சமீபத்தில் இந்தியா டுடே இதழில் " வலையில் வாழும் பாத்திரங்கள் " கட்டுரையை படிக்க நேர்ந்த போது என் பால்ய பருவம் மீன்டும் திரும்பியதை போல உணர்ந்தேன் ! அந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்த கலீல், செளந்திரபாண்டியன், கார்த்திக் சோமலிங்கா, ரபீக், விஸ்வா போன்றவர்கள் நடத்தும் வலைதளங்களையும், வலைப்பூக்களையும் தேடி கண்டபோது மீன்டும் என் பால்யபருவ காமிக்ஸ் உலகம் என் கண்முன் விரிந்தது ! எங்கள் ஊரின் காமிக்ஸ் அலிபாபா குகையான " ரஹ்மானியா பேப்பர் ஸ்டோர் " மீன்டும் என் முன்னால் உருப்பெற்ற பிரமை !
" தபால் தலை சேகரிப்பதுபோல சித்திரக்கதைகள் என்பது ஒரு ஹாபி, இது ஒரு தனி உலகம். சித்திரக்கதைகளை படிக்காதவர்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியை தவரவிடுகிறார்கள் "
" தமிழ் சித்திரக்கதைகள் என்பது ஒரு கலாச்சாரம்போல், ஒரு மதத்தை போன்றது "
என்பது போன்ற கருத்துகள் மிகையல்ல !
மேலே குறிப்பிட்ட தோழர்கள் அனைவரின் வயதுமே முப்பதுக்கு மேல் தொடங்கி, நாற்பதின் ஆரம்பத்திற்குள்தான் இருக்கும். எண்பதில் தொடங்கி தொன்னூறின் ஆரம்பம் வரையிலான தமிழ் காமிக்ஸின் பொற்காலத்தில் பால்ய பருவம் கண்ட அனைவரையும் காமிக்ஸ் தலைமுறை என்று குறிப்பிடலாம் என தோன்றுகிறது.
அந்த காலகட்டத்தில் தமிழில் படக்கதைகள் தாங்கிய காமிக்ஸ் மட்டுமன்றி அம்புலிமாமா, கோகுலம், பூந்தளிர், ரத்னமாலா என பல சிறுவர் வார மாத இதழ்களும் வெளிவந்து கொண்டிருந்தன. தமிழின் சிறுவர் இலக்கியம் செழித்தோங்கிய பொற்காலம் அது ! சிறுவர்கள் மட்டுமன்றி பெரியவர்களும் ஆனந்தவிகடன், குமுதம் இதழ்களுக்கு ஈடாக சிறுவர் பத்திரிக்கைகளை படித்து ரசித்த காலம் அது !
ஜாதி மத வேறுபாடுகளும் சமூக ஏற்ற தாழ்வுகளும் நிரம்பிய ஒரு தேசத்தின் ஒற்றுமை இணைப்புகளான சினிமா, கிரிக்கெட்டுக்கு இணையாக விளங்கியது காமிக்ஸ் இலக்கியம் என்றால் அது மிகையாகாது !
ஆடி காற்றுடன் மழையும் பெய்த ஒரு பின்மாலை பொழுதில் தொடங்கியது எனக்கும் பட கதைகளுக்குமான உறவு ! பக்கத்து ஊரில் கடை வைத்திருந்த என் தந்தை வாங்கி அனுப்பிய மீன்களுடன் வந்தது முன் அட்டை இல்லாத காமிக்ஸ் புத்தகம் ! இரும்புக்கை மாயாவி என ஞாபகம் ! அந்த சிறுவயதில் இரும்புக்கை மாயாவியை விட என்னை அதிகம் கவர்ந்தது அதன் கடைசி இரண்டு பக்கங்களிலிருந்த கார்ட்டூன் கதை ! " சுட்டிக்குரங்கு கபீஷ் ! "
நான் அந்த புத்தகத்தில் லயித்திருந்ததை கண்ட என் தந்தை அடுத்த சில நாட்களில் மற்றொரு புத்தகத்தை கொண்டு வந்தார் ! அது சிறுவர் இதழான பூந்தளிர் ! அடுத்தடுத்து அம்புலிமாமா, கோகுலம், ரத்னமாலா என அந்த காலத்தில் வெளியான அத்தனை சிறுவர் பத்திரிக்கைகளும் எனக்கு பரிச்சயமாயின !
