Thursday, February 1, 2018

ஒரு சாண் வயிறே இல்லாட்டா...


ரு சாண் வயிறே இல்லாட்டா - இந்த
உலகத்தில் ஏது கலாட்டா ?
அரிசிப் பஞ்சமே வராட்டா - நம்ம
உசுரெ வாங்குமா பரோட்டா ?

... கவிஞர் தஞ்சை ராமைய்யாதாஸ் சிங்காரி படத்துக்காக எழுதிய இந்தப் பாடல் வரிகளை "திருக்குறளைவிட மேலான தெருக்குறள் " எனக் கலைவாணர் என் எஸ் கே சிலாகித்துப் பாராட்டியதாகத் தனது நினைவு நாடாக்கள் நூலில் குறிப்பிட்டிருப்பார் கவிஞர் வாலி.


உலகெங்கும் அதிகார வர்க்கத்தின் அநீதிகள் மற்றும் சமூக அவலங்களுக்கு எதிரான "தெருக்குறள் " பெரும்பாலும் அச்சமூகம் சார்ந்த கலைஞர்களிடமிருந்துதான் பிறக்கும். இதற்கான அடிப்படை காரணம் படைப்பாளிகள் இயல்பாகவே சுதந்திர வேட்கை கொண்டவர்கள். அவர்களது படைப்புகளைப் பாதிக்கும் " கட்டாயங்களை " வெறுப்பவர்கள் !

"ஊரான் ஊரான் தோட்டத்திலே
ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்காய்
அதைக் காசுக்கு ரெண்டாய் விக்கச்சொல்லி
காயிதம் போட்டானாம் வெள்ளைக்காரன் !"

வெள்ளையர்கள் தந்திரமாய் நாட்டைப் பிடித்து, சட்டை கசங்காமல் ஆட்சி செய்து வரி வசூலித்த வரலாறு முழுவதையும் நான்கே வரிகளில் சொல்லிவிடும் இந்தப் பாமர பாடல் ! மக்களோடு வளர்ந்து வாழ்ந்து, மக்களுக்காகவே கலை படைக்கும் கலைஞர்களுக்கே இதுபோன்ற வரிகள் கைக்கூடும் !

சிங்காரி படப் பாடல் வரிகளில் பல வரலாற்றுச் செய்திகள் அடங்கியிருக்கின்றன. சிங்காரி படம் வெளிவந்த சமயம் நாற்பதுகளில் இந்தியாவை வாட்டிய பஞ்சத்துக்குப் பிறகான காலகட்டம்.. அமெரிக்கர்கள் தங்களிடம் மிதமிஞ்சியிருந்த கோதுமையை இந்தியாவுக்கு இலவசமாக அனுப்பிய நேரம்.அதுவரையிலும் கோதுமையை அன்றாட உணவாக அறியாத தமிழர்களுக்குக் கோதுமை சார்ந்த உணவுபண்டங்கள் காலத்தின் கட்டாயத்தால் அறிமுகமாகின...

அப்படி அறிமுகமான பரோட்டாவை சாப்பிட நேர்ந்த முதல்தலைமுறை தழிழனின் ஆதங்கம் தான் இந்தப் பாடல். அன்று தமிழர்களைப் பாடாய்படுத்திய பரோட்டா இன்று சாதா,கொத்து, சில்லி, மட்டன், சிக்கன், முட்டை, வீச்சு எனப் பல்வேறு வடிவங்கள் கொண்டு தமிழரின் தவிர்க்க முடியாத அன்றாட உணவாகிவிட்டது !

ரு குறிப்பிட்ட சமூகத்தின் உணவு கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கம் அச்சமூகம் வாழும் நிலத்தின் விளைபொருட்கள், அந்நிலம் சார்ந்த தட்பவெப்பம், சமூகப் படிநிலை, பொருளாதாரச் சூழல் மற்றும் அந்தச் சமூகத்தின் பயண அனுபவங்கள் ஆகியவற்றைப் பொறுத்து அமையும். அந்நிய உணவுகளின் ருசியால் ஈர்க்கப்பட்டுப் பழகுவது, போர் மற்றும் பஞ்ச கட்டாயங்களால் அரசினால் கட்டாயமாக அறிமுகப்படுத்தப்படும் உணவு, சந்தை தேவையை முன்னிட்டு பெருவணிக நிறுவனங்களின் தந்திரமான விளம்பரங்களால் பழக்கப்படுத்தப்படும் உணவு எனவும் உணவு பழக்கங்களைப் பிரிக்கலாம்.

