Saturday, November 7, 2015

க்ளிஷே !

மீபத்தில் இரண்டு பாகிஸ்த்தானியர்களைச் சந்திக்க நேர்ந்தது...

அறிமுகத்தின் போது ஒருவர் தன் பெயர் வாசிம் எனக் கூறினார்.

" வாசிம் அக்ரம் போலவா ? " என்றேன் !

அடுத்தவரின் பெயர் முஷாரப்.

என் வாய் சும்மா இருக்கவில்லை,

" பர்வேஸ் முஷாரப் போல் ! " எனத் திருவாய் மலர்ந்தேன் !

சட்டென என்னைப் பார்த்த வாசிம், ஜாவித்திடம் திரும்பி உருது மொழியில் பேசி சிரித்தார் ...

ரு மொழியின் சம்பாஷனையைப் புரிந்துக்கொள்ள அந்த மொழியை அறிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஒருவர் பேசும் த்வணி, குரலின் ஏற்ற இறக்கம் மற்றும் முக, உடல் பாவனைகளைக் கொண்டே அவர் குறிப்பிடுவது பாராட்டா, கேலியா அல்லது குட்டலா என்பதைப் புரிந்துகொண்டுவிடலாம் !

இதற்கு மிகச் சரியான " பன்னாட்டு வர்த்தக உதாரணமாக " உலகெங்கும் பரவியிருக்கும் அமெரிக்க மக்டொனால்ட் ரெஸ்ட்டாரெண்ட் ஊழியர்களின் அங்க அசைவுகளைக் குறிப்பிடலாம். கைகளை ஆட்டி, கண்களை உருட்டி பேசியே நமக்குத் தேவை டீயா, கோக்கா அல்லது பிரெஞ்சு பிரையா, சாண்ட்விச்சா எனத் தெரிந்துக்கொள்வார்கள் ! உலகெங்கும் ஒரே தரம், ஒரே உணவு என்பதையும் தாண்டி இந்த நிறுவனத்தின் வெற்றிக்கு ஒரே உடல் மொழியும் காரணம் !

சரி, இந்தப் பதிவின் நோக்கம் பன்னாட்டு நிறுவனங்களின் வெற்றி பற்றிய ஜல்லியடி கிடையாது ! பாகிஸ்த்தானிய நண்பர்களிடம் செல்வோம்...

வாசிம் சிரிப்பதை கண்டதும்தான் நான் பேசிய அபத்தம் புரிந்தது ! நான் வெறுக்கும் க்ளிஷேவிடம் நானே சிக்கிக்கொண்ட அபத்தம் !

" இந்த இந்தியர்களுக்கு வாசிம் அக்ரமையும், பர்வேஸ் முஷாரப்பையும் விட்டால் பாகிஸ்த்தான் பற்றி வேறொன்றும் தெரியாது ! " என ஆவர் கேலி செய்தது எனக்கு நன்றாகவே புரிந்தது !


க்ளிஷே என்ற பிரெஞ்சு மூல வார்த்தையே அங்கிலத்திலும் உபயோகத்தில் உள்ளது.ஸ்டீரியோடைப் என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் வார்த்தைக்கு,

" ஒரு தனிமனிதரை பற்றியோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றியோ மற்றொரு மனிதர் அல்லது சமூகம் கொண்டிருக்கும், முன்கூட்டியே தீர்மானித்த, மெரும்பாலும் தவறான அல்லது மிகைப்படுத்தப்பட்ட கண்ணோட்டம் அல்லது தீர்மானம் ! "

என அர்த்தம் கொடுக்கலாம்.

நாம் ஒரு சாராரை பற்றி அறிந்த ஒருசில தகவல்களை அவர்களின் ஒட்டுமொத்த குணமாகவோ அல்லது அடையாளமாகவோ பாவிப்பதும் க்ளிஷே வகையைச் சாரும் !


ம்பதாவது இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது வைரமுத்து ஆனந்தவிகடனில் எழுதிய ஒரு கவிதையில்,

" ஒரே ஒரு தாஜ்மகால்... ஒரு ஐஸ்வர்யா ராய் ! "

எனக் குறிப்பிட்டிருப்பார்.

தாவணி, சுடிதார் மற்றும் அம்மாக்கள் தயாரித்துக் கொடுக்கும் வாசனை பொடியுடன் தேங்கியிருந்த (!) இந்திய இளம்பெண்களிடம் கடை விரிக்க விரும்பிய லொரியால் போன்ற பன்னாட்டு அழகு சாதன நிறுவனங்கள் இந்திய சந்தைக்காக விரும்பி தேர்ந்தெடுத்த முகம் ஐஸ்வர்யா ராய் ! அவரின் உலக அழகி தேர்வு, நூறுகோடியை தாண்டிய நிலையிலும் ஒரு ஒலிம்பிக் தங்க பதக்கம் வாங்கவே தடுமாறும் தேசத்தின் எழுச்சியாகி போனது !

சரி, இதில் க்ளிஷே எங்கே வருகிறது ?

ஐஸ்வர்யா ராய் உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு, பிரான்ஸின் கான்ஸ் நகரில் நடக்கும் புகழ்பெற்ற உலகத் திரைப்பட விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். பிரெஞ்சு நாளிதழ்கள் தொடங்கி அனைத்து பத்திரிக்கைகளிலும் நம் உலக அழகி சிரித்தார். அந்தக் காலகட்டத்தில் டயானாவுக்கு அடுத்தப்படியான புகழ் வெளிச்சம் ஐஸ்வர்யாவுக்கு ஐரோப்பாவில் ஒளிர்ந்தது என்றால் அது மிகையாகாது !

காலம் மிக வேகமாக ஓடியது ! நம்மூர் பாடலாசியர்கள் " பிப்டி கேஜி தாஜ்மஹால் " தொடங்கி " குளித்த நீரை தீர்த்தமாகக் குடிப்பது " வரை எழுதி தீர்த்தார்கள் ! ஐஸ்வர்யா ராய் திருமணம் முடிந்து குழந்தையும் பெற்று ஆண்ட்டியாகிவிட்டார் ! இதே காலகட்டத்தில் இந்திய சினிமாவிலும் நிறைய மாற்றங்கள் நடந்து, எங்களாலும் தரமான படங்கள் தர இயலும் எனப் பேசிக்கொள்ளும்படியான படங்களும் வந்துள்ளன. அவற்றில் சில கான்ஸ் பட விழாவிலும் திரையிடப்பட்டுள்ளன...

ஆனாலும் இன்றுவரை கான்ஸ் நகரின் இந்திய சிறப்பு விருந்தாளி நம்ம உலக அழகிதான் ! அன்று தலைப்புச் செய்தியாக இருந்த ஐஸ்வர்யாவின் வருகை இப்போதெல்லாம் கடைசிப் பக்கத்தில் ஒரு வரிச் செய்தியாகச் சுருங்கிவிட்டது !

இதுதான் க்ளிஷே !வ்வொரு நாட்டினர் மற்றும் அவர்களது கலாச்சரம் பற்றிய க்ளிஷே கண்ணோட்டம் உலகெங்கும் பரவியுள்ளது.

மேலை நாட்டினரின் க்ளிஷே கண்ணோட்டத்துக்குச் சரியான தீனி இந்திய தேசம் ! இன்றைய அதிவிரைவு தகவல் பரிமாற்ற யுகத்திலும் இந்தியா என்றாலே ருட்யார்ட் கிப்ளிங் எழுதிய ஜங்கிள் புக் காலத்துத் தேசத்தைக் கற்பனை செய்யும் மேலைநாட்டினர் இன்றும் உள்ளனர் !

யானையில் ஏறி சந்தைக்குச் செல்லும் மனிதர்கள், மகுடி ஊதி கயிற்றைப் பாம்பாகப் படமெடுக்கசெய்யும் பக்கீர், பசுமாட்டைக் காணும் போதெல்லாம் விழுந்து கும்பிடும் மனிதர்கள் , என்பன தொடங்கி, இந்துக்களும் முஸ்லீம்களும் குழு குழுவாகப் பிரிந்து சதா சர்வகாலமும் சண்டையிட்டுக்கொண்டிருப்பார்கள், தலைநகரின் பிரதான வீதிகளில் கூடஆடுகள், எருமைகள் தொடங்கிப் பன்றி கூட்டங்கள் வரை குறுக்கே புகுந்து போக்குவரத்துத் தடைபடும், இமயம் தொடங்கிக் குமரிவரை இந்தியாவின் ஒரே மொழி ஹிந்தி என்பன வரை இந்தியா பற்றிய சராசரி மேலைநாட்டு மனிதனின் கற்பனை க்ளிஷேக்கள் ஏராளம் !

மேலைநாட்டினருக்கு தெரிந்த ஒரே இந்திய சினிமா உலகம் பாலிவுட் ஒன்றுதான் ! அதற்கு ஈடான கோலிவுட், டோலிவுட் என ஒரு டஜன் மொழிகள் சார்ந்த சினிமாக்கள் இருப்பதும் அங்கிருந்தும் அவ்வப்போது தரமான படங்கள் வருவதெல்லாம் தெரியாது !

