Monday, December 14, 2015

சென்னை நலமா ?

" நான் நலம் என்று சொல்வதே தற்போதைய சூழலில் அபத்தமாகத் தெரிகிறது... "

எனது நல விசாரிப்புக்கு நண்பர் காரிகனின் பதில் இது !

இதனைப் படித்ததும் எனக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த விமான விபத்து ஒன்றின் போது பத்திரிக்கைகளில் பார்த்த, அந்த விமானத்தின் சிதறிய பாகங்களுக்கிடையே பாதிக் கருகிய திருமணப் பத்திரிக்கையும் ஒரு கரடி பொம்மையும் கிடக்கும் புகைப்படம் ஒன்றும் , சுனாமி பேரிடரின் போது கடற்கரையில் ஓடிக்கொண்டிருக்கும் குழந்தை ஒரு பெரிய கடல் அலைக்குப் பிறகு மாயமாய் மறையும் காட்சியும் நினைவுக்கு வந்தன ...

விபத்தையும் அழிவையும் உணர்த்தக் கூக்குரல்களையும் சிதறிய உடல்களையும்தான் காட்சி படுத்த வேண்டும் என்பதில்லை. கருகிய திருமணப் பத்திரிக்கையும், தனியே கிடக்கும் ஒரு கரடி பொம்மையும் கூடப் பார்ப்பவருக்கு முழுப் பாதிப்பையும் உணர்த்தி அவரது ஆன்மாவை உலுக்கிவிட முடியும்.

காரிகனின் பதிலில் சென்னை மக்களின் உணர்வு முழுவதும் அடங்கி உள்ளதாகத் தோன்றுகிறது.

தலைநகர் என்பதால் சென்னையைப் பிரதானப்படுத்திக் குறிப்பிட்டாலும் தமிழ்நாடு, புதுவை மாநிலம் என இந்த ஊழி மழை ஏற்படுத்திய பாதிப்பும் இழப்பும் வரலாறு காணாதது. உலகின் ஆகப் பெரும் தேசங்கள் ஒன்றின் நான்காவது முக்கிய நகரம் தனித்தீவாய் துண்டிக்கப்பட்டு ஸ்தம்பித்து நிற்பதைப் பேசாத நாடுகளில்லை !

புயலும், பெருமழையும், பூகம்பமும் இயற்கையின் சீற்றங்கள். மனிதனின் இத்தனை விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், வளர்ச்சிகளுக்குப் பிறகும் அவை ஏற்படுத்த போகும் முதல்கட்ட பாதிப்பை துல்லியமாக மதிப்பிட அவனிடம் எந்த அளவுகோலும் கிடையாது என்பது நிதர்சனமான உண்மைதான் !

2011ம் ஆண்டு ஜப்பானில் நிகழ்ந்த சுனாமி பேரிடரில் பாதிப்புக்குள்ளான புக்கூஷிமா அணு உலையின் கதிரியக்க விபத்தை இன்றுவரை கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை ! அதே சுனாமியின்போது கடல் அலையினால் தூக்கி எறியப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று இரண்டு அடுக்குமாடி கட்டிடங்களுக்கு இடையே தொங்கி கொண்டிருந்த காட்சியைக் கண்டவர்களுக்கு இயற்கையின் முன்னால் மனிதனும் அவனது கண்டுபிடிப்புகளும் எத்தனை பலவீனம் என்பது புரியும் !

ஆனால் இதையெல்லாம் உதாரணமாகக் காட்டி சென்னையின் அவலத்தை நியாயப்படுத்தலாமா ?...

சென்னை ஒரு கடற்கரை நகரம். நகருக்கு நடுவே கூவம் நதி அமைந்த வசிப்பிடம். இயற்கையின் நியதிப்படி இதுபோன்ற நகரங்களுக்கு நீரினால் வரும் ஆபத்து கடல் ஏறுவதால் மட்டுமே நிகழ முடியும். மாற்றாய் மழைநீர் வேகமாய் வெளியேறி கடலில் கலக்க ஏதுவாக அமைந்த பகுதி !

சென்னை அமிழ்ந்திருப்பது வெள்ளத்தில் அல்ல... மழை நீர்த் தேக்கத்தில் ! ஆமாம் ! இத்தனை இழப்புக்கும் காரணம் மழைநீர் வேகமாக ஓடி வடிவதற்கான வழிகள் அடைக்கப்பட்டதும், புதிய கழிவு பாதைகள் தொலைநோக்கு பார்வையுடன் அமைக்கப்படாததும்தான் !

சென்னை போன்ற பழம்நகரத்தில் அமைந்த வடிகால்கள் எனப்படும் வாய்க்கால்கள் பல நூறுஆண்டுகள் படிப்படியாய் அமைந்தவை. ஒவ்வொரு மழையின் போதும் நீர்ப்பெருக்கு பூமியை ஊடறுத்து நதி மற்றும் கடல் நோக்கி ஓடி இயற்கையாய் அமைந்த வடிகால்கள் ஒருவகை என்றால் சென்னையின் ஆதி மனிதர்கள் அவ்வப்போது தோண்டி ஏற்படுத்திவைத்த வடிகால்கள் மறுவகை.

எத்தனையோ நூறு ஆண்டுகள், காலப்போக்கில் அமைந்த இந்த வடிகால்களையும் வாய்க்கால்களையும் முப்பதே ஆண்டுகளில் திட்டமிட்டு தூர்த்து, மேடு பள்ளம் பார்க்காமல் வீட்டுமனைகளாய் விற்பனை செய்ததின் விளைவை இன்று அனுபவிக்கின்றோம் ! மக்களின் அத்யாவசிய அடிப்படை தேவைகள், பாதுகாப்பு, பேரிடர் நிவாரணம் போன்றவற்றில் எந்த அக்கறையும் இல்லாத, கையாலாகாத, சுயநல அரசியல்வாதிகளை மாற்றி மாற்றி ஆளவிட்டதின் பலன் இது !

மழையினால் மக்கள் படும் இன்னல்களையும், நேர்ந்த இழப்புகளையும் மாற்றாந்தாய் கண்ணோட்டத்தில் பார்க்கும் மத்திய அரசு ! அயல்நாடுகளில் நிகழும் இயற்கை பேரிடர்களுக்கு வல்லரசு கனவுடன் மில்லியன் டாலர் கணக்கில் கொடுக்கும் இந்திய அரசாங்கம் தன் சொந்த நாட்டு அவலத்துக்கு என்ன செய்யத் திட்டம் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை ! தென்னாட்டில் எல்லாம் சுகம் என்பதாய் செய்தி வாசிக்கும் வடநாட்டு ஊடகங்கள் !

மாநில அரசு முற்றிலுமே மழை நீரில் மறைந்துவிட்டதோ எனப் பயப்படும்படியான அரசு செயல்பாடுகள் ! யாருமே வரவில்லை என மக்கள் அலறும் எதிர்க்கட்சிகளின் தொலைக்காட்சி தகவல்கள் ! மக்கள் வரிப்பணத்தில் கொடுக்கும் ஏனோதானோ நிவாரணப் பொருட்களில் கூட முதல்வர் படம் ஒட்டி அரசியல் ஆதாயம் தேடும் ஆளுங்கட்சி செய்திகள் ! முப்பது ரூபாய் பாலை ஆயிரம் ரூபாய்க்கு விற்கும் வியாபாரிகள் ! அனைத்தையும் இழந்து தவிப்பவனின் அரைஞாண் கயிற்றையும் உருவிக்கொண்டு ஓடும் கொள்ளையர்கள் !

இத்தனை அவலங்களையும்தாண்டி தெரியும் மனித நேயம் ! வழக்கம் போலவே சக மனிதனின் துயர்துடைத்து தோள் கொடுக்கும் சாமானிய மக்கள் ! தங்கள் ஜாதி மதம் மறந்து இரவு பகல் பாராமல், உயிரையும் பணையம் வைத்து நிவாரணப் பணிகளிலும், துயர்துடைப்புகளிலும் தொடர்ந்து ஈடுபடும் தன்னார்வலர்கள் !

இந்தத் தேசத்தின் முரண்கள் அனைத்தும் மனதை உறுத்துகின்றன !

மழையினால் பாதித்த மக்களின் கண்ணீர், சுனாமி அலையாய் எழுந்து, அறுபது ஆண்டுகளாக மக்களாட்சி என்ற பெயரில் மானங்கெட்ட பிழைப்பு பிழைக்கும் அரசியல்வாதிகளையும், அவர்களின் விரல் ஆட்டலுக்கு வளைந்தே அரசு இயந்திரத்தை அவலமாக்கிய அதிகாரிகளையும் அடித்துச் சுருட்டி வீசி விடாதா என மனம் ஏங்குகிறது !

சுனாமி பாதிப்புக்கு பிறகு எனது பூர்வீகமான காரைக்காலுக்குச் சென்றிருந்தேன்... அந்தப் பெரும் துயரம் நிகழ்ந்து ஒரு வருடம் கூட முடிந்திருக்கவில்லை...

புதிதாய் முளைத்திருந்த ஆடியோ ரெக்கார்டிங் செண்டரின் பெயர் " சுனாமி ரெக்கார்டிங் செண்டர் " என்றிருந்தது !

மறதிதான் நம் தேசிய குணமாயிற்றே !!!

சென்னை மிக விரைவில் நலம் பெறும்.





பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

Saturday, November 7, 2015

க்ளிஷே !

மீபத்தில் இரண்டு பாகிஸ்த்தானியர்களைச் சந்திக்க நேர்ந்தது...

அறிமுகத்தின் போது ஒருவர் தன் பெயர் வாசிம் எனக் கூறினார்.

" வாசிம் அக்ரம் போலவா ? " என்றேன் !

அடுத்தவரின் பெயர் முஷாரப்.

என் வாய் சும்மா இருக்கவில்லை,

" பர்வேஸ் முஷாரப் போல் ! " எனத் திருவாய் மலர்ந்தேன் !

சட்டென என்னைப் பார்த்த வாசிம், ஜாவித்திடம் திரும்பி உருது மொழியில் பேசி சிரித்தார் ...

ரு மொழியின் சம்பாஷனையைப் புரிந்துக்கொள்ள அந்த மொழியை அறிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஒருவர் பேசும் த்வணி, குரலின் ஏற்ற இறக்கம் மற்றும் முக, உடல் பாவனைகளைக் கொண்டே அவர் குறிப்பிடுவது பாராட்டா, கேலியா அல்லது குட்டலா என்பதைப் புரிந்துகொண்டுவிடலாம் !

இதற்கு மிகச் சரியான " பன்னாட்டு வர்த்தக உதாரணமாக " உலகெங்கும் பரவியிருக்கும் அமெரிக்க மக்டொனால்ட் ரெஸ்ட்டாரெண்ட் ஊழியர்களின் அங்க அசைவுகளைக் குறிப்பிடலாம். கைகளை ஆட்டி, கண்களை உருட்டி பேசியே நமக்குத் தேவை டீயா, கோக்கா அல்லது பிரெஞ்சு பிரையா, சாண்ட்விச்சா எனத் தெரிந்துக்கொள்வார்கள் ! உலகெங்கும் ஒரே தரம், ஒரே உணவு என்பதையும் தாண்டி இந்த நிறுவனத்தின் வெற்றிக்கு ஒரே உடல் மொழியும் காரணம் !

சரி, இந்தப் பதிவின் நோக்கம் பன்னாட்டு நிறுவனங்களின் வெற்றி பற்றிய ஜல்லியடி கிடையாது ! பாகிஸ்த்தானிய நண்பர்களிடம் செல்வோம்...

வாசிம் சிரிப்பதை கண்டதும்தான் நான் பேசிய அபத்தம் புரிந்தது ! நான் வெறுக்கும் க்ளிஷேவிடம் நானே சிக்கிக்கொண்ட அபத்தம் !

" இந்த இந்தியர்களுக்கு வாசிம் அக்ரமையும், பர்வேஸ் முஷாரப்பையும் விட்டால் பாகிஸ்த்தான் பற்றி வேறொன்றும் தெரியாது ! " என ஆவர் கேலி செய்தது எனக்கு நன்றாகவே புரிந்தது !


க்ளிஷே என்ற பிரெஞ்சு மூல வார்த்தையே அங்கிலத்திலும் உபயோகத்தில் உள்ளது.ஸ்டீரியோடைப் என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் வார்த்தைக்கு,

" ஒரு தனிமனிதரை பற்றியோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றியோ மற்றொரு மனிதர் அல்லது சமூகம் கொண்டிருக்கும், முன்கூட்டியே தீர்மானித்த, மெரும்பாலும் தவறான அல்லது மிகைப்படுத்தப்பட்ட கண்ணோட்டம் அல்லது தீர்மானம் ! "

என அர்த்தம் கொடுக்கலாம்.

நாம் ஒரு சாராரை பற்றி அறிந்த ஒருசில தகவல்களை அவர்களின் ஒட்டுமொத்த குணமாகவோ அல்லது அடையாளமாகவோ பாவிப்பதும் க்ளிஷே வகையைச் சாரும் !


ம்பதாவது இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது வைரமுத்து ஆனந்தவிகடனில் எழுதிய ஒரு கவிதையில்,

" ஒரே ஒரு தாஜ்மகால்... ஒரு ஐஸ்வர்யா ராய் ! "

எனக் குறிப்பிட்டிருப்பார்.

தாவணி, சுடிதார் மற்றும் அம்மாக்கள் தயாரித்துக் கொடுக்கும் வாசனை பொடியுடன் தேங்கியிருந்த (!) இந்திய இளம்பெண்களிடம் கடை விரிக்க விரும்பிய லொரியால் போன்ற பன்னாட்டு அழகு சாதன நிறுவனங்கள் இந்திய சந்தைக்காக விரும்பி தேர்ந்தெடுத்த முகம் ஐஸ்வர்யா ராய் ! அவரின் உலக அழகி தேர்வு, நூறுகோடியை தாண்டிய நிலையிலும் ஒரு ஒலிம்பிக் தங்க பதக்கம் வாங்கவே தடுமாறும் தேசத்தின் எழுச்சியாகி போனது !

சரி, இதில் க்ளிஷே எங்கே வருகிறது ?

ஐஸ்வர்யா ராய் உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு, பிரான்ஸின் கான்ஸ் நகரில் நடக்கும் புகழ்பெற்ற உலகத் திரைப்பட விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். பிரெஞ்சு நாளிதழ்கள் தொடங்கி அனைத்து பத்திரிக்கைகளிலும் நம் உலக அழகி சிரித்தார். அந்தக் காலகட்டத்தில் டயானாவுக்கு அடுத்தப்படியான புகழ் வெளிச்சம் ஐஸ்வர்யாவுக்கு ஐரோப்பாவில் ஒளிர்ந்தது என்றால் அது மிகையாகாது !

காலம் மிக வேகமாக ஓடியது ! நம்மூர் பாடலாசியர்கள் " பிப்டி கேஜி தாஜ்மஹால் " தொடங்கி " குளித்த நீரை தீர்த்தமாகக் குடிப்பது " வரை எழுதி தீர்த்தார்கள் ! ஐஸ்வர்யா ராய் திருமணம் முடிந்து குழந்தையும் பெற்று ஆண்ட்டியாகிவிட்டார் ! இதே காலகட்டத்தில் இந்திய சினிமாவிலும் நிறைய மாற்றங்கள் நடந்து, எங்களாலும் தரமான படங்கள் தர இயலும் எனப் பேசிக்கொள்ளும்படியான படங்களும் வந்துள்ளன. அவற்றில் சில கான்ஸ் பட விழாவிலும் திரையிடப்பட்டுள்ளன...

ஆனாலும் இன்றுவரை கான்ஸ் நகரின் இந்திய சிறப்பு விருந்தாளி நம்ம உலக அழகிதான் ! அன்று தலைப்புச் செய்தியாக இருந்த ஐஸ்வர்யாவின் வருகை இப்போதெல்லாம் கடைசிப் பக்கத்தில் ஒரு வரிச் செய்தியாகச் சுருங்கிவிட்டது !

இதுதான் க்ளிஷே !



