Saturday, July 18, 2015

காலம் திருடிய கடுதாசிகள் !

வீட்டின் கூடத்தில், மேசையின் மீதோ, சுவற்றில் பொருத்தப்பட்ட மர ஷெல்பிலோ தூசி படிந்த, வெல்வெட் துண்டு போர்த்தப்பட்ட பெரிய மோர்பி ரேடியோ... சமையல் புகையினால் பழுப்பேறிய அந்த ரேடியோவுக்கு அருகில் ஒருசில பழைய இன்லாண்டு லெட்டர் மற்றும் காந்திதலை அச்சிட்ட மஞ்சள் நிற தபால் அட்டைகள்... அபூர்வமாய் ஒன்றிரண்டு வெளிநாட்டுத் தபால்கள் !...

ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் மேல் நடுத்தர மற்றும் நடுத்தரக் குடும்ப வீடுகளில் காணக்கிடைத்த அந்தக் காட்சியைத் தங்கள் மனப்பெட்டகத்தில் ஓவியமாய் ஒளித்துகொண்டவர்கள் அதனைச் சிரமம் பார்க்காமல் தேடி எடுங்கள் ...

இந்தப் பதிவு சொல்லப்போவது " விவித்பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு... " என வயலின் ஆக்ரோசத்துடன் தொடங்கி, ஒரு தலைமுறையின் சுகதுக்கங்களின் துணையாய் தவழ்ந்த, அந்த மோர்பி ரேடியோவின் வழியே கசிந்த, திரையிசை தூறலை அல்ல... அதற்கருகே அடுக்கப்பட்டிருக்கும், அந்தச் சுக துக்கங்களைப் பதிவு செய்த " கடுதாசிகளின் " கதையை !


தெருவுக்கு ஒரு தொலைபேசியே அதிகம் என்ற அந்தக் காலத்தில் அதிநவீன தனிமனித தகவல் தொடர்பாக இருந்தவை கடிதங்களும் தந்திகளும் !

" பொண்ணைப் புடிச்சிருக்கு... கொடுக்கல் வாங்கலும் சரிதான்.... இருந்தாலும் குடும்பத்துல கலந்துக்கிட்டுக் கடிதம் போடறோம் ! " எனச் சொல்லிவிட்டு எழுந்துபோகும் மாப்பிளை வீட்டாரின் சம்மதம் கடிதம் வந்து சேரும் வரை தூக்கம் தொலைத்த பெண்ணின் பெற்றோரையும், " தாயும் சேயும் நலம் " என்ற வரிகளைத் தாங்கிய கடிதம் கையில் கிடைக்கும் வரை கர்ப்பிணி மகளை நினைத்து அல்லும் பகலும் கலங்கிய தாயையும், " அப்பாவுக்குத்தான் உடல்நிலை சரியில்லை. நாங்கள் இருக்கிறோம். புகுந்த வீட்டில் நீ முகத்தைத் துக்கிவைத்துக்கொண்டிருக்காதே ! " என்பதைப் படித்துத் துக்கத்தைத் தொண்டைக்குழிக்குள் அடைகாத்த மகளையும் இன்றைய குறுஞ்செய்தி, முகநூல் தலைமுறைக்குத் தெரியுமா ?!

" காலணா கடுதாசிக்கு வக்கத்துப் போயிட்டேன்... இருக்காளா போயிட்டாளான்னு தெரிஞ்சிக்கக் கூட ஒரு கடுதாசி போடக்கூடாதா ?... " என்ற புலம்பல் பிள்ளைகளால் மறக்கப்பட்ட முதிய தாய்மார்களின் அன்றாட அங்கலாய்ப்பாய் இருந்த காலம் அது !

ன்றைக்கும் கடிதம் என்ற வார்த்தையைக் கேட்டாலே எனது பால்ய வயதின் நிகழச்சி ஒன்று மனதில் நிழலாடும்...

எங்கள் தெருவில் ஒரு பெட்டிக்கடை. தன் வீட்டு திண்ணையைக் கடையாக மாற்றியிருந்த அந்தக் கடையின் உரிமையாளரை தெருப்பிள்ளைகள் அனைவரும் மாமா என அழைத்ததால் அந்தக் கடைக்கு மாமா கடை என்றே பெயர் ! பெரியவர்களுக்கு அவர் கடை மாமா !

பாட்டிக்காக " லெட்டர் " வாங்க மாமா கடை சென்றேன்...

கடையில் நல்ல கூட்டம்.

" ஒரு இங்கிலாந்து லெட்டர் கொடுங்க ! "

எட்டணா என ஞாபகம்... நான் காசை நீட்டி கேட்க, என்னை ஏற இறங்க பார்த்தவர், வேறு வியாபாரத்தைக் கவனிக்கத் தொடங்கினார் !

" கொஞ்சம் இரு தம்பி !.... "

நான் மீன்டும் மீன்டும் கேட்க, அவரோ என்னைக் காக்கவைத்துவிட்டு மற்ற வியாபரங்களைப் பார்க்க, எனக்கு அழுகையும் ஆத்திரமும் முட்டியது !

" தம்பி என்னா கேட்டீங்க ?.... "

ஒரு வழியாய் அனைத்து வியாபரங்களையும் முடித்துவிட்டு அவர் கேட்க,

" ஒரு இங்கிலாந்து லெட்டர் !... "

நான் கோபமாய்க் கூற,

" இங்கிலாந்து லட்டரா ?... அதுக்குத்தான் நிக்கச் சொன்னேன்... அது இங்கிலாந்து லட்டர் இல்லம்மா... இன்லாண்டு லெட்டர்... இன்லாண்டுன்னா உள்நாடுன்னு அர்த்தம்... படிக்காத நாங்க வேணா தப்பா சொல்லலாம்... படிக்கற தம்பி நீங்க சரியா புரிஞ்சிக்கனுமில்ல ?.... "

அவரின் வாஞ்சையான வார்த்தைகள் இன்றும் மனதில் ஒளித்துக்கொண்டிருக்கின்றன !


புதிதாய் திருமணமான எதிர்வீட்டு அக்காவின் கணவருக்குத் துபாயில் வேலை...

" என்ன சொல்லி நான் எழுத... என் மன்னவனின் மனம் குளிர... "

" டேய்... அது என்னா படம்ன்னு தேடி கேசட் கொண்டு வரியா ?... "

வானம் குளிர்ந்து மாலை மயங்கிய ஒரு பொழுதில், தெருக்கோடி டீக்கடையிலிருந்து காற்றில் கலந்து காதுகளில் கசிந்த சினிமா பாடலை கண்களில் நீர் கட்ட லயித்துக் கேட்ட அக்கா கெஞ்சியது !

வாடகை வி சீ ஆர் கேசட் பிளேயர் பிரபலமான காலம்...

ராஜா ரெக்கார்டிங் சகாயம் அண்ணனிடம் படத்தை விசாரித்து, அப்போது ஊரிலிருந்த அனைத்து வீடியோ கேசட் கடைகளிலும் அலைந்து, அந்தப் படத்தைக் கொண்டு வந்தேன் !...

ராணிதேனி !