" பாலிவுட்டின் சூப்பர் சாதனை படமான பாகுபலியில் ஏன் ஷாருக்கான் நடிக்கவில்லை ?! " எனக்கேட்டார் ஒரு பிரெஞ்சு அன்பர் !

ராஜ்கபூருக்கு பிறகு மேலைநாட்டினர் முதல் ஆப்ரிக்கத் தேசம் வரை தெரிந்த ஒரே இந்திய திரைசட்சத்திரம் ஷாருக்கான் தான் ! அவர்களைப் பொறுத்தவரை ஆல் இந்தியா சூப்பர் ஸ்டார், ஆஸ்கார் நாயகன் எல்லாமே ஷாருக் தான் !

மேலைநாட்டவரை விட்டுத்தள்ளுங்கள் ! நமது நாட்டிலேயே வடக்கு பற்றித் தெற்கும் தெற்கு பற்றி வடக்கும் கொண்டிருக்கும் க்ளிஷேக்கள் எத்தனை ?...

தென்னிந்தியா என்றாலே மதராசி, இட்லி, தோசா ( தோசை இல்லை ! ), சாம்பார், சந்தனம், தங்கநகை, லுங்கி, ரஜினிகாந்த் ! இந்த க்ளிஷேயின் முழுநீள திரைப்படமாய் வந்த சென்னை எக்ஸ்பிரஸை நாமும் சேர்ந்துதானே ஹிட்டாக்கினோம் ?!

மதராசி என்பதற்கு வேண்டுமானால் ஒரு வரலாற்று நியாயத்தை எடுத்து விடலாம்... மொழிவாரி மாநிலங்கள் பிரிவதற்கு முன்னால் ஒன்றிணைந்த சென்னை மாகாணமாகத் தென்னிந்தியா இருந்ததால் ஒரேடியாக மதராசி ! ஆனால் வடநாட்டவர்கள் அதற்குப் பிறகு பொது அறிவு " அப்டேட் " செய்ய மறந்துவிட்டார்கள் ! பாவம் ... இட்லி தோசா பவன்களெல்லாம் பீட்சா , பர்கர் சென்ட்டராக மாறியதும் அவர்களுக்குத் தெரியாது ! சில சினிமா டான்ஸ் மாஸ்டர்கள் ஆரம்பித்துவைத்த லுங்கி டான்ஸ் மிகக் குறைந்த காலகட்டத்தில் பரதநாட்டியத்தையும் தாண்டி தமிழ்நாட்டின் கலை அடையாளமாக மாறிவிட்டது தமிழனுக்குப் பெருமை தானே ?!

தங்க நகை மோகம் என்ற உண்மை மட்டும் எப்படி இந்த க்ளிஷேவில் சேர்ந்தது என்று புரியவில்லை !


நம்மவர்களும் அவர்களுக்குச் சளைத்தவர்களா என்ன ?!...

வட இந்தியா என்றாலே இந்தி மட்டும்தான் என்பது தொடங்கி, வெள்ளைத்தோல் வட இந்தியர்களெல்லாம் சேட்டுக்கள், ராஜஸ்த்தான் எங்கும் ஒட்டகங்கள் உலாவும், பஞ்சாபிகள் " பல்லே... பல்லே " என ஆடிக்கொண்டே இருப்பார்கள் என எத்தனை க்ளிஷே கண்ணொட்டம் ?!

மது சினிமா உலகம் இந்த க்ளிஷே வளர்ச்சிக்காக ஆற்றும் பங்கினை பக்கம் பக்கமாக எழுதலாம் !

சினிமா கோயில் குருக்கள், " சொல்லுங்கோ ! என்ன நக்ஷத்திரம் ?... " என்ற ஒரே வரியைதான் பல்லாண்டுகாலமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்...

எனது பள்ளி நண்பன் ஒருவன் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஒன்றின் தலமை குருக்கள். " வாடா மாப்ள ! " எனச் சாதாரணமாகத்தான் பேசுவான் !

சினிமா இஸ்லாமியர்கள் என்றால் நீண்ட தாடியும் கணுக்காலுக்கு மேலே உயர்த்திக் கட்டிய லுங்கியுமாக, முட்டி தொடும் அங்கியுடன் சதா பிரியாணியைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள் அல்லது அடிக்கொருத்தரம் " அரே அல்லா ! " என்பார்கள்...

சகஜ வாழ்க்கையில் பலரின் பெயரை வைத்துதான் மதத்தை ஊகிக்க முடியும். வாரத்தில் பல நாட்கள் சாம்பாரை விரும்பும் நிறைய இஸ்லாமியர்களை எனக்குத் தெரியும் !

சினிமா பாதிரியார் எந்நேரமும் பைபிளை நெஞ்சில் அணைத்தப்படி அடிக்கடி காற்றில் சிலுவை வரைவார்...

எல் கே ஜி தொடங்கி மேல்நிலை கல்விவரை நான் பயின்றது அனைத்துமே கிறிஸ்த்துவக் கல்வி மையங்களில். நான் பயின்ற பள்ளியின் முதல்வரான பாதிரியார் புல்லட்டில் அதிவேகமாகப் பறப்பார். பூஜை நேரம் தவிர மற்ற சமயங்களில் எங்கள் அரட்டையில் கூடக் கலந்துக்கொள்வார் !

" அரே... நம்பிள்கிட்டே ஏமாத்தறான்... " என்றபடி காமெடியனை துரத்தும் தமிழ் சினிமா சேட்டு ஒன்று வட்டிக்கடை வைத்திருப்பார் அல்லது நகைக்கடை வைத்து கள்ள நகையை வாங்குவார் !

என்னுடன் படித்த ஒரு சேட்டுபையனின் அப்பா ஏதோ அலுவலகத்தில் குமாஸ்த்தாவாகப் பணிபுரிந்தார். சுத்தமான தமிழில், எங்களைவிடவும் சரளமாகக் கெட்டவார்த்தைகள் பேசுவான் அந்தப் பையன் !

விதிவிலக்காக அரசியல்வாதிகள் பற்றிய சினிமா க்ளிஷே மட்டும் உண்மையுடன் ஒத்துப்போவது ஆச்சரியம் !

கார்ட்டூன் கோடுகளின் கற்பனையையும்தாண்டி விதம் விதமாக வளைந்து நெளிந்து தலைவியின் காலில் விழுவது, தலைவருக்கு வணக்கம் வைப்பது தொடங்கி ப்ளக்ஸ் போர்டு பிரதாபங்களாகட்டும் அல்லது விஞ்ஞான ரீதியிலான ஊழல்களாகட்டும், ஸ்டீரியோடைப் தொடங்கிக் கார்ட்டுன்கள்வரை எதுவுமே நம் அரசியல்வாதிகளின் உண்மையான அலும்புகளை நெருங்க முடியாது !

இன்னும் அழுக்கான உடையணிந்து ஊருக்கு வெளியே வாழும் பண்ணையாட்கள், வில்லன் வீட்டுக்கு லஞ்சம் வாங்க சீருடையுடன் வரும் போலீஸ், கறுப்பான பிக்பாக்கெட், " ஊய் " என மார்க்கமாக உறுமும் தொண்டரடிப்பொடி , அவலட்சணத்தின் அடையாளம் கறுப்பு, சில சமயம் சிரிக்க வைத்து பல சமயம் முகம் சுழிக்கச் செய்யும் " முருங்கைக்காய் சமாச்சரங்கள் " எனச் சினிமா க்ளிஷேக்களின் பட்டியல் மிக மிக நீளம் !

திரிஷ்யம் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது,

" இந்த மோகன்லால் பெரிய ஆளுப்பா ! " என்றார் நண்பர்...

" ஆமாம்... நம்ம கமல் மாதிரி அந்தக்கரை ஆஸ்கார் நாயகனாச்சே ! " என்றேன்.

" அட, நான் நடிப்பை சொல்லலீங்க... லால்ன்னா வடநாட்டுக்காரந்தானே ?... அங்கேருந்து வந்து கேரளாவுல சூப்பர் ஸ்டார இருக்காரே ! " என்றார் !

ந்த க்ளிஷே விசயத்தில் ஹாலிவுட்காரர்களும் நம்மவர்களுக்குச் சற்றும் சளைத்தவர்கள் கிடையாது !