இந்திய பிரியாணியின் வரலாறு முகலாயர்களிடமிருந்து தொடங்கியது என்றால், இன்று தமிழ்நாடு என்றாலே ஞாபகத்துக்குவரும் சாம்பார் சரபோஜி மன்னர்களின் பரிசு !

இன்று உலகமயமாக்கத்தினால் பரவும் நுகர்வு கலாச்சாரம், நகர்ப்புற வளர்ச்சி, வணிக விளம்பரங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்களால் நம் பாரம்பரிய உணவு பழக்கத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுகொண்டிருக்கிறது. அரிசி கிடைக்காத பஞ்சத்தினால் கோதுமைக்குப் பழகிய காலம் போய்,பெருமைக்காகப் பீட்சா, பர்கருடன் பெப்ஸி கோக் அருந்தும் காலத்தில் வாழ்கிறோம் !

னது பூர்வீகமான காரைக்காலை சேர்ந்த இஸ்லாமிய சமூகத்த்தினர் சிலர் பெருநாள் போன்ற பண்டிகை தினங்களில் " வட்டலப்பம் " என்றொரு இனிப்பு பதார்த்ததைச் சமைப்பார்கள். "வட்டில் அப்பம் " என்பது மருகி வட்டலப்பம் ஆனது ! வட்டில் என்ற தாம்பாளம் போன்ற, ஆழமான பாத்திரத்தில் வைத்து நீராவியில் வேகவைத்துத் தயாரிக்கப்படும் இந்தப் பதார்த்தத்தின் பூர்வீகம் மலேசியா ! காரைக்கால் இஸ்லாமியர்களில் பலர் நெடுங்காலமாக மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குப் பணி செய்யச் சென்றவர்கள். அவர்களின் மூலம் காரைக்காலை வந்தடைந்து பண்டிகை பலகாரமாக மாறியதே வட்டலப்பம் !

இரு வேறுபட்ட கலாச்சாரச் சந்திப்பினால் அறிமுகமாகும் உணவு வகைகள் ஒரு புறமென்றால், அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த அந்நியர்களின் உணவு பழக்கங்களைப் பெருமைக்காகப் பின்பற்றுவது வேறொரு வகை !

புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சியில் இருந்த சமயத்தில் காரைக்காலின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவராக விளங்கிய தன் தந்தை பிரெஞ்சு மேயரை சந்தித்துவிட்டு வந்து அவரைப்போலவே தக்காளி சாஸ் மற்றும் வினிகருடன் முள்கரண்டியால் சாப்பிட முயன்றதை பாட்டி கதை கதையாய் சொல்லுவாள் !

பண்டைய காலத்தில் அந்நிய ஆட்சியாளர்கள் மற்றும் பயணங்களால் மாற்றமடைந்த உணவு பழக்கம் ஆங்கில ஆட்சி தொடங்கி இன்றுவரை பெருவணிக நோக்கங்களால் திட்டமிட்டு மாற்றப்படுகிறது ! இன்று இந்திய காலை மற்றும் மாலை வேளைகளின் அத்யாவசிய தேவையாக அனைத்துத் தரப்பு மக்களிடமும் பரவியுள்ள தேனீர் ஆங்கிலக் காலனிய அரசின் வணிகப் பரப்புரைகளால் அறிமுகப்படுத்தப்பட்ட பானம் !

