Monday, February 16, 2015

மீண்டும் முபாரக்


இது " முபாரக் " பதிவின் தொடர்ச்சி.

ராஜா ரெக்கார்டிங் சென்ட்டர் நண்பர்களிடம் ஒரு தனித்தன்மை உண்டு. என்னதான் " மகா கெட்ட பசங்க " என்றாலும் நண்பர்களின் குடும்பத்தினர் யாராவது கண்ணில் பட்டுவிட்டால் போதும் !  ஒரு நொடியில் அந்நியன் கெட்டப்பிலிருந்து அடக்கமான அம்பியாக மாறிவிடுவார்கள் !

இந்த பதிவின் முதல் பாகத்தில் முபாரக் பாலகுமாரனை பொசுக்கியதை படித்தவர்களுக்கு அவன் கெட்டப் வித்தையில் கில்லாடி என்பது புரிந்திருக்கும் ! ஆனால் அவனின் கெட்டப் கிழிந்து தொங்கிய ஒரு சம்பவமும் உண்டு ! அதனை கிழித்தது என் அம்மா !!

என் அம்மா எல்லா விசயத்திலும் படு உஷார் ! முக்கியமாய் மனிதர்களை படிப்பதில் !

"  குடிச்சிட்டு வரான்... ஒதுங்கு ! "

வெகு தூரத்தில் நடந்துவருபவனின் தடுமாற்றத்தையும் மிக சரியாக கணித்துவிடுவாள் !

" தோ வந்துடறேன் அத்தை !... "

" இவன் எப்ப சிகரெட் குடிக்க ஆரம்பிச்சான் ?...! "

மதிய சாப்பாட்டுக்கு பிறகு கொல்லைப்புறம் ஓடும் என் இளம் மச்சினனுக்கு பின்னால் முனுமுனுப்பாள்...

" சொன்னேன்ல... பாத்தியா ? "

அவன் சென்றபிறகு கொல்லைப்புறம் சென்று துப்பறியும் சாம்புவாக மாறி சிகரெட் துண்டினை கண்டுபிடித்து காட்டுவாள் ! அம்மாவின் கணிப்பு தப்பியதே கிடையாது ! அதே போல தவறுகளை கண்டிப்பதிலும் படு சிக்கனமாய், நிதானமான ஆனால் யோசிக்க வைக்கும் வார்த்தைகளை உபயோகிப்பாள்.

ரு மாலை நேரம்...

குவார்ட்டர் மப்பும் கையில் சிகரெட்டுமாய் கடைக்கு முன்னால் நின்று என்னுடன் பேசிக்கொண்டிருந்தான் முபாரக்...

" டேய் ! உங்க அம்மாடா ! "

பதிவு செய்யும் பாடலுக்கு ஷார்ப்பை கூட்டிவிட்டு கடைக்கு வெளியே வந்த பாஸ்கர்  சன்னமாய் அலற, முபாரக் சிகரெட்டை பின்னால் மறைத்தான். அம்மா முபாரக்கை சந்திப்பது அதுதான் முதல் முறை ...

" யாரு வீடு தம்பி நீங்க ?... "

" அட... உங்க பாட்டி பேரு.... சுன்னாம்புக்கார வீதியில தானே பூர்வீக வீடு ?... உங்க அம்மாவும் நானும் சின்ன வயசுல ஒண்ணா விளையாடியிருக்கோம் தம்பி... ஏம்பா ? முபாரக் அந்த வீட்டு பிள்ளைன்னு என்கிட்ட நீ சொல்லவே இல்லையே ? "

முபாரக்கின் அம்மா தன் சிறுவயது தோழி என்ற சந்தோசத்தில் அம்மா தொடர, நான் நெளிய ஆரம்பித்தேன்... என்னைவிட அதிகமாய் முபாரக் ! அவன் பின்னால் பிடித்திருந்த சிகரெட் துண்டு விரலை சுட தொடங்கியிருந்தது !!

" சரி தம்பி... அம்மாவை கேட்டேன்னு சொல்லுங்க... "

ஒரு வழியாய் கிளம்பிய என் அம்மா அடுத்து கூறியதில்தான் முபாரக்கின் கெட்டப் கிழிந்தது !

" கையை பச்சை தண்ணியில காட்டுங்க தம்பி... இல்லேன்னா கொப்புளிச்சிடும் ! டேய்... தம்பிக்கு ஏதாச்சும் பாக்கு வாங்கி கொடுடா ! "

முகத்தில் எந்த சலனமும் காட்டாமல் கூறிவிட்டு சட்டென அம்மா நகர, முபாரக்கின் முகம் இருண்டது !

" ஏன்டா... அந்த வீட்டு பையனா இப்படி... "

நான் வீடு திரும்பியதும் மிகவும் வருந்தினாள். முபாரக் குடும்பம் ஊரின் பாரம்பரியமான குடும்பங்களில் ஒன்று. முபாரக்கின் தந்தை வங்கி மேனேஜர். அவனின் அக்காள்கள், அண்ணன் அனைவரும் பட்டதாரிகள்.


