Monday, December 15, 2014

விடாது துரத்திய விஷ்ணுபுரம் !



பால்ய வயதில், ஒரு மழைக்கால மாலை நேரத்தில் எனக்கு பரிச்சயமான அட்டை  கிழிந்த  காமிக்ஸில் தொடங்கிய வாசிப்பு என்னை இன்னும் தொடர காரணம் என் பெற்றோர்கள் !

அந்த மாலையிலிருந்து நான் புத்தக புழுவாய் மாறிப்போனேன். வளர்ச்சிக்கு ஏற்ப என் வாசிப்பு ரசனையும் மாற, பள்ளிக்கூடத்துக்கு அடுத்ததாக நான் அதிகம் இருந்தது நூலகங்களில் ! பொது நூலகங்கள் தொடங்கி லெண்டிங் லைப்ரரி வரை ஊரின் அனைத்து நூலகங்களும் எனக்கு அத்துப்படி ! அன்று எனது பெற்றோர்கள் எந்த விதத்திலாவது வாசிப்புக்கு தடைபோட்டிருந்தார்களேயானால் என் வாழ்க்கையே மாறியிருக்கும்... நிச்சயமாக சாமானியனாய் உங்களை தொடர்ந்திருக்க முடியாது ! காமிக்ஸில் தொடங்கி கண்ணில் கண்ட நூல்களையெல்லாம் வாசிக்க தொடங்கிய காலம் வரை எனக்கு எந்த தடையும் போட்டதில்லை அவர்கள் !

 பத்தாம் வகுப்பு தேர்வின்போது நான் வாசித்துக்கொண்டிருந்தது பாலகுமாரனின் இரும்பு குதிரைகள் !

 நானூற்றி பதிமூன்று மதிப்பெண்கள் என ஞாபகம்...

" அந்த கன்றாவியை வாசிக்காமல் இருந்திருந்தா இன்னும் அதிகமா மார்க் எடுத்திருக்கலாம்ல... "

ஒரு சொந்தக்காரர் புலம்ப,

" பள்ளிக்கூட கன்றாவியை மட்டும் படிச்சிட்டு வாந்தியெடுத்து அப்படி ஒண்ணும் அதிகமா வாங்க வேண்டாம் ! "

என் அம்மா சட்டென கூறினார். என் கல்வி மதிப்பெண்களை பற்றி பேசுவதைவிட, நான் படிக்கும் புத்தகங்களை பற்றி மற்றவர்களிடம் பெருமையாக பேசுவார்கள் !

விகடன் பிரசுரம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் பிரான்சில் இருந்தேன். நான் வாங்கி அனுப்ப சொல்லியிருந்த புத்தகங்களில் எய்ட்ஸ் எரிமலையும் ஒன்று ! அந்த புத்தகத்தின் அட்டை தெரியாமல் பைண்ட் பண்ணி அனுப்பி வைத்தார் என் தந்தை ! நான் பிரான்சிலிருந்து குறிப்பிடும் புத்தகங்களுக்க்காக என் பெற்றோரும், குடும்ப நண்பர் தேத்தரவுராஜும் பட்டபாடுகள் சொல்லி மாளாது !

ரண்டாயிரத்தின் தொடக்கம்... இந்தியாவில் முழுவீச்சை அடைந்திருந்த நுகர்வோர்  கலாச்சாரம் எங்கள் ஊரிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருந்த காலகட்டம். எனது பால்யத்தின் அற்புதங்களில் ஒன்றான ரஹ்மானியா பேப்பர் ஸ்டோர்ஸ் எல்லாம் காணாமல் போக ஆரம்பித்த காலம் !
கி.ராஜநாராயணன்


" கொஞ்சம் புக்ஸ் வாங்கனும்... எங்க கிடைக்கும் ? "

பிறந்த ஊருக்கு அந்நியனாய் மாற தொடங்கியிருந்த நான் சொந்தக்காரர் ஒருவரிடம் கேட்டேன்.

" அட நம்ம பரட்டை டீக்கடையிலேயே விக்கிறானே ?! "

அவர் சட்டென கூற, குழம்பினேன் !

" வாங்க ! இப்பவே ஒரு நடை போயிட்டு வந்துடலாம்... பய பிஸினசை டெவலப் பண்ணிட்டான்ல... எல்லா பொஸ்த்தகமும் வச்சிருக்கான் ! "

பரட்டை கால ஓட்டத்துக்கு ஏற்ப தொழில் விருத்தி பண்ணிக்கொண்டார் போலிருக்கிறது என்ற மகிழ்ச்சியுடன் கிளம்பினேன் !

" பாத்தீங்களா ?! நான் சொன்னேன்ல... எது வேணுமோ வாங்கிக்குங்க ! "

கடையை நெருங்கிய சொந்தக்காரர் எனக்கு உதவிய மகிழ்ச்சியுடன் கூற...

 பரட்டை பிஸினஸ் டெவலப் பண்ணியிருந்தது உண்மைதான் ! வடை, டீ, போண்டாவுடன்  தமிழின் முன்னணி வார, மாத சஞ்சிரிகைகளும் கடையில் தொங்கின ! 

நம் சமூகத்தின் பெரும்பாலானவர்களுக்கு வார, மாத சஞ்சிரிகைகளுக்கும், புத்தகங்களுக்குமான வித்யாசம் தெரிவதில்லை ! இன்னும் பலருக்கு வாசித்தல் என்றாலே பள்ளி பாட புத்தகங்கள் மட்டும்தான் !

நமது சமூகத்தில் வாசிப்பு பழக்கம் உள்ளவன் வேலைவெட்டி இல்லாதவன் ! கிடைத்த காசையெல்லாம் வீணாய் செலவு செய்யும் பிழைக்கத்தெரியாதவன் ! புத்தகம் வாங்கி கொடுக்கும் நண்பனைவிட குவார்ட்டருக்கு செலவு செய்பவன் " நண்பேன்டா ! "

ஒன்றுக்கும் உதவாத அரசியல் அலும்புகளையும், அரைவேக்காட்டு சினிமா செய்திகளையும் தலைப்புகளாக்கி, இலக்கியத்தரமிக்க எழுத்தாளர்களின் பேட்டியில்கூட அவர்களின் படைப்புகளை பற்றி விரிவாக குறிப்பிடாத, சிலவேளைகளில் அவர்களின் பதில்களை நையாண்டி பேட்டியாக்கி பிரசுரிக்கும் ஊடங்களை கொண்ட சமூகத்தின் மக்கள் இப்படி இருப்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை !

ஒரு நாட்டின் நூலகங்களின் தரத்தை வைத்தே அந்த சமூகத்தின் வாசிப்பு தகுதியை கணித்துவிடலாம். மேலை நாடுகளில் நூலகர் பணிக்கெனவே மேல்நிலை படிப்புகள் உண்டு. அதையும் தாண்டி, பல்வேறு தேர்வுகளுக்கு பின்னரே அந்த பணியில் அமர முடியும். அங்கெல்லாம் நூலகர்கள் தங்கள் நாட்டின் இலக்கியம் தாண்டி உலக இலக்கியம் வரை அனைத்தையும் அறிந்து விரல் நுனியில் வைத்திருப்பார்கள்.

அங்கு குழந்தைகளுக்கு மிக இளம் வயதிலேயே அவரவர் நாட்டின் இலக்கியங்கள், குழந்தைகள் புரிந்துக்கொள்ளக்கூடிய வகையில் எளிமையான படக்கதைகளாய் அறிமுகம் செய்யப்படுகின்றன. முதலாம் வகுப்பு குழந்தைகள் கூட நூலகங்களுக்கு தொடர்ந்து அழைத்து செல்லப்படுகிறார்கள். கலை, இலக்கிய ரசனை அவர்களுக்கு பால்யத்திலிருந்தே பயிற்றுவிக்கப்படுகிறது.

னது பதிணென்பருவத்து நண்பர்களில் ஒருவன் கிரி. கலாட்டா கிரி என்றால் தான் ஊரிலுள்ளவர்களுக்கு புரியும். ஒரு பாட்டில் பீருக்கே சுருதி ஏறி கண்மண் தெரியாமல் கலாட்டாவில் இறங்கிவிடுவான் என்பதால் அந்த பெயர்.

லோக்கல் எம் எல் ஏவின் தொண்டரடிப்பொடியாகி, எப்படியோ  நூலகத்தில் கடைநிலை ஊழியனாக சேர்ந்தவனை சில வருடங்களுக்கு முன்னர் சந்திக்க நேர்ந்தது... தினத்தந்தியை கூட புரட்டியறியாத கிரி நூலகராக பதவி உயர்வு பெற்றிருந்தான் !

தோப்பில் முகம்மது மீரான்


ந்தியா வரும் ஒவ்வொரு முறையும் புத்தகங்கள் தேடி அலையும் போது ஏற்படும் அனுபவங்களையே ஒரு புத்தகமாக எழுதிவிடலாம் !

கி. ராஜநாராயணின் கோபல்லபுரத்து மக்கள் சாகித்ய அகாடமி விருது பெற்ற நேரம்...  அவர் புதுச்சேரியில் குடியேறியதை பத்திரிக்கைகள் பேசிக்கொண்டிருந்த காலம்...

புதுச்சேரியில்  அந்த புத்தகத்துக்காக அலைந்து கொண்டிருந்தேன் !

" ராஜநாராயணனா ? அவரு யாருங்க ?! "

ஹிக்கின்பாதம்ஸ் புக் ஸ்டாலில் விசாரித்தபோது வந்த கேள்வி !

பல வாரங்கள் விசாரித்து, சென்னையின் முட்டு சந்தின் முனையிலிருந்த ஒரு கடையிலிருந்து " கோபல்லபுரத்து மக்களை " கண்டுபிடித்து பிரான்ஸ் அனுப்பி வைத்தார் நண்பர் தேத்துரவு ராஜ் !

அதே புதுச்சேரியில் அருந்ததி ராயின் " Gods of small things" மற்றும் அப்துல் கலாமின் " wings of fire " ஆகிய ஆங்கில நூல்கள் மிக எளிதாக கிடைத்தன ! பிரதான நேரு வீதியின் பளபள ஷாப்பிங் மால்களின் முகப்பு கண்ணாடியில் பரத்தப்பட்டிருந்தன அந்த நூல்கள்.

பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளின் புத்தக கடைகளில் அவரவர் மொழி புத்தங்களை மட்டுமே காண முடியும் ( ஆங்கிலம் கற்பதற்கான பாட புத்தகங்கள் இதில் சேர்த்தி இல்லை ! ) இவ்வளவுக்கும் ஆங்கில தேசமான இங்கிலாந்து இவர்களுக்கு பக்கத்து வீடு ! பிரபலமான ஆங்கில நூல்களும் " Best  seller " வகைகளும் உடனுக்குடன் மொழிபெயர்க்கப்பட்டு விற்பனைக்கு வருமே தவிர, ஆங்கில மூலத்தை தேடி அலைய வேண்டும் !

நமக்கு புத்தகத்தினுள் என்ன இருக்கிறது என்பது முக்கியமில்லை ! அது ஆங்கிலத்தில் இருந்தால், கையில் கொண்டு போவதில் ஒரு பெருமை !  Gods of small things செம cantroversial என பெருமைப்பட்டுக்கொள்பவர்கள் தி. ஜானகி ராமனின் அம்மா வந்தாள் நாவலை மட்டும் ஏனோ ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் !  ( தி.ஜானகிராமனின் படைப்புகளை நோக்கி என்னை திருப்பியவர் சகோதரர் ஜோசப் விஜு அவர்கள். )

அந்த ஆங்கிலத்தையும் நம்மவர்கள் உருப்படியாக கற்பதில்லை என்பது இன்னும் கொடுமை !

ஜெ. கிருஷ்ணமூர்த்தியின் Freedom from the  known புத்தகம்...  நம்அன்றாட வாழ்வின் அனுபவங்களின் மூலம் அறிந்த மனப்பிம்பங்களிலிருந்து நாம் விடுபட்டால்தான் பிரபஞ்ச உண்மையை உணர முடியும் என்பது இந்த புத்தகத்தின் ஒரு வரி விளக்கம்.

இதன் தமிழ்மொழியாக்கம் ஒன்றினை படிக்க நேர்ந்தது. தலைப்பு  "உண்மையிலிருந்து விடுதலை " ! ஜே. கே சொல்ல நினைத்ததோ  Freedom from the  known ,  அதாவது அறிந்தவைகளிலிருந்து விடுதலை.  அறிந்தவைகளிலிருந்து மனம் விடுதலை அடைந்தால்தான் உண்மையை காண முடியும். தமிழில் எழுதியவர் புரிந்து கொண்டதோ உண்மையிலிருந்து விடுதலை ! அதாவது  Freedom from the truth !!!

ற்றொரு சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான். ராஜநாராயணன் கரிசல் மக்களின் வாழ்வை கண் முன் நிறுத்தினார் என்றால் இவர் நெல்லை முஸ்லீம் சமூகத்தின் வாழ்வியலை, மும்மதங்கள் கலந்த சமூகத்தின் குழப்பங்களை, அத்தனை கலகங்களுக்கிடையேயும் பாமரனிடம் பொங்கும் மனித நேயத்தை ரத்தமும் சதையுமாய் எழுத்தில் கொடுத்தவர்.

இவரது சாய்வு நாற்காலி, ஒரு கடலோர கிராமத்தின் கதை, கூனன் தோப்பு  போன்ற நாவல்களை எனக்காக தேடி ஒரு நண்பர் படையே அலைந்தது !

மீன்டும் அதே கி. ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் தேடி சென்னையில் அலைந்த போது , பழம்பெரும் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் கிடைத்த அனுபவம்....

புத்தக பிரிவில் நுனிநாக்கு ஆங்கில இளம் பெண்...