படங்களில் பாரீஸ் நகர் என்றால் பின்புலத்தில் ஈபிள் டவர் கட்டாயம் ! பாரீஸ்வாசிகள் ஒரு கையில் குடையும் மற்றொரு கையில் " பக்கேத் " எனப்படும் நீண்ட பன்ரொட்டியுடனும் ஓவர் கோட்டுடன் நடந்து கொண்டிருப்பார்கள் !... பிரெஞ்சுக்காரர்கள் ஒயினையும் சீஸ் எனப்படும் பாலாடைக்கட்டிகளையும் விரும்பி சாப்பிடுபவர்கள் என்பதால், அவர்களைக் குறிப்பட " புளித்த ஒயினும் நாறும் பாலடை கட்டியும் ! " என்ற சொலவடை மேலைநாடுகளில் பிரபலம் !இங்கிலாந்தின் லண்டன் என்றால் டவுனிங் தெருவின் பிரதமர் இல்லத்தின் வாயிலை காவல் காக்கும் நீண்ட தொப்பிக் காவலர் ஒரு பிரேமிலாவது இடம் பெற வேண்டும் ! வெள்ளை மாளிகையையும், அமெரிக்க தேசிய கொடி பின்புலத்தில் உரையாற்றும் ஜனாதிபதியையும் காட்டாவிட்டால் அமெரிக்கக் காட்சி நிறைவு பெறாது !

ரு சமூகத்தின் குணம், நடை, உடை, பாவனைகள் பற்றிய ஸ்டீரியோடைப் மதிப்பீடுகளை ஒரு புன்முறுவலுடனோ அல்லது ஒரு முகசுளிப்புடனோ புறந்தள்ளிவிடலாம் ஆனால் ஒரு தனிமனிதன் அல்லது ஒரு குழு இழைக்கும் குற்றத்தினால் அவர்கள் சார்ந்த சமூகத்தின் மீது படியும் ஸ்டீரியோடைப் அபிப்ராயம் அந்தச் சமூகத்துக்கு ஏற்படுத்தும் இன்னல்கள் மிகக் கொடுமையானது.

இந்திராகாந்தி கொல்லப்பட்ட போது சீக்கிய சமூகத்தின் மீது படிந்த வெறுப்பு, ராஜிவ் படுகொலையினால் ஒட்டுமொத்த ஈழத்தமிழ் சமூகத்தின் மீது படிந்த சந்தேகக் கண்ணோட்டம், அடிப்படைவாத குழுக்களின் தீவிரவாதத்தினால் இஸ்லாமியர்கள் பற்றிய அபிப்ராயம் என நிறையச் சொல்லலாம் !

" ஸ்டீரியோடைப் " என்ற சொல்லுக்கு ஏற்ப அதீதமாகப் பெரிதாக்கி சொல்லப்படும் இந்த க்ளிஷேக்கள் சில சமயங்களில் உண்மைக்கு மிக நெருக்காமாகிவிடுவதும் உண்டு...

இந்திய தேர்தல், கும்பமேளா போன்ற நிகழ்வுகள், இயற்கை பேரிடர்கள் எனப் பிரான்ஸ் தலைப்புச் செய்தியில் இந்தியா இடம் பிடிக்கவெனச் சில நிகழ்வுகள் உண்டு ! இவற்றுடன் இரு நாடுகள் சமந்தப்பட்ட ராஜாங்க விஜயம், பெரிய அளவிலான ஆயுத ஒப்பத்தம் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம் !

சமீபகாலமாக மேல்சொன்னவைகளுடன் மற்றொரு " நிகழ்வுக்காகவும் " இந்தியா அடிக்கடி பேசப்படுகிறது...

அந்த நிகழ்வு " பாலியல் வன்முறை ! "

மேலைநாட்டினர் அனைத்தையும் ஜோக்காக்கிவிடுவார்கள். அவர்களின் கேலிச்சித்திரங்களுக்கு எல்லையே கிடையாது. புனிதமாக மதிக்கும் மதம் சார்ந்த நம்பிக்கைகள்கூட இந்தக் கேலியிலிருந்து மீள முடியாது ! எதையும் கேலி, கேள்விக்கு உட்படுத்தும் குணம் அவர்களுடையது !

அண்மையில் நான் கேட்ட ஜோக் ஒன்று...

" விடுமுறையைக் கழிக்க வேண்டிய நாட்டினை ஐரோப்பிய பெண்கள் மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்... ஆப்கானிஸ்த்தான், பாகிஸ்த்தான் தொடங்கி ஆப்ரிக்க நாடுகள் வரை அடிப்படைவாதிகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்... அவர்களிடம் சிக்கினால் பனையக்கைதிகளாகி தலையை இழக்க நேரிடும் ! அமெரிக்கா சென்றால் எந்தக் கல்லூரி மாணவனாவது மெஷின் கன் மூலம் சல்லடையாக்கிவிடுவான்.... பேசாமல் இந்தியா செல்லலாம்... பாலியல் வன்கொடுமைக்கு ஆளானாலும் உயிராவது மிஞ்சும் ! "

மிகக் கொடூரமான க்ளிஷே !... ஆனால் இந்தியாவில் அடிக்கடி நிகழும் அந்த அவலத்தை நினைக்கும்போது தலைகுணிவு மட்டுமே மிஞ்சுகிறது ! ( ந்தியா பற்றிய ஒரு முக்கியமான க்ளிஷேயை இந்த பதிவில் குறிப்பிடவில்லை ! அதனை சரியாக சொல்லும் அன்பர்களுக்கு அந்த க்ளிஷே பற்றிய எனது அடுத்த பதிவு மின்னஞ்சலில் " இலவசமாக " அனுப்பப்படும் ! )
பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

66 comments:

 1. பதிவை படித்து ரசித்து மகிழ்ந்தேன்....

  ReplyDelete
  Replies
  1. உடனடியாக ரசித்து படித்து, முதல் பின்னூட்டமிட்டதற்கு நன்றி நண்பரே !

   Delete
 2. சாமானியனின் அந்த மூன்று மாதங்கள் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் க்ளிஷே பதிவுக்கு
  குழலின்னிசையின் கிளாப்ஸ்.

  " புளித்த ஒயினும் நாறும் பாலடை கட்டியும் !
  பிரெஞ்சு கலாச்சாரத்தின் கல்வெட்டு கண்டு பிடித்து தந்தமைக்கு பாராட்டுக்கள்.

  புளியோதரை பட்டையும், புளித்த ஊறுகாய் தந்து விருந்தோம்பல் செய்ய வருகிறேன்.

  நீரோட்டாம் போன்ற எழுத்தாளுமையில் வாசகர் மனத் தேரோட்டம் மேலும் செல்லாது
  நின்று விடுவது உமது எழுத்துக்கு பெருமை.
  சிறப்பு.
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. என்ன ?... அந்த மூன்று மாதங்களா ? இந்த பதிவில் " முருங்கைக்காய் சமாச்சார " க்ளிஷேயை படிக்கவும் உங்களுக்கு பாக்யராஜின் அந்த ஏழு நாட்கள் நினைவில் வந்ததின் விளைவா ?!!!

   மூன்று மாதங்கள் காணாமல் போனாலும் இந்த பதிவு மூன்று நாட்களில் தயாராகிவிட்டது !

   " புளித்த ஒயினும் நாறும் பாலடை கட்டியும் ! "... ஆமாம் ! இதன் பிரெஞ்சு வரிகள்... " Le vin qui pique et du fromage qui pue ! "

   அன்புடன் கொடுத்தால் அவலையும் அமுதமாய் ஏற்கும் யாதவன் கை புளித்த ஊறுகாயும் பனங்கற்கண்டு அல்லவா ?!!!

   உடனடி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே !

   Delete
 3. அருமை. எல்லா நாட்டுக் காரர்களும் இதற்கு விதி விலக்கல்ல என்பது சின்ன ஆறுதல்! இது கூட ஒரு இந்திய மனப் பான்மைதானோ! வடநாட்டுப் படங்களில் தென் இந்தியர்களைக் காட்ட வேண்டும் என்றால் அவர் வேஷ்டி அணிந்து விபூதிப் பட்டை தரித்து ஐயோ, அம்மா என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்! கதாநாயகனுக்கு ஒரு அழகான பருவ வயதில் ஒரு தங்கை இருந்தால் அவர் கற்பழிக்கப்படப் போகிறார் என்று அர்த்தம்.

  :)))

  ReplyDelete
  Replies
  1. " இது கூட ஒரு இந்திய மனப் பான்மைதானோ! "...

   அட ! க்ளிஷே !!!

   " கதாநாயகனுக்கு ஒரு அழகான பருவ வயதில் ஒரு தங்கை இருந்தால் அவர் கற்பழிக்கப்படப் போகிறார் என்று அர்த்தம். "

   மிக உண்மையான வரிகள் !

   ஆழ்ந்து படித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி நண்பரே.

   Delete
 4. ரசித்தேன் நண்பரே
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. அய்யா,

   ரசித்து படித்து பின்னூட்டமிட்டமைக்கு நன்றி

   Delete
 5. அன்புள்ள அய்யா,

  ‘க்ளிஷே !’ என்றால் " ஒரு தனிமனிதரை பற்றியோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றியோ மற்றொரு மனிதர் அல்லது சமூகம் கொண்டிருக்கும், முன்கூட்டியே தீர்மானித்த, மெரும்பாலும் தவறான அல்லது மிகைப்படுத்தப்பட்ட கண்ணோட்டம் அல்லது தீர்மானம் ! " என்ற விளக்கம் கொடுத்து தாங்கள் புரிந்து கொண்டதை எங்களுக்கு முதலில் புரிய வைத்து விட்டீர்கள். இல்லையெனில் அமெரிக்க மக்டொனால்ட் ரெஸ்ட்டாரெண்ட் ஊழியர்களின் நிலையில் இருந்திருப்போம்.

