Tuesday, April 1, 2014

காசு, பணம், துட்டு... !


ங்கள் ஊரில் அரவிந்த்சாமி மெடிக்கல்ஸ் மிகவும் பிரபலம். இந்தியன் மெடிக்கல்ஸ் என உரிமையாளர் தேசப்பற்றுடன் பெயர் வைத்திருந்தாலும் அரவிந்த்சாமி மெடிக்கல்ஸ் என்றால்தான் யாருக்கும் புரியும் ! ரோஜா படம் வெளிவந்த சமயத்தில் அந்த கடை திறக்கப்பட்டது. உரிமையாளர் அச்சுஅசல் அரவிந்த்சாமி போலவே இருப்பார் ! இப்போது பெயர்க்காரணம் புரிந்திருக்கும் தானே ? இன்னொரு விசயம், பெரும்பாலானவர்களுக்கு நான் உட்பட அவரின் இயற்பெயர் தெரியாது ! நான் இந்த மெடிக்கல்ஸை பற்றி கூறப்போவது உரிமையாளர் அரவிந்திசாமி போல இருப்பார் என்பதற்காக அல்ல, அவரின் குணத்துக்காக ! எந்நேரமும் வாடிக்கையாளர்கள் நிறைந்திருக்கும் கடையில் பம்பரமாக சுழல்வார் அரவிந்த்சாமி. கடையில் பலர் வேலை செய்தாலும் ஒவ்வொருவரின் மருந்து தாளையும் தானே சரிப்பார்த்த பின்புதான் அனுப்புவார்.

" என்னம்மா அவசரம் ?! மருந்து கடையிலேயும் பரபரக்கறீங்களே... கொஞ்சம் இருங்க... எப்படி சாப்பிடனும்ன்னு எழுதி தரேன்... "

" ஏன் சார் ? வயித்துவலின்னு மாத்திரம்தானே சொன்னீங்க... அதுக்கு ஏன் இந்த மருந்தை எழுதியிருக்கார் டாக்டர் ! ஒரு நிமிசம் சார் ! அவர்கிட்டயே போன் பண்ணி கேட்டுடறேன்... மெடிசின்ல கரெக்ட்டா இருக்கனும் சார் ! "

மிகுந்த சிரத்தையுடன் கவணிப்பது மட்டுமல்லாமல் தன் கடையின் வாடிக்கையாளர்கள் அனைவரையும் பெயருடன் ஞாபகம் வைத்திருப்பார்.

இதெல்லாம் இருபது வருடங்களுக்கு முன்னால் ! சென்ற ஆண்டு ஊருக்கு சென்றிருந்தேன்...  வழுக்கை தலையும் தொப்பையுமாக அரவிந்த்சாமி ! கடையில் வழக்கம் போலவே கூட்டம். கடை பையன்கள் மருந்து விற்பனையில் மும்முரமாக இருக்க, அரவிந்த்சாமியோ செல்போனில் படுபிஸி !

" ம்ம்ம்... சொல்லுங்கம்மா ! வோடா போனுக்கு அம்பது ரூபாவா... இப்ப டாப் அப் ஆயிடும் ! "

" ஹலோ... சொல்லுங்க ! "

தன் முன்னால் பெரிய நோட்புக்குடன் செல்போன் டாப் அப் பிசினஸில் ஆழ்ந்திருந்தார் அரவிந்த்சாமி !

" வாங்க தம்பி ! பாத்து ரொம்ப நாளாச்சில்ல...? விலைவாசியெல்லாம் ரொம்ப ஏறிடிச்சி... எவ்ளோ சம்பாதிச்சாலும் பத்த மாட்டேங்குது ! அதான் சைடுல செல்போனும்... "

" ஏம்பா இந்த மருந்து சரிதானே ? "

" நம்ம கடை பையன் சரியாதாம்மா கொடுப்பான்.... போயிட்டு வாங்கம்மா ! "

என்னை பார்த்ததும் தானாக பேச ஆரம்பித்தவர், மருந்தை சரிபார்க்க கேட்ட மூதாட்டியை அவசரமாய் அனுப்பிவிட்டு மீன்டும் டெலிபோனை கையிலெடுத்தார் !

ற்றொரு நண்பர்...

முறுக்கு, சீடை என வீட்டிலேயே தயார் செய்து விற்க ஆரம்பித்து, படிப்படியாய் முன்னேறி பேக்கரி ஆரம்பித்தார். நல்ல வியாபாரம். சில ஆண்டுகளிலேயே சொந்த வீடு, கார், என வளர்ந்தார்.