பார்க்க முடியாத பாடாவதி பிரிண்டை பரவசமாய்ப் பார்த்து, அந்தப் பாடலை மட்டும் பலமுறை ரீவைண்ட் பண்ண சொல்லி கேட்டது அக்கா !

" டேய்... அவருக்கு ஒரு லெட்டர் எழுதனும்... எனக்குச் சரியா எழுத வராதுடா... நான் சொல்றேன்... நீ எழுதறியா ? "

தயங்கி தயங்கி கேட்ட அக்காவுக்குக் கடிதம் எழுதி கொடுத்தேன்.

" டேய்... இதை யார் கிட்டேயும் சொல்லிடாதேடா ! "

காதலில் உருகி எழுதிய கடிதம் சொந்த கணவனுக்குத்தான் என்றாலும் சஙடமாய்க் கேட்டது அக்கா !

ஒவ்வொரு நாளும் காத்திருந்து, எதிர்பார்ப்பு பொய்த்த ஒரு பகலில் கணவனிடமிருந்து பதில் கடிதம் !

" டேய்... டேய்... படிச்சி சொல்லுடா... "

அன்பு மனைவி என ஆரம்பித்த கடிதத்தை, பொதுவான விசாரிப்புகளுக்குப் பிறகு,... நீ ஏதேதோ எழுதியிருக்கிறாய் அதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு எனக்குப் புத்தியும் இல்லை நேரமும் இல்லை என முடித்திருந்தார் !

படித்துவிட்டு அக்காவை பார்த்தேன்... சலனமற்ற முகத்துடன் கடிதத்ததை வாங்கி நான்காய் மடித்துக்கொண்டு விடுவிடுவெனப் போய்விட்டது அக்கா !

இப்படி எத்தனையோ அக்காக்களின் புரிந்துக்கொள்ளப்படாத பிரியங்களைச் சுமந்து திரிந்தன அன்றைய கடுதாசிகள் !


பால்காரர் அன்றாட வாழ்க்கையின் மிக முக்கிய அங்கத்தினராகத் திகழ்ந்த நாட்கள் அவை... பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவை கொண்டுவரும் தபால்காரரை தலையில் தூக்காத குறையாகக் கொண்டாடிய காலம் !

காலை நேர பரபரப்பு முடித்து, முந்தானையில் கை துடைத்தபடி பெண்கள் வீட்டு வாசலில் நிற்க தொடங்குவார்கள்... ஓய்வு பெற்ற திண்ணை தாத்தாக்களின் பார்வைகள் தெருக்கோடியை மொய்க்கும் ! ...

பதினொரு மணி வாக்கில் பழையைச் சைக்கிளின் முன்னும் பின்னும் பெரிய பைகளில் தபால்களும், பார்சல்களும் தளும்ப, பிரசன்னமாவார் தபால்காரர் !

" தபால்காரரே.... நமக்கு..... "

" இன்னைக்காச்சும் மணியார்டர் உண்டா... "

" பாவிபய கடுதாசி போட்டிருக்கானா தம்பி ?.... "

ஒவ்வொருவீட்டு வாசலின் விசாரிப்புக்கும் ஒவ்வொருவிதமாய்ப் பதிலளிப்பார்... ஆனால் முகத்தின் சிரிப்பு மாறாது !

" இருக்கு !... இருக்கு... ! "

" தேதி பொறந்து ரெண்டு நாளுதானே ஆகுது தாத்தா... பென்சனெல்லாம் நாளைக்குத்தான் டிஸ்பேட்ச் பண்ணுவாங்க ! "

" ஏன் ஆத்தா கோபப்படறே... கடுதாசிதானே ... ? போட்டிருப்பான் !... நாளைக்கு வரும் ! "

தலைவாசலில் நின்று அவர் விசிறும் கடிதங்கள் மிகச் சரியாய் வீட்டினுள் விழும் !

சைக்கிளை ஸ்டாண்ட் போட்டுவிட்டுத் திண்ணையில் தபால்காரர் அமர்ந்தால் மணியார்டர்... ரெஜிஸ்டர் தபால் அல்லது பார்சல் !

" இருங்க தபால்காரரே... அடியேய்... காபி கொண்டா... "

" இல்லீங்க இருக்கட்டும் !.... "

" அட ஒரு வாய் மோர் இல்லேன்னா தண்ணியாச்சும் குடிச்சிட்டு போங்க ! "

மணியார்டர் பாரத்தை விரித்து, பணத்தை எண்ணுபவருக்கு உபசாரம் தூள் பறக்கும் ! வரும் தொகையின் அளவை பொறுத்து அவரின் கையில் கொஞ்சம் தினிப்பவர்களும் உண்டு ! காபியோ, மோரோ அல்லது சிறு பணமோ எதுவாக இருந்தாலும் சிரிப்புடன் பெற்றுக்கொள்வார் !

அப்போதெல்லாம் பார்சல்கள் மிக அரிதாக வருபவை ! தெருவில் யார் வீட்டுக்காவது பார்சல் வந்துவிட்டால், வந்தது என்ன என்பதை அறிந்துகொள்ளத் தெரு முழுவதும் விசாரணையில் இறங்கும்... அதுவும் வெளிநாட்டு பார்சலாக இருந்தால் தெருவே தூக்கமின்றிப் புரளும் !

சிங்கப்பூரிலிருந்து வந்தது ஒரு சாக்லெட் பட்டையானாலும், பங்கு வைக்கப்பட்டுத் தெருவின் அனைத்து வீடுகளுக்கும் வரும் !

" கொஞ்சம் படிச்சி சொல்லுப்பா.... "

" இரு ஆத்தா... லைனை முடிச்சிட்டு மதியமா வந்து எழுதி தரேன்... "

கண் பார்வை மங்கிய பாட்டியின் கடிதத்தைப் படித்துகாட்டிவிட்டு, பதில் எழுத மதிய உணவுக்குப் பின்னர் வருவார் !

" தபால்காரரே... அடுத்த ஞாயித்துக்கிழமை நம்ம பெரிய பொண்ணுக்கு வலைக்காப்பு... வீட்டுக்கு வந்து.... "

" அதெல்லாம் வேண்டாம்மா... அதான் சொல்லீட்டீங்களே... "

அதுநாள் வரையிலும் காக்கி யூனிபார்மில் மட்டுமே பார்த்த தபால்காரர் வேட்டியும் சட்டையுமாகக் குடும்பத்துடன் வந்து கலந்துக்கொள்ளுவார்.

கொடுப்பார்கள், அழைப்பார்கள் என அவர் நினைத்து பழகாத, காரியம் ஆகக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கும் இல்லாதிருந்த காலம். அரசு ஊழியர் என்ற நிலையைத் தாண்டி, ஒவ்வொரு நாளும் நம் வீடு வரும் சொந்தக்காரரை போலத் தபால்காரர் நடத்தப்பட்ட காலம் ! சம்பளத்துக்கு வேலை என்ற கடமையையும் தாண்டி தான் சுமந்து வரும் கடிதங்களில் பொதிந்த சுக துக்கங்களைத் தன்னுடையவைகளைப் போலப் பாவித்த அரசு ஊழியரின் காலம் !