தமிழ் புத்தக அடுக்கில் வழக்கம் போலவே பாலகுமாரன் மட்டும் சிரித்து கொண்டிருந்தார்... கூடவே ராஜேஷ் குமார், ராஜேந்திர குமார்.... அவர்களை சுற்றி சமையல் கலை, ஜோதிடம், வாஸ்து.... நட்ட நடுவே,  " முப்பது நாளில் கோடீஸ்வரர் ஆவது எப்படி ? " மற்றும் " சுகமான தாம்பத்ய வாழ்வுக்கு சுவையான யோசனைகள் ! "

" கி. ராஜநாராயணன் எழுதிய  கோபல்ல கிராமம் இருக்கிறதா ? "

புதுச்சேரியின் ஹிக்கின் பாதம்ஸ் ஆசாமியாவது கி.ராஜநாராயணனை யார் என்றுதான் கேட்டார்...

" அதெல்லாம் இங்க கிடையாதுங்க ! "

நான் ஏதோ " அந்த மாதிரி " புத்தகம் கேட்டது போல் பதறினார் நுனிநாக்கு ஆங்கிலி !

சட்டென திரும்பிய என் கண்களில் பட்டது... " அந்த மாதிரி " நூல்களே தான் !  அவற்றில் ஒன்று காம சூத்திரம் முழுவதையும் காமிக்ஸ் வடிவில் கொண்ட புத்தகம் ! மிக உயர்ந்த தரத்திலான ஆங்கில புத்தகம் ! சத்தியமாய் சொல்கிறேன் நண்பர்களே ! நம்மவர்கள் " அந்த சுதந்திரத்துக்கு " உதாரணமாய் அடிக்கடி குறிப்பிடும் பிரான்ஸில் கூட அப்படிப்பட்ட புத்தகத்தை பார்த்ததில்லை நான் !
தி.ஜானகிராமன்


எனக்கு விடலைப்பருவ ஞாபகம்...

எங்கள் ஊரின் பேருந்து நிலையத்தினருகே இருந்த  அந்த பெட்டிக்கடையில் அனைத்து தினசரி, வார, மாத இதழ்களுடன் பருவகாலம் தொடங்கி அவ்வப்போது பெயர் மாறும் குயிலி, டிஸ்கோ, கிளாமர் போன்ற கில்மாக்களும் கிடைக்கும் ! அந்த கடைக்காரர் ஒரு உடல் ஊனமுற்ற இளைஞர். சக்கர நாற்காலியில் வரும் அவரை ஒரு நாள் போலீஸ்க்காரர்கள் இழுத்துபோனார்கள்.

" மாப்ள... ரகசியமா சரோஜாதேவி வித்திருக்கான்டா ! "  என்றான் முபாரக் !

ஏழை பாழைகளுக்காக சரோஜாதேவியை ஒளித்து விற்றால் குற்றம், மேல்தட்டு ஷாப்பிங் மால்களில் குழந்தைகள் எடுத்து புரட்டகூடிய தூரத்தில் காமசூத்திரம் விற்கலாம்  ! இது ஜனநாயகம் !

ப்போது அலைந்தது சரி, இன்றுதான் இணையத்தின் மூலம் எந்த நூலையும் வாங்கலாமே என கேட்கலாம்...

எனக்கு புத்தகங்களை நேரில் சென்று வாங்க வேண்டும் ! நான் தேடியது கிடைத்த பரவசத்துடன்  பார்த்து , அதன் அட்டையை தடவி, புது வாசனையை முகர்ந்து ...முன் அட்டை கிழிந்த புத்தகத்தை என்னால் வாசிக்க இயலாது !

என்னை சைக்கோ என்று வேண்டுமானாலும் திட்டிக்கொள்ளுங்கள் !

சில மாதங்களுக்கு முன்னர், இந்தியா கிளம்புவதற்கு முன்பாக ஆனந்த விகடனை புரட்டிக்கொண்டிருந்தேன்.  உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்பது போல விகடன் புத்தக கண்காட்சி முதல்முறையாக எனது ஊரில் ! அதுவும் நான் அங்கிருக்கும் சமயத்தில் ! பரவசமாக முகவரியை பத்திரப்படுத்திக்கொண்டேன்.

ஊர் வந்த நாள் முதலாய் அந்த முகவரி தேடி அலைகிறேன்,  கிடைக்கவில்லை ! அந்த தெரு என்னவோ எனக்கு நன்கு தெரிந்ததுதான் ! அங்கு கண்காட்சி நடக்கும் அறிகுறியே இல்லை !

என் பால்ய நண்பனிடம் கேட்டேன்...

" கண்காட்சினா திருவிழா கூட்டம்ன்னு நெனைச்சிட்டியா ? நீ திருந்தவே மாட்டடா ! வா ... "

இரண்டு பெரிய கடைக்களுக்கிடையே சொருகலாய் அந்த புத்தகக்கடை.  இருட்டில் அமர்ந்திருந்த கடைக்காரர் எங்களை கண்டதும் அவசரமாய் விளக்குகளை போட்டார் !

கடையின் நடுவே விகடன் பிரசுர புத்தகங்கள் !

நான் பாய்ந்து பாய்ந்து சேகரிப்பதை பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் ! பணம் செலுத்தும் வரை அனைத்தையும் வாங்குவேன் என்பதை நம்பவில்லை அவர் !

" லெண்டிங் லைப்ரரிக்கா சார் ? "

" ம்ம்ம்... கேக்குறாருல்ல... சொல்லுடா ! "

நக்கலாய் என் நண்பன் !

" இல்ல சார்... படிக்கத்தான் ! "

அவர் என்னை பார்த்ததின் அர்த்தம் மட்டும் இன்னும் விளங்கவில்லை !

சில நாட்கள் கழித்து மற்றொரு புத்தக கண்காட்சியின் விளம்பரம் கண்டேன்... இந்த முறை சற்றே பெரிய கடை.

தி.ஜானகிராமனின் புத்தகங்கள் இருக்கிறதா எனக்கேட்டேன்...

" நிச்சயமாய் இருக்கும் சார்... தோ அங்க பாருங்க ! "

 கை காட்டினார் கடை முதலாளி...

அவர் காட்டியது கண்காட்சி புத்தகங்கள். கிழக்கு பதிப்பக வெளியீடுகள். எனக்கு தெரிந்து தி.ஜானாகி ராமனின் படைப்புகளை கிழக்கு பதிப்பகம் வெளியிடவில்லை. ஆனாலும் ஜெயமோகனின் சில புத்தகங்கள், சாரு நிவேதிதா என அள்ளிக்கொண்டு வந்தேன்.

" கிடைச்சிதா சார் ? "

நான்கு இலக்கத்தில் நான் செலுத்திய தொகை கொடுத்த மகிழ்ச்சியில் கேட்டார் கடைக்காரர்.

" ஜானகிராமன் இல்லீங்களே... "

" சார் ! ரொம்ப கஸ்ட்டமர்ஸ் ஜானகிராமன் கேக்குறாங்க சார் ! வாங்கி போடுங்க சார் ! "

நான் முடிக்கும் முன்னரே குறுக்கிட்ட கடைப்பெண்னை பார்த்தாரே ஒரு பார்வை... நல்லவேலை அவரது நெற்றிக்கண் திறக்கவில்லை ! அந்த கோபத்துக்கு கடைப்பெண் மட்டுமல்லாது புதகங்களுடன் சேர்ந்து நானும் எரிந்திருப்பேன் !

 இவ்வளவு புலம்பினாலும் புத்தக கண்காட்சிகள், வலைப்பூ சமூகம் என வாசிப்பின் ரசனை நிறைய உயர்ந்திருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்றாலும் வாசிப்பில் நம் சமூகம் கடக்க வேண்டிய தூரம் இன்னும் மிக மிக அதிகம் !
ஜெயமோகன்


ன்னும் தலைப்பை தொடவில்லையே ?... விடாது துரத்திய விஷ்ணுபுரம்...

நீண்ட நாட்களாய் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலை வாங்க ஆவல். விகடன் பிரசுர கடைக்காரரிடம் கேட்டபோது வரவழைத்து தருகிறேன் என்றார். சில நாட்களில் இருப்பு இல்லை என கைவிரித்துவிட்டார். இரண்டாம் கடைக்காரரோ அப்படி ஒரு புத்தகமே இல்லை என சாதித்துவிட்டார் ! நான் சென்ற ஒரு மாத காலத்தில் சென்னை போன்ற நகரங்களுக்கு செல்ல நேரமில்லை !

குடும்ப நண்பர் ஒருவருடன் எனக்கு வீடு கட்டித்தந்த பொறியாளரின் வீட்டுக்கு சென்றிருந்தேன்....

வீட்டு ஹாலில் நான் தேடிய விஷ்ணுபுரம் !

" என் பொண்ணு படிப்பா சார் ! "

என்றவர், அவரது மகளை கூப்பிட்டார்.

இருபதிலுள்ள அந்தப்பெண் விஷ்ணுபுரம் படிப்பதை அறிந்து ஆச்சரியப்பட்டுக்கொண்டே எங்கு வாங்கினாள் என்று கேட்டேன். ஒரு இணைய தளத்தின் பெயரை குறிப்பிட்டது அந்தப்பெண். இன்றைய இளைய தலைமுறையினர் முகநூலுக்கு மட்டுமே லாயக்கு என நான் நினைத்துகொண்டிருந்ததை பொய்யாக்கினாள் அந்தப்பெண் !

ஊர் திரும்ப சில நாட்களே இருந்தன. இணையம் மூலம் வரவழைக்க நாட்கள் போதாது. அதுமட்டுமல்லாமல் எனது ஐரோப்பிய வங்கி அட்டையின் மூலம் இந்தியாவில் பணம் செலுத்த சில நடைமுறை சிக்கல்கள் !

சரி, இந்த முறையும் விஷ்ணுபுர தரிசணம் நமக்கு கிட்டாது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்...

ஊர் திரும்ப போவதை சொல்லிக்கொள்ள எனது ஆசான் திரு. மைக்கேல் ஜோசப் அவர்களை காண சென்றேன்...  ( நான் படித்த பள்ளியின் ஆதர்ஷம் அவர் ! அந்த நல்லாசிரியரை பற்றி சொல்ல நிறைய இருப்பதால் வேறொரு பதிவிடுகிறேன் !  )

எங்கள் பேச்சு வழக்கம் போலவே புத்தகங்கள், வாசிப்பு என ஓடியது.

" யோவ் ! இருய்யா... ஒரு புக் இருக்கு... உனக்கு பிடிக்குமான்னு தெரியல... ! "

சட்டென புத்தக அலமாரியிலிருந்து எடுத்து நீட்டினார்...

விஷ்ணுபுரம் ! 848 பக்க நாவல் !

" சார்... நான் இன்னும் ரெண்டு நாள்ல... "

" பரவாயில்லய்யா... எடுத்துக்கிட்டு போ ! நான் படிச்சிடேன்... இதைப்பத்தி நிறைய பேசனும்... முதல்ல படி ! "

இப்படியாக  விடாது துரத்தி என்னை வந்தடைந்தது விஷ்ணுபுரம் !

கல்லூரி ஒன்றில் தான் உரையாற்றியபோது ஒரு மாணவர் எழுந்து எல்லோரும் புரிந்து கொள்வது போல இலகுவான நாவலாக விஷ்ணுபுரத்தை ஏன் எழுதவில்லை என தன்னை கேட்டதற்காக எரிச்சல் அடைந்ததை தனது மற்றொரு நூலில் குறிப்பிட்டிருந்தார் ஜெயமோகன்...

தமிழின் சிறுவர் இலக்கியத்துக்காக மட்டுமே தன் வாழ்நாளை அர்ப்பணித்த வாண்டுமாமா என்ன ஆனார் எனத் தேடாமல், நடிகையின் நாபிச்சுழிக்கு டூப் போட்டது உண்மையா என கலந்துரையாடல் நடத்தும் ஊடங்களை கொண்ட சமூகத்து இளைஞனுக்கு விஷ்ணுபுர காலச்சக்கரம் எப்படி புரியும் ?!




இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

Friday, December 5, 2014

ஒரு ரோஜா மலர்ந்த நொடி !

ந்த முன்னறிவிப்புமின்றி ஒரு மாதத்துக்கும் மேலாக வலையுலகில் சஞ்சரிக்காத இந்த சாமானியனை வலைவீசி தேடிக்கொண்டிருக்கும் நட்புகளுக்கு...

மன்னிக்க வேண்டுகிறேன் !  அனைவரும் நலம். என் நலமறிய துடித்த நெஞ்சங்களின் நலனுக்காக நாளும் பிரார்த்திப்பேன் !

Life Is a Mystery to Be Lived

என்றார் ஓஷோ !

" கண்டவர் விண்டிலார் விண்டவர் கண்டிலார் " என்ற சித்தர் வாக்கும் ஆன்மீகத்துக்கு மட்டுமல்லாது வாழ்க்கை முழுவதுக்குமே பொருந்தும் என தோன்றுகிறது !

சில ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமிய சூபி வாழ்க்கை முறையில் ஈடுபாடு கொண்ட ஒருவரிடம் உரையாடிக்கொண்டிருந்த போது பேச்சு உலக அழிவு பற்றி திரும்பியது !

" உலகின் இறுதி நாளை பற்றி குறிப்பிடாத மதங்கள் இல்லை...விஞ்ஞான உலகமும் உலகின் முடிவை பற்றி ஏதேதோ கூறுகிறது.... எல்லாமே அதிர்ச்சியான செய்திகள்தான் ! மனித சுவடே மறைந்துவிடும் அதிர்ச்சி ! ஆனால் அந்த நாளை பற்றிய இயற்கையின்  ரகசியத்தை முன்னால் கண்டறிய முடியாது... இந்த பூமி அழிய நேரும் நாளில், அந்த இடத்தில் அச்சு அசலாய் வேறொரு பூமியை நிலை நிறுத்தும் சாத்தியத்தைகூட இறைவனால் நிகழ்த்த முடியும் " என கூறினார்  அவர்.