ரெக்கார்டிங் சென்ட்டரில் நடக்கும் எங்கள் அரட்டை நள்ளிரவையும் தாண்டும் சமயங்களின்  சில வேளைகளில் முபாரக்கின் தந்தை அவனை தேடி வருவார்.

" டேய்... தம்பி ! சாப்பாட்டை முடிச்சிட்டு வந்து பேசிக்கிட்டிருடா.... "

" நீங்க போங்கப்பா... தோ வந்திடறேன்.... நீங்க சாப்டீங்களாப்பா... ? "

சிகரெட்டை பின்னால் மறைத்துக்கொண்டு கெஞ்சும் தந்தையுடன்  முகம் திருப்பி பேசுவான் முபாரக். அவர் சென்றவுடன் தவறவிட்டதை தேடும் பார்வையுடன் தூர வெறித்தபடி அவசரமாய் புகையிழுப்பான்.

" டேய்... போய் சாப்டுட்டு வாடா ! நீ இப்படியே இருந்தா கடையை இழுத்து  மூடிடுவேன்  ஆமா ! "

சகாயம் அண்ணனின் அதட்டல் மெளனத்தை கலைக்கும் போது சிகரெட்டை தூர வீசிவிட்டு அவசரமாய் எழுந்து போவான் !

முபாரக்குடனான என் நட்பினால் தன் பால்ய தோழியுடனான என் அம்மாவின் தொடர்பு புதுப்பிக்கப்பட்டது ! அவர்கள் வீட்டுக்கு சென்றவள் அவனை பற்றி விசாரித்தபோது,

" அவனையும் மதித்து விசாரிக்கறீங்களே.... "

என அவனின் மூத்த அக்காள் சிரித்ததை வருத்தத்துடன் குறிப்பிட்டாள்.

" எல்லோரும் நல்லா படிக்கற குடும்பத்துல ஒருத்தனுக்கு படிப்பு ஏறலைன்னா பக்குவமா சொல்லனும்... மத்த திறமையை வளர்த்துவிடனும்... அதில்லாம பிஞ்சியிலேயே ஒண்ணுக்கும் உதவாதுன்னு திட்டினா வெம்பிதான் போகும் ! "

இன்று நினைத்தால் முபாரக்கின் நிலைக்கான உளவியல் காரணங்களை அம்மா அன்று அட்சரம் பிசகாமல் சொன்னது புரிகிறது !

" என்னா ?... உங்க பையன் அந்த ரெக்கார்டிங் சென்ட்டர் செட்டோட இருக்கறாப்போல... "

" பழக்கம்ன்னா நல்லவன் கெட்டவன் நாலு பேரும்தான் இருப்பான்... ! நாம இப்படித்தான் இருக்கனும்ங்கற தெளிவு இருந்தா யாரும் யாரு கூடவும் பழகலாம் ! "

வாரம் தவறாமல் அவர்களுடன் பாருக்கு சென்றாலும், சில்லி சிக்கனுடன் நிறுத்திக்கொண்டு நான் தடம் புரளாமல் தொடர்ந்ததற்கு என் பெற்றோர் என் மீது வைத்த நம்பிக்கையும், எனக்கு ஊட்டிய சுய பொறுப்புணர்ச்சியும் காரணமாக இருக்கலாம் என தோன்றுகிறது !

சிங்கிள் டீயும், சிசர்ஸ் சிகரெட்டும் சுகமாய் அமைந்து சுதி ஏறும் மாலை நேரங்களில் முபாரக்கின் பேச்சு களை கட்டும் ! அலுங்காமல் நலுங்காமல் மற்றவர்களை கிண்டலடிப்பான் ! கிண்டலடிக்கப்படுபவர்களுக்கு யாராவது " வக்காலத்து " வாங்கினால் தொலைந்தது....

"ஓய்... நீரு மட்டும் என்ன யோக்கியமா  ? "

எனத்தொடங்கிவிடுவான் ! கடை ஓனர் சகாயம் அண்ணனுக்கும் அதே " டிரீட்மெண்ட் " தான் ! ஆனாலும் யாரும் கோபித்துக்கொள்ள மாட்டார்கள். காரணம் அவன் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கும். இன்று நினைத்துபார்த்தால் அன்று நாங்கள் பேச நினைத்ததையெல்லாம் பயமின்றி பேசும் எங்கள் மனசாட்சியாக முபாரக் இருந்திருக்கிறான்  என  தோன்றுகிறது !



பெளர்ணமி இரவில் கள் குடிக்க போன அனுபவத்தை " கதை திரைக்கதை வசனம் " தம்பி ராமைய்யாவை போல வர்ணித்து கூறுவான்...

" பாரு... ஒத்தை பனைமரத்துக்கு கீழ... இந்தா... அங்க சகாயம்... அப்புறமா சூசை... ரமேஷ், பிச்சை, பாஸ்கர் அப்புறம் நானெல்லாம் இந்தப்பக்கமா உக்காந்திருக்கோம்... எல்லோர் கையிலயும் கள்ளு பானை ! இங்கிலீஸ்காரன் மாதிரி சகாயம் அண்ணன் நம்ம கள்ளு பானையை தூக்கி சியர்ஸ் சொல்றாரு...

