Friday, September 29, 2017

ஒரு ஜிமிக்கி கம்மலும் பல தமிழ் பாடல்களும் !

எந்த வரையறைகளுக்குள்ளும் அடங்காத ஒரு இசைப்பிரியன் நான் ! சில நாட்களுக்குப் பாகவதரின் மன்மத லீலையைக் கேட்பேன்... அடுத்ததாக அமெரிக்கப் பங்க் ராக் குழுவான கிரீன் டே பாடிய " வாக் அலோன் " பாடலுக்குத் தாவி விடுவேன் ! சில வருடங்களுக்கு முன்னர்ப் பன்வாரி தேவி என்ற ராஜஸ்தான் மாநில நாட்டுபுற பாடகியும் ஹார்ட் கெளர் என்ற இந்திய ராப் பாடகியும் ராம் சம்பத்தின் இசையில் பாடிய பியூஷன் வகைப் பாடலை கேட்க நேர்ந்து, பல மாதங்களுக்கு அந்தப் பாடலை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தேன் ! எனக்கு ராப் ஆகாது என்றாலும் அத்தனை வாத்தியங்களின் இசையையும் மீறி, தனித்துத் தெறிக்கும் பன்வாரி தேவியின் குரல் அந்தப் பாடலை வேறு உயரத்துக்கு இழுத்துச் செல்லும் ! சமீப நாட்களாக " டசக்கு டசக்கு " பாடலை அடிக்கடி பரோட்டா நல்லிக்கறி சாப்பிட்டபடி கேட்டு கேட்டு அஜீரணக் கோளாறாகிவிட்டது !
இசைப்பிரியன் என்று சொல்லிக்கொள்கிறேனே தவிர, நான் ஒரு பாடலின் இரண்டு வரிகளைக் கூட ராகத்துடன் பாடத்தெரியாதவன் ! கூழாங்கற்களையும் தாண்டி, மலையையே விழுங்கி சாதகம் செய்தாலும் எனக்குக் குரல்வளம் தேறாது என்பதைப் பள்ளி பருவத்தில் பங்குபெற்ற முதல் பாட்டு போட்டியிலேயே தெரிந்துக்கொண்டதால் குளியலறையில் கூட நான் பாடுவதில்லை !

ஒரு பாடல் பிரபலமாகி வருகிறது என்ற செய்தி காதில் விழுந்தால் அது எந்த மொழி பாடலாக இருந்தாலும் அந்தப் பாடலை எனக்கு உடனடியாகக் கேட்டுவிட வேண்டும் ! கல்லூரி மாணவ மாணவியரின் நடனம் தொடங்கி, வடிவேலு வெர்ஷன், மிஸ்டர்.பீன் வெர்ஷன் எனத் தறிக்கெட்டு பரவிய சமீபத்திய யூ டியூப் வைரலான ஜிமிக்கி கம்மல் மலையாள பாடலையும் அப்படித்தான் கேட்டேன்...

ஜிமிக்கி, கம்மல் போன்ற வார்த்தைகளை வைத்து கல்லூரி மாணவர்கள் மாணவிகளைக் கிண்டலடித்துப் பாடும் பாடலாக அது இருக்கும் என முதலில் நினைத்தேன்... நாம் ஒன்றை தேடினால் நாம் தேடிய ஒன்றுடன் அது சார்ந்த ஆயிரம் தகவல்களையும் கையூட்டுக் கேட்காமல் தரும் இணையம் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கான தமிழ் அர்த்தம் கொடுக்கும் ஒரு காணொளியையும் எனக்கு அருளியது !

கேரளாவை தாண்டி தமிழ் நாட்டையும் ஆட்டி வைக்கும் ஜிமிக்கி கம்மல் பாடல் மற்றும் நடனங்கள் இணையத்தில் தமிழ் நாட்டு கல்லூரி மாணவர்களால்தான் அதிகம் பிரபலபடுத்தபடுகிறது என ஆரம்பித்து, ஒரு அந்நிய மொழி பாடலை கேட்பதற்கு முன்னர் அந்தப் பாடலின் அர்த்தத்தைப் புரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்ற அறிவுரையுடன் தொடங்கிய அந்தக் காணொளியின் மூலம் பாடலின் முதல் இரண்டு வரிகளுக்கான அர்த்தத்தைத் தெரிந்துக்கொண்டேன்...

