.

ஒரு தந்தையின் மறைவு உண்டாக்கும் சஞ்சலத்தை வார்த்தைகளில் வரைந்த சகோதரர் "ஊமைக்கனவுகள்" ஜோசப் விஜுவின் கீழ்கண்ட இந்த கவிதையை விடவும் மேலான ஒரு அஞ்சலியை என் தந்தைக்கு செலுத்த முடியும் என தோன்றவில்லை...


குழி விழுந்தவொரு யானையின்
இறுதிநாள் குறித்து,
அதீதப் பிளிறலோடு
வாசிக்கப்பட்ட மருத்துவ சாசனத்தின்
மூன்று மாதக் கெடுவை,
சலனமற்ற நதியாய்க்
கேட்கக் கூடிற்று உனக்கு...!

துடுப்பொன்றை அண்ணனிடத்தும்,
திசைகாட்டியை அம்மையிடத்தும் கொடுத்த பின்,
" எனக்கு..........................."
 எனக்கேட்டு நீண்ட என் கைகள் ,
இறுகப் பிடித்தொரு முத்தம்!

ஓட்டை விழுந்த களஞ்சியங்களிலிருந்து,
நீ ஒழுகிக்கொண்டிருப்பதை
அடைக்க முயற்சித்துக் கொண்டே இருந்தனர்,
அண்ணனும் அம்மாவும்!

ஒருவழி மூட இருவழி திறக்கும்
மர்மம் அறியா வேதனையூடே,
கையில் கிடைப்பதெல்லாம் கொண்டு
தீரத் தொடங்கியிருந்த உன் 
மீதமேனும் சேர்த்துவைக்கப்
பிரயத்தனப்பட்டனர் அவர்கள்!

சேறுற்ற நெடுங்குளத்தில்,
பசிமுற்ற உன்னைப் பிடித்து,
சுழற்றியவாறே உள்ளிழுக்கும்
முதலையின் வாய்க்குள்
மெல்லப் போய்க்கொண்டிருக்கும்போதும்,
கலங்கும் எம் கண்கள் குறித்தே
கவலை கொண்டிருந்தாய் நீ!

உறங்குவதாய்த்
தலையணை நனைத்துக்கிடந்த
பாவனை இரவொன்றில்,
அதிசயமாய்
அன்று உறங்கிப்போன அம்மாவின்
உறக்கம் கலைந்திடக் கூடாதென“
சிரமறுக்கும் வலிபொறுத்துப்
பற்கடித்தழுத உன் வேதனை
பார்த்திடப் பொறுக்கவில்லை எனக்கு!

எத்தனையோ முறை
நான் ஏறிவிளையாடிச்
சாய்ந்துகிடந்த மார்பின்,
உள்ளிருக்கும் இதயம்
உறங்காமலிருக்க,
என்ன செய்யட்டும் நான்?

கடைசியாய்,
காற்று,
நீரெனத் திரண்டு
சுவாசப்பை பாய்ந்தது போன்றொரு அவஸ்தையில்,
குமிழ் வெடிக்கத் தீர்ந்ததுன் பாடுகள்!

மரணத்தூரிகை
நெருக்கத் தெழுதிய
விதம் கேட்க வருமொரு கூட்டம்
 கண்திறந்த பொழுதுகள் 
பற்றிக் கேட்டவாறே
கைபிடித்துக் கலையும்!

இருக்கும் போதைய
அருமையுணராமல்,
இல்லாதானபின் சொல்லித்திரிய,
எல்லாரிடத்தும் இருக்கின்றன
இதுபோன்ற நூறாயிரம் கதைகள்!

ஆனாலும் அப்பா,

என் பன்னிரு பிராயத்தில்,
வாசிக்கக் கிடைக்காதொரு புத்தகம் குறித்து,
வருந்திக்கிடக்க,
கோவையில் கிடைப்பதாய் அறிந்து
வாங்கிவந்து
என் கண்படும் இடத்தில் வைத்து
என் கண்ணீர் ரசித்த
உன் அன்பினில்
ஒரு துளியளவேனும்
திரும்பக் கொடுத்ததில்லை நான்!