( " இறைவன் இல்லை என்று கூறவில்லை, இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் கூறுகிறேன் " கட்சியை சார்ந்தவர்கள் இறைவனுக்கு பதில் இயற்கை என மாற்றிக்கொள்ளுங்கள் ! )

அற்புதங்களை நம்பாத ஆத்திகர்கள் கிடையாது ! நாத்திகம் பேசும் நண்பர்கள் கூட விஞ்ஞான விதிகளுக்குள்  அடங்கும் " பெரு வெடிப்பு "  ( big bang ) நிகழ்வையும், உயிர் உண்டான முதல் தருணத்தையும் அறியும் போது அற்புதம் என்றே கூவுவார்கள் !! உயிரின் தோற்றத்தையும் உலகின் அழிவையும் விடுங்கள் , நமது அன்றாட வாழ்வில் கூட வாழ்க்கை நமக்காக மறைத்து வைத்திருக்கும் ரகசியங்கள் தான் எத்தனை எத்தனை ?!  அற்புதங்கள் தான் எவ்வளவு ?!


ஜென் தத்துவத்தில் காத்திருப்புக்கு அளவற்ற முக்கியத்துவம் உண்டு. நாம் எதற்காக காத்திருக்கிறோமோ அதை அடையும் தகுதியை ஏற்படுத்திக்கொள்ள இயற்கை நமக்குகொடுத்த அவகாசமே காத்திருப்பு ! நமக்கு அந்த தகுதி ஏற்படும் நேரத்தில் அந்த அற்புதம் நிகழும்... நாம் நினைத்தது கைக்கூடும் !



நாள் தோறும் தண்ணீர்விட்டு வளர்த்த ஒரு ரோஜா செடி மொட்டுவிட்டு, சட்டென ஒரு காலையில் மலரும் அந்த தருணத்தை கண்டு கொண்டால்... விழுந்து எழுந்து, கால் முட்டிகள் தேய பழகிய மிதிவண்டி நமக்கு வசமான அந்த நொடியை நினைவில் கண்டால்... அந்த அற்புதம் புரியும் !


அப்படி ஒரு அற்புதம்தான் எனக்கும் நிகழ்ந்து... என்னையே மறக்க வைத்தது ! என்னை மறந்ததால், எழுத்தையும் மறக்க நேர்ந்துவிட்டது !

இதனை சொல்ல நான் வெட்கப்படவில்லை...

வாழ்வியல் அனுபவங்களின் மூலம், முக்கியமாய் எனக்கு நேர்ந்த அனுபவங்களின் ஊடே உலகை பார்க்க முயல்பவன் நான் ! எனது அனுபவங்கள் உங்களுக்கு ஏதேனும் நற்செய்திகளை தருமானால் அதற்காக என் வாழ்வை திறந்த புத்தகமாக விரிக்க முயல்பவன் நான் !

அற்புதம் நிகழ்ந்ததை எழுதாதவரையில் என்னால் வேறு எதையும் எழுத முடியாத நிலை... அனைத்தையும் அப்படியே எழுத வேண்டிய நேரமும் கைக்கூடவில்லை என தோன்றுகிறது....

இழக்கக்கூடாதை இழந்து, இனி ஒரு வசந்தத்துக்கு இடமில்லை என இரும்புத்திரையிட்டுக்கொண்டு இரு வேறு பாதையில் சென்றுக்கொண்டிருந்த இரண்டு இதயங்கள்...

 ஏதோ ஒரு புள்ளியில் இருவரின் பாதைகளும் ஒன்றாகிய தருணத்தில், ஒருவர் வாழ்க்கை மற்றொருவருடையதை பிரதிபலிக்கும் ஆச்சரிய அதிர்ச்சியில் திளைத்த நொடியில் அந்த அற்புதம் நிகழ்ந்தது ! அந்த இதயங்களின் இரும்புத்திரை மறைந்து மீன்டும் ஒரு வசந்தம்  ! அவர்களுக்கான வசந்தத்தில் அவர்களுக்கென்றே ஒரு ரோஜா பூத்த தருணம் !


ஆனாலும் அவர்கள் கடக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகம்.... ஆனாலும் காத்திருப்பார்கள்...  ஏனென்றால் காத்திருப்பின் முக்கியத்துவம் அவர்களுக்கு தெரியும்.

இறைவனிடமோ அல்லது இயற்கையிடமோ.... அவர்களின் காத்திருப்பின் பலன்கிட்ட உங்கள் பிரார்த்தனைகளின் கொஞ்சத்தை ஒதுக்குங்களேன் !

( தனிப்பட்ட காரணங்களுக்காக, இந்த சிறு பதிவுக்கான உங்களின் பின்னூட்டங்களுக்கு நான் பதிலிடமாட்டேன். மன்னித்தருளுங்கள் தோழர், தோழியரே ! எனது அடுத்த பதிவு மிக விரைவில். முகம் அறியாத இந்த சாமானியனிடத்தில் நீங்கள் கொண்டுள்ள நட்புக்கும் அன்புக்கும் நன்றி என்ற ஒரு வார்த்தை மட்டும் போதாது. )



Wednesday, October 15, 2014

தேங்காய்க்குள்ள பாம் !


ஆதலினால் என ஆரம்பித்து கருத்து கந்தசாமியாய் எந்த கருத்தையும் முன்வைக்காமல் வாழ்க்கையில் நடந்த  சம்பவங்களை வெறும் சாட்சியாய், பகடி  பார்வை பார்க்க முயன்றதின் விளைவே இந்த பதிவு !  மிகைப்படுத்தப்பட்டதாக தோன்றினாலும், பெயர்கள் மாற்றப்பட்டிருந்தாலும் ( அடியேன் உட்பட ! )  இந்த  பதிவில் சம்பவங்கள் மற்றும் மனிதர்கள் உண்மையே !

கோவிலுக்கு  தேங்காய் வாங்க போகும் கவுண்டமனி தேங்காய் விலை அதிகமாக இருப்பதை அறிந்து கடுப்பாகி தேங்காய்க்குள் பாம் இருப்பதாக புரளியை கிளப்பிவிட்டுவிடுவார் ! அதை  தொடர்ந்து நடக்கும் களேபரங்களும், உசிலை மணியின் புலம்பலும் கொண்ட தமிழ் சினிமாவின்  " தேங்காய்க்குள்ள பாம்  " காமெடி காட்சியை ( படத்தின் பெயர் உதயகீதம்  ) அறியாதவர்கள் இருக்க முடியாது !

மேலோட்டமாக யோசித்தால் உண்மையில் இப்படியும் நடக்குமா என தோன்றும். ஆனால் விமான நிலையம் போன்ற பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் கொண்ட, " அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் " எனத்தோன்றும் இடங்களில் நடக்கும் சில சம்பவங்களை நிதானமாக யோசித்துப் பார்த்தால் தேங்காய் பாம் காமெடி நிஜ வாழ்க்கையிலும் சாத்தியமே என தோன்றுகிறது !



பிரான்ஸ் வந்து ஒரு வருடம் கழித்து முதல் முறையாக ஊர் திரும்புகிறேன்... வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்புபவர்கள் கோட் சூட்டில் தான் வந்திறங்க வேண்டும் என்ற எங்கள் ஊரின் எழுதாத விதியின் பொருட்டு நண்பன் ஒருவனுடன் பாரீஸ் மாநகரெங்கும் கோட் சூட்டுக்காக அலைந்தேன் ! ஆரம்பகால வடிவேலு போன்ற அன்றைய எனது உடல்வாகுக்கு ஐரோப்பிய அளவு கோட்டுகள் பொருந்தவில்லை ! ஒருவழியாக எதோ ஒரு கடையில் என் அளவு கிடைத்தது !

என் அளவு என்பதைவிட,

" இந்த கோட்டில் நீங்கள் அச்சுஅசல் ழாக் சிராக் போல இருக்குறீர்கள் முசியே ! "

என கடைக்காரி டன்கணக்கில் ஐஸ் வைத்து என் தலையில், சாரி உடம்பில் கட்டிவிட்டாள் என்றுதான் சொல்லவேண்டும் ! ( ழாக் சிராக் - அன்றைய பிரான்ஸின் ஜனாதிபதி ! உண்மையில் அந்த கோட் பெரியது !!  ழாக் சிராக்கின் படத்தையும் வடிவேலுவின் படத்தையும் பதிந்துள்ளேன்... அன்று அவள் சொன்னதில் நானும் உச்சி குளிர்ந்தேனே... என்னத்த சொல்ல ?! )


அம்மாவுக்கு, அப்பாவுக்கு, தம்பிக்கு, பாட்டிக்கு, சித்திகள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு , நண்பர்களுக்கு என பட்டியலிட்டு பரிசு பொருட்கள் வாங்கியதில் பெட்டியின் கணம் அதிகமாகிவிட்டது. அனுமதிக்கப்பட்ட நாற்பது கிலோவை தாண்டி இன்னும் அதிகமாக இருபது கிலோ !

பெட்டியை  எடை பார்க்கும்  இடத்திலேயே பிரச்சனை ஆரம்பம்...

இருபது கிலோவை கழித்தே ஆக வேண்டிய கட்டாயம்.... அப்படி செய்தால் ஒரு சித்திக்கு கொடுத்த பொருள் இன்னொரு சித்திக்கு இல்லாமல் பூகம்பம் வெடிக்கும் அபாயம் ( கூட்டுக்குடும்பம் சாமிகளா ! )

பரவாயில்லை... அவங்க முன்னாடி எடுத்துடு... அப்புறமா கைப்பையில வச்சிக்கலாம் ! "

பயண அனுபவமிக்க நண்பர்களின் யோசனை !

பயண நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது... கைப்பையிலோ ஏற்கனவே கணம் அதிகம்  ! இதில் எங்கே இன்னொரு இருபது கிலோவை திணிப்பது ?! முடிந்தமட்டும் திணித்து... கோட் பாக்கெட்டுகளிலெல்லாம் பொருட்களை நிரப்பிக்கொண்டு படுடென்சனாய், வழியனுப்ப வந்திருந்த தாத்தாவின் முன்னால் சட்டென குணிந்து அவரின் கால்களை பட்டென தொட்டு வணங்கினேன் !
 
" கோட்டும் சூட்டுமா விரைப்பா தாத்தாவோட காலுக்கு சல்யூட் வச்சீங்களே தம்பி... "

கூட வந்திருந்த சித்தப்பாவின் நண்பர் இன்றுவரை சொல்லிக்காட்டி கடுப்பேற்றிக்கொண்டிருக்கிறார் !

அடுத்ததாய் கைப்பயை சோதனையிடும் படலம்...

" கைத்துப்பாக்கி வைத்திருக்கிறீர்களா ?!.... "

ஸ்கேனரில் அமர்ந்திருந்த பெண் அதிகாரி சலனமற்ற முகத்துடன் கேட்க, எனக்கு தூக்கிவாரிப் போட்டது !

நொண்டிக்குதிரையாக இருந்தாலும் பரவாயில்லை... கொஞ்சம் கற்பனை குதிரையில் ஏறுங்கள் !

பங்க் கிராப்பும் வழியும் மீசையுமாய், கறுப்பாய்... ஒல்லியாய்... அவன் உருவத்துக்கு கொஞ்சமும் பொருந்தாத நான்கு பட்டன் பிளேசர் கோட் அணிந்த இளைஞன்... மேல் கீழ் பாக்கெட்டுகளிலெல்லாம் ஏதேதோ பொருட்களுடன் பிதுங்கிய கோட் ஏற்ற இறக்கமாக தொங்கிக்கொண்டிருக்கிறது ... கைப்பையில் துப்பாக்கி ! ...

" இ... இல்லையே ! "

" இருக்கிறதே !"

மானிட்டரை பார்த்தப்படி அவள் அழுத்திக் கூற, என் கை கால்கள் தந்தியடிக்க தொடங்கின !

" இ... இருக்க முடியாது... "

" உங்கள் கைப்பையில் ,இருக்கிறது முசியே... இதோ இங்கே ! "

வரும் ஆனால் வராது என்பது போல ஓடிக்கொண்டிருந்த உரையாடலை முடிக்க விரும்புபவள் போல கடுமையாய் கூறி, என் பையின் ஒரு பகுதியை அழுத்தி காட்டினாள் !

என் கண்கள் இருண்டு காதுகள் அடைக்க,

" படிச்சி பெரியாளா வருவான்னு பிரான்ஸ் அனுப்புனா...  பாவி... ஆயுதம் கடத்தி மாட்டிக்கிட்டானே... "

என் குடும்பத்தினரின் தமிழ் சினிமா புலம்பல் அசரீரியாய் காதுகளில் ஒலிக்க...

" இனி அவன் நம்ம வீட்டு வாசலை மிதிக்ககூடாது ஆமா ! "

சொம்பு தண்ணீரை குடித்துவிட்டு, துண்டை உதறியபடி குடும்ப " நாட்டாமை " தாத்தா தீர்ப்பு வாசிக்கும் காட்சி மனதை உலுக்க...

 காலம்,  சத்தியம் பண்ண குழந்தையை தாண்டும் பாக்யராஜ் பட கதாநாயகியின் கால்களைப்போல ஸ்லோ மோஸனில் வழுக்க, பையைத் திறந்தேன்...

" இதோ ! "

எனக்கு முன்னரே என் பையில் கைவிட்ட அதிகாரி அதை எடுத்து என் முகத்துக்கு நேராக  நீட்ட ...

அதுவரையிலும் ஓடிய பேதாஸ் சீன் மாறி பாரதிராஜா பட வெள்ளுடை தேவதைகள் என்னை சுற்றி லலலா பாட தொடங்கினார்கள் ! ( பிரான்ஸ்  ஏர்ப்போர்ட்டிலும் என் கற்பனையில் கிராமிய பெண்கள் தான் ! )



அனைவருக்கும் பரிசுப்பொருட்கள் வாங்கிய நான், முபாரக் பதிவில் குறிப்பிட்டிருந்த ராஜா ரெக்கார்டிங் செண்ட்டரின் மகா கெட்ட நண்பர்களுக்காக விதவிதமாய் சிகரெட் லைட்டர்கள் வாங்கியிருந்தேன்... அவற்றில் ஒன்று அச்சு அசலாய் துப்பாக்கியைப்போல !


நூறு அடிக்கு முன்னால் போலீஸைக் கண்டாலே காரணமில்லாமல் கால்கள் நடுங்கும் " ரொம்ம்ம்ப பயந்த " பையன் நான்  ! அப்படிப்பட்ட என்னிடம் துப்பாக்கி வைத்திருக்கிறாயா எனக்கேட்டதும் அனைத்தும் மறந்து தொலைந்ததினால் வந்த வினை !