" என் அம்மாவின் ஜிமிக்கி கம்மலை அப்பா எடுத்துவிட்டார்..
அப்பாவின் சாராயப் பாட்டிலை அம்மா காலி செய்துவிட்டாள் ! "

முதல் வரியையாவது சகித்துக்கொள்ளலாம் இரண்டாவது வரியை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதாக முடிந்த அந்தக் காணொளியை போல இன்னும் பல கண்டன பதிவுகளை இணையத்தில் காண முடிகிறது. அவற்றின் பின்னூட்டங்களில் வாதம் என்ற பெயரில் பொதுவெளியில் பயன்படுத்த கூசும் வார்த்தைகளில் ஒருவரை ஒருவர் திட்டிகொள்கிறார்கள் ! தமிழ் பத்திரிக்கைகளிலும் அந்தப் பாடலின் அர்த்தம் பற்றிய புலம்பல்களைக் காண முடிகிறது. இவற்றையெல்லாம் கண்டவுடன் நான் அடிக்கடி எழுத நினைத்து முடியாமல் போன ஒன்று நினைவுக்கு வந்தது...

தமிழ் சினிமாவின் காதல் பாடல்கள் மற்றும் பெண்கள் சார்ந்த காட்சிகள் !

நான் நிறையத் தேடியும் ஜிமிக்கி கம்மல் பாடலின் முதல் இரண்டு வரிகளுக்கான அர்த்தத்தை மட்டுமே அறிய முடிந்தது. ஒரு தளத்தில் கிடைத்த அரைகுறை ஆங்கில மொழி பெயர்ப்பை வைத்து கணித்தால் அந்தப் பாடல் நாட்டுப்புற அல்லது கானா வகைப் பாடல் வரிகளைக் கொண்டதாக இருக்கும் எனப் புரிகிறது !

ஜிமிக்கி கம்மல் பாடல் வரிகளை ஒழுக்கம், மரியாதை சார்ந்து கண்டிப்பதாக இருந்தால் நம் தமிழ் சினிமாவின் பெருவாரியான பாடல்களைக் கேள்விக்குட்படுத்த வேண்டி வரும் !...

அன்றுமுதல் இன்றுவரை காமத்தை பிரதானப்படுத்தியே காதல் பாடல்களை எழுதி வருகிறார்கள் தமிழ் சினிமாவின் பாடலாசிரியர்கள் ! ஐம்பதுகளில் இலைமறை காயாகக் கவிதைகளில் பொதிந்து, எண்பதுகளில் நடிகைகளின் ஆடைகளைப் போலவே தரம் குறைந்து பின்னர் " எப்படி எப்படிச் சமைஞ்சது எப்படி ? " எனத் தரம் தாழ்ந்த கேள்வியையே பாடலாக்கும் அளவுக்குப் பரிணாம வளர்ச்சியைக் கண்ட திரையுலகம் நம் தமிழ் திரையுலகம் ! முக்கியமாய் எண்பதுகளில் பாடல்வரிகளில் ஆபாசம் கூடியது மட்டுமல்லாமல், அதன் உச்சமாக விசித்திரமான முக்கல் முனங்கல் சப்தங்களும் சேர்ந்துகொண்டன !

" விசித்திர சப்தங்கள் " கொண்ட பாடல் என்றதுமே தமிழ் சினிமா பாடல் ரசிகர்களுக்குச் சகலகலா வல்லவன் படத்தின் நேத்து ராத்திரி யம்மா பாடலும் நிலா காயுது பாடலும் நிச்சயம் ஞாபகத்துக்கு வரும் !

