Sunday, July 7, 2019

என் முதல் தோழன்

ஜாதி மதங்களை தாண்டி மனிதர்களை நேசித்தவர்,
சகலரின் உணர்வுகளையும் மதித்தவர்.
வீட்டுக்கு வருபவர் யாராயினும் தான் உண்ணுமிடத்தில்,
தனக்கு பக்கத்தில் அமரவைத்து தன் உணவை பகிர்ந்துண்டவர்.
பெரியாரின் கொள்கைகளில் பெரும் ஈர்ப்பு கொண்டவர்,
மூடநம்பிக்கைகளை நம்பும் பேச்சுகளுக்கு மட்டுமே அவருக்கு கோபம் வரும்.

இடம், பொருள், ஏவல் அறிந்து நடப்பதில் என்றும் வழுக்காதவர்,
கடன் என்ற வார்த்தையை வெறுத்து கண்ணியம் காத்தவர்.
வாழ்க்கையின் எத்தருணத்திலும் நிதானம் இழக்காதவர்,
முதியவர்களை போற்றி இளையவர்களை வாழ்த்தி வாழ்ந்தவர்.
உணர்ச்சிவசப்படாமல் பலமுறை யோசித்து வாக்களித்தவர்,
கொடுத்த வாக்கிலிருந்து என்றும் பிழலாதவர்.

பிள்ளைகளை தோழர்களாய் பாவித்து வளர்த்தவர்,
எங்களுடன் அரசியல் முதல் தத்துவம் வரை அனைத்தையும் அளவளாவியவர்.
எங்களின் அறிவுத்தேடலுக்கு எந்நேரத்திலும் தடை போடாதவர்,
பொருளாதார நெருக்கடியில் கூடவாசிக்க கேட்ட அனைத்தையும் வாங்கி குவித்தவர்.
யதார்த்தமான வார்த்தைகளால் வாழ்வின் நிதர்சனத்தை புரியவைத்தவர்,
அவரது அறிவுரைகளால் வாழ்வில் வளம் பெற்றவர்கள் பலர்.




என் முதல் தோழனை, என் வாழ்வின் முதல் தருணம் முதல் தொடர்ந்த ஒரு நீண்ட நெடிய நட்பை இழந்த உணர்வில் என்னை தவிக்க வைக்கிறது என் தந்தையின் மறைவு.

ஒரு தந்தையின் மறைவு உண்டாக்கும் சஞ்சலத்தை வார்த்தைகளில் வரைந்த சகோதரர் "ஊமைக்கனவுகள்" ஜோசப் விஜுவின் கீழ்கண்ட இந்த கவிதையை விடவும் மேலான ஒரு அஞ்சலியை என் தந்தைக்கு செலுத்த முடியும் என தோன்றவில்லை...


குழி விழுந்தவொரு யானையின்
இறுதிநாள் குறித்து,
அதீதப் பிளிறலோடு
வாசிக்கப்பட்ட மருத்துவ சாசனத்தின்
மூன்று மாதக் கெடுவை,
சலனமற்ற நதியாய்க்
கேட்கக் கூடிற்று உனக்கு...!

துடுப்பொன்றை அண்ணனிடத்தும்,
திசைகாட்டியை அம்மையிடத்தும் கொடுத்த பின்,
" எனக்கு..........................."
 எனக்கேட்டு நீண்ட என் கைகள் ,
இறுகப் பிடித்தொரு முத்தம்!

ஓட்டை விழுந்த களஞ்சியங்களிலிருந்து,
நீ ஒழுகிக்கொண்டிருப்பதை
அடைக்க முயற்சித்துக் கொண்டே இருந்தனர்,
அண்ணனும் அம்மாவும்!

ஒருவழி மூட இருவழி திறக்கும்
மர்மம் அறியா வேதனையூடே,
கையில் கிடைப்பதெல்லாம் கொண்டு
தீரத் தொடங்கியிருந்த உன் 
மீதமேனும் சேர்த்துவைக்கப்
பிரயத்தனப்பட்டனர் அவர்கள்!

சேறுற்ற நெடுங்குளத்தில்,
பசிமுற்ற உன்னைப் பிடித்து,
சுழற்றியவாறே உள்ளிழுக்கும்
முதலையின் வாய்க்குள்
மெல்லப் போய்க்கொண்டிருக்கும்போதும்,
கலங்கும் எம் கண்கள் குறித்தே
கவலை கொண்டிருந்தாய் நீ!

உறங்குவதாய்த்
தலையணை நனைத்துக்கிடந்த
பாவனை இரவொன்றில்,
அதிசயமாய்
அன்று உறங்கிப்போன அம்மாவின்
”உறக்கம் கலைந்திடக் கூடாதென“
சிரமறுக்கும் வலிபொறுத்துப்
பற்கடித்தழுத உன் வேதனை
பார்த்திடப் பொறுக்கவில்லை எனக்கு!

எத்தனையோ முறை
நான் ஏறிவிளையாடிச்
சாய்ந்துகிடந்த மார்பின்,
உள்ளிருக்கும் இதயம்
உறங்காமலிருக்க,
என்ன செய்யட்டும் நான்?

கடைசியாய்,
காற்று,
நீரெனத் திரண்டு
சுவாசப்பை பாய்ந்தது போன்றொரு அவஸ்தையில்,
குமிழ் வெடிக்கத் தீர்ந்ததுன் பாடுகள்!

மரணத்தூரிகை
நெருக்கத் தெழுதிய
விதம் கேட்க வருமொரு கூட்டம்
 “ கண்திறந்த பொழுதுகள்  “
பற்றிக் கேட்டவாறே
கைபிடித்துக் கலையும்!

இருக்கும் போதைய
அருமையுணராமல்,
இல்லாதானபின் சொல்லித்திரிய,
எல்லாரிடத்தும் இருக்கின்றன
இதுபோன்ற நூறாயிரம் கதைகள்!

ஆனாலும் அப்பா,

என் பன்னிரு பிராயத்தில்,
வாசிக்கக் கிடைக்காதொரு புத்தகம் குறித்து,
வருந்திக்கிடக்க,
கோவையில் கிடைப்பதாய் அறிந்து
வாங்கிவந்து
என் கண்படும் இடத்தில் வைத்து
என் கண்ணீர் ரசித்த
உன் அன்பினில்
ஒரு துளியளவேனும்
திரும்பக் கொடுத்ததில்லை நான்!

எப்பொழுதும்,
என் கலக்கம் காணச் சகியாது உனக்கு!

இரு நாட்களாய்,
“என்ன எழுத...... “,   
எனக் கலங்கிக்
கண்ணிறைந்திருந்த போது
“என்னை எழுதேன்” என
உன்னைக் கொடுத்துவிட்டுப் போகிறாய்
இப்பொழுதும்!

  பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

Wednesday, August 8, 2018

ஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்




எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த காலம்...

திமுக சட்டமன்ற உறுப்பினர் ரகுமான்கான் பேசுவதற்காக ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டதை அறிவிக்க மணி அடித்தும், பேசுவதை நிறுத்துமாறு வேண்டியும் ரகுமான்கானின் பேச்சை நிறுத்த முடியாத சபாநாயகர் முதலமைச்சர் எம்ஜிஆரை நோக்குகிறார். முதலமைச்சரே எழுந்து பேச்சை நிறுத்துமாறு கேட்ட பிறகும் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார் ரகுமான்கான் !

" உங்களை அந்த ஆண்டவனால் கூட நிறுத்தமுடியாது ! " என எம்ஜிஆர் நொந்துக்கொள்ள, எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதி எழுந்து ரகுமான்கானை அமரச்சொல்கிறார். தன் கட்சி தலைவருக்கு தலைவணங்கி பேச்சை முடித்துக்கொள்கிறார் திமுக சட்டமன்ற உறுப்பினர்.

அடுத்ததாக கருணாநிதி பேசுகிறார்...

" தம்பி ரகுமான்கானை ஆண்டவனாலும் நிறுத்த முடியாது என்றார் முதலமைச்சர்... நான் நிறுத்திவிட்டேன்... காரணம் நான் ஆண்டவன் ! தமிழ்நாட்டை  இரண்டுமுறை ஆண்டவன் ! "

” மாதமோ சித்திரை !
மணியோ பத்தரை !
மக்களுக்கோ நித்திரை !
வழங்குவீர் உதய சூரியனில்
உங்கள் முத்திரை ! "

என எளிய தமிழில் எதுகைமோனையில் விளையாடி சங்கத்தமிழை பாமரன் கொஞ்சும் தமிழாய் மாற்றிய அண்ணாவின் இதயத்தை கடன் கேட்ட கலைஞர் கருணாநிதி மீளாநித்திரையில் ஆழ்ந்துவிட்டார்.