வ்வொரு நாட்டினர் மற்றும் அவர்களது கலாச்சரம் பற்றிய க்ளிஷே கண்ணோட்டம் உலகெங்கும் பரவியுள்ளது.

மேலை நாட்டினரின் க்ளிஷே கண்ணோட்டத்துக்குச் சரியான தீனி இந்திய தேசம் ! இன்றைய அதிவிரைவு தகவல் பரிமாற்ற யுகத்திலும் இந்தியா என்றாலே ருட்யார்ட் கிப்ளிங் எழுதிய ஜங்கிள் புக் காலத்துத் தேசத்தைக் கற்பனை செய்யும் மேலைநாட்டினர் இன்றும் உள்ளனர் !

யானையில் ஏறி சந்தைக்குச் செல்லும் மனிதர்கள், மகுடி ஊதி கயிற்றைப் பாம்பாகப் படமெடுக்கசெய்யும் பக்கீர், பசுமாட்டைக் காணும் போதெல்லாம் விழுந்து கும்பிடும் மனிதர்கள் , என்பன தொடங்கி, இந்துக்களும் முஸ்லீம்களும் குழு குழுவாகப் பிரிந்து சதா சர்வகாலமும் சண்டையிட்டுக்கொண்டிருப்பார்கள், தலைநகரின் பிரதான வீதிகளில் கூடஆடுகள், எருமைகள் தொடங்கிப் பன்றி கூட்டங்கள் வரை குறுக்கே புகுந்து போக்குவரத்துத் தடைபடும், இமயம் தொடங்கிக் குமரிவரை இந்தியாவின் ஒரே மொழி ஹிந்தி என்பன வரை இந்தியா பற்றிய சராசரி மேலைநாட்டு மனிதனின் கற்பனை க்ளிஷேக்கள் ஏராளம் !

மேலைநாட்டினருக்கு தெரிந்த ஒரே இந்திய சினிமா உலகம் பாலிவுட் ஒன்றுதான் ! அதற்கு ஈடான கோலிவுட், டோலிவுட் என ஒரு டஜன் மொழிகள் சார்ந்த சினிமாக்கள் இருப்பதும் அங்கிருந்தும் அவ்வப்போது தரமான படங்கள் வருவதெல்லாம் தெரியாது !

" பாலிவுட்டின் சூப்பர் சாதனை படமான பாகுபலியில் ஏன் ஷாருக்கான் நடிக்கவில்லை ?! " எனக்கேட்டார் ஒரு பிரெஞ்சு அன்பர் !

ராஜ்கபூருக்கு பிறகு மேலைநாட்டினர் முதல் ஆப்ரிக்கத் தேசம் வரை தெரிந்த ஒரே இந்திய திரைசட்சத்திரம் ஷாருக்கான் தான் ! அவர்களைப் பொறுத்தவரை ஆல் இந்தியா சூப்பர் ஸ்டார், ஆஸ்கார் நாயகன் எல்லாமே ஷாருக் தான் !

மேலைநாட்டவரை விட்டுத்தள்ளுங்கள் ! நமது நாட்டிலேயே வடக்கு பற்றித் தெற்கும் தெற்கு பற்றி வடக்கும் கொண்டிருக்கும் க்ளிஷேக்கள் எத்தனை ?...

தென்னிந்தியா என்றாலே மதராசி, இட்லி, தோசா ( தோசை இல்லை ! ), சாம்பார், சந்தனம், தங்கநகை, லுங்கி, ரஜினிகாந்த் ! இந்த க்ளிஷேயின் முழுநீள திரைப்படமாய் வந்த சென்னை எக்ஸ்பிரஸை நாமும் சேர்ந்துதானே ஹிட்டாக்கினோம் ?!

மதராசி என்பதற்கு வேண்டுமானால் ஒரு வரலாற்று நியாயத்தை எடுத்து விடலாம்... மொழிவாரி மாநிலங்கள் பிரிவதற்கு முன்னால் ஒன்றிணைந்த சென்னை மாகாணமாகத் தென்னிந்தியா இருந்ததால் ஒரேடியாக மதராசி ! ஆனால் வடநாட்டவர்கள் அதற்குப் பிறகு பொது அறிவு " அப்டேட் " செய்ய மறந்துவிட்டார்கள் ! பாவம் ... இட்லி தோசா பவன்களெல்லாம் பீட்சா , பர்கர் சென்ட்டராக மாறியதும் அவர்களுக்குத் தெரியாது ! சில சினிமா டான்ஸ் மாஸ்டர்கள் ஆரம்பித்துவைத்த லுங்கி டான்ஸ் மிகக் குறைந்த காலகட்டத்தில் பரதநாட்டியத்தையும் தாண்டி தமிழ்நாட்டின் கலை அடையாளமாக மாறிவிட்டது தமிழனுக்குப் பெருமை தானே ?!

தங்க நகை மோகம் என்ற உண்மை மட்டும் எப்படி இந்த க்ளிஷேவில் சேர்ந்தது என்று புரியவில்லை !


நம்மவர்களும் அவர்களுக்குச் சளைத்தவர்களா என்ன ?!...

வட இந்தியா என்றாலே இந்தி மட்டும்தான் என்பது தொடங்கி, வெள்ளைத்தோல் வட இந்தியர்களெல்லாம் சேட்டுக்கள், ராஜஸ்த்தான் எங்கும் ஒட்டகங்கள் உலாவும், பஞ்சாபிகள் " பல்லே... பல்லே " என ஆடிக்கொண்டே இருப்பார்கள் என எத்தனை க்ளிஷே கண்ணொட்டம் ?!

மது சினிமா உலகம் இந்த க்ளிஷே வளர்ச்சிக்காக ஆற்றும் பங்கினை பக்கம் பக்கமாக எழுதலாம் !

சினிமா கோயில் குருக்கள், " சொல்லுங்கோ ! என்ன நக்ஷத்திரம் ?... " என்ற ஒரே வரியைதான் பல்லாண்டுகாலமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்...

எனது பள்ளி நண்பன் ஒருவன் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஒன்றின் தலமை குருக்கள். " வாடா மாப்ள ! " எனச் சாதாரணமாகத்தான் பேசுவான் !

சினிமா இஸ்லாமியர்கள் என்றால் நீண்ட தாடியும் கணுக்காலுக்கு மேலே உயர்த்திக் கட்டிய லுங்கியுமாக, முட்டி தொடும் அங்கியுடன் சதா பிரியாணியைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள் அல்லது அடிக்கொருத்தரம் " அரே அல்லா ! " என்பார்கள்...

சகஜ வாழ்க்கையில் பலரின் பெயரை வைத்துதான் மதத்தை ஊகிக்க முடியும். வாரத்தில் பல நாட்கள் சாம்பாரை விரும்பும் நிறைய இஸ்லாமியர்களை எனக்குத் தெரியும் !

சினிமா பாதிரியார் எந்நேரமும் பைபிளை நெஞ்சில் அணைத்தப்படி அடிக்கடி காற்றில் சிலுவை வரைவார்...

எல் கே ஜி தொடங்கி மேல்நிலை கல்விவரை நான் பயின்றது அனைத்துமே கிறிஸ்த்துவக் கல்வி மையங்களில். நான் பயின்ற பள்ளியின் முதல்வரான பாதிரியார் புல்லட்டில் அதிவேகமாகப் பறப்பார். பூஜை நேரம் தவிர மற்ற சமயங்களில் எங்கள் அரட்டையில் கூடக் கலந்துக்கொள்வார் !

" அரே... நம்பிள்கிட்டே ஏமாத்தறான்... " என்றபடி காமெடியனை துரத்தும் தமிழ் சினிமா சேட்டு ஒன்று வட்டிக்கடை வைத்திருப்பார் அல்லது நகைக்கடை வைத்து கள்ள நகையை வாங்குவார் !

என்னுடன் படித்த ஒரு சேட்டுபையனின் அப்பா ஏதோ அலுவலகத்தில் குமாஸ்த்தாவாகப் பணிபுரிந்தார். சுத்தமான தமிழில், எங்களைவிடவும் சரளமாகக் கெட்டவார்த்தைகள் பேசுவான் அந்தப் பையன் !

விதிவிலக்காக அரசியல்வாதிகள் பற்றிய சினிமா க்ளிஷே மட்டும் உண்மையுடன் ஒத்துப்போவது ஆச்சரியம் !

கார்ட்டூன் கோடுகளின் கற்பனையையும்தாண்டி விதம் விதமாக வளைந்து நெளிந்து தலைவியின் காலில் விழுவது, தலைவருக்கு வணக்கம் வைப்பது தொடங்கி ப்ளக்ஸ் போர்டு பிரதாபங்களாகட்டும் அல்லது விஞ்ஞான ரீதியிலான ஊழல்களாகட்டும், ஸ்டீரியோடைப் தொடங்கிக் கார்ட்டுன்கள்வரை எதுவுமே நம் அரசியல்வாதிகளின் உண்மையான அலும்புகளை நெருங்க முடியாது !

இன்னும் அழுக்கான உடையணிந்து ஊருக்கு வெளியே வாழும் பண்ணையாட்கள், வில்லன் வீட்டுக்கு லஞ்சம் வாங்க சீருடையுடன் வரும் போலீஸ், கறுப்பான பிக்பாக்கெட், " ஊய் " என மார்க்கமாக உறுமும் தொண்டரடிப்பொடி , அவலட்சணத்தின் அடையாளம் கறுப்பு, சில சமயம் சிரிக்க வைத்து பல சமயம் முகம் சுழிக்கச் செய்யும் " முருங்கைக்காய் சமாச்சரங்கள் " எனச் சினிமா க்ளிஷேக்களின் பட்டியல் மிக மிக நீளம் !

திரிஷ்யம் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது,

" இந்த மோகன்லால் பெரிய ஆளுப்பா ! " என்றார் நண்பர்...

" ஆமாம்... நம்ம கமல் மாதிரி அந்தக்கரை ஆஸ்கார் நாயகனாச்சே ! " என்றேன்.

" அட, நான் நடிப்பை சொல்லலீங்க... லால்ன்னா வடநாட்டுக்காரந்தானே ?... அங்கேருந்து வந்து கேரளாவுல சூப்பர் ஸ்டார இருக்காரே ! " என்றார் !

ந்த க்ளிஷே விசயத்தில் ஹாலிவுட்காரர்களும் நம்மவர்களுக்குச் சற்றும் சளைத்தவர்கள் கிடையாது !

படங்களில் பாரீஸ் நகர் என்றால் பின்புலத்தில் ஈபிள் டவர் கட்டாயம் ! பாரீஸ்வாசிகள் ஒரு கையில் குடையும் மற்றொரு கையில் " பக்கேத் " எனப்படும் நீண்ட பன்ரொட்டியுடனும் ஓவர் கோட்டுடன் நடந்து கொண்டிருப்பார்கள் !... பிரெஞ்சுக்காரர்கள் ஒயினையும் சீஸ் எனப்படும் பாலாடைக்கட்டிகளையும் விரும்பி சாப்பிடுபவர்கள் என்பதால், அவர்களைக் குறிப்பட " புளித்த ஒயினும் நாறும் பாலடை கட்டியும் ! " என்ற சொலவடை மேலைநாடுகளில் பிரபலம் !இங்கிலாந்தின் லண்டன் என்றால் டவுனிங் தெருவின் பிரதமர் இல்லத்தின் வாயிலை காவல் காக்கும் நீண்ட தொப்பிக் காவலர் ஒரு பிரேமிலாவது இடம் பெற வேண்டும் ! வெள்ளை மாளிகையையும், அமெரிக்க தேசிய கொடி பின்புலத்தில் உரையாற்றும் ஜனாதிபதியையும் காட்டாவிட்டால் அமெரிக்கக் காட்சி நிறைவு பெறாது !

ரு சமூகத்தின் குணம், நடை, உடை, பாவனைகள் பற்றிய ஸ்டீரியோடைப் மதிப்பீடுகளை ஒரு புன்முறுவலுடனோ அல்லது ஒரு முகசுளிப்புடனோ புறந்தள்ளிவிடலாம் ஆனால் ஒரு தனிமனிதன் அல்லது ஒரு குழு இழைக்கும் குற்றத்தினால் அவர்கள் சார்ந்த சமூகத்தின் மீது படியும் ஸ்டீரியோடைப் அபிப்ராயம் அந்தச் சமூகத்துக்கு ஏற்படுத்தும் இன்னல்கள் மிகக் கொடுமையானது.

இந்திராகாந்தி கொல்லப்பட்ட போது சீக்கிய சமூகத்தின் மீது படிந்த வெறுப்பு, ராஜிவ் படுகொலையினால் ஒட்டுமொத்த ஈழத்தமிழ் சமூகத்தின் மீது படிந்த சந்தேகக் கண்ணோட்டம், அடிப்படைவாத குழுக்களின் தீவிரவாதத்தினால் இஸ்லாமியர்கள் பற்றிய அபிப்ராயம் என நிறையச் சொல்லலாம் !

" ஸ்டீரியோடைப் " என்ற சொல்லுக்கு ஏற்ப அதீதமாகப் பெரிதாக்கி சொல்லப்படும் இந்த க்ளிஷேக்கள் சில சமயங்களில் உண்மைக்கு மிக நெருக்காமாகிவிடுவதும் உண்டு...

இந்திய தேர்தல், கும்பமேளா போன்ற நிகழ்வுகள், இயற்கை பேரிடர்கள் எனப் பிரான்ஸ் தலைப்புச் செய்தியில் இந்தியா இடம் பிடிக்கவெனச் சில நிகழ்வுகள் உண்டு ! இவற்றுடன் இரு நாடுகள் சமந்தப்பட்ட ராஜாங்க விஜயம், பெரிய அளவிலான ஆயுத ஒப்பத்தம் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம் !

சமீபகாலமாக மேல்சொன்னவைகளுடன் மற்றொரு " நிகழ்வுக்காகவும் " இந்தியா அடிக்கடி பேசப்படுகிறது...

அந்த நிகழ்வு " பாலியல் வன்முறை ! "

மேலைநாட்டினர் அனைத்தையும் ஜோக்காக்கிவிடுவார்கள். அவர்களின் கேலிச்சித்திரங்களுக்கு எல்லையே கிடையாது. புனிதமாக மதிக்கும் மதம் சார்ந்த நம்பிக்கைகள்கூட இந்தக் கேலியிலிருந்து மீள முடியாது ! எதையும் கேலி, கேள்விக்கு உட்படுத்தும் குணம் அவர்களுடையது !

அண்மையில் நான் கேட்ட ஜோக் ஒன்று...

" விடுமுறையைக் கழிக்க வேண்டிய நாட்டினை ஐரோப்பிய பெண்கள் மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்... ஆப்கானிஸ்த்தான், பாகிஸ்த்தான் தொடங்கி ஆப்ரிக்க நாடுகள் வரை அடிப்படைவாதிகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்... அவர்களிடம் சிக்கினால் பனையக்கைதிகளாகி தலையை இழக்க நேரிடும் ! அமெரிக்கா சென்றால் எந்தக் கல்லூரி மாணவனாவது மெஷின் கன் மூலம் சல்லடையாக்கிவிடுவான்.... பேசாமல் இந்தியா செல்லலாம்... பாலியல் வன்கொடுமைக்கு ஆளானாலும் உயிராவது மிஞ்சும் ! "

மிகக் கொடூரமான க்ளிஷே !... ஆனால் இந்தியாவில் அடிக்கடி நிகழும் அந்த அவலத்தை நினைக்கும்போது தலைகுணிவு மட்டுமே மிஞ்சுகிறது !



 ( ந்தியா பற்றிய ஒரு முக்கியமான க்ளிஷேயை இந்த பதிவில் குறிப்பிடவில்லை ! அதனை சரியாக சொல்லும் அன்பர்களுக்கு அந்த க்ளிஷே பற்றிய எனது அடுத்த பதிவு மின்னஞ்சலில் " இலவசமாக " அனுப்பப்படும் ! )




பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

Saturday, July 18, 2015

காலம் திருடிய கடுதாசிகள் !