" சைடுல ரியல் எஸ்ட்டேட் பண்ணலாம்ன்னு இருக்கேன்.... "

" ஏங்க ? பேக்கரி நல்லா போயிட்டிருக்கு... அதை பார்க்கவே நேரம் இல்லன்னு சொல்லுவீங்க... ? இப்ப எதுக்கு சமந்தம் இல்லாம ரியல் எஸ்ட்டேட் ? "

தனக்கு தெரிந்த தொழிலில் தான் இறங்க வேண்டும் என அடிக்கடி கூறும் அந்த நண்பரிடம் கேட்டேன்.

" என்ன செய்ய சொல்றீங்க ? பேக்கரி வருமானத்தை காட்டி வீட்டு லோன், கார் லோன்னு எல்லம் வாங்கியாச்சி... இந்த தொழில்லை மட்டும் நம்பினா எல்லாத்தையும் சரிக்கட்ட முடியாதோன்னு பயமா இருக்கு... அதான்... இப்ப ரியல் எஸ்ட்டேட் நல்லா போகுதில்லா ?! "


நுகர்வோர் கலாச்சாரமயமாகிவிட்ட இன்றைய உலகின் தலையாய பிரச்சனை பணப்பற்றாக்குறை.

" எவ்வளவு சம்பாதித்தாலும் பத்த மாட்டேங்குது ! "

என்பதுதான் அனைவரின் புலம்பலாகவும் இருக்கிறது. நமது பணப்பற்றாக்குறைக்கு விலைவாசி உயர்வு மட்டும்தான் காரணமா ? கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் சர்வதேச காரணங்களால் பணவீக்கம் அதிகமாகி அத்யாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது உண்மைதான் என்றாலும் இது மட்டுமே காரணம் கிடையாது. நமது பெற்றோர்களின் காலத்தில் பத்து, இருபது பைசாவுக்கு கிடைத்த தேனீர், நமது பால்யத்தில் எட்டணா, ஒரு ரூபாயாகி இன்று ஐந்து, பத்து ரூபாயாக உயர்ந்துவிட்டது என்றாலும் விலையேற்றம் என்பது காலபோக்கில் அதிகமாகி கொண்டிருப்பதுதான் ! ஆக, நமது இன்றைய பற்றாக்குறை பட்ஜெட்டுக்கு விலைவாசியை தாண்டிய காரணம் நாளுக்கு நாள் அதிகமாகும் தேவைகள் ! நமக்கு தேவையில்லாத பொருட்கள் கூட அன்றாட வாழ்க்கைக்கு அதிமுக்கியம் என விளம்பரம் செய்யப்பட்டு நம் தலையில் கட்டப்படுகின்றன. நாங்கள் தயாரிக்கும் பொருட்களை உபயோகிக்காவிட்டால் கெளரவகுறைச்சல் என்ற தொனியில் அமைகின்றன விளம்பரங்கள். சிகப்பழகு க்ரீம் பூசினால் மட்டுமே மற்றவர்களால் ஈர்க்கப்படுவீர்கள் எனத்தொடங்கி அதிநவீன ஸ்மார்ட்போன் இருந்தால் மட்டுமே நண்பர் குழாம் சாத்தியம் என்பது வரை போகும்  இந்த விளம்பரங்களால், அதிகமாய் விளம்பரம் செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படும் பொருட்களை வாங்குவதே சிறப்பானது என்ற எண்ணம் சமூகத்தின் அனைத்து மட்டத்திலும் படிந்து வருகிறது.


இந்திய சுதந்திரத்துக்கு முன் தேயிலையும், காபிபொடியும் இலவசமாக விநியோகிக்கப்பட்டதாக கூறூவார்கள்.ஒரு கிராமத்தில்  முதன் முதலாய் " தேத்தண்ணி " குடித்துவிட்டு பெரும்பாடுபட்டு இந்த சனியனே வேண்டாம் என அவர்கள் தேயிலையை குப்பையில் வீசுவதை தனது கோபல்லபுரத்து மக்களில் விவரித்திருப்பார் கரிசல் இலக்கியத்தந்தை கி.ராஜநாராயணன். நம் முன்னோர்கள் ஒரு காலத்தில் வேண்டாம் என ஒதுக்கிய டீயும் காபியும் நம் ரத்த ஓட்டமாகவே மாறிப்போனதற்கு  காரணம், இலவசமாய் கொடுத்து பழக்கி, பழகியபிறகு விடமுடியாமல் விலைக்கு வாங்க வைக்கும் மேல்நாட்டு வணிக உத்தி ! அதே உத்தி இன்று செல்போன் முதல் கம்ப்யூட்டர் வரை அனைத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. முதலில் உபயோகித்து பாருங்கள் ! பின்னர் வாங்குங்கள் !