பதிணென் பருவத்தின் ஆரம்பத்தில் கபீஷை தாண்டி காமிக்ஸ் படக்கதைகள் மீதான ஆர்வம் தொடங்கியது ! முதலில் அறிமுகமானது முத்து காமிக்ஸ் ! இரும்புக்கை மாயாவியும், ஸ்பைடர் மேனும் வியக்க வைத்தனர் ! ராணி காமிக்ஸ் ! ஜேம்ஸ் பாண்ட் கதைகளும் பார் வெஸ்ட் கெளபாய் கதைகளும் சாகச கனவுகளை மனதில் விதைக்க, லயன் காமிக்ஸ் சாகசகதைகளுடன் நிற்காமல் மினி லயன், ஜூனியர் லயன், திகில் காமிக்ஸ் என வாரம், வாரம் இருமுறை, மாதம் என கோலோச்சியது ! மிக குறைந்த விலையில் முற்றிலும் கலரில் கார்ட்டூன் ரக கதைகளுடன் வெளியான மினி லயன் அந்த கால காமிக்ஸ் உலகின் புரட்சி ! ஒன்றரை ரூபாய் விலையில் முழுவதும் கலர் பக்கங்களுடன் மினி லயனை அன்று வெளியிட முடிந்ததென்றால் எந்த அளவுக்கு அதன் " சர்க்குலேசன் " இருந்திருக்கும் ?! ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் இதழ்களுக்கு இணையாக காமிக்ஸ் இதழ்கள் கோலோச்சிய காலமது !
அடுத்ததாக அறிமுகமானது பைக்கோ கிளசிக்ஸ் ! தென்னிந்தியாவில் வெளியான அமர்சித்திரகதாவுக்கு இனையான தரத்தில், ஆங்கில இலக்கிய கதைகளை இலகுவான படக்கதைகளாக தந்த பைக்கோ கிளாசிக்ஸ் புத்தகங்களை பாதுகாக்காமல் விட்டுவிட்ட வருத்தம் எனக்கு இன்றைக்கும் உண்டு ! ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் தொடங்கி மார்க் ட்வெய்ன், ஜூலியஸ் வெர்னே, விக்டர் ஹூயூகோ, ஓ ஹென்றி என மேல்நாட்டு இலக்கியகர்த்தாக்களின் படைப்புகளை புரிந்துகொள்ள எளிதான படக்கதைகளாக அறிமுகபடுத்தியது பைக்கோ கிளாசிக்ஸ் காமிக்ஸ்.
அதற்கு பிறகு, இந்தியா டுடே கட்டுரையில் குறிப்பிட்டது போல தமிழ் காமிக்ஸ் கலாச்சாரம் இரும்புக்கை மாயாவியாய் மறைந்துவிட்டது பெரும் சோகம் என்றாலும், அவரின் உடல் மறைந்த நிலையிலும் இரும்புக்கை மட்டும் சாகசம் நிகழ்த்துவதை போல தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கும் லயன் காமிக்ஸும், இணையத்தின் மூலம் இந்த கலாச்சாரத்தை கட்டிக்காக்கும் நண்பர்களும் தமிழ் காமிக்ஸ் ஜோதி அணையாமல் பாதுகாத்துகொண்டிருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது ஆறுதலாக உள்ளது.