அந்தப் படம் வெளிவந்த காலகட்டத்தில் கமல் உச்ச நட்சத்திரமாக ஜொலித்தார் என்றால் இசையமைத்த இளையராஜா எதையும் சாதிக்கும் இடத்தில் இருந்தார். இந்த இரு ஆளுமைகளும் நினைத்திருந்தால் அந்தச் சப்தங்கள் இல்லாமலேயெ அந்தப் பாடல்களை அமைத்திருக்கலாம். மிக அருமையான அந்தப் பாடல்களும் " விசித்திர சப்தங்கள் " இல்லாமல் வெளிவந்திருந்தாலும் நிச்சயம் வெற்றிப் பெற்றிருக்கும் ! அப்படிப்பட்ட சூழலில் அந்தச் சப்தங்களுக்கான அவசியத்தையும் தேவையையும் நாம் அலசுவதைவிட அவர்களிடமே ஏதாவது பேட்டியின் போது யாராவது கேட்டால் நியாயமாக இருக்கும் எனத் தோன்றுகிறது !

மேற்கண்ட வரிகளுக்காகக் கமல் மற்றும் ராஜா ரசிகர்கள் தயவு செய்து சண்டைக்கு வந்து விடாதீர்கள் ! இது ஒரு உதாரணம் மட்டும் தான் ! அந்தக் காலகட்டத்தில் இளையராஜா முதல் டி.ராஜேந்தர் வரை இன்னபிற இசையமைப்பாளர்களும் அப்படிப்பட்ட பாடல்களை இயற்றியிருக்கிறார்கள்... ரஜினிகாந்தும் " அடிக்குது குளிரு " எனப் பிதற்றியிருக்கிறார் ! நான் மேலே குறிப்பிட்ட " எப்படி எப்படி " பாடல் தேவா இசையமைத்தது !

பலாத்காரத்துக்கு ஆளான பெண் தற்கொலை செய்துகொள்வது அல்லது அவளைப் பாலியல் பலாத்காரம் செய்தவனுக்கே மணம் முடித்து வைப்பது, கேடுகெட்டு அலையும் கணவன் திருந்திவரும் வரையிலும் மனைவி மட்டும் பத்தினி பதிவிரதையாகக் காத்திருப்பது போன்ற காட்சிகள் தொடங்கி, கணவன் வீட்டுக்குச் செல்லும் பெண் தன் கணவனின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி மிச்சமிருக்கும் நேரத்தில் மாமனார் மாமியார் தொடங்கி அந்த வீட்டுத் தொழுவத்தில் இருக்கும் மாடுகள் வரை பணிவிடை செய்து பிறந்த வீட்டின் புகழை நிலைநாட்ட வேண்டும் என்பதான பாடல் வரிகள் என அனைத்திலும் பெண் ஆணுக்கு கீழ்படிந்தே வாழ பிறந்தவள் என்ற ஆணாதிக்க நிலைப்பாட்டின் உச்சமாக, பெண்களை உடல் ரீதியாகவே மட்டும் ஆணுக விரும்பும், பெண்ணைப் போகப் பொருளாக மட்டுமே நினைத்து அடைய துடிக்கும் ஒரு சமூகத்தின் பிரதிபலிப்பாகவே இருந்தது என்பதுகளின் தமிழ் சினிமா !

இதனை இல்லை என மறுக்க விரும்புபவர்களின் உதாரணங்களாக நூறாண்டு கண்ட சினிமாவில் நிறைய விதிவிலக்கான படங்களும், பாடல்களும் உண்டு என்றாலும் பாலியல் அர்த்தம் பொதிந்த காதல் பாடல்களும், கதாநாயகியின் உடல் கவர்ச்சியை முன்னிறுத்தும்காட்சிகளுமே அதிகம் என்பதை யாராலும் மறுக்க இயலாது.

சரி, இனி ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு வருவோம்...
 வேற்று மொழி பாடல்கள் தமிழ் நாட்டில் தறிகெட்டு ஹிட்டடிப்பது ஒன்றும் புதிதில்லை. அதே போலப் பல தமிழ் பாடல்களும் எல்லை, மொழி பேதங்கள் தாண்டி பிரபலமாகியதும் உண்டு ! பிரபுதேவா நடித்த லவ்பேர்ட்ஸ் படம் வெளிவந்த சமயத்தில் அந்தப் படத்தின் " நோ ப்ராப்ளம் " பாடலை ஒரு ஆப்ரிக்க இளைஞன் பாரீஸ் மெட்ரோ ரயிலில் பாடிக்கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன் ! அந்தப் பாடலின் வரிகளும் தரமானவை அல்ல ! ஒரு பாடல் பிரபலமாவதற்குப் பிரதானம் அதன் தாளக்கட்டும் இசையும்தானே தவிர மொழி இரண்டாம் பட்சம்தான் ! கொரிய பாடலான கங்னம் ஸ்டைலை ஐரோப்பியர்கள் தொடங்கி அமெரிக்கர்கள்வரை அனைவரும் அரசியல் மறந்து ஹிட்டாக்கியதை மறக்க கூடாது !!!

