Sunday, January 1, 2017

நடப்பவை நன்மைகளாகட்டும் !



மீன்டும் ஒரு ஜனவரி பிறந்துவிட்டது ! .. ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டைவிட வேகமாக ஓடி மறைவதாகத் தோன்றுகிறது ! அப்படி ஓடி மறையும் ஆண்டுகளுடன் தனிமனித ஒழுக்கம், மனிதநேயம்,சகிப்புத்தன்மை, இரக்கம் போன்றவையும் வேகமாக அடித்துச் செல்லப்படுகின்றனவோ என்ற அச்சம் எழுகிறது...

" நாம் இத்தனை காலமாய்ப் பேணி போற்றும் தனிமனித சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற மனிதகுல மதிப்பீடுகள் அனைத்தும் சட்டெனத் தலைகீழாக மாறக்கூடிய நிச்சயமற்ற ஆண்டாக அமையலாம்... "

பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹோலாந்த் நாட்டு மக்களுக்கு ஆற்றிய புத்தாண்டு உரையின் வரிகள் ! ஒர் அரசியல்வாதியாய் அவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளில் ஒருவர்தான் என்றாலும் இந்த வரிகள் நிதர்சனமானவை !

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் அமைந்த இடதுசாரி மற்றும் வலதுசாரி அரசுகளின் காலம் முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது. அவர்களின் எழுபது ஆண்டுகால ஆட்சியில் அலுத்துப்போன உலக மக்களின் தேர்வாய் தீவிர வலதுசாரிகள் பல நாடுகளில் ஆட்சிக்கு வந்துகொண்டிருக்கிறார்கள்... மதத்தின் நிழலில் குளிர்காயும் பயங்கரவாதமும், பிராந்திய போர்களும் உலகெங்கும் பரவுகின்றன !

மொழி, இனம், நிறம், ஜாதி, பிராந்தியம் என மக்களைப் பிளவுபடுத்தி " பய அரசியல் " நடத்தும் இத்தீவிர வலதுசாரி அரசுகளையும் பின் நின்று ஆட்டுவிப்பது ஒரு பெருவணிகக் கூட்டம் ! ஒவ்வொரு நாட்டின் விதியும், அந்நாட்டு ஏழைபாழைகளின் தலையெழுத்தும் விரல் எண்ணிக்கைக்குள் அடங்கிவிடும் அந்நாட்டு பெருதொழிலதிபர்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது !

இலங்கையில் நடந்ததையும், சிரியாவில் நடப்பதையும் சலனமற்றுத்தான் பார்த்துக்கொண்டிருந்தோம்... பார்த்துக்கொண்டிருக்கிறோம் ! இஸ்ரேலில் பூகம்பம் என்றால் பாலஸ்த்தீனியர்களுக்குக் கொண்டாட்டம் ! இந்தியாவில் புயலடித்தால் பாகிஸ்தானில் மகிழ்ச்சி தெரிகிறது ! பாகிஸ்தானில் குண்டு வெடித்தால் இந்தியாவில் குதூகலம் !

"மக்களின் மென்முனைகளைத் தட்டிவிட்டால் நாகரீகத்தின் உச்சியில் இருப்பவர்களுக்கும் இதுதான் நடக்கும் " என, நண்பர் மீரா செல்வக்குமார் காவிரி நதி கலவரத்தின் போது பதிந்த வரிகள் உலகின் அனைத்து பகுதிக்கும் பொருந்துகிறது !

இயற்கைக்கு முன்னால் இஸ்ரேலும் பாலஸ்த்தீனமும், இந்தியாவும் பாகிஸ்தானும், அமெரிக்காவும் ரஷ்யாவும் அனைத்தும் ஒன்றுதான் என்பது ஏனோ இன்னும் புரியவில்லை !

பூமியை, அதன் இயற்கை வளங்களை வன்புணர்ந்த பாவமும் " அந்தப் பெருவணிகக் கூட்டத்தையே " சாரும் ! அந்தந்த கால விஞ்ஞான வளர்ச்சியினால் கண்டு பிடித்தவற்றையும், உற்பத்தி செய்தவற்றையும் நீண்ட காலக் கேடுகளைப் பற்றிச் சிந்திக்காமல், சரியாக ஆராயாமல் வியாபாரம் ஒன்றையே நோக்கமாக்கி சந்தைபடுத்தி, இருந்த ஒரே பூமி பந்தையும் ஓட்டையாக்கிவிட்டார்கள் ! அவர்கள் சந்தை படுத்திய அனைத்தையும் வாங்கித் தின்ற, அடுக்கிச் சேர்த்த ஆட்டுமந்தை கூட்டங்களான நமக்கு இன்னும் விழிப்பு வாய்க்கவில்லை !