வீட்டின் கூடத்தில், மேசையின் மீதோ, சுவற்றில் பொருத்தப்பட்ட மர ஷெல்பிலோ தூசி படிந்த, வெல்வெட் துண்டு போர்த்தப்பட்ட பெரிய மோர்பி ரேடியோ... சமையல் புகையினால் பழுப்பேறிய அந்த ரேடியோவுக்கு அருகில் ஒருசில பழைய இன்லாண்டு லெட்டர் மற்றும் காந்திதலை அச்சிட்ட மஞ்சள் நிற தபால் அட்டைகள்... அபூர்வமாய் ஒன்றிரண்டு வெளிநாட்டுத் தபால்கள் !...

ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் மேல் நடுத்தர மற்றும் நடுத்தரக் குடும்ப வீடுகளில் காணக்கிடைத்த அந்தக் காட்சியைத் தங்கள் மனப்பெட்டகத்தில் ஓவியமாய் ஒளித்துகொண்டவர்கள் அதனைச் சிரமம் பார்க்காமல் தேடி எடுங்கள் ...

இந்தப் பதிவு சொல்லப்போவது " விவித்பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு... " என வயலின் ஆக்ரோசத்துடன் தொடங்கி, ஒரு தலைமுறையின் சுகதுக்கங்களின் துணையாய் தவழ்ந்த, அந்த மோர்பி ரேடியோவின் வழியே கசிந்த, திரையிசை தூறலை அல்ல... அதற்கருகே அடுக்கப்பட்டிருக்கும், அந்தச் சுக துக்கங்களைப் பதிவு செய்த " கடுதாசிகளின் " கதையை !


தெருவுக்கு ஒரு தொலைபேசியே அதிகம் என்ற அந்தக் காலத்தில் அதிநவீன தனிமனித தகவல் தொடர்பாக இருந்தவை கடிதங்களும் தந்திகளும் !

" பொண்ணைப் புடிச்சிருக்கு... கொடுக்கல் வாங்கலும் சரிதான்.... இருந்தாலும் குடும்பத்துல கலந்துக்கிட்டுக் கடிதம் போடறோம் ! " எனச் சொல்லிவிட்டு எழுந்துபோகும் மாப்பிளை வீட்டாரின் சம்மதம் கடிதம் வந்து சேரும் வரை தூக்கம் தொலைத்த பெண்ணின் பெற்றோரையும், " தாயும் சேயும் நலம் " என்ற வரிகளைத் தாங்கிய கடிதம் கையில் கிடைக்கும் வரை கர்ப்பிணி மகளை நினைத்து அல்லும் பகலும் கலங்கிய தாயையும், " அப்பாவுக்குத்தான் உடல்நிலை சரியில்லை. நாங்கள் இருக்கிறோம். புகுந்த வீட்டில் நீ முகத்தைத் துக்கிவைத்துக்கொண்டிருக்காதே ! " என்பதைப் படித்துத் துக்கத்தைத் தொண்டைக்குழிக்குள் அடைகாத்த மகளையும் இன்றைய குறுஞ்செய்தி, முகநூல் தலைமுறைக்குத் தெரியுமா ?!

" காலணா கடுதாசிக்கு வக்கத்துப் போயிட்டேன்... இருக்காளா போயிட்டாளான்னு தெரிஞ்சிக்கக் கூட ஒரு கடுதாசி போடக்கூடாதா ?... " என்ற புலம்பல் பிள்ளைகளால் மறக்கப்பட்ட முதிய தாய்மார்களின் அன்றாட அங்கலாய்ப்பாய் இருந்த காலம் அது !

ன்றைக்கும் கடிதம் என்ற வார்த்தையைக் கேட்டாலே எனது பால்ய வயதின் நிகழச்சி ஒன்று மனதில் நிழலாடும்...

எங்கள் தெருவில் ஒரு பெட்டிக்கடை. தன் வீட்டு திண்ணையைக் கடையாக மாற்றியிருந்த அந்தக் கடையின் உரிமையாளரை தெருப்பிள்ளைகள் அனைவரும் மாமா என அழைத்ததால் அந்தக் கடைக்கு மாமா கடை என்றே பெயர் ! பெரியவர்களுக்கு அவர் கடை மாமா !

பாட்டிக்காக " லெட்டர் " வாங்க மாமா கடை சென்றேன்...

கடையில் நல்ல கூட்டம்.

" ஒரு இங்கிலாந்து லெட்டர் கொடுங்க ! "

எட்டணா என ஞாபகம்... நான் காசை நீட்டி கேட்க, என்னை ஏற இறங்க பார்த்தவர், வேறு வியாபாரத்தைக் கவனிக்கத் தொடங்கினார் !

" கொஞ்சம் இரு தம்பி !.... "

நான் மீன்டும் மீன்டும் கேட்க, அவரோ என்னைக் காக்கவைத்துவிட்டு மற்ற வியாபரங்களைப் பார்க்க, எனக்கு அழுகையும் ஆத்திரமும் முட்டியது !

" தம்பி என்னா கேட்டீங்க ?.... "

ஒரு வழியாய் அனைத்து வியாபரங்களையும் முடித்துவிட்டு அவர் கேட்க,

" ஒரு இங்கிலாந்து லெட்டர் !... "

நான் கோபமாய்க் கூற,

" இங்கிலாந்து லட்டரா ?... அதுக்குத்தான் நிக்கச் சொன்னேன்... அது இங்கிலாந்து லட்டர் இல்லம்மா... இன்லாண்டு லெட்டர்... இன்லாண்டுன்னா உள்நாடுன்னு அர்த்தம்... படிக்காத நாங்க வேணா தப்பா சொல்லலாம்... படிக்கற தம்பி நீங்க சரியா புரிஞ்சிக்கனுமில்ல ?.... "

அவரின் வாஞ்சையான வார்த்தைகள் இன்றும் மனதில் ஒளித்துக்கொண்டிருக்கின்றன !


புதிதாய் திருமணமான எதிர்வீட்டு அக்காவின் கணவருக்குத் துபாயில் வேலை...

" என்ன சொல்லி நான் எழுத... என் மன்னவனின் மனம் குளிர... "

" டேய்... அது என்னா படம்ன்னு தேடி கேசட் கொண்டு வரியா ?... "

வானம் குளிர்ந்து மாலை மயங்கிய ஒரு பொழுதில், தெருக்கோடி டீக்கடையிலிருந்து காற்றில் கலந்து காதுகளில் கசிந்த சினிமா பாடலை கண்களில் நீர் கட்ட லயித்துக் கேட்ட அக்கா கெஞ்சியது !

வாடகை வி சீ ஆர் கேசட் பிளேயர் பிரபலமான காலம்...

ராஜா ரெக்கார்டிங் சகாயம் அண்ணனிடம் படத்தை விசாரித்து, அப்போது ஊரிலிருந்த அனைத்து வீடியோ கேசட் கடைகளிலும் அலைந்து, அந்தப் படத்தைக் கொண்டு வந்தேன் !...

ராணிதேனி !

பார்க்க முடியாத பாடாவதி பிரிண்டை பரவசமாய்ப் பார்த்து, அந்தப் பாடலை மட்டும் பலமுறை ரீவைண்ட் பண்ண சொல்லி கேட்டது அக்கா !

" டேய்... அவருக்கு ஒரு லெட்டர் எழுதனும்... எனக்குச் சரியா எழுத வராதுடா... நான் சொல்றேன்... நீ எழுதறியா ? "

தயங்கி தயங்கி கேட்ட அக்காவுக்குக் கடிதம் எழுதி கொடுத்தேன்.

" டேய்... இதை யார் கிட்டேயும் சொல்லிடாதேடா ! "

காதலில் உருகி எழுதிய கடிதம் சொந்த கணவனுக்குத்தான் என்றாலும் சஙடமாய்க் கேட்டது அக்கா !

ஒவ்வொரு நாளும் காத்திருந்து, எதிர்பார்ப்பு பொய்த்த ஒரு பகலில் கணவனிடமிருந்து பதில் கடிதம் !

" டேய்... டேய்... படிச்சி சொல்லுடா... "

அன்பு மனைவி என ஆரம்பித்த கடிதத்தை, பொதுவான விசாரிப்புகளுக்குப் பிறகு,... நீ ஏதேதோ எழுதியிருக்கிறாய் அதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு எனக்குப் புத்தியும் இல்லை நேரமும் இல்லை என முடித்திருந்தார் !

படித்துவிட்டு அக்காவை பார்த்தேன்... சலனமற்ற முகத்துடன் கடிதத்ததை வாங்கி நான்காய் மடித்துக்கொண்டு விடுவிடுவெனப் போய்விட்டது அக்கா !

இப்படி எத்தனையோ அக்காக்களின் புரிந்துக்கொள்ளப்படாத பிரியங்களைச் சுமந்து திரிந்தன அன்றைய கடுதாசிகள் !


பால்காரர் அன்றாட வாழ்க்கையின் மிக முக்கிய அங்கத்தினராகத் திகழ்ந்த நாட்கள் அவை... பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவை கொண்டுவரும் தபால்காரரை தலையில் தூக்காத குறையாகக் கொண்டாடிய காலம் !

காலை நேர பரபரப்பு முடித்து, முந்தானையில் கை துடைத்தபடி பெண்கள் வீட்டு வாசலில் நிற்க தொடங்குவார்கள்... ஓய்வு பெற்ற திண்ணை தாத்தாக்களின் பார்வைகள் தெருக்கோடியை மொய்க்கும் ! ...

பதினொரு மணி வாக்கில் பழையைச் சைக்கிளின் முன்னும் பின்னும் பெரிய பைகளில் தபால்களும், பார்சல்களும் தளும்ப, பிரசன்னமாவார் தபால்காரர் !

" தபால்காரரே.... நமக்கு..... "

" இன்னைக்காச்சும் மணியார்டர் உண்டா... "

" பாவிபய கடுதாசி போட்டிருக்கானா தம்பி ?.... "

ஒவ்வொருவீட்டு வாசலின் விசாரிப்புக்கும் ஒவ்வொருவிதமாய்ப் பதிலளிப்பார்... ஆனால் முகத்தின் சிரிப்பு மாறாது !

" இருக்கு !... இருக்கு... ! "

" தேதி பொறந்து ரெண்டு நாளுதானே ஆகுது தாத்தா... பென்சனெல்லாம் நாளைக்குத்தான் டிஸ்பேட்ச் பண்ணுவாங்க ! "

" ஏன் ஆத்தா கோபப்படறே... கடுதாசிதானே ... ? போட்டிருப்பான் !... நாளைக்கு வரும் ! "

தலைவாசலில் நின்று அவர் விசிறும் கடிதங்கள் மிகச் சரியாய் வீட்டினுள் விழும் !

சைக்கிளை ஸ்டாண்ட் போட்டுவிட்டுத் திண்ணையில் தபால்காரர் அமர்ந்தால் மணியார்டர்... ரெஜிஸ்டர் தபால் அல்லது பார்சல் !

" இருங்க தபால்காரரே... அடியேய்... காபி கொண்டா... "

" இல்லீங்க இருக்கட்டும் !.... "

" அட ஒரு வாய் மோர் இல்லேன்னா தண்ணியாச்சும் குடிச்சிட்டு போங்க ! "

மணியார்டர் பாரத்தை விரித்து, பணத்தை எண்ணுபவருக்கு உபசாரம் தூள் பறக்கும் ! வரும் தொகையின் அளவை பொறுத்து அவரின் கையில் கொஞ்சம் தினிப்பவர்களும் உண்டு ! காபியோ, மோரோ அல்லது சிறு பணமோ எதுவாக இருந்தாலும் சிரிப்புடன் பெற்றுக்கொள்வார் !

அப்போதெல்லாம் பார்சல்கள் மிக அரிதாக வருபவை ! தெருவில் யார் வீட்டுக்காவது பார்சல் வந்துவிட்டால், வந்தது என்ன என்பதை அறிந்துகொள்ளத் தெரு முழுவதும் விசாரணையில் இறங்கும்... அதுவும் வெளிநாட்டு பார்சலாக இருந்தால் தெருவே தூக்கமின்றிப் புரளும் !

சிங்கப்பூரிலிருந்து வந்தது ஒரு சாக்லெட் பட்டையானாலும், பங்கு வைக்கப்பட்டுத் தெருவின் அனைத்து வீடுகளுக்கும் வரும் !

" கொஞ்சம் படிச்சி சொல்லுப்பா.... "

" இரு ஆத்தா... லைனை முடிச்சிட்டு மதியமா வந்து எழுதி தரேன்... "

கண் பார்வை மங்கிய பாட்டியின் கடிதத்தைப் படித்துகாட்டிவிட்டு, பதில் எழுத மதிய உணவுக்குப் பின்னர் வருவார் !

" தபால்காரரே... அடுத்த ஞாயித்துக்கிழமை நம்ம பெரிய பொண்ணுக்கு வலைக்காப்பு... வீட்டுக்கு வந்து.... "

" அதெல்லாம் வேண்டாம்மா... அதான் சொல்லீட்டீங்களே... "

அதுநாள் வரையிலும் காக்கி யூனிபார்மில் மட்டுமே பார்த்த தபால்காரர் வேட்டியும் சட்டையுமாகக் குடும்பத்துடன் வந்து கலந்துக்கொள்ளுவார்.

கொடுப்பார்கள், அழைப்பார்கள் என அவர் நினைத்து பழகாத, காரியம் ஆகக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கும் இல்லாதிருந்த காலம். அரசு ஊழியர் என்ற நிலையைத் தாண்டி, ஒவ்வொரு நாளும் நம் வீடு வரும் சொந்தக்காரரை போலத் தபால்காரர் நடத்தப்பட்ட காலம் ! சம்பளத்துக்கு வேலை என்ற கடமையையும் தாண்டி தான் சுமந்து வரும் கடிதங்களில் பொதிந்த சுக துக்கங்களைத் தன்னுடையவைகளைப் போலப் பாவித்த அரசு ஊழியரின் காலம் !

" வீட்டு ஆம்பளைங்க யாரும் இல்லையா ?... "

தந்தியுடன் வருபவர் சன்னமான குரலில் கேட்டால் வீட்டுப் பெண்கள் பதற தொடங்கிவிடுவார்கள்...

" ஒண்ணுமில்லேம்மா... உடம்பு முடியலன்னுதான் இருக்கு.... "

காத்திருந்து குடும்பத்தில் மூத்தவர்களிடம் துக்கச் செய்தியை பக்குவமாய்ச் சொல்லிவிட்டு போவார்.

" .... ருக்காரா ? "

கோடையின் வெப்பம் தகித்த ஒரு மதியத்தில் என் பெயரை சொல்லி கூப்பிட்டார் தபால்காரர்...

என் பெயருக்கு வந்த முதல் கடிதம் !

" உனக்காடா ?... உனக்கு யாருடா கடிதம் போட்டது ?... "

பள்ளி ஹாஸ்டலில் தங்கி என்னுடன் படித்த அமீன் எழுதிய கடிதம் !

மூன்றாம் வகுப்புக் கோடை விடுமுறையில் இருந்த என்னை வீட்டினர் அனைவரும் சுற்றிக்கொள்ள, அந்தக் கடிதத்தைப் படித்தபோது உண்டான பரவசம் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது !

தீபாவளி, பொங்கல் விழாக்களின் போது பலருக்கு வாழ்த்து அட்டைகள் வரும்...

நானும் ஒரு பொங்கல் அட்டை வாங்கி என்னுடன் படித்த அய்யாக்கண்ணு அனுப்புவது போல, கையெழுத்தை மாற்றி எழுதி எனது முகவரிக்கே அனுப்பி, நண்பனிடமிருந்து வந்ததாக வீட்டில் பெருமைபட்டுக்கொண்டதை இன்று நினைத்தால் சிரிப்பு வருவதுடன் அன்று அப்படிச் செய்யத்தூண்டிய உளவியல் காரணத்தையும் அறிந்துக்கொள்ள ஆவல் எழுகிறது !