என்பதுகளின் நடுவில் பாகிஸ்தான் பாப் பாடகரான ஹசன் ஜஹாங்கீர் பாடிய 
" ஹவா ஹவா " பாடல் தமிழ் நாட்டை ஆட்டிவைத்தது ! யூ டியூப் இல்லாத அந்தக் காலத்தின் அனைத்து பள்ளி கல்லூரி விழாக்களிலும் அந்தப் பாடலுக்கு நடனம் ஆடினார்கள் ! இன்றுவரை அந்தப் பாடலுக்கான அர்த்தம் யாருக்கும் தெரியாது ! " சோலி கே பீச்சே " பாடலும் தமிழர்களைக் கிறுகிறுக்க வைத்து, பின்னர் " சோலிக்குள் என்ன இருக்கு " எனத் தமிழ் பதிப்பாகவே வெளியான போதும் பெரிதாகக் கண்டிக்கப்படவில்லை !

ஜிமிக்கி கம்மல் மட்டும் இத்தனை வாத பிரதிவாதங்களை உண்டு பண்ணுவதற்குக் காரணம் ? ...

அம்மாவின் கம்மலை சுடும் அப்பாவை மன்னித்துவிடலாம் ! அப்பாவின் பாட்டிலை அண்ணனோ தம்பியோ காலி செய்ததாகக் கூறினாலும் தவறில்லை !ஆனால் அம்மா குடித்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை ! சட்டென உணர்ச்சிவசப்படாமல் யோசிக்க வேண்டும்... அம்மாவுக்குப் பதிலாக அக்கா என்றாலும் தங்கச்சி என்றாலும் இங்குச் சலசலப்புதான் எழும் !

அம்மா என்ற மரியாதை மதிப்புமிக்க ஒழுக்க ஓட்டுக்குள் ஒளிந்திருப்பது பெண் எப்படிக் குடிக்கலாம் அல்லது குடிப்பதாகச் சொல்லலாம் என்ற ஆணாதிக்கக் கசப்பு தான் ! பெண்கள் பார்க்க நடு வீட்டில் வைத்து ஆண்கள் குடிக்கலாம்... அப்படிக் குடிக்கும் ஆணுக்கு பெண்பிள்ளை சிக்கனும், ஆம்லட்டும் சைடு டிஷ்ஷாகச் சமைத்துக் கொடுக்கலாம்... ஆனால் அதையெல்லாம் பார்த்து அவள் குடிக்க முயன்றால் போச்சு !

மேலும் இந்தப் பாட்டுக்கு நடனமாடி பிரபலமான ஷெரின் என்ற பெண்ணைப் பற்றிய யூ டியூப் பதிவுகளும் நம் சமூகத்தில் புரையோடியிருக்கும் பாலியல் வக்கிரத்துக்குச் சாட்சி. இவ்வளவுக்கும் அந்தப் பெண் பாரம்பரிய உடையில், கண்ணியமான நடன அசைவுகளுடன் தான் ஆடியிருக்கிறார்... இது போன்ற நடனங்கள் இன்று பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சகஜம். நம் வீட்டு பெண்பிள்ளை இப்படி ஆடிய ஒரு நடனத்துக்கு வக்கிர கருத்துகள் வந்து விழுந்தால் நம் பாடு எப்படி இருக்கும் ?

பாலியல் உணர்ச்சியைத் தூண்டும் விதமாக அமைந்த ஊடக சாளரங்கள் ஒருபுறம்,பாலியல் உணர்ச்சி பேசக்கூடாத பாவம் என்பதான ஒழுக்கம் மறுபுறம் எனப் பிரிந்த இரெண்டுங்கெட்டான் சமூகத்தின் யதார்த்த அவலம் இது !