" வீட்டு ஆம்பளைங்க யாரும் இல்லையா ?... "

தந்தியுடன் வருபவர் சன்னமான குரலில் கேட்டால் வீட்டுப் பெண்கள் பதற தொடங்கிவிடுவார்கள்...

" ஒண்ணுமில்லேம்மா... உடம்பு முடியலன்னுதான் இருக்கு.... "

காத்திருந்து குடும்பத்தில் மூத்தவர்களிடம் துக்கச் செய்தியை பக்குவமாய்ச் சொல்லிவிட்டு போவார்.

" .... ருக்காரா ? "

கோடையின் வெப்பம் தகித்த ஒரு மதியத்தில் என் பெயரை சொல்லி கூப்பிட்டார் தபால்காரர்...

என் பெயருக்கு வந்த முதல் கடிதம் !

" உனக்காடா ?... உனக்கு யாருடா கடிதம் போட்டது ?... "

பள்ளி ஹாஸ்டலில் தங்கி என்னுடன் படித்த அமீன் எழுதிய கடிதம் !

மூன்றாம் வகுப்புக் கோடை விடுமுறையில் இருந்த என்னை வீட்டினர் அனைவரும் சுற்றிக்கொள்ள, அந்தக் கடிதத்தைப் படித்தபோது உண்டான பரவசம் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது !

தீபாவளி, பொங்கல் விழாக்களின் போது பலருக்கு வாழ்த்து அட்டைகள் வரும்...

நானும் ஒரு பொங்கல் அட்டை வாங்கி என்னுடன் படித்த அய்யாக்கண்ணு அனுப்புவது போல, கையெழுத்தை மாற்றி எழுதி எனது முகவரிக்கே அனுப்பி, நண்பனிடமிருந்து வந்ததாக வீட்டில் பெருமைபட்டுக்கொண்டதை இன்று நினைத்தால் சிரிப்பு வருவதுடன் அன்று அப்படிச் செய்யத்தூண்டிய உளவியல் காரணத்தையும் அறிந்துக்கொள்ள ஆவல் எழுகிறது !

புதுவை மாநிலத்தின் பல குடும்பங்களைப் போல என் குடும்பமும் பிரெஞ்சு குடியுரிமை கொண்ட குடும்பம் என்பதால் பிரான்சிலிருந்து தாத்தா, சித்தப்பாக்களின் தபால்கள் தொடர்ந்து வந்தபடி இருக்கும்...

பிரான்சிலிருந்து அனுப்பப்பட்ட கடிதம் எங்களை வந்தடைய ஏறக்குறைய பதினைந்து நாட்கள் ஆகும். அந்தப் பதினைந்து நாள் கணக்கு என் சித்திமார்களுக்கு அத்துப்படி ! தபால்காரர் வரும்வரை காத்திருக்க முடியாமல் என்னைத் தபால்நிலையத்துக்கே விரட்டுவார்கள் !

காலை பத்துமணிவாக்கில் ஊரின் அனைத்து " போஸ்ட் மேன்களும் " அவரவர் " லைனுக்கான " தபால் கட்டுகளுடன் தபால் நிலையத்தைச் சுற்றி அமர்ந்துக்கொண்டு கட்டை பிரித்து அடுக்குவார்கள்.

" மாரியம்மன் கோவில் வீதி பத்தாம் நம்பர் இருக்கா சார்... "

" சார்.... பள்ளிவாசல் தெரு ரெண்டு... "

" சர்ச் ஸ்ட்ரீட் ரெண்டாம் நம்பர் வீடு ! "

சினிமா கொட்டகை டிக்கெட் கெளண்டர் போல அவரைச் சுற்றி மொய்த்து பரபரக்கும் கூட்டத்தில் புகுந்து லெட்டர் பெற்று திரும்புவது பெரும் சாதனை !

தெருக்கோடியில் வசித்த நந்தகுமார் அண்ணன் முதல் ஆளாய் தபால் ஆபீசில் நின்றால், எங்கள் வீட்டுக்கு அருகில் வசித்த பத்மா அக்கா கடிதம் எழுதியிருக்கிறது என அர்த்தம் ! குணிந்த தலை நிமிராமல் கல்லூரி சென்று வரும் அக்கா எந்தக் கடையில் லெட்டர் வாங்கி எங்கிருந்து போஸ்ட் செய்யும் என்பதும், அந்தக் கடிதம் கிடைக்கும் நாள் அண்ணனுக்கு எப்படித் தெரியும் என்பதும் எங்கள் தெருவின் சிதம்பர ரகசியம் !

தெருவில் நுழையும் தபால்காரரை எதிர்கொண்டு அண்ணனின் கடிதத்தை வாங்கித் தாவணியில் மறைத்துகொண்டு கொல்லைப்புறம் ஓடும் பத்மா அக்கா !

பத்மா அக்கா திருமணமாகி போகும் வரையிலும், அதுவரையிலும் டீ. ராஜேந்தரின் காதல் பாடல்களைக் கேட்டு ரசித்த நந்தகுமார் அண்ணன் ராஜேந்தரை போலவே தாடியும் வளர்த்துக்கொண்டு " நான் ஒரு ராசி இல்லா ராஜா " பாடலை தலை சிலுப்பிக் கேட்க ஆரம்பித்த வரையிலும் அவர்களின் காதலை சுமந்து பறந்த கடித பட்டாம்ப்பூச்சிகள் அவர்கள் வீட்டினர் எவரின் கைகளிலும் சிக்காமல் சுழன்றது ஆச்சரியமான அதிசயம் !


தொன்னூரின் ஆரம்பத்தில் எங்கள் தெரு தபால்காரர் ஓய்வில் செல்ல, முதல் முறையாக ஒரு பெண் தபால்காரராக வந்தார். வெயில் மழை என எந்தக் காலமாக இருந்தாலும் சைக்கிளை ஓட்டாமல் எநேரமும் தள்ளிக்கொண்டே வரும் அந்தப் பெண்ணுக்கு சைக்கிள் ஓட்ட தெரியும் தெரியாது எனத் தெருவே பிரிந்து பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்ததே தவிர அந்தப் பெண்ணிடம் நேரடியாகக் கேட்கும் தைரியம் யாருக்கும் இல்லை !

நானும் பிரான்ஸ் வந்து தாத்தா, சித்தப்பாக்களைப்போலப் பொறுப்பாய் கடிதம் எழுத தொடங்கினேன்...

தொழில்மயமாக்கலின் முக்கிய நிகழ்வாய் சர்வதேச தொலைபேசி வசதி வீடுகளுக்கு வர ஆரம்பித்தது.... பேஜரில் தொடங்கி அடுத்து ஆரம்பித்த அலைபேசி தொழில்நுட்பம் அதிவிரைவாய் உலகெங்கும் பரவத் தொடங்கியது....

சட்டெனத் தொடங்கிச் சர்வதேசமும் பரவிய தொழில்நுட்ப அலை சுகம், துக்கம், காதல், பிரிவு, நட்பு, துரோகம் என ஒரு தலைமுறையின் அனைத்து உணர்ச்சிகளையும் சுமந்து சுற்றிய கடுதாசிகள் அனைத்தையும் அடித்து ஒழித்துவிட்டது !