" பாருங்கள் ! சொன்னேனில்லையா ?.... "

" முசியே என்ன செய்கிறீர்கள் ? இங்கு நெருப்புகொழுத்தக்கூடாது என்று தெரியாதா ?! சரி சரி ! நீங்கள் கொண்டு செல்லலாம்... "

அதீதமான ஆர்வக்கோளாறில் அந்த லைட்டரை பெண் அதிகாரியின் முகத்துக்கு நேராக கொளுத்திக்காட்ட, அடுத்த அலம்பல் !

பதற்றமாய் விலகி கூறியவளிடம் பெரிய கும்பிடாய் போட்டுவிட்டு,

" நீயே வைத்துக்கொள் "

என்றேன் !

" நோ ! நோ ! எனக்கு தேவையில்லை "

( கொடுக்காமலேயே எடுத்துக்கொள்பவர்கள் நம்மூர் அதிகாரிகள்தான் ! ) அவள் பதற, தலையை சுற்றாமல் பக்கத்திலிருந்த குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டேன் ! ( உண்மையாக நண்பர்களே ! )

இன்று நினைத்தாலும் " உஸ்ஸ்... அப்பாடா.... " என வடிவேலுவைப்போலவே தலையை உலுக்கிக் கொள்வேன் ! இந்த சம்பவம் நடந்தது இருபது வருடங்களுக்கு முன்னால் ! அதுவே பாதுகாப்பு கெடுபிடிகள் தூள் பறக்கும் இன்று நடந்தால்....

" ஒரு நிமிடம் முசியே... ! "

மெல்லிய சிரிப்புடன் பெண் அதிகாரி இண்ட்டர்போனை உசுப்பியிருப்பாள்... அடுத்த ஓரிரு நிமிடங்களில் செண்ட்ரல் போலீஸும் ராணுவமும் இணைந்த பாதுகாப்புக் குழுவான  Vigipirate காவலர்கள் பாய்ந்து வந்து என்னை குப்புறத்தள்ளி விலங்கு பூட்டியிருப்பார்கள் !

பி.கு ! : சில நாட்களுக்கு முன்னர் பணி சார்ந்த பயிற்சி வகுப்பு ஒன்றுக்காக கோட் அணியும் தேவை ஏற்பட்டது...

" வாவ் ! உனது உடலமைப்புக்கு பொருந்தும்படியான மாடலில், கலரில் மிக அழகாக இருக்கிறது ! "

என்னுடன் பணிபுரியும் பெண் சிலாகித்தாள் ! ( கோட்டை மட்டும்  தான் !! )

அனுபவமும் காலமும் உடை தேர்வு பற்றிய என் ரசணையை எவ்வளவோ மேம்படுத்தியிருந்தாலும்... மேற்கூறிய சம்பவத்திலிருந்து இன்றுவரை விமான பயணத்துக்கு ஜீன்ஸ் டீ சர்ட்தான் !


.........................................................................................


மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த சில மாதங்களுக்கு பிறகு... இந்தியாவிலிருந்து பிரான்ஸ் திரும்புகிறேன்... நள்ளிரவில் மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைக்கான  வரிசை  ... பாதுகாப்பு சோதனை பணியில் இருந்தது இந்திய எல்லைக்காவல் ராணுவத்தினர் ! ஆங்கிலமும் புரியாது ! ஹிந்தி... ஹிந்தி... ஹிந்தி மட்டுமே !

எனக்கு முன்னால் நின்றிருந்தவரும் என் ஊரை சேர்ந்தவர்தான் ! அவரிடம் பேசி பழகியது கிடையாது என்றாலும் பல முறை பார்த்த நபர். அவர் கொஞ்சம் " செல்லக்கிருக்கு "  என  பழகியவர்கள் கூற கேட்டிருக்கிறேன் !

" க்யா ?! "

அவரது கைப்பையிலிருந்து இரண்டு உரித்த தேங்காய்களை எடுத்து அவரது முகத்துக்கு நேராக  நீட்டி கேட்டார் ஒரு ஜவான் !

" உம்ம்ம்... தேங்கா ! "

" ... "

" கோக்கனெட்... நு..நுவா து கொக்கோ ! "

தனக்கு தெரிந்த தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு என அனைத்து மொழிகளிலும் சொல்ல முயன்றார் அந்த மனிதர் !

"  நை  ! நை !... "

மணிரத்னம் பட கதாபாத்திரத்தையும் விட சிக்கனமாக பேசி, இறுகிய முகத்துடன் தலையாட்டி அனுமதி மறுத்த ஜவான் பக்கத்திலிருந்த குப்பைத்தொட்டியில் தேங்காய்களை போடுமாறு சைகை காட்ட...

" மூதேவி !  தேங்காடா  !.... ம்ம்ம்.... இரு...இரு.... "

சுற்றும் முற்றும் பார்த்தபடி புலம்பியவர் சட்டென திரும்பி எங்களையெல்லாம் விலக்கிக்கொண்டு கொண்டு சற்று தள்ளியிருந்த ஒப்பனை அறை நோக்கி ஓடத்தொடங்கினார் !



வாக்கி டாக்கியை பாய்ந்து எடுத்த ஜவான் பாதுகாப்பு படையை விளிக்க, சூழ்நிலை பதற்றமடைய... எங்கள் அனைவரின் பார்வைகளும் ஆண்கள் ஒப்பனை அறையை நோக்கி...

சில நிமிடங்கள்...

இரண்டு தேங்காய்களையும் உடைத்து கைகளில் ஏந்தியபடி குணா பட கமலின் பரவச பார்வையுடன் வெளியே வந்தார் மனிதர் !


" இப்ப பாரு ! வெறும் தேங்காதாண்டான்னு சொன்னேன்ல ! "

" ஜாவ் ! ஜாவ் ! "

தலையில் அடித்துக்கொண்டார் எல்லைக்காவல்படை ஜவான் !

அனைத்து சோதனைகளும் முடிந்து விமான அழைப்பிற்காக காத்திருந்த என்னருகில் வந்து அமர்ந்தார் அந்த மனிதர் !

" தம்பிக்கும் நம்ம ஊருதானா ?... வீட்டு கொல்லையில காய்ச்சது ... ரெண்டு நாள் கறிக்கு உதவுமேன்னு கொண்டு வந்தா... குப்பையில் போடனுமாம்ல ?!...  ஊருல எல்லா பயலும் என்னை பைத்தியம்னு சொல்லிக்கிட்டு திரியறது தெரியும் தம்பி... ஆமா ! நாமெல்லாம் காரியக்கார பைத்தியம்... ! "

 எனது பதில்களையே எதிர்பார்க்காதவர் போல கையிலிருந்த தேங்காய்களை ஒருவித பிரியத்துடன் பார்த்தபடி பேசியவரை ஏறிட்டேன்...

ஒப்பனை அறையின் மேடை கல்லில் மோதிதான் உடைத்திருக்கவேண்டும்... அந்த பரபரப்பிலும் மிகச் சரியான பாதிகளாய், பிசிரின்றி உடைத்திருந்தார் மனிதர் !


" தேங்காய் பாம் " மற்றொரு பதிவிலும் வெடிக்கும் !




இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

Saturday, October 4, 2014

தமிழர் என்றோர் இனமுண்டு...

 இது " தாய் மண்ணே வணக்கம் " பதிவின் தொடர்ச்சி . ..

மது சமூகத்தின் சீரழிவுகள், குறைகள் பற்றியே கழுவி கழுவி ஊற்றிக்கொண்டிருக்கிறோமே, அந்த குவளையில் குடிக்க ஒன்றுமே இல்லையா ?! தமிழ் சமூகத்தில், தமிழனிடத்தில் பாராட்டத்தக்கது எதுவுமே கிடையாதா என்றெல்லாம் விமான பயணத்தின் போது தோன்றிய எண்ணங்களை பற்றி சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

சென்னை சர்வதேச விமான நிலையம்...

என் தந்தைக்கு மூட்டுவலி பிரச்சனை. ஏற்கனவே டெல்லி விமான நிலையத்தில் அதிக தூரம் நடந்ததினால் வலி அதிகமாகி தொடர்ந்து நடக்கவோ, ஒரே இடத்தில் நிற்கவோ முடியவில்லை. விமானச்சீட்டு பதிவின் போதே குறிப்பிட்டு சக்கரநாற்காலிக்கு கேட்டிருக்கலாம். செய்யவில்லை !

குடியேற்ற சோதனை அதிகாரியை நெருங்கி பாஸ்போர்ட்டுகளை ( பிரயாண உரிமைச்சீட்டு ! சரியா ?! ) கொடுத்தேன்.

" ஏர் இந்தியால வந்தீங்களா சார் ?! ஹூம் ! அவங்கமட்டும்தான் இதை மறப்பாங்க ! "

அவர் எங்கள் அனைவருக்குமாக ஐந்து நீண்ட படிவங்களை கொடுத்து நிரப்ப சொல்லிவிட்டார்  ! பொதுவாக அந்த படிவங்களை விமானத்திலேயே கொடுத்துவிடுவார்கள். அனைத்துவிபரங்களையும் முன்கூட்டியே நிரப்பி தயாராக கொண்டுவரலாம் !

 எனது விமான பயண வரலாற்றிலேயே முதல்முறையாக தாமதமின்றி சரியான நேரத்துக்கு வந்திறங்கிய தாய் மண்ணின் முதன்மை விமான நிறுவனத்தை ( இங்கு முதன்மை என்பது லாபத்தை குறிக்கும் சொல் அல்ல ! ) சிலாகித்துகொண்டிருந்ததால் அவர்கள் படிவங்களை கொடுக்க மறந்தது பெரிதாக படவில்லை !


நான் படிவங்களை நிரப்ப தொடங்க,

" அப்பா, அம்மா பிள்ளைகளை அங்க போய் உக்கார சொல்லுங்க சார் ! நீங்க மட்டும் இருந்தா போதும் ! "

நிற்க முடியாமல் தடுமாறும் என் தந்தையை பார்த்துவிட்டு அதிகாரி காட்டிய இடம் குடியுறிமை சோதனை மையத்துக்கு வெளியே தூரத்தில் இருந்தது. சட்டப்படி விசாவை சரிபார்க்காமல் அங்கிருந்து நகரக்கூடாது.

" பரவாயில்லை சார் ! வயசானவங்க... குழந்தைங்க.... "

எனது தயக்கத்தை படித்தவராய் பேசிய அதிகாரியின் குரல் மிக பரிச்சயமானது போல் தெரிய யோசித்தேன்... காரைக்காலில் எங்கள் குடும்ப மருத்துவரின் குரலை   ஒத்திருந்தது அவரின் குரல். அதைவிட ஆச்சரியம் இருவருக்கும் ஒரே பெயர் !

இதையெல்லாம் அவரிடம் குறிப்பிட்டபோது ஒரு நண்பரை போன்ற  சிரிப்புடன் கேட்டுக்கொண்டே தன் கடமையை செய்துமுடித்தார் !

பொதுவாக அனைத்து நாடுகளின், ஏன் இந்தியாவின் டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களில் கூட குடியுறிமை அதிகாரிகள் இறுகிய முகத்துடனேயே இருப்பார்கள். அதிகமாய் ஒரு வார்த்தை பேசினால் முறைப்பே பதிலாக கிடைக்கும் ! சலனமற்ற பார்வையுடன் இயந்திரம் போல சோதனைகளை முடித்து அனுப்புவார்கள் !

கிளம்புபோது அவரை திரும்பி பார்த்தேன். என்னுடன் வந்திருந்த பிரெஞ்சு மற்றும் ஆங்கில பயணிகளிடமும் அதே கனிவுடன் பேசிக்கொண்டிருந்தார் !

எனது பள்ளி பருவத்தின் என் சி சி கேம்பின் போது ஹிந்தி தெரியும் என்று பேச்சுவாக்கில் சொன்ன ஒரு நண்பனுக்கு தனக்கு வந்த சப்பாத்திகளில் ஒன்றை அனுப்பிய ஹவில்தாரும், ( பல தலைமுறைகளாக தமிழ்நாட்டிலேயே வசிக்கும் அந்த நண்பன் காய்ந்த சப்பாத்தியை விக்கலுடன் விழுங்கியபடி எங்கள் தட்டிலிருந்த் சோற்றை ஏக்கமாய் பார்த்தது வேறு விசயம் ! ) சந்தேகத்தின் பேரில் கைது செய்து ஜட்டியுடன் நிற்க வைத்த மும்பை போலீஸ் அதிகாரி தான் ஹிந்தியில் பேசியதும் உடைகளை திருப்பி கொடுத்தை சொல்லும் என் நண்பன் ஒருவனின் அப்பாவின் அனுபவமும் சட்டென ஞாபகம் வந்தது !

சென்னை திநகர் பகுதியின் பரபரப்பான சரவணபவன்...

ஒவ்வொரு மேசையின் முன்னாலும் இடம்பிடிக்க வரிசை...

" தோ ! சீக்கிரமா முடிச்சிடறேன் தம்பி ! "

அவருக்கு பின்னால் நின்ற என்னை கண்டதும் இலையிலிருப்பதை அவசரமாய் விழுங்கியபடி பேசிய பெரியவரை பார்த்து அதிசயித்தேன் !

" ஒண்ணும் அவசரமில்லைங்க ! நீங்க பொறுமையா சாப்பிடுங்க ! "

" இல்ல தம்பி நான் முடிச்சிட்டேன் ! நீங்க பசியோட நிக்கறீங்கள்ல... ! "

மனிதர் அவசரமாய் எழுந்துவிட்டார் ! இத்தனை பாடுகளும் ஒரு ஞான் வயிற்றுக்குத்தான் ! அவர் ஒன்றும் இலவசமாய் சாப்பிடவில்லை ! கொடுத்த காசுக்கு பொறுமையாய், அமைதியாய், அவர் விரும்பும் நேரம்வரை உண்டு முடிக்கும் முழு உரிமையும் அவருக்குண்டு !