சமீப படம் ஒன்றின் நகைச்சுவை காட்சியில் அப்பாவின் மது பாட்டிலை அவரது இரு மகன்களும் தங்களுக்காக ஒளித்துக்கொள்வார்கள். அப்பா தேடி அலுத்த பிறகு, இருவரும் குடிக்க ஆரம்பிக்கும் நேரத்தில் அம்மா ஒரு குவளையை வளைந்து நெளிந்து உடம்பெல்லாம் வலி என்றபடி நீட்டுவார்... " நீயும் சரக்கு போடுவியா ? " எனக் கேட்கும் மகனிடம், எனக்கு அல்ல உன் அப்பாவுக்கு என்பார் !

இந்தக் காட்சியை விடவும் ஜிமிக்கி கம்மல் பாடல் வரிகள் ஒன்றும் மோசமானதாகத் தோன்றவில்லை ! மேலும் அந்தப் பாடலோ அல்லது அதன் காட்சி அமைப்போ என்னைப் பெரிதாகக் கவரவுமில்லை ! ஜிமிக்கி கம்மல் பாடல் ஒரு சீசன் ஹிட் ! அவ்வளவுதான் !
 சரி, பாலிவுட் பாட்ஷாவான ஷாருக்கான் தன் மார்க்கெட்டை நம்பாமல் சன்னி லியோனின் ஜாக்கெட்டை நம்பும் இன்று தமிழ் சினிமாவில் பெண்களைப் பற்றிய பார்வை மாறியிருக்கிறதா ?

சூப்பர் ஸ்டார், உலக நாயகன் தொடங்கித் தல தளபதிகளின் படங்களில் இன்னும் நாபிச்சுழி நடனங்கள் மாறவில்லை என்றாலும் கதையை நம்பும் இயக்குனர்கள், இயக்குனர்களை நம்பும் நடிகர்கள் எனப் புதுஅலையாய்க் கிளம்பியிருக்கும் இளம் தலைமுறை படங்களில் பெண்களைக் காட்சிபடுத்துவதில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை பற்றிச் சினிமாவை அக்குவேறு ஆணிவேறாக அலசும் எந்த விமர்சகரும் இதுவரை விரிவாக அலசாதது ஆச்சரியம் !

தமிழ் சினிமாவின் மாற்றத்தை விளக்க எத்தனையோ சமீபத்திய படங்களை உதாரணமாகச் சொல்லலாம் என்றாலும் , ஒரு நல்ல சினிமா தரும் அனுபவத்தை எனக்கு முழுவதுமாக வழங்கிய விக்ரம் வேதா படத்தின் இரு காட்சிகளைக் குறிப்பிட்டாலே போதும் எனத் தோன்றுகிறது !

இளம் கணவன் மனைவி கூடலின் ஆரம்பமாகத் தொடங்கும் யாஞ்சி பாடல்... ஒரு காட்சிக்குள் மிகத் தாமதமாக நுழைந்து, விரைவாக வெளியேறுவதே ஒரு சிறந்த இயக்குனருக்கான அடையாளம் என்பதற்கு உதாரணமாக அமைந்த இந்தப் பாடலின் காட்சியமைப்பை நிலா காயுது பாடலுடன் ஒப்பிட்டு யோசித்தால் மாற்றம் புரியும் !

அதே போல டசக்கு டசக்கு பாடல் !

எண்பதுகளின் சினிமாவில் கடத்தல்காரர்களும் அடியாட்களும் கூடும் கொண்டாட்ட காட்சி என்றால் மதுபாட்டில்கள் உருளும் மேசை மேல் டூ பீஸ் உடையில் ஒரு நடன மங்கையும் உருண்டு குலுங்கி ஆட வேண்டியது அவசியம் ! ஷாருக்கானின் ராயீஸ் படத்திலும் அப்படிப்பட்ட காட்சி இடம்பெற்றதைதான் அவர் ஜாக்கெட்டை நம்பியதாகக் குறிப்பிட்டேன் !

ஆனால் டசக்கு டசக்குப் பாடலில் தாடி மீசையுடன் தாதாக்கள் மட்டுமே ஆடி களித்தது தமிழ் சினிமாவின் அற்புத மாற்றம் !



பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

15 comments:

  1. இந்தப் பாடலை ஒருமுறை யூ டியூபில் பார்த்தேன். இதன்பின் இருக்கும் இவளவு அரசியல் / சண்டைகள் தெரியாது.

    ReplyDelete
  2. ஆகா! ஆகா!! ஆகா!!! பிய்த்து உதறி விட்டீர்கள் ஐயா!

    ஜிமிக்கி கம்மல் பாடல் பெருவெற்றி அடைந்ததும், அதை ஆடிய அந்தப் பெண் ஷெரின் புகழ் அடைந்ததும்தாம் தெரியும். ஆனால் பாடலைக் கேட்கவில்லை. இது தொடர்பாக இவ்வளவு சர்ச்சைகள் ஏற்பட்டதும் தெரியாது. ஆனால், உங்கள் பதிவு இது தொடர்பான சர்ச்சைகள் அனைத்துக்கும் சாட்டையடி!

    //அம்மா என்ற மரியாதை மதிப்புமிக்க ஒழுக்க ஓட்டுக்குள் ஒளிந்திருப்பது பெண் எப்படிக் குடிக்கலாம் அல்லது குடிப்பதாகச் சொல்லலாம் என்ற ஆணாதிக்கக் கசப்பு தான் ! பெண்கள் பார்க்க நடு வீட்டில் வைத்து ஆண்கள் குடிக்கலாம்... அப்படிக் குடிக்கும் ஆணுக்கு பெண்பிள்ளை சிக்கனும், ஆம்லட்டும் சைடு டிஷ்ஷாகச் சமைத்துக் கொடுக்கலாம்... ஆனால் அதையெல்லாம் பார்த்து அவள் குடிக்க முயன்றால் போச்சு// - மிகச் சரியாகச் சொன்னீர்கள்! பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என உருவாக்கப்பட்டிருக்கும் எல்லா வரைமுறைகளும் ஆண்களால் உருவாக்கப்பட்டவை. இவற்றைத் தாண்டினால் பெண்ணின் நிலைமை அவ்வளவுதான். அவள் தாயோ தாரமோ மகளோ - இரக்கம் பார்க்க மாட்டார்கள்.

    //நம் வீட்டு பெண்பிள்ளை இப்படி ஆடிய ஒரு நடனத்துக்கு வக்கிர கருத்துகள் வந்து விழுந்தால் நம் பாடு எப்படி இருக்கும் ?// - அதை எவன் சிந்திக்கிறான்? இதிலிருந்தே தெரியவில்லையா, இங்கு ஒழுக்கம், கட்டுப்பாடு, பண்பாடு எனப் பேசும் எந்த ஒழுக்க சீலனும் மற்ற பெண்களைத் தாயாகவோ தங்கையாகவோ பார்ப்பதில்லை என்பது?

    //பாலியல் உணர்ச்சியைத் தூண்டும் விதமாக அமைந்த ஊடக சாளரங்கள் ஒருபுறம்,பாலியல் உணர்ச்சி பேசக்கூடாத பாவம் என்பதான ஒழுக்கம் மறுபுறம் எனப் பிரிந்த இரெண்டுங்கெட்டான் சமூகத்தின் யதார்த்த அவலம் இது !// - அருமை! கச்சிதம்!!!