காலம் எப்போதுமே இப்படித்தான் !...

விரைவான பேருந்து பிரயாணத்தின் போது காற்றின் ஓசையை மீறி வேகமாய் நம் காதுகளுக்குள் தவழ்ந்து சட்டென வெளியேறி மறைந்துவிடும் சாலையோர டீக்கடை மோர்பி ரேடியோவின் கானத்தைப் போலவே நமக்கு அறிமுகப்படுத்தும் எதையும் நாம் எதிர்பாராத தருணம் ஒன்றில் சட்டெனத் திருடி தன்னுள் எங்கோ மறைத்துவிடும் !


ரு சில வருடங்களுக்கு முன்னர் ஊர் சென்றிருந்த போது தபால்கார பெண்மணியைப் பார்க்க நேர்ந்தது...

ஆளுக்கு ஒன்று என்பதையும் தாண்டி விரலுக்கு ஒன்று என்ற அளவுக்குக் கைப்பேசிகள் அதிகரித்துக் குறுஞ்செய்திகள் குப்பைகளாய் மலிந்த காலத்தில் வீடுகளின் திண்ணைகள் கார் பார்க்கிங்காய் மாறி, திண்ணை தாத்தாக்கள் எல்லோரும் முதியோர் இல்லங்களுக்கு மாறிவிட்டார்கள் !...

" ஏங்க... ? இந்த நேரத்துல போன் பண்ணாதீங்கன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன் ?... "

ஏதோ ஒரு வீட்டில், தொலைக்காட்சி தொடரின் அழுகை சத்தத்தைத் தாண்டி , தெருவில் தெரித்த அலைபேசும் பெண்ணின் குரல்... வெளிநாட்டு கணவனாக இருக்கலாம் !

" இந்த ஒரு தபாலுக்காக இத்தனை தூரம் வர வேண்டியிருக்கு.... ! "

பக்கவாட்டில் தபால்களும் பார்சல்களும் பிதுங்கி வழியும் பெரிய சாக்குப் பைகள் இல்லாத இளைத்துப்போன சைக்கிளை தள்ளிக்கொண்டு தனியாகப் பேசியபடி சென்றவரிடம் என்னை அறிமுகப்படுத்திகொண்டு அவருக்குச் சைக்கிள் ஓட்ட வருமா எனக் கேட்க தோன்றியது...

என்னைக் கடந்து சென்றுவிட்டவரை திரும்பி பார்த்தேன்... உக்கிரமான வெயிலில் நீண்டு தள்ளாடிய அவரின் நிழலை கண்டதும் பேச தோன்றவில்லை !

சாலையோர டீக்கடையின் கானத்தைப் போலவே காலம் திருடிய கடுதாசிகளும் காற்றில் கரைந்துவிட்டாலும் அந்தக் கடிதங்களின் வரிகள் இன்னும் பலரது மன சுவர்களில் அழியாமல்தான் இருக்கின்றன !


பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

Monday, June 1, 2015

பொறுமை என்னும் புதையல் !

வலைநட்புகளுக்கு வணக்கம்...

சொந்த கடமைகளின் பொருட்டு, என் வலைப்பூ பங்களிப்பு நிறையக் குறைந்து வருகிறது. சில புதிய பொறுப்புகளை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொள்ள நிறைய அவகாசம் தேவைப்படுவதால் இந்தத் தொய்வு. வலைப்பூவுக்கான நேரத்தை தினசரி ஒதுக்கும்படியான சூழலை உருவாக்க முயன்றுவருகிறேன். நான் காணாமல் போகும் தருணங்களில் என் நலன் நாடும் நண்பர்களுக்கு மன்னிப்புடனான நன்றிகள் !




" பொறுமை கடலினும் பெரிது... பொறுத்தார் பூமி ஆள்வார்  " எனப் பொறுமை குணத்தைப் பெருமையாய்ப் போற்றுகிறது தமிழ் !

"உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின் "

எனப் பொறுமையைத் துறவுக்கும் மேலாகத் தூக்கி நிறுத்துகிறார் திருவள்ளுவர் ! ....

" அட என்னங்க ?!... போன் பண்ணினா பத்து நிமிசத்துல பீட்சாவும் பர்கரும் வீட்டுக்கு வர்ற ஸ்பீட் கலாச்சாரத்துல பொறுமையைப் பத்தி மொக்கையா ?!... "

" ஆமாங்க சார் ! பொறுமைன்னு சுவத்துல எழுதியிருக்கற வார்த்தையைகூடப் படிக்கப் பொறுமையில்லாம ஓடுற இன்னைக்குத்தான் பொறுமை ரொம்ப அவசியமா எனக்குப் படுது... ஏன்னா, நாம ஓடுற வேகத்துக்கு எதுலயாவது மோதிட்டோம்ன்னா எதுல மோதிக்கிட்டோம்ன்னு தெரிஞ்சிக்கவாவது பொறுமை தேவைங்க...! "

அதனால பொறுமையா இந்தப் பதிவை படிங்க !

பொறுமை என்பது என்ன ?




லட்சக்கணக்கான யூதர்கள் ஹிட்லரால் கொல்லப்பட்டுக்கொண்டிருந்த இரண்டாம் உலகப்போரின் போது யூதர்களுக்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதினார் காந்தி...

" தோழர்களே... ஹிட்லருக்கு பயந்து ஓடாதீர்கள் ! அவருக்குத் தேவை உங்கள் உயிர் தான் என்றால் உலகின் யூதர்கள் அனைவரும் ஒன்று திரண்டு அவரிடம் செல்லுங்கள்.... "

என்பதாக நீளும் அந்தக் கடிதம்,

" ஹிட்லர் வேண்டுமானால் உங்களின் உயிரை அழிக்கலாம் ஆனால் உங்களின் ஆன்மாவை ஒன்றும் செய்ய இயலாது ! நீங்கள் யூதனாகப் பிறந்து யூதனாக இறப்பதை அவரால் மாற்ற முடியாது ! "

என முடியும் !

மேலை நாட்டினரால் இன்றும் அதிர்ச்சியுடன் விவாதிக்கப்படும் வரலாற்றுக் கடிதங்களில் ஒன்று அந்தக் கடிதம் ! ஆனால் காந்தியின் அறிவுரை ஆன்மா சம்மந்தப்பட்டது !

" ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு  " என்ற ஏசுநாதரின் போதனை இன்றளவும் சரி தவறு என விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது ! ஜே. கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ போன்றவர்கள் கூட அடித்தால் திருப்பி அடி ! ஆனால் அத்துடன் நிறுத்திக்கொள் என்றே போதிக்கிறார்கள் !!

காந்தி தன் கடித்தத்தில் கூறுவதைப் புரிந்துக்கொள்ள முடியுமானால் ஏசுநாதரின் வார்த்தை சரி என்பது புரியும்...