தமிழ் படக்கதைகளின் வீழ்ச்சிக்கு பல காரணங்கள் இருக்கின்றன ! முதலானது தமிழில் வெளியான படக்கதைகளில் தொண்ணூறு சதவிகிததுக்கு மேல் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கதைகள்தான் ! உலகலாவிய வர்த்தகமயமான தொண்ணூறுகளில் அத்தகைய கதைகளுக்கான காப்பிரைட் உரிமை கடுமையாக்கப்பட்டு சிக்கல்கள் ஏற்பட்டிருக்கலாம். ! இதற்கு உதாரணம் ராணி காமிக்ஸ் ! ஒரு காலகட்டதுக்கு பிறகு அதில் வந்த ஜேம்ஸ்பாண்ட் கதைகளுக்கு உள்ளூர் ஓவியர்களே படம் வரைந்தனர் ! ஆனால் தரம் மிக மோசம் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும் ! ட்ராட்ஸ்கி மருது ஒரு பேட்டியில் கூறியது போல நமக்கு கார்ட்டூன் மற்றும் காமிக்ஸ் ஓவியக்கலை முற்றிலும் கைக்கூடாத ஒன்று ! ! மேல்நாட்டு படக்கதைகளின் மூலம் அவர்கள் தயாரிக்கும் சினிமாவில் உள்ளது. சினிமா தயாரிப்பில் ஸ்டோரி போர்டு முறையை மேல்நாட்டவர்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த முறையில், படம் தொடங்குவதற்கு முன்னரே எந்தெந்த இடத்தில் எப்படிபட்ட காட்சியமைப்பில் எந்த நடிகரைவைத்து, எந்த கோணத்தில் படமாக்கவேண்டும் என அனைத்தையும் படங்களாக வரைந்து தயாரான பின்னரே படபிடிப்புக்கு செல்கின்றனர் ! அதுவே பின்னர் பட கதைகளாகவும் வெளிவருகிறது ! ஜேம்ஸ்பாண்ட் படக்கதைகள் இதற்குசிறந்த உதாரணம் ! அந்த கால கட்டதில் வெளியான ஜேம்ஸ்பாண்ட் படங்களின் ஓவ்வொரு பிரேமும் ஒரு படகட்டமாக கதைகளில் அச்சுஅசலாக இருக்கும்.
ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலமாக ஜேம்ஸ் பாண்ட், ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், இரும்புக்கை மாயாவி என பல்வேறு கற்பனை கதாபாத்திரங்கள் மேலை நாடுகளில் பட கதைகளின் மூலம் உருவமும் பெற்று சஞ்சீவிகளாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் ( பத்துக்கும் மேற்பட்ட கற்பனை சாகச புருசர்களை கொண்ட மார்வல் காமிக்ஸ் இன்றைய நவீன சினிமா தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களை உலகளாவிய வெள்ளித்திரை நாயகர்களாகவும் மாற்றி பலகோடி டாலர்கள் லாபமீட்டுவது தனிக்கதை ! )
மேல் நாட்டு காமிக்ஸூகளின் உரையாடல்களை மொழிபெயர்த்து வெளியிடுவதுடன் திருப்திபட்டுகொண்ட நாம் அதை தாண்டி இந்தியதன்மையுடைய சுதேசி நாயகர்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டவில்லை ! இதில் வேடிக்கை என்னவென்றால் மேல்நாட்டு காமிக்ஸ் ஹீரோக்களைவிடவும் சுவாரஸ்யமான நாயகர்கள் நம் இதிகாசங்களில் உள்ளனர் ! ( சக்திமான் சற்றே ஆறுதல் ! )
காமிக்ஸ் கதைகள் படிப்பதால் படிப்பு கெட்டுவிடும் என நினைத்த, இன்றும் நினைக்கும் பல பெற்றோர்களும் தமிழ் பட கதைகளின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என தோன்றுகிறது !
அனைத்திற்கும் மேலாக, இந்திய மொழிகளில், முக்கியமாக தமிழ் மொழி இலக்கியத்தில் சிறார் இலக்கியத்துக்கான முயற்சி மிக மிக குறைவு ! எனது சிறுபுத்திக்கு எட்டிய வகையில் சிறார் இலக்கியம் ஒன்றையே தன் உயிர்மூச்சாக எண்ணி உழைத்தவர் வாண்டுமாமா ஒருவர்தான் !
காமிக்ஸ் கதைகளுக்கும் வாண்டுமாமாவுக்குமான உறவு கம்மிதான் என்றாலும் தமிழ் சிறுவர் கார்ட்டுன் முயற்சிகளில் அவரின் பங்களிப்பு அசாத்தியமானது. என்பது, தொண்ணூறுகளில் பூந்தளிர் போன்ற சிறுவர் இதழ்களில் மிகவும் முனைப்பாக அவர் உழைத்து ஏற்படுத்திய சூழ்நிலையும் தமிழ் காமிக்ஸ் செழித்தோங்க ஒரு காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது !
எண்பதுகளின் மத்தியில் தொடங்கி முழுவீச்சில் பரவிய பாக்கெட் நாவல்களும் தமிழ் காமிக்ஸுகளின் மறைவுக்கு ஒர் காரணமாக இருக்கலாம் என தோன்றுகிறது ! மேல்நாட்டு கலாச்சாரத்தை பின்னனியாக கொண்டு காமிஸுகள் வெளிவந்த நேரத்தில் ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார் போன்ற நாவலாசிரியர்கள் மேல்நாட்டு " போலார் " க்ரைம் கதைகளுக்கு ஈடாக இந்திய கலாச்சார பின்னனியில் எழுதிய நாவலகள் இளைஞர்கள் மற்றும் முதிய வாசகர்களை பாக்கெட் நாவல்கள் பக்கம் ஈர்த்துகொண்டன ! ( " பாவம் தமிழன் ! பாக்கெட் நாவலின் பாக்கெட்டிலிருந்தே வெளிவரவில்லை " என்ற வகையில் பிரபல தமிழ் கவிஞர் ஒருவர் வெந்து எழுதும் அளவுக்கு பாக்கெட் நாவல்கள் கோலோச்சியதும், அந்த கவிதையை தொடர்ந்து அந்த காலகட்டத்தில் மிகவும் பிரபலமான " க்ரைம் " பாக்கெட் நாவல் இதழ் ஒன்றின் ஆசிரியர் அந்த கவிஞர் மீது தொடுத்த தலையங்க யுத்தமும் அன்றைய காலக்கட்டத்தின் சுவாரஸ்ய மீடியா பரபரப்பு ! )
பட கதைகள் கோலோச்சிய காலக்கட்டம் தொடங்கி இன்று வரை தமிழின் எந்த ஒரு பிரபல பத்திரிக்கை குழுமமும் படக்கதைகள் வெளியிடுவதற்கு முயற்சிக்கவில்லை ! பக்தி தொடங்கி பங்குசந்தை, மோட்டார், விவசாயம் என பல துறைகளுக்கும் தனி இதழ்கள் தொடங்கி அதில் வெற்றியும் பெற்ற, அச்சுக்கலையில் தலைமுறை அனுபவம் கொண்ட இந்த குழுமங்கள் முயற்சித்தால் மேல்நாட்டு காமிக்ஸுகளுக்கு இணையான தரத்தில் உள்நாட்டு படக்கதைகளை உருவாக்கி, அதற்கென ஒரு வாசகர்வட்டத்தையும் உருவாக்கமுடியும் என தோன்றுகிறது ! முயற்சிப்பார்களா ?!
இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.
காமிக்ஸ் மேல் உங்களுக்கு இருக்கும் தீவிர காதலை பறைசாற்றிடும் அருமையான பதிவு இது!
ReplyDeleteஎடிட்டர் விஜயனின் ப்ளாக்கிற்கு நீங்கள் இதுவரை வருகைபுரியாத புதியவர் என்றால் உங்களை அங்கே வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்! :)
நண்பர் சாமானியன் அவர்களுக்கு,
ReplyDeleteமிகவும் விரிவான, சுவையான பதிவு! தமிழ் காமிக்ஸ் பற்றிய உங்கள் பார்வைகளை அழகாக பகிர்ந்து உள்ளீர்கள்! குறிப்பாக, தமிழ் காமிக்ஸ்களின் வீழ்ச்சிக்கான காரணங்களாக நீங்கள் பட்டியல் இட்டிருப்பவை மிக மிகச் சரியான கருத்துக்கள்!
//அச்சுக்கலையில் தலைமுறை அனுபவம் கொண்ட இந்த குழுமங்கள் முயற்சித்தால் மேல்நாட்டு காமிக்ஸுகளுக்கு இணையான தரத்தில் உள்நாட்டு படக்கதைகளை உருவாக்கி, அதற்கென ஒரு வாசகர்வட்டத்தையும் உருவாக்கமுடியும் என தோன்றுகிறது !//
இவ்வாறான முயற்சிகளுக்கு உடனடி வெற்றி கிட்டாது என்றாலும், பத்திரிக்கையுலக ஜாம்பவான்கள் தளராது முயற்சித்தால் அடுத்த தலைமுறைச் சிறுவர்களுக்கு சிறந்த (உள்நாட்டு) சித்திரக் கதைகள் கிடைத்திடும் வாய்ப்புக்கள் பிரகாசமாக உள்ளது!