புதுவை மாநிலத்தின் பல குடும்பங்களைப் போல என் குடும்பமும் பிரெஞ்சு குடியுரிமை கொண்ட குடும்பம் என்பதால் பிரான்சிலிருந்து தாத்தா, சித்தப்பாக்களின் தபால்கள் தொடர்ந்து வந்தபடி இருக்கும்...

பிரான்சிலிருந்து அனுப்பப்பட்ட கடிதம் எங்களை வந்தடைய ஏறக்குறைய பதினைந்து நாட்கள் ஆகும். அந்தப் பதினைந்து நாள் கணக்கு என் சித்திமார்களுக்கு அத்துப்படி ! தபால்காரர் வரும்வரை காத்திருக்க முடியாமல் என்னைத் தபால்நிலையத்துக்கே விரட்டுவார்கள் !

காலை பத்துமணிவாக்கில் ஊரின் அனைத்து " போஸ்ட் மேன்களும் " அவரவர் " லைனுக்கான " தபால் கட்டுகளுடன் தபால் நிலையத்தைச் சுற்றி அமர்ந்துக்கொண்டு கட்டை பிரித்து அடுக்குவார்கள்.

" மாரியம்மன் கோவில் வீதி பத்தாம் நம்பர் இருக்கா சார்... "

" சார்.... பள்ளிவாசல் தெரு ரெண்டு... "

" சர்ச் ஸ்ட்ரீட் ரெண்டாம் நம்பர் வீடு ! "

சினிமா கொட்டகை டிக்கெட் கெளண்டர் போல அவரைச் சுற்றி மொய்த்து பரபரக்கும் கூட்டத்தில் புகுந்து லெட்டர் பெற்று திரும்புவது பெரும் சாதனை !

தெருக்கோடியில் வசித்த நந்தகுமார் அண்ணன் முதல் ஆளாய் தபால் ஆபீசில் நின்றால், எங்கள் வீட்டுக்கு அருகில் வசித்த பத்மா அக்கா கடிதம் எழுதியிருக்கிறது என அர்த்தம் ! குணிந்த தலை நிமிராமல் கல்லூரி சென்று வரும் அக்கா எந்தக் கடையில் லெட்டர் வாங்கி எங்கிருந்து போஸ்ட் செய்யும் என்பதும், அந்தக் கடிதம் கிடைக்கும் நாள் அண்ணனுக்கு எப்படித் தெரியும் என்பதும் எங்கள் தெருவின் சிதம்பர ரகசியம் !

தெருவில் நுழையும் தபால்காரரை எதிர்கொண்டு அண்ணனின் கடிதத்தை வாங்கித் தாவணியில் மறைத்துகொண்டு கொல்லைப்புறம் ஓடும் பத்மா அக்கா !

பத்மா அக்கா திருமணமாகி போகும் வரையிலும், அதுவரையிலும் டீ. ராஜேந்தரின் காதல் பாடல்களைக் கேட்டு ரசித்த நந்தகுமார் அண்ணன் ராஜேந்தரை போலவே தாடியும் வளர்த்துக்கொண்டு " நான் ஒரு ராசி இல்லா ராஜா " பாடலை தலை சிலுப்பிக் கேட்க ஆரம்பித்த வரையிலும் அவர்களின் காதலை சுமந்து பறந்த கடித பட்டாம்ப்பூச்சிகள் அவர்கள் வீட்டினர் எவரின் கைகளிலும் சிக்காமல் சுழன்றது ஆச்சரியமான அதிசயம் !


தொன்னூரின் ஆரம்பத்தில் எங்கள் தெரு தபால்காரர் ஓய்வில் செல்ல, முதல் முறையாக ஒரு பெண் தபால்காரராக வந்தார். வெயில் மழை என எந்தக் காலமாக இருந்தாலும் சைக்கிளை ஓட்டாமல் எநேரமும் தள்ளிக்கொண்டே வரும் அந்தப் பெண்ணுக்கு சைக்கிள் ஓட்ட தெரியும் தெரியாது எனத் தெருவே பிரிந்து பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்ததே தவிர அந்தப் பெண்ணிடம் நேரடியாகக் கேட்கும் தைரியம் யாருக்கும் இல்லை !

நானும் பிரான்ஸ் வந்து தாத்தா, சித்தப்பாக்களைப்போலப் பொறுப்பாய் கடிதம் எழுத தொடங்கினேன்...

தொழில்மயமாக்கலின் முக்கிய நிகழ்வாய் சர்வதேச தொலைபேசி வசதி வீடுகளுக்கு வர ஆரம்பித்தது.... பேஜரில் தொடங்கி அடுத்து ஆரம்பித்த அலைபேசி தொழில்நுட்பம் அதிவிரைவாய் உலகெங்கும் பரவத் தொடங்கியது....

சட்டெனத் தொடங்கிச் சர்வதேசமும் பரவிய தொழில்நுட்ப அலை சுகம், துக்கம், காதல், பிரிவு, நட்பு, துரோகம் என ஒரு தலைமுறையின் அனைத்து உணர்ச்சிகளையும் சுமந்து சுற்றிய கடுதாசிகள் அனைத்தையும் அடித்து ஒழித்துவிட்டது !

காலம் எப்போதுமே இப்படித்தான் !...

விரைவான பேருந்து பிரயாணத்தின் போது காற்றின் ஓசையை மீறி வேகமாய் நம் காதுகளுக்குள் தவழ்ந்து சட்டென வெளியேறி மறைந்துவிடும் சாலையோர டீக்கடை மோர்பி ரேடியோவின் கானத்தைப் போலவே நமக்கு அறிமுகப்படுத்தும் எதையும் நாம் எதிர்பாராத தருணம் ஒன்றில் சட்டெனத் திருடி தன்னுள் எங்கோ மறைத்துவிடும் !


ரு சில வருடங்களுக்கு முன்னர் ஊர் சென்றிருந்த போது தபால்கார பெண்மணியைப் பார்க்க நேர்ந்தது...

ஆளுக்கு ஒன்று என்பதையும் தாண்டி விரலுக்கு ஒன்று என்ற அளவுக்குக் கைப்பேசிகள் அதிகரித்துக் குறுஞ்செய்திகள் குப்பைகளாய் மலிந்த காலத்தில் வீடுகளின் திண்ணைகள் கார் பார்க்கிங்காய் மாறி, திண்ணை தாத்தாக்கள் எல்லோரும் முதியோர் இல்லங்களுக்கு மாறிவிட்டார்கள் !...

" ஏங்க... ? இந்த நேரத்துல போன் பண்ணாதீங்கன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன் ?... "

ஏதோ ஒரு வீட்டில், தொலைக்காட்சி தொடரின் அழுகை சத்தத்தைத் தாண்டி , தெருவில் தெரித்த அலைபேசும் பெண்ணின் குரல்... வெளிநாட்டு கணவனாக இருக்கலாம் !

" இந்த ஒரு தபாலுக்காக இத்தனை தூரம் வர வேண்டியிருக்கு.... ! "

பக்கவாட்டில் தபால்களும் பார்சல்களும் பிதுங்கி வழியும் பெரிய சாக்குப் பைகள் இல்லாத இளைத்துப்போன சைக்கிளை தள்ளிக்கொண்டு தனியாகப் பேசியபடி சென்றவரிடம் என்னை அறிமுகப்படுத்திகொண்டு அவருக்குச் சைக்கிள் ஓட்ட வருமா எனக் கேட்க தோன்றியது...

என்னைக் கடந்து சென்றுவிட்டவரை திரும்பி பார்த்தேன்... உக்கிரமான வெயிலில் நீண்டு தள்ளாடிய அவரின் நிழலை கண்டதும் பேச தோன்றவில்லை !

சாலையோர டீக்கடையின் கானத்தைப் போலவே காலம் திருடிய கடுதாசிகளும் காற்றில் கரைந்துவிட்டாலும் அந்தக் கடிதங்களின் வரிகள் இன்னும் பலரது மன சுவர்களில் அழியாமல்தான் இருக்கின்றன !


பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

Monday, June 1, 2015

பொறுமை என்னும் புதையல் !

வலைநட்புகளுக்கு வணக்கம்...

சொந்த கடமைகளின் பொருட்டு, என் வலைப்பூ பங்களிப்பு நிறையக் குறைந்து வருகிறது. சில புதிய பொறுப்புகளை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொள்ள நிறைய அவகாசம் தேவைப்படுவதால் இந்தத் தொய்வு. வலைப்பூவுக்கான நேரத்தை தினசரி ஒதுக்கும்படியான சூழலை உருவாக்க முயன்றுவருகிறேன். நான் காணாமல் போகும் தருணங்களில் என் நலன் நாடும் நண்பர்களுக்கு மன்னிப்புடனான நன்றிகள் !




" பொறுமை கடலினும் பெரிது... பொறுத்தார் பூமி ஆள்வார்  " எனப் பொறுமை குணத்தைப் பெருமையாய்ப் போற்றுகிறது தமிழ் !

"உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின் "

எனப் பொறுமையைத் துறவுக்கும் மேலாகத் தூக்கி நிறுத்துகிறார் திருவள்ளுவர் ! ....

" அட என்னங்க ?!... போன் பண்ணினா பத்து நிமிசத்துல பீட்சாவும் பர்கரும் வீட்டுக்கு வர்ற ஸ்பீட் கலாச்சாரத்துல பொறுமையைப் பத்தி மொக்கையா ?!... "

" ஆமாங்க சார் ! பொறுமைன்னு சுவத்துல எழுதியிருக்கற வார்த்தையைகூடப் படிக்கப் பொறுமையில்லாம ஓடுற இன்னைக்குத்தான் பொறுமை ரொம்ப அவசியமா எனக்குப் படுது... ஏன்னா, நாம ஓடுற வேகத்துக்கு எதுலயாவது மோதிட்டோம்ன்னா எதுல மோதிக்கிட்டோம்ன்னு தெரிஞ்சிக்கவாவது பொறுமை தேவைங்க...! "

அதனால பொறுமையா இந்தப் பதிவை படிங்க !

பொறுமை என்பது என்ன ?




லட்சக்கணக்கான யூதர்கள் ஹிட்லரால் கொல்லப்பட்டுக்கொண்டிருந்த இரண்டாம் உலகப்போரின் போது யூதர்களுக்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதினார் காந்தி...

" தோழர்களே... ஹிட்லருக்கு பயந்து ஓடாதீர்கள் ! அவருக்குத் தேவை உங்கள் உயிர் தான் என்றால் உலகின் யூதர்கள் அனைவரும் ஒன்று திரண்டு அவரிடம் செல்லுங்கள்.... "

என்பதாக நீளும் அந்தக் கடிதம்,

" ஹிட்லர் வேண்டுமானால் உங்களின் உயிரை அழிக்கலாம் ஆனால் உங்களின் ஆன்மாவை ஒன்றும் செய்ய இயலாது ! நீங்கள் யூதனாகப் பிறந்து யூதனாக இறப்பதை அவரால் மாற்ற முடியாது ! "

என முடியும் !

மேலை நாட்டினரால் இன்றும் அதிர்ச்சியுடன் விவாதிக்கப்படும் வரலாற்றுக் கடிதங்களில் ஒன்று அந்தக் கடிதம் ! ஆனால் காந்தியின் அறிவுரை ஆன்மா சம்மந்தப்பட்டது !

" ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு  " என்ற ஏசுநாதரின் போதனை இன்றளவும் சரி தவறு என விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது ! ஜே. கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ போன்றவர்கள் கூட அடித்தால் திருப்பி அடி ! ஆனால் அத்துடன் நிறுத்திக்கொள் என்றே போதிக்கிறார்கள் !!

காந்தி தன் கடித்தத்தில் கூறுவதைப் புரிந்துக்கொள்ள முடியுமானால் ஏசுநாதரின் வார்த்தை சரி என்பது புரியும்...

தெருவில் போகும்போது நம்மை நிறுத்தி அறைபவனைக் கூறவில்லை ஏசுநாதர் ! அவர் குறிப்பிட்ட அடி, உங்கள் நம்பிக்கைக்கு மாற்றான நம்பிக்கை உடையவன் அடிக்கும் அடி...

ஒரு கன்னம் என்ன ? வேண்டுமானால் இரண்டு கன்னங்களிலும் அடித்துக்கொள்... உன்னால் என் உடலைதான் சிதைக்க முடியுமே தவிர, என் ஆன்மா கொண்டிருக்கும் நம்பிக்கையை அசைக்க இயலாது என்ற பெருமை செருக்கு மிக்கப் போதனை ! எனக்கான நேரம் வரும்வரை அவசரப்பட்டு என் கொள்கையைக் கொன்றுவிடமாட்டேன் என்ற பொறுமை என்னும் பெரும்பலம் !

ஏசுநாதரின் போதனை புரியுமாயின், உலகம் உருண்டை என ஆதாரத்துடன் நிருபித்த கலிலியோ திருச்சபையின் முன்னால் மண்டியிட்டு தன் கூற்றைத் தானே மறுத்தது பயத்தினால் அல்ல என்பதும் புரியும் !

 சாங்கிய தத்துவம் குணங்களை மூன்றாக வகைப்படுத்துகிறது.சத்வ, ரஜோ, தமோ ஆகிய அந்த மூன்று குணங்களில் முதன்மையானது சத்வ குணம். படைப்பின் குணமாகப் போற்றப்படும் சத்வ குணத்தின் அடிப்படை பொறுமை மற்றும் அமைதி !

பிள்ளையாரின் யானை முகமும், அவரது காலடி சுண்டெலியும் கற்றுவிக்கும் வாழ்க்கை தத்துவம் எத்தனை பேருக்கு தெரியும் ?!...

சுண்டெலியை போன்ற அவசரமான, அலைபாயும் மனதை யானையைப் போலப் பொறுமை காத்து அடக்க வேண்டும் என்பதே அந்தத் தத்துவம் !

ரபு மொழியில் சபர் என்றொரு வார்த்தை உண்டு. இஸ்லாமிய மார்க்கத்தில் அடிக்கடி உபயோகிக்கப்படும் வார்த்தைகளில் ஒன்று சபர். சபர் என்றால் பொறுமை, சாந்தி எனப் பொருள்படும்.

தென்னிந்திய இஸ்லாமிய பரம்பரை குட்டிக்கதை ஒன்று...


ஒரு ஆடம்பரமான மன்னனுக்கு மூன்று பெண்கள். இளைய பெண்கள் இருவரும் அரச குடும்பத்துக்கு ஏற்ப பகட்டு வாழ்க்கை வாழ, மூத்தவள் மட்டும் சதா சர்வகாலமும் இறை வணக்கத்தில் ஈடுபாடு கொண்டு, மிக எளிமையாக வாழ்பவள். எந்தச் சூழ்நிலையிலும் சலனப்படாத பொறுமையானவள்.

மூத்த மகளின் எளிமையாலும் பொறுமையாலும் எரிச்சலாகும் மன்னன் அவளை அரண்மனை வாழ்க்கைக்கு ஒத்துவராதவள் என்று ஊருக்கு வெளியே குடிசை ஒன்றில் வசிக்க அனுப்பிவிடுகிறான். அவளும் மறு சொல் பேசாமல் பொறுமையுடன் அங்கு இறைவனைத் தொழுதவாறு தன் வாழ்க்கையைக் கழிக்கிறாள்.

புனித ஹஜ் யாத்திரைக்குப் புறப்படும் மன்னன், அனைவரிடமும் சொல்லிக்கொண்டு தன் இளைய மகள்கள் இருவரிடமும் என்ன கொண்டுவர எனக் கேட்கிறான். அவர்களும் விலை உயர்ந்த, அரிதான பரிசு பொருட்களை வாங்கி வருமாறு வேண்டுகிறார்கள். புனித யாத்திரைக்காக மன்னன் கப்பல் ஏறும்போது ஒரு தடங்கல்...

காற்று இருந்தும், பாய்மரம் விரித்தும் கப்பல் நகரவில்லை !