" ஓய் ! கள்ளுக்கே சியர்ஸ் சொன்ன ஒரே ஆளு நீ தான்யா ! "

சட்டென கதையை விட்டுவிட்டு கலாட்டாவில் இறங்குவான். போதையில் சகாயம் அண்ணனும் " வா போ " தான் !

" என்னாண்ணே... உங்களையே வா போங்கறான் ?! "

" டேய் நீ சும்மா இருடா ! நான், அதை கேட்டா இன்னும் சொல்லாததையெல்லாம் சந்திக்கு கொண்டு வந்திடுவான் ! "

சகாயம் அண்ணனுக்கு கொம்பு சீவிவிட நினைத்தால் வாய் பொத்தி பம்முவார் !

" ம்ம்ம்... எங்க விட்டேன் ?... ஆங் ! எல்லோரும் பானையை தூக்கி வாயில வெச்சிருப்போம்... "

இன்று சின்ன திரையில் முக்கியமான தருணத்தில் விழும் விளம்பரங்களை போல அன்று சுவாரஸ்யம் கூடும் போது சட்டென நிறுத்தி தம் இழுப்பான் முபாரக் !

" டேய் பாம்புடான்னு கத்தறாரு சூசை... எங்களுக்கு நடுவுல இவ்ளோ நீள நல்லப்பாம்பு ! ஆளுக்கு ஒரு பக்கமா தெரிச்சி ஓடுறோம்... இதுல என்னா பியூட்டிங்கறியா ?... ஒருத்தன் கூட கள்ளுப்பானையை கீழ போடலடா ! ஓடி ஒதுங்கி குடிச்சிட்டோமுல்ல ?! "

ஜமா களைக்கட்டி அதிரும் !

நுகர்வோர் கலாச்சாரம் தொடங்கி ஊரின் கடைத்தெருவில் மாற்றங்களும் வளர்ச்சியும் வேகமாகி  உள்ளூர் டைமண்ட் கலர் சோடாவை கோக்கும் பெப்சியும் ஓரங்கட்ட அரம்பித்த காலம்...

ரெக்கார்டிங் சென்ட்டருக்கு எதிர்புறம் இருந்த தோட்டம் காம்ப்ளக்ஸாகி கீழ் கடை கூல் டிரிங்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் சென்ட்டராக மாறியது ! அந்த கடை ஓனருக்கு ஏனோ ஆரம்பத்திலிருந்தே எங்களை பிடிக்கவில்லை. சதா சர்வகாலமும் சிகரெட்டும் கையுமாய் நிற்கும் இளைஞர் கூட்டத்தினால் தன் கடைக்கு பெண் கஸ்டமர்கள் வருவதில்லை என்பது அவரது புலம்பல் ! ஆனால் உண்மையான காரணம் அவர் கடையின் ஜீஸை குடித்த பலருக்கு வயிற்றுபோக்கு ஏற்பட்டதுதான் என உறுதியாக நம்பினான் முபாரக் !

இப்படி இருந்த உறவை தூதரகம் மூடும் அளவுக்கு மோசமாக்கியது எங்கள் குரூப்பின் மெத்தப்படித்த சித்திக் !

 
ன்றாவது கடைப்பக்கம் வந்து மறைவாய் தம் இழுத்துவிட்டுபோகும் சித்திக் அண்ணன் அன்று எதிர்கடையை வெகு நேரம் முறைத்துக்கொண்டிருந்துவிட்டு சட்டென தெருவில் இறங்கி அந்த கடைக்கு போனார். சித்திக் அண்ணன் கை ஆட்டி பேச பேச, ஓனரின் முகம் பேஸ்த்தடிப்பது எங்கள் கடையிலிருந்தே தெரிந்தது !

" ஏன்டா... இத்தனை பேர் இருக்கீங்க... நாள் முழுக்க எதிர்க்கத்தானே பார்த்துக்கிட்டு இருக்கீங்க... ஒருத்தன் கண்ணுக்கும் தெரியலையாடா ?! "

" என்னா விசயம் சித்திக் ? சொன்னாதானே தெரியும்... ?! "

வழக்கம் போலவே சலனமற்ற குரலில் கேட்டார் ரிக்கார்டுகளை துடைத்து அடுக்கி கொண்டிருந்த சகாயம் அண்ணன் !

" எதிர் கடை போர்டை பாத்தீங்களா ?... cool drinks and snacksல  snacksக்கு  பதிலா snakes னு எழுதி வச்சிருக்கான் ? "

" டேய் ! டிகிரி படிச்சதை நிருபிச்சிட்டாருடா சித்திக் அண்ணன்... சகாயம் அண்ணே... சித்திக்குக்கு படிக்காத மேதை பாட்டை போடுங்க ! "

கலாட்டாவில் இறங்கிய முபாரக் அதோடு விடவில்லை...