சாமானிய மக்கள் சகிக்க முடியாமல் பொங்கியெழுந்த போதெல்லாம் சரித்திரம் சரியாகத் திருத்தப்பட்டிருக்கிறது என்ற வரலாற்றுச் சான்று ஒன்று தான் இத்தனை அவநம்பிக்கைகளையும் தாண்டித் தெரியும் பெருநம்பிக்கை ஒளி !

ஒவ்வொருவரும் பகுத்தறிவுடன் சற்றே சிந்தித்து அவரவர் " மென்முனைகளை " விழிப்புடன் பாதுகாத்தாலே போதும்... இவ்வுலகின் தலைவிதி மாறும் !

இனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !


 இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

 பட உதவி : GOOGLE

19 comments:

  1. அருமையான பதிவு

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. இனி நடப்பவைகள் நன்மைகளாகவே அமையட்டும்
    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  3. (முன்பு பதிவிட்டதை, சில எழுத்துப் பிழைகள் காரணமாக நானே அழித்தேன் என்பதை அறியவும்.)

    சாமானிய மக்கள் பொங்கி எழுவதாவது, அதுவும் தமிழ்நாட்டில்? அதற்கென்று யாராவது தலைக்கு இவ்வளவு என்று முன்பணம் கொடுத்தாலொழிய நடக்காது. இருந்தாலும் ஒரு நப்பாசை! இதையெல்லாம் மீறி நல்லது நடக்காதா என்று....உங்களைப் போலவே எனக்கும்!

    ReplyDelete
  4. சாமானிய மக்கள் பொங்கி எழுவது என்பது இந்த கால கட்டங்களில் அவ்வளவு எளிதல்ல அதுவும் இந்தியா போன்ற நாடுகளில்

    ReplyDelete
  5. நல்லது நடக்கும் என்கிற நம்பிக்கையில் தான் வாழ்க்கை...

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  6. நம் நாட்டில் அதுவும் தமிழ்நாட்டில் சாமானியன் பொங்கி எழுவதா....அது நடக்கவே நடக்காது என்பதால் புரட்சி போன்றதற்கு இங்கு வாய்ப்பே இல்லை. அப்படி மக்கள் தங்கள் உரிமைக் குரலை எழுப்பியிருந்தால், இன்று நம் தமிழ்நாடும் சரி இந்தியாவும் சரி எங்கோ போயிருக்குமே. அருமையான பதிவு சாம்..

    நல்லது நடக்கும் என்று நம்புவோம் நம்பிக்கையுடன் இப்புதுவருடத்தைத் தொடங்குவோம்...

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  7. நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.நம்பிக்கை தானே வாழ்க்கை.
    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. பெரும்பான்மை நலன்கள் பாதுகாக்கப் படவேண்டும். ஆனால் பெரும்பான்மை கருத்தே மதிக்கப்படுவதில்லையே... வல்லவன் என்பவன் பணம் அதிகாரம் படைத்தவன்தான். அவன் வகுப்பதே சட்டமாகிறது.

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. மந்தை ஆடுகள் போல மன நிலை கொண்ட நம் மக்களிடையே மனவெழுச்சியை எதிபார்க்கமுடியாது. நல்லதே நடக்கும் என நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை. தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

    ReplyDelete
  10. நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது....

    ReplyDelete
  11. காசு வாங்கி ஓட்டுப் போட பழக்கி விடப்பட்ட ஜனங்கள் தங்களின் வாழ்வாதாரங்கள் பறிபோன நிலையைக் கூட அறியாதவர்களாக இருக்கிறார்கள் . இவர்கள் எல்லாம் ஒன்று சேர வேண்டுமென்றால் இலவசமாக ஏதாவது கிடைக்கும் இடத்தில் மட்டுமே சேர்வார்கள். அநீதி கண்டு பொங்கியெழும் நிலை அரிதே! ஆனாலும் உங்கள் கனவு பலிக்கட்டும் . அந்த நிலை தமிழ் நாட்டிலும் நடக்கட்டும்.