தான் நினைத்த நேரத்தில், தான் நினைத்த திசையில் அரசியலை சுழற்றிவிடும் அச்சாணியாக அறுபதாண்டுகளுக்கும் மேலாக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஒரே அரசியல்வாதி இந்தியாவிலேயே கருணாநிதி ஒருவராகத்தான் இருக்க முடியும் ! அப்படிப்பட்ட தீவிரமான அரசியல் பணிகளுக்கு மத்தியில் பத்திரிகையாளர், எழுத்தாளர், இலக்கியவாதி, நாடக மற்றும் சினிமா பணிகள் என தன் அனைத்து பண்முகத்திறமைகளிலும் தனி முத்திரை பதித்த மனிதர் உலகிலேயே கருணாநிதி மட்டும்தான் என்றால்கூட அது மிகையாகாது !  கலைஞர் தொலைக்காட்சிக்கு வெற்றிகரமான ஆலோசனைகள் வழங்கியது முதல் எண்பதை தாண்டிய வயதில் முகநூலிலும் முத்திரை பதிக்க முயன்றதுவரை கருணாநிதியின் அரசியலை தாண்டிய ஆளுமை பற்றி பல பக்கங்கள் எழுதலாம் !

அவர் எழுதிய நெஞ்சுக்கு நீதி தமிழக அரசியலின் அரைநூற்றாண்டுக்கான வரலாற்று ஆவணம் !

ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, திமுக சட்டமன்ற உறுப்பினர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொண்டிருந்த காலமாகட்டும் அல்லது  ஒற்றை உறுப்பினருடன் மங்கியிருந்த காலமாகட்டும் கருணாநிதியே அரசியலின் மையம் ! தன்னை நோக்கி தகிக்கும் பிரச்சனையை ஒரு ஒற்றை கேள்வியினால் தன் எதிரி பக்கமே திருப்பிவிடும் பிரம்மாஸ்த்திர சாதுர்யம் கொண்டவர் அவர் !

பூமியின் இரவு பகலை போல தமிழ்நாட்டின் அரசியல் உலகுக்கும் இரண்டே நிலைகள்தான். ஒன்று கருணாநிதி ஆதரவு மற்றொன்று  கருணாநிதி எதிர்ப்பு ! கருணாநிதியை சாதுர்யமாக எதிர்கொண்டாலே போதும் அரசியல் கிணற்றை தாண்டிவிடலாம் என்ற நிலை இருந்ததாலோ என்னவோ, தான் பெற்ற செல்வாக்குக்கு ஈடான விமர்சனங்களையும் வெறுப்பையும் சம்பாதித்த அரசியல்வாதியும் அவர்தான் !  அவரை எதிர்த்து அரசியல் செய்தவர்கள் சிலர் என்றால் அவருக்கு பயந்து அரசியல் ஆசையை ஒதுக்கிவைத்தவர்கள் பலர் ! அவர் பேச்சை நிறுத்தி, வீட்டில் முடங்கிய பிறகுதான் பல பிரபலங்கள் அரசியல் பேச வெளியே வந்தனர் !

அவரது முதிர்கால அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் குடும்ப ஆதிக்கம் பற்றி பல விமர்சனங்கள் இருந்தாலும் ஐந்து முறை முதலமைச்சராக தமிழகத்தின் வளர்ச்சிக்கான கருணாநிதியின் சாதனைகள் ஏராளம். அந்த சாதனைகளில் பலவற்றை சட்டபூர்வமாக்கி வெற்றி கணடவர். பூம்புகார், வள்ளுவர்கோட்டம், மாபெரும் நூலகம் என கலை பண்பாட்டு தளத்திலும் பல திட்டங்களை செயல்படுத்தியவர் கருணாநிதி.மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் போன்ற சொல்லாடல்களை வழக்கு மொழியாக்கியவரும் கலைஞர் தான். 

கருணாநிதியின் மறக்கப்பட்ட சாதனைகளில் மிசா காலகட்டமும் ஒன்று...

இந்திரா காந்தி நெருக்கடி நிலையை பிரகடணப்படுத்தி இந்திய ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்து மாநில ஆட்சிகளை காவு கொண்டபோது அதனை கண்டித்து,  நெருக்கடி நிலையை திரும்ப பெறவேண்டும் என செயற்குழுவை கூட்டி தீர்மானம் இயற்றிய இந்தியாவின் முதல் கட்சி திமுக. நெருக்கடி நிலையை ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால் எதிர்க்கக்கூடாது என இந்திராகாந்தி கேட்டுக்கொண்டதையும் மீறி கருணாநிதி செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கான விலையாய் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு, அந்தக்கட்சியின் முன்னணி தலைவர்கள் முதல் மாவட்ட நிர்வாகிகள்வரை நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிட்டி பாபு,முரசொலி மாறன், மு க ஸ்டாலின் என பல திமுகவினர் சிறையில் கொடுமைப்படுத்தப்பட்டனர். சிறையில் நடந்த தாக்குதல்களின் காரணத்தால் சிட்டி பாபு உடல்நலம் குன்றி உயிர்நீத்தார்.

அதே மிசா காலகட்டத்தில் கடுமையான தணிக்கை விதிகளினாலும், மிரட்டல்கள் மற்றும் கைதுகளின் மூலமாகவும் பத்திரிக்கை சுதந்திரம் நாடு முழுவதும் பறிக்கப்பட்டது. இந்தியாவின் தேசிய பத்திரிக்கைகளே அரசுக்கு எதிராக எழுத தயங்கிய போது திமுகவின் முரசொலி இந்திரா காந்தியின் படத்தை ஹிட்லராக சித்தரித்து கேலிச்சித்திரம் வெளியிட்டது.

அவசர நிலைக்கு பிறகான இந்திய அரசியலில் தான் தீவிரமாக எதிர்த்த இந்திராவுடன் " நேருவின் மகளே வருக நிலையான ஆட்சியை தருக " என கருணாநிதி கூட்டணி வைத்துக்கொண்டதை விமர்சிப்பவர்கள்கூட மாநில சுயாட்சி மற்றும் பிராந்திய நலனுக்கான அவரது அயராத உழைப்பை மறுக்கமாட்டார்கள்.

மொழிவாரி மாநிலங்களின் தோற்றம் முதல் மாநில சுயாட்சி கோரிக்கைவரை இந்தியாவின் மாநிலநலன் சார்ந்த அனைத்து இயக்கங்களிலும் முன்வரிசையில் நின்றவர் கருணாநிதி. சுதந்திர தினத்தின் போது மாநில தலைநகரங்களில் அந்தந்த மாநில முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்றுத்தந்தவர் கருணாநிதி.

" ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இங்கே ஓய்வுகொண்டிருக்கிறான் " என தனது கல்லறையில் பொறிக்கப்பட வேண்டும் என்று  கருணாநிதியே கேட்டுக்கொண்டதுதான் அவருடன் வாழ்ந்த தலைமுறைக்கும் இனி வரும் தலைமுறைக்கும் அவர் விட்டு செல்லும் செய்தி ! தொடர் தோல்வி தருணங்களை கூட  தனக்கு சாதகமான களங்களாக்கி அயராது உழைத்த அவரது போராட்ட குணத்தை ஒவ்வொரு மனிதனும் நினைவில் கொள்ள வெண்டும்.

" இயங்கா விட்டாலும் பரவாயில்லை அவர் இருந்ததே ஒரு தைரியம் " என முதுமையின் உச்சத்தில் இருந்த குடும்பத்தவர் பற்றிய உணர்வே கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவிலும் தோன்றுகிறது...

இனி வரும் காலங்களில் தமிழக அரசியல் பற்றிய விமர்சனங்களும் வரலாறும் கருணாநிதி இருந்த போது,  கருணாநிதி இறந்த பிறகு என்ற இரு நிலைகளிலேயே பதியப்படும் !

 பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.


Saturday, May 19, 2018

பேரன்பின் பெருஞ்சுடர்


பாலகுமாரன் என்றதுமே எனக்குச் சித்திக் அண்ணன் மற்றும் ஆனந்தின் ஞாபகங்கள் மனதில் பொங்கும்.கல்லூரியில் யதார்த்தமாய்க் கிடைத்த பாலகுமாரனின் நாவல் ஒன்றினை படித்ததிலிருந்து அவரது நாவல்களுக்கு அடிமையாகிப்போன சித்திக் அண்ணன் அதற்கு முன்னர்த் தினசரிகள் வாசிக்கும் பழக்கம் கூட இல்லாதவர் ! பிரான்ஸில் நட்பான ஆனந்துக்குப் பாலகுமாரனின் எழுத்துகள் மட்டுமே வேதம் ! உலக இலக்கியம் பேசினால்கூட அதுவும் பாலகுமாரனின் எழுத்தில் உண்டு என உதாரணம் காட்டக்கூடியவர் !