ன்னதான் ஆயிரம் வேலைகளுடன் ஓடிக்கொண்டிருந்தாலும் கண்ணெதிரே ஒரு விபத்தினை கண்டுவிட்டால் சட்டென ஓடித்தூக்கும் குணம்... மழையோ, புயலோ, அரசு இயந்திரம் விழிக்கும் முன்பே ஜாதிமத பேதமின்றி வரிந்துக்கட்டிகொண்டு நிவாரணத்திலிறங்கும் சராசரி மனிதர்கள்... வடகோடியின் வெள்ள நிவாரணத்துக்குக்கூட தன்னால் இயன்றதை அள்ளிக்கொடுக்கும் நெஞ்சம்...

" யாரு பெத்த பிள்ளையோ... "

தீக்குளித்த, ஆசிட் வீசிய சம்பவங்கள் காதில் விழும்போதெல்லாம் அந்த முகம் அறியாத உயிர்களை தங்கள் பிள்ளைகளாய் எண்ணி விம்மும் மனங்கள் ...

" இனி அவன் பொண்டாட்டி புள்ளையோட கதி... "

கொடூர குற்றங்களுக்காக தூக்குத்தண்டனை  பெற்ற கைதியின் குடும்பத்தை நினைக்கும் குணம்...

" என்ன இருந்தாலும் அவரை இந்த நிலமையில பார்க்க முடியலப்பா ! "

தனக்கு பிடிக்காத கட்சியின் தலைவராக இருந்தால் கூட அவரின் வீழ்ச்சியை தாங்காமல் தவிப்பவர்கள் !

இதுதான், இந்த மனிதநேயம் தான், இரக்ககுணம் தான் தமிழனின் தலையாய குணம் என தோன்றுகிறது !

" போகட்டும் விடு ! இதுக்குமேல என்ன செய்ய சொல்ற ?! "

தன் வீட்டின் தலைவாசல் தாண்டி நுழைந்து தலைகுணிந்தவனின் குற்றம் மறந்து மன்னிக்கும் மனிதநேயம் ! ( தமிழனின் இந்த மனித நேயத்தை மறதியாய் நினைத்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அவன் வீட்டிலேறும் அரசியல்வாதிகளையும் அவன் மன்னிப்பது வேறுவிசயம் ! )

இந்தியாவெங்கும் பரவிவிட்ட மததுவேச அரசியல் தமிழ்நாட்டில்மட்டும் இன்னும் தடுமாறுவதன் காரணம் தமிழனின் மனிதநேயம்தான் ! 

" என்னாய்யா ? அங்கேருந்து இங்க வந்ததுக்கு இவ்ளோ ரூபாயா ?!... "

" சரி ! சரி ! உங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம் ! ஒரு பத்து ரூபா குறைச்சிக்குங்க ! "

" இல்ல... அதிகம் ! "

" என்னா சார்... எல்லாத்துக்கும் செலவு பண்ணிட்டு எங்ககிட்ட மட்டும் இவ்ளோ கறாரா... எதோ உன் பேரை சொல்லி... "

அவன் இறங்க, இவன் கொடுக்க....

நயந்த வார்த்தைகளுக்கு முன் சட்டென இளகும் அன்பினன் தமிழன் !  காலங்காலமாய் பெரிதாய் போர்களை சந்திக்காத மண்வாசி ! அன்பையும் அறத்தையும் போதித்து, அவமானம் நேர்ந்தால் துடைத்தெரிவதைவிட உயிர்த்துறப்பதை மேலாக கருதிய மரபில் வந்தவன் !  " யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்ற பண்பாட்டு பரம்பரை சேர்ந்தவன்  !  சக மாநிலத்தவனோ அல்லது அயல் நாட்டானோ எவராகினும் நேசக்கரம் நீட்டுபவன் !

என்னங்க நீங்க ? வெளிநாட்லயெல்லாம் வயசானவங்களுக்கு ஒரு வாசல், முடியாதவங்க  உக்கார தனி சீட்டு அது  இதுன்னு அவ்ளோ பண்ணிக்கிட்டிருக்கான்... "

உண்மைதான் ! ஆனால் மேலை நாடுகளிலெல்லாம் மனிதநேயம் சட்டத்தால் கட்டாயமாக்கப்பட்ட விசயம் ! என்னால் நடக்க முடியாது, என்னால் நிற்க முடியாது என்றெல்லாம் சட்டப்படி நிருபித்தால் சட்டம் காட்டும் உதவிகள் கிடைக்கும் ! அங்கெல்லாம் சகமனிதன் என்ற எண்ணத்தைவிட சட்டத்தை மதிக்கவேண்டும் என்ற நிலையிலிருந்து செய்யும் உதவிகளே அதிகம் ! ஆழ்ந்து யோசித்தால் தடுக்கி விழுந்தவனை அனிச்சையாய் ஓடித்தூக்குவதற்கும் அப்படி தூக்க வேண்டியது கட்டாயம் என்று சட்டம் சொல்கிறது என தூக்கிவிடுவதற்குமான வித்யாசம் புரியும் !

மேலை நாடுகளில் உறவுகள் கூட சட்டங்களுக்கு உட்பட்டவைதாம் ! எழுபதை தாண்டிய பெற்றோருக்கு கட்டாயம் முதியோர் இல்லங்கள்தான் ! வாழ்க்கை முழுவதையுமே சட்டத்துக்கு உள்ளே, வெளியே என பிரித்து பழகிய நிலை அது !

ஆனால் மேலை நாடுகளின் நுகர்வோர் கலாச்சார அரசியலில் சிக்கிய தமிழனின் இந்த தலையாய மனிதநேயம் மிக வேகமாக மறைந்துகொண்டு வருவதையும் இங்கே குறிப்பிட வேண்டும் !  மததுவேச அரசியல் சூழ்ச்சிக்கு நாமும் பலியாகிவிடுவோமோ என பயமாக உள்ளது !



மீன்டும் சென்னை விமான நிலையம் !

" ரூல்ஸ்படி நீங்க முன்னாடியே பதிஞ்சிருக்கனும் சார்... பரவாயில்லை ! முடியாமதானே கேக்கறீங்க ! "

வரும்போது தந்தையால் நடக்க முடியாமல் போனதை கூறி சக்கரநாற்காலி கேட்கவும் உடனடியாக ஏற்பாடு செய்தார் ஒரு அதிகாரி.

டெல்லியில் விமானத்திலிருந்து இறங்கியபோது ஒரு சிப்பந்தி சக்கரநாற்காலியுடன் காத்திருந்தார். சென்னை அதிகாரி டெல்லிக்குமாக சேர்த்து பதிந்திருந்தது அப்போதுதான் புரிந்தது !

ரும்போது ஏர் இந்தியா விமானம் காலதாமதமின்றி இறங்கியதை ஆச்சரியமாய் குறிப்பிட்டிருந்தேன்... அதைவிட ஆச்சரியமாய், அரைமணி நேரம் முன்னதாகவே பாரீஸ் விமானநிலையம் வந்தடைந்தோம் !

விமான வாயிலில் ஒரு இளம்பெண் அதிகாரி சக்கரநாற்காலில்கள் மற்றும் சிப்பந்திகளுடன் நின்றிருந்தாள்...

" உங்கள் தந்தையின் பெயர் முன்னரே பதிவு செய்யப்பட்டுள்ளதா ?... "

" இல்லை... ஆனால்... "

" மன்னிக்கவும் ! முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும்தான் உதவ முடியும் ! நடக்கவே முடியவில்லையென்றால் சொல்லுங்கள்... ஆம்புலன்ஸை கூப்பிடுகிறேன் ! "

குடியுறிமை மையம் அமைதியாய் இருந்தது...

கண்ணாடி தடுப்புக்கு பின்னாலிருந்து சலனமற்ற முகத்துடன் மாலை வணக்கம் கூறிய அதிகாரி எங்கள் பாஸ்போர்ட்டுகளை வாங்கினார்... அதே சலனமற்ற தொனியில் நன்றி கூறியபடி திருப்பிகொடுத்தார்.... எனக்கு பின்னால் வந்த பிரெஞ்சுக்காரர்களுக்கும் அதே தொனி !

அன்பு, காதல், காமம் அனைத்தையும் சட்டங்களுக்குள் அடைத்த ஐரோப்பிய யூனியன்  எங்களை மகிழ்வுடன் வரவேற்றது !




இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

Tuesday, September 16, 2014

தாய் மண்ணே வணக்கம் !

விமான பயணம் எனக்கு அலுப்பான விசயம் ! பெட்டிகளை எடை பார்ப்பதில் தொடங்கும் பரபரப்பு, சுங்க சோதனை, குடியேற்ற விதிமுறைகள் என அனைத்தையும் முடித்து விமானத்தில் ஏறி அமர்ந்த பிறகுதான் அடங்கும். அதுவும் கடந்த பத்து வருடங்களாக விமான பயணிகள் பாதுகாப்பு சோதனைகளில் படும் பாடு இருக்கிறதே... இந்த பாதுகாப்பு சோதனைகளின் போதான அலைகழிப்பில் பிள்ளை குட்டிகள், உடைமைகளை தவறவிடாது நிதானமாக இருப்பதற்காகவாவது தியானம் கற்றுக்கொள்ள வேண்டும் !

அனைத்தையும் முடித்து பிள்ளைகளோடு பிள்ளைகளின் பைகளையும் சேர்த்து சுமந்து  கொண்டு விமானத்தின் நுழைவாயிலை நெருங்க...

" தமிழாம்மா ? நல்லவிதமா போயிட்டு வாங்கம்மா ! "

 பின்னால் களைப்பாய் நடந்து வந்த என் அம்மாவை பார்த்து,  பயணச்சீட்டை சரிபார்த்து கொடுத்த தமிழ் அதிகாரி கூற,  " இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே ! " என்பதை அன்று அனுபவமாக உணர்ந்தேன் ! என் அம்மாவின் கண்களிலோ கண்ணீர் திரை ! பாரீஸ் சர்வதேச விமான நிலையத்தில் தமிழ் அலுவலர்கள் சகஜம் என்றாலும், பணி நேரத்தில் அவர்கள் தமிழில் பேசுவது அபூர்வம் !! இறுக்கமான தருணங்களின் போது தாய் மொழியில் கேட்கும் சில வார்த்தைகள்கூட மனதை நெகிழ்த்திவிடும் என்பதற்கு உதாரணமாக அமைந்துவிட்டது அந்த அன்பரின் வார்த்தைகள்.

விமானம் பறக்க தொடங்கியதும் சட்டென ஒரு விடுமுறை விடுதலையுணர்வு ! பணி கட்டாயங்கள், அன்றாட இயந்திரத்தனமான வேலைகள் இனி ஒரு மாதகாலத்துக்கு கிடையாது என்ற குதூகலம் ! முக்கியமாக என் தலைமை அதிகாரியின் பணி நிமித்தமான கைப்பேசி குறுஞ்செய்திகள் என்னை வந்தடைய முடியாத தூரத்துக்கு போகிறேன் என்ற குரூர மகிழ்ச்சி !

கடந்த ஒரு வருடத்தின் முக்கிய நிகழ்வுகள், நிறைவேறிய திட்டங்கள், கண்ணாமூச்சி காட்டும் பதவி உயர்வு என பலவற்றையும் மனம் அசைபோட, சட்டென வலைப்பூவின் பக்கம் தாவியது எண்ண ஓட்டம் ! வானில் பறந்துகொண்டிருந்ததாலோ என்னவோ என் ஞானக்கண் சற்று அதிகமாகவே திறந்துகொண்டது !

நமது சமூகத்தின் சீரழிவுகள், குறைகள் பற்றியே கழுவி கழுவி ஊற்றிக்கொண்டிருக்கிறோமே, அந்த குவளையில் குடிக்க ஒன்றுமே இல்லையா ?! தமிழ் சமூகத்தில், தமிழனிடத்தில் பாராட்டத்தக்கது எதுவுமே கிடையாதா என்றெல்லாம் எண்ணங்கள் !




வ்வொரு முறையும் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நான் பயணம் செய்த விமானம் தரையிறங்கும் போதே ஒரு விதமான ஆழ்ந்த நிம்மதி மனதில் பரவும் ! உலகின் மிக பாதுகாப்பான இடமாக தோன்றும் ! விமானத்திலிருந்து வெளியேறும் முதல் தருணத்தில் முகத்தில் வீசும், அனைவரும் அலுத்துக்கொள்ளும் சென்னையின் வெப்பம் எனக்கு மட்டும் கருவறை சூடாகப் படும் !

பதினேழு வயதில் பிரான்ஸ் வந்தேன். அன்றிலிருந்து எனக்கும் இந்தியாவுக்குமான பந்தம் ஓரிரு வருடங்களுக்கு ஒரு முறை வரும் ஒரு மாத காலகட்டம்தான். படிப்பு, வேலை, வாழ்க்கை என அனைத்தையுமே ஐரோப்பாவிற்கேற்ப அமைத்துக்கொண்டு குடியேறிய நாட்டுக்காக கட்டாய ராணுவ சேவையும் செய்து வீட்டுக்கு வெளியே பிரெஞ்சு குடிமகனாகவே வாழ்ந்து பழகி இருபது வருடங்களுக்கும் மேல் ஓடிவிட்டாலும் இன்றும் ஆழ்மனம் தமிழ்நாட்டையும், என் பூர்வீகமான புதுவையின் காரைக்காலையும்தான் சுற்றிவருகிறது ! வாய்ப்பு கிடைத்தால் மீன்டும் தாயகம் திரும்பிவிடலாம் என்ற எண்ணம் அவ்வப்போது எழாமலில்லை !

தாய் மண் என்பதற்கான வரைமுறைதான் என்ன ?

 ஒரு மனிதனுக்கு கருத்து தெரியும் காலகட்டம் தொடங்கி அவனின் பதிணென் பருவத்தின் முடிவுவரை எந்த தேசத்தில் வாழ்கிறானோ அதுவே அவனுக்கு தாய் மண் உணர்வாக நிலைக்கும் என தோன்றுகிறது. அதன் பிறகு அவன் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் தன் பால்யம் கழிந்த மண்ணையே தன் ஆதர்சமாக கொள்வான். காரணம் பதிணென் பருவம் மட்டுமே எந்த எதிர்பார்ப்புகளுமற்ற, வாழ்க்கையை, உலகை வியப்புடன் நோக்கும், உலகை கற்றுக்கொள்ள விழையும் பருவம். அதன் பிறகு படிப்புக்கேற்ற வேலை, காதல், திருமணம், குழந்தைகள் என பொறுப்புகள் ஏறி, வாழ்க்கை என்பது சேமித்தவற்றை தக்கவைத்துக்கொள்வதற்க்கான போராட்டமாக மட்டுமே மாறிவிடுகிறது ! இந்த விதி உலகின் அனைத்து தேசத்தவருக்குமே பொதுவானது.