    //கதையை நம்பும் இயக்குனர்கள், இயக்குனர்களை நம்பும் நடிகர்கள் எனப் புதுஅலையாய்க் கிளம்பியிருக்கும் இளம் தலைமுறை படங்களில் பெண்களைக் காட்சிபடுத்துவதில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை பற்றிச் சினிமாவை அக்குவேறு ஆணிவேறாக அலசும் எந்த விமர்சகரும் இதுவரை விரிவாக அலசாதது ஆச்சரியம் !// - நான் அடிக்கடி நினைக்கும் அதே கருத்து! எண்பதுகள், தொண்ணூறுகளை விட இன்றைய தமிழ்த் திரையுலகம் வெகுவாக மாறியிருக்கிறது. அன்றைய படங்கள் பெரும்பாலானவற்றில் கதாநாயகனுக்கு ஒரு தங்கைக் கதாபாத்திரம் வைத்திருப்பார்கள். எதற்கு? பாதிப் படத்தில் வில்லனால் பாலியல் வல்லுறவு செய்யப்படுவதற்கு! இந்தக் காலத்தில் தேடினாலும் அப்படி ஒரு காட்சி கிடைக்காது. ஓரிரு படங்களில் பாலியல் வல்லுறவுக் கட்சிகள் இருந்தாலும் அவை விழிப்புணர்வு சார்ந்து அமைக்கப்பட்டவையாகத்தாம் இருக்கின்றனவே தவிர, மசாலாவுக்காக இல்லை. இது மட்டுமில்லை, கதையின் தரம், அதைச் சொல்லும் நேர்த்தி, திரைக்கதை உத்தி, உரையாடல் கூர்மை, ஒளிப்பதிவு என அத்தனையிலும் இன்றைய திரைப்படங்கள் உலகத்தரத்தை எட்டியிருக்கின்றன. ஆனால், அன்றை விட இன்றைக்குத்தான் திரைப்படங்கள் பெரிதும் கிழி கிழியெனக் கிழிக்கப்படுகின்றன. இது திரைத்துறையின் வளர்ச்சிக்கு நிகராகத் திறனாய்வுத்துறையும் வளர்ந்திருக்கிறது என்பதன் எடுத்துக்காட்டா அல்லது எந்த நல்லதையும் கண்டு கொள்ளாமல் குறைகளை மட்டும் குத்திக் காட்டும் போக்கா எனத் தெரியவில்லை.

    மற்றபடி, ’விக்ரம் வேதா’ பற்றியெல்லாம் இப்படிக் கருத்துரைப் பெட்டியில் கருத்துக் கூற இயலாது. எழுத வேண்டுமானால் அது பற்றித் தனியாக ஒரு பதிவே எழுதினால்தான் நிறைவாக இருக்கும்.

    பாலியல், சமூக ஊடகங்களின் கீழ்த்தரப் போக்கு, இசை என அனைத்தையும் இவ்வளவு சுருக்கமாகவும் நறுக்கெனவும் மிகச் சுவையான பதிவாக அளித்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  3. அருமையான பதிவு சாமானியன். இந்தப் பாடல் அப்படி ஒன்றும் கவரவில்லை. எப்படி ஹிட் ஆயிற்று என்று தெரியவில்லை. இந்தப் பாடலை விட டசக்கு டசக்கு பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது என்பது என் கருத்து. எனக்கு அந்தப் பாடல் தாளம் இசை எல்லாமே மிகவும் அழகாக இருந்தது. அந்த ஸீன் உட்பட..மிகவும் பொருத்தமாக இருந்தது...

    உங்கள் பதிவு அருமை

    கீதா

    ReplyDelete

  4. நல்லதொரு அலசல்

    ReplyDelete
  5. நல்ல அலசல். பாடலின் இசை தாளக்கட்டு பாடலை மொழி மறந்து ரசிக்க வைக்கிறது. இதற்கான நடனத்தில் ஆபாசம் இல்லை எனும்போது தரக் குறைவான வார்த்தைகள் எதற்கு. நல்ல கருத்தோடு எழுதி இருந்தாலும் பாடல் வெற்றி பெற்றிருக்கும்.

    ReplyDelete
  6. தமிழகத்தில் டாஸ்மாக் மது குடிக்காதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்ற நிலையில் ..டாஸ்மாக் குடிமக்களின் எண்ணிக்கையை எண்ணிவிட முடியாது... அப்படித்தான் இருக்கிறது சினமாவும் அதைச் சார்ந்த பாடல்களும்..அந்த ஜிமிக்கி பாடலை பார்க்கவுமில்லை கேட்கவுமில்லை...தங்கள் பதிவை படித்த பிறகே தெரிந்து கொண்டேன் நன்றி!

    ReplyDelete
  7. வணக்கம் நண்பரே அருமையாக அலசி இருக்கின்றீர்கள்

    காலத்துக்கு தகுந்தாற்போல் ரசனையும் மாறி வருகிறது நானும் உங்களைப்போல்தான் தியாகராட பாகவதர் பாட்டிலிருந்து இன்றைய பாடல்வரை கேட்பேன் அது ரசனையானதாக நிச்சயம் இருக்கும்.