பாலகுமாரனின் படைப்புகள் இலக்கியத்தில் சேரும் சேராது என அவரது மெர்க்குரிப்பூக்கள் வெளிவந்ததிலிருந்து இன்றுவரை சர்ச்சைகள் உண்டு. ஆனால் தமிழ்நாட்டில் சினிமா நட்சத்திரங்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் மட்டுமே சேரக்கூடிய அதிதீவிர ரசிகர்களுக்கு ஈடாக, சித்திக், ஆனந்த் போன்ற வாசகர்களைக் கொண்டிருந்த ஒரே எழுத்தாளர் பாலகுமாரனாக மட்டும்தானிருக்க முடியும் ! தினசரிகள், வார மாத இதழ்களுடன் ஜோதிட சமையல்கலை புத்தகங்கள் நிரம்பி வழியும் தமிழ்நாட்டு பேருந்து நிலைய புத்தகக் கடைகளில் க்ரைம் எழுத்தாளர்கள் தவிர்த்து ஏகபோக இடம் பிடித்த முதல் எழுத்தாளர் பாலகுமாரன் தான் ! அவரது வாசகர்கள் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் பரவியிருந்தனர்.

சமூகத்தின் சகலவிதமான மனிதர்களின் குணநலன்களையும் விருப்பு வெறுப்பின்றிக் குறுக்குவெட்டு பார்வையாய் நோக்கிய பாலகுமாரனின் எழுத்து, மனித உறவுகளை, அதன் சிக்கல்களை, அச்சிக்கல்களைத் தாண்டி அனைத்து மனங்களிலும் நிரம்பி வழியும் அன்பை வெளிக்காட்டியது. சக மனிதனை தான் படித்ததைப் போலவே தன் வாசகனையும் படிக்க, நேசிக்கப் பழக்கினார் பாலகுமாரன். தன் கதை மாந்தர்களின் வழியே சமூகத்தின் இருட்டுப் பக்கங்களைக் கூட எந்தவிதமான ஒழுக்கப் போதனைகளுமின்றி வாசகனுக்குக் காட்சிபடுத்த அவரால் முடிந்தது. லாரியிலிருந்து இறக்கும் முதல் அரிசிமூட்டையைக் கிடங்கு பெருக்கும் பெண்களுக்காகக் கிழித்துவிடும் கூலித்தொழிலாளியின் இரக்கத்தை வாசகனுக்கு உணர்த்த முடிந்த பாலகுமாரனால் மெர்க்குரிப்பூக்கள் நாவலின் தொழிற்சாலை முதலாளியின் மனதில் ஒளிந்திருந்த ஈரத்தையும் வெளிக்காட்ட முடிந்தது !

காதலை கர்வமாய், காமத்தை பாவமாய்ப் பாவிக்கும் சமூகத்துக்கு " காதல் என்பது விட்டுக்கொடுத்தல், காதலுக்காகக் காதலையே விட்டுக்கொடுத்தல் " என இடையறாது உணர்த்த முயன்றன அவரது படைப்புகள். அதீத காமம் வேறு காரியங்களில் ஈடுபடாதபடி மனதின் சமன்பாட்டைக் குலைத்துவிடும் எனக் காமத்தை உளவியல்ரீதியில் விளக்கியது அவரது எழுத்து.

பல்வேறு ஒழுக்கக் கோட்பாடுகளையும் போதனைகளையும் கொண்ட ஒரு சமூகத்தில் தன் வாழ்க்கையைத் திறந்த புத்தகமாய்க் காட்ட, சமூகம் குற்றமாய்க் கருதும் செயல்களைக் கூட இதை இதைச் செய்தேன் என்று ஒரு செய்தியாய் பகிர எத்தனை பிரபலங்களால் முடியும் ? மனிதத்தின் மீது பற்றுக்கொண்டு, தன் சமூகத்தின்பால் பேரன்பு கொண்ட ஒருவனால் மட்டுமே அசைவ உணவகத்தில் கறியை ஒதுக்கிவிட்டு பிரியாணியைச் சாப்பிட்டுப் பின்னர்ப் பசிஅடங்காமல் கறியையும் சாப்பிட்டதையும், விலைமாதுவை கடற்கரைக்கு அழைத்துச் சென்று கவிதை வாசித்துக் காட்டியதையும் இதுதான் நான் கடந்து வந்த பாதை என எழுத்தோவியமாய்த் தீட்ட முடியும். சமூகம், வரலாறு, ஆன்மீகம் என அவரது படைப்புகளின் களங்கள் மாறினாலும் அவைகள் அனைத்திலும் பிரதிபலன் இல்லாத பேரன்பு பரவியிருக்கும்.

உடம்பிலிருந்து வெளியேறிய எழுத்துச்சித்தரின் ஆன்மா அவரது படைப்புகளின் வழியே பேரன்பின் பெருஞ்சுடராய் என்றென்றும் ஒளிர்ந்திருக்கும்.



பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

Thursday, February 1, 2018

ஒரு சாண் வயிறே இல்லாட்டா...


ஒரு சாண் வயிறே இல்லாட்டா - இந்த
உலகத்தில் ஏது கலாட்டா ?
அரிசிப் பஞ்சமே வராட்டா - நம்ம
உசுரெ வாங்குமா பரோட்டா ?

... கவிஞர் தஞ்சை ராமைய்யாதாஸ் சிங்காரி படத்துக்காக எழுதிய இந்தப் பாடல் வரிகளை "திருக்குறளைவிட மேலான தெருக்குறள் " எனக் கலைவாணர் என் எஸ் கே சிலாகித்துப் பாராட்டியதாகத் தனது நினைவு நாடாக்கள் நூலில் குறிப்பிட்டிருப்பார் கவிஞர் வாலி.


உலகெங்கும் அதிகார வர்க்கத்தின் அநீதிகள் மற்றும் சமூக அவலங்களுக்கு எதிரான "தெருக்குறள் " பெரும்பாலும் அச்சமூகம் சார்ந்த கலைஞர்களிடமிருந்துதான் பிறக்கும். இதற்கான அடிப்படை காரணம் படைப்பாளிகள் இயல்பாகவே சுதந்திர வேட்கை கொண்டவர்கள். அவர்களது படைப்புகளைப் பாதிக்கும் " கட்டாயங்களை " வெறுப்பவர்கள் !

"ஊரான் ஊரான் தோட்டத்திலே
ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்காய்
அதைக் காசுக்கு ரெண்டாய் விக்கச்சொல்லி
காயிதம் போட்டானாம் வெள்ளைக்காரன் !"

வெள்ளையர்கள் தந்திரமாய் நாட்டைப் பிடித்து, சட்டை கசங்காமல் ஆட்சி செய்து வரி வசூலித்த வரலாறு முழுவதையும் நான்கே வரிகளில் சொல்லிவிடும் இந்தப் பாமர பாடல் ! மக்களோடு வளர்ந்து வாழ்ந்து, மக்களுக்காகவே கலை படைக்கும் கலைஞர்களுக்கே இதுபோன்ற வரிகள் கைக்கூடும் !

சிங்காரி படப் பாடல் வரிகளில் பல வரலாற்றுச் செய்திகள் அடங்கியிருக்கின்றன. சிங்காரி படம் வெளிவந்த சமயம் நாற்பதுகளில் இந்தியாவை வாட்டிய பஞ்சத்துக்குப் பிறகான காலகட்டம்.. அமெரிக்கர்கள் தங்களிடம் மிதமிஞ்சியிருந்த கோதுமையை இந்தியாவுக்கு இலவசமாக அனுப்பிய நேரம்.அதுவரையிலும் கோதுமையை அன்றாட உணவாக அறியாத தமிழர்களுக்குக் கோதுமை சார்ந்த உணவுபண்டங்கள் காலத்தின் கட்டாயத்தால் அறிமுகமாகின...

அப்படி அறிமுகமான பரோட்டாவை சாப்பிட நேர்ந்த முதல்தலைமுறை தழிழனின் ஆதங்கம் தான் இந்தப் பாடல். அன்று தமிழர்களைப் பாடாய்படுத்திய பரோட்டா இன்று சாதா,கொத்து, சில்லி, மட்டன், சிக்கன், முட்டை, வீச்சு எனப் பல்வேறு வடிவங்கள் கொண்டு தமிழரின் தவிர்க்க முடியாத அன்றாட உணவாகிவிட்டது !

ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உணவு கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கம் அச்சமூகம் வாழும் நிலத்தின் விளைபொருட்கள், அந்நிலம் சார்ந்த தட்பவெப்பம், சமூகப் படிநிலை, பொருளாதாரச் சூழல் மற்றும் அந்தச் சமூகத்தின் பயண அனுபவங்கள் ஆகியவற்றைப் பொறுத்து அமையும். அந்நிய உணவுகளின் ருசியால் ஈர்க்கப்பட்டுப் பழகுவது, போர் மற்றும் பஞ்ச கட்டாயங்களால் அரசினால் கட்டாயமாக அறிமுகப்படுத்தப்படும் உணவு, சந்தை தேவையை முன்னிட்டு பெருவணிக நிறுவனங்களின் தந்திரமான விளம்பரங்களால் பழக்கப்படுத்தப்படும் உணவு எனவும் உணவு பழக்கங்களைப் பிரிக்கலாம்.