பிரான்சில் பிறந்த எனது பிள்ளைகள் என் மூலம் இந்தியாவை தெரிந்துகொள்வார்கள், விடுமுறை காலங்களில் என்னுடன் இந்தியா வருவார்கள், தமிழ் கலாச்சாரத்தை அறிந்து கொள்வார்கள், அவர்களின் பூர்வீக தேசம் என கொண்டாடுவார்கள் என்றாலும் இந்தியா பற்றிய எனது மனநிலை அவர்களுக்கு இருக்காது. காரணம் அவர்கள் வளர்ந்த சூழல் வேறு. அவர்களின் பால்ய நினைவுகள் பிரெஞ்சு கல்வி முறை மற்றும் அந்த தேசத்தின் பள்ளி, கல்லூரிகளின் சூழ்நிலை சார்ந்ததாகவே அமையும்.

ஏதோ ஒரு காரணத்துக்காக விரும்பி வேறு தேசம் செல்பவர்கள் தொடங்கி தாய் மண்ணின் உரிமைகள் இழந்து அகதிகளாய் அந்நிய தேசம் வந்து வாழ்பவர்கள் வரை அனைவரின் இரண்டாம் தலைமுறைக்கும் இது பொருந்தும்.


காரைக்காலில், மாதாகோவில் வீதியில் நின்று ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்... இருபது வருடங்களுக்கு முன்னால் அமைதியான, நகரின் மிக நீளமான,  அழகான தெருக்களில் ஒன்று. இன்றைய நகர்மயமாக்கலின் அசுர அலைகளில் முழ்கி ஒழுங்கற்ற வாகன போக்குவரத்தின் இரைச்சல்களுடனும், ஜன நெரிசல்களுடனும் இரையெடுத்த பாம்பாய் பிதுங்கி நெளிந்திருந்தது !

" ஒரு ஜீவன் அழைத்தது... ஒரு ஜீவன் துடித்தது... "

பக்கத்திலிருந்த கடை ஒன்றிலிருந்து தவழ்ந்து வந்த பாடல் வரிகள் அனைத்து இரைச்சல்களையும் இல்லாமல் பண்ண, காலம் பின்னோக்கி பாய்ந்த அந்த ஒரு கணத்தில் நான் இருபது வருடங்களுக்கு முன்னாலிருந்த பழைய மாதாகோவில் வீதியில் சீருடை மாணவனாய் அலைந்து திரும்பினேன் ! இந்த மனோரசவாதம் தாய் மண்ணில் மட்டுமே சாத்தியம் !

ந்தியாவின் ஜாதி மத அரசியல் பற்றி ஒரு நண்பனிடம் பேசிக்கொண்டிருந்த போது, இந்தியாவில் ஜாதி மத அடையாளம் அவசியம் தேவை என அவன் கூற, அவற்றினால் ஏற்படும் குழு மனப்பான்மை பற்றியும், அதன் ஆபத்தையும் நான் பேச, வாதம் சூடுபிடித்தது...

" ஆமாடா ! ஒரு மாசம் வந்த நீ ஒற்றுமையை பற்றி பேசலாம்... இங்க வாழ்றவனுக்குத்தான் வலி தெரியும் ! "

அவன் விளையாட்டாகத்தான் கூறினான் என்றாலும் என்னுள் சட்டென ஒரு முள் தைத்து அந்நியமாக உணர்ந்தேன்.


ரண்டு நாட்களுக்கு முன்னர் பாரீஸ் மெட்ரோ ரயிலில் ஏறும் அவசரத்தில் ஒரு பிரெஞ்சு மூதாட்டியின் காலை தெரியாமல் மிதித்துவிட்டு, உடனடியாக மன்னிப்பும் கேட்டேன்.

" ஆமாம் ! பிரான்சில் எங்களை போன்ற உண்மையான பிரெஞ்சு மக்களுக்கு பேசும் உரிமை கூட போய்விட்டது ! "

" அம்மணி ! வார்த்தைகளை புரிந்து பேசுங்கள் ! பிரெஞ்சு குடிமகனுக்கான உரிமையிலும் சரி, மனித உரிமைகளிலும் சரி அவர் உங்களுக்கு குறைந்தவர் அல்ல ! "

அருகே நின்றிருந்த வேறொரு பிரெஞ்சு முதியவர் எனக்கு ஆதரவாய் அந்த பெண்மணியை கண்டித்தாலும், என்னுள் ஏதோ நொறுங்குவதாய் உணர்ந்தேன் !

மனதார நேசிக்கும் தாய் மண்ணில் சுற்றுலா வருபவர்களாக கருதப்பட்டு, பிழைக்கவந்த மண்ணில் இரண்டாம் குடிமக்களாய் நடத்தப்படுவதுதான் புலம் பெயர்ந்தவர்களின் தலையாய சோகம் !

சரி, இந்த பதிவின் ஆரம்பத்தில் நான் கேட்ட தமிழ் சமூகத்தின் நல்லவை... ? அடுத்த பதிவில் பார்ப்போம் !






இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

Saturday, August 2, 2014

விடுமுறை விண்ணப்பம் !

பிரான்சில் ஜூலை முதல் தேதியிலிருந்து கோடை விடுமுறை தொடங்கிவிட்டது  ! செப்டம்பர் முதல் தேதி வரை, இரண்டு மாதங்களுக்கு நாடே மந்தமாகிவிடும் !

" வருடத்தின் பத்து மாதங்களுக்கு மட்டும் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் ஒரே நாடு பிரான்ஸ் ! " என்றான் ஒரு அமெரிக்க பத்திரிக்கையாளன் ! உண்மைதான் !

தேசிய விழா நாளான ஜீலை 14 அன்று உலகின் மிக அழகிய சதுக்கம் என போற்றப்படும் சாம்ஸ் எலிசே சதுக்கத்தில் கொடியேற்றி ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டு சர்வதேச விருந்தினர்களுடன் மதிய உணவருந்திவிட்டு கோடை விடுமுறைக்கு பெட்டி படுக்கைளுடன் கிளம்பிவிடுவார் ஜனாதிபதி ! அவருடன் அரசு இயந்திரமும் இடம் மாறும் ! ( தமிழ்நாட்டின் கொடநாடு உங்களுக்கு ஞாபகம் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல ! )

பாரீஸ் மாநகரமே வெறிச்சோடி சுற்றுலா முனைகளில் மட்டுமே கூட்டம் அள்ளும் ! மற்ற இடங்களில் வணிகம் தொடங்கி மருத்துவசேவை வரை எங்கும் குறைந்தபட்ச ஊழியர்கள் மட்டுமே !

அவர்களுக்கு விடுமுறை தவிர்க்ககூடாத புனித யாத்திரை !

விடுமுறையை பற்றி பேசும் போதெல்லாம் என் பிரெஞ்சு தோழி கரோலினின் கண்கள் மின்னும் !

" நான் விடுமுறைகளின் பொழுதுகளில்தான் வளர்ந்தேன் ! "  என்பாள்

யக்கமும் இடம் பெயர்தலும் இயற்கையின் நியதி. உயிர்த்திருப்பதற்கான ஆதாரங்கள் ! ஆதிமனிதன் விடாது இடம்பெயர்ந்தான். கலாச்சாரங்கள் தோன்றி மொழிகள் வளமானதற்கு ஆதிமனிதர்களின் இடப்பெயர்வே காரணம்.

கலாச்சாரங்களும் மொழிகளும் ஸ்திரப்பட்டு நாடுகள் தோன்றிய பிறகு மனித வாழ்க்கையில் இடம் பெயர்தல்கள் குறைந்துவிட்டன ! போர்களின் பெயரிலும்,இன அழிப்பின் துயரிலும் இடம் பெயர்வது மரணிப்பதற்கு சமமானது !

ஆண்டு முழுவதும் வேலை வேலை என ஓடிவிட்டு விடுமுறையில் மட்டுமே சுதந்திரமாய் சுவாசிப்பதின் அருமையை உணரும் இன்றைய மனிதனின் நிலையை புரிந்துகொண்டால்  கரோலின் கூறியதின் அர்த்தம் புரியும். பணி நிமித்தமாய் பல நாடுகள் ஓடி பல்வேறு மனிதர்களை சந்திப்பதற்கும் எந்த கட்டுபாடுகளும் அற்ற விடுமுறை பொழுதுகளில் அந்நிய ஊர்களின், தேசங்களின் மனிதர்களுடன் பழகி அவர்களின் பண்பாடுகளை கற்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு !

சில ஆண்டுகளுக்கு முன்னர் பதிணெட்டு வயது பிரெஞ்சு இளைஞன் ஒருவன் பகுதிநேர ஊழியனாக என்னுடன் பணிபுரிந்தான். மது, போதை பொருட்கள் என வார‌ இறுதி முழுவதும் ஏதாவது ஒரு போதையில் திளைப்பான் ! சிக்கு தலையும் அழுக்கு உடையுமாக அவனை  காணும்போதெல்லாம் என் உயரதிகாரியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் என்றாலும் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாதபடி அவனின் வேலை சுத்தம் !

சட்டென ஒரு நாள் படிப்பையும் வேலையையும் ஒரு சேர உதறியவன் , பதிணெட்டு வயதில், அவனின் வயதையொத்த இளம் பெண்ணுடன்,  விமான டிக்கெட்டும் சில நூறு யூரோ டாலர்களுமாக இந்தியா போகிறேன் என கிளம்பினான்  !  ( கவனித்து வாசிக்கவும் ! அவர்கள் ஓடிப்போகவில்லை !! )



 ஆங்காங்கே தங்கி சிறுவேலைகள் செய்தபடி இமயம் முதல் குமரிவரை சுற்றிவிட்டு இரண்டு வருடங்களுக்கு பிறகு என்னை காண கோட்டும் டையுமாக வந்தான் !

" என்ன திருந்திவிட்டாய் போலிருக்கிறது ?! " என கேட்டேன் !

" திருந்தவில்லை ! தெளிந்துவிட்டேன் ! இரண்டு வருடங்கள் உலகம் சுற்றி படித்தேன் ! " என கண்ணடித்தான் !

மேலை நாட்டவர்கள் அப்படித்தான் ! அவர்களின் தெளிவு வேறொரு நிலை ! லாபமோ நட்டமோ அனுபவமே பிரதானம் ! பதிணென் பருவத்தின் இறுதிவரை கஞ்சா புகைத்துகொண்டிருப்பவன் இருபது, இருபத்துமூன்றாம் பிறந்த நாளன்று திடீர் ஞானம் பெற்றுவிடுவான் ! திருத்திய முடியும் டையுமாய் அவசரமாய் இறுதியாண்டு படிப்பை முடித்து, வேலை தேடி, கேர்ள் பிரெண்டுடன் தனிக்குடித்தனம் ஆரம்பித்துவிடுவான் !

சரி, அது போகட்டும் !

ரு பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை கொடைநாள் திருவிழாக்கள், சந்தனகூடு வைபவங்கள், மேரிமாதாவின் ஊர்வல தினங்கள் என திருவிழாக்களால் நிறைந்தன‌ நம் விடுமுறைகள் !

கோடை விடுமுறைகளில் நகரங்களிளிருந்து ஊர் திரும்பிய பிள்ளைகள் கொண்டு வந்த ஆச்சரியங்கள் பல ! அதற்கு மாற்றாக கிணற்று நீச்சல், போர்வெல் குளியல், திருவிழா கொண்டாட்டங்களின் தூங்காத ராவுகள், தாத்தா பாட்டி, அத்தை மாமாமார்களின் அன்பு உபசரிப்பு என நீங்காத பல நினைவுகளுடனும், திரும்பி வரும் ஏக்கத்துடனும் ஊர் திரும்பினார்கள் !

இன்று நம்மை வரவேற்க ஆட்களில்லாமல் கிராமங்கள் வெறிச்சொடிவிட்டன ! தாத்தா பாட்டிகள் தங்களுக்கு பரிச்சயமில்லாத பெருநகரங்களின் அடுக்குமாடி குடியிருப்புகளில் பிள்ளைகளால் அன்புடன் அடைத்துவைக்கப்பட்டிருக்கின்றனர் ! மிச்சமிருக்கும் சித்தப்பா மாமாக்களெல்லாம் ஆன்லைன் வர்த்தகம், டாப் அப் பிசினஸ் என, கூட ஒரு வேலை தேடி வருமானத்தை பெருக்க வருடம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் ! சித்திகளும் அத்தைகளும் சின்னதிரையின் முன்னால், சீரியல்களினுள் வாழ்க்கையை தொலைத்துவிட்டார்கள் !

பிள்ளைகளுக்கு அடுத்த ஆண்டு படிப்பின் மினி வருடமாக மாறிவிட்டன கோடை விடுமுறைகள் ! மிச்சமிருக்கும் நேரத்தை கழிக்க கார்ட்டூன் சானலும் வீடியோ கேமும் ! கிராமத்து விழாக்கள் கூட தங்கள் காலகட்டத்தை சுருக்கிகொண்டுவிட்டன ! பல காவல்தெய்வங்கள் புழுதிபடிந்து வெறிச்சோடிய முற்றத்தை நோக்கியபடி நிற்கின்றன, மக்களைதேடி !




நாளை  இந்தியா கிளம்புகிறேன்...