உங்கள் வலைப்பூவில் இருக்கும் பிரெஞ்சு எழுத்துக்களைப் பார்த்ததில், ஒரு தகவலை பகிர விரும்புகிறேன்! லயன் / முத்து காமிக்ஸ்கள் தற்போது பிரான்ஸிலும் கிடைக்கின்றன!
சாமானியன் அவர்களுக்கு இந்த மரமண்டையின் வாழ்த்துக்கள் ; உங்கள் காமிக்ஸ் மீதான காதலுக்கு என்றும் பாராட்டுக்கள் ! இந்த நொடி ; இந்த நேரம் ; இந்த தருணம் ; தமிழ் காமிக்ஸ் வாசகர்களாகிய நாங்கள், மீண்டுவிட்ட தமிழ் காமிக்ஸ் பொற்காலத்தில் வாழ்ந்து மகிழ்ச்சியில் திளைக்கிறோம் ! வாருங்கள் எடிட்டர் விஜயனின் வலைப்பூவிற்கு ; பாருங்கள் எங்களின் வசந்தம் என்னவென்று !
ReplyDeletelion-muthucomics.blogspot.com
ரஹ்மானியா பேப்பர் ஸ்டோர்..? - உங்கள் சொந்த ஊர் காரைக்காலா?
ReplyDeleteகாமிக்ஸின் பொற்காலம் மற்றும் இன்றைய நிலை குறித்து அழகாக தொகுத்துள்ளீர்கள்.
ReplyDeleteதொடர்ந்து உங்களது கருத்துக்களை பகிறுங்கள்.மற்றும் ஆசிரியரின் வலை பூவிலும் உங்களது பங்களிப்பை கொடுங்கள்.
வாண்டுமாமாவின் பல புத்தகங்கள் இன்றும் ஓரளவு மறுபத்திப்பு செய்துவருகிறார்கள்.
அவ்வாறு பல சிறுவர் இலக்கியங்கள் இருந்த காலத்தில் நாமும் இருந்ததது நமது அதிர்ஷ்டமே.
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
This comment has been removed by the author.
ReplyDeleteHi,
ReplyDeleteMy Bad.
Do write more.
// இந்தியதன்மையுடைய சுதேசி நாயகர்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டவில்லை !//
ReplyDeleteகலை நயம் மிக்க ஓவியர் செல்லம் மற்றும் வாண்டு மாமா கூட்டணியில் வந்த சித்திரக்கதைகள்தான் எனக்கு இன்றளவும் மனதில் பசுமையாக தெரிகின்றன
ஆமாம் ! வாண்டுமாமாவின் சுட்டிக்குரங்கு கபீஷ், வேட்டைக்கார வேம்பு போன்ற பாத்திரங்கள் இன்றும் நம் மனதில் நிறைந்திருக்க காரணம் நமது சமூக வாழ்வியல் பின்புலத்தில் அந்த பாத்திரங்கள் படைக்கபட்டிருந்ததுதான் !
Deleteசிறுவர் இலக்கியத்தையே உயிர்மூச்சாக கொண்ட வாண்டுமாமாவுக்கு உரிய மரியாதையை தமிழ் இலக்கிய மற்றும் ஊடக உலகம் கடைசிவரை செலுத்தவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கும் விசயம்.
வவ்வால் தளத்திலிருந்து இங்கே வருகிறேன் நண்பரே.
ReplyDeleteஅருமையாக எழுதுகிறீர்கள். அலுப்பு தராத நடை. பாராட்டுக்கள். காமிக்ஸ் காலம் என்று ஒன்று இருந்தது. 80 களுக்கு முன்பே 70 களில் முத்து காமிக்ஸ் ஆரம்பித்து வைத்த புதிய கலாச்சாரம் இது. இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ் டேவிட், ஜானி நீரோ, முகமூடி வேதாளர், காரிகன், சார்லி, ரிப் கெர்பி,கிஸ்கோ கிட் என பலவகையான காமிக்ஸ் நாயகர்கள் ஜீவனோடு இன்றும் பலரின் நினைவுகளில் உலா வருகிறார்கள். உங்களுக்கு விருப்பமான சில கதைகளைப் பற்றியும் எழுதியிருக்கலாம்.