  இந்தியர் பாக்கிஸ்தானியர் மதராஸியர் பற்றிய க்ளிஷேக்கள் விரிவாக அலசியிருக்கிறீர்கள். பாராட்டுகள்.

  ‘ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் போல...’

  வாழ்த்துகள்!
  நன்றி.


  ReplyDelete
  Replies
  1. " இல்லையெனில் அமெரிக்க மக்டொனால்ட் ரெஸ்ட்டாரெண்ட் ஊழியர்களின் நிலையில் இருந்திருப்போம். "

   மிக அருமையான " டைமிங் பன்ச் ! "

   ‘ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் போல...’...

   அதே ! ஒரு குடம் பாலிருக்க, ஒரு துளி விஷத்தை மட்டும் பார்ப்பதுதான் க்ளிஷே !

   ஆழ்ந்து படித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி அய்யா

   Delete
 6. Replies
  1. வாருங்கள் வலைசித்தர் அவர்களே...

   பெயருக்கு ஏற்றது போலவே சித்தர் வாக்காய், சிக்கனமாய் பின்னூட்டமிட்டால் எப்படி ?

   மோகம்...

   க்ளிஷேவின் தமிழ் வார்த்தையா ?... மோகம் என்பது ஒன்றின்பால் கொள்ளும் அதீத ஈர்ப்பு... ஸ்டீரியோடைப்புக்கான சரியான தமிழ் வார்த்தை...

   சரி, சகோதரர் ஜோசப்விஜு சொல்லிவிடுவார் !

   நன்றி அய்யா

   Delete
 7. பலவித கிளிஷேக்களை பட்டியலிட்டு காட்டி விவரித்தது சிறப்பு! அருமையான கட்டுரை!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் நண்பரே...

   வருகைக்கும் பாராட்டு வார்த்தைகளுக்கும் நன்றி

   Delete
 8. //
  தங்க நகை மோகம் என்ற உண்மை மட்டும் எப்படி இந்த க்ளிஷேவில் சேர்ந்தது என்று புரியவில்லை !//

  இம்மோகம் எல்லா நாட்டிலுமிருந்தாலும் இந்தியா முழுவதுமிருந்தாலும் தமிழ் நாட்டு தாய்க் குலங்களை அடிச்சிக்கமுடியாது...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் !

   உலக தங்க உற்பத்தியின் தொன்னூறு சதவிகிதம் இந்தியாவில் உபயோகிக்கப்படுகிறது !... அந்த தொன்னூறின் தொன்னூறு சதவிகித்தை நம் தமிழ்நாட்டுதாய்குலங்கள் தத்தெடுத்துக்கொள்கிறார்கள் !

   வருகைக்கு நன்றி நண்பரே

   Delete
 9. நடிகர்கள், வடநாட்டு அரசியல் வாதிகள் "வன்கம்" என உரை தொடங்கும் க்ளிஷே உங்களுக்கும் தெரியும். ஆனா" நான் என்ன சொல்ல வரேன்ன" என தொடங்கும் ஒரு கேரக்டர் அது கதை, சினிமா, சீரியல் என இன்றுவரை அந்த டைலாக்கை முடிக்க முடியாது, வேணாம் நீ ஏதும் சொல்லவேண்டாம் என இடைவெட்டபடும் boring க்ளிஷே இப்போவரை தொடரும் கொடுமையை நீங்கள் அறிவீர்களா அண்ணா? பாரின்ல இருந்தா பணக்காரர்கள், டீச்சர்ஸ் கட்டன் புடவை, கொண்டை ஹ்ம்ம்ம் என்னும் எப்போதான் மாறபோறாங்களோ?? நீங்க சொல்ற மாதிரி பிரியாணியே பிடிக்காத சாம்பார் மாணவன் என்னிடம் படித்திருக்கிறான். சாம் அண்ணா ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க, வழக்கம் போல ஒரு அட்டகாசப்பதிவோடு...வெளியே பிள்ளைகள் வெடிக்கும் பட்டாசுக்கு இணையாக இங்கே சத்தமும், வெளிச்சமும் மெரிசலா இருக்கு!!! awesome as usual:))

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோ !

   நலமா ? எனது வலைச்சர தொகுப்புக்கான மதிப்பெண் உங்களிடமிருந்து இன்னும் வரவில்லையே ?!.....

   " வன்கம் ".... தெரியும், " நான் என்ன சொல்ல வரேன்ன" ... யாரு ? எனக்கும் கொஞ்சம் " அப்டேட் " ப்ராப்ளம் உண்டு சகோ !

   அட ! ஆமாம ! அந்த காட்டன் புடவை க்ளிஷேயை மறந்தே விட்டேன் ! உயர்த்தி முடிந்த கொண்டை, காட்டன் புடவையுடன் குடையும் கூட !!!


   அடுத்த பதிவும் இந்த க்ளிஷே ஸ்பெசல்தான் சகோதரி !... தீபாவளின்னா ரெண்டு ஸ்பெசல் போடனுமே !!!

   தொடருவோம், நன்றி
   Delete
  2. அண்ணா
   தாமதத்துக்கு மன்னிக்கவும். வலைச்சரம் பணி நிறைவின் பொழுது நெட் கனக்சன் இல்லாத கிராமத்தில் இருந்தேன். அப்புறம் ஏதேதோ வேலை, கொஞ்சம் நிறைய சோம்பலும் கூட:)

   உங்கள் பணியை பற்றி சொல்லவும் வேண்டுமா? ஏனோ உங்கள் எழுத்தை படிக்கும்போதெல்லாம் நான் பள்ளி மாணவியாய் திரும்ப டைம் மெஷின் ஏதுமின்றியே பயணிக்கிறேன். இதை முன்பே உங்களிடம் நான் சொல்லியும் இருக்கலாம்:) அந்த வலைச்சர வாரம் முழுமையுமே அதே உணர்வு இளையராஜாவின் பாடல்களில் பயணிப்பதை போல :))

   " நான் என்ன சொல்ல வரேன்ன"** என்னும் வசனம் பன்நெடுங்காலமாக திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வசனம் எந்த கதாபாத்திரம் பேசினாலும் எதிரே இருப்பவர், 'நீ ஒண்ணும் சொல்லவேண்டாம்' என்று வசனம் பேசுவார்கள். அந்த க்ளிஷே வசனத்தை சொன்னேன்.

   *அடுத்த பதிவும் இந்த க்ளிஷே ஸ்பெசல்தான் சகோதரி !... தீபாவளின்னா ரெண்டு ஸ்பெசல் போடனுமே !!!* சீக்கிரம் தொடருங்க ஆவலா வெய்டிங்:))

   Delete
 10. மூன்று மாதங்கள் விரதமிருந்து அலசிய விதம் நன்று நண்பா தீபாவளி வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கஜீ !.... வணக்கம்ஜீ !!!

   என்ன செய்வது நண்பரே ?... நம்ம பிழைப்பு அப்படி ! ஆனா விரதெமெல்லாம் இல்லை... மூன்று மாதங்களும் மூன்று வேளை மூக்கு முட்ட சாப்பாடுதான் !

   வருகைக்கு நன்றிஜீ... தங்களுக்கும் தீப திருநாள் நல்வாழ்த்துகள்...

   தொடருவோம் !

   Delete
 11. கிளிஷே....க்ளிஷே இல்லாததால் மிகவும் ரசித்தோம்.

  இந்தியாவைப் பற்றிய கிளிஷேவில் இதையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்திய பல்கலைக்கழக சான்றிதழ்கள் குறிப்பாக மருத்துவச் சான்றிதழ்களுக்கு மதிப்பில்லை மேலை நாடுகளில், ஏனென்றால் இந்திய மருத்துவர்கள் சுத்தமில்லை என்று. அது போல் இந்தியா என்றால் ஏழ்மை, சேரி, குழந்தைகள்...என்ற எண்ணம், படங்களில் கற்பழிப்புகள், வில்லன்கள். ஹீரோவின் அம்மா எப்போதுமே சோகமாக, ஏழையாக, பாதியில் மடிவதாக...இப்படி நிறைய கிளிஷேக்கள்.

  எக்காலத்திலும் அடிச்சுக்க முடியாத கிள்ஷே இந்திய அரசியல்வாதிகள். அது உண்மை என்று நிரூபித்துக் கொண்டே இருப்பார்கள்.

  இந்திய க்ளிஷேக்களுக்கும் பஞ்சமில்லை. பல நாட்கள் கழித்து வந்து அட! போட வைக்கும் பதிவு! இதுவரை யோசித்துப் பார்க்காத தலைப்பு

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் ஆசானே !