எங்களை போன்ற வெளிநாடுவாழ் மக்களுக்கு விடுமுறைக்கு தாய்நாடு வருவது என்பது ஒரு கல்லில் மாமரத்தையே சாய்க்கும் திறமைக்கு ஈடான சாகசம் ! ஒரு வருட சேமிப்பின் கணிசமான பகுதியை செலவு செய்யும் போது, அங்கிருக்கும் ஒரு மாத காலகட்டத்தில் சொந்த பந்தங்களின் குடும்ப விழாக்கள் தொடங்கி ஊர் திருவிழா வரை எல்லாவற்றுக்கும் இருக்கும்படி திட்டமிட்டு, மிச்ச நாட்களில் பங்காளி பகையாளிகளை சந்தித்து, அடுத்து ஊர் திரும்பும் வரை அங்கே கிடைக்காத பொருட்களை இங்கே சேகரிப்பதுவரை ஒன்றையும் தவறவிட்டுவிடக்கூடாது !




 ஒரு சித்தப்புவை பார்க்க மறந்தால் கூட " வெளிநாட்டு சம்பாத்தியம்ல... எங்களையெல்லாம் கண்ணுக்கு தெரியாதப்பா ! " என்ற அவப்பெயரை சுமக்க‌ நேர்ந்து ஒரு மாத விடுமுறை சந்தோசமும் சட்டென மறைந்துவிடும் !

சென்ற ஆண்டு இந்தியா வந்தபோது உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்றிருந்தேன் ! என்னை திரும்பி பார்த்து வா என்றவர்கள் மீன்டும் டிவி சீரியலில் லயித்துவிட்டார்கள் !

சரிதான் ! நான் அடுத்த ஆண்டு மீன்டும் வரலாம் ஆனால் அன்றைய டிவி சீரியல் வருமா ?!

நேற்று கேம் பாய், நின்டென்டோ, ப்ளே ஸ்டேசன் என வீடியோ கேம்கள் தொடங்கி மடி கணினி வரை அனைத்தையும் தேடி தேடி பெட்டிக்குள் அடைத்துகொண்டிருந்தான் என் பத்து வயது மகன் !

" இதெல்லாம் வேண்டாம் ! அங்கு நீ படிக்க  நிறைய இருக்கிறது ! " என்றேன்.

" எதை படிக்க‌ ?! " என கேட்டான்.

" நம் மண்ணை, மனிதர்களை ! " என்றேன்

புரிந்தும் புரியாமலும் தலையாட்டினான் ! அவன் நன்றாக படிக்க‌ வேண்டும் !


வலைப்பூ என் ஆத்மார்த்தமானதாக மாறிவிட்டதால் விடுமுறையிலும் தொடர்வேன் !


 இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.


Tuesday, July 22, 2014

ரெளத்திரம் பழகு !

மது சமூகத்தில் கோபத்தை பெரும்பாலும் பெருமையான தகுதியாகவே முன்னிறுத்துகிறோம் !

" சாருக்கு கோபம் வந்தா என்ன செய்வாருன்னு தெரியாது ! "

" எங்க வீட்டுக்காரரோட கோபத்துக்கு முன்னால யாராலும் நிக்க முடியாது ! "

" நான் கொஞ்சம் முன்கோபி ! "

கோபத்தில் ஒரு மனிதனின் உருவமே முற்றிலும் வேறுவிதமாக மாறிவிடுகிறது ! குரலை உயர்த்தி பேசுவதில் தொடங்கி, பொருட்களை வீசி எறிவது வரை, சில நேரம் எதிரிலிருப்பவரை அடித்துவிடுவது வரை கோபத்தின் வெளிப்பாடு பலவகை !

சரி, " ஆத்திரத்தில் அறிவிழத்தல் " உண்மைதானா ?

ஆழமாக யோசித்தால் இல்லை என்றே படுகிறது ! கோபமும் இடம், பொருள், ஏவல் அறிந்தே வெளிப்படும் என தோன்றுகிறது ! மேலிருந்து கீழாக பாயும் நீரை போன்றது கோபம் ! அது எப்போதும் நம்மைவிட வலிமையில் குறைதவரிடமே தோன்றுகிறது. இங்கு வலிமை என்று நான் குறிப்பிடுவது உடல் வலிமையை மட்டுமல்ல. அது பொருளாதாரமாக, சமூக ஏற்ற தாழ்வாக கூட இருக்கலாம்.


அரசியல்வாதி கூட கோபத்தில்கண் சிவக்கும்போது அருகில் நிற்கும் அப்பாவி தொண்டனை தான் அறைகிறார் ! அவரை திட்டமிட்டு தரக்குறைவாய் விமர்சிக்கும் மாற்றுகட்சி தலைவரிடம் கூட்டணிக்காக போகும்போது அரவணைத்து அகமகிழுகிறார் ! அதிக இடம் கிடைக்கவேண்டுமல்லவா ?!


ஒரு உதாரணம்...

தெருவில் நடந்து கொண்டிருக்கிறோம்... எங்கிருந்தோ ஓடி வந்த சிறிய நாய்க்குட்டி நமது விலை உயர்ந்த கால்சட்டையில் சிறுநீர் கழிக்க முற்படுகிறது... ஒரே எத்தாக எத்தி நாய்க்குட்டியை விரட்டிவிடுவோம்தானே ?

அந்த சிறிய நாய்க்குட்டியின் இடத்தில் நம் இடுப்புயரம் வளர்ந்த ஒரு முரட்டு நாயை கற்பனை செய்துகொள்ளுங்கள் !

கால் சதைக்கு வந்தது கால்சட்டையோடு போயிற்று என நினைத்து அந்த நாய் சிறுநீர்கழித்து செல்லும்வரை சப்தநாடியும் ஒடுங்கி நிற்போம் இல்லையா ?!

மற்றொரு உதாரணம் !

இன்று நமக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்க போகிறது... தலைமை அதிகாரியை சந்திக்க போகிறோம்... ஏற்கனவே தாமதமாகிவிட்டது ! நேர்த்தியான உடையில் வீட்டிலிருந்து அவசரமாய் வெளியேறும் நேரம்...

" பேனாவை மறந்துட்டீங்க... "

கொண்டுவருபவர் மனைவியோ, பிள்ளையோ, வேலைக்காரரோ யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் ! ஏதோ ஆர்வக்கோளாறில் உங்களிடம் நீட்டும் பேனாவை அவர் அவசரமாய் திறக்க, அதிலிருந்து தெரித்த மை நம் சட்டை முழுவதும் !

" அறிவிருக்கா உனக்கு... " என தொடங்கி ஆடிவிட மாட்டோம் ?!

இதுவே நம் உயரதிகாரியின் முன்னால்...

நமது வேலை உயர்வு உத்தரவில் கையெழுத்திடுவதற்கு அவர் பேனா மூடியை திறக்க, மை நம் சட்டையில் தெரித்துவிடுகிறது ! அவர் பதறுகிறார்...

" அட விடுங்க சார் ! துவைச்சிட்டா போயிடும்... அப்படி போகலேன்னாலும் என்னோட பதவி உயர்வு ஞாபகார்த்தமா இருந்துட்டு போகட்டுமே சார் ! எங்க சார் என்னோட சட்டையிலேயே பதவி உயர்வு கையெழுத்து போட்டுட்டார்ன்னு சொல்லிக்குவேன் ! "

எப்படி வழிவோம் ?!


வலிமையின் வெளிப்பாடாக‌ முன்னிறுத்தப்படும் கோபம் உண்மையில் பயத்தின்,இயலாமையின் வெளிப்பாடு !

சிறிய நாயாகட்டும், பெரிய நாயாகட்டும், அதிகாரி உதாரணமாகட்டும், அனைத்திலும் பயமே கோபத்தின் வெளிப்பாடாக அமைகிறது ! விலை உயர்ந்த கால்சட்டையை அசிங்கபடுத்திவிட்டதே என்ற இயலாமையில் நாய்க்குட்டியை எட்டி உதைத்த கோபம், பெரிய நாயை ஒன்றும் செய்ய முடியாது எனும் போது அடங்கி விடுகிறது ! வேலைக்கு தாமதமாகிவிடுமே என்ற கோபத்தில் கத்தும் நாம், இந்த மைக்காக கோபித்தால் அதிகாரி எங்கே நமது வேலை உயர்வுக்கு உலை வைத்துவிடுவாரோ என பம்மிவிடுகிறோம் !

நம் பேட்டையின் சண்டியர் தெருவில் வம்புக்கிழுத்தால் ஒதுங்கிவருவோம் !

" சாக்கடையில கல்லெறிஞ்சா நமக்குதான் சார் அசிங்கம் ! "

அறிவுரை வேறு !

ஆனால் நமது இயலாமையினால் அடங்கிய கோபம் நமக்கு அடங்கி நடப்பவர்கள்மீது இன்னும் ஆக்ரோசமாய் பாயும் !

" என்னா காபி இது.....?!  சூடும் இல்ல... சர்க்கரையும் இல்ல... ! "

மாலையில் வீடு திரும்பியதும் ஆசையாய் வரவேற்கும் அப்பாவி மனைவிமீது பாயும் ! நமது சமூகத்தில் பல ஆண்களின் கோபத்துக்கான இடிதாங்கிகளாக இருப்பது அப்பாவி மனைவிகள்தான் !

மதிப்பெண் குறைந்த பிள்ளைகளை இழுத்துபோட்டு அடிப்பதும் இலயாமைதான் !

" ஏன்டா.. உன்னை டாக்டராக்கனும்,கலெக்ட்டராக்கனும்ன்னு நான் ராத்திரி பகலா உழைக்கிறேன்... "

இதுதான் ! நாமே நமது சமூக அந்தஸ்த்துக்காக, அவர்களின் விருப்பம் அறியாமல் தீர்மானித்துக்கொண்டவை நடக்காமல் போய் விடுமோ என்ற பயம் ! இயலாமை !

கோபத்தைவிட மோசம் முன்கோபம் ! ஏதோ ஒன்று நடந்த பிறகு கோபப்படுவதையாவது நியாயப்படுத்த முயலலாம்... அதென்ன முன்கோபம் ?!

" சார் ரொம்ப முன்கோபி ! "

இதைவிட கேவலமான அறிமுகம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை ! தன் கோபத்தையே திறமையாய் முன்னிறுத்தும் அறியாமை !

ஒரு நிமிட கோப உணர்வால் நமது உடலும் மனதும் எவ்வளவு பாதிக்கப்படுகிறது தெரியுமா ? சட்டென உயரும் இரத்த அழுத்தத்தில் தொடங்கி, நரம்புத்தளர்ச்சிவரை கோபத்தினால் உண்டாகும் கேடுகளை பல பக்கங்களுக்கு எழுதலாம் !

கோபம் தவறென்றால் நம்மை சுற்றி நடக்கும் தவறுகளை பார்த்துக்கொண்டு சும்ம இருக்க முடியுமா ?

கோபம் இயலாமையின் வெளிப்பாடென்றால் தன் வாழ்க்கை முழுவதுமே கோபக்கார மனிதனாக உலாவி சமூக சீரழிவுகளை சினந்து கவிதைவடித்தானே பாரதி ? எமனையே எள்ளி நகையாடி, அந்த எமனின் வாகனமும் நெருங்க பயப்படும் யானையின் காலால் மாய்ந்த அவனின் வாழ்க்கை தவறா ?!

இல்லை தவறில்லை ! கோபம் தவறில்லை, அது நமது கட்டுக்குள் இருக்கும்வரை ! ஒருவர் மீதான கோபத்தை அதற்கு சம்மந்த்தமில்லாத  ! மற்றொருவரிடம் காட்டாதவரை !


அதைதான் " ரெளத்திரம் பழகு " என்றான் பாரதி !

சமூகத்தின் பெண்ணடிமை கொடுமையை கண்ட பாரதி அதனை தன்னால் மாற்ற முடியாது என்ற இயலாமையில் தன் மனைவியிடம் எரிந்து விழவில்லை ! மாறாய் அந்த வழக்கத்தை ஒழிக்க தானே முன்னுதாரணமாய் திகழ்ந்தான். மனைவி கணவனின் பின்னால் நடந்த அந்த காலகட்டத்தில் தன் மனைவியின் தோள் மீது கைபோட்டுவீதிகளில் உலா வந்தவன் பாரதி !

இரயில் பெட்டியிலிருந்து தன்னை வெளியே தள்ளிய வெள்ளை அதிகாரியை எட்டி உதைக்கவில்லை காந்தி ! அந்த கோபத்தை கனலாய் தன்னுள் தாங்கி இந்திய சுதந்திரத்துக்கே வழிவகுத்தார் !

" வெங்காயம் " என திட்டியதோடு நில்லாமல் சமூக ஏற்ற தாழ்வுகள் தொடங்கி மூட பழக்கங்கள் வரை அனைத்தையும் சாடியதால்தான் பெரியாரை பற்றி இன்றும் பேசுகிறோம் !

இதுதான் ரெளத்திரம் பழகுதல் ! கோபத்தை மடை மாற்றுதல் !!  நமக்கு கோபம் தரும் செயல்களை முதலில் நாம் செய்யாதிருக்க வேண்டும். நமக்கு முன்னாலிருப்பவர் யாராக இருந்தாலும் அவர் செய்தது தவரென்றால் நேரடியாக நிதானமாக சுட்டிக்காட்டும் நெஞ்சுரம் வேண்டும்.

குரல் உயர்த்தி பேசினால்தான் கோபத்தை தெரிவிக்கலாம் என்றில்லை. நம் கோபம் நியாயமெனில் நமது ஒரு பார்வையே எதிராளியை அடக்கிவிடும் !  ஆத்திரத்தில் நிலை தடுமாறி குழறி பேசும் வார்த்தைகளைவிட வலுவானது சட்டென தோன்றிவிடும் மெளனம் !

இல்லை ! என்ன முயற்சித்தாலும் என்னையும் அறியாமல் கோபத்தில் நிலைத்தடுமாறி விடுகிறேன் என்கிறீர்களா ?  சட்டென அங்கிருந்து நகர்ந்துவிடுங்கள் ! இரண்டு மூன்று முறை ஆழ மூச்சிழுத்து, முடிந்தால் ஒரு தம்ளர் தண்ணீர் குடித்து பாருங்கள் ! கோபம் காணாமல் போய்விடும் !  கோபத்துக்கான காரணத்தை,முடிந்தால் அந்த கோபத்தையே உற்று நோக்குங்கள் ! சட்டென ஒரு வெளிச்சம் பரவுவதை காண்பீர்கள் !