" டேய் இப்ப புரியுதா நான் சொன்னது ?... மாப்ள பாம்பு ஜூஸ் வித்திருக்காருடா... அதான் ஒருத்தியும் வரலை ! "

முபாரக்கின் கூச்சல் எதிர்கடையை எட்ட, அந்த கடையின் ஓனர் எங்கள் மீது போர் பிரகடனம் செய்துவிட்டார் !

அடுத்த நாள் ஜூஸ் கடைக்கு வந்த டிராபிக் சார்ஜெண்ட்டுக்கு தன் கையாலேயே  ஜூஸ் கொடுத்த கடை ஓனர் எங்கள் கடையை காட்டி பேச அலர்ட் ஆனோம் ! முக்கியமாய் அவரிடம் காசு வாங்காததை கண்டு சொன்னார் படு ஜாக்கிரதை பாஸ்கர் அண்ணன் ! முபாரக் விசாரணையில் இறங்கினான்...

டீ குடிக்க சென்ற எதிர்கடை பையனின் பின்னால் சென்றவன் அன்றிரவு கடை மூடும் சமயத்தில் தான் திரும்பினான். வழக்கத்தைவிட கொஞ்சம் ஓவர் !

" யோவ் ! நீயெல்லாம் பெரிய மனுசனா... எங்க மேல கம்ப்ளெய்ண்ட் கொடுக்கனும்ன்னா வா ! நானே ஸ்டேசனுக்கு கூட்டிக்கிட்டு போறேன்... எஸ் ஐ நமக்கு இப்படி ! தெரியும்ல... காக்கி சட்டை போட்ட போலீஸ்காரனுக்கும் வெள்ளைசட்டை போட்ட டிராபிக் போலீசுக்கும் வித்யாசம் தெரியாத நீயெல்லாம்.... ஹரா.... "

அவன் காறியதில் கடைத்தெருவே கூடிவிட்டது ! மறுநாள் கடைத்தெரு பஞ்சாயத்துக்கு சென்று, இனி குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே நண்பர்கள் ஜமா, நள்ளிரவிலெல்லாம் கடைக்கு முன்னால் கூட கூடாது என சிலபல கட்டளைகளுக்கு தலைவணங்கி திரும்பினார் சகாயம் அண்ணன் !

முபாரக் மீன்டும் வருவான் !


பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

44 comments:

  1. முதலில் இந்த பதிவின் கதாநாயகிக்கு எனது பாராட்டுக்கள்!
    ஏனைய கதாபாத்திரங்களை அடுப்படியில் உண்ட பாத்திரங்களை
    கழுவி வைப்பது போல் வைத்து விட்டார்கள்!

    இதுபோன்ற அறிவு நுட்பமிகு தாயை பெற்றமைக்கு எல்லா புகழும் இறைவனுக்கே!
    நன்றி இறைவா! என்று நா தழுத்து பாட வேண்டும் போல் உள்ளது..

    அறிவு முதிர்ச்சி! சமயோசிதம், நடைமுறை உலக கண்ணோட்டம்!

    " கையை பச்சை தண்ணியில காட்டுங்க தம்பி... இல்லேன்னா கொப்புளிச்சிடும் ! டேய்... தம்பிக்கு ஏதாச்சும் பாக்கு வாங்கி கொடுடா ! "
    முபாரக்கின் முகத்திரை முக்காடு போட்டுகொண்டதே! சபாஷ்!

    மீண்டும் முபாரக் பாக்கை தேடும் அவசியம் பிறகு இருந்திருக்காது என்றே எண்ணுகிறேன்.
    மீண்டும் முபாரக் எப்பொழுது வருவான்?

    ஏனென்றால் கேட்போர்க்கு எல்லாம் நான் அல்லவா பதில் கூற வேண்டும்!

    நன்றியுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. நண்பரே,

      தங்களின் முத்தான முதல் கருத்துக்கு நன்றி !

      " மீண்டும் முபாரக் எப்பொழுது வருவான்?... "

      எனக்கே தெரியாது என்பதுதான் உண்மை ! மாதத்துக்க்கு இரண்டு பதிவு என கணக்கு... அதில் இனி முபாரக்கின் முறை ?.... ஏனென்றால் என்ன எழுதுவது என்பது அவ்வப்போதைய சூழ்நிலையை பொறுத்து அமைந்துவிடுகிறது !

      மீன்டும் நன்றிகள் பல நண்பரே.

      Delete
  2. சுவாரஸ்யம். அம்மாவின் புத்தி கூர்மையும், நாலுவரி நச் பேச்சுகளும் கவர்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி நண்பரே

      Delete
  3. அண்ணன் ராமைய்யா விரைவில் வரட்டும்... ஜமா...?

    ReplyDelete
    Replies
    1. எனது ஜமா களைகட்ட தங்களின் உதவி வேண்டும் வலைசித்தர் அவர்களே... தமிழ்மணத்தில் சேர தங்கள் தயவு தேவை !