கலங்கும் மன்னன் அரண்மனை முதியவரிடம் ஆலோசனை கேட்க, மூத்த மகளிடம் சொல்லாமல் கிளம்புவதை இறைவன் ஏற்கவில்லை எனக் கூறுகிறார். மன்னனும் வேண்டா வெறுப்பாய் ஒரு சேவகனை அழைத்து, தான் புனித யாத்திரை போவதை மகளிடம் கூறிவிட்டு அவளுக்கும் என்ன வேண்டும் எனக் கேட்டுவருமாறு அனுப்புகிறான்...

அந்தச் சேவகன் மூத்த இளவரசியின் குடிலுக்குச் செல்லும் சமயத்தில் அவள் தொழுகையில் இருக்கிறாள்... சேவகனுக்கோ அவசரம் !

வந்த விசயத்தை அவன் கூற... தொழுகையை நிறுத்தாமலேயே " சபர்.. சபர்... ! " எனக் கூறுகிறாள் இளவரசி !

அவன் மீன்டும் என்ன வேண்டும் எனக் கேட்க, மீன்டும் சபர் என்ற வார்த்தையே பதிலாக வருகிறது !

அலுப்புடன் மன்னரிடம் திரும்பிய சேவகன் இளவரசியாருக்கு சபர் கட்டை ஒன்று வேண்டுமாம் என்கிறான் ! மன்னனும் தலையில் அடித்துக்கொண்டு சரி என்று சொல்ல, கப்பல் கிளம்புகிறது !

புனித யாத்திரையின் சடங்குகள் முடித்த மன்னன் தன் இளைய பெண்கள் இருவரும் கேட்டது அனைத்தையும் வாங்கிகொண்டு பயணம் திரும்பும் போது மீன்டும் அதே சோதனை ! கப்பல் நகரவில்லை !

அப்போதுதான் மூத்த மகள் கேட்ட சபர் கட்டையின் ஞாபகம் வருகிறது. அதனை வாங்க ஒரு ஆளை அனுப்ப, நகர் முழுவதும் கேட்டலைந்தும் அப்படி ஒரு கட்டை கிடைக்காததால் அலுத்துபோன அவன் ஒரு சவுக்குக் கட்டையைக் கொண்டு வந்து இதுதான் சபர் கட்டை எனக் கூறுகிறான் !

நாடு திரும்பிய மன்னன் சபர் கட்டையை, என்ன வேண்டும் எனக் கேட்டு அனுப்பிய அதே சேவகனிடம் மூத்த மகளுக்கு அனுப்புகிறான்...

இதோ நீங்கள் கேட்ட சபர் கட்டை என நீட்டும் சேவகனை பார்த்து சிரிக்கிறாள் அந்தப் பெண் !

" தொழுகையில் இருந்த என்னை அவசரப்படுத்தியதால் பொறுமையாக இரு என்னும் பொருளில் சபர் என்றேன்... நீயோ அவசரமாய்ப் போய்ச் சபர் கட்டை கேட்டதாகச் சொல்லிவிட்டாய் ! ... சரி, அப்படி வைத்துவிட்டு போ ! "

எனக் கூறுகிறாள். அவனும் அந்தக் கட்டையைச் சுவரோரம் சாய்த்து வைத்துவிட்டுத் திரும்புகிறான்.

அந்த மூத்த இளவரசி தொழுகை முடித்து, எனக்கு ஒரு சிறந்த கணவனைக் காட்டு என இறைவனிடம் இறைஞ்சி கேட்டுக் கண் திறக்கும் போது அந்தச் சவுக்குக் கட்டை பிளந்து அதிலிருந்து ஒரு ராஜகுமாரன் வெளிப்பட்டு அவளை மணமுடித்துக் கொள்வதாய்க் கதை முடியும் !

ஸ்லாமிய மரபின் ஒரு பிரிவான சூபி தத்துவம் மற்றும் ஜென் பெளத்தம் பொறுமையை மனிதன் முழுமை அடைவதற்கான முழுமுதல் தகுதியாய் முன்நிறுத்துகின்றன !

ஜென் தத்துவத்தில் தவம் என்பதின் விளக்கமே பொறுமையுடன் காத்திருத்தல் ! தவத்தின் முடிவில் கிடைக்கும் வரத்தைவிட, அந்த வரத்துக்காகக் காத்த பொறுமையே பெரிதாகப் போற்றப்படுகிறது ! ஏனெனில் நாம் பெற விரும்பும் ஒன்றுக்காகக் காத்திருக்கும் தருணமே நாம் அடைய விரும்பும் அந்த ஒன்றுக்கு தகுதியுடையவராக நம்மை மற்றிக்கொள்ளக் காலம் நமக்களித்த வரம் !

து எப்படி ? எல்லாவற்றுக்கும் பொறுத்து பொறுத்துப் பொறுமை காத்தால் என்ன ஆவது ? நமக்கான மரியாதை கிடைக்க வேண்டாமா ?!... யாருக்கு யார் அடிபணிவது ?...


அடிபணிவது வேறு பொறுமையாய் கடந்து செல்வது வேறு ! மெளனம் காத்து பொறுத்திருப்பதால் நமது மரியாதை குறைந்துவிடாது... வேகமாய் வந்து விழும் வார்த்தைகளின் சப்தத்தைவிடப் பொறுமையான மெளனம் ஏற்படுத்தும் பயமும் தாக்கமும் பெரிது !

அடிபணிதலோ பல்லை கடித்துக் கோபத்தை அடக்கி, பின்னால் நம்மைவிட எளியவரிடம் கொட்டுவதோ பொறுமை அல்ல ! பொறுமை என்பது விருப்பு வெறுப்பற்று சலனமற்ற மனதுடன் இருத்தல்... எந்தச் சூழ்நிலையிலும் நிதானம் இழக்காமல் நின்று, நாம் வகுத்துக்கொண்ட நியாயத் தர்மங்களையும் தாண்டிய பரந்த நோக்குடன் சிந்தித்துச் செயல்படுதல்.

ணினி முன் அமர்ந்தவரெல்லாம் கருத்தும் எதிர்கருத்தும் சொல்ல வசதியாகிவிட்ட இன்றைய உடனடி ஊடகத்தால் கருத்துச் சுதந்திரம் என்பது கருத்து அவசரமாய் மாறிவிட்டது ! முகம் தெரியாத ஒருவர் எழுதிய வரிகளுக்காக நமக்கு இரத்த அழுத்தம் எகிறுகிறது ! எழுதிய அவர் எங்கோ சாவகாசமாய்ப் பீட்சா மென்றுகொண்டிருக்க நாம் நம் உற்ற தோழருடன் அதன் பொருட்டுச் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறோம் !

கத்தரிக்காய் விலை தொடங்கிச் சினிமா முதல் அரசியல்வரை அடித்துப் பிழிந்து அவசர நொடியில் உடனடி தீர்ப்பு... உடனடியாக அடுத்தச் செய்தி ! நேற்று நடந்ததின் இன்றைய நிலை பற்றியெல்லாம் கவலையில்லை ! அதுவே ஜாதி மதச் செய்திகள் என்றால் சொல்லவே வேண்டாம் !

ஊடகம் ஒரு உதாரணம் மட்டுமே !...

இன்றைய வாழ்க்கை முழுவதுமே பொறுமையற்ற படபடப்பாய் அமைந்துவிட்டது !

" ஐம்பது நாட்களில் அம்பானியாவது எப்படி ?! " என்ற புத்தகத்தை வாங்கும்போதே அம்பானியின் இன்றைய நிலைக்கு அவரது ஐம்பது வருட உழைப்பும், கொஞ்சம் அரசியல் தந்திரமும் ஒளிந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டால் அவர் வாழ்க்கையில் எவ்வளவு பொறுமையாக யோசித்துக் காய்களை நகர்த்தியிருப்பார் என்பது புரியும் !

ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டென்பது விஞ்ஞானப் பூர்வமாய் நிருபிக்கப்பட்ட ஒரு இயற்கை நியதி.

அவசரமான வினைகள் மிக வேகமான எதிர்வினைகளை விளைவிக்கும் என்பதைப் புரிந்துகொண்டால், இயங்குதலைவிட இருத்தலே முக்கியம் என்ற நியதியும் புரியும் !

விரைவாகத் தயாரிக்கப்பட்ட அவசரத்துக்கான உணவான பீட்சா உண்டாகும் எதிர்வினை கொழுப்பு சேருதல் ! நிறைவாகச் சமைக்கப்பட்ட கேழ்வரகோ இருத்தலை, அதாவது இருக்கும் வரைக்கும் உடலை பராமரிக்க உதவுகிறது !

வேடிக்கையான உதாரணம் என்றாலும் உண்மை அதுதானே ?!

வாழ்க்கையில் எது நடந்தாலும், இதுவும் மாறும் என்ற எண்ணத்தோடு, " எதுவும் மாறும் " என்ற தெளிவையும் கவனத்தில் கொண்டு பொறுமையாய் யோசித்தால் எதற்கும் தீர்வு கிடைக்கும் என்பதோடு நமது இரத்த கொதிப்பும் சமன்படும் !

வாழ்வோம் வளமுடன் !


பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

Monday, March 30, 2015

த்ரோ தேம்பெர்மாசியோன் துய் லேம்பெர்மாசியோன் !

ன்ன ஆச்சு ? ஏதோ அப்படி இப்படிக் கிறுக்கினாலும் நல்லா தான் இருந்தார்... திடீர்ன்னு அடிக்கடி வலைதளத்திலிருந்து காணாமல் போக ஆரம்பிச்சார்... இப்ப புரியாத மொழியில தலைப்போட கிறுக்கறார்... என்ன ஆச்சு இந்தச் சாமானியனுக்கு ?

வுட்வேர்ட்ஸ் கிரேப் வாட்டர் கொடுக்கச் சொல்லலாமா ?!...

குழம்ப வேண்டாம் அன்பர்களே !


" Trop d'information tue l'information " என்ற பிரெஞ்சு மேற்கோளை அப்படியே தமிழில் எழுதி தலைப்பிட்டேன்... !

 பிரெஞ்சு அரசியல்வாதியான நோயேல் மாமேர் ( Noël Mamère )

என்பவரால் முதலில் பயன்படுத்தப்பட்ட இந்த மேற்கோள் இன்று மேலாண்மை துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் மேற்கோள். இன்றைய இணைய வாழ்க்கைக்கு மிகப் பொருத்தமாக அமைந்த வார்த்தை தொடர் !

" Too much information kills information " என ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம்.

இந்த மேற்கோளை " அதிகமான செய்தி செய்தியை கொன்றுவிடும் ! " என ஜூனூன் தமிழில் மொழி பெயர்க்கவேண்டிய அவசியமே இல்லாமல் பண்ணிவிட்டார்கள் நம் முன்னோர்கள் !

" அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு " என்ற சொல் வழக்கிலேயே எல்லாம் அடங்கிவிட்டது !



( இன்றைய " மச்சான் டாமில் " போல என்பதுகளில் பிரபலமான ஜூனூன் தமிழ் பற்றித் தெரியாத அன்பர்கள் எனக்குத் தனிமடலில் விண்ணப்பம் வைத்தால் விளக்கமாக எழுதுவேன் !!! )

ஒரு செய்தியை பற்றி அதிகமாகப் பேசும் போது அந்தச் செய்தியின் முக்கியத்துவம் போய் விடுகிறது என்பதே இந்த மேற்கோளின் விளக்கம்.

கணினி திரையின் முன்னால் அமர்ந்து ஒரு வார்த்தையைத் தட்டினால் ஓராயிரம் விளக்கங்கள் வந்துவிழும் இன்றைய நிலையில் நாம் தேடுவதின் முக்கியத்துவம் குறைந்தால் கூடப் பரவாயில்லை, சில வேளைகளில் சாதாரணமான ஒரு வார்த்தைக்குக் கூடப் பூதகரமான பல தகவல்கள் வந்துவிடுவதுதான் பிரச்சனை ! அதுவும் நாம் தேடுவது உடல்நிலை மற்றும் நோய்நொடிகள் சம்மந்தமான செய்தி என்றால் சொல்லவே வேண்டாம்...

" அங்கு வலித்தால் அந்த நோயாக இருக்கலாம், இங்கு இழுத்தால் இந்த வியாதியாக இருக்கலாம் ! "

என வந்து விழும் விளக்கங்களின் மூலமாகவே தகவல் தேடுபவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிடும் ஆபத்து  உண்டு ! ஆக, அதிகமான செய்தி செய்தி செய்தியை கொன்றுவிடுமோ இல்லையோ ஆனால் படிப்பவரை கொல்லும் அபாயம் இணையத்தில் உண்டு !!!

நாற்பதை தொட்டுவிட்ட ஞானம் திடீரெனப் பிறந்ததால், சில மாதங்களுக்கு முன்னால் முழு மருத்துவ பரிசோதனை  செய்துகொண்டேன்... எல்லாம் நன்றாக இருந்தாலும் இரத்ததில் கொழுப்பின் அளவு கொஞ்சம் அதிகம். என் வாய்க்கொழுப்பை பற்றி எனக்கே தெரியும் என்றாலும் இந்தக் கொழுப்பு சற்றுப் பயம் ஏற்படுத்திவிட, வழக்கமாக நான் பார்க்கும் மருத்துவர் விடுப்பில் இருந்ததால் வேறொரு மருத்துவரை பார்த்தேன்.

" சர்க்கரையைவிடக் கொழுப்பு ஆபத்தாச்சே... இரத்தநாளம் அடைத்தால் போச்சு... "

என்ற ரீதியில் பேசிவிட்டு கொழுப்புக்கான மருந்தினை தொடர்ந்து உட்கொள்ளச் சொல்லிவிட்டார்.

நானும் மாத்திரையோடு நிறுத்திக்கொள்ளாமல் அவித்த காய்கறி, பாலில்லாத டீயென வெகு சிரத்தையாய் செயல்பட்டு மெலிந்துவிட்டேன். ( மெலிவதற்கு முன்பாகவே நான் நடிகர் மனோபாலா போல் இருந்தவன் ! )

ரு மாதம் ஓடியிருக்கும்... வேலையின் போது இடது கையில் மெல்லிய கடுப்பு... உடனடியாக மருத்துவரை பார்க்க போயிருக்கலாம் !

இன்றுதான் தொலைபேசி தொடங்கி அலைபேசி வரை அனைத்திலும் இணைய வசதி இருக்கிறதே ! ...

" கொழுப்பின் அளவு கூடுதல்... இடது கையில் வலி... " எனத் தட்டியதுதான் தாமதம்...

" தோள்பட்டையில் வலி தொடங்கும்.... நடுவிரல் வரை பரவும்... விட்டுவிட்டு வலிக்கும்... இதயம் அதிகமாகத் துடிக்கும்... வியர்த்துவிடும்... "

என்றெல்லாம் தகவல்கள் விழ விழ, எனக்குக் கண்கள் கட்டி, அதுவரையிலும் கேட்காத இதயத்துடிப்பு ,நண்பர் காரிகன் சிலாகிக்கும் ஆங்கில பாடல்களின் ட்ரம்ஸ் போல ஷார்ப், பேஸ் சகிதம் அதிர, வியர்த்துவழிய தொடங்கியது !


அவசர சிகிச்சைக்கு அலைபேசலாமா... உடனடியாக மருத்துவமனைக்கு ஓடலாமா... இந்த நிலையில் கார் ஓட்ட கூடாதே என்றெல்லாம் பதைத்து...

மதங்களைப் பற்றியெல்லாம் மானாவாரியாய் வலைப்பூவில் எழுதிவிட்டோமே.... உண்மையிலேயே நரகம் இருந்தால் என்னாகும் என்றெல்லாம் பயந்து...

விடுமுறையிலிருந்து திரும்பியிருந்த மருத்துவருக்கு உடனடியாகப் போன் செய்தேன் ! இணையத்தில் மேய்ந்ததைச் சொல்லாமல் வலி என்று மட்டும் சொன்னேன் !!

" பயப்பட ஒண்ணுமில்லை... இருந்தாலும் உடனடியா கிளம்பி வாங்க ! "

வலி விபரங்களைப் பொறுமையாய் கேட்டவர் கூற, " பயப்பட ஒன்றுமில்லை " என்ற வார்த்தையே என்னை ஆசுவாசப்படுத்தியது !