இந்திய பிரியாணியின் வரலாறு முகலாயர்களிடமிருந்து தொடங்கியது என்றால், இன்று தமிழ்நாடு என்றாலே ஞாபகத்துக்குவரும் சாம்பார் சரபோஜி மன்னர்களின் பரிசு !

இன்று உலகமயமாக்கத்தினால் பரவும் நுகர்வு கலாச்சாரம், நகர்ப்புற வளர்ச்சி, வணிக விளம்பரங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்களால் நம் பாரம்பரிய உணவு பழக்கத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுகொண்டிருக்கிறது. அரிசி கிடைக்காத பஞ்சத்தினால் கோதுமைக்குப் பழகிய காலம் போய்,பெருமைக்காகப் பீட்சா, பர்கருடன் பெப்ஸி கோக் அருந்தும் காலத்தில் வாழ்கிறோம் !

எனது பூர்வீகமான காரைக்காலை சேர்ந்த இஸ்லாமிய சமூகத்த்தினர் சிலர் பெருநாள் போன்ற பண்டிகை தினங்களில் " வட்டலப்பம் " என்றொரு இனிப்பு பதார்த்ததைச் சமைப்பார்கள். "வட்டில் அப்பம் " என்பது மருகி வட்டலப்பம் ஆனது ! வட்டில் என்ற தாம்பாளம் போன்ற, ஆழமான பாத்திரத்தில் வைத்து நீராவியில் வேகவைத்துத் தயாரிக்கப்படும் இந்தப் பதார்த்தத்தின் பூர்வீகம் மலேசியா ! காரைக்கால் இஸ்லாமியர்களில் பலர் நெடுங்காலமாக மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குப் பணி செய்யச் சென்றவர்கள். அவர்களின் மூலம் காரைக்காலை வந்தடைந்து பண்டிகை பலகாரமாக மாறியதே வட்டலப்பம் !

இரு வேறுபட்ட கலாச்சாரச் சந்திப்பினால் அறிமுகமாகும் உணவு வகைகள் ஒரு புறமென்றால், அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த அந்நியர்களின் உணவு பழக்கங்களைப் பெருமைக்காகப் பின்பற்றுவது வேறொரு வகை !

புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சியில் இருந்த சமயத்தில் காரைக்காலின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவராக விளங்கிய தன் தந்தை பிரெஞ்சு மேயரை சந்தித்துவிட்டு வந்து அவரைப்போலவே தக்காளி சாஸ் மற்றும் வினிகருடன் முள்கரண்டியால் சாப்பிட முயன்றதை பாட்டி கதை கதையாய் சொல்லுவாள் !

பண்டைய காலத்தில் அந்நிய ஆட்சியாளர்கள் மற்றும் பயணங்களால் மாற்றமடைந்த உணவு பழக்கம் ஆங்கில ஆட்சி தொடங்கி இன்றுவரை பெருவணிக நோக்கங்களால் திட்டமிட்டு மாற்றப்படுகிறது ! இன்று இந்திய காலை மற்றும் மாலை வேளைகளின் அத்யாவசிய தேவையாக அனைத்துத் தரப்பு மக்களிடமும் பரவியுள்ள தேனீர் ஆங்கிலக் காலனிய அரசின் வணிகப் பரப்புரைகளால் அறிமுகப்படுத்தப்பட்ட பானம் !

கொழும்பு தேயிலை தோட்டத்தில் வேலை செய்த " சேக்காளி " அனுப்பிய தேயிலை தூளை அவன் குறிப்பிட்ட பதத்தில் பாலில் கொதிக்கவைத்து இரவில் குடித்துவிட்டுப் படுத்த குடியானவ குடும்பம் தூக்கமில்லாமல் புரண்டு அதிகாலை விழிப்பை தவறவிட்டு மற்றவர்களால் கேலிக்கு உட்படுவதை விவரிக்கும் கி.ராஜநாராயணனின் கோபல்ல புரத்து மக்கள் கதையை நினைக்கும் போதெல்லாம் நிஜ வாழ்வில் எனக்கு நேர்ந்த இரண்டு சம்பவங்கள் மனதில் நிழலாடும் !

பத்து வயது என ஞாபகம்...

எங்கள் ஊரின் வானிலை ஆராய்ச்சி மையத்தில் வேலை செய்த என் தந்தையின் நண்பர் பணி நிமித்தமாய் மும்பை சென்று திரும்பிய போது பளபளப்பான இரண்டு பாக்கெட்டுகளைக் கொண்டுவந்து கொடுத்தார். ஐந்தே நிமிடத்தில் தயார் செய்துவிடலாம், பிரியாணியைப் போன்ற சுவையோடு இருக்கும் என்றெல்லாம் நாக்கில் எச்சில் ஊற பேசி அவர் கொடுத்தவை மாகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள் ! நூடுல்ஸ் தமிழ்நாட்டு விளம்பரங்களில் கூடத் தலைகாட்டாத நேரம் அது !...

ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு பத்துமணிக்கு மேல் என் தந்தையின் மேற்பார்வையில் குடும்பமே அடுக்களையில் கூடி, அந்தப் பாக்கெட்டில் குறிப்பிட்டிருந்த அளவு நீரை வானலியில் கொதிக்கவைத்து நூடுல்ஸை கொட்டி அதனுடனிருந்த மசாலாவையும் போட்டு கிளறி இறக்கினோம் ! கோபல்லபுரத்து மக்களைப் போலவே நாங்களும் இரவில் புதிய உணவை முயற்சித்த உளவியல் காரணம் எனக்கு இன்றுவரை பிடிபடவில்லை !

" அய்யே ! இது என்ன பெரிய ஆஸ்பத்திரி மருந்து நாத்தம் ?... "

" உப்பும் இல்லை... உரைப்பும் இல்லை... "

ஆளாளுக்கு வாயில் போட்டதை விழுங்க முடியாமல் புலம்ப,

" இத போயி பிரியாணி மாதிரின்னு சொன்னானே பாவி... எத்தனையோ தடவை நம்ம வீட்டு பிரியாணியைச் சாப்பிட்டும் அவனுக்கு ருசி தெரியல பாரு ! "

எனப் பன்ச் வைத்தாள் பாட்டி !

திண்ணை இல்லாத வீடும், டீவி சீரியல்களும் இல்லாத அந்தக் காலத்தில் கூப்பிட்ட குரலுக்குத் தெருவே ஓடி வரும் ! ஒரு வீட்டின் நிகழ்வு மிக விரைவாய் பல தெருக்களுக்குப் பயணித்துவிடும் ! வெளியே சொன்னால் வெட்ககேடு என்பதால் யாரிடும் சொல்ல வேண்டாம், நண்பரிடம் மட்டும் மரியாதைக்காக நன்றாக இருந்தது எனக் கூறிவிடலாம் என்றெல்லாம் குடும்பச் சத்திய பிரமாணம் எடுத்த பிறகு, வானலியை நூடுல்ஸுடன் புழக்கடையில் கழுவ போட்டுவிட்டு உறங்கிவிட்டோம்.

பழமையான நான்கு கட்டுவீட்டின் புழக்கடை கொல்லைப்புறம் பார்த்துத் திறந்திருக்கும். இரவில் எச்சில் பாத்திரங்களில் மிச்சமிருப்பவற்றைப் பூனைகள் தின்றுவிடும்...

மறுநாள் காலையில் மற்ற பாத்திரங்களில் இருந்த மிச்சங்களெல்லாம் காணாமல் போயிருக்க, மாகி நூடுல்ஸ் மட்டும் அப்படியே இருந்தது ஆச்சரியம் ! அந்தக் காலப் பூனைகளுக்குகூட அது பிடிக்கவில்லை போலும் !

அதே போலப் பெப்ஸி...

மீசை அரும்பத் தொடங்கிய விடலை பருவத்தில் எங்கள் ஊருக்குள் நுழைந்தது பெப்ஸி பானம் ! நாங்கள் கால்பந்து விளையாடும் கவர்னர் மஹால் மைதானத்தின் ஓரத்தில் பாஸ் அண்ணனின் நன்னாரி சர்பத் கடை... பக்கத்து ஊர்க்காரர்களையும் ஈர்த்து சதா வரிசையில் நிற்கவைக்கும் அளவுக்குப் பிரபலமானது பாஸ் கடை நன்னாரி ! அதுவரையிலும் நன்னாரியுடன் உள்ளூர் ஸ்பெசலான டைமண்ட் சோடா கலர், ஸ்பெசல் லெமன் பாட்டில்களை விற்றவர் அவற்றுடன் பெப்ஸி பாட்டில்களையும் வாங்கி அடுக்கினார் !