   பல்கலைகழக சான்றிதழ்கள் மட்டுமல்ல... இந்திய " டிரைவிங் லைசென்ஸ் " பற்றியும் ஒரு க்ளிஷே உண்டு ! அதற்கென ஒரு பதிவு வைத்திருக்கிறேன் !

   இந்திய " ஏழை இமேஜை " ஸ்லம்டாக் மில்லியனர் போன்ற படங்களும் மிகை படுத்திகாட்டி இந்த க்ளிஷே கண்ணோட்டத்தை வளர்க்கின்றன !

   ஆனா நம்ம அரசியல்வாதிகள் " வாழும் க்ளிஷேக்கள் ! "

   " பல நாட்கள் கழித்து வந்து... "

   பின்ன ? ரூம் போட்டு யோசிச்சோம்ல ?!!!!

   நன்றி. தொடருவோம்

   Delete
 12. சாம்: அடிக்கடி உங்களை மிஸ்ப் பண்ண வச்சுடுறீங்க?!!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் வருண் !

   என் முயற்சிகளையும் மீறி அடிக்கடி இடைவெளி விழுந்துவிடுகிறது !

   பேசாமல் ஒரு மாதம் விடுப்பில் எங்காவது சென்று ஒரு முப்பது பதிவுகளை ஒரே மூச்சில் மாதத்துக்கு ஒன்று என உள்ளிட்டுவிடலாமா என்று கூட யோசித்துக்கொண்டிருக்கிறேன்.... !

   உங்கள் அன்புக்கு நன்றி வருண்... அப்படியே நம்ம க்ளிஷேவை பத்தி கொஞ்சம்....

   Delete
 13. ****" ஒரு தனிமனிதரை பற்றியோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றியோ மற்றொரு மனிதர் அல்லது சமூகம் கொண்டிருக்கும், முன்கூட்டியே தீர்மானித்த, மெரும்பாலும் தவறான அல்லது மிகைப்படுத்தப்பட்ட கண்ணோட்டம் அல்லது தீர்மானம் ! "

  என அர்த்தம் கொடுக்கலாம்.

  நாம் ஒரு சாராரை பற்றி அறிந்த ஒருசில தகவல்களை அவர்களின் ஒட்டுமொத்த குணமாகவோ அல்லது அடையாளமாகவோ பாவிப்பதும் க்ளிஷே வகையைச் சாரும் !***

  என்ன சாம் இது.. இதற்கு ஈடான தமிழ் வார்த்தையை நீங்களோ, இங்கே வந்து பின்னூட்டமிட்ட தமிழறிஞர்களோ சொல்லவே இல்லையே? :(

  இந்த வார்த்தையை நான் இதுவரை பயன் படுத்தியதே இல்லை சாம். உங்க மூலமாகத்தான் இதை கற்றுக்கொண்டேன்.

  என்னிடம் என்ன பிரச்சினைனா.. நீங்க இவ்வளவு விளக்கியவர், அந்த வார்த்தையை ஆங்கிலத்தில் கொடுத்திருக்க வேண்டும். சரி, உங்களுக்காக நான் செய்றேன். :)

  cli·ché
  klēˈSHā/
  noun
  noun: cliché; plural noun: clichés; noun: cliche; plural noun: cliches

  1.
  a phrase or opinion that is overused and betrays a lack of original thought.
  "the old cliché “one man's meat is another man's poison.”"
  synonyms: platitude, hackneyed phrase, commonplace, banality, old saying, maxim, truism, stock phrase, trite phrase; old chestnut
  "a good speechwriter will steer clear of clichés"

  ReplyDelete
  Replies
  1. வருண்! க்ளிஷே வை இன்றைய சோசியல் மீடியாவில் ":பொதுப்புத்தி" என கையாள்கிறார்கள். நான் விஜூ அண்ணா அளவு பெரிய தமிழ் மேதை இல்லை. ஆனா இப்போ ட்ரெண்டு ல இதைநான் கவனித்தேன். அவ்ளோ தான்:)

   Delete
 14. வருண்...

  க்ளிஷே அல்லது ஸ்டீரியோடைப் என்ற பதத்துக்கு ஈடான தமிழ் வார்த்தையை என்னால் இயன்றமட்டும் தேடினேன், யோசித்தேன்...

  கிடைக்காதது ஆச்சரியம் ! இந்தியா போன்ற பன்முக கலாச்சார வாழ்க்கை முறையை கொண்ட தேசத்தில்தான் இந்த பதம் மிக அவசியம் ! " க்ளிஷே " என்ற வார்த்தையை தமிழ் ஊடகம் மற்றும் சினிமாவில் அடிக்கடி உபயோகிக்கிறார்கள் ! கடைசியாக " சதுரங்கவேட்டை " படத்தின் வசனம் ஒன்றில் கேட்டேன் !

  உங்களின் பின்னூட்டத்தை படித்தவுடன் எனக்கு தோன்றிய தமிழ் வாழ்த்தை " பொதுஎண்ணம் "

  எங்கள் ஊரில் யாராவது ஒரு குறிப்பிட்ட சாராரை பற்றி " க்ளிஷே " கூறினால்,

  " பொத்தாம்பொதுவாக சொல்லாதே ! " என்பார்கள். அதாவது நீ அறிந்துகொண்ட ஒரு தகவலை வைத்துக்கொண்டு, அவர்களின் பொதுகுணமாக குறிப்பிடாதே என்ற அர்த்தத்தில் !

  ஜோசப்விஜுவின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்... அவரிடம் நிச்சயமாய் இதற்கான தமிழ் வார்த்தை இருக்கும் !

  ஆங்கில அர்த்தம் கொடுக்காததின் காரணம் க்ளிஷேவுக்கான அர்த்தத்தை நான் பிரெஞ்சு மொழி அகராதியில் தேடினேன் ! எனது ஆங்கில உறவு இந்திய படிப்புடன் முறிந்துவிட்டது ! வாழ வந்த தேசத்தின் மொழியில் புலமை பெறுவதற்காக நான் கொடுத்த விலை அது !!!

  ஆங்கில விளக்கத்துக்கு நன்றி வருண்.

  தொடருவோம்

  ReplyDelete
 15. அண்ணா வணக்கம்.

  பதிவு வழக்கம் போலவே சுவாரசியம்.

  முதலில் , க்ளிஷே என்பதற்கான தமிழ்ச்சொல் தேய் வழக்கு.

  திரு. வருண் அவர்கள் குறிப்பிடுவதுபோல, ஒரு சொற்றொடரின் உண்மைப்பொருள் தன் தொடர்ச்சியான பயன்பாட்டினால் தனக்குரிய பொருளை இழந்து போவது; ஒப்புக்குச் சொல்லப்படுவதுதான் க்ளிஷே.

  தமிழில் வெறுமனே நாம் உதட்டளவில் சொல்லிச் செல்லும் பல சொற்கள் ( ஈடுசெய்ய முடியாத இழப்பு, இதயம் வெடித்தது.......போன்றன) இத் தேய்வழக்கில் அடங்கும்.

  ஸ்டீரியோ டைப் என்பதன் பொருள் வேறானது. அது ஏதேனும் ஒன்றைப் பற்றிய ( ஒருவரைப் பற்றிய) கருத்தொன்றை சரியா தவறா என்று ஆராயாமல் ஒருவரோ அல்லது ஒரு சமூகமோ தொடர்ந்து கொண்டிருக்கும் பொதுப்புத்தி. ( நீங்கள் பதிவில் சொல்லியதுதான்)

  இரண்டிற்கும் வேறுபாடுகள் உண்டு.

  தங்களின் இந்தப் பதிவில் ( பின்னூட்டத்திலும் கூட ) இரண்டிற்குமான உறழ்ச்சி காணப்படுகிறது.

  தமிழில் துல்லியமான பொருளோடு இச்சொற்கள் கையாளப்படாததன் காரணமாக இது ஏற்பட்டிருக்கக் கூடும்.

  வெளியூர் பயணத்தினால் உடனடியாக வர இயலவில்லை.

  தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா.

  நன்றி.  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் ஜோசப் !

   இரு சொற்களுக்கான வித்யாசத்தை எளிதாக விளக்கி கூறியதற்கு முதலில் நன்றி.

   இந்த பதிவின் கருத்து பகிர்வுகளின் போது நான் உங்களை கூறிப்பிட்டதெல்லாம் விளையாட்டாக அல்ல. உங்களிடம் உண்மையான, தெளிவான பதிலிருக்கும் என்ற நம்பிக்கையில்தான் ! மேலும் தமிழ் மொழியில் நிச்சயமாய் வார்த்தைகளுக்கு பஞ்சமில்லை. அவற்றில் பல வழக்கொழிவதுதான் கொடுமை ! ஆச்சரியமான விசயம் இம்மாதிரி வார்த்தைகள் கிராமங்கள் மற்றும் பாமர மக்களிடம் புழக்கத்தில் உள்ளதுதான்.