" நான் வருவதற்குள்ள என்ன அவசரம்... ? அப்படி ஒண்ணும் அதிகமா இல்லையே ! முதல்ல உணவுல கட்டுப்பாடா இருந்து மூன்று மாதம் பார்த்துட்டு அடுத்ததா ஒரு பரிசோதனை பண்ணி, குறையலேன்னா மருந்து எடுத்துக்கலாம்... "

நாடி முதல் இதயத்துடிப்புவரை பரிசோதித்துவிட்டு டாக்டர் கூறினாலும், மனதில் இணைய இம்சை !

" அப்ப... கை வலி டாக்டர் ?.... "

" ம்ம்ம்... ஏதாச்சும் கடுமையான வேலை செஞ்சீங்களா ? "

அந்த வார இறுதியில் தோழி வீட்டுத் தோட்டத்தில் ரோஜா பதியன்களுக்காக மாங்கு மாங்கென மண் கிளறியது அப்போதுதான் ஞாபகம் வந்தது !

" ஆ... ஆமா டாக்டர் ! "

" திடீர்ன்னு கடுமையா வேலை செஞ்சா கை வலிக்காம என்ன பண்ணும் ?! "

அசடு வழிய விடை பெற்றேன் !

ணயம் ஒரு மாபெரும் புரட்சி ! ஒரு பத்தாண்டுகள் முன்பு வரை சமூகத்தின் ஒரு சில பிரிவினருக்கு மட்டுமே சாத்தியமாக இருந்த தகவல்களும், பொது அறிவும் இன்று உலகின் கடைக்கோடி மனிதனுக்கும் கிடைப்பதற்குக் காரணம் இணையமே !

ஆனால் அந்த இணயம் நம் முன்னால் இழுத்து வீசும் தகவல்களின் நம்பகத்தன்மை சில வேளைகளில் சந்தேகத்துக்கிடமானதாக அமைந்துவிடுவது தவிர்க்க முடியாதது ! காரணம்,  யார் வேண்டுமானாலும் எதையும் உள்ளிடலாம் என்ற கட்டற்ற கருத்துச் சுதந்திரம் !

இதயம் என்று தேடினால் இதயநோய் நிபுணர் செரியனின் ( இவரின் புகழும் பரிதாப முடிவும் ஞாபகத்தில் இருப்பவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடலாம் ! ) தகவல்கள் கிடைக்கும் அதே நேரத்தில், இதயம் உண்மையிலேயே மன்மத அம்பு துளைத்த ஹார்ட்டின் வடிவத்தில்தான் இருக்கும் என இன்றும் நம்பிக்கொண்டிருக்கும் ரோமியோக்கள் இறவா புகழுக்காக இணையத்தில்  உள்ளிட்ட  தகவல்களும் வந்து விழும் !

ஒரு காலத்தில் அந்தந்த துறை சார்ந்தவர்களுக்கு மட்டுமே கிடைத்த தகவல்களும், நிபுணர்கள் மட்டுமே அறிந்திருந்த செய்திகளும் இன்று சாமானியனுக்கும் இணையம் மூலம் எட்டி விடுகிறது ! அப்படி எட்டும் செய்திகள் வியாதிகளைப் பற்றியது எனும்போது, அவை பலருக்கு தேவையில்லாத மன உளைச்சலை ஏற்படுத்திவிடுகின்றன !


உதாரணமாக, சில வருடங்களுக்கு முன்புவரை தலைவலி என்றால் சரியான தூக்கமில்லை என்போம்... அல்லது வேலைபளு என்போம்... அதுவே சில நாட்கள் தொடர்ந்தால் நேரடியாக மருத்துவரை பார்த்துவிடுவோம்.

இன்று இடைபட்ட நேரத்தில் இணையத்தினால் குழம்பிவிடுவதுதான் பிரச்சனை ! தலைவலி என்று தட்டி பாருங்கள்... தூக்கமின்மை என்ற வார்த்தைக்கு முன்னால் தலை சம்மந்தமான பல நோய்களின் தகவல்கள் முன்னால் பாயும் ! அதுவரையிலும் மருத்துவரை பார்க்கலாம் என நினைத்திருந்தவர் அவசரமாய் அந்த இணையமே விளம்பரம் செய்யும் அதிநவீன மருத்துவமனைக்கு ஓடுவார் !

லஞ்சத்தையும் சேர்த்து பல கோடிகளில் மருத்துவபடிப்பை முடித்து, இன்னும் பல கோடிகள் வங்கி கடன் வாங்கி நவீன மருத்துவமனை கட்டிய மருத்துவர், உங்கள் தலைவலிக்கான காரணம் ஓய்வெடுக்காமல் பேஸ் புக்கில் லைக்ஸ் போட்டுக்கொண்டிருந்ததுதான் என ஒரு வரியில் சொல்லி அனுப்புவதற்கு முன்னால் அத்தனை சோதனைகளையும் முடித்துப் பல ஆயிரம் தொடங்கி ஒரு லட்சம் வரை வாங்கி விடுவார் !

வரும் முன் காப்பது நல்லதில்லையா ?...

நல்லதுதான் ! ஆனால் காப்பதற்கு முன்னால் வந்ததோ இனி வரப்போவதோ என்ன என்று சரியாகத் தெரிய வேண்டுமல்லவா ?!

என்னதான் செய்வது ?

கை கடுப்புக்கான காரணம் ரோஜா பதியனாகவும் இருக்கலாம்... அல்லது இதய நோயின் அறிமுறியாகவும் இருக்கலாம்தான் ! ஆனால் அதனைப் பரிசோதித்து முடிவு செய்ய வேண்டியது " உங்கள் மருத்துவரே " தவிர , இணைய தகவல்கள் அல்ல ! நான் " உங்கள் மருத்துவர் " எனக் குறிப்பிட்டிருப்பதைக் கவனமாக வாசியுங்கள்...

நமக்கென வாடிக்கையான ஒரு பொதுநல மருத்துவர் இருப்பது முக்கியம். அப்படி இருக்கும் பட்சத்தில் உங்களின் தொழில், உணவு பழக்கம், வாழ்க்கை முறை தொடங்கி உங்களுக்கு அடிக்கடி ஏற்படும் உடல்நல குறைவுகள், அதற்கான காரணங்கள் ,நீங்கள்  உட்கொண்ட மற்றும் உட்கொள்ளும் மருந்துகள், அவற்றின் தன்மை என அனைத்தும் அவருக்குத் தெரியும். இந்த தகவல்களின் உதவியாலும், அவரது அனுபவத்தாலும் உங்கள் தலைவலிக்கான காரணத்தை அவர் கண்டுபிடித்துவிடுவார். இல்லையெனில் மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகளையோ அல்லது பார்க்க வேண்டிய மருத்துவ நிபுணரையோ அவரே பரிந்துரைப்பார்.

வாழ்க்கையில் அவசர சிகிச்சைக்கான தேவையும் ஏற்படும்தான். தெரியாத மருத்துவரிடமோ அல்லது அவசரமாய் மருத்துவமனைக்கோ போக நேரிடும்தான். அப்படிப்பட்ட சூழலுக்குப் பிறகு அந்த மருத்துவ முடிவுகளைக் குடும்ப மருத்துவரிடம் காட்டி ஆலோசிப்பது முக்கியம்.

அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுமாயின், கால அவகாசம் இருக்குமானால் குடும்ப மருத்துவரிடமோ அல்லது அவர் பரிந்துரைக்கும் அந்தத் துறை சார்ந்த மற்றொரு மருத்துவ நிபுணரிடமோ ஆலோசித்தல் நலம் !

நலமாய் வாழ்ந்து நாலு பேருக்கு நல்லது செய்வோம் !



பட உதவி : GOOGLE
 
இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

 

Monday, February 16, 2015

மீண்டும் முபாரக்


இது " முபாரக் " பதிவின் தொடர்ச்சி.

ராஜா ரெக்கார்டிங் சென்ட்டர் நண்பர்களிடம் ஒரு தனித்தன்மை உண்டு. என்னதான் " மகா கெட்ட பசங்க " என்றாலும் நண்பர்களின் குடும்பத்தினர் யாராவது கண்ணில் பட்டுவிட்டால் போதும் !  ஒரு நொடியில் அந்நியன் கெட்டப்பிலிருந்து அடக்கமான அம்பியாக மாறிவிடுவார்கள் !

இந்த பதிவின் முதல் பாகத்தில் முபாரக் பாலகுமாரனை பொசுக்கியதை படித்தவர்களுக்கு அவன் கெட்டப் வித்தையில் கில்லாடி என்பது புரிந்திருக்கும் ! ஆனால் அவனின் கெட்டப் கிழிந்து தொங்கிய ஒரு சம்பவமும் உண்டு ! அதனை கிழித்தது என் அம்மா !!

என் அம்மா எல்லா விசயத்திலும் படு உஷார் ! முக்கியமாய் மனிதர்களை படிப்பதில் !

"  குடிச்சிட்டு வரான்... ஒதுங்கு ! "

வெகு தூரத்தில் நடந்துவருபவனின் தடுமாற்றத்தையும் மிக சரியாக கணித்துவிடுவாள் !

" தோ வந்துடறேன் அத்தை !... "

" இவன் எப்ப சிகரெட் குடிக்க ஆரம்பிச்சான் ?...! "

மதிய சாப்பாட்டுக்கு பிறகு கொல்லைப்புறம் ஓடும் என் இளம் மச்சினனுக்கு பின்னால் முனுமுனுப்பாள்...

" சொன்னேன்ல... பாத்தியா ? "

அவன் சென்றபிறகு கொல்லைப்புறம் சென்று துப்பறியும் சாம்புவாக மாறி சிகரெட் துண்டினை கண்டுபிடித்து காட்டுவாள் ! அம்மாவின் கணிப்பு தப்பியதே கிடையாது ! அதே போல தவறுகளை கண்டிப்பதிலும் படு சிக்கனமாய், நிதானமான ஆனால் யோசிக்க வைக்கும் வார்த்தைகளை உபயோகிப்பாள்.

ரு மாலை நேரம்...

குவார்ட்டர் மப்பும் கையில் சிகரெட்டுமாய் கடைக்கு முன்னால் நின்று என்னுடன் பேசிக்கொண்டிருந்தான் முபாரக்...

" டேய் ! உங்க அம்மாடா ! "

பதிவு செய்யும் பாடலுக்கு ஷார்ப்பை கூட்டிவிட்டு கடைக்கு வெளியே வந்த பாஸ்கர்  சன்னமாய் அலற, முபாரக் சிகரெட்டை பின்னால் மறைத்தான். அம்மா முபாரக்கை சந்திப்பது அதுதான் முதல் முறை ...

" யாரு வீடு தம்பி நீங்க ?... "

" அட... உங்க பாட்டி பேரு.... சுன்னாம்புக்கார வீதியில தானே பூர்வீக வீடு ?... உங்க அம்மாவும் நானும் சின்ன வயசுல ஒண்ணா விளையாடியிருக்கோம் தம்பி... ஏம்பா ? முபாரக் அந்த வீட்டு பிள்ளைன்னு என்கிட்ட நீ சொல்லவே இல்லையே ? "

முபாரக்கின் அம்மா தன் சிறுவயது தோழி என்ற சந்தோசத்தில் அம்மா தொடர, நான் நெளிய ஆரம்பித்தேன்... என்னைவிட அதிகமாய் முபாரக் ! அவன் பின்னால் பிடித்திருந்த சிகரெட் துண்டு விரலை சுட தொடங்கியிருந்தது !!

" சரி தம்பி... அம்மாவை கேட்டேன்னு சொல்லுங்க... "

ஒரு வழியாய் கிளம்பிய என் அம்மா அடுத்து கூறியதில்தான் முபாரக்கின் கெட்டப் கிழிந்தது !

" கையை பச்சை தண்ணியில காட்டுங்க தம்பி... இல்லேன்னா கொப்புளிச்சிடும் ! டேய்... தம்பிக்கு ஏதாச்சும் பாக்கு வாங்கி கொடுடா ! "

முகத்தில் எந்த சலனமும் காட்டாமல் கூறிவிட்டு சட்டென அம்மா நகர, முபாரக்கின் முகம் இருண்டது !

" ஏன்டா... அந்த வீட்டு பையனா இப்படி... "

நான் வீடு திரும்பியதும் மிகவும் வருந்தினாள். முபாரக் குடும்பம் ஊரின் பாரம்பரியமான குடும்பங்களில் ஒன்று. முபாரக்கின் தந்தை வங்கி மேனேஜர். அவனின் அக்காள்கள், அண்ணன் அனைவரும் பட்டதாரிகள்.


ரெக்கார்டிங் சென்ட்டரில் நடக்கும் எங்கள் அரட்டை நள்ளிரவையும் தாண்டும் சமயங்களின்  சில வேளைகளில் முபாரக்கின் தந்தை அவனை தேடி வருவார்.

" டேய்... தம்பி ! சாப்பாட்டை முடிச்சிட்டு வந்து பேசிக்கிட்டிருடா.... "

" நீங்க போங்கப்பா... தோ வந்திடறேன்.... நீங்க சாப்டீங்களாப்பா... ? "

சிகரெட்டை பின்னால் மறைத்துக்கொண்டு கெஞ்சும் தந்தையுடன்  முகம் திருப்பி பேசுவான் முபாரக். அவர் சென்றவுடன் தவறவிட்டதை தேடும் பார்வையுடன் தூர வெறித்தபடி அவசரமாய் புகையிழுப்பான்.

" டேய்... போய் சாப்டுட்டு வாடா ! நீ இப்படியே இருந்தா கடையை இழுத்து  மூடிடுவேன்  ஆமா ! "

சகாயம் அண்ணனின் அதட்டல் மெளனத்தை கலைக்கும் போது சிகரெட்டை தூர வீசிவிட்டு அவசரமாய் எழுந்து போவான் !

முபாரக்குடனான என் நட்பினால் தன் பால்ய தோழியுடனான என் அம்மாவின் தொடர்பு புதுப்பிக்கப்பட்டது ! அவர்கள் வீட்டுக்கு சென்றவள் அவனை பற்றி விசாரித்தபோது,

" அவனையும் மதித்து விசாரிக்கறீங்களே.... "

என அவனின் மூத்த அக்காள் சிரித்ததை வருத்தத்துடன் குறிப்பிட்டாள்.

" எல்லோரும் நல்லா படிக்கற குடும்பத்துல ஒருத்தனுக்கு படிப்பு ஏறலைன்னா பக்குவமா சொல்லனும்... மத்த திறமையை வளர்த்துவிடனும்... அதில்லாம பிஞ்சியிலேயே ஒண்ணுக்கும் உதவாதுன்னு திட்டினா வெம்பிதான் போகும் ! "

இன்று நினைத்தால் முபாரக்கின் நிலைக்கான உளவியல் காரணங்களை அம்மா அன்று அட்சரம் பிசகாமல் சொன்னது புரிகிறது !

" என்னா ?... உங்க பையன் அந்த ரெக்கார்டிங் சென்ட்டர் செட்டோட இருக்கறாப்போல... "

" பழக்கம்ன்னா நல்லவன் கெட்டவன் நாலு பேரும்தான் இருப்பான்... ! நாம இப்படித்தான் இருக்கனும்ங்கற தெளிவு இருந்தா யாரும் யாரு கூடவும் பழகலாம் ! "

வாரம் தவறாமல் அவர்களுடன் பாருக்கு சென்றாலும், சில்லி சிக்கனுடன் நிறுத்திக்கொண்டு நான் தடம் புரளாமல் தொடர்ந்ததற்கு என் பெற்றோர் என் மீது வைத்த நம்பிக்கையும், எனக்கு ஊட்டிய சுய பொறுப்புணர்ச்சியும் காரணமாக இருக்கலாம் என தோன்றுகிறது !

சிங்கிள் டீயும், சிசர்ஸ் சிகரெட்டும் சுகமாய் அமைந்து சுதி ஏறும் மாலை நேரங்களில் முபாரக்கின் பேச்சு களை கட்டும் ! அலுங்காமல் நலுங்காமல் மற்றவர்களை கிண்டலடிப்பான் ! கிண்டலடிக்கப்படுபவர்களுக்கு யாராவது " வக்காலத்து " வாங்கினால் தொலைந்தது....