      நன்றி
      சாமானியன்

      Delete
  4. அண்ணா,
    ஒரு சிறுகதைக்கான அனைத்துக் களங்களும் தெரிகின்றன. முடிவை மட்டும் சற்று யோசித்து இட்டிருந்தீர்களானால் நிச்சயம் அருமையான நடையுள்ள சிறுகதையாக மாறி இருக்கும்.
    அனுபவத்தைக் கதைபோலச் சுவாரசியமாய்ச் சொல்வது கூட ஒரு கலைதான்.
    தொடருங்கள்.
    தங்களது பதிவுகளை தமிழ்மணத்தில் இணைக்க, திண்டுக்கல் தனபாலன் அய்யாவைத் தொடர்பு கொள்ளுங்கள்.
    நிச்சயம் உதவி புரிவார். இப்படிப் பலருக்கும் உதவியிருக்கிறார்.
    சில நிமிடங்களில் அது சாத்தியப்படும்.
    தங்களின் பதிவுகள் கூடுதல் பார்வையாளர்களைச் சேர அது ஒரு வாய்ப்பாக அமையும்.
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. " ஒரு சிறுகதைக்கான அனைத்துக் களங்களும் தெரிகின்றன... "

      இந்த பதிவின் முதல் பாகத்தை வாழ்வியல் அனுபவமாக எழுதினேன்... மீன்டும் முபாரக்கை எழுதி படித்துக்கொண்டிருந்த போது இதனை கதையாகவே எழுதியிருக்கலாமோ என தோன்றியது... அதனையே நீங்களும் குறிப்பிட்டுள்ளீர்கள் !

      முடிவு...

      தொடரும்தான் போட்டிருக்கீறேன் சகோதரரே... கதையோ அனுபவமோ இந்த பதிவின் முடிவை முன்னரே யோசித்துவிட்டேன் ! அடுத்த பாகம் வரை பொறுங்களேன்... !

      ஆரம்பம் முதலே எனது தளத்தை தமிழ்மணத்தில் இணைக்க அக்கறையுடன் அறிவுறுத்திகொண்டிருக்கிறீர்கள்... மிக விரைவில் திண்டுக்கல் தனபாலன் அவர்களை தொடர்பு கொள்கிறேன்.

      நன்றிகள் பல

      Delete
  5. " எல்லோரும் நல்லா படிக்கற குடும்பத்துல ஒருத்தனுக்கு படிப்பு ஏறலைன்னா பக்குவமா சொல்லனும்... மத்த திறமையை வளர்த்துவிடனும்... அதில்லாம பிஞ்சியிலேயே ஒண்ணுக்கும் உதவாதுன்னு திட்டினா வெம்பிதான் போகும் ! "

    உண்மையான வார்த்தைகள் நண்பா.... நலம்தானே...

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...

      கருத்துக்கும் அக்கறையான விசாரிப்புக்கும் நட்புடனான நன்றிகள் !

      நலம்தான் தோழரே... வேலை பளு மற்றும் சில தனிப்பட்ட காரணங்களால் வலைதள பணியில் சுனக்கம்.

      நன்றி

      Delete
  6. Replies
    1. விஸ்வா,

      தொடர் வருகைக்கு நன்றி. அப்படியே உங்கள் வலைதளத்தையும் கவணியுங்களேன்... முக்கியமாய் வாண்டுமாமாவை பற்றி நீங்களோ அல்லது கார்த்திக் சோமலிங்கவோ எழுத வேண்டும்.

      நன்றி

      Delete
    2. ஆமாம்...
      நானும் படிக்க ஆவலாய் உள்ளேன்...

      Delete
  7. எல்லோரும் நல்லா படிக்கற குடும்பத்துல ஒருத்தனுக்கு படிப்பு ஏறலைன்னா பக்குவமா சொல்லனும்...

    உண்மை உண்மை

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அய்யா,

      அலட்சியப்படுத்தப்படுவதுதான் மிக மோசமான அவமரியாதை !

      கருத்துக்கு நன்றி

      Delete
  8. சாம்,

    பதிவைப் படித்தது முடித்தும் கூட உங்கள் அம்மாவின் வார்த்தைகள்தான் நிழலாடின. இது போல நாம் செய்யும் சில தகடு தகடு வேலைகளை பெண்கள் குறிப்பாக தாய்மார்கள் சுலபத்தில் கண்டுபிடிப்பதற்கேன்றே ஏதாவது தனிப்பட்ட மூளை நரம்பு எங்கோ இருக்கும் போல.

    ராஜா ரெகார்டிங் சென்டர் பின்னே இருந்த கதையைப் போலவே நிறைய கதைகள் ஒவ்வொரு ரெகார்டிங் கடைக்குப் பின்னேயும் உள்ளன. நயமான எழுத்து. பாராட்டுக்கள்.

    மத மாற்றம் பற்றிய அதிக எடை கூடிய பதிவுக்குப் பிறகு இதுபோல ஒரு லைட் வெயிட் தேவைதான். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் காரிகன் !

      என் தாமதம் உங்களின் பதிவுகளுக்கான பின்னூட்டங்களில் தொடங்கி என் வலைப்பூ வரைக்கும் முற்றிவிட்டது ! சில தனிப்பட்ட கடமைகள் காரணமாக வலைப்பூவில் அடிக்கடி சுனக்கம் ஏற்படுகிறது.