கொழும்பு தேயிலை தோட்டத்தில் வேலை செய்த " சேக்காளி " அனுப்பிய தேயிலை தூளை அவன் குறிப்பிட்ட பதத்தில் பாலில் கொதிக்கவைத்து இரவில் குடித்துவிட்டுப் படுத்த குடியானவ குடும்பம் தூக்கமில்லாமல் புரண்டு அதிகாலை விழிப்பை தவறவிட்டு மற்றவர்களால் கேலிக்கு உட்படுவதை விவரிக்கும் கி.ராஜநாராயணனின் கோபல்ல புரத்து மக்கள் கதையை நினைக்கும் போதெல்லாம் நிஜ வாழ்வில் எனக்கு நேர்ந்த இரண்டு சம்பவங்கள் மனதில் நிழலாடும் !

த்து வயது என ஞாபகம்...

எங்கள் ஊரின் வானிலை ஆராய்ச்சி மையத்தில் வேலை செய்த என் தந்தையின் நண்பர் பணி நிமித்தமாய் மும்பை சென்று திரும்பிய போது பளபளப்பான இரண்டு பாக்கெட்டுகளைக் கொண்டுவந்து கொடுத்தார். ஐந்தே நிமிடத்தில் தயார் செய்துவிடலாம், பிரியாணியைப் போன்ற சுவையோடு இருக்கும் என்றெல்லாம் நாக்கில் எச்சில் ஊற பேசி அவர் கொடுத்தவை மாகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள் ! நூடுல்ஸ் தமிழ்நாட்டு விளம்பரங்களில் கூடத் தலைகாட்டாத நேரம் அது !...

ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு பத்துமணிக்கு மேல் என் தந்தையின் மேற்பார்வையில் குடும்பமே அடுக்களையில் கூடி, அந்தப் பாக்கெட்டில் குறிப்பிட்டிருந்த அளவு நீரை வானலியில் கொதிக்கவைத்து நூடுல்ஸை கொட்டி அதனுடனிருந்த மசாலாவையும் போட்டு கிளறி இறக்கினோம் ! கோபல்லபுரத்து மக்களைப் போலவே நாங்களும் இரவில் புதிய உணவை முயற்சித்த உளவியல் காரணம் எனக்கு இன்றுவரை பிடிபடவில்லை !

" அய்யே ! இது என்ன பெரிய ஆஸ்பத்திரி மருந்து நாத்தம் ?... "

" உப்பும் இல்லை... உரைப்பும் இல்லை... "

ஆளாளுக்கு வாயில் போட்டதை விழுங்க முடியாமல் புலம்ப,

" இத போயி பிரியாணி மாதிரின்னு சொன்னானே பாவி... எத்தனையோ தடவை நம்ம வீட்டு பிரியாணியைச் சாப்பிட்டும் அவனுக்கு ருசி தெரியல பாரு ! "

எனப் பன்ச் வைத்தாள் பாட்டி !

திண்ணை இல்லாத வீடும், டீவி சீரியல்களும் இல்லாத அந்தக் காலத்தில் கூப்பிட்ட குரலுக்குத் தெருவே ஓடி வரும் ! ஒரு வீட்டின் நிகழ்வு மிக விரைவாய் பல தெருக்களுக்குப் பயணித்துவிடும் ! வெளியே சொன்னால் வெட்ககேடு என்பதால் யாரிடும் சொல்ல வேண்டாம், நண்பரிடம் மட்டும் மரியாதைக்காக நன்றாக இருந்தது எனக் கூறிவிடலாம் என்றெல்லாம் குடும்பச் சத்திய பிரமாணம் எடுத்த பிறகு, வானலியை நூடுல்ஸுடன் புழக்கடையில் கழுவ போட்டுவிட்டு உறங்கிவிட்டோம்.

பழமையான நான்கு கட்டுவீட்டின் புழக்கடை கொல்லைப்புறம் பார்த்துத் திறந்திருக்கும். இரவில் எச்சில் பாத்திரங்களில் மிச்சமிருப்பவற்றைப் பூனைகள் தின்றுவிடும்...

மறுநாள் காலையில் மற்ற பாத்திரங்களில் இருந்த மிச்சங்களெல்லாம் காணாமல் போயிருக்க, மாகி நூடுல்ஸ் மட்டும் அப்படியே இருந்தது ஆச்சரியம் ! அந்தக் காலப் பூனைகளுக்குகூட அது பிடிக்கவில்லை போலும் !

அதே போலப் பெப்ஸி...