"ஓய்... நீரு மட்டும் என்ன யோக்கியமா  ? "

எனத்தொடங்கிவிடுவான் ! கடை ஓனர் சகாயம் அண்ணனுக்கும் அதே " டிரீட்மெண்ட் " தான் ! ஆனாலும் யாரும் கோபித்துக்கொள்ள மாட்டார்கள். காரணம் அவன் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கும். இன்று நினைத்துபார்த்தால் அன்று நாங்கள் பேச நினைத்ததையெல்லாம் பயமின்றி பேசும் எங்கள் மனசாட்சியாக முபாரக் இருந்திருக்கிறான்  என  தோன்றுகிறது !



பெளர்ணமி இரவில் கள் குடிக்க போன அனுபவத்தை " கதை திரைக்கதை வசனம் " தம்பி ராமைய்யாவை போல வர்ணித்து கூறுவான்...

" பாரு... ஒத்தை பனைமரத்துக்கு கீழ... இந்தா... அங்க சகாயம்... அப்புறமா சூசை... ரமேஷ், பிச்சை, பாஸ்கர் அப்புறம் நானெல்லாம் இந்தப்பக்கமா உக்காந்திருக்கோம்... எல்லோர் கையிலயும் கள்ளு பானை ! இங்கிலீஸ்காரன் மாதிரி சகாயம் அண்ணன் நம்ம கள்ளு பானையை தூக்கி சியர்ஸ் சொல்றாரு...

" ஓய் ! கள்ளுக்கே சியர்ஸ் சொன்ன ஒரே ஆளு நீ தான்யா ! "

சட்டென கதையை விட்டுவிட்டு கலாட்டாவில் இறங்குவான். போதையில் சகாயம் அண்ணனும் " வா போ " தான் !

" என்னாண்ணே... உங்களையே வா போங்கறான் ?! "

" டேய் நீ சும்மா இருடா ! நான், அதை கேட்டா இன்னும் சொல்லாததையெல்லாம் சந்திக்கு கொண்டு வந்திடுவான் ! "

சகாயம் அண்ணனுக்கு கொம்பு சீவிவிட நினைத்தால் வாய் பொத்தி பம்முவார் !

" ம்ம்ம்... எங்க விட்டேன் ?... ஆங் ! எல்லோரும் பானையை தூக்கி வாயில வெச்சிருப்போம்... "

இன்று சின்ன திரையில் முக்கியமான தருணத்தில் விழும் விளம்பரங்களை போல அன்று சுவாரஸ்யம் கூடும் போது சட்டென நிறுத்தி தம் இழுப்பான் முபாரக் !

" டேய் பாம்புடான்னு கத்தறாரு சூசை... எங்களுக்கு நடுவுல இவ்ளோ நீள நல்லப்பாம்பு ! ஆளுக்கு ஒரு பக்கமா தெரிச்சி ஓடுறோம்... இதுல என்னா பியூட்டிங்கறியா ?... ஒருத்தன் கூட கள்ளுப்பானையை கீழ போடலடா ! ஓடி ஒதுங்கி குடிச்சிட்டோமுல்ல ?! "

ஜமா களைக்கட்டி அதிரும் !

நுகர்வோர் கலாச்சாரம் தொடங்கி ஊரின் கடைத்தெருவில் மாற்றங்களும் வளர்ச்சியும் வேகமாகி  உள்ளூர் டைமண்ட் கலர் சோடாவை கோக்கும் பெப்சியும் ஓரங்கட்ட அரம்பித்த காலம்...

ரெக்கார்டிங் சென்ட்டருக்கு எதிர்புறம் இருந்த தோட்டம் காம்ப்ளக்ஸாகி கீழ் கடை கூல் டிரிங்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் சென்ட்டராக மாறியது ! அந்த கடை ஓனருக்கு ஏனோ ஆரம்பத்திலிருந்தே எங்களை பிடிக்கவில்லை. சதா சர்வகாலமும் சிகரெட்டும் கையுமாய் நிற்கும் இளைஞர் கூட்டத்தினால் தன் கடைக்கு பெண் கஸ்டமர்கள் வருவதில்லை என்பது அவரது புலம்பல் ! ஆனால் உண்மையான காரணம் அவர் கடையின் ஜீஸை குடித்த பலருக்கு வயிற்றுபோக்கு ஏற்பட்டதுதான் என உறுதியாக நம்பினான் முபாரக் !

இப்படி இருந்த உறவை தூதரகம் மூடும் அளவுக்கு மோசமாக்கியது எங்கள் குரூப்பின் மெத்தப்படித்த சித்திக் !

 
ன்றாவது கடைப்பக்கம் வந்து மறைவாய் தம் இழுத்துவிட்டுபோகும் சித்திக் அண்ணன் அன்று எதிர்கடையை வெகு நேரம் முறைத்துக்கொண்டிருந்துவிட்டு சட்டென தெருவில் இறங்கி அந்த கடைக்கு போனார். சித்திக் அண்ணன் கை ஆட்டி பேச பேச, ஓனரின் முகம் பேஸ்த்தடிப்பது எங்கள் கடையிலிருந்தே தெரிந்தது !

" ஏன்டா... இத்தனை பேர் இருக்கீங்க... நாள் முழுக்க எதிர்க்கத்தானே பார்த்துக்கிட்டு இருக்கீங்க... ஒருத்தன் கண்ணுக்கும் தெரியலையாடா ?! "

" என்னா விசயம் சித்திக் ? சொன்னாதானே தெரியும்... ?! "

வழக்கம் போலவே சலனமற்ற குரலில் கேட்டார் ரிக்கார்டுகளை துடைத்து அடுக்கி கொண்டிருந்த சகாயம் அண்ணன் !

" எதிர் கடை போர்டை பாத்தீங்களா ?... cool drinks and snacksல  snacksக்கு  பதிலா snakes னு எழுதி வச்சிருக்கான் ? "

" டேய் ! டிகிரி படிச்சதை நிருபிச்சிட்டாருடா சித்திக் அண்ணன்... சகாயம் அண்ணே... சித்திக்குக்கு படிக்காத மேதை பாட்டை போடுங்க ! "

கலாட்டாவில் இறங்கிய முபாரக் அதோடு விடவில்லை...

" டேய் இப்ப புரியுதா நான் சொன்னது ?... மாப்ள பாம்பு ஜூஸ் வித்திருக்காருடா... அதான் ஒருத்தியும் வரலை ! "

முபாரக்கின் கூச்சல் எதிர்கடையை எட்ட, அந்த கடையின் ஓனர் எங்கள் மீது போர் பிரகடனம் செய்துவிட்டார் !

அடுத்த நாள் ஜூஸ் கடைக்கு வந்த டிராபிக் சார்ஜெண்ட்டுக்கு தன் கையாலேயே  ஜூஸ் கொடுத்த கடை ஓனர் எங்கள் கடையை காட்டி பேச அலர்ட் ஆனோம் ! முக்கியமாய் அவரிடம் காசு வாங்காததை கண்டு சொன்னார் படு ஜாக்கிரதை பாஸ்கர் அண்ணன் ! முபாரக் விசாரணையில் இறங்கினான்...

டீ குடிக்க சென்ற எதிர்கடை பையனின் பின்னால் சென்றவன் அன்றிரவு கடை மூடும் சமயத்தில் தான் திரும்பினான். வழக்கத்தைவிட கொஞ்சம் ஓவர் !

" யோவ் ! நீயெல்லாம் பெரிய மனுசனா... எங்க மேல கம்ப்ளெய்ண்ட் கொடுக்கனும்ன்னா வா ! நானே ஸ்டேசனுக்கு கூட்டிக்கிட்டு போறேன்... எஸ் ஐ நமக்கு இப்படி ! தெரியும்ல... காக்கி சட்டை போட்ட போலீஸ்காரனுக்கும் வெள்ளைசட்டை போட்ட டிராபிக் போலீசுக்கும் வித்யாசம் தெரியாத நீயெல்லாம்.... ஹரா.... "

அவன் காறியதில் கடைத்தெருவே கூடிவிட்டது ! மறுநாள் கடைத்தெரு பஞ்சாயத்துக்கு சென்று, இனி குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே நண்பர்கள் ஜமா, நள்ளிரவிலெல்லாம் கடைக்கு முன்னால் கூட கூடாது என சிலபல கட்டளைகளுக்கு தலைவணங்கி திரும்பினார் சகாயம் அண்ணன் !

முபாரக் மீன்டும் வருவான் !


பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

Wednesday, January 21, 2015

மதமாற்றம் மனமாற்றமாகுமா ?

லகெங்கும் அடிப்படைவாத குழுக்களின் ஆதிக்கம் அதிகமாகி வரும் இன்று அடிக்கடி ஊடக தலைப்புகளில் தோன்றும் வார்த்தைளில் ஒன்று  மதமாற்றம். மதமாற்றம் என்பது நேற்று தோன்றியது அல்ல. என்று இரண்டாவதாக ஒரு மதம் பூமியில் தோன்றியதோ அன்றே மதமாற்றமும் நிகழ தொடங்கிவிட்டது ! மதமாற்றத்துக்கு தனிமனித உணர்வு தொடங்கி சமூகம், பொருளாதாரம் என பல காரணங்கள் உண்டு. ஆனாலும் இன்று மதமாற்றம் அதிகமாக பேசப்படுவதற்கு காரணம் மதம் சார்ந்த அரசியல் மற்றும் கடைக்கோடி வரை பாயும்  ஊடக வீச்சு !

ஒரு மொழி, ஒரு மத பெரும்பான்மையை கொண்ட மேற்கத்திய நாடுகள் தொடங்கி உலகின் வேறு எந்த நாட்டையும்விட, உலகின் அனைத்து மதங்களையும் தன்னுள்ளே கொண்டு, சிக்கலான ஜாதி அடுக்குகளுடன் பலமொழி கலாச்சாரங்களை கொண்ட இந்தியாவில் மதமாற்றம் ஏற்படுத்தும் தாக்கமும் அதிர்வும் மிக அதிகம் !

தங்களின் தோற்றம் மற்றும் தேவை பற்றிய கருத்தை முன்வைப்பது இந்த பதிவின் நோக்கம் அல்ல என்றாலும், சற்றே சுருக்கமாக அதனை இங்கு குறிப்பிடவேண்டியது அவசியமாகிறது... எனவே, ஆத்திக, நாத்திக மற்றும் இரண்டுக்கும் நடுவில் அல்லாடும் அன்பர்கள் அனைவரும் உணர்ச்சிவசப்படாமல் இறுதிவரை படித்துவிட்டு பின்னூட்டம் பற்றி யோசிக்க வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள் !


உலகின் ஏனைய உயிர்களைப்போல பசிக்கு வேட்டை, ஆபத்தை உணர்ந்தால் ஓடி ஒளிதல் என்ற அடிப்படை உயிர்ச்சுழலிலிருந்து விடுபட்டு, என்ன செய்தால் உயிரை தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் ஆறாம் அறிவு உதித்த தருணத்திலேயே வழிப்பாட்டுக்கான அவசியமும் தோன்றியிருக்க வேண்டும் !

மற்ற உயிரினங்களை அடக்கியும், அழித்தும் மனிதன் தன்னை மேலானவனாய் பாவிக்க தொடங்கிய கணத்தில் தன்னால் அடக்க முடியாத இயற்கை சீற்றங்களை தன்னைவிட மேலானதாக பாவிக்கத்தொடங்கி, அவற்றிலிருந்து தன்னை காத்துக்கொள்ள, அதாவது உயிரை தக்கவைத்துக்கொள்ள தோற்றுவித்ததே வழிப்பாடு ! மதம் தொடங்கி மனிதனின் கண்டுபிடிப்புகள் அனைத்துமே உயிரை தக்கவைத்துக்கொள்வதற்கான போராட்டம்தான்.

த நம்பிக்கைகளுக்கான அடிப்படை என்ன ? மரணம் பற்றிய பயம். இத்தனை போராட்டமும் வீணா என்ற அச்சம். மரணத்துக்கு பிறகு என்ன என்பதை அறிந்துகொள்ள முடியாததே மத தேடலுக்கான  காரணம் !

இரண்டு சூழ்நிலைகளில் மனிதன் மதத்தை உதறத்துணிவான் !

அவன் மரணத்தை வெல்லும் சூழ்நிலையில் ! மரணமே கிடையாது எனும் போது அதற்கு பிறகான சொர்க்கம், நரகம், தீர்ப்பு நாளுக்கெல்லாம் தேவையில்லாதபோது மனிதனுக்கு மதத்தின் தேவை இல்லாமல் போகும் !

அல்லது இறப்புக்கு பின்னர் இதுதான் நடக்கும் எனும்போதும் மதம் மற்றும் மார்க்கங்கள் அவசியமற்று போகலாம் ! உதாரணமாக இறந்தவர்கள் அனைவருக்கும் பூமியை விட மேலான அற்புத உலகம் காத்திருக்கிறது என்பது உறுதிப்பட நிருபிக்கப்படுமானால் மனிதர்கள் மரணத்தைவிரும்பி ஏற்கும் நிலைக்கூட ஏற்படலாம் !


ரி, இனி மதமாற்றத்துக்கு வருவோம்...

இன்று பொதுகருத்தாக இருப்பது போல இந்தியாவில் மதமாற்றம் மற்றும் கட்டாய மதமாற்றம் முகலாயர்கள், ஆங்கிலேயர்களால் மட்டுமே ஆரம்பிக்கப்படவில்லை. இவர்களின் வருகைக்கெல்லாம் முன்னால் இந்திய சமயங்களுக்கிடையேயான மோதல்களுடன்  ஒப்பிட்டால் முகலாய, ஆங்கிலேயே காலத்திய மத கொடுமைகள் குறைவுதான் !

முகலாய, ஆங்கிலேய காலத்தில் மதமாற்றத்துக்கான தூண்டிலாக அமைந்தது இந்திய சமூகத்தின் ஜாதிய அடுக்கும், அடக்குமுறையும் ! மெரும்பாலான இந்தியர்கள் இஸ்லாமிய மற்றும் கிருஸ்த்தவ மதங்களுக்கு மாறியதற்கான காரணம் ஜாதிக்கொடுமையே !

ஆனால் மதமாற்றத்தால் மறைந்திருக்க வேண்டிய ஜாதிகள் புதிய மதங்களிலும் குடியேறியதுதான் ஆச்சரியம். தேவாலயங்களில் கீழ்சாதிக்காரர்களுக்காக தனி இடம் ஒதுக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் குறுக்குச்சுவர் கூட எழுப்பப்பட்டது. இதனை எதிர்த்த பாதிரிமார்கள் மாற்றப்பட்டார்கள் ! இந்த அளவுக்கு இல்லையென்றாலும் கூட இந்திய இஸ்லாமிய மார்க்கத்துக்கு என சில பிரிவுகள் உண்டு. தென்னிந்திய மரைக்காயர் முஸ்லிம்கள் வட இந்திய பூர்வீக பதான் முஸ்லீம்களுடன் அவ்வளவாக ஒட்ட மாட்டார்கள். லெப்பை பிரிவும் உண்டு !

புதிய மத தேடலை இரண்டு வகையாக பிரிக்கலாம்...

ஒன்று நாத்திகனின் தேடல். மற்றொன்று ஆத்திகனின் வேறு மத தேடல் !

ஒரு நாத்திகன் தன் அந்திம காலத்தில் ஏதோ ஒரு மதத்தின் மீது பற்றுக்கொள்வது இயல்பானதாகவே தோன்றுகிறது ! காரணம் இந்த பதிவின் ஆரம்பத்தில் சொன்ன மரண பயம்  ! வாலிபத்தில் பகுத்தறிவு பேசும் பலருக்கு வயோதிகம் நெருங்க நெருங்க, இறப்புக்கு பின்னர் என்ன  என்ற கேள்வி எழும்போது மதத்தின் நினைவும் வந்துவிடுகிறது !