தெருவில் போகும்போது நம்மை நிறுத்தி அறைபவனைக் கூறவில்லை ஏசுநாதர் ! அவர் குறிப்பிட்ட அடி, உங்கள் நம்பிக்கைக்கு மாற்றான நம்பிக்கை உடையவன் அடிக்கும் அடி...

ஒரு கன்னம் என்ன ? வேண்டுமானால் இரண்டு கன்னங்களிலும் அடித்துக்கொள்... உன்னால் என் உடலைதான் சிதைக்க முடியுமே தவிர, என் ஆன்மா கொண்டிருக்கும் நம்பிக்கையை அசைக்க இயலாது என்ற பெருமை செருக்கு மிக்கப் போதனை ! எனக்கான நேரம் வரும்வரை அவசரப்பட்டு என் கொள்கையைக் கொன்றுவிடமாட்டேன் என்ற பொறுமை என்னும் பெரும்பலம் !

ஏசுநாதரின் போதனை புரியுமாயின், உலகம் உருண்டை என ஆதாரத்துடன் நிருபித்த கலிலியோ திருச்சபையின் முன்னால் மண்டியிட்டு தன் கூற்றைத் தானே மறுத்தது பயத்தினால் அல்ல என்பதும் புரியும் !

 சாங்கிய தத்துவம் குணங்களை மூன்றாக வகைப்படுத்துகிறது.சத்வ, ரஜோ, தமோ ஆகிய அந்த மூன்று குணங்களில் முதன்மையானது சத்வ குணம். படைப்பின் குணமாகப் போற்றப்படும் சத்வ குணத்தின் அடிப்படை பொறுமை மற்றும் அமைதி !

பிள்ளையாரின் யானை முகமும், அவரது காலடி சுண்டெலியும் கற்றுவிக்கும் வாழ்க்கை தத்துவம் எத்தனை பேருக்கு தெரியும் ?!...

சுண்டெலியை போன்ற அவசரமான, அலைபாயும் மனதை யானையைப் போலப் பொறுமை காத்து அடக்க வேண்டும் என்பதே அந்தத் தத்துவம் !

ரபு மொழியில் சபர் என்றொரு வார்த்தை உண்டு. இஸ்லாமிய மார்க்கத்தில் அடிக்கடி உபயோகிக்கப்படும் வார்த்தைகளில் ஒன்று சபர். சபர் என்றால் பொறுமை, சாந்தி எனப் பொருள்படும்.

தென்னிந்திய இஸ்லாமிய பரம்பரை குட்டிக்கதை ஒன்று...


ஒரு ஆடம்பரமான மன்னனுக்கு மூன்று பெண்கள். இளைய பெண்கள் இருவரும் அரச குடும்பத்துக்கு ஏற்ப பகட்டு வாழ்க்கை வாழ, மூத்தவள் மட்டும் சதா சர்வகாலமும் இறை வணக்கத்தில் ஈடுபாடு கொண்டு, மிக எளிமையாக வாழ்பவள். எந்தச் சூழ்நிலையிலும் சலனப்படாத பொறுமையானவள்.

மூத்த மகளின் எளிமையாலும் பொறுமையாலும் எரிச்சலாகும் மன்னன் அவளை அரண்மனை வாழ்க்கைக்கு ஒத்துவராதவள் என்று ஊருக்கு வெளியே குடிசை ஒன்றில் வசிக்க அனுப்பிவிடுகிறான். அவளும் மறு சொல் பேசாமல் பொறுமையுடன் அங்கு இறைவனைத் தொழுதவாறு தன் வாழ்க்கையைக் கழிக்கிறாள்.

புனித ஹஜ் யாத்திரைக்குப் புறப்படும் மன்னன், அனைவரிடமும் சொல்லிக்கொண்டு தன் இளைய மகள்கள் இருவரிடமும் என்ன கொண்டுவர எனக் கேட்கிறான். அவர்களும் விலை உயர்ந்த, அரிதான பரிசு பொருட்களை வாங்கி வருமாறு வேண்டுகிறார்கள். புனித யாத்திரைக்காக மன்னன் கப்பல் ஏறும்போது ஒரு தடங்கல்...

காற்று இருந்தும், பாய்மரம் விரித்தும் கப்பல் நகரவில்லை !

கலங்கும் மன்னன் அரண்மனை முதியவரிடம் ஆலோசனை கேட்க, மூத்த மகளிடம் சொல்லாமல் கிளம்புவதை இறைவன் ஏற்கவில்லை எனக் கூறுகிறார். மன்னனும் வேண்டா வெறுப்பாய் ஒரு சேவகனை அழைத்து, தான் புனித யாத்திரை போவதை மகளிடம் கூறிவிட்டு அவளுக்கும் என்ன வேண்டும் எனக் கேட்டுவருமாறு அனுப்புகிறான்...

அந்தச் சேவகன் மூத்த இளவரசியின் குடிலுக்குச் செல்லும் சமயத்தில் அவள் தொழுகையில் இருக்கிறாள்... சேவகனுக்கோ அவசரம் !

வந்த விசயத்தை அவன் கூற... தொழுகையை நிறுத்தாமலேயே " சபர்.. சபர்... ! " எனக் கூறுகிறாள் இளவரசி !

அவன் மீன்டும் என்ன வேண்டும் எனக் கேட்க, மீன்டும் சபர் என்ற வார்த்தையே பதிலாக வருகிறது !

அலுப்புடன் மன்னரிடம் திரும்பிய சேவகன் இளவரசியாருக்கு சபர் கட்டை ஒன்று வேண்டுமாம் என்கிறான் ! மன்னனும் தலையில் அடித்துக்கொண்டு சரி என்று சொல்ல, கப்பல் கிளம்புகிறது !

புனித யாத்திரையின் சடங்குகள் முடித்த மன்னன் தன் இளைய பெண்கள் இருவரும் கேட்டது அனைத்தையும் வாங்கிகொண்டு பயணம் திரும்பும் போது மீன்டும் அதே சோதனை ! கப்பல் நகரவில்லை !

அப்போதுதான் மூத்த மகள் கேட்ட சபர் கட்டையின் ஞாபகம் வருகிறது. அதனை வாங்க ஒரு ஆளை அனுப்ப, நகர் முழுவதும் கேட்டலைந்தும் அப்படி ஒரு கட்டை கிடைக்காததால் அலுத்துபோன அவன் ஒரு சவுக்குக் கட்டையைக் கொண்டு வந்து இதுதான் சபர் கட்டை எனக் கூறுகிறான் !

நாடு திரும்பிய மன்னன் சபர் கட்டையை, என்ன வேண்டும் எனக் கேட்டு அனுப்பிய அதே சேவகனிடம் மூத்த மகளுக்கு அனுப்புகிறான்...

இதோ நீங்கள் கேட்ட சபர் கட்டை என நீட்டும் சேவகனை பார்த்து சிரிக்கிறாள் அந்தப் பெண் !

" தொழுகையில் இருந்த என்னை அவசரப்படுத்தியதால் பொறுமையாக இரு என்னும் பொருளில் சபர் என்றேன்... நீயோ அவசரமாய்ப் போய்ச் சபர் கட்டை கேட்டதாகச் சொல்லிவிட்டாய் ! ... சரி, அப்படி வைத்துவிட்டு போ ! "

எனக் கூறுகிறாள். அவனும் அந்தக் கட்டையைச் சுவரோரம் சாய்த்து வைத்துவிட்டுத் திரும்புகிறான்.