மீசை அரும்பத் தொடங்கிய விடலை பருவத்தில் எங்கள் ஊருக்குள் நுழைந்தது பெப்ஸி பானம் ! நாங்கள் கால்பந்து விளையாடும் கவர்னர் மஹால் மைதானத்தின் ஓரத்தில் பாஸ் அண்ணனின் நன்னாரி சர்பத் கடை... பக்கத்து ஊர்க்காரர்களையும் ஈர்த்து சதா வரிசையில் நிற்கவைக்கும் அளவுக்குப் பிரபலமானது பாஸ் கடை நன்னாரி ! அதுவரையிலும் நன்னாரியுடன் உள்ளூர் ஸ்பெசலான டைமண்ட் சோடா கலர், ஸ்பெசல் லெமன் பாட்டில்களை விற்றவர் அவற்றுடன் பெப்ஸி பாட்டில்களையும் வாங்கி அடுக்கினார் !

பெப்ஸியுடன் சாலிடர் கலர் டிவியும் கோலோச்ச தொடங்கிய நேரம் ! டிவி விளம்பரங்களில் கிரிக்கெட் வீரர்களெல்லாம் பெப்ஸியை உயர்த்திபிடித்து ஒரே மூச்சில் குடித்துச் சிரிக்க,பெப்ஸியை ருசிக்க வேண்டும் என்ற ஆசையை அதன் விலை தடுத்தது !

ஒரு மாலைவேலையில், அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்த பைசல் தன் சட்டைபையிலிருந்து பத்து ரூபாய் தாளை எடுத்து என்னிடம் காட்டிவிட்டுப் பாஸ் கடை நோக்கி ஓடினான்... சில நொடிகளில் திரும்பியவன் ஐந்து நிமிட ஆட்டத்துக்குப் பிறகு என்னையும் அழைத்துக்கொண்டு கடைக்கு ஓட, மூடி திறக்கப்பட்டு ஸ்டிரா பொதிந்த, ஜில்லிப்பினால் நீர் முத்துகள் படர்ந்த, நுரை பொங்கும் இரண்டு பெப்ஸி பாட்டில்கள் !

அவசரமாய் ஆளுக்கு ஒன்றாய் எடுத்து ஆர்வமுடன் ஒரு வாய் உறிஞ்சினோம்...

" ச்சீ ! இப்படி இருக்கு... எல்லா விளம்பரத்திலேயும் இதை எப்படிடா சிரிச்சிக்கிட்டுக் குடிக்கறான் ? "

பெப்ஸியினால் புரை ஏறிய என்னால் அவனுக்குப் பதில் சொல்ல முடியவில்லை !

" அண்ணே... மீதி காசுக்கு ரெண்டு நன்னாரி போடுங்கண்ணே... வாயை கழுவனும் ! "

பைசல் தலை உலுக்கி பேசினான் !

ரம்பத்தில் நம்மை அப்படிப் படுத்திய நூடுல்ஸ் , பெப்ஸி மற்றும் இன்னபிற அந்நிய உணவுகள் மற்றும் பானங்கள் எல்லாம், " இதையெல்லாம் சாப்பிட்டால்தான் இந்தச் சமூகத்தில் வாழ தகுதியானவர்கள் " என்பதான தந்திர விளம்பரங்களால் நம் அன்றாடத் தேவைகளாக மாறிவிட்டன !

ஏறக்குறைய முப்பது வருடங்கள் கழிந்து நூடுல்ஸ் முதல் மென்பானங்கள் வரை பலவும் அவற்றில் ஒளிந்திருக்கும் உடலுக்குக் கேடான வேதியல் கலவைகளுக்காகப் பலதரப்ப்பு மக்களால் புறக்கணிக்கப்பட்டு,ஆங்கிலேய காலத்து அந்நிய துணி மறுப்பு போராட்டத்துக்கு ஈடான ஒரு புரட்சி இன்று தோன்றியிருப்பது மகிழ்ச்சியான நிகழ்வுதான் என்றாலும் மறுபுறம் பிளாஸ்டிக் அரிசி, செயற்கை முட்டை எனப் பயங்கரச் செய்திகள் பதைபதைக்க வைக்கின்றன !