      " நாம் செய்யும் சில தகடு தகடு வேலைகளை பெண்கள் குறிப்பாக தாய்மார்கள் சுலபத்தில் கண்டுபிடிப்பதற்கேன்றே ஏதாவது தனிப்பட்ட மூளை நரம்பு எங்கோ இருக்கும் போல. "

      ஆமாம் காரிகன் ! முற்றிலும் உண்மை. தூரத்து மோட்டார் பைக் சப்தத்தை வைத்தே கணவன் குடித்துவிட்டு வருகிறான் என்பதை கணித்துவிடும் பெண்கள் கூட உண்டு. இது அவர்களின் ஜீன் சம்மந்தமான விசயம். இயற்கையாகவே ஜாக்கிரதை உணர்ச்சி அதிகம் உள்ளவர்கள் பெண்கள். ( ஆனால் இப்படி நினைத்து ஏமாந்து நாம் கிரெடிட் கார்டுகளை மனைவியரிடம் கொடுத்துவிட்டு விழிபிதுங்குவது வேறு விசயம் ! )

      ஆமாம் நணபரே... ஒரு இளம் தலைமுறையின் ஒட்டுமொத்த சுக துக்கங்கள் அனைத்தையும் உள்வாங்கிகொண்டு மறைந்தவை அந்த கடைகள் !

      " மத மாற்றம் பற்றிய அதிக எடை கூடிய பதிவுக்குப் பிறகு இதுபோல ஒரு லைட் வெயிட் தேவைதான் "

      என் மனவோட்டத்தை முற்றிலும் அறிந்தவராக நீங்கள் எழுதும் பின்னூட்டங்களினால் வியக்கிறேன் ! பாராட்டு வார்த்தைகளுக்கு நன்றி காரிகன்.

      தொடர்வோம் !

      Delete
  9. " எல்லோரும் நல்லா படிக்கற குடும்பத்துல ஒருத்தனுக்கு படிப்பு ஏறலைன்னா பக்குவமா சொல்லனும்... மத்த திறமையை வளர்த்துவிடனும்... அதில்லாம பிஞ்சியிலேயே ஒண்ணுக்கும் உதவாதுன்னு திட்டினா வெம்பிதான் போகும் ! "// மிக மிக உண்மையான வார்த்தைகள். மட்டுமல்ல முந்தைய பதிவில் முபாரக் பின்னால் சிகரெட்டை மறைத்து வைத்து கை சுட்டு அதை அழகாக நயம்பட உரைப்பார்களே.....மிகவும் ரசித்தோம்....

    பாரு... ஒத்தை பனைமரத்துக்கு கீழ... இந்தா... அங்க சகாயம்... அப்புறமா சூசை... ரமேஷ், பிச்சை, பாஸ்கர் அப்புறம் நானெல்லாம் இந்தப்பக்கமா உக்காந்திருக்கோம்... எல்லோர் கையிலயும் கள்ளு பானை ! இங்கிலீஸ்காரன் மாதிரி சகாயம் அண்ணன் நம்ம கள்ளு பானையை தூக்கி சியர்ஸ் சொல்றாரு...

    " ஓய் ! கள்ளுக்கே சியர்ஸ் சொன்ன ஒரே ஆளு நீ தான்யா ! "

    சட்டென கதையை விட்டுவிட்டு கலாட்டாவில் இறங்குவான். போதையில் சகாயம் அண்ணனும் " வா போ " தான் !// ஹஹஹஹ்ஹ் செம ஜமா தான் போல....

    அருமையான நடை.... திரைக்கதை போல....சீன் பை சீன்...கண்களில் விரிகின்றது...

    மீண்டும் முபாரக் வருவதை ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றோம்.....

    ReplyDelete
    Replies
    1. ஆசான் அவர்களே...

      முழுவதும் வாசித்து, ரசித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றிகள் பல.

      ஆமாம் ! செம ஜமா தான் ! மீன்டும் வராதா என நான் ஏங்கும் காலம் அது ஆசானே ! பெயர் மற்றும் அடையாளங்களை மாற்றியிருந்தாலும் முபாரக் பதிவின் வாழ்வியல் சம்பவங்கள் அனைத்தும் உண்மை.

      " ஓய் ! கள்ளுக்கே சியர்ஸ் சொன்ன ஒரே ஆளு நீ தான்யா ! "

      என்பது போன்ற இன்னும் எத்தனையோ ஜமாக்களுடன் பல ஜாமங்கள் கழிந்த கவலையற்ற வாலிப பருவம் அது !

      முபாரக் மீன்டும் வருவான்... இன்று அந்த முபாரக் எப்படி இருக்கிறான் என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் அல்லவா ?!

      மீன்டும் நன்ற்கள் !

      Delete
  10. அன்புள்ள அய்யா,

    முபாரக்கின் நிலைக்கான உளவியல் காரணங்களை அம்மா அன்று அட்சரம் பிசகாமல் சொன்னது புரிகிறது !