அந்த மூத்த இளவரசி தொழுகை முடித்து, எனக்கு ஒரு சிறந்த கணவனைக் காட்டு என இறைவனிடம் இறைஞ்சி கேட்டுக் கண் திறக்கும் போது அந்தச் சவுக்குக் கட்டை பிளந்து அதிலிருந்து ஒரு ராஜகுமாரன் வெளிப்பட்டு அவளை மணமுடித்துக் கொள்வதாய்க் கதை முடியும் !

ஸ்லாமிய மரபின் ஒரு பிரிவான சூபி தத்துவம் மற்றும் ஜென் பெளத்தம் பொறுமையை மனிதன் முழுமை அடைவதற்கான முழுமுதல் தகுதியாய் முன்நிறுத்துகின்றன !

ஜென் தத்துவத்தில் தவம் என்பதின் விளக்கமே பொறுமையுடன் காத்திருத்தல் ! தவத்தின் முடிவில் கிடைக்கும் வரத்தைவிட, அந்த வரத்துக்காகக் காத்த பொறுமையே பெரிதாகப் போற்றப்படுகிறது ! ஏனெனில் நாம் பெற விரும்பும் ஒன்றுக்காகக் காத்திருக்கும் தருணமே நாம் அடைய விரும்பும் அந்த ஒன்றுக்கு தகுதியுடையவராக நம்மை மற்றிக்கொள்ளக் காலம் நமக்களித்த வரம் !

து எப்படி ? எல்லாவற்றுக்கும் பொறுத்து பொறுத்துப் பொறுமை காத்தால் என்ன ஆவது ? நமக்கான மரியாதை கிடைக்க வேண்டாமா ?!... யாருக்கு யார் அடிபணிவது ?...


அடிபணிவது வேறு பொறுமையாய் கடந்து செல்வது வேறு ! மெளனம் காத்து பொறுத்திருப்பதால் நமது மரியாதை குறைந்துவிடாது... வேகமாய் வந்து விழும் வார்த்தைகளின் சப்தத்தைவிடப் பொறுமையான மெளனம் ஏற்படுத்தும் பயமும் தாக்கமும் பெரிது !

அடிபணிதலோ பல்லை கடித்துக் கோபத்தை அடக்கி, பின்னால் நம்மைவிட எளியவரிடம் கொட்டுவதோ பொறுமை அல்ல ! பொறுமை என்பது விருப்பு வெறுப்பற்று சலனமற்ற மனதுடன் இருத்தல்... எந்தச் சூழ்நிலையிலும் நிதானம் இழக்காமல் நின்று, நாம் வகுத்துக்கொண்ட நியாயத் தர்மங்களையும் தாண்டிய பரந்த நோக்குடன் சிந்தித்துச் செயல்படுதல்.

ணினி முன் அமர்ந்தவரெல்லாம் கருத்தும் எதிர்கருத்தும் சொல்ல வசதியாகிவிட்ட இன்றைய உடனடி ஊடகத்தால் கருத்துச் சுதந்திரம் என்பது கருத்து அவசரமாய் மாறிவிட்டது ! முகம் தெரியாத ஒருவர் எழுதிய வரிகளுக்காக நமக்கு இரத்த அழுத்தம் எகிறுகிறது ! எழுதிய அவர் எங்கோ சாவகாசமாய்ப் பீட்சா மென்றுகொண்டிருக்க நாம் நம் உற்ற தோழருடன் அதன் பொருட்டுச் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறோம் !

கத்தரிக்காய் விலை தொடங்கிச் சினிமா முதல் அரசியல்வரை அடித்துப் பிழிந்து அவசர நொடியில் உடனடி தீர்ப்பு... உடனடியாக அடுத்தச் செய்தி ! நேற்று நடந்ததின் இன்றைய நிலை பற்றியெல்லாம் கவலையில்லை ! அதுவே ஜாதி மதச் செய்திகள் என்றால் சொல்லவே வேண்டாம் !

ஊடகம் ஒரு உதாரணம் மட்டுமே !...

இன்றைய வாழ்க்கை முழுவதுமே பொறுமையற்ற படபடப்பாய் அமைந்துவிட்டது !

" ஐம்பது நாட்களில் அம்பானியாவது எப்படி ?! " என்ற புத்தகத்தை வாங்கும்போதே அம்பானியின் இன்றைய நிலைக்கு அவரது ஐம்பது வருட உழைப்பும், கொஞ்சம் அரசியல் தந்திரமும் ஒளிந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டால் அவர் வாழ்க்கையில் எவ்வளவு பொறுமையாக யோசித்துக் காய்களை நகர்த்தியிருப்பார் என்பது புரியும் !

ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டென்பது விஞ்ஞானப் பூர்வமாய் நிருபிக்கப்பட்ட ஒரு இயற்கை நியதி.

அவசரமான வினைகள் மிக வேகமான எதிர்வினைகளை விளைவிக்கும் என்பதைப் புரிந்துகொண்டால், இயங்குதலைவிட இருத்தலே முக்கியம் என்ற நியதியும் புரியும் !

விரைவாகத் தயாரிக்கப்பட்ட அவசரத்துக்கான உணவான பீட்சா உண்டாகும் எதிர்வினை கொழுப்பு சேருதல் ! நிறைவாகச் சமைக்கப்பட்ட கேழ்வரகோ இருத்தலை, அதாவது இருக்கும் வரைக்கும் உடலை பராமரிக்க உதவுகிறது !

வேடிக்கையான உதாரணம் என்றாலும் உண்மை அதுதானே ?!

வாழ்க்கையில் எது நடந்தாலும், இதுவும் மாறும் என்ற எண்ணத்தோடு, " எதுவும் மாறும் " என்ற தெளிவையும் கவனத்தில் கொண்டு பொறுமையாய் யோசித்தால் எதற்கும் தீர்வு கிடைக்கும் என்பதோடு நமது இரத்த கொதிப்பும் சமன்படும் !

வாழ்வோம் வளமுடன் !


பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

Monday, March 30, 2015

த்ரோ தேம்பெர்மாசியோன் துய் லேம்பெர்மாசியோன் !

ன்ன ஆச்சு ? ஏதோ அப்படி இப்படிக் கிறுக்கினாலும் நல்லா தான் இருந்தார்... திடீர்ன்னு அடிக்கடி வலைதளத்திலிருந்து காணாமல் போக ஆரம்பிச்சார்... இப்ப புரியாத மொழியில தலைப்போட கிறுக்கறார்... என்ன ஆச்சு இந்தச் சாமானியனுக்கு ?

வுட்வேர்ட்ஸ் கிரேப் வாட்டர் கொடுக்கச் சொல்லலாமா ?!...

குழம்ப வேண்டாம் அன்பர்களே !


" Trop d'information tue l'information " என்ற பிரெஞ்சு மேற்கோளை அப்படியே தமிழில் எழுதி தலைப்பிட்டேன்... !