பிளாஸ்டிக் அரிசியும், செயற்கை முட்டைகளும் வறுமை கோட்டுக்கு மிகக் கீழே இருக்கும் ஆப்ரிக்க மக்களின் சந்தைக்காம் ! ஆக, இல்லாதவன் எதைச் சாப்பிட்டாலும் எந்த அரசாங்கத்துக்கும் கவலை கிடையாது !

மக்கள்தொகை பெருக்கம் மற்றும் விளைநிலங்களின் அழிவினால் இன்னும் நாற்பது ஆண்டுகளில் உலக மக்களின் தேவையைப் பூர்த்திச் செய்யும் அளவுக்கான தானியங்கள் கிடைக்காது என்கிறது உலகச் சுகாதார அமைப்பின் அறிக்கை. மாற்று உணவாய் அவர்கள் பரிந்துரைப்பது பூச்சிகளையும் புழுக்களையும் ! இன்னும் சில காலத்தில் செயற்கை அரிசியும் முட்டையும் இயற்கையைவிடச் சிறந்தது எனப் பரிந்துரைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை ! பெருவணிக நிறுவனங்களும் அரசாங்கமும் கைகோர்த்தால் எதுவும் நடக்கும் !

சுயநல அரசியலும் சமுதாய ஏற்ற தாழ்வுகளும் இருக்கும் வரை " ஒரு சாண் வயிறே இல்லாட்டா " போன்ற தெருக்குறள்கள் சாகாவரம் பெற்று சஞ்சரித்துக்கொண்டுதான் இருக்கும் !




பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

18 comments:

  1. பெருவணிக நிறுவனங்களும் அரசாங்கமும் கைகோர்த்தால் எதுவும் நடக்கும் !
    உண்மை
    உண்மை

    ReplyDelete
  2. அற்புதமான பதிவு ஐயா! உணவு அரசியல் படுத்தும் பாட்டை இலக்கியச் சுவை ததும்ப நீங்கள் விவரித்துள்ள விதம் வேறெந்த உணவுப் பலகாரத்தையும் விடச் சுவையாக உள்ளது. சமக் கால நடப்பை அது தொடங்கிய காலக்கட்டத்தோடு தொடங்கி, இடையே தன் சொந்த அனுபவத்தையும் கதை போலச் சொல்லி இறுதியில் முத்தாய்ப்புடன் முடித்து, கட்டுரை நெடுகவும் தேர்ந்த எழுத்தாளருக்குரிய இலாவகத்துடன் நீங்கள் எழுதும் கட்டுரைகள் எனக்கு ஒவ்வொரு முறையும் சுஜாதா, ஜெயமோகன் போன்ற பெரும் எழுத்தாளர்களின் படைப்பைச் சுவைத்த நிறைவைத் தருகின்றன. இப்படி ஓர் அற்புதமான பதிவுக்காக மிக்க நன்றி!

    ReplyDelete
  3. Arumaiyana pathivu, Eppotho ennudaiya bookmarkil iruntha link thatiyathum padithen arumai, arumai.

    Ithai ethilavathu merkol kattalam entru virumbukiren. Samaniyan anumathipara?

    ReplyDelete
  4. சுவையான பதிவு என்று சொல்லலாமா? உணவு அரசியலின் கலவரங்களை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  5. மலை...ஒரு மலையைப் புரட்டியிருக்கிறீர்கள்..மிக நல்ல ஆழமான பதிவு... வீச்சும் ,மொழிநடையும் சரளமாய் வரும் உங்கள் எண்ணங்களை இன்னும் வண்ணங்களாக்குங்கள்.விரியட்டும் வானம்
    .

    ReplyDelete
  6. எனக்கு தொலைக்காட்சியில் கிரிக்கெட் வீரர்(?)கள் இப்படி விளம்பரத்தில் சொல்வதை காணும் பொழுது கல்லை எடுத்து எறிந்து உடைத்து விடுவோமா ? என்று பலமுறை நினைத்து இருக்கிறேன்.
    (பலமுறை கனவில் உடைத்து இருக்கிறேன் என்பது வேறு விடயம்)

    இன்னும் அறியாமை விலகவில்லை என்பது வேதனைக்குறியதே......

