Saturday, December 7, 2013

கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு !நண்பர் ஒருவரின் வீட்டுக்கு போயிருந்தபோது, அவரின் மனைவி அவர்களின் மகனின் திருமணத்தை பற்றி பேசி கொண்டிருந்தார்.

" தம்பி ! நான் இப்படி சொல்றேன்னு நீங்க தப்பா நினைச்சிடாதீங்க.... முக்கியமா பொண்ணு நல்ல சிகப்பா இருக்கனும் ! இல்லேன்னா எங்க பக்கத்துக்கு என்னால பதில் சொல்ல முடியாது ! எங்க குடும்பத்து மருமகளுங்க எல்லோருமே சிகப்புதான் ! "

" தப்பா நினைச்சிடாதீங்க " என்ற பீடிகையுடன் அவர் ஆரம்பித்த காரணம் அடியேன் கறுப்பு !

" எங்க தங்கச்சிக்கு எப்படியெல்லாம் மாப்பிளை பார்க்கனும்ன்னு ஆசைப்பட்டோம் தெரியுமா... அவ இப்படி ஒரு ஆளை.... "

காதல் திருமணம் செய்துகொண்ட தன் தங்கை புருசனின் போட்டோவை காட்டி அதங்கப்பட்டார் ஒரு நண்பர் ! " இப்படி ஒரு ஆளை " என்று நண்பர் குறிப்பிட்ட மனிதர் குடிகாரனோ குற்றவாளியோ அல்ல ! கறுப்பு !

" பெரும்பாலான தமிழ்நாட்டு திரைப்படங்களின் கதாநாயகிகளெல்லாம் சராசரி தென்னிந்திய பெண்களை போலில்லாமல் உயரமாக வெள்ளை நிறத்தில் இருக்கிறார்கள்... "

இது ஒரு பிரெஞ்சு நண்பனின் வியப்பு !

" பொண்ணு சுண்டினா சிவக்கற நிறத்தில இருக்கனும் ! "

" நம்ம ஐஸ்வர்யா ராய் மாதிரி பாருங்களேன் ! "

" என்னா மாப்பிளை கொஞ்சம் நிறம் கம்மி... "

" மாப்பிள்ளை துரை மாதிரி இருக்காரு ! "

வரதட்சணை கொடுக்கல் வாங்கல்களுக்கெல்லாம் முன்னால் ஆரம்ப கட்ட திருமண பேச்சுகள் பெரும்பாலும் இப்படிதான் ஆரம்பிக்கின்றன ! மாப்பிள்ளை பெண்ணின் நிறத்தைவைத்துதான் அடுத்தகட்ட விலைபேசுதல் !

எண்பதுகளின் தமிழ் சினிமாக்களை கவனித்து பார்த்தவர்களுக்கு புரியும் ! அந்த காலத்தின் பெரும்பான்மை சினிமாக்களில் வில்லனாக வருபவர்  நாயகனின் தங்கையை பாலியல்ரீதியாக பலவந்தப்படுத்தும் காட்சி கட்டாயம் இடம்பெறும் ! அந்தமாதிரி படங்களில் தங்கை நடிகை அறிமுகமாகும் காட்சியிலேயே ஒன்றை ஊகித்துவிடலாம்... நடிகை சிகப்பாக அழகாயிருந்தால் வில்லனால் பலவந்தபடுத்தபடுவார். கறுப்பு என்றால் அவரை வில்லன் தொட கூட மாட்டார் ! நாயகனை வில்லன் சுட யத்தணிக்கும்போது குறுக்கே பாய்ந்து அண்ணனை காப்பாற்றிவிடுவார் கறுப்பு தங்கை ! தமிழ் சினிமா நாயகியின் தோழிகள் அவளை விட நிறம் கம்மியாக, முக்கியமாய் கறுப்பாக இருக்க வேண்டியது அவசியம் ! மாப்பிள்ளை கிடைக்காத நாயகியின் அக்காவோ அல்லது நாயகனின் தங்கையோ எல்லா படங்களிலும் கறுப்பாக தான் இருப்பார்கள் ! நிஜத்தில் கறுப்பாகவோ அல்லது மாநிறமாகவோ இருக்கும் நடிகைகள் கூட மேக்கப் உத்தியினால் திரையில் சிகப்பாகவே ஜொலிப்பார்கள் ! கதைக்கு தேவையென்றால் உடல் முழுவதும் மை அப்பிய கலர்தான் கறுப்பு என கட்டப்படும் !  " தீய்ஞ்ச தோசை மாதிரி மூஞ்சி ", " தீச்சட்டி மாதிரி முகம் " என காமெடி நடிகர் கேலி பேசும்  அங்கவை சங்கவைகளும் கறுப்புதான் !  ஆகமொத்தம் தமிழ் சினிமாவில் அழகுக்கு எதிர்ப்பதமான அவலட்சணத்தை காட்சியாக்க முயல்வது கறுப்பை காட்டிதான் !