 பிரெஞ்சு அரசியல்வாதியான நோயேல் மாமேர் ( Noël Mamère )

என்பவரால் முதலில் பயன்படுத்தப்பட்ட இந்த மேற்கோள் இன்று மேலாண்மை துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் மேற்கோள். இன்றைய இணைய வாழ்க்கைக்கு மிகப் பொருத்தமாக அமைந்த வார்த்தை தொடர் !

" Too much information kills information " என ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம்.

இந்த மேற்கோளை " அதிகமான செய்தி செய்தியை கொன்றுவிடும் ! " என ஜூனூன் தமிழில் மொழி பெயர்க்கவேண்டிய அவசியமே இல்லாமல் பண்ணிவிட்டார்கள் நம் முன்னோர்கள் !

" அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு " என்ற சொல் வழக்கிலேயே எல்லாம் அடங்கிவிட்டது !



( இன்றைய " மச்சான் டாமில் " போல என்பதுகளில் பிரபலமான ஜூனூன் தமிழ் பற்றித் தெரியாத அன்பர்கள் எனக்குத் தனிமடலில் விண்ணப்பம் வைத்தால் விளக்கமாக எழுதுவேன் !!! )

ஒரு செய்தியை பற்றி அதிகமாகப் பேசும் போது அந்தச் செய்தியின் முக்கியத்துவம் போய் விடுகிறது என்பதே இந்த மேற்கோளின் விளக்கம்.

கணினி திரையின் முன்னால் அமர்ந்து ஒரு வார்த்தையைத் தட்டினால் ஓராயிரம் விளக்கங்கள் வந்துவிழும் இன்றைய நிலையில் நாம் தேடுவதின் முக்கியத்துவம் குறைந்தால் கூடப் பரவாயில்லை, சில வேளைகளில் சாதாரணமான ஒரு வார்த்தைக்குக் கூடப் பூதகரமான பல தகவல்கள் வந்துவிடுவதுதான் பிரச்சனை ! அதுவும் நாம் தேடுவது உடல்நிலை மற்றும் நோய்நொடிகள் சம்மந்தமான செய்தி என்றால் சொல்லவே வேண்டாம்...

" அங்கு வலித்தால் அந்த நோயாக இருக்கலாம், இங்கு இழுத்தால் இந்த வியாதியாக இருக்கலாம் ! "

என வந்து விழும் விளக்கங்களின் மூலமாகவே தகவல் தேடுபவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிடும் ஆபத்து  உண்டு ! ஆக, அதிகமான செய்தி செய்தி செய்தியை கொன்றுவிடுமோ இல்லையோ ஆனால் படிப்பவரை கொல்லும் அபாயம் இணையத்தில் உண்டு !!!

நாற்பதை தொட்டுவிட்ட ஞானம் திடீரெனப் பிறந்ததால், சில மாதங்களுக்கு முன்னால் முழு மருத்துவ பரிசோதனை  செய்துகொண்டேன்... எல்லாம் நன்றாக இருந்தாலும் இரத்ததில் கொழுப்பின் அளவு கொஞ்சம் அதிகம். என் வாய்க்கொழுப்பை பற்றி எனக்கே தெரியும் என்றாலும் இந்தக் கொழுப்பு சற்றுப் பயம் ஏற்படுத்திவிட, வழக்கமாக நான் பார்க்கும் மருத்துவர் விடுப்பில் இருந்ததால் வேறொரு மருத்துவரை பார்த்தேன்.

" சர்க்கரையைவிடக் கொழுப்பு ஆபத்தாச்சே... இரத்தநாளம் அடைத்தால் போச்சு... "

என்ற ரீதியில் பேசிவிட்டு கொழுப்புக்கான மருந்தினை தொடர்ந்து உட்கொள்ளச் சொல்லிவிட்டார்.

நானும் மாத்திரையோடு நிறுத்திக்கொள்ளாமல் அவித்த காய்கறி, பாலில்லாத டீயென வெகு சிரத்தையாய் செயல்பட்டு மெலிந்துவிட்டேன். ( மெலிவதற்கு முன்பாகவே நான் நடிகர் மனோபாலா போல் இருந்தவன் ! )

ரு மாதம் ஓடியிருக்கும்... வேலையின் போது இடது கையில் மெல்லிய கடுப்பு... உடனடியாக மருத்துவரை பார்க்க போயிருக்கலாம் !

இன்றுதான் தொலைபேசி தொடங்கி அலைபேசி வரை அனைத்திலும் இணைய வசதி இருக்கிறதே ! ...

" கொழுப்பின் அளவு கூடுதல்... இடது கையில் வலி... " எனத் தட்டியதுதான் தாமதம்...

" தோள்பட்டையில் வலி தொடங்கும்.... நடுவிரல் வரை பரவும்... விட்டுவிட்டு வலிக்கும்... இதயம் அதிகமாகத் துடிக்கும்... வியர்த்துவிடும்... "

என்றெல்லாம் தகவல்கள் விழ விழ, எனக்குக் கண்கள் கட்டி, அதுவரையிலும் கேட்காத இதயத்துடிப்பு ,நண்பர் காரிகன் சிலாகிக்கும் ஆங்கில பாடல்களின் ட்ரம்ஸ் போல ஷார்ப், பேஸ் சகிதம் அதிர, வியர்த்துவழிய தொடங்கியது !


அவசர சிகிச்சைக்கு அலைபேசலாமா... உடனடியாக மருத்துவமனைக்கு ஓடலாமா... இந்த நிலையில் கார் ஓட்ட கூடாதே என்றெல்லாம் பதைத்து...

மதங்களைப் பற்றியெல்லாம் மானாவாரியாய் வலைப்பூவில் எழுதிவிட்டோமே.... உண்மையிலேயே நரகம் இருந்தால் என்னாகும் என்றெல்லாம் பயந்து...

விடுமுறையிலிருந்து திரும்பியிருந்த மருத்துவருக்கு உடனடியாகப் போன் செய்தேன் ! இணையத்தில் மேய்ந்ததைச் சொல்லாமல் வலி என்று மட்டும் சொன்னேன் !!

" பயப்பட ஒண்ணுமில்லை... இருந்தாலும் உடனடியா கிளம்பி வாங்க ! "

வலி விபரங்களைப் பொறுமையாய் கேட்டவர் கூற, " பயப்பட ஒன்றுமில்லை " என்ற வார்த்தையே என்னை ஆசுவாசப்படுத்தியது !

" நான் வருவதற்குள்ள என்ன அவசரம்... ? அப்படி ஒண்ணும் அதிகமா இல்லையே ! முதல்ல உணவுல கட்டுப்பாடா இருந்து மூன்று மாதம் பார்த்துட்டு அடுத்ததா ஒரு பரிசோதனை பண்ணி, குறையலேன்னா மருந்து எடுத்துக்கலாம்... "

நாடி முதல் இதயத்துடிப்புவரை பரிசோதித்துவிட்டு டாக்டர் கூறினாலும், மனதில் இணைய இம்சை !