    இந்தப்பாடலுக்கு எவன் வாயசைத்தான் என்பது எனக்கு முக்கியமல்ல...

    நீங்களே மேலே அடைமொழியோடு சில நடிகர்களை சொல்லி இருக்கின்றீர்கள் எனக்கு அந்த வார்த்தைகளெல்லாம் வராது

    சில பாடல்கள் இவனுகள் வாயசைத்த்தற்காக பிரபலம் ஆனது என்பது உண்மையே... அது உண்மையான ரசனை அல்ல


    ///ஒரு பாடல் பிரபலமாவதற்குப் பிரதானம் அதன் தாளக்கட்டும் இசையும்தானே தவிர மொழி இரண்டாம் பட்சம்தான்///

    அருமையான கருத்து வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete
  8. வணக்கம் !

    யதார்த்தமான வார்த்தைகள் காலத்துக்கு ஏற்றதும் காலத்தால் தவறவிடப்பட்ட பல கண்ணியங்களும் உங்கள் பதிவில் உள்ளங்கை நெல்லிக் கனிபோல் இருக்கின்றன .....

    காலமாற்றம் இன்னும் எதையெல்லாமோ தரப்போகிறது வருங்காலத்தின் நிலையை நினைத்தால் அப்பப்பா......முடியல்ல

    ReplyDelete
  9. பிரித்து மேய்ந்து விட்டீர்கள் #ஜிமிக்கி_கம்மலை

    ReplyDelete
  10. அருமையாக விளக்கியுள்ளீர்கள். ஜிமிக்கி கம்மல் அந்தளவு பெரிய நாட்டத்தைக் கொண்டுவரவில்லை. ஆனால் டசக்கு டசக்கு பாடல் எனக்கு நன்றாகப் பிடிக்கும்

    ReplyDelete
  11. அருமையாக எழுதியுள்ளீர்கள். சினிமாப் பாட்டுப் பக்கமே போவதில்லை. பழையகால சினிமாப் பாட்டுகள் எங்காவது கேட்டால் ஞாபகம் வரும். அவ்வளவுதான். ஆனால் பிரித்து உதறியிருக்கிறீர்கள் விஷயம் தெரியாதவர்கள் கூட புரிந்து கொள்ளும்படி. சிலபாட்டுகள் வேண்டாவிட்டாலும் காதில் கேட்கும். வெளிநாடாதலால் அந்த சான்ஸுமில்லை. நன்றாக எழுதும் ஆற்றல் உங்களுக்கு. பாராட்டுகள். அன்புடன்

    ReplyDelete
  12. பார்ப்பது, கேட்பது, ரசிப்பது என்ற நிலைகளைத் தாண்டி விமர்சிப்பது என்பதை மிகச் சிறப்பாகச் செய்துள்ளீர்கள். குறிப்பிட்ட ஒரு துறையில் இந்த அளவிற்கு ஈடுபட்டு, லயித்து விவாதித்துள்ள விதம் தங்களின் ஆர்வத்தை நன்கு புலப்படுத்துகிறது. வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. வழக்கம் போல ஒரு அற்புதமான அலசல். ஜிமிக்கி கம்மல் பாட்டு எனக்கு என்னவோ மிகவும் நாராஸமாகவே பட்டது. தாளத்தை தவிர அந்த பாட்டில் அப்படி ஒன்றும் பெரிதாக சொல்லி கொள்வதற்கு ஒன்றும் இல்லை என்பது என் கருத்து. அந்த பாட்டின் அருவருக்கத்தக்க அர்த்தமே இப்போது தான் எனக்கு புரிந்தது. துரதிர்ஷ்டவசமாக பல பாடல்களின் நிலை இது தான்.

    ReplyDelete
  14. ஜிமிக்கி கம்மல் பாடல் நான் இதுவரை கேட்டதில்லை, தங்கள் பதிவை பார்த்த பின்தான் பார்த்தேன் அவ்வளவு ஓன்றும் சிறப்பு இல்லை .. தமிழுக்கு வந்த சோதனைகளில் இந்த பாடல் மூலம் ஏற்பட்டதே பெரிய சோதனை... >> சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

    ReplyDelete