    " பழக்கம்ன்னா நல்லவன் கெட்டவன் நாலு பேரும்தான் இருப்பான்... ! நாம இப்படித்தான் இருக்கனும்ங்கற தெளிவு இருந்தா யாரும் யாரு கூடவும் பழகலாம் ! "


    பெளர்ணமி இரவில் கள் குடிக்க போன அனுபவத்தை " கதை திரைக்கதை வசனம் " தம்பி ராமைய்யாவை போல வர்ணித்து கூறுவான்...

    நல்ல வர்ணனை... முபாரக் மீன்டு (ம்) வரட்டும்...!

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அய்யா,

      சில வார்த்தைகளை மாற்றி போட்டிருந்தாலும் அம்மா உண்மையில் சொன்னவை !

      நான் ரசித்து வாழ்ந்து எழுத்தில் கொடுத்ததை ரசித்து பின்னூட்டமிட்டமைக்கு நன்றிகள் பல.

      முபாரக் மீன்டும் வருவான் !

      Delete
  11. முபாரக்கு ..நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் வரட்டும் . தடை சொல்வதற்கு யாருமில்லை.....நண்பரே....

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் தோழரே... அதே போல நீங்களும் என் தளத்திற்கு தடங்கலின்றி வர வேண்டுகிறேன் !

      நன்றி

      Delete
  12. டேய் பாம்புடான்னு கத்தறாரு சூசை... எங்களுக்கு நடுவுல இவ்ளோ நீள நல்லப்பாம்பு ! ஆளுக்கு ஒரு பக்கமா தெரிச்சி ஓடுறோம்... இதுல என்னா பியூட்டிங்கறியா ?... ஒருத்தன் கூட கள்ளுப்பானையை கீழ போடலடா ! ஓடி ஒதுங்கி குடிச்சிட்டோமுல்ல ? பாம்புக்கு படை நடுங்கும் யார் சொன்னா? பாம்பு ஜுஸ் எப்படி ஈருந்தது? முபராக்கின் வரவை எதிர்நோக்கி,,,,,,,,,

    ReplyDelete
    Replies
    1. ரசித்து படித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி சகோதரி....

      " பாம்பு ஜுஸ் எப்படி ஈருந்தது? "...

      குடித்துவிட்டு பாம்பாய் நெளிந்தவர்களின் அருகிலிருந்திருக்கிறேனே தவிர, குடித்ததில்லை சகோதரி !

      தொடர்ந்து வருகை தாருங்கள். நன்றி

      Delete

  13. ‘மீண்டும் முபாரக்’ பதிவை படிக்கு முன் ‘முபாரக்’ பதிவையும் படித்தேன். படிக்கும்போது முபாரக் நேரில் பார்ப்பதுபோல் இருக்கிறது தங்களது எழுத்தாற்றல். அபாரமான நடை. வாழ்த்துக்கள்! மீண்டும் வரும் முபாரக்கை வரவேற்க காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா,

      தங்களின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றிகள் பல. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

      Delete
  14. " கையை பச்சை தண்ணியில காட்டுங்க தம்பி... இல்லேன்னா கொப்புளிச்சிடும் ! டேய்... தம்பிக்கு ஏதாச்சும் பாக்கு வாங்கி கொடுடா ! " இந்த வரிகளை நான் திரும்பத் திரும்பப் படித்தேன். நாசுக்காகவும் அதே சமயம் நச்சென்று உணர்த்தும்படியும் இருந்தன இந்த வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா,

      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் பல. தொடர்ந்து வருகை தாருங்கள்.

      நன்றி

      Delete
  15. முந்தையது, இது என இரண்டு பகுதிகளையும் படித்தேன். எனக்கு இப்படிப்பட்ட அனுபவங்கள் இல்லை என்றாலும், படிப்பதற்குச் சுவையாகவே இருந்தது. அதுவும் முந்தைய பாகத்தை விட இது மிகவும் நன்றாக இருக்கிறது. காரணம், உங்கள் அம்மா! That was a Heroinic scene!

    ReplyDelete
    Replies
    1. அய்யா,

      இரண்டு பாகங்களையும் படித்து உடனடியாக பின்னூட்டமிட்டதற்கு நன்றிகள் பல

      Delete
  16. நிச்சயம் முபாரக்கின் அனுபவத்தை படிக்க தடங்கலின்றி வருவேன் நண்பரே!!

    ReplyDelete
    Replies
    1. முபாரக் கோபித்துக்கொள்ளக்கூடாதென்றால் எனது அனைத்து பதிவுகளுக்கும் நீங்கள் தடங்கலின்றி வர வேண்டும் தோழரே !

      Delete
  17. அனுபவங்களை சுவாரசியமாக சொல்லும் கலை எல்லோருக்கும் வருவதில்லை. அது உங்களுக்கு வாயத்திருக்கிறது. ஒவ்வொருவர் வாழிவிலும் முபாரக் போன்ற சுவாரசிய நபர்கள் வந்து போவதுண்டு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. என் எழுத்தில் சுவாரசியம் உண்டெனில் அதற்கு உங்களை போன்றவர்களின் ஆதரவே காரணம் ! நன்றி

      Delete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. சூப்பர் அம்மா வாழ்வியலை அதன் போக்கிலேயே புரிந்து கொண்டவர்

    ReplyDelete
    Replies
    1. ஆம் சகோதரி.... அவர் வாழ்வியல் புரிந்து என் போக்கில் விட்டதினால்தான் இன்று ஏதோ என்னால் இயன்றதை கிறுக்கி கொண்டிருக்கிறேன் !