" அப்ப... கை வலி டாக்டர் ?.... "

" ம்ம்ம்... ஏதாச்சும் கடுமையான வேலை செஞ்சீங்களா ? "

அந்த வார இறுதியில் தோழி வீட்டுத் தோட்டத்தில் ரோஜா பதியன்களுக்காக மாங்கு மாங்கென மண் கிளறியது அப்போதுதான் ஞாபகம் வந்தது !

" ஆ... ஆமா டாக்டர் ! "

" திடீர்ன்னு கடுமையா வேலை செஞ்சா கை வலிக்காம என்ன பண்ணும் ?! "

அசடு வழிய விடை பெற்றேன் !

ணயம் ஒரு மாபெரும் புரட்சி ! ஒரு பத்தாண்டுகள் முன்பு வரை சமூகத்தின் ஒரு சில பிரிவினருக்கு மட்டுமே சாத்தியமாக இருந்த தகவல்களும், பொது அறிவும் இன்று உலகின் கடைக்கோடி மனிதனுக்கும் கிடைப்பதற்குக் காரணம் இணையமே !

ஆனால் அந்த இணயம் நம் முன்னால் இழுத்து வீசும் தகவல்களின் நம்பகத்தன்மை சில வேளைகளில் சந்தேகத்துக்கிடமானதாக அமைந்துவிடுவது தவிர்க்க முடியாதது ! காரணம்,  யார் வேண்டுமானாலும் எதையும் உள்ளிடலாம் என்ற கட்டற்ற கருத்துச் சுதந்திரம் !

இதயம் என்று தேடினால் இதயநோய் நிபுணர் செரியனின் ( இவரின் புகழும் பரிதாப முடிவும் ஞாபகத்தில் இருப்பவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடலாம் ! ) தகவல்கள் கிடைக்கும் அதே நேரத்தில், இதயம் உண்மையிலேயே மன்மத அம்பு துளைத்த ஹார்ட்டின் வடிவத்தில்தான் இருக்கும் என இன்றும் நம்பிக்கொண்டிருக்கும் ரோமியோக்கள் இறவா புகழுக்காக இணையத்தில்  உள்ளிட்ட  தகவல்களும் வந்து விழும் !

ஒரு காலத்தில் அந்தந்த துறை சார்ந்தவர்களுக்கு மட்டுமே கிடைத்த தகவல்களும், நிபுணர்கள் மட்டுமே அறிந்திருந்த செய்திகளும் இன்று சாமானியனுக்கும் இணையம் மூலம் எட்டி விடுகிறது ! அப்படி எட்டும் செய்திகள் வியாதிகளைப் பற்றியது எனும்போது, அவை பலருக்கு தேவையில்லாத மன உளைச்சலை ஏற்படுத்திவிடுகின்றன !


உதாரணமாக, சில வருடங்களுக்கு முன்புவரை தலைவலி என்றால் சரியான தூக்கமில்லை என்போம்... அல்லது வேலைபளு என்போம்... அதுவே சில நாட்கள் தொடர்ந்தால் நேரடியாக மருத்துவரை பார்த்துவிடுவோம்.

இன்று இடைபட்ட நேரத்தில் இணையத்தினால் குழம்பிவிடுவதுதான் பிரச்சனை ! தலைவலி என்று தட்டி பாருங்கள்... தூக்கமின்மை என்ற வார்த்தைக்கு முன்னால் தலை சம்மந்தமான பல நோய்களின் தகவல்கள் முன்னால் பாயும் ! அதுவரையிலும் மருத்துவரை பார்க்கலாம் என நினைத்திருந்தவர் அவசரமாய் அந்த இணையமே விளம்பரம் செய்யும் அதிநவீன மருத்துவமனைக்கு ஓடுவார் !

லஞ்சத்தையும் சேர்த்து பல கோடிகளில் மருத்துவபடிப்பை முடித்து, இன்னும் பல கோடிகள் வங்கி கடன் வாங்கி நவீன மருத்துவமனை கட்டிய மருத்துவர், உங்கள் தலைவலிக்கான காரணம் ஓய்வெடுக்காமல் பேஸ் புக்கில் லைக்ஸ் போட்டுக்கொண்டிருந்ததுதான் என ஒரு வரியில் சொல்லி அனுப்புவதற்கு முன்னால் அத்தனை சோதனைகளையும் முடித்துப் பல ஆயிரம் தொடங்கி ஒரு லட்சம் வரை வாங்கி விடுவார் !

வரும் முன் காப்பது நல்லதில்லையா ?...

நல்லதுதான் ! ஆனால் காப்பதற்கு முன்னால் வந்ததோ இனி வரப்போவதோ என்ன என்று சரியாகத் தெரிய வேண்டுமல்லவா ?!

என்னதான் செய்வது ?

கை கடுப்புக்கான காரணம் ரோஜா பதியனாகவும் இருக்கலாம்... அல்லது இதய நோயின் அறிமுறியாகவும் இருக்கலாம்தான் ! ஆனால் அதனைப் பரிசோதித்து முடிவு செய்ய வேண்டியது " உங்கள் மருத்துவரே " தவிர , இணைய தகவல்கள் அல்ல ! நான் " உங்கள் மருத்துவர் " எனக் குறிப்பிட்டிருப்பதைக் கவனமாக வாசியுங்கள்...

நமக்கென வாடிக்கையான ஒரு பொதுநல மருத்துவர் இருப்பது முக்கியம். அப்படி இருக்கும் பட்சத்தில் உங்களின் தொழில், உணவு பழக்கம், வாழ்க்கை முறை தொடங்கி உங்களுக்கு அடிக்கடி ஏற்படும் உடல்நல குறைவுகள், அதற்கான காரணங்கள் ,நீங்கள்  உட்கொண்ட மற்றும் உட்கொள்ளும் மருந்துகள், அவற்றின் தன்மை என அனைத்தும் அவருக்குத் தெரியும். இந்த தகவல்களின் உதவியாலும், அவரது அனுபவத்தாலும் உங்கள் தலைவலிக்கான காரணத்தை அவர் கண்டுபிடித்துவிடுவார். இல்லையெனில் மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகளையோ அல்லது பார்க்க வேண்டிய மருத்துவ நிபுணரையோ அவரே பரிந்துரைப்பார்.

வாழ்க்கையில் அவசர சிகிச்சைக்கான தேவையும் ஏற்படும்தான். தெரியாத மருத்துவரிடமோ அல்லது அவசரமாய் மருத்துவமனைக்கோ போக நேரிடும்தான். அப்படிப்பட்ட சூழலுக்குப் பிறகு அந்த மருத்துவ முடிவுகளைக் குடும்ப மருத்துவரிடம் காட்டி ஆலோசிப்பது முக்கியம்.

அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுமாயின், கால அவகாசம் இருக்குமானால் குடும்ப மருத்துவரிடமோ அல்லது அவர் பரிந்துரைக்கும் அந்தத் துறை சார்ந்த மற்றொரு மருத்துவ நிபுணரிடமோ ஆலோசித்தல் நலம் !

நலமாய் வாழ்ந்து நாலு பேருக்கு நல்லது செய்வோம் !



பட உதவி : GOOGLE
 
இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.