எப்பொழுதும்,
என் கலக்கம் காணச் சகியாது உனக்கு!

இரு நாட்களாய்,
என்ன எழுத...... “,   
எனக் கலங்கிக்
கண்ணிறைந்திருந்த போது
என்னை எழுதேன்” என
உன்னைக் கொடுத்துவிட்டுப் போகிறாய்
இப்பொழுதும்!

  பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

Wednesday, August 8, 2018

ஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்




ம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த காலம்...

திமுக சட்டமன்ற உறுப்பினர் ரகுமான்கான் பேசுவதற்காக ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டதை அறிவிக்க மணி அடித்தும், பேசுவதை நிறுத்துமாறு வேண்டியும் ரகுமான்கானின் பேச்சை நிறுத்த முடியாத சபாநாயகர் முதலமைச்சர் எம்ஜிஆரை நோக்குகிறார். முதலமைச்சரே எழுந்து பேச்சை நிறுத்துமாறு கேட்ட பிறகும் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார் ரகுமான்கான் !

" உங்களை அந்த ஆண்டவனால் கூட நிறுத்தமுடியாது ! " என எம்ஜிஆர் நொந்துக்கொள்ள, எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதி எழுந்து ரகுமான்கானை அமரச்சொல்கிறார். தன் கட்சி தலைவருக்கு தலைவணங்கி பேச்சை முடித்துக்கொள்கிறார் திமுக சட்டமன்ற உறுப்பினர்.

அடுத்ததாக கருணாநிதி பேசுகிறார்...

" தம்பி ரகுமான்கானை ஆண்டவனாலும் நிறுத்த முடியாது என்றார் முதலமைச்சர்... நான் நிறுத்திவிட்டேன்... காரணம் நான் ஆண்டவன் ! தமிழ்நாட்டை  இரண்டுமுறை ஆண்டவன் ! "

மாதமோ சித்திரை !
மணியோ பத்தரை !
மக்களுக்கோ நித்திரை !
வழங்குவீர் உதய சூரியனில்
உங்கள் முத்திரை ! "

என எளிய தமிழில் எதுகைமோனையில் விளையாடி சங்கத்தமிழை பாமரன் கொஞ்சும் தமிழாய் மாற்றிய அண்ணாவின் இதயத்தை கடன் கேட்ட கலைஞர் கருணாநிதி மீளாநித்திரையில் ஆழ்ந்துவிட்டார்.

தான் நினைத்த நேரத்தில், தான் நினைத்த திசையில் அரசியலை சுழற்றிவிடும் அச்சாணியாக அறுபதாண்டுகளுக்கும் மேலாக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஒரே அரசியல்வாதி இந்தியாவிலேயே கருணாநிதி ஒருவராகத்தான் இருக்க முடியும் ! அப்படிப்பட்ட தீவிரமான அரசியல் பணிகளுக்கு மத்தியில் பத்திரிகையாளர், எழுத்தாளர், இலக்கியவாதி, நாடக மற்றும் சினிமா பணிகள் என தன் அனைத்து பண்முகத்திறமைகளிலும் தனி முத்திரை பதித்த மனிதர் உலகிலேயே கருணாநிதி மட்டும்தான் என்றால்கூட அது மிகையாகாது !  கலைஞர் தொலைக்காட்சிக்கு வெற்றிகரமான ஆலோசனைகள் வழங்கியது முதல் எண்பதை தாண்டிய வயதில் முகநூலிலும் முத்திரை பதிக்க முயன்றதுவரை கருணாநிதியின் அரசியலை தாண்டிய ஆளுமை பற்றி பல பக்கங்கள் எழுதலாம் !

அவர் எழுதிய நெஞ்சுக்கு நீதி தமிழக அரசியலின் அரைநூற்றாண்டுக்கான வரலாற்று ஆவணம் !

ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, திமுக சட்டமன்ற உறுப்பினர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொண்டிருந்த காலமாகட்டும் அல்லது  ஒற்றை உறுப்பினருடன் மங்கியிருந்த காலமாகட்டும் கருணாநிதியே அரசியலின் மையம் ! தன்னை நோக்கி தகிக்கும் பிரச்சனையை ஒரு ஒற்றை கேள்வியினால் தன் எதிரி பக்கமே திருப்பிவிடும் பிரம்மாஸ்த்திர சாதுர்யம் கொண்டவர் அவர் !

பூமியின் இரவு பகலை போல தமிழ்நாட்டின் அரசியல் உலகுக்கும் இரண்டே நிலைகள்தான். ஒன்று கருணாநிதி ஆதரவு மற்றொன்று  கருணாநிதி எதிர்ப்பு ! கருணாநிதியை சாதுர்யமாக எதிர்கொண்டாலே போதும் அரசியல் கிணற்றை தாண்டிவிடலாம் என்ற நிலை இருந்ததாலோ என்னவோ, தான் பெற்ற செல்வாக்குக்கு ஈடான விமர்சனங்களையும் வெறுப்பையும் சம்பாதித்த அரசியல்வாதியும் அவர்தான் !  அவரை எதிர்த்து அரசியல் செய்தவர்கள் சிலர் என்றால் அவருக்கு பயந்து அரசியல் ஆசையை ஒதுக்கிவைத்தவர்கள் பலர் ! அவர் பேச்சை நிறுத்தி, வீட்டில் முடங்கிய பிறகுதான் பல பிரபலங்கள் அரசியல் பேச வெளியே வந்தனர் !

அவரது முதிர்கால அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் குடும்ப ஆதிக்கம் பற்றி பல விமர்சனங்கள் இருந்தாலும் ஐந்து முறை முதலமைச்சராக தமிழகத்தின் வளர்ச்சிக்கான கருணாநிதியின் சாதனைகள் ஏராளம். அந்த சாதனைகளில் பலவற்றை சட்டபூர்வமாக்கி வெற்றி கணடவர். பூம்புகார், வள்ளுவர்கோட்டம், மாபெரும் நூலகம் என கலை பண்பாட்டு தளத்திலும் பல திட்டங்களை செயல்படுத்தியவர் கருணாநிதி.மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் போன்ற சொல்லாடல்களை வழக்கு மொழியாக்கியவரும் கலைஞர் தான். 

ருணாநிதியின் மறக்கப்பட்ட சாதனைகளில் மிசா காலகட்டமும் ஒன்று...

இந்திரா காந்தி நெருக்கடி நிலையை பிரகடணப்படுத்தி இந்திய ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்து மாநில ஆட்சிகளை காவு கொண்டபோது அதனை கண்டித்து,  நெருக்கடி நிலையை திரும்ப பெறவேண்டும் என செயற்குழுவை கூட்டி தீர்மானம் இயற்றிய இந்தியாவின் முதல் கட்சி திமுக. நெருக்கடி நிலையை ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால் எதிர்க்கக்கூடாது என இந்திராகாந்தி கேட்டுக்கொண்டதையும் மீறி கருணாநிதி செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கான விலையாய் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு, அந்தக்கட்சியின் முன்னணி தலைவர்கள் முதல் மாவட்ட நிர்வாகிகள்வரை நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிட்டி பாபு,முரசொலி மாறன், மு க ஸ்டாலின் என பல திமுகவினர் சிறையில் கொடுமைப்படுத்தப்பட்டனர். சிறையில் நடந்த தாக்குதல்களின் காரணத்தால் சிட்டி பாபு உடல்நலம் குன்றி உயிர்நீத்தார்.

அதே மிசா காலகட்டத்தில் கடுமையான தணிக்கை விதிகளினாலும், மிரட்டல்கள் மற்றும் கைதுகளின் மூலமாகவும் பத்திரிக்கை சுதந்திரம் நாடு முழுவதும் பறிக்கப்பட்டது. இந்தியாவின் தேசிய பத்திரிக்கைகளே அரசுக்கு எதிராக எழுத தயங்கிய போது திமுகவின் முரசொலி இந்திரா காந்தியின் படத்தை ஹிட்லராக சித்தரித்து கேலிச்சித்திரம் வெளியிட்டது.