அடியாட்கள் தொடங்கி பிக்பாக்கெட் திருடன், கஞ்சா விற்பவன்வரை விளிம்புநிலை மனிதர்கள் அனைவரையும் சினிமாவில்  கறுப்பாகவே பார்த்து பழகி, தெருவில் யாராவது திருடன் என கத்தினால் அழுக்கான உடையணிந்த கறுப்பு நபர் மீது சட்டென சந்தேகம் கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டோம் ! மிகைபடுத்துவதாக தோன்றினாலும் உண்மை இதுதான் !

" கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு " என நூறு படங்களை தொட்ட தமிழ் ஹீரோவின் பட பாடலையும், " மேடம் நீங்க வெள்ளை நான் கறுப்பு ! அதானே பிரச்சனை ?! " என தொடங்கி தானும் வெள்ளையாக படாதபாடுபடும் சூப்பர் ஸ்டாரின் காமெடி காட்சிகளையும் பார்க்கும் போதும், " எங்களையெல்லாம் பார்த்தா பிடிக்காது... பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும் ! " என எகிறும் இன்றைய தலைமுறை ஹீரோவின் டையலாக்கை கேட்கும்போதும், புகழின் உச்சம் தொட்ட கறுப்பு நடிகர்களுக்குள்ளும் கறுப்பு காம்ப்ளெக்ஸ் இருக்குமோ என தோன்றுகிறது !

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பெண்களை மணந்து கொண்ட தமிழர்களை பற்றி பலருக்கு தெரியும். கனடா, ஆஸ்த்ரேலியா தொடங்கி, ஜப்பானிய பெண்ணை காதலித்து மணந்தவர்களை பற்றியும் தெரியும். சில ஆண்டுகளுக்கு முன்னர் அரபு நாடு ஒன்றிலிருந்து தமிழ் காதலனுக்காக தமிழ்நாட்டின் கிராமம்வரை கிளம்பிவந்த பெண்ணை பற்றி படித்ததாக ஞாபகம். உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஆப்ரிக்காவிலும் நிச்சயமாக இருக்கிறார்கள். ஆனால் ஆப்ரிக்கா வாழ் தமிழர்கள் அந்நாட்டின் கறுப்பின பெண்ணை காதலித்ததாய் எனக்கு தெரியவில்லை ! கண்டதும் காதலில் நம் காளையர் பெரும்பாலோர் வெள்ளை பெண்ணின் கடைக்கண் பார்வையிலேயே வீழ்கின்றனர் !

சுஜாதாவின் எழுத்துகளில் நம்முடைய கறுப்பு அலர்ஜிக்கான உளவியல், விஞ்ஞான காரணங்களை தேட தோன்றுகிறது !