   தமிழில் மட்டுமல்ல, பிரெஞ்சு மொழி வழக்கில்கூட இந்த இரு வார்த்தைகளும் துல்லியமாக பயன்படுத்தப்படுவதில்லை. ( நானறிந்த வரையில் ! )

   " தங்களின் இந்தப் பதிவில் ( பின்னூட்டத்திலும் கூட ) இரண்டிற்குமான உறழ்ச்சி காணப்படுகிறது. "

   இப்பதிவு மட்டுமல்லாது எனது வேறுசில பதிவுகளிலும் திருத்தங்கள் தேவை. விரைவில் திருத்திவிட முயற்சிக்கிறேன்.

   தொடருவோம்

   Delete
 16. இத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
  நன்மை தரும் பொன்நாளாக அமைய
  வாழ்த்துகள்!

  யாழ்பாவாணன்
  http://www.ypvnpubs.com/

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும் தீபத்திருநாள் நல்வாழ்த்துகள் அய்யா.

   நன்றி

   Delete
 17. சாம்,

  திடீர் பதிவு. அல்லது நான்தான் திடீரென பார்த்தேன் போல. எதோ ஒன்று. கிளிஷே பற்றி பல தகவல்கள் சொல்லும் பாராட்டுக்குரிய பதிவு. முதலில் எனது பாராட்டைப் பிடியுங்கள். சபாஷ்.

  கிளிஷே என்பதற்கு ஜோசப் கொடுத்திருக்கும் தமிழ்ச் சொல் மிகவும் சரியானது. என்னைக்கேட்டால் தேய் வழக்கை அலுப்பு என்றே ஒரே சொல்லில் அடக்கிவிடுவேன். ஆனால் இது சரியா என்றெல்லாம் தெரியாது. நீங்கள் குறிப்பிடும் கிளிஷே பல இதில் வராது என்பதுதான் உண்மை. ஸ்டீரியோ டைப் என்ற வகையில் அவைகள் வரும். குறிப்பாக நம்மள்கி என்று சொல்லும் சேட், ஜூலியா, விக்டர் என்ற பெயருடன் வரும் கள்ளக் கடத்தல் அடியாட்கள், நீண்ட தூரம் சென்று நாயகனை திரும்பிப் பார்க்கும் கதாநாயகி,மேலே வெடித்து எழும் டாடா சுமோ போன்றவை.

  இதுபோன்று ஒரு வித்தியாசமான கருவை எடுத்துக்கொண்டு எழுதத் தோன்றியதே ஆச்சர்யம்தான். நீண்ட நாட்கள் ஆனாலும் நல்ல பதிவை கொடுத்ததற்காக எனது வாழ்த்துக்கள்.

  அடுத்த பதிவு எப்போது என்று கேட்க மாட்டேனே. நிறைய எழுதுவதை விட நிதானமாக எழுதுவதே சிறப்பு.

  ReplyDelete
 18. வாருங்கள் காரிகன்...

  திடீர் பதிவுதான் சரி ! உங்களின் உள்ளார்ந்த பாராட்டுக்கு நன்றி காரிகன்.

  ஜோசப் விளக்கியதை இலகுவான உதாரணங்களால் இன்னும் தெளிவாக்கிவிட்டீர்கள். எழுதுவதற்கு முன்னால் எழுத போகும் கருவை பற்றிய முழ் தகவல்களையும் அறிவது அவசியம் என்னும் பாடத்தை குறித்துக்கொண்டேன் !

  " இதுபோன்று ஒரு வித்தியாசமான கருவை எடுத்துக்கொண்டு எழுதத் தோன்றியதே ஆச்சர்யம்தான்... "

  பல நேரங்களில் தலைப்பு கிடைத்ததும் அதனை எப்படி " டெவல்ப் " செய்வது என ஒரு வெறுமை தோன்றும்... ஆனால் தட்டச்சு செய்யத்தொடங்கியதும் என்னையும் அறியாமல் வாக்கியங்கள் அமைந்துவிடும் ! இதனை பெருமையாக குறிப்பிடவில்லை காரிகன்... ஆத்மார்த்தமாக எழுதும் உங்களை போன்றவர்கள் இந்த " நிலையை " என்னையும் விட அதிகமாகவே உணர்ந்திருப்பீர்கள்.

  இதைவிடவும் வித்யாசமான ஒரு தலைப்பை அடுத்த பதிவுக்காக வைத்திருக்கிறேன்... ஆனால் என்ன மாதிரி கருத்து வரும் என பயமாக இருக்கிறது !

  நானும் உங்களை அதிகம் காக்கவைத்துவிடமாட்டேன் காரிகன்...

  உங்களின் ஊக்கத்துக்கு நன்றி சொல்வதைவிட விரைவாக ஒரு பதிவிடுவதே சரி என தோன்றுகிறது....

  தொடருவோம்

  ReplyDelete
 19. Replies
  1. சிந்திக்க வைக்கும் பதிவு.
   ஒரு அலுவலகத்தில் குழுவாக உணவருந்தத் திட்டம். அதற்காக அந்தக் குழுவில் இருந்தவரை இருவகையாகப் பிரித்து மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன. ஒன்று வெள்ளைக்காரர்களுக்கு ,"இந்த இடத்தில் இந்த நாளில் பன்னிரண்டு மணிக்கு வர வேண்டும்.." என்று. அடுத்தது இந்தியருக்கு, "இந்த இடத்தில் இந்த நாளில் பதினொரு மணிக்கு வர வேண்டும்.." என்று. :(
   அனைவரும் ஒன்றாகத்தான் சாப்பிடப்போகிறார்கள்!

   (பிழை இருந்ததால் முதல் கருத்துரையை நீக்கி மீண்டும் பதிந்தேன் சகோ)

   Delete
  2. வாருங்கள் சகோ...

   ஆமாம் ! காலனியாதிக்க பழக்கதோசம் ?!....

   வருகைக்கு நன்றி. தொடருவோம் சகோ...

   Delete
  3. இல்லை சகோ, இந்தியர் தாமதமாக வருவர் என்பதனால்.

   Delete
 20. தங்களின் காலம் திருடிய கடுதாசியில் இருந்தே நான் இன்னும் மீளவில்லை நண்பரே! அதற்குள் க்ளிஷே! எத்தனை எத்தனை விளக்கங்கள். மிக நீண்ட பதிவானாலும் பல தகவல்களை கொண்டு வந்து சேர்த்த பதிவு. பாராட்ட வார்த்தைகள் இல்லை. இதையும் க்ளிஷேவாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இது உண்மையான வார்த்தைகள். அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.
  தொடருங்கள், தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் நண்பரே...

   எனது பதிவுகளில் சிறந்தவையாக நான் நினைக்கும் பதிவுகளில் விடாது துரத்திய விஷ்ணுபுரமும், காலம் திருடிய கடுதாசிகளும் உண்டு !

   பத்திரிக்கை துறை அனுபவமிக்க உங்களின் வார்த்தைகளை பெரிய அங்கீகாரமாக பார்க்கிறேன்... நன்றி

   நிச்சயம் தொடருவோம்.

   Delete
 21. அட..என்ன ஒரு நடை ...சின்ன யானைபோல்....தகவல்கள் தகவல்கள்...ஆனால் அலுக்கவில்லை....இனி தொடர்ந்து வருகிறேன் நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. நண்பரே...

   உங்களின் பெயர் தெரியவில்லை... உங்களின் படத்தை கண்டு ஒரு கணம் திகைத்துவிட்டேன் ! காரணம் அச்சுஅசப்பில் எனது பால்ய நண்பன் ஜோசப்பின் முகச்சாயல் உங்களுக்கு !

   முதல் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி. தொடருவோம்...

   Delete
 22. மிகக் கொடூரமான க்ளிஷே !... ஆனால் இந்தியாவில் அடிக்கடி நிகழும் அந்த அவலத்தை நினைக்கும்போது தலைகுணிவு மட்டுமல்ல ஒதுங்கும் போக்கும் மிஞ்சுகிறது நண்பரே.....

  ReplyDelete
  Replies
  1. மிகச் சரியான கருத்து தோழரே !

   அவரவரும் எவருக்கோ தானே நிகழ்கிறது என்ற எண்ணத்துடன் ஒதுங்குவதே பல சமூக அவலங்களுக்கு காரணம்.

   நன்றி தோழரே.

   Delete
 23. உங்களை ஒரு தொடர் பதிவில் இணைத்திருக்கிறேன். :)
  http://thaenmaduratamil.blogspot.com/2015/11/kadavulai-kanden-blogpost-chain.html

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி...

   திருவிளையாடல் தருமியிடம் " வலையுலகில் பிரிக்க முடியாதது... ? "

   எனக்கேட்டால் " சாமானியனும் தாமதமும் ! "

   என பதில் வரும் அளவுக்கு என் பாடு மோசமாகிவிட்டது ! மன்னிக்கவும் !