தேவைப்படாது என்றுதான் வாங்கினேன் ஆனால் உபயோகித்து பழகிவிட்டேன்... பண்ணையாரும் பத்மினியும் கதையாகிவிட்டது ! ஆனால் உடனடியாக வாங்க கையில் காசில்லை...

இருக்கவே இருக்கின்றன கிரெடிட் கார்டுகள், பல முறை தவனை திட்டம் இத்யாதி, இத்யாதி ! இவைகளையெல்லாம் நம் தலையில்கட்ட டை கட்டிய இளைஞர்கள், நுனிநாக்கு ஆங்கில பெண்கள் !

" உங்களின் மாத வருமானம் இவ்வளவு வருகிறதே.... இந்த வருமானத்துக்கு இவ்வளவு கடன் தருவோமே... வட்டியும் குறைவு.... "

தேன் தடவிய பேச்சுகள் !

 இன்றுராமாயணத்தை எழுதியிருந்தால் கடன் படாதோர் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கைவேந்தன் என எழுதியிருப்பான் கம்பன் !. இன்று வீட்டுமனை கடன், கார் கடன், கம்ப்யூட்டர் கடன் என லோன்களை சேர்க்காத மனிதன் பிழைக்கத் தெரியாதவன் என்ற மாயையை வியாபார நிறுவனங்கள் ஏற்படுத்திவிட்டன ! பெரும் தொழிலதிபர்கள் கூட கடன் வாங்கிதான் தொழிலை பெருக்குகிறார்கள், நமது தேசமே உலக வங்கியிடம் கடன் வாங்கிதான் வளர்ச்சியடைகிறது என வியாக்கியனங்கள் !


அனைத்தும் பணக்காரர்களுக்கு மட்டும்தானா ? நடுத்தர மக்கள் அவர்களுக்கு தேவையானதை தவனையில் வாங்குவது தவறா ?

அந்தப் பொருட்கள் நமக்கு உண்மையாகவே உபயோகமாகும் என்றால் நிச்சம் தவறில்லை. ஆனால் நாம் வாங்கும் அனைத்து பொருட்களும் உண்மையிலேயே நமது தேவைக்காக தானா ? அடுத்த வீட்டிலும், எதிர் வீட்டிலும் கார் வாங்கி விட்டார்கள் என்று நாமும்  தவணையில் வாங்கி போர்டிகோவில் நிறுத்திக்கொள்கிறோமே ! வீட்டுக்கு இரண்டு தெரு தள்ளி வேலையில் இருக்கும் நமக்கு கார் உபயோகப்பட போவதென்னவோ மாதத்தில் ஒன்றிரண்டு முறைதான் ! ஒரு ஸ்மார்ட்போன் வாங்கிய ஆறுமாததுக்குள்ளாகவே மற்றொரு புதிய மாடல் வெளிவர, சந்தைக்கு புதுசை வைத்திருந்தால் தான் மவுசு என வாங்க ஓடுகிறோமே ! நமது ஸ்மார்ட்போனின் அனைத்து செயல்பாடுகளும் நமக்கே தெரியாது ! அவை நமது அன்றாட வாழ்க்கைக்கு தேவையும் கிடையாது ! வாங்கியதால் பழகிக்கொள்கிறோம், பழகியதை விடமுடியவில்லை. இதுதான் பிரச்சனை.

வரவு எட்டணா செலவு பத்தணா என்பதை பெருமையாக கருத தொடங்குவதுதான் ஆபத்து. நமது வருமானம் இவ்வளவுதான் என அறிந்து, அதில் அத்யாவசிய தேவைகளுக்கு ஒதுக்கியது போக மீதியை செலுத்தும் வகையில் நமது கடன்கள் அமையும்வரை பிரச்சனை ஒன்றும் இல்லைதான். வருமானத்தை கணக்கு பார்த்து செலவு செய்த காலம் போய் செலவை ஏற்படுத்திகொண்டு வருமானம் ஈட்ட முயல்வதுதான் ஆபத்தாகிவிடுகிறது ! செய்யும் தொழிலில் கவணம் செலுத்தி, லாபம் பார்த்து மகிழ்ச்சியாய் வாழ்வதற்கும் லாபம் மட்டுமே குறிக்கோளாய் ஓடி களைத்து நிம்மதி இழப்பதற்கும் நிறைய வித்யாசம் உண்டு.