பெப்ஸியுடன் சாலிடர் கலர் டிவியும் கோலோச்ச தொடங்கிய நேரம் ! டிவி விளம்பரங்களில் கிரிக்கெட் வீரர்களெல்லாம் பெப்ஸியை உயர்த்திபிடித்து ஒரே மூச்சில் குடித்துச் சிரிக்க,பெப்ஸியை ருசிக்க வேண்டும் என்ற ஆசையை அதன் விலை தடுத்தது !

ஒரு மாலைவேலையில், அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்த பைசல் தன் சட்டைபையிலிருந்து பத்து ரூபாய் தாளை எடுத்து என்னிடம் காட்டிவிட்டுப் பாஸ் கடை நோக்கி ஓடினான்... சில நொடிகளில் திரும்பியவன் ஐந்து நிமிட ஆட்டத்துக்குப் பிறகு என்னையும் அழைத்துக்கொண்டு கடைக்கு ஓட, மூடி திறக்கப்பட்டு ஸ்டிரா பொதிந்த, ஜில்லிப்பினால் நீர் முத்துகள் படர்ந்த, நுரை பொங்கும் இரண்டு பெப்ஸி பாட்டில்கள் !

அவசரமாய் ஆளுக்கு ஒன்றாய் எடுத்து ஆர்வமுடன் ஒரு வாய் உறிஞ்சினோம்...

" ச்சீ ! இப்படி இருக்கு... எல்லா விளம்பரத்திலேயும் இதை எப்படிடா சிரிச்சிக்கிட்டுக் குடிக்கறான் ? "

பெப்ஸியினால் புரை ஏறிய என்னால் அவனுக்குப் பதில் சொல்ல முடியவில்லை !

" அண்ணே... மீதி காசுக்கு ரெண்டு நன்னாரி போடுங்கண்ணே... வாயை கழுவனும் ! "

பைசல் தலை உலுக்கி பேசினான் !

ஆரம்பத்தில் நம்மை அப்படிப் படுத்திய நூடுல்ஸ் , பெப்ஸி மற்றும் இன்னபிற அந்நிய உணவுகள் மற்றும் பானங்கள் எல்லாம், " இதையெல்லாம் சாப்பிட்டால்தான் இந்தச் சமூகத்தில் வாழ தகுதியானவர்கள் " என்பதான தந்திர விளம்பரங்களால் நம் அன்றாடத் தேவைகளாக மாறிவிட்டன !

ஏறக்குறைய முப்பது வருடங்கள் கழிந்து நூடுல்ஸ் முதல் மென்பானங்கள் வரை பலவும் அவற்றில் ஒளிந்திருக்கும் உடலுக்குக் கேடான வேதியல் கலவைகளுக்காகப் பலதரப்ப்பு மக்களால் புறக்கணிக்கப்பட்டு,ஆங்கிலேய காலத்து அந்நிய துணி மறுப்பு போராட்டத்துக்கு ஈடான ஒரு புரட்சி இன்று தோன்றியிருப்பது மகிழ்ச்சியான நிகழ்வுதான் என்றாலும் மறுபுறம் பிளாஸ்டிக் அரிசி, செயற்கை முட்டை எனப் பயங்கரச் செய்திகள் பதைபதைக்க வைக்கின்றன !

பிளாஸ்டிக் அரிசியும், செயற்கை முட்டைகளும் வறுமை கோட்டுக்கு மிகக் கீழே இருக்கும் ஆப்ரிக்க மக்களின் சந்தைக்காம் ! ஆக, இல்லாதவன் எதைச் சாப்பிட்டாலும் எந்த அரசாங்கத்துக்கும் கவலை கிடையாது !

மக்கள்தொகை பெருக்கம் மற்றும் விளைநிலங்களின் அழிவினால் இன்னும் நாற்பது ஆண்டுகளில் உலக மக்களின் தேவையைப் பூர்த்திச் செய்யும் அளவுக்கான தானியங்கள் கிடைக்காது என்கிறது உலகச் சுகாதார அமைப்பின் அறிக்கை. மாற்று உணவாய் அவர்கள் பரிந்துரைப்பது பூச்சிகளையும் புழுக்களையும் ! இன்னும் சில காலத்தில் செயற்கை அரிசியும் முட்டையும் இயற்கையைவிடச் சிறந்தது எனப் பரிந்துரைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை ! பெருவணிக நிறுவனங்களும் அரசாங்கமும் கைகோர்த்தால் எதுவும் நடக்கும் !

சுயநல அரசியலும் சமுதாய ஏற்ற தாழ்வுகளும் இருக்கும் வரை " ஒரு சாண் வயிறே இல்லாட்டா " போன்ற தெருக்குறள்கள் சாகாவரம் பெற்று சஞ்சரித்துக்கொண்டுதான் இருக்கும் !




பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

Sunday, December 31, 2017

ஒரு நொடி சிந்திப்போம்...

வலைநட்புகளுக்கு,

மிகுந்த மனவேதனையுடனும், அவநம்பிக்கையுடனும் நான் எழுதிய பதிவு இது. முழுவதும் படித்து, குறைந்தபட்சம் ஒருவருக்காவது இதனைப் பகிர முடியும் என்றால் படியுங்கள்... மேலோட்டமாகப் படித்துவிட்டு, சாமானியனுக்காக நன்று, அருமை எனப் பின்னூட்டமிட்டு மறப்பதாயிருந்தால் படிக்கவே வேண்டாம். ஏனெனில் இது நம் மண்ணின் வருங்காலம் பற்றிய கவலை. மததுவேச அரசியலை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற அச்சம். நம் பிள்ளைகளுக்கு அன்பை கற்பிக்கப் போகிறோமா அல்லது வெறுப்பைக் கற்பிக்கப் போகிறோமா என்பதற்கான பதில்.

நன்றி



" இறைவனே ! இதுவரை என்னைக் காப்பாற்று என வேண்டினேன்... இனி நீ உன்னைக் காப்பாற்றிக்கொள் ! ... இந்த மனிதர்களிடமிருந்து ! "

                                                                             - அப்துல் ரகுமானின் கவிதை வரிகள்




மதத்தை மக்களின் ஓப்பியம் என வர்னித்த கார்ல் மார்க்ஸ், அது பூர்ஷ்வாக்களின் புத்தியில் உதித்தது என்றான் ! கார்ல் மார்க்ஸ் காலத்து பூர்ஷ்வாக்களையும் மிஞ்சும் அதிகார வெறிபிடித்த இன்றைய அரசியல்வாதிகளின் கையில் சிக்கிய அந்த ஓப்பியம் படுத்தும்பாடு பயமுறுத்துகிறது !

ஜெரூசலத்தைப் பகடையாக்கி, இரண்டாயிர வருடத்துத் தீயில் குளிர்காய்ந்து உலகை கூறுபோட அமெரிக்க ஏகாதிபத்தியம் முயல்கிறது... தாயேஷ் போன்ற அடிப்படைவாத பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் ஒட்டுமொத்த மனிதகுல ஒற்றுமையையும் ஆட்டிப்பார்க்கின்றன... மாட்டுக்கறி அரசியலோ இரண்டாயிரம் வருடங்களையும் தாண்டிய பண்முகக் கலாச்சார ஒற்றுமைக்கு உலைவைக்கப் பார்க்கிறது !

பசியின் பொருட்டுகூடத் தன் இனத்தைக் கொல்லுவதில்லை மிருகங்கள். மதவெறி பிடித்த மனிதனோ பிரார்த்தனைக்குக் கூடியவர்களைக்கூடக் கொல்லுகிறான். ஒட்டி உலர்ந்த அடிமாட்டுக்காக அடுத்தவீட்டுக்கரனை அடித்தே கொல்லுகிறான்... பசிக்கு சோறிட சொன்ன, அன்பை போதித்த, சகோதரத்துவத்தைப் போதித்த மதங்களின் பெயரால் மனிதத்தை அழிக்கிறான்... நிச்சயமில்லாத சொர்க்கத்துக்காகத் தான் வாழும் மண்ணை நரகமாக்குகிறான் !

இதற்கு அந்த மதம் இந்த மதம் என யாரும் விதிவிலக்கல்ல !

அனைத்து மதங்களிலும் மத அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். அவர்கள், கவிஞர் அப்துல் ரகுமான் ஒரு மேடையில் பேசியதை போல இறைவன் உண்டு எனக் கூறிவிட்டு அவர்களின் செயல்களால் அவனை மிகவும் கேவலப்படுத்துகிறார்கள் ! அவரே குறிப்பிட்டதைப் போல, மதம் படித்தவர்களைவிட மதம் பிடித்தவர்கள் அதிகமாகி போனதால் மனிதநேயத்துக்கு உண்டான அபாயம் இது !

இவனைக் கேட்டால் அவன் செய்வதால் செய்கிறேன் என்கிறான்... அவனைக் கேட்டால் இவன் செய்வதால் செய்கிறேன் என்கிறான் ! யாராவது ஒருத்தன் நிறுத்தினால் போதும்... அனைத்தையும் ஒரு நொடியில் சரிசெய்துவிடலாம். ஆனால் அந்த ஒரு நொடி, சராசரி மனிதனுக்குக் கிட்டிவிடாமல் ஆளும் வர்க்கத்தால் ஆண்டாண்டு காலமாக மறைக்கப்பட்டே வருகிறது !