   என்னையும் மனதில் நிறுத்தி, மதித்து இந்த சுழற்சி பதிவில் குறிப்பிட்டமைக்கும், அழைத்ததற்கும் நன்றிகள் பல.

   முறையாக பதிவெழுதி, என் பங்குக்கு பத்து பேருக்கு அழைப்பு ( " பிள்ளையார் சுழி " கில்லர்ஜீ சார்பில் பாக்கு வெற்றிலையுடன் ! ) அனுப்பும் அளவுக்கு நேரம் இல்லாததால் என் பத்து ஆசைகளையும் பின்னூட்டமாக தருகிறேன் !

   சுயநல ஆசைகள் ஐந்து !

   1. தமிழ் வலைப்பூக்கள் அனைத்தின் பதிவுகளும் நான் படிக்காமலேயே என் புத்திக்குள் ஏறி அவற்றை பற்றிய என் கருத்துகள் தானாகவே அந்தந்த தளங்களில் பதிய வேண்டும் !

   2. அன்றாட செலவுக்கு நூறு யூரோ டாலர்கள் என் சட்டைபையில் ஒவ்வொரு நாளும் தோன்ற வேண்டும் !

   3. நானறியாத மொழிகளின் இலக்கியங்கள் நானறிந்த மொழி புத்தகங்களாக மாறி எனக்கு கிட்ட வேண்டும் ! அவற்றை படிக்க நேரமும் வேண்டும் !

   4. என் பள்ளி காலம் முழுவதும் என்னுடன் படித்த நண்பர்கள் ஒருவர் விடாமல் அனைவரையும் சந்திக்கும்படியான ஒரு " கெட் டுகெதர் " அமைய வேண்டும் !

   5. வலைப்பூ நட்புகள் அனைவரையும் ஈபிள் டவருக்கு கீழே அமைந்த பூங்காவில் சந்திக்க வேண்டும் ( நல்லதொரு வெயில் நாளில் ! )


   பொதுநல ஆசைகள் ஐந்து !

   1. ஜாதி, மத, பிராந்திய, மொழி சார்ந்த பிரிவினைகளும், மோதல்களும் சட்டென மறைந்து, பூகோள எல்லைகள் மீறி மனிதம் தழைக்க வேண்டும்.

   2. இந்த பூமியின் அனைத்து உயிர்களுக்கும் அன்றாட தேவைக்கான உணவும் நீரும் தானாக கிடைக்க வேண்டும் !

   3. ஆண்கள் அனைவரும் பாலியல் வக்கிரங்களை மறந்து, பெண்களை சக உயிரியாய், சமமாய் மதித்து நேசிக்க வேண்டும் ! பெண்களும் " ஆண்கள் இல்லாத உலகம் " என்றெல்லாம் " ஓவர் பெண்ணிய பட்டிமன்றம் " நடத்தாமல் இயல்பாக வேண்டும் !

   4. மனித குலத்தால் சீரழிக்கப்பட்ட பூமியின் இயற்கை வளங்கள் அனைத்தும் பழைய இயல்புக்கு திரும்புவதுடன் அவை மீன்டும் மனிதனால் அழிக்கப்பட முடியாத நிலை தோன்ற வேண்டும் !

   5. இணையம் தொடங்கி, செல்போன், ஸ்மார்ட்போன் இத்யாதி இத்யாதிகள் அனைத்தும் இரவு பத்து மணிக்கு செயலற்றுபோய் காலை ஆறுமணிக்கு செயல்பட தொடங்க வேண்டும் !

   மீன்டும் தாமத்துக்கு மன்னிக்கவும் சகோ ! நன்றிகள் பல

   சாமானியன்
   Delete
 24. தொடர்கிறேன்...அருமை

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி சகோதரி. தொடருவோம்.

   Delete
 25. Attack on Paris. Are you safe and sound?

  ReplyDelete
  Replies
  1. We are safe Karigan... நலமாக இருக்கிறோம் !

   உங்களின் அக்கறையும் அன்பும் மிகுந்த விசாரிப்புக்கு நன்றிகள் பல.

   Delete
 26. நல்ல பகிர்வு, தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி சகோதரி. தொடருவோம்.

   Delete
 27. அசத்திவிட்டீர்கள் சாம் சார்

  பிரமாதமான பதிவு . கிளிஷே பலரையும் முணுமுணுக்க வைத்து விட்டதே! ஒரே மாதிரியான நிகழ்வுகள், ஒரே மாதிரியான நடத்தை செய்கைகள் இவற்றை ஸ்டீரியோ டைப் என்று சொல்லலாம். கிளிஷே என்பதற்கு ' முற்சாய்வு கொள்கை ' அல்லது ' முற்சாய்வு எண்ணம் ' என்ற வார்த்தை சரியாக வருமா என்று பாருங்கள். தவறு இருந்தால் திருத்த இன்னொருவர் வருவார்.

  தமிழ் சினிமாக்களில் பாதிரியாரை இன்னும் தவறாக காட்டுவது மட்டுமல்ல, வில்லன்களின் பெயர் இப்போதுள்ள படங்களிலும் கிறித்துவப் பெயராகத்தான் சூட்டப்படுகிறது. தவறான பாதையில் செல்லும் பெண்கள் எல்லோரும் இன்னும் ரோசி ,ரீட்டாவாகாவே இருக்கிறார்கள் . கிறித்துவத் திருமணங்கள் தாலி கட்டாமல் நடப்பதாகவே காட்டப்படுகின்றன. இந்திய சினிமா கிளிஷேக்கள்!

  யாரும் தொடாத விஷயம் எடுத்து எழுதுவது உங்களின் பாராட்டப்படும் தனித்த பாணியாக இருக்கிறது. வாசிக்க மிகவும் ஆர்வமாக இருந்தது. எல்லோரையும் கவரும் கவர்ச்சி நடை உங்கள் எழுத்தில் தெரிகிறது.

  இன்னொரு விஷயம் . ஐஸ்வர்யா உலக அழகியாகவும் , தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு இந்திய அழகிகள் உலக அளவில் அழகிகளாக தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, பன்னாட்டு பொருளாதாரச் சந்தையை இந்தியாவில் விதைக்கும் அரசியல் தந்திரம் காரணமாக இருந்திருக்கலாம் என்ற ஐயம் உண்டு. சோழியன் குடுமி சும்மா ஆடுமா சார்!?


  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சார்லஸ்...

   " முற்சாய்வு கொள்கை ' அல்லது ' முற்சாய்வு எண்ணம் ' என்ற வார்த்தை சரியாக வருமா என்று பாருங்கள். தவறு இருந்தால் திருத்த இன்னொருவர் வருவார். "

   உங்களின் இரண்டு வார்த்தைகளுமே பொருத்தம்தான் ! வலைப்பூவின் பலமே ஆரோக்யமான விவாதம்தான். இப்படிப்பட்ட பங்களிப்புகளால்தான் ஒரு மொழி வளம் பெறும்.

   நீங்கள் குறிப்பிட்ட சினிமா க்ளிஷேக்கள் உண்மை... சமீபகாலம்வரை தமிழ் ஹீரோ நடிகர் ஜெயிலில் இருக்கும் காட்சியில் அவரது எண் 786 ஆக இருக்கும் ! இதுகூட ஒருவகையில் க்ளிஷேதான் !

   நீங்கள் குறிப்பிடும் " அரசியல் தந்திரம் " பல ஆண்டுகளுக்கு முன்னரே விதைக்கப்பட்டு விட்டது ! உலக அழகி பட்டம் அதில் ஒரு அங்கம்தான் !

   ஆக்கப்புர்வமான பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் நன்றிகள் பல சார்லஸ்.

   தொடருவோம்

   Delete
 28. சாம் சார்

  கிளிஷே என்ற வார்த்தைக்கு ' கூறியது கூறல் ' பொருத்தமாக இருக்கும் என நண்பர் ஒருவர் சொன்னார். பலர் சொல்லியதை நாமும் சொல்லுதல் என்று பொருள்படுகிறது. அல்லது யாரோ சொல்லி வைத்ததை எல்லோரும் கூறுதல் என்றும் எடுத்துக் கொள்ளலாம். சரியாக இருக்குமா !?

  ReplyDelete
  Replies
  1. கூறியது கூறல்... இதுவும் பொருத்தமான வார்த்தைதான் ! ஆனால் தமிழில் வழக்கொழிந்து அல்லது அதிகம் புழங்கப்படாத வார்த்தைகள் பல பல ! அவற்றையெல்லாம் அட்டவணைப்படுத்தினாலே போதும் ! பல ஆங்கில வார்த்தைகளுக்கு ஈடு கிடைக்கும்.

   நன்றி சார்லஸ். தொடருவோம்

   Delete
 29. ஒரு சொல் பயன்பாடு தொடங்கி, கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்கும் மேலாக நமது சமூகத்தில் நிலவி வரும் அவலங்களையும் பாதிப்புகளையும் அலசிய விதம் அருமையாக இருந்தது. தங்களின் ஆதங்கமும் புரிந்தது. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அய்யா...