அவசர நிலைக்கு பிறகான இந்திய அரசியலில் தான் தீவிரமாக எதிர்த்த இந்திராவுடன் " நேருவின் மகளே வருக நிலையான ஆட்சியை தருக " என கருணாநிதி கூட்டணி வைத்துக்கொண்டதை விமர்சிப்பவர்கள்கூட மாநில சுயாட்சி மற்றும் பிராந்திய நலனுக்கான அவரது அயராத உழைப்பை மறுக்கமாட்டார்கள்.

மொழிவாரி மாநிலங்களின் தோற்றம் முதல் மாநில சுயாட்சி கோரிக்கைவரை இந்தியாவின் மாநிலநலன் சார்ந்த அனைத்து இயக்கங்களிலும் முன்வரிசையில் நின்றவர் கருணாநிதி. சுதந்திர தினத்தின் போது மாநில தலைநகரங்களில் அந்தந்த மாநில முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்றுத்தந்தவர் கருணாநிதி.

" ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இங்கே ஓய்வுகொண்டிருக்கிறான் " என தனது கல்லறையில் பொறிக்கப்பட வேண்டும் என்று  கருணாநிதியே கேட்டுக்கொண்டதுதான் அவருடன் வாழ்ந்த தலைமுறைக்கும் இனி வரும் தலைமுறைக்கும் அவர் விட்டு செல்லும் செய்தி ! தொடர் தோல்வி தருணங்களை கூட  தனக்கு சாதகமான களங்களாக்கி அயராது உழைத்த அவரது போராட்ட குணத்தை ஒவ்வொரு மனிதனும் நினைவில் கொள்ள வெண்டும்.

" யங்கா விட்டாலும் பரவாயில்லை அவர் இருந்ததே ஒரு தைரியம் " என முதுமையின் உச்சத்தில் இருந்த குடும்பத்தவர் பற்றிய உணர்வே கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவிலும் தோன்றுகிறது...

இனி வரும் காலங்களில் தமிழக அரசியல் பற்றிய விமர்சனங்களும் வரலாறும் கருணாநிதி இருந்த போது,  கருணாநிதி இறந்த பிறகு என்ற இரு நிலைகளிலேயே பதியப்படும் !

 பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.


Saturday, May 19, 2018

பேரன்பின் பெருஞ்சுடர்


பாலகுமாரன் என்றதுமே எனக்குச் சித்திக் அண்ணன் மற்றும் ஆனந்தின் ஞாபகங்கள் மனதில் பொங்கும்.கல்லூரியில் யதார்த்தமாய்க் கிடைத்த பாலகுமாரனின் நாவல் ஒன்றினை படித்ததிலிருந்து அவரது நாவல்களுக்கு அடிமையாகிப்போன சித்திக் அண்ணன் அதற்கு முன்னர்த் தினசரிகள் வாசிக்கும் பழக்கம் கூட இல்லாதவர் ! பிரான்ஸில் நட்பான ஆனந்துக்குப் பாலகுமாரனின் எழுத்துகள் மட்டுமே வேதம் ! உலக இலக்கியம் பேசினால்கூட அதுவும் பாலகுமாரனின் எழுத்தில் உண்டு என உதாரணம் காட்டக்கூடியவர் !

பாலகுமாரனின் படைப்புகள் இலக்கியத்தில் சேரும் சேராது என அவரது மெர்க்குரிப்பூக்கள் வெளிவந்ததிலிருந்து இன்றுவரை சர்ச்சைகள் உண்டு. ஆனால் தமிழ்நாட்டில் சினிமா நட்சத்திரங்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் மட்டுமே சேரக்கூடிய அதிதீவிர ரசிகர்களுக்கு ஈடாக, சித்திக், ஆனந்த் போன்ற வாசகர்களைக் கொண்டிருந்த ஒரே எழுத்தாளர் பாலகுமாரனாக மட்டும்தானிருக்க முடியும் ! தினசரிகள், வார மாத இதழ்களுடன் ஜோதிட சமையல்கலை புத்தகங்கள் நிரம்பி வழியும் தமிழ்நாட்டு பேருந்து நிலைய புத்தகக் கடைகளில் க்ரைம் எழுத்தாளர்கள் தவிர்த்து ஏகபோக இடம் பிடித்த முதல் எழுத்தாளர் பாலகுமாரன் தான் ! அவரது வாசகர்கள் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் பரவியிருந்தனர்.