மேற்கு நாடுகளில் கிறிஸ்த்துவமே பிரதானம். வளைகுடா நாடுகளில் இஸ்லாம் ஒன்றே மதம். ஆசிய நாடுகளின் பல நாடுகள் பெளத்த சமயத்தைப் பின்பற்றும் நாடுகள். இவற்றுக்கெல்லாம் விதிவிலக்காய் உலகின் அனைத்து மதங்களையும் தன்னுள்ளே கொண்டு, அந்தந்த மதத்தவருக்கெனத் தனித்தனி கலாச்சாரப் பினைப்புகளையும்கொண்ட உலகின் ஒரே தேசம் இந்தியா மட்டும்தான்.

இந்து மதத்தின் தாய் மடியாய் திகழும் இந்தியாவின் முஸ்லிம்கள் மற்ற நாடுகளின் முஸ்லிம்களிலிருந்து மிகவும் வேறுபட்ட, தனிக் கலாச்சார அடையாளம் கொண்டவர்கள். அதே போல இந்திய கிறிஸ்த்துவப் பாரம்பரியமும் தனித்துவமானது. கேரள திருச்சபையின் புகழ் வாட்டிகன்வரை பரவிய ஒன்று. தேசத்தின் பெருமைகளாய் பேசப்படவேண்டிய இவையனைத்தும் மக்களிடையே பகைமை வளர்க்க பகடைகளாய்ப் பயன்படுத்தபடுகின்றன !

மதவாத பரப்புரைகள் இருள்மேகங்களாய் இந்தியவான் முழுவதும் சூழ்ந்துவருகின்றன.

பெரியாரின் பூமியில் மதப்பருப்பு வேகாது எனக் கூவி கூவியே விஷ விதைகளைத் தமிழகத்திலும் தூவி வருகிறர்கள் ! தீவிர வலதுசாரிகளை எதிர்க்கும் பாணியில் தந்திரமாய் அவர்களை வளர்க்கும் பணியில் சில ஊடகங்களும் அடக்கம் !

தூண்டிவிடுபவர்களும் துண்டிக்கத் தூண்டுபவர்களும் எங்குமே பாதிக்கப்படுவதில்லை. உலகின் ஏனைய பிரச்சனைகளைப் போல மததுவேச அரசியலால் பதிக்கப்படுபவர்களும் தேசத்தின் அன்றாடங்காய்ச்சிகள்தான் ! அமெரிக்க அதிபரும், இஸ்ரேல் மற்றும் சிரியாவின் அரசியல்வாதிகளும் ஆபத்து வட்டத்துக்குள் இல்லை ! இந்திய பிரிவினையில் லட்சம் லட்சமாய் அழிந்தது அடுத்த வேலை சோற்றுக்கு வழியில்லாத இந்துக்களும் இஸ்லாமியர்களும்தான் !

இதையெல்லாம் ஒரு நொடிகூட யோசிக்கவிடாதபடி மதம் என்னும் ஓப்பியம் சாமானியர்களின் சிறுமூலையில் தொடர்ந்து ஏற்றப்படுகிறது !

இவற்றையெல்லாம் மீறி, நோன்பு தொழுகைக்குக் கோவில் இடத்தைக் கொடுத்த இந்துக்கள், இந்து குழந்தைகளைத் தத்தெடுத்த இஸ்லாமிய பெண்கள் என ஆங்காங்கே நிகழும் ஒரு நொடி நிகழ்வுகளும் அடுத்தடுத்த பரப்புரைகளில் கானல் நீராய்  காணாமல் போய்விடுகின்றன.

இந்தியாவின் ஒவ்வொரு இந்துவின் வெற்றியிலும் ஒரு ஒற்றை இஸ்லாமியனுக்காவது பங்கிருக்கும் ! அதே போல ஒரு ஒற்றை இந்துவின் உதவியாவது இல்லாமல் ஒரு இ ஸ்லாமியனாலோ கிறிஸ்துவனாலோ இங்கு வளர முடியாது ! இதுதான் இந்த மண்ணின் நிலை ! இந்தத் தேசத்தின் வரம் ! இதை நாம் ஒவ்வொருவரும் ஒரு நொடி யோசித்தாலே அனைவரின் மீதும் நேசம் பிறக்கும் !

அளவுக்கு மீறிய அதிகாரவர்க்கத்தின் அராஜகமும், அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகளும், மதபோதகர்களின் விஷ பிரசங்கங்களும் அவர்களுக்கே எதிரான ஒரு நொடியை பிரசவிக்கும் ! அந்த ஒரு நொடியில் சாமானியர்களின் புத்தியில் வெடிக்கும் கிளர்ச்சிதான் உலகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கின்றது ! பிரெஞ்சு புரட்சியைத் தோற்றுவித்ததும் பொதுவுடமையைத் தூக்கிபிடித்ததும் அதுதான். காந்திக்கும் முன்னதாகச் சுதந்திர வேட்கையைத் தூண்டிவிட்ட சிப்பாய் கலகமும் சாமானிய மக்களின் புத்தியில் வெடித்த ஒரு நொடி கிளர்ச்சிதான் !

மத நம்பிக்கை என்பதும் காதலை போல, காமத்தை போல அந்தரங்கமானது. மதம் என்னும் வெற்றுடம்பை உங்கள் வீட்டின் நான்கு சுவற்றுக்குள் எப்படியும் ஆராதித்துக்கொள்ளுங்கள்... ஆனால் வெளியே வரும்போது மத நல்லிணக்க சட்டையை மறக்காமல் மாட்டிக்கொள்ளுங்கள். என் மதம் தான் பெரியது என்பவராக இருந்தால்... தயவுசெய்து மதச் சகிப்ப்புத்தன்மை சட்டையையாவது போட்டுக்கொள்ளுங்கள் !

ஒரு நொடி சிந்தித்துப் புத்தாண்டை தொடங்குவோம்... மதம் மறந்து மனிதம் போற்றுவோம் !

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் !


பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

Friday, September 29, 2017

ஒரு ஜிமிக்கி கம்மலும் பல தமிழ் பாடல்களும் !

எந்த வரையறைகளுக்குள்ளும் அடங்காத ஒரு இசைப்பிரியன் நான் ! சில நாட்களுக்குப் பாகவதரின் மன்மத லீலையைக் கேட்பேன்... அடுத்ததாக அமெரிக்கப் பங்க் ராக் குழுவான கிரீன் டே பாடிய " வாக் அலோன் " பாடலுக்குத் தாவி விடுவேன் ! சில வருடங்களுக்கு முன்னர்ப் பன்வாரி தேவி என்ற ராஜஸ்தான் மாநில நாட்டுபுற பாடகியும் ஹார்ட் கெளர் என்ற இந்திய ராப் பாடகியும் ராம் சம்பத்தின் இசையில் பாடிய பியூஷன் வகைப் பாடலை கேட்க நேர்ந்து, பல மாதங்களுக்கு அந்தப் பாடலை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தேன் ! எனக்கு ராப் ஆகாது என்றாலும் அத்தனை வாத்தியங்களின் இசையையும் மீறி, தனித்துத் தெறிக்கும் பன்வாரி தேவியின் குரல் அந்தப் பாடலை வேறு உயரத்துக்கு இழுத்துச் செல்லும் ! சமீப நாட்களாக " டசக்கு டசக்கு " பாடலை அடிக்கடி பரோட்டா நல்லிக்கறி சாப்பிட்டபடி கேட்டு கேட்டு அஜீரணக் கோளாறாகிவிட்டது !
இசைப்பிரியன் என்று சொல்லிக்கொள்கிறேனே தவிர, நான் ஒரு பாடலின் இரண்டு வரிகளைக் கூட ராகத்துடன் பாடத்தெரியாதவன் ! கூழாங்கற்களையும் தாண்டி, மலையையே விழுங்கி சாதகம் செய்தாலும் எனக்குக் குரல்வளம் தேறாது என்பதைப் பள்ளி பருவத்தில் பங்குபெற்ற முதல் பாட்டு போட்டியிலேயே தெரிந்துக்கொண்டதால் குளியலறையில் கூட நான் பாடுவதில்லை !

ஒரு பாடல் பிரபலமாகி வருகிறது என்ற செய்தி காதில் விழுந்தால் அது எந்த மொழி பாடலாக இருந்தாலும் அந்தப் பாடலை எனக்கு உடனடியாகக் கேட்டுவிட வேண்டும் ! கல்லூரி மாணவ மாணவியரின் நடனம் தொடங்கி, வடிவேலு வெர்ஷன், மிஸ்டர்.பீன் வெர்ஷன் எனத் தறிக்கெட்டு பரவிய சமீபத்திய யூ டியூப் வைரலான ஜிமிக்கி கம்மல் மலையாள பாடலையும் அப்படித்தான் கேட்டேன்...