    வட்டலப்பம் எனக்கு மிகவும் பிடிக்கும் நண்பரே

    ReplyDelete
  7. ‘வயித்துக்காக மனுஷன் இங்கே கயித்தில் ஆடுறான் பாரு
    ஆடி முடிச்சு இறந்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு...’
    கோதுமைத் தவிடு மற்றும் முளை ஆகியவை பிரிக்கப்பட்டு நார்ச் சத்து இல்லாத வெள்ளை நிறமுள்ள மைதாவில் செய்யும் பரோட்டா அனைவரும் இன்று விரும்பி உண்ணும் உணவாகிவிட்டது. சாதா பரோட்டா, முட்டை பரோட்டா, எண்ணெயில் பொரித்து எடுக்கும் பரோட்டா, வீச்சு பரோட்டா, சில்லி பரோட்டா என்று பலவகையான பரோட்டாக்கள். எளிதில் செரிக்கக்கூடிய உணவில்லாததால் இது வயதானவர்களுக்கு ஏற்றது அன்று.
    புது தில்லிக்குச் சென்றிருந்த பொழுது ‘சவுத் இண்டியன் புட்’ஆன இட்லி தோசை அரிசி சாப்பாட்டிற்கு அலையாய் அலைய வேண்டி இருந்தது. எங்கு சென்றாலும் சப்பாத்தியை அடுப்பில் வைத்துச் சுட்டுக்கொடுப்பதையும் ‘டால்’ பருப்புக் குழம்பைத் தேவை என்றால் அதற்குத் தனியாக காசு கொடுத்து வாங்க வேண்டும் என்பதும் வியப்பாக இருந்தது.
    ‘நிழலின் அருமை வெயிலில் தெரியும்’ என்பார்களே நமது ஊரின் சாப்பாட்டின் அருமை அன்று தெரிந்தது.
    பிரியாணி என்றால் ‘திண்டுக்கல் வேணுஸ்’ பிரியாணியை அடிச்சிக்க வேறு இல்லை என்றே சொல்லலாம். சென்னையில்கூட சேமியா போல இருக்கும் நீளமான பிரியாணியைத்தான் போடுகிறார்கள்.
    வெள்ளைக்காரன் அறிமுகப்படுத்திய தேநீர்போல இன்றைக்கு நூடுல்ஸ் ‘பாஸ்ட் புட்’ ஆகிவிட்டது. பிள்ளைகள் விரும்பி உண்ணும் உணவாகிவிட்ட இந்த உணவை வாங்கிக் கொடுப்பதோடு சரி; அதை உண்ண வேண்டும் என்ற எண்ணம் வந்ததே இல்லை. அதை உண்ண விருப்பமும் இல்லை என்பதும் ஏன் என்று தெரியவில்லை.
    ஸ்பூன் வைத்துக் கொண்டு சாப்பிடுகிறவர்களைக் கண்டால் ஏன் இவர்கள் கையை நம்பாமல் இருக்கிறார்களே என்று பரிதாபப்படுவது என் தவறாகக்கூட இருக்கலாம். பெரும்பாலும் வெளிநாட்டவர்கள் அவ்வாறு இருப்பதைப் பார்த்திருக்கிறேன்; இன்று நம்நாட்டவர்கள்கூட…. ஓ… இதுதான் நாகரிகமோ….?!
    சோளம் கேழ்வரகு கம்மங்கூழ்களையும் தானிய வகைகளையும் தேடி உண்ண அலையும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
    ‘குட்டியாடு தப்பி வந்தால் குள்ளநரிக்குச் சொந்தம் குள்ள நரி மாட்டி கிட்டா கொறவனுக்குச் சொந்தம் தட்டுகெட்ட மனிதர்கண்ணில் பட்ட தெல்லாம் சொந்தம்’
    எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்றாலும் இன்று வயிறே பிரதானம்.
    எல்லாம் உலகமயமாகிவிட்ட பிறகு உலகே மாயம்… வாழ்வே மாயம்.