கறுப்பு என நாம் நினைக்கும் நமது நிறம் கறுப்பே கிடையாது என சொன்னால் நம்புவீர்களா ?!  விஞ்ஞானரீதியாக மனிதர்கள் மூன்று விதம். அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆஸ்த்ரேலிய கண்டங்களின் வெள்ளையர்கள். ஆசியாவின் மஞ்சள் நிறத்தவர்கள். ஆப்ரிக்க கண்டத்தின் கறுப்பின மக்கள். இந்த நிற வேற்றுமைக்கு காரணம் அந்தந்த கண்டங்களின் தட்ப வெப்ப நிலை. ஆப்ரிக்க கறுப்புக்கும் தென்னிந்திய மாநிறத்துக்கும் நிறைய வித்யாசங்கள் உண்டு ! மேற்சொன்ன மூன்று நிறங்களுக்குள் அடங்காத நான்காவது நிறமான தென்னிந்தியர்களின் மாநிறம் தென்னிந்தியாவை தாண்டி இலங்கை மொரீசியஸ் போன்ற சிற்சில நாடுகளில் மட்டுமே உள்ள அரிய நிறம். இலங்கை, மொரீசியஸ் நாட்டு மக்கள் தென்னிந்திய வம்சாவழியினர் ! ஆக தென்னிந்தியாவின், தமிழனின் அரிதான மாநிறத்துக்கு காரணம் ? ... இந்தியாவின் தென்கோடியிலிருந்து தொடங்கி பரவியிருந்த லெமூரியா கண்டத்தினர் நாம் என்பது சில விஞ்ஞானிகள் நம்பும் காரணம். ஐரோப்பாவின் வெள்ளை, ஆப்ரிக்காவின் கறுப்பு போல கடல்கொண்ட லெமூரியா கண்டத்தினர் மாநிறமாக இருந்திருக்கலாம்.

நிற்க, இதற்கான காரணமாக அடியேன் நினைப்பது....

கைபர் கணவாய் வழியே பண்டைய இந்தியாவினுள் நுழைந்த ஆரியர்கள் தொடங்கி ஆப்கான் மன்னர்கள் வரை, கேரளாவில் கால்பதித்த வாஸ்கோடகாமாவிலிருந்து ஆங்கிலேயர்கள் வரை இந்தியத்திருநாட்டின் தென்கோடி தமிழன் கண்ட ஆளும்வர்க்கம் அனைத்துமே வெள்ளைதான் ! திராவிட மன்னர்களின் ராஜகுருக்களில் பலரும் ஆரியர்களே ! சுதந்திர இந்தியாவிலும் நேரு தொடங்கி இந்திரா, ராஜிவ், வாஜ்பாய் என வெற்றிகரமான பிரதமர்கள் அனைவருமே  குங்குமப்பூ நிறம் ! இதில் சந்திரசேகர் மட்டும் நிறம் கம்மி என ஞாபகம் !! ( சிகப்பு இந்திராவை பிரதமராக்கியதில் மிக முக்கிய பங்கு வகித்த கருப்பு காமராஜரை காங்கிரசே மறந்துவிட்டது அரசியல் ! )

ஆக, ஆள்வதற்கான தகுதியில் முக்கியமானது வெள்ளை நிறம் என்ற எண்ணம் உருவாகி ஜீன்களில் படிந்திருக்குமோ என தோன்றுகிறது ! முக்கியமாய் எங்கோ இருக்கும் ஐரோப்பிய கண்டத்திலிருந்து கிளம்பி இந்தியாவில் கால்பதித்து சுதேசி மாமன்னர்களையெல்லாம் தந்திரமாய் விழ்த்தி இந்திய துணைகண்டம் முழுவதையும் ஒரு குடையின் கிழ் கொண்டுவந்த வெள்ளைக்காரர்கள் மீது இன்றும் நமக்கு ஒரு "விசுவாசம் " உண்டு ! " வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன்தாண்டா ! " என்ற சிலாகிப்புக்கான காரணம் இதுதான் !  இன்றும் வெள்ளைக்கார சுற்றுலா பயணிகளுக்கு நம்மவர்கள் போடும் கும்பிடு சற்று பெரிதுதான் ! ( ஆறு ரூபாய் பெறும் சோழி பொம்மைகளை ஆயிரம் ரூபாய்க்கு வெள்ளைக்காரர்களின் தலையில் கட்டும் கேடி பில்லா கில்லாடி ரங்காக்கள் இதில் சேர்த்தி கிடையாது ! )