ஆத்திகர்களின் மாற்றத்துக்கு வாழ்க்கை சூழல், தங்கள் மதத்தில் அவர்கள் நடத்தப்படும் முறை என பல காரணங்கள். இனி என்ன செய்வது என தெரியாமல் வாழ்க்கையில் திக்கற்று நிற்கும் தருணங்களிலும், ஏதோ ஒரு காரணத்தால் சொந்த மதத்தை சேர்ந்தவனே தன்னை ஒதுக்கும் நிலையிலும் ஆத்திகன் தன் பூர்வீக மதத்திலிருந்து விடுபட விரும்புகிறான் !

உணர்ச்சிவசப்படாமல் உள்வாங்கி யோசித்தால் மேலே குறிப்பிட்ட இரண்டு பேருமே மனத் தெளிவற்ற நிலையிலேயே மதம் மாறுகின்றனர் !


சீக்கிய குரு நானக்கிடம்,

" உங்கள் புனித புத்தகத்தில் இருப்பது முழுவதையும் ஒரே வரியில் கூறிவிட்டால் உங்கள் மதத்தை ஏற்றுக்கொள்கிறேன் ! "

என நாத்திகர் ஒருவர் கேட்டதாகவும், அதற்கு குரு நானக்...

" மற்றவர்கள் உனக்கு எதை செய்யக்கூடாது என நீ நினைக்கிறாயோ அதனை நீ அவர்களுக்கு செய்யாதே ! அவ்வளவுதான் !! "

எனக்கூறியதாகவும், அதனை கேட்ட நாத்திகர் சீக்கிய மதத்தில் சேர்ந்ததாகவும் ஒரு குட்டிக்கதை உண்டு.

இந்த கதை சீக்கிய மதத்துக்கு மட்டுமல்ல, உலகின் அனைத்து மதங்களின் சாரமும் இதுதான் !

இந்த தெளிவு இயல்பாகவே இருப்பவர்கள் நாத்திகர்களாகவே தொடரலாம்... இல்லாதவர்கள் சொர்க்கம், நரகம் பயத்துடன் ஆத்திகர்களாக அவரவர் மதத்திலேயே இருக்கலாம்  என்றாலும் ஒருவன் மாற்றுமதம் ஒன்றினால் ஆத்மார்த்தமாக ஈர்க்கப்பட்டு மாறினால் அது தனிமனித உரிமை. அதை பேச வேறு எவருக்கும் உரிமை கிடையாது ! இதற்கு மேலை நாட்டவரின் மதம் பற்றிய கண்ணோட்டத்தை உதாரணமாக குறிப்பிடலாம்...

அவர்களை தீவிர மத பற்றுடையவர்கள், மிதவாதிகள், கடவுள் நம்பிக்கையற்றவர்கள் என மூன்று தெளிவான குழுக்களாக பிரித்துவிடலாம். அந்த மூவருக்குமே இறை சார்ந்த நம்பிக்கை அந்தரங்கமானது ! வெளியில் பேசமாட்டார்கள் ! இதில் மிதவாதிகளில் சிலர் தங்கள் பிள்ளைகளுக்கு அனைத்து மத தத்துவங்களையும் போதித்து, தங்கள் பிள்ளைகளுக்கான மத தேர்வு உரிமையை அவர்களிடமே விட்டுவிடுவதும் அங்கு சகஜம் !

இங்கு மதமாற்றம் உணர்ச்சியுடன் விளையாடுவதாக அமைந்துவிடுவது சோகம் !

காதலுக்காக மதம் மாறுவதை ஒரு முக்கிய உதாரணமாக குறிப்பிடலாம்...

இதையும் மிக கவனமாக அலச வேண்டும் !

இரு வேறு மதங்களை சேர்ந்த ஜோடி திருமணம் முடிந்து ஒன்றாக பல காலங்கள் வாழ்ந்து, ஒருவர் ஏதோ ஒரு காரணத்தினால் மற்றவரின் மதத்தின்பால் ஈர்க்கப்பட்டு மதம் மாறுவது இயல்பானது ! தனிமனித உரிமை சார்ந்தது.



ஆனால் கண்டதும் காதலாகி, கல்யாணம் நெருங்கியவுடன் மதம் மாறினால்தான் திருமணம் என பெற்றோர்கள் சோல்லிவிட்டார்கள் என உணர்ச்சி மிரட்டலில் இறங்குவது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று ! வேற்றுமத திருமணத்துக்கு  பெற்றோர்கள் சம்மதிக்க மாட்டார்கள் என்று தெரியும் என்றால், அதனை எதிர்த்து நிற்கவோ, அல்லது எடுத்துச்சொல்லி சம்மதிக்கவைக்கவோ துணிச்சல் இல்லையென்றால் அந்த காதல் எதற்கு ?

காதலித்த காலத்தில் ஒருவர் மற்றொருவரின் மதத்தின் மீது ஆத்மார்த்த பற்றுக்கொண்டிருக்கலாம்தானே என்ற கேள்வி எழுகிறதா ?...

" இரு வேறு மதங்களை சேர்ந்த ஜோடி திருமணம் முடிந்து ஒன்றாக பல காலங்கள் வாழ்ந்து, ஒருவர் ஏதோ ஒரு காரணத்தினால் மற்றவரின் மதத்தின்பால் ஈர்க்கப்பட்டு மதம் மாறுவது இயல்பானது ! தனிமனித உரிமை சார்ந்தது. " ...

அதற்கு காலம் தேவை நண்பர்களே ! தைரியமாய் நின்று பேசக்கூட இடம் கொடுக்காத நம் சமூகத்தில் சில மாதங்களே கடந்த இளம் காதலர்களுக்கு அவரவர் மத தத்ததுவங்களை அலச ஏதய்யா நேரம் ?!!!

காதலுக்காகவும், அரசியலுக்காகவும் மதம் மாறவும், மதம் மாற்றவும் முயற்சிக்கும் வாலிப வயோதிக அன்பர்களே....

காதலிப்பவர்கள் ஓடிப்போயாவது திருமணம் செய்துக்கொண்டு பிள்ளைகள் பெற்று உங்கள் குடும்பத்தை வளர்ப்பதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் ஓட்டு வங்கி வளர்ப்புக்கு பிரியாணி பொட்டலங்களை மட்டும் பயன்படுத்திக்கொள்ளுங்கள் ! ( பிரியாணியில் வெஜிடபிளும் இருப்பதால் அனைத்து தரப்புக்கும் இதுவே போதுமானது ! )  உங்கள் ஓட்டு பிச்சைக்கு கட்சியின் கலர்களும், கறைகளும் படிந்த வேட்டியே போதும் ! தயவு செய்து மத சட்டையை கழற்றிவிடுங்கள் !

கடவுள்தான் மதங்களை படைத்தார் என்றால் அந்த மதங்களையும் அவரே பாதுகாத்துக்கொள்வார் !

இருந்த மதத்தின் அருமையை புரிந்துகொள்ளமுடியாத உங்களால் வந்த மதத்தில் எதையும் புரிந்துகொள்ள முடியாது ! இரண்டு மதங்களுமே உங்களால் கேவலப்படுவது மட்டுமே எஞ்சும் !




பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

Thursday, January 1, 2015

புத்தாண்டு நல்வாழ்த்துகள் !

மதம் ஜாதி
மொழி பிராந்தியம்
என நாம்
பிரிந்திருந்தாலும்
நமக்குள்ளிருக்கும்
மனிதம் ஒன்றுதான் !
அன்பே அதன்
அடிநாதம் !

குடும்பம் உறவு
நட்பு சுற்றம்
தாண்டிய சாமானியனையும்
நேசிப்போம் !
நாம் கடக்கும்
பாதைகளெங்கும்
அன்பு விதைப்போம் !
இனிவரும் வருடங்களில்
இப்பூமியை
நம் அன்பு
விருட்சங்களால்
இன்னும் அழகாக்குவோம் !

                    


                    





தை செய்ய வேண்டும், அதை நிறுத்த வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என பல்வேறு உறுதிமொழிகளுடன் ஒவ்வொரு புத்தாண்டையும்  தொடங்கி, அந்த உறுதிமொழிகளெல்லாம் காலண்டர் தாள்களைவிடவும் வேகமாய் உதிர்ந்து மறைந்த வேகத்தில் ஆண்டின் இறுதியை நெருங்கி, மீன்டும் ஒரு புத்தாண்டினை புது சத்தியத்துடன் தொடங்கி...

ஆகையால் தோழர் தோழிகளே... உறுதியற்ற உறுதிமொழிகளும் சாத்தியப்படாத சத்தியங்களும் வேண்டாம் !

மகிழ்ச்சியாய் இருப்போம் ! இந்த ஆண்டு முழுவதையும் சந்தோசமாய் கழிப்போம் !!

நீண்ட ஆயுள், ஆரோக்யம், செல்வம் என்றெல்லாம் வாழ்த்துகிறோமே தவிர சந்தோசமாக இருங்கள், அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள், உங்களை சுற்றி உள்ள இவ்வுலகின் அற்புதங்களை உணருங்கள் என வாழ்த்துவது கிடையாது !

சற்றே ஓடுவதை நிறுத்திவிட்டு யோசித்தோமானால் இந்த நொடி மட்டுமே நிரந்தரம் என்பது புரியும் ! நிலையற்ற இவ்வாழ்க்கையின் நிலயான இத்தருணத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்ளுவோம். இன்னும் நிறைய நேரமிருக்கிறது இன்னும் நிறைய நாட்கள் இருக்கின்றன என்றே நினைக்கிறோம். ஆனால் நாளையே இந்த வாழ்க்கை நின்றுவிடுமானால்... நாம் சாதிக்க நினைத்தையெல்லாம் சாதித்து விட்டோமா ? நாம் நேசிப்பவர்களிடம் சொல்ல நினைத்ததையெல்லாம் சொல்லி விட்டோமா ? நான் எப்படி வாழ நினைத்தேனோ அப்படி வாழ்ந்துவிட்டேன் அல்லது வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என நம்மில் எத்தனை பேரால் சொல்ல முடியும் ?!

நமக்கு  நல்லது என நாம் மனதில் வரித்துக்கொண்ட கற்பனைகளை தேடி நித்தமும் ஓடுவதை  சற்றே நிறுத்திவிட்டு நிதானித்து பார்த்தோமானால் நம்மை சுற்றி நமக்காக நிகழ்ந்து கொண்டிருக்கும் நல்லவைகள் புலப்படும் ! நம்மை தேடிவரும் நன்மைகளை நாம் உணராதது புரியும் !




ங்களின் பெற்றோர்களை கொண்டாடுங்கள். வயோதிகத்தின் நிழல் வேகமாய் படரும் அவர்கள் உங்களுடன் இருக்கும் பொழுதை பெருமையுடன் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

உங்களை இன்னும் பிள்ளைகளாய் நேசிப்பது அவர்கள் மட்டும்தான். அவர்கள் உங்களை வளர்த்த விதத்தில், உங்களுக்கு அளித்த வசதிகளில் குறைகள் இருந்திருக்கலாம், ஆனால் அவர்களால் முடிந்ததை முழு மனதுடன் உங்களுக்கு அளித்தார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். இன்றும் அவர்கள் உங்களின் பின்னால் இருக்கிறார்கள். உங்களின் வெற்றிகளை பாராட்ட ! தோல்வியின் போது தோள்தொட்டு தூக்க ! உங்களின் மகிழ்ச்சியை அவர்களுடையதாய் கொண்டாட ! உங்களின் துக்கத்தை தாங்கள் ஏற்றுக்கொள்ள !

காதலனோ காதலியோ அல்லது கணவனோ மனைவியோ, உங்கள் துணைக்கான நேரத்தை அவர்களுடன் முழுமையாக செலவிடுங்கள்.

நம் வேலை பளு, குடும்ப தேவைகள், அன்றாட காரியங்கள் என பலவற்றுக்கு மத்தியில் நமக்கென காத்திருக்கும், நமக்கென வாழும் நம் துணையின் தேவைகளை பல நேரங்களில் மறந்து விடுகிறோம் ! ஆனால் வாழ்க்கை படகு ஒரு துடுப்பை விட இரு துடுப்புகளால் செலுத்தபடும்போது சீராய் போகும் என்பதை மறந்துவிடாதீர்கள் !பரஸ்பர புரிதலும், ஒற்றுமையும், விட்டுக்கொடுத்தலும் இல்லையென்றால் இல்லறத்துக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும் !

உங்களின் குழந்தைகளுடனான நேரத்தை அவர்களுக்காக முழுமையாய் செலவிடுங்கள். மிக வேகமாய் வளரும் அவர்களின் சிறகுகள் விரிந்து அவர்களின் வாழ்க்கைக்காக அவர்கள் பறந்து விடுவார்கள்.

நம் குழந்தைகளை கண்காணிப்பதிலும், கண்டிப்பதிலும், அறிவுரைகள் கூறுவதிலுமே அவர்களுக்கான நேரத்தை செலவிடும் நாம் நம் குழந்தைகளை பற்றி பெருமைபட்டது எப்போது ? அவர்களை கடைசியாய் பாராட்டியது எப்போது ? அவர்களின் வளர்ச்சிக்கு தேவை நம் ஊக்கம். அது மட்டும் தான் நாம் நம் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு அளிக்கும் உறுதியான அஸ்த்திவாரம்.

நண்பர்களை நினைவில் கொள்ளுங்கள் !

எந்த எதிர்ப்பார்ப்புகளும் அற்ற பால்ய பருவத்தில் நம் தோள் மீது கைபோட்டு நடந்தவர்கள் தொடங்கி, வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நம்முடன் இணைந்தவர்கள் எத்தனைபேர் ? ஓடி வந்து உதவியவர்கள் எத்தனை பேர் ? அவ்வப்போது அவர்கள் நமக்காக நம் பாதையை மறைத்த தடைகளை நகர்த்தியிராவிட்டால் நாம் இன்று இங்கிருந்திருப்போமா ? தவறான புரிதல்களால் அவர்களுக்கும் நமக்குமான உறவில் விரிசல்கள் ஏற்பட்டிருக்கலாம் ! தொடர்பு நின்று போயிருக்கலாம் ! ஆனால் அவர்களுடன் நாம் கழித்த இனிய தருணங்கள் நம் மனங்களில் கல்வெட்டுகளாய் பதிந்தேதான் இருக்கும் !

அந்த நண்பர்களை மீன்டும் சந்திக்க நேர்ந்தால் முதல் புன்னகை நம்முடையதாக இருக்கட்டும் !



மொத்தத்தில் இந்த உலகத்தை, அது நாம் கேட்காமலே நமக்கு கொடுத்திருக்கும் கொடைகளை நேசிப்போம் ! மகிழ்ச்சியாக இருப்போம் ! நிரந்தரமற்ற இவ்வாழ்வின் நிரந்தரமான இத்தருணத்தை நிறைவாக அனுபவிப்போம் ! நம்மை சுற்றியுள்ள இவ்வுலகின் அற்புதங்களை ரசிப்போம் ! நம் அன்பினால் இவ்வுலகுக்கு இன்னும் கொஞ்சம் அழகூட்டுவோம் !

வாழ்க்கை அழகானது ! அதனை அழகாக நீங்கள் நினைக்க நினைக்க, அது இன்னும் அழகாக உருவெடுக்கும் ! ஒரு குழந்தையாய் விளையாடுங்கள் ! பைத்தியமாய் நடனமாடுங்கள் ! கிறுக்கனைபோல் கத்தி ஆழ சுவாசியுங்கள் !!!

இவ்வுலகம் அற்புதங்கள் நிரம்பியது ! இத்தருணத்தில் வாழ்வதால் மட்டுமே அந்த அற்புதங்களை உணர முடியும் !

ஒவ்வொரு விடியலையும் ஒரு புத்தாண்டாய் கொண்டாடுவோம் !


 ( 2013 மற்றும் 2014 வாழ்த்து பதிவுகளின் திருத்தப்பட்ட தொகுப்பு )

பட உதவி : GOOGLE


 இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.