    ReplyDelete
  8. வயிற்றுக்கு விருந்து காட்டி
    சிந்திக்க விருந்து அமைத்து
    அருமையான அலசல் தந்தீர்கள்
    சிந்திப்போம்!

    ReplyDelete
  9. உணவே மருந்து என்பது தான் நம் மூதாதையர்...ஏன் மூதாதையருக்குச் செல்ல வேண்டும்? நம் பாட்டி தாத்தாக்களின் தாரகமந்திரமாக இருந்தது. இப்போது? தலைகீழ்!

    அழகான பதிவு. இப்போதைய உணவு விளம்பரங்கள் எப்படி மக்களைப் பாழ்படுத்துகின்றன என்பதை அழகான எழுத்தில் சொல்லி அசத்திவிட்டீர்கள் எங்கள் ஆதங்கங்களையும் பிரதிபலிக்கிறது...

    ReplyDelete
  10. உணவில் வேதியல். கடையில் வாங்கும் மரங்கள், பழங்களில் மருந்து என்று எல்லாம் கலப்படம். அரிசிச் போருக்கு நிகர் எந்த burger ஆம் வராது
    பந்த் விழிப்புணர்வு கட்டுரை

    ReplyDelete
  11. அருமையான சமூக சிந்தனைப்பதிவு.

    ReplyDelete
  12. அதிக எழுத்தாளர்களின் எழுத்துக்களை படித்து இருக்கிறீர்கள் என்பது.. பதிவை படித்தவுடனே புரிந்து விட்டது.. கொடுத்து வைத்தவர் என்பது இதுதானோ.. அருமை

    ReplyDelete
  13. தங்களின் பதிவைப் படித்ததும் என்று தணியும் இந்த அயல் உணவுகளின் மோகம் என்றே சொல்லத் தோன்றுகிறது.

    வீண் பெருமைக்காகவும், அரசின் கட்டாயத்தாலும் நமது பாரம்பரிய உணவை கைவிட்டதின் பலனை இன்று அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம். நிலையை உணர்ந்து இளைய தலைமுறையினர் பழையபடி நமது பாரம்பரிய உணவுக்கு மாறுவார்களா? காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

    ReplyDelete
  14. தேனும் உருள திணை உருள-அந்தத்
    தேங்காய்த் தண்ணீரும் அலைமோத
    மாங்காய் கனிந்து விழுது பார் அந்த
    மகராசன் கட்டினத் தோட்டத்திலே!

    ஒன்றோடு ஒன்று தொடர்புடைய செய்தியை படிக்கையில்
    சாமானியரின் மலையருவியில் நனைந்தேன்.
    நினைந்து மகிழ்ந்தேன்.

    இந்திய பிரியாணியின் வரலாறு முகலாயர்களிடமிருந்து தொடங்கியது
    சாம்பார் சரபோஜி மன்னர்களின் பரிசு ! அறியாத செய்தியை அறிந்து கொண்டேன் நண்பரே!

    ReplyDelete
  15. வணக்கம் நண்பர்களே.. !

    தமிழுக்கான புதிய திரட்டியாக http://gossiptamil.com/aggre/ வெளிவந்துள்ளது. உங்களது இணையத்தளங்களின் பதிவினை இத் திரட்டியினூடாக பகிர்ந்து கொள்ளவதன் மூலம் உங்கள் இணையத்தளதிற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    நன்றி
    http://gossiptamil.com/aggre/

    ReplyDelete
  16. வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

    உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

    நன்றி..
    தமிழ்US

    ReplyDelete
  17. ஒரு சாண் வயிறே இல்லாட்டா - இந்த
    உலகத்தில் ஏது கலாட்டா ?
    அரிசிப் பஞ்சமே வராட்டா - நம்ம
    உசுரெ வாங்குமா பரோட்டா ?
    அடடடா சூப்பர் ... நாலே வரியில நாசுக்கா சொல்லிட்டாரே !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

    ReplyDelete
  18. மீண்டும் காலச் சக்கரம் சுழன்று கடந்த இடத்தில் வந்து நிற்கும் அந்த வசந்த வாழ்க்கை வாழ நாமும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்

    ReplyDelete