மால்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், கடைகள் தாண்டி கணினி வழியே நம் வீட்டு அறையிலேயே நுகர்வுப்பொருட்கள் அவிழ்ந்து இறையும் இன்றைய காலக்கட்டத்தில் நமது பர்ஸை பத்திரப்படுத்துவது அவசியம். பொருட்களின் தரத்தை பார்க்கும் அதே நேரத்தில் அந்த பொருள் நமக்கு அவசியம் தேவையா என்பதையும் அலசி ஆராய வேண்டியிருக்கிறது. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் என்பது எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ, இன்றைய விளம்பரங்களுக்கு நிச்சயம் பொருந்தும் !

கடன் கொடுக்க கோட், டை அணிந்த பேங்க் ஆபிசர் வருவார்... அந்த கடனை கட்டமுடியாவிட்டால் கடைசியில் கோர்ட் அமீனா வருவார் என்பதை நினைவில் வைத்துகொண்டால் வரவுக்குள் செலவு செய்து சுகமாய் வாழலாம் !

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.


12 comments:

 1. சார்,

  வணக்கம்.

  //எங்கள் ஊரில் அரவிந்த்சாமி மெடிக்கல்ஸ் மிகவும் பிரபலம். இந்தியன் மெடிக்கல்ஸ் என உரிமையாளர் தேசப்பற்றுடன் பெயர் வைத்திருந்தாலும் அரவிந்த்சாமி மெடிக்கல்ஸ் என்றால்தான் யாருக்கும் புரியும் ! ரோஜா படம் வெளிவந்த சமயத்தில் அந்த கடை திறக்கப்பட்டது. உரிமையாளர் அச்சுஅசல் அரவிந்த்சாமி போலவே இருப்பார் !//

  அது சரி, கடைசி வரைக்கும் உங்கள் ஊர் எது என்பதை சொல்லவே இல்லையே? எங்கள் ஊரில் என்று ஆரம்பித்துவிட்டு ஊர் பெயரை சொல்ல வில்லை என்றால் எப்படி சார்?

  அப்புறம், நீங்க சொன்ன சம்பவத்துக்கு பிறகு ஒன்று தோன்றுகிறது - ஒருவேளை காலம் நம் எல்லோரையுமே இப்படித்தான் மாற்றிவிடுமா என்ன? நானும் என்னுடைய வாழ்வில் பலரை இதுபோல மாறிய நிலையிலேயெ சமீபமாக சந்தித்து வருகிறேன்.

  அதைப்போலவேத்தான் மற்ற சம்பவங்களும்.

  அந்த “கடன்படாதோர் போல கலங்கிய: இலங்கைவேந்தன் உவமை நன்று.

  தொடர்ந்து எழுதுங்கள் சார். உங்கள் பதிவுகள் அனைத்துமே படிக்க சுவையாக உள்ளன.

  நன்றி.

  ReplyDelete
 2. அனைத்து எழுத்துகளுமே ( பிரபல எழுத்தாளர்கள் தொடங்கி என்னை போன்ற ஆர்வக்கோளாறு அரைவேக்காடுகள் வரை ! ) எழுதுபவரின் உண்மை அனுபவம் சார்ந்ததுதான். அதில் உண்மை மற்றும் கற்பனை கலப்பின் சதிவிகிதம் முக்கியம். சமகால நடப்புகளை எழுதும் போது சம்பவத்தையும் குறிப்பிட வேண்டும் அதே நேரத்தில் அதில் குறிப்பிடப்படும் நபரின் முழு அடையாளமும் தெரிந்து நம்மால் அவர்களின் " " பாதிக்கப்பட்டுவிடக்கூடாது.

  ஊரின் பெயரை குறிப்பிடாததற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் எனது காமிக்ஸ் கட்டுரைக்கு பின்னூட்டமிட்ட ஒரு நண்பர் மிகச்சரியாக என் ஊரினை பிடித்துவிட்டார் !

  வலைபூவுக்கு புதியவனான எனக்கு உங்களின் தொடர் ஊக்கம் பெரும்மகிழ்ச்சி !

  நன்றி.

  ReplyDelete
 3. சா சாம்,
  நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள்.இப்போதுதானே ஆரம்பித்திருக்கிறீர்கள். எனவே பலர் உங்களை அறிய வாய்ப்பு இல்லை. சில தமிழ் திரட்டிகளில் (தமிழ்வெளி, தமிழ் மணம் போன்று) உங்கள் சுட்டியை இணைத்து விட்டால் இந்த வேலை சற்று எளிதாகிவிடும். கிங் விஸ்வா உங்கள் தளத்திற்கு தவறாமல் வந்து தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வருவது பாராட்டுக்குரியது. ஒரே முறை என் தளம் வந்திருக்கிறார். நிறைய எழுதுங்கள். ஆனால் உங்கள் எழுத்தின் பாணியையும் சாராம்சத்தையும் சமரசம் செய்துகொள்ளாமல் எழுதுங்கள். உங்கள் எழுத்தில் நல்ல பக்குவமும் முதிர்ச்சியும் தெரிகிறது. இது இணையத்தில் பலரிடம் காணக்கிடைக்காதது. வாழ்த்துக்கள்.