ஜிமிக்கி, கம்மல் போன்ற வார்த்தைகளை வைத்து கல்லூரி மாணவர்கள் மாணவிகளைக் கிண்டலடித்துப் பாடும் பாடலாக அது இருக்கும் என முதலில் நினைத்தேன்... நாம் ஒன்றை தேடினால் நாம் தேடிய ஒன்றுடன் அது சார்ந்த ஆயிரம் தகவல்களையும் கையூட்டுக் கேட்காமல் தரும் இணையம் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கான தமிழ் அர்த்தம் கொடுக்கும் ஒரு காணொளியையும் எனக்கு அருளியது !

கேரளாவை தாண்டி தமிழ் நாட்டையும் ஆட்டி வைக்கும் ஜிமிக்கி கம்மல் பாடல் மற்றும் நடனங்கள் இணையத்தில் தமிழ் நாட்டு கல்லூரி மாணவர்களால்தான் அதிகம் பிரபலபடுத்தபடுகிறது என ஆரம்பித்து, ஒரு அந்நிய மொழி பாடலை கேட்பதற்கு முன்னர் அந்தப் பாடலின் அர்த்தத்தைப் புரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்ற அறிவுரையுடன் தொடங்கிய அந்தக் காணொளியின் மூலம் பாடலின் முதல் இரண்டு வரிகளுக்கான அர்த்தத்தைத் தெரிந்துக்கொண்டேன்...

" என் அம்மாவின் ஜிமிக்கி கம்மலை அப்பா எடுத்துவிட்டார்..
அப்பாவின் சாராயப் பாட்டிலை அம்மா காலி செய்துவிட்டாள் ! "

முதல் வரியையாவது சகித்துக்கொள்ளலாம் இரண்டாவது வரியை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதாக முடிந்த அந்தக் காணொளியை போல இன்னும் பல கண்டன பதிவுகளை இணையத்தில் காண முடிகிறது. அவற்றின் பின்னூட்டங்களில் வாதம் என்ற பெயரில் பொதுவெளியில் பயன்படுத்த கூசும் வார்த்தைகளில் ஒருவரை ஒருவர் திட்டிகொள்கிறார்கள் ! தமிழ் பத்திரிக்கைகளிலும் அந்தப் பாடலின் அர்த்தம் பற்றிய புலம்பல்களைக் காண முடிகிறது. இவற்றையெல்லாம் கண்டவுடன் நான் அடிக்கடி எழுத நினைத்து முடியாமல் போன ஒன்று நினைவுக்கு வந்தது...

தமிழ் சினிமாவின் காதல் பாடல்கள் மற்றும் பெண்கள் சார்ந்த காட்சிகள் !

நான் நிறையத் தேடியும் ஜிமிக்கி கம்மல் பாடலின் முதல் இரண்டு வரிகளுக்கான அர்த்தத்தை மட்டுமே அறிய முடிந்தது. ஒரு தளத்தில் கிடைத்த அரைகுறை ஆங்கில மொழி பெயர்ப்பை வைத்து கணித்தால் அந்தப் பாடல் நாட்டுப்புற அல்லது கானா வகைப் பாடல் வரிகளைக் கொண்டதாக இருக்கும் எனப் புரிகிறது !

ஜிமிக்கி கம்மல் பாடல் வரிகளை ஒழுக்கம், மரியாதை சார்ந்து கண்டிப்பதாக இருந்தால் நம் தமிழ் சினிமாவின் பெருவாரியான பாடல்களைக் கேள்விக்குட்படுத்த வேண்டி வரும் !...

அன்றுமுதல் இன்றுவரை காமத்தை பிரதானப்படுத்தியே காதல் பாடல்களை எழுதி வருகிறார்கள் தமிழ் சினிமாவின் பாடலாசிரியர்கள் ! ஐம்பதுகளில் இலைமறை காயாகக் கவிதைகளில் பொதிந்து, எண்பதுகளில் நடிகைகளின் ஆடைகளைப் போலவே தரம் குறைந்து பின்னர் " எப்படி எப்படிச் சமைஞ்சது எப்படி ? " எனத் தரம் தாழ்ந்த கேள்வியையே பாடலாக்கும் அளவுக்குப் பரிணாம வளர்ச்சியைக் கண்ட திரையுலகம் நம் தமிழ் திரையுலகம் ! முக்கியமாய் எண்பதுகளில் பாடல்வரிகளில் ஆபாசம் கூடியது மட்டுமல்லாமல், அதன் உச்சமாக விசித்திரமான முக்கல் முனங்கல் சப்தங்களும் சேர்ந்துகொண்டன !

" விசித்திர சப்தங்கள் " கொண்ட பாடல் என்றதுமே தமிழ் சினிமா பாடல் ரசிகர்களுக்குச் சகலகலா வல்லவன் படத்தின் நேத்து ராத்திரி யம்மா பாடலும் நிலா காயுது பாடலும் நிச்சயம் ஞாபகத்துக்கு வரும் !

அந்தப் படம் வெளிவந்த காலகட்டத்தில் கமல் உச்ச நட்சத்திரமாக ஜொலித்தார் என்றால் இசையமைத்த இளையராஜா எதையும் சாதிக்கும் இடத்தில் இருந்தார். இந்த இரு ஆளுமைகளும் நினைத்திருந்தால் அந்தச் சப்தங்கள் இல்லாமலேயெ அந்தப் பாடல்களை அமைத்திருக்கலாம். மிக அருமையான அந்தப் பாடல்களும் " விசித்திர சப்தங்கள் " இல்லாமல் வெளிவந்திருந்தாலும் நிச்சயம் வெற்றிப் பெற்றிருக்கும் ! அப்படிப்பட்ட சூழலில் அந்தச் சப்தங்களுக்கான அவசியத்தையும் தேவையையும் நாம் அலசுவதைவிட அவர்களிடமே ஏதாவது பேட்டியின் போது யாராவது கேட்டால் நியாயமாக இருக்கும் எனத் தோன்றுகிறது !

மேற்கண்ட வரிகளுக்காகக் கமல் மற்றும் ராஜா ரசிகர்கள் தயவு செய்து சண்டைக்கு வந்து விடாதீர்கள் ! இது ஒரு உதாரணம் மட்டும் தான் ! அந்தக் காலகட்டத்தில் இளையராஜா முதல் டி.ராஜேந்தர் வரை இன்னபிற இசையமைப்பாளர்களும் அப்படிப்பட்ட பாடல்களை இயற்றியிருக்கிறார்கள்... ரஜினிகாந்தும் " அடிக்குது குளிரு " எனப் பிதற்றியிருக்கிறார் ! நான் மேலே குறிப்பிட்ட " எப்படி எப்படி " பாடல் தேவா இசையமைத்தது !

பலாத்காரத்துக்கு ஆளான பெண் தற்கொலை செய்துகொள்வது அல்லது அவளைப் பாலியல் பலாத்காரம் செய்தவனுக்கே மணம் முடித்து வைப்பது, கேடுகெட்டு அலையும் கணவன் திருந்திவரும் வரையிலும் மனைவி மட்டும் பத்தினி பதிவிரதையாகக் காத்திருப்பது போன்ற காட்சிகள் தொடங்கி, கணவன் வீட்டுக்குச் செல்லும் பெண் தன் கணவனின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி மிச்சமிருக்கும் நேரத்தில் மாமனார் மாமியார் தொடங்கி அந்த வீட்டுத் தொழுவத்தில் இருக்கும் மாடுகள் வரை பணிவிடை செய்து பிறந்த வீட்டின் புகழை நிலைநாட்ட வேண்டும் என்பதான பாடல் வரிகள் என அனைத்திலும் பெண் ஆணுக்கு கீழ்படிந்தே வாழ பிறந்தவள் என்ற ஆணாதிக்க நிலைப்பாட்டின் உச்சமாக, பெண்களை உடல் ரீதியாகவே மட்டும் ஆணுக விரும்பும், பெண்ணைப் போகப் பொருளாக மட்டுமே நினைத்து அடைய துடிக்கும் ஒரு சமூகத்தின் பிரதிபலிப்பாகவே இருந்தது என்பதுகளின் தமிழ் சினிமா !

இதனை இல்லை என மறுக்க விரும்புபவர்களின் உதாரணங்களாக நூறாண்டு கண்ட சினிமாவில் நிறைய விதிவிலக்கான படங்களும், பாடல்களும் உண்டு என்றாலும் பாலியல் அர்த்தம் பொதிந்த காதல் பாடல்களும், கதாநாயகியின் உடல் கவர்ச்சியை முன்னிறுத்தும்காட்சிகளுமே அதிகம் என்பதை யாராலும் மறுக்க இயலாது.