   வருகைக்கு, வாசித்து, பதிவின் நோக்கம் புரிந்து பின்னூட்டமிட்டதற்கும் நன்றிகள் பல

   Delete
 30. கட்டுரையை பல முறை மீண்டும் மீண்டும் ரசித்து படித்தேன். க்ளிஷே பற்றிய உங்களுடைய கண்ணோட்டம் அற்புதம். பாராட்டுக்கள் சாம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், பாராட்டு வார்த்தைகளுக்கும் நன்றி குரு.

   Delete
 31. வணக்கம் சகோ !

  தாமதத்திற்கு மனிக்கவும். மீண்டும் தங்கள் வருகையும் பதிவும் காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அடிக்கடி நினைப்பேன் தங்களையும் காரிகன் அவர்களையும். என்ன ஆயிற்று ஏன் இணையம் வருவதில்லை என்று கவலையாக இருக்கும்.
  அதற்கேற்ப ஆற அமர அலசி நல்லதோர் தலைப்புடன் வந்துள்ளீர்கள். கிளிசே பற்றி பல விபரங்கள் காண வியப்பே உண்மைதான் ஒரு சமூகதைக் குறிப்பிட கேலி செய்ய என்று எத்தனையோ உள்ளது. ஈழத்தவரைக் கண்டால் சோறு வருகிறது என்று சொல்வார்களாம். இப்படி எத்தனையோ ம்..ம்.... மேலும் தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன்.அருமையான பதிவு நீண்ட பதிவு என்றாலும் ரசித்தேன்! மிக்க நன்றி சகோ பதிவிற்கு ! தொடர வாழத்துக்கள் !

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோதரி...

   தாமதத்துக்கான மன்னிப்பை நானும் கேட்டுக்கொள்கிறேன் சகோ ! வேளைப்பளுவினால் அடிக்கடி தாமதம் ! நீங்கள் என் மீது கொண்டிருக்கும் அக்கறைக்கு நன்றிகள் பல.

   ஈழத்தவர்கள் மட்டுமல்ல, அந்நிய நாடுகளிலிருந்து வந்த ஒவ்வொரு இனத்தவருக்கும் ஒரு பெயருண்டு ! வளர்ந்த நாடுகள், நாகரீக நாடுகள் என அனைத்து மண்ணிலும் இதுபோன்ற கேலிகள் உண்டு !

   தொடருவோம். நன்றி

   Delete
 32. தாமதத்துக்கு வருந்துகிறேன். நீண்ட இடைவெளி விட்டாலும் மிகவும் சுவாரசியமான பதிவுடன் வந்து கலக்கிவிட்டீர்கள் சாம்!
  உங்கள் பதிவைப் படித்துத் தான் கிளிஷே & ஸ்டீரியோடைப் பற்றித் தெரிந்து கொண்டேன். இவை பற்றி இது நாள் வரை எனக்கொன்றுமே தெரியாது. பின்னூட்டங்களையும் ஒன்றுவிடாமல் வாசித்தேன். இரண்டுக்குமான வேறுபாடுகளை அறிந்து கொள்ள இணையத்தில் தேடினேன்.
  ஊமைக்கனவுகள் சகோ மூலம் கிளிஷே என்றால் தமிழில் தேய் வழக்கு என்றறிந்து கொண்டேன். அவரின் பின்னூட்டம் மூலமும், இணையத்தில் தேடியதன் மூலமும், இரண்டுக்குமான வேறுபாடு கொஞ்சம் விளங்கியது. நான் புரிந்து கொண்ட வகையில் உங்கள் பதிவு முழுக்க முழுக்க ஸ்டீரியோடைப் (பொதுப்புத்தி) பற்றியது கிளிஷே பற்றியதல்ல
  என்றே எனக்குத் தோன்றுகிறது. நான் சொல்வது தவறாகவும் இருக்கலாம்.
  நான் புரிந்து கொண்டது இது தான்:-
  ஒரு சொற்றொடரைத் தொடர்ந்து பரவலாக நாம் பயன்படுத்தியதன் விளைவாக எல்லோருக்கும் அது பரிச்சயம் ஆகி, பாப்புலர் ஆகி காலப்போக்கில், அதன் உண்மையான பொருளை இழந்து விடுவது தான் கிளிஷே.
  e.g. An idle mind is devil’s workshop
  Action speaks louder than words.
  இச்சொற்றொடர்களை நேரடியாகப் பெயர்த்தால் வரும் பொருள் வேறு; ஆனால் இவை சுட்டும் பொருள் வேறு. படித்த அடுத்த நிமிடம் இவற்றின் பொருளை நாம் விளங்கிக் கொள்கிறோம். இவை தான் கிளிஷே.
  ஆனால் ஸ்டீரியோடைப் என்பது பொதுப்புத்தி.
  ஒரு பொருளைப் பற்றியோ, ஒரு நாடு, மக்கள், இனம் பற்றியோ முழுமையாக அறிந்து கொள்ளாத நாம், நமக்குத் தெரிந்த ஒன்றிரண்டு செய்திகளை வைத்துக்கொண்டு, அல்லது நடந்த ஒன்றிரண்டு நிகழ்வுகளை வைத்துக்கொண்டு, பொதுப்படையாக (generalisation) அனுமானம் (assumption) பண்ணுகிறோம். இந்த அனுமானங்கள் தாம் காலப்போக்கில் பொதுப்புத்தியாகி விடுகின்றன. இவை தான் ஸ்டீரியோடைப். Stereotyping makes people generalize things!
  தேசப்பற்று மிகுந்த கடும் உழைப்பாளிகளான பஞ்சாப் மக்களைப் பற்றி இணையத்தில் உலாவரும் பெரும்பாலான சர்தார்ஜி துணுக்குகளில் கொஞ்சம் கூட உண்மையில்லை.
  கிளிஷே பற்றி நான் புரிந்து கொண்டது சரியா என நீங்கள் தான் சொல்லவேண்டும். யோசிக்க வைத்த, புதியன அறிந்து கொள்ள உதவிய பதிவுக்கு மிகவும் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. சகோதரி...

   இவ்வளவு அருமையானதொரு பின்னூட்டம் கொடுத்த பிறகு தமாதத்துக்கான வருத்தம் ஏன் ?!...

   பதிவை மட்டுமல்லாது பின்னூட்டங்களையும் வாசித்து நான் குறிப்பிட்ட இரு வார்த்தைகளுக்கான விளக்கத்தை இணையத்திலும் தேடி ஒப்பிட்டு இவ்வளவு ஆர்வமாய் பின்னூட்டமிட்ட, அறியாதவைகளை அறிங்குக்கொள்ளும் உங்களின் ஆர்வத்தை வியக்கிறேன்.

   எனக்கு வார்த்தைகள் பரிச்சயமே தவிர இரண்டுக்குமான வேறுபாடுகளை ஜோசப் விஜு, காரிகன், வருண் மற்றும் உங்களை போன்றவர்களின் பின்னூட்டங்களின் மூலமே அறிந்துக்கொண்டேன்.

   "யோசிக்க வைத்த, புதியன அறிந்து கொள்ள உதவிய... "

   என் பதிவுகளைவிட அவற்றிற்கு வரும் பின்னூட்டங்களின் மூலம் நான் நிறைய கற்றுக்கொள்கிறேன் என்பதே உண்மை.

   தொடருவோம் சகோ !

   Delete
 33. //கார்ட்டூன் கோடுகளின் கற்பனையையும்தாண்டி விதம் விதமாக வளைந்து நெளிந்து தலைவியின் காலில் விழுவது, தலைவருக்கு வணக்கம் வைப்பது தொடங்கி ப்ளக்ஸ் போர்டு பிரதாபங்களாகட்டும் அல்லது விஞ்ஞான ரீதியிலான ஊழல்களாகட்டும், ஸ்டீரியோடைப் தொடங்கிக் கார்ட்டுன்கள்வரை எதுவுமே நம் அரசியல்வாதிகளின் உண்மையான அலும்புகளை நெருங்க முடியாது !//
  ஹும் என்னத்தை சொல்வது...

  பாகிஸ்தான் என்றவுடன் அவர்கள் பற்றி நிறைய வரும் என்று எதிர்பார்த்துப் படித்தேன்.

  எனக்கும் ஒரு கிளிஷே அனுபவம் கிடைத்தது.

  தொடருங்கள் சாம் ஜி

  ReplyDelete
 34. Are you in need of a loan?
  Do you want to pay off your bills?
  Do you want to be financially stable?
  All you have to do is to contact us for
  more information on how to get
  started and get the loan you desire.
  This offer is open to all that will be
  able to repay back in due time.
  Note-that repayment time frame is negotiable
  and at interest rate of 2% just email us:
  reply to us (Whats App) number: +919394133968
  patialalegitimate515@gmail.com
  Mr Jeffery

  ReplyDelete