  மேலும் உங்கள் காமென்ட் பாக்சில் உள்ள word verification ஆப்ஷனை எடுத்துவிடுவது பலர் கருத்து சொல்ல வசதியாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. உங்களின் மனம் திறந்த பாராட்டுதலுக்கு நன்றிகள் பல. உங்களின் பின்னூட்டத்தை படித்தபின் இனி எழுதுவதை இன்னும் நன்றாக எழுத வேண்டும் என்ற பொறுப்பு பயமுறுத்துகிறது !! மிக நல்ல ஆலோசனைகளை வழங்கியிருக்கிறீர்கள். ஒரு துறைக்கு புதிதாய் வருபவனை மனம்திறந்து பாராட்டி ஆலோசனைகளையும் வழங்கும் குணம் அனைவருக்கும் கிட்டாது. அந்த வகையில் உங்களை போலவே நன்பர் கிங் விஸ்வாவும், நீங்கள் குறிப்பிட்டதை போல தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறார்.

   தமிழ்வெளியில் என் வலைப்பூவினை பதிந்துவிட்டு காத்திருக்கிறேன். word verification ஆப்ஷனை எடுத்துவிட்டேன்.

   Delete
 4. பல மனிதர்களுடன் பழகிய உங்களின் அனுபவம் மற்றும் சொல்லவரும் கருத்து வெகு சிறப்பானதே உங்களின் எழுத்துப் பணி அனைத்து உள்ளங்களையும் சென்று ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று வாழ்த்துகிறேன்

  ReplyDelete
 5. நன்றி சேகர் !

  கை நிறைய சம்பாதிப்பவர்கள்கூட கடன் என்னும் மாயையில் வீழ்ந்து பல வருடங்களுக்கு வங்கிகளிடம் பிணைக்கைதிகளாக வாழ்கிறார்கள் என தோன்றிய எண்ணமே இந்த கட்டுரை.

  ReplyDelete
 6. கோர்வையான எழுத்துக்கள், அருமையான கட்டுரை! நண்பர்களிடம் இருந்து தேன் தடவிய MLM அழைப்புக்கள் அவ்வப்போது வருவதுண்டு... வார இறுதியில் சில மணி நேரங்கள் செலவழித்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று! அய்யா ரொம்ப பிஸியாகும் என்று சொல்லி தவிர்த்து விடுவேன்! :)

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் கார்த்திக் சோமலிங்கா,

   பின்னூட்டத்துக்கு நன்றி. MLM அழைப்புகள் மட்டுமா ? ஆரம்பத்தில் அனைத்துமே தேன் தடவிய இனிப்புடன் தான் அறிமுகமாகின்றன ! காதலை போல !!! தேனுக்குள் இருப்பது வேப்பங்காயா அல்லது கடுக்காயா என தெரிந்துகொள்ளும்போது... Already too late ! :(

   Delete
 7. வணக்கம் சாமானியன்,

  உங்களது தளத்துக்கு எனது முதல் விஜயம்.

  உங்களது நல்ல எழுத்தாற்றல் தெரிகிறது இந்தக் கட்டுரையில். பொதுவாக அனுபவம் சார்ந்த படைப்புக்கள் சுவாரஸ்யமாக இருக்கும். அதிலும் சில peculiar மனிதர்களைப் பற்றிப் பேசும்போது இன்னும் சுவாரஸ்யம். தொடர்ந்து எழுதுங்கள்...

  சரவணன்
  http://schoolpaiyan2012.blogspot.com/

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி. வாழ்க்கை என்பதே அனுபவங்களின் தொகுப்புதானே !

   தொடர்ந்து வருகை தாருங்கள் நண்பரே.

   Delete
 8. சொல்லவந்ததை நேர்மையான முறையில் கோர்வையாக எழுதியுள்ளீர்கள். இன்றைய அசுரவேக யுகத்தில் ஒவ்வொரு செயலையும் செய்வதற்குமுன் ஆராயும் நேரமில்லாமல் போய்விட்டது. அதுதான் பல சிக்கல்களோடு வாழ்க்கையை வாழவேண்டிய சூழலை உருவாக்குகிறது. மிக அருமையானதொரு அலசல். பாராட்டுகள் சாமானியன்.

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள் அம்மா.

   Delete