      நன்றி

      Delete
  20. நண்பர் சாமானியன் அவர்களது மேலான பார்வைக்கு,
    எனது " அறிவோமே ஆனந்த ரங்கப் பிள்ளையை" பதிவுக்காக,
    தங்களது பின்னூட்டத்திற்கான பதிலை இப்போது இந்த வேளையில் இங்கே
    அறிய தருகிறே
    அருமை நண்பர் சாமானியன் அவர்களுக்கு;
    வணக்கம்!ன்

    எனது இந்த பதிவை நோக்கி தங்களது மேலான பார்வையை செலுத்தியமைக்கு முதலில் எனது நன்றி!
    ஆனந்த ரங்கப் பிள்ளை பற்றிய தெரிதலுக்கு ஆணீ வேர் புதுவை மண்ணின் மைந்தர் பிர்பஞ்சன் அவர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை. இருப்பினும் நான் சொல்லிய நூல்கள் யாவும் ரங்கரின் கீர்த்தியை மட்டுமே சொல்லிய நுல்கள்.
    நான் மதித்து போற்றும் எழுத்தாளார்
    பிரபஞ்சன் அவர்களிடம் எனக்கு நேரடி பரிச்சயம்
    இருந்ததுண்டு என்பதை இந்த வேளையில் தங்களூக்கு அறிய தருகிறேன்
    1992/1993 ஆம் அண்டு என எண்ணுகிறேன்.
    அப்பொழுது,
    புதுவை அருங்காட்சியகத்தினுள் அமையப் பெற்ற (THE HISTORICAL SOCIETY OF PONDICHEERY) வரலாற்றுச் சங்கத்தில் பல ஆவணங்கள் நூலகத்தில் இருக்கும். அதில் பிரசித்திப் பெற்ற ஆனந்த ரங்கப் பிள்ளை டைரிகளும் அதில் அடக்கம். அங்கு அப்போது வரலாற்றுச் சங்கத்தில் நான் (புதுவை வேலு) பணி செய்தபோது பிரபஞ்சன் அவர்கள் ஆய்வுக்காக அப்போது அங்கு வந்து « ஆனந்த ரங்கப் பிள்ளை பற்றிய இந்த டைரியை கேட்டபோது அதை அவரிடம் கையொப்பம் வாங்கிக் கொண்டு கொடுத்தவன் அடியேன் என்பதை மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொள்கிறேன்.
    அவரிடம் எனக்கு பரிச்சயம் உண்டு ! அவரை எப்படி நான் மறவேன். ?
    அவரது வானம் வசப்படும் நூல் இதன் பிறகே வந்து இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.
    இதே போல் பல ஆராய்ச்சியாளர்களுக்கும் சுழற்சி முறையில் ஆனந்த ரங்கப் பிள்ளை டைரியை வழங்கி உள்ளேன். நண்பர் சத்தியா அவர்கள் கூறிய ஆராய்ச்சியாளர்
    ஜே.ஸ்டீபன் ஸ்டீபன் (IFP - EFEO)
    போன்றவர்களூம் இந்த நூலை வாங்கி சென்றது இன்றும் எனது நினைவில் நிற்கின்றது.
    புதுவை மொழியில் பண்பாட்டுத்துறை இந்த
    பதிவுகளை முறைமை படுத்தியது இதன் பிறகு பல ஆண்டுகள் சென்ற பிறகுதான்.
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. விரிவான விளக்கத்துக்கு நன்றி வேலு அவர்களே.

      Delete
  21. .

    முபாரக்கின் குணாதிசயங்களின் அடிப்படையில் பார்த்தால்,
    பற்பல விஷய ஞானம் கொண்ட ஜனரஞ்சகன் எனலாம்.

    சுவாரஸ்யமாய் இருந்தது.

    .

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாட்களுக்கு பின்னர் மீன்டும் வந்திருக்கிறீர்கள் நிஜாம் அவர்களே !...

      ஆமாம், அந்த ஜனரஞ்சகனின் கதை இன்னும் தொடரும்.

      தொடர்ந்து வாருங்கள். நன்றி

      Delete
  22. சாம் சார்

    சுவாரசியமான அனுபவம். இளம் பருவத்தில் 'டாப்' அடித்த இடங்கள் எனக்கும் ஞாபகத்திற்கு வந்தது. முபாரக் போல interesting நண்பர்கள் எல்லோருக்கும் இருப்பார்கள். ஆனால் உங்கள் அம்மா அதைவிட interesting !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் இதமான பின்னூட்டத்துக்கும் நன்றி நண்பரே !

      எனது இந்த பதிவு உங்களின் பால்ய நினைவுகளை மீன்டும் மீட்டியதில் மகிழ்ச்சி.

      தொடர்ந்து வாருங்கள்.

      Delete