நம் நாட்டில் சிறுவர்கள் இலக்கியம் உதாசீனப்படுத்தப்படுகிறது. சிறுவர்களின் உலகத்தை வேடிக்கையாக எண்ணிவிடும் போக்கே இதற்கு ஒரு காரணம்.
நன்றி நண்பரே,
Deleteநீங்கள் குறிப்பிட்ட கதை நாயகர்கள் அனைவரையுமே ரசித்தவன் நான் !
" நம் நாட்டில் சிறுவர்கள் இலக்கியம் உதாசீனப்படுத்தப்படுகிறது. சிறுவர்களின் உலகத்தை வேடிக்கையாக எண்ணிவிடும் போக்கே இதற்கு ஒரு காரணம். "
நீங்கள் கூறியது உண்மை. ஆனால் தமிழ் காமிக்ஸ் பற்றிய வலைதளங்களை பார்க்கும் போது நாம் இழந்த பொற்காலம் நிச்சயம் மீளூம் என்ற நம்பிக்கை தோன்றுகிறது.
வணக்கம் நண்பர் சாமானியன் அவர்களுக்கு, சிறு வயதில் காமிக்ஸ் படித்த அனுபவமெல்லாம் எனக்கு எதுவுமில்லை. ஆனால் மற்றவர்களின் அனுபவங்களை தங்களின் மூலமாகவே தெரிந்து கொள்கிறேன். நன்றி!
ReplyDeleteதங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி வலிப்போக்கன்.
Deleteதங்களுக்கு காமிக்ஸ் அனுபவங்கள் வேண்டுமானால் இல்லாமலிருக்கலாம்... ஆனால் தங்களின் வலைப்பூவினை படிக்கும்போது நிறைந்த வாழ்க்கை அனுபவங்களை பெற்றவர் நீங்கள் என்பது தெரிகிறது !
சாமானியன்
அனபுச் சகோதர,
ReplyDeleteதப்பி ஓடிய இளவரசி என்ற ஒரு கதை நான் மூன்றாம் வகுப்புப் படிக்கும் போது வாசித்த முதல் கதை.
ராணி காமிக்ஸின் பளபள அட்டை...! பழுப்பு நிறத்தாள்.... சித்ரா மணாளன் என்பதாய் நினைவு என்பாரின் தொடர் கதை...! பின் ஜேம்ஸ் பாண்ட் டபுள் ஒ செவன்.....!லயன் காமிக்சும், முத்து காமிக்சும் ஒரே பதிப்பாசிரியருடையது என்பதாய் நினைக்கிறேன். முத்து காமிக்ஸில் லாரன்ஸ் டேவிட்டை விட்டு விட்டீர்களே...!
என் வாசிப்பின் பிள்ளையார் சுழி காமிக்ஸில் தான் தொடங்கியது.பூந்தளிரின் கபீஷ், தந்திரக்கார மந்திரி, அம்புலி மாமா வில் “தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்தன் ..........உன் தலை சுக்கு நூறாக வெடித்துச் சிதறி விடும்“ இன்னும் இன்னும்...........!
ஆறு மாதங்களுக்கு முன்னால் பழைய புத்தகக் கடையொன்றிற்குப் போயிருந்தேன். ஒரு பன்னிரண்டு ராணிகாமிக்ஸ் புத்தகங்கள்...! குழந்தமையின் குதூகலத்தோடு துள்ளியபடி வாரி வீட்டுக்கு வந்தது .....!
பக்கங்களைத் தடவிப் படித்த போது பால்யத்தின நினைவோடைகளில் வெகுதூரம் போயிருந்தேன்.
மீட்டெடுத்த போது என் முன்னால் படிக்கக் கிடந்த ‘பின்தொடரும் நிழலின் குரலை‘ ப் படிக்கத் தோன்றவில்லை.