மேலும் நம் ஜாதி கட்டமைப்பிலும் கறுப்பு அலர்ஜிக்கான காரணங்கள் உண்டு !  பெரும்பாலும் நிறத்தின் மூலமாகவே ஜாதிகட்டமைப்பு தமிழ் சினிமாவில் மிகவும் தந்திரமாய், ஜாக்கிரதையாய் பாதுகாக்கப்படுகிறது ! இதை விளக்கவேண்டுமானால் இன்னொரு கட்டுரை தேவை !

சிகப்பும் கறுப்பும் வெறும் நிறங்கள்தான். சிகப்பானவர்களில் சுமாரானவர்கள் உண்டு. கறுப்பிலும் லட்சணமானவர்கள் உண்டு. மேலே சொன்ன சுமார், லட்சணம் போன்ற அழகை குறிக்கும் பதங்களும் அவரவர் பார்வைக்கும் பக்குவத்துக்கும் ஏற்ப மாறுபடும் ! பொதுவான சமூக கட்டமைப்பு எண்ணங்களில் சிக்கிவிடாமல், ஒரு மனிதனின் நிறம், அங்க அமைப்புகளை கடந்து அகத்தின் அழகை அறிய முயற்சிப்பவர்களுக்கு மட்டுமே அழகு... இல்லையில்லை உண்மையான நிலையான பேரழகு புலப்படும் !

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

9 comments:

 1. இன்னமும் இது போன்ற கொடுமைகள் தொடர்வது உண்மையிலேயே கடுப்படிக்கும் விடயம்தான்

  ReplyDelete
 2. மன வளர்ச்சியும் பக்குவமும் இல்லாததே இதன் காரணம்.

  ஒவ்வொரு மனிதனும் பொருளாதாரம் மற்றும் அந்தஸ்து இவைகளை உயர்த்தப் போராடுகிறான்.

  ஆனால் நல்ல எண்ணங்களை மேன்படுத்துவது இல்லை.

  ReplyDelete
  Replies
  1. முக்கியமாக, நீங்கள் கூறும் பொருளாதாரத்தையும் அந்தஸ்த்தையும் மற்றவர்களின் பார்வைக்காக உயர்த்த விழைகிறான் என்பதுதான் சோகம் !

   நன்றி.

   Delete
 3. கறுப்பான விழியால் தான் வண்ணங்களைக் காண்கின்றோம்.

  நிறம் ஆண்களுக்கு ஒரு பெரிய விசயம் இல்லை.
  ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை.
  தவிர நீங்கள் சொல்வது போல் நம் நிறம் கறுப்பு கிடையாது.
  நம்மின் மாநிறம் மற்ற நாட்டவர்களுக்குக் கிடையாது என்பதே நமக்கு பெருமை அல்லவா?

  மிகவும் அருமையான பதிப்பு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. " கறுப்பான விழியால் தான் வண்ணங்களைக் காண்கின்றோம். "

   அருமையான வார்த்தைகள் !

   ஆமாம், மாநிறத்தவர்களான நாம் கறுப்பும் கிடையாது, கறுப்பு நிறம் ஒரு பிரச்சனையும் கிடையாது. நமது சமூகத்தின் " கறுப்புபோபியா ! " வுக்கான காரணங்களை யோசித்த போது தோன்றியதே இந்த இடுகை

   நன்றி
   சாமானியன்

   Delete
 4. //மேலும் நம் ஜாதி கட்டமைப்பிலும் கறுப்பு அலர்ஜிக்கான காரணங்கள் உண்டு ! பெரும்பாலும் நிறத்தின் மூலமாகவே ஜாதிகட்டமைப்பு தமிழ் சினிமாவில் மிகவும் தந்திரமாய், ஜாக்கிரதையாய் பாதுகாக்கப்படுகிறது ! இதை விளக்கவேண்டுமானால் இன்னொரு கட்டுரை தேவை !//

  //அடியாட்கள் தொடங்கி பிக்பாக்கெட் திருடன், கஞ்சா விற்பவன்வரை விளிம்புநிலை மனிதர்கள் அனைவரையும் சினிமாவில் கறுப்பாகவே பார்த்து பழகி, தெருவில் யாராவது திருடன் என கத்தினால் அழுக்கான உடையணிந்த கறுப்பு நபர் மீது சட்டென சந்தேகம் கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டோம் ! மிகைபடுத்துவதாக தோன்றினாலும் உண்மை இதுதான் !//

  உண்மை...உண்மை.