சமூகத்தின் சகலவிதமான மனிதர்களின் குணநலன்களையும் விருப்பு வெறுப்பின்றிக் குறுக்குவெட்டு பார்வையாய் நோக்கிய பாலகுமாரனின் எழுத்து, மனித உறவுகளை, அதன் சிக்கல்களை, அச்சிக்கல்களைத் தாண்டி அனைத்து மனங்களிலும் நிரம்பி வழியும் அன்பை வெளிக்காட்டியது. சக மனிதனை தான் படித்ததைப் போலவே தன் வாசகனையும் படிக்க, நேசிக்கப் பழக்கினார் பாலகுமாரன். தன் கதை மாந்தர்களின் வழியே சமூகத்தின் இருட்டுப் பக்கங்களைக் கூட எந்தவிதமான ஒழுக்கப் போதனைகளுமின்றி வாசகனுக்குக் காட்சிபடுத்த அவரால் முடிந்தது. லாரியிலிருந்து இறக்கும் முதல் அரிசிமூட்டையைக் கிடங்கு பெருக்கும் பெண்களுக்காகக் கிழித்துவிடும் கூலித்தொழிலாளியின் இரக்கத்தை வாசகனுக்கு உணர்த்த முடிந்த பாலகுமாரனால் மெர்க்குரிப்பூக்கள் நாவலின் தொழிற்சாலை முதலாளியின் மனதில் ஒளிந்திருந்த ஈரத்தையும் வெளிக்காட்ட முடிந்தது !

காதலை கர்வமாய், காமத்தை பாவமாய்ப் பாவிக்கும் சமூகத்துக்கு " காதல் என்பது விட்டுக்கொடுத்தல், காதலுக்காகக் காதலையே விட்டுக்கொடுத்தல் " என இடையறாது உணர்த்த முயன்றன அவரது படைப்புகள். அதீத காமம் வேறு காரியங்களில் ஈடுபடாதபடி மனதின் சமன்பாட்டைக் குலைத்துவிடும் எனக் காமத்தை உளவியல்ரீதியில் விளக்கியது அவரது எழுத்து.

பல்வேறு ஒழுக்கக் கோட்பாடுகளையும் போதனைகளையும் கொண்ட ஒரு சமூகத்தில் தன் வாழ்க்கையைத் திறந்த புத்தகமாய்க் காட்ட, சமூகம் குற்றமாய்க் கருதும் செயல்களைக் கூட இதை இதைச் செய்தேன் என்று ஒரு செய்தியாய் பகிர எத்தனை பிரபலங்களால் முடியும் ? மனிதத்தின் மீது பற்றுக்கொண்டு, தன் சமூகத்தின்பால் பேரன்பு கொண்ட ஒருவனால் மட்டுமே அசைவ உணவகத்தில் கறியை ஒதுக்கிவிட்டு பிரியாணியைச் சாப்பிட்டுப் பின்னர்ப் பசிஅடங்காமல் கறியையும் சாப்பிட்டதையும், விலைமாதுவை கடற்கரைக்கு அழைத்துச் சென்று கவிதை வாசித்துக் காட்டியதையும் இதுதான் நான் கடந்து வந்த பாதை என எழுத்தோவியமாய்த் தீட்ட முடியும். சமூகம், வரலாறு, ஆன்மீகம் என அவரது படைப்புகளின் களங்கள் மாறினாலும் அவைகள் அனைத்திலும் பிரதிபலன் இல்லாத பேரன்பு பரவியிருக்கும்.

உடம்பிலிருந்து வெளியேறிய எழுத்துச்சித்தரின் ஆன்மா அவரது படைப்புகளின் வழியே பேரன்பின் பெருஞ்சுடராய் என்றென்றும் ஒளிர்ந்திருக்கும்.



பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.