    ReplyDelete
  12. நிணப்புதான்டா பொழப்பு கெடுக்கிறது...என்று எட்டாம் கிளாஸ் வாத்தியார் சொன்னது நினைவுக்கு வருகிறது..

    ReplyDelete
  13. ஒவ்வொருவரியும் உண்மை சகோ. பெருவணிக சூழ்ச்சியில் மக்கள் நலனும் மனிதநேயமும் அழிக்கப்படுகின்றன.
    //இனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன்// அதேதான் சகோ..அந்த நம்பிக்கை தான் சற்றேனும் நிம்மதி தருகிறது..அல்லது தருவது போல் இருக்கிறது.

    நலமான உலகு அமைய புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  14. பகுத்தறிவுடன்...சிந்தித்து...என்று கூறியுள்ளீர்கள். இப்போதுள்ள சூழலில் இவை மிகவும் சிக்கலாச்சே. முடியாதே.

    ReplyDelete
  15. ***இயற்கைக்கு முன்னால் இஸ்ரேலும் பாலஸ்த்தீனமும், இந்தியாவும் பாகிஸ்தானும், அமெரிக்காவும் ரஷ்யாவும் அனைத்தும் ஒன்றுதான் என்பது ஏனோ இன்னும் புரியவில்லை !**

    இன்றைய சூழலில் மூன்றாம் உலகப்போர் வர வாய்ப்புகள் அதிகமாகிக்கொண்டே போகின்றன என்பது என் கணிப்பு. போருக்கு அப்புறம் அடிபட்ட பிறகு மக்கள் திருந்த வாய்ப்புண்டு. அந்த வகையில் போர் அதன் பின் திருந்தல் என்ற் நன்மைகள் நடக்கலாம்..

    ReplyDelete
  16. ஐயா! முகமனுக்காகச் சொல்லவில்லை, உண்மையிலேயே சொல்கிறேன்; இன்றைய காலக்கட்டத்துக்கான மிகத் தலையாய எச்சரிக்கையை நீங்கள் விடுத்துள்ளீர்கள். சில கிழமைகளுக்கு முன்பு இதே விதயம் குறித்து, உலகமே தீவிர வலசாரிகளின் கைகளுக்குள் சென்று கொண்டிருப்பதாக விகடனிலும் ஒரு கட்டுரை வந்தது. மிகவும் பதற வைக்கும் கட்டுரை அது!

    "சாமானிய மக்கள் சகிக்க முடியாமல் பொங்கியெழுந்த போதெல்லாம் சரித்திரம் சரியாகத் திருத்தப்பட்டிருக்கிறது என்ற வரலாற்றுச் சான்று ஒன்றுதான் இத்தனை அவநம்பிக்கைகளையும் தாண்டித் தெரியும் பெருநம்பிக்கை ஒளி!" என்கிற உங்கள் வரி உலக மக்கள் அனைவருக்கும் சென்று சேர வேண்டிய செய்தி என்றால் அது துளியும் மிகையில்லை. இப்படி ஒரு கட்டுரைக்காக நன்றி!

    ReplyDelete
  17. வணக்கம் சாம்! உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்து! சாமானிய மக்கள் சகிக்க முடியாமல் பொங்கியெழுந்த போதெல்லாம் சரித்திரம் சரியாகத் திருத்தப்பட்டிருக்கிறது என்ற வரலாற்றுச் சான்று ஒன்றுதான் இத்தனை அவநம்பிக்கைகளையும் தாண்டித் தெரியும் பெருநம்பிக்கை ஒளி! என்று மிகவும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள் சாம்!

    ReplyDelete
  18. Are you in need of a loan?
    Do you want to pay off your bills?
    Do you want to be financially stable?
    All you have to do is to contact us for
    more information on how to get
    started and get the loan you desire.
    This offer is open to all that will be
    able to repay back in due time.
    Note-that repayment time frame is negotiable
    and at interest rate of 2% just email us:
    reply to us (Whats App) number: +919394133968
    patialalegitimate515@gmail.com
    Mr Jeffery

    ReplyDelete