சரி, இனி ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு வருவோம்...
 வேற்று மொழி பாடல்கள் தமிழ் நாட்டில் தறிகெட்டு ஹிட்டடிப்பது ஒன்றும் புதிதில்லை. அதே போலப் பல தமிழ் பாடல்களும் எல்லை, மொழி பேதங்கள் தாண்டி பிரபலமாகியதும் உண்டு ! பிரபுதேவா நடித்த லவ்பேர்ட்ஸ் படம் வெளிவந்த சமயத்தில் அந்தப் படத்தின் " நோ ப்ராப்ளம் " பாடலை ஒரு ஆப்ரிக்க இளைஞன் பாரீஸ் மெட்ரோ ரயிலில் பாடிக்கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன் ! அந்தப் பாடலின் வரிகளும் தரமானவை அல்ல ! ஒரு பாடல் பிரபலமாவதற்குப் பிரதானம் அதன் தாளக்கட்டும் இசையும்தானே தவிர மொழி இரண்டாம் பட்சம்தான் ! கொரிய பாடலான கங்னம் ஸ்டைலை ஐரோப்பியர்கள் தொடங்கி அமெரிக்கர்கள்வரை அனைவரும் அரசியல் மறந்து ஹிட்டாக்கியதை மறக்க கூடாது !!!

என்பதுகளின் நடுவில் பாகிஸ்தான் பாப் பாடகரான ஹசன் ஜஹாங்கீர் பாடிய 
" ஹவா ஹவா " பாடல் தமிழ் நாட்டை ஆட்டிவைத்தது ! யூ டியூப் இல்லாத அந்தக் காலத்தின் அனைத்து பள்ளி கல்லூரி விழாக்களிலும் அந்தப் பாடலுக்கு நடனம் ஆடினார்கள் ! இன்றுவரை அந்தப் பாடலுக்கான அர்த்தம் யாருக்கும் தெரியாது ! " சோலி கே பீச்சே " பாடலும் தமிழர்களைக் கிறுகிறுக்க வைத்து, பின்னர் " சோலிக்குள் என்ன இருக்கு " எனத் தமிழ் பதிப்பாகவே வெளியான போதும் பெரிதாகக் கண்டிக்கப்படவில்லை !

ஜிமிக்கி கம்மல் மட்டும் இத்தனை வாத பிரதிவாதங்களை உண்டு பண்ணுவதற்குக் காரணம் ? ...

அம்மாவின் கம்மலை சுடும் அப்பாவை மன்னித்துவிடலாம் ! அப்பாவின் பாட்டிலை அண்ணனோ தம்பியோ காலி செய்ததாகக் கூறினாலும் தவறில்லை !ஆனால் அம்மா குடித்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை ! சட்டென உணர்ச்சிவசப்படாமல் யோசிக்க வேண்டும்... அம்மாவுக்குப் பதிலாக அக்கா என்றாலும் தங்கச்சி என்றாலும் இங்குச் சலசலப்புதான் எழும் !

அம்மா என்ற மரியாதை மதிப்புமிக்க ஒழுக்க ஓட்டுக்குள் ஒளிந்திருப்பது பெண் எப்படிக் குடிக்கலாம் அல்லது குடிப்பதாகச் சொல்லலாம் என்ற ஆணாதிக்கக் கசப்பு தான் ! பெண்கள் பார்க்க நடு வீட்டில் வைத்து ஆண்கள் குடிக்கலாம்... அப்படிக் குடிக்கும் ஆணுக்கு பெண்பிள்ளை சிக்கனும், ஆம்லட்டும் சைடு டிஷ்ஷாகச் சமைத்துக் கொடுக்கலாம்... ஆனால் அதையெல்லாம் பார்த்து அவள் குடிக்க முயன்றால் போச்சு !

மேலும் இந்தப் பாட்டுக்கு நடனமாடி பிரபலமான ஷெரின் என்ற பெண்ணைப் பற்றிய யூ டியூப் பதிவுகளும் நம் சமூகத்தில் புரையோடியிருக்கும் பாலியல் வக்கிரத்துக்குச் சாட்சி. இவ்வளவுக்கும் அந்தப் பெண் பாரம்பரிய உடையில், கண்ணியமான நடன அசைவுகளுடன் தான் ஆடியிருக்கிறார்... இது போன்ற நடனங்கள் இன்று பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சகஜம். நம் வீட்டு பெண்பிள்ளை இப்படி ஆடிய ஒரு நடனத்துக்கு வக்கிர கருத்துகள் வந்து விழுந்தால் நம் பாடு எப்படி இருக்கும் ?

பாலியல் உணர்ச்சியைத் தூண்டும் விதமாக அமைந்த ஊடக சாளரங்கள் ஒருபுறம்,பாலியல் உணர்ச்சி பேசக்கூடாத பாவம் என்பதான ஒழுக்கம் மறுபுறம் எனப் பிரிந்த இரெண்டுங்கெட்டான் சமூகத்தின் யதார்த்த அவலம் இது !

சமீப படம் ஒன்றின் நகைச்சுவை காட்சியில் அப்பாவின் மது பாட்டிலை அவரது இரு மகன்களும் தங்களுக்காக ஒளித்துக்கொள்வார்கள். அப்பா தேடி அலுத்த பிறகு, இருவரும் குடிக்க ஆரம்பிக்கும் நேரத்தில் அம்மா ஒரு குவளையை வளைந்து நெளிந்து உடம்பெல்லாம் வலி என்றபடி நீட்டுவார்... " நீயும் சரக்கு போடுவியா ? " எனக் கேட்கும் மகனிடம், எனக்கு அல்ல உன் அப்பாவுக்கு என்பார் !

இந்தக் காட்சியை விடவும் ஜிமிக்கி கம்மல் பாடல் வரிகள் ஒன்றும் மோசமானதாகத் தோன்றவில்லை ! மேலும் அந்தப் பாடலோ அல்லது அதன் காட்சி அமைப்போ என்னைப் பெரிதாகக் கவரவுமில்லை ! ஜிமிக்கி கம்மல் பாடல் ஒரு சீசன் ஹிட் ! அவ்வளவுதான் !
 சரி, பாலிவுட் பாட்ஷாவான ஷாருக்கான் தன் மார்க்கெட்டை நம்பாமல் சன்னி லியோனின் ஜாக்கெட்டை நம்பும் இன்று தமிழ் சினிமாவில் பெண்களைப் பற்றிய பார்வை மாறியிருக்கிறதா ?

சூப்பர் ஸ்டார், உலக நாயகன் தொடங்கித் தல தளபதிகளின் படங்களில் இன்னும் நாபிச்சுழி நடனங்கள் மாறவில்லை என்றாலும் கதையை நம்பும் இயக்குனர்கள், இயக்குனர்களை நம்பும் நடிகர்கள் எனப் புதுஅலையாய்க் கிளம்பியிருக்கும் இளம் தலைமுறை படங்களில் பெண்களைக் காட்சிபடுத்துவதில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை பற்றிச் சினிமாவை அக்குவேறு ஆணிவேறாக அலசும் எந்த விமர்சகரும் இதுவரை விரிவாக அலசாதது ஆச்சரியம் !

தமிழ் சினிமாவின் மாற்றத்தை விளக்க எத்தனையோ சமீபத்திய படங்களை உதாரணமாகச் சொல்லலாம் என்றாலும் , ஒரு நல்ல சினிமா தரும் அனுபவத்தை எனக்கு முழுவதுமாக வழங்கிய விக்ரம் வேதா படத்தின் இரு காட்சிகளைக் குறிப்பிட்டாலே போதும் எனத் தோன்றுகிறது !

இளம் கணவன் மனைவி கூடலின் ஆரம்பமாகத் தொடங்கும் யாஞ்சி பாடல்... ஒரு காட்சிக்குள் மிகத் தாமதமாக நுழைந்து, விரைவாக வெளியேறுவதே ஒரு சிறந்த இயக்குனருக்கான அடையாளம் என்பதற்கு உதாரணமாக அமைந்த இந்தப் பாடலின் காட்சியமைப்பை நிலா காயுது பாடலுடன் ஒப்பிட்டு யோசித்தால் மாற்றம் புரியும் !

அதே போல டசக்கு டசக்கு பாடல் !

எண்பதுகளின் சினிமாவில் கடத்தல்காரர்களும் அடியாட்களும் கூடும் கொண்டாட்ட காட்சி என்றால் மதுபாட்டில்கள் உருளும் மேசை மேல் டூ பீஸ் உடையில் ஒரு நடன மங்கையும் உருண்டு குலுங்கி ஆட வேண்டியது அவசியம் ! ஷாருக்கானின் ராயீஸ் படத்திலும் அப்படிப்பட்ட காட்சி இடம்பெற்றதைதான் அவர் ஜாக்கெட்டை நம்பியதாகக் குறிப்பிட்டேன் !

ஆனால் டசக்கு டசக்குப் பாடலில் தாடி மீசையுடன் தாதாக்கள் மட்டுமே ஆடி களித்தது தமிழ் சினிமாவின் அற்புத மாற்றம் !



பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.