உங்களைக் குறித்து இதைப்படிப்பதற்கு முன்பே என் பதிவில் பின்னூட்டமொன்று இட்டுவிட்டேன். காண,
http://oomaikkanavugal.blogspot.in/2014/06/blog-post_15.html#comment-form வருக.
நன்றி!
எனது பால்யத்தின் பசுமை வாசனையை மீன்டும் தூண்டிவிட்டீர்கள் நண்பரே !
Deleteஆமாம் தப்பி ஓடிய இளவரசி தான் ! நீங்கள் குறிப்பிட்ட திகில்கதை எழுத்தாளர் சித்ரா மணாளன் தான் ! ராணி காமிக்ஸின் கடைசி பக்கங்களில் அவர் கதைகள் வெளிவரும்... அணக்கட்டு கொலைகள்... எஸ்ட்டேட் பேய்...
எனக்கு பரிச்சயமான முதல் பேய் கதைகள் இவை !
ஒரு மழைபெய்த இரவில்,
" சல்.. சல்... சலக்... சலக்... கெக்கெக்கே.... " என்ற சிரிப்புடன் தோன்றினாள்...
என்ற வரிகளை படித்து உடல் நடுங்கியதை நினைத்தால் இன்று சிரிப்பு வருகிறது !
பால்யத்தின் நினைவோடைகளில் பின்னோக்கி நீந்தும்போது " பின் தொடரும் நிழல் " கண்ணில் படாதது இயல்பானதே !
நன்றி
சாமானியன்
சாமானியன் சார்,
Deleteசித்ரா மணாளன் அப்போதைய ராணி காமிக்ஸ் எடிட்டர் ராமெஜெயத்தின் நண்பர். அவர்தான் ராணி காமிக்ஸ் இதழ் 8-இல் முதல் முதலாக அணைக்கட்டு கொலைகள் என்ற கதையை எழுத ஆரம்பித்தார்.
இதற்க்கு பிறகு....
திகில்கதை மன்னன் ராம்ஜி - எஸ்டேட் பேய்
சித்ரா மணாளன் - தொடர் கொலை
சித்ரா மணாளன் - விதவை ராணி
சித்ரா மணாளன் - அம்மா ஆசை இரவுகள் என்று எழுதினார்.
இதில் அம்மா ஆசை இரவுகள் கதை மட்டும் முழுவதுமாக வெளிவரவில்லை. ஏனென்றால் அதற்க்குள் எடிட்டர் ராமஜெயம் ராணி காமிக்சை விட்டு விலகி தனியாக சீக்ரெட் ஏஜெண்ட் ஜேம்ஸ் பாண்ட் காமிக்ஸ் ஆரம்பித்தார்.
அதில் இந்த அம்மா ஆசை இரவுகள் கதை முடிவடைந்தது.
அதே சமயம் ராணி காமிக்சில் பேய்க்கதை மன்னன் பி.டி.சாமி அவர்கள் ஒரு தொடர்கதை எழுத ஆரம்பித்தார்.
வாருங்கள் நண்பரே !
Deleteஅன்றைய காலகட்டத்தின் பல தகவல்களை நீங்கள் விரல் நுனியில் வைத்திருக்கிறீர்கள் !
எனக்கு அணைக்கட்டு கொலைகள் மற்றும் எஸ்ட்டேட் பேய் மட்டும்தான் ஞாபகம் இருக்கிறது ! எஸ்ட்டேட் பேயை எழுதியதும் சித்ரா மணாளன் என்றே நினைத்திருந்தேன்.
விஸ்வா, உங்களை புகழ்வதற்காக சொல்லவில்லை... உங்களின் அன்றாட அலுவல்களுக்கு மத்தியிலும் வலைப்பூவின் மூலம் தமிழ் காமிக்ஸ் கலாச்சாரத்தை ( உயிராக நேசித்து ) உங்களை போன்றவர்கள் காப்பது போற்றுதலுக்குரியது !
நன்றி
சாமானியன்
thanks for the compliment sir
Deleteப்ாாச்ப்ா
தங்களின் பால்யத்தின் நினைவோடைளையும் பதிவிடலாம் நண்பரே!.
ReplyDeleteநிச்சயமாய் நண்பரே, அநேகமாய் எனது அடுத்த பதிவு அதுவாகதான் இருக்கும் !
Delete