  நிறத்துக்கும் அழகுக்கும் அடிமையாகிற நம் மக்களின் பலவீனத்தை அற்புதமாகப் படம் பிடித்திருக்கிறீர்கள்.

  அனைத்துத் தரப்பினரும் தவறாமல் படிக்க வேண்டிய பதிவு.

  மனப்பூர்வமாகப் பாராட்டுகிறேன் சாமானியன்.

  ReplyDelete
 5. சினிமா நடிகர்களை தாங்கள் குறிப்பிட்டதால் நான் சொல்லவேண்டுமென கருதுகிறேன் நடிகர் வடிவேலு கருப்புதான் அதுபெரிய விசயமாக தெரியவில்லை ஆனால் பெரியநடிகர் என்பதால் ''நம்மூரு ........... கருப்புதான்'' என ஒருபாடல் வருகிறது தமிழனை உயத்தி பாட்டுஎழுத தெரியாத தமிழ் கவிஞன், வந்தாரை வாழவைத்து விட்டு என்றுமே ஏமாந்து நிற்கிறான் தமிழன். இந்நிலை என்று மாறுமோ......

  ReplyDelete
  Replies
  1. உங்களின் கருத்து உண்மைதான் வால்மீகி அவர்களே !

   உங்களின் முதல் வருகை தொடர் வருகைகளாகட்டும் !

   நன்றி
   சாமானியன்

   Delete
 6. சாம்,

  என்ன ஒரு பதிவு! வாழ்த்துக்கள்!

  கருப்பு என்ற நிறத்தைப் பற்றி எழுத ஆரம்பித்தால் அது பல பக்கங்கள் கொண்டதாக நீளும். ஏனென்றால் கருப்பு ஒரு நிறமே அல்ல. யாரோ ஒருவர் ( உண்மையில் எனக்கு அவர் யார் என்று நினைவில்லை) சொன்னார்:"கருப்பு ஒரு நிறமில்லை. அது ஒரு இனம்." ஆஹா எத்தனை உண்மை! கருப்பை கீழ்த்தரமாக பார்க்கும் போக்கே என்னைப் பொருத்தவரை ஒரு racist அணுகுமுறை.

  உங்களுக்கு ஒன்று தெரியுமா? இந்த பிரபஞ்சத்தின் நிறமே கருப்பு என்று ஒரு கருத்து இருக்கிறது. இதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். வெண்மையோ அல்லது வெளிச்சமோ அதற்கு ஒரு source தேவைப்படுகிறது. கிறிஸ்துவர்களின் வேதம் கூட கடவுள் பேசிய முதல் வார்த்தையாக சொல்வது "ஒளி உண்டாகக்கடவது" (Let there be light) அப்படியானால் அதற்கு முன் என்ன இருந்தது என்றால் வெறும் கருமைதான். வெண்மைக்குத்தான் ஒரு சூரியன் அல்லது ஒரு ஒளி (மின்சார விளக்கு அல்லது மெழுகுவர்த்தி) ஒன்று அவசியப்படுகிறது. கருமைக்கு எதுவுமே தேவையில்லை. அது இயற்கையானது. அதனால்தான் கருப்பே இந்த பிரபஞ்சத்தின் நிறம் என்று சொல்லப்படுகிறது. எனவே கருப்பே நமது இயல்பான நிறம். அதுவே இந்த பிரபஞ்சத்தின் நிறம். பெருமை கொள்வோம்.

  ReplyDelete