திரும்பி சென்று உங்கள் தரப்பை நிதானமாய் விளக்குங்கள் ! உங்கள் தரப்பின் காரண காரியங்களை விளக்குங்கள். பல தருணங்களில் கோபத்துக்கான காரணம் சரியான புரிதலின்மையே ! " இதனை செய் ! " என கட்டளையிடுவதைவிட ஏன் செய்ய வேண்டும் என விளக்கி கூறுங்கள். 

ஆத்திரத்துக்கான மற்றொரு முக்கிய காரணம் கெளரவம் ! இவன் சொல்லி நான் கேட்பதா, இவன் என்னை எதிர்ப்பதா என்பவை போன்ற போலி கெளரவங்கள் ! சிறியவரோ பெரியவரோ, ஆனோ பெண்ணோ, ஏழையோ பணக்காரனோ யாராக இருந்தாலும் அவர்களின் பேச்சிலிருக்கும் நியாயத்தை உணர்ந்தோமானாலும் பல நேரங்களில் கோபம் தவிர்க்கலாம்.

ஒரு நிமிடத்துக்கும் குறைந்த நேரத்துக்கு நீடிக்கும் கோபத்தில் தவறி விழும் வார்த்தைகள் பல வருட நட்பை, உன்னதமான உறவுகளை முறித்துவிடலாம். ஆத்திரத்தில் ஓங்கிய கையால் நாம் மிகவும் நேசித்த உயிரை கூட பலி கொடுத்துவிடக்கூடிய சூழ்நிலை அமைந்துவிடலாம்.

நம் கோபத்தினால் உறவு முறிந்த யாரையாவது இனி சந்திக்க நேர்ந்தால்... இன்முகத்துடன் முதல் வணக்கம் நம்முடையதாக இருக்கட்டும் !







இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

Saturday, July 5, 2014

தமிழன் என்று சொல்லடா... தமிழில் பேசடா !

து சில வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம்...

குடியுரிமை சான்றிதழ் விசயமாய் பாரீசிலுள்ள இந்திய தூதரகத்துக்கு சென்றிருந்தேன். வரவேற்பறையில் ஒரு வடஹிந்தியர் ! ( இ இல்லை, ஹி தான் ! ) வந்த விசயத்தை ஆங்கிலத்தில் சொன்னேன்...

" இங்கிலீஸ்  நஹீ... நஹீ... "

என கடுகடுத்தார் !

சரி, பாரீசிலுள்ள  தூதரகம், பிரெஞ்சு மொழியாவது பேசுவார் என்ற நினைப்பில் பிரெஞ்சில் கேட்டேன் ! அதற்கும் அதே நஹீ ! நஹீயை தொடர்ந்து அவர் பேசியது புரியவில்லையென்றாலும் தொனியை வைத்து கணித்ததில் ஹிந்தி பேசத்தெரியாத நீயெல்லாம் இந்தியனா என கரிந்திருப்பார் என தோன்றியது ! நானாவது பரவாயில்லை, எனக்கு பின்னால் நின்ற பிரெஞ்சு இளைஞனுக்கும் அதே நஹீ தான் ! அவன் தலையை சொரிந்துகொண்டு அவருக்கு பின்னால் ஒட்டியிருந்த "  Welcome to India  " போஸ்ட்டரை பார்த்தான் !

வடஹிந்தியர்கள் அப்படிதான் ! இந்தியாவில் ‍ஹிந்தி மொழியை போல இன்னும் ஒரு நாற்பத்து சொச்சம் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் இருப்பதெல்லாம் தெரியாது ! இந்தியா என்றால் அவர்களுக்கு ஹிந்தியா தான் ! வடநாட்டின் அரசியல் தலைவர்களோ தேர்தல் சமயத்தில் மட்டும் வணக்கம் என்ற தமிழ் வார்த்தையுடன் ,

" சாம்பார் தோசா ரொம்ப  புடிக்கும் "



போன்ற வரிகளை மனப்பாடம் செய்து தேர்தல் முடிவு வந்தவுடனேயே அவர்களின் வாக்குறுதிகளைப்போல தமிழ் வார்த்தைகளையும் மறந்துவிடுவார்கள் ! அப்படி ஒரு தீவிரமான " மொழிப்பற்று " அவர்களுக்கு !

உள்ளேயிருந்து ஒரு மலையாள சேட்டன் வந்ததால் நான் தப்பித்தேன் !

" ஆ... தமிளோ... இவிட வா ! "

மலையாள மக்களுக்கு தமிழில் பன்மை இருப்பதே தெரியாது !

வெளிநாட்டு இந்திய தூதரகங்களாகட்டும், உள்நாட்டின் விமான நிலையங்களாகட்டும் தமிழனுக்கு மொழி உதவி செய்வது அவனின் அண்டை மாநிலத்தவர்கள்தான் ! நீர் பங்கீட்டு அலும்பு, அணைக்கட்டு அடாவடி என எத்தனை பிரச்சனைகளிருந்தாலும் தென்னிந்தியன் என்ற முறையிலாவது உதவி விடுவார்கள் !

ஆனால் அவர்களின் மொழியை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் ! பல தலைமுறைகளுக்கு முன்னால் தமிழ்நாட்டில் குடியேறி தமிழர்களாகவே வாழும் மலையாளிகளும் தெலுங்கர்களும் இன்றளவிலும் அவர்களின் வீடுகளில் அவரவர் தாய் மொழியில் தான் பேசிக்கொள்கிறார்கள் ! இதில் விதிவிலக்கு தமிழர்கள் மட்டுமே ! ( நான் தமிழர்கள் என குறிப்பிடுவது தமிழ்நாட்டு தமிழர்களைதான் ! புலம்பெயர்ந்து உலகின் பல திசைகளிலும் பரவிவாழும் ஈழத்தமிழர்களின் மொழிப்பற்றும், தங்கள் குழந்தைகள் தமிழை மறந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் அவர்கள் தோற்றுவித்திருக்கும் தமிழ் கல்வி மையங்களும் பாராட்டுதலுக்கு உரியவை )

நமக்கு ஆங்கிலம் தெரியும் என காட்டிக்கொள்வதிலும், பேசுவதிலும் அலாதி பிரியம் ! இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும், தமிழர்களில் ‍ஹிந்தி தொடங்கி மற்ற இந்திய மொழிகளை கற்றவர்கள் கூட தங்களின் ஆங்கில அறிவை வெளிப்படுத்திக்கொள்ளும் அளவுக்கு இந்திய மொழிப்புலமையை வெளிக்காட்டுவதில்லை !

இந்த ஆங்கில மோகத்துக்கான காரணம் ஆங்கில காலனியாதிக்கத்தின் பாதிப்பு ! இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டபோது தமிழில் புழங்கிய, 

" கால் காசானாலும் கும்பினி காசு ! "

என்ற சொல்வழக்கை புரிந்துகொண்டால் நம் ஆங்கில மோகத்துக்கான காரணம் புரியும் !

ஆங்கிலம் பயின்று, ஆங்கிலேயர்களிடம்  அரசு வேலை செய்வதை மிக கெளரவமாக கருதிய காலம் அது ! சுதந்திரத்துக்கு பிறகு ஆங்கிலம் இணைப்பு மொழியாக தங்கிவிட்டாலும், மற்ற மொழிக்காரர்களைவிட தமிழர்களின் ஆங்கில மோகம் சற்று அதிகம்தான் !  ஆங்கிலத்தில் பேசுபவர்களைதான் மெத்த படித்தவர்கள் என்றே ஏற்றுக்கொள்கிறோம் ! " தமிழ் வாத்தியார்களை " விட " இங்கிலீஸ் சாருக்கு " நாம் கொடுக்கும் மரியாதையே தனி !

ஆங்கில மோகம் பற்றி தொடருவதற்கு முன்னால் ஒன்றை தெளிவுப்படுத்த வேண்டும் ! அது மொழிவெறிக்கும் மொழிப்பற்றுக்குமான வேறுபாடு.

பிரெஞ்சுகாரர்களின் மொழி வெறியை, முக்கியமாய் ஆங்கிலத்தை அவர்கள் எப்படி வெறுத்தார்கள் என்பது பற்றிய நகைச்சுவை கதை ஒன்று உண்டு.

இரு பிரெஞ்சுகாரர்கள் ஒரு நதியின் ஓரமாய் பேசிக்கொண்டிருக்கிறார்கள்...

அப்போது நதியில் தவறிவிழுந்துவிட்ட ஆங்கிலேயன் ஒருவன் "  help, help  "  என கத்துகிறான் !

அதனை கேட்ட ஒரு பிரெஞ்சுகாரன் மற்றொருவனிடம் கூறுகிறான்...

" இவன் help, help  என கத்தும் நேரத்தில் நீச்சல் கற்றுக்கொள்ளலாம் ! "

இதுதான் மொழிவெறி !


வேறு மொழி தெரிந்திருந்தாலும், எனது மொழி தெரியாதவரிடம்கூட‌ என் தாய் மொழியில் மட்டுமே பேசுவேன்,  தாய் மொழியிலுள்ள அனைத்து அந்நிய மொழி சொற்களையும் நீக்கியே தீர வேண்டும்  என  மல்லுக்கு  நிற்பது மொழி தீவிரவாதம் !

வேறு மொழிகளை கற்பதாலோ அல்லது அவற்றில் புலமை பெறுவதாலோ தாய் மொழி தேய்ந்துவிடாது ! இன்னும் சொல்லப்போனால் ஒரு மொழியின் இலக்கியங்கள் மற்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்படும்போதுதான் மொழிகள் செழிக்கின்றன !

அதே போல ஒவ்வொரு மொழியிலும் இருக்கும் அந்நிய மொழி வார்த்தைகள் ! சென்னை தமிழின் பல வார்த்தைகள் உருது மொழியிலிருந்து வந்தவை ! அவை எப்ப‌டி தமிழினுள் நுழைந்தன என ஆராய்ந்தால் நாம் கடந்துவந்த வரலாறே தெரியும் ! அதே போல புதுவை மாநில தமிழில் கலந்துள்ள பிரெஞ்சு வார்த்தைகள். இப்படி ஒவ்வொரு வட்டார வழக்கிலும் நிச்சயமாய் சில அந்நிய மொழி வார்த்தைகள் இருக்கும். இந்த வார்த்தைகளையெல்லாம் நீக்கினால்தான் தமிழ் தூய்மையாகும் என்பது ஒருவரின் ஆடையலங்காரங்களை அவிழ்க்க நினைப்பதற்கு சமமாகும் !

ஆங்கில, பிரெஞ்சு மொழி அகராதிகள் ஆண்டுதோறும் திருத்தப்படும்போது வழக்கில் இல்லாத வார்த்தைகள் நீக்கப்படும் அதே சமயத்தில் புதிதாய் சேர்ந்த அந்நிய மொழி வார்த்தைகளை அப்படியே எடுத்துக்கொள்வதும் உண்டு. அப்படி ஆங்கிலமும் பிரெஞ்சும் சுவீகரித்துக்கொண்ட தமிழ் வார்த்தை ஒன்று உண்டு. அது கட்டுமரம் ! கட்டுமரம் என்ற வார்த்தைக்கு அவர்கள் மொழியில் எதையும் கண்டுபிடிக்காமல்  " Catamaran " என்றே சேர்த்துக்கொண்டார்கள் !

இப்படி சில ஆண்டுகளுக்கு ஒரு முறை சேரும் ஒன்றிரண்டு வேற்றுமொழி வார்த்தைகளால் ,  " யாதும் ஊரே யாவரும் கேளிர் " எனப்பாடிய கணியன் பூங்குன்றனாரின் தமிழ் செத்துவிடாது !

பின்னர் எதுதான் பிரச்சனை ?

காலையில கடைத்தெருவுக்கு போகலாம் என்றிருந்தேன்... வேறு வேலை வந்துவிட்டது "

 என இயல்பாக பேச வேண்டியதை,

" மார்னிங் ஷாப்பிங் போலம்ன்னு திங்க் பண்றப்போ வேற என்கேஜ்மெண்ட் ! "

என தமிங்கிலீசில் உளறுவதுதான் பிரச்சனை !

வழக்கு தமிழ் இப்படி சித்திரவதை செய்யப்படுவதற்கும், இலக்கண தமிழ் அழிவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன.

முதல் காரணம் மொழியின் இலக்கணத்தை வழக்கு தமிழிலிருந்து பிரித்துவிட்டோம் ! பட்டிமன்றங்களிலும், கவிதை அரங்கங்களிலும் கைத்தட்டல் பெறுவதற்கு மட்டுமே இலக்கணம் பயன்படுகிறது ! ( இன்று அந்த பட்டிமன்றங்களிலும் நடிகைகளின் " தமிளே " கைதட்டல் பெறுகிறது ! )

குழந்தைகளுக்கு தாய் மொழியை முறையாய் கற்றுவிக்க வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கும் முன்னால் பெற்றோர்களையே சாரும். பிரான்சில் பிரெஞ்சு வார்த்தைகளை தவறாக உச்சரிக்கும் பால்ய வயது குழந்தைகளைகூட பெற்றோர்கள் கடுமையாக பேசி, திருத்துவதை கண்டிருக்கிறேன் ! நாமோ லகர, ளகர உச்சரிப்புகளை புதைத்தேவிட்டோம். " ழ " வும் வாழைப்பழ தோல் போல வழுக்குகிறது !  ன, ண குழப்பங்கள் ( எனக்கும் உண்டு ! !! ) தீர்ந்தபாடில்லை ! ஆனாலும் இது போன்ற எழுத்து பிழைகள் தொடங்கி வெண்பா வரை அனைத்துக்குமான தீர்வு தெரியாமல் தவிப்பதற்கு காரணம் போதிய இலக்கண அறிவில்லாதது ! நம்மில் எத்தனை பேர் நம் குழந்தைகளின் தமிழ் உச்சரிப்பை கவனிக்கின்றோம் ?  அம்மா, அப்பா என அழைக்கும் குழந்தைகளின் தலையில் குட்டி,  டாடி மம்மி என கூப்பிட வைக்கும் பெற்றோர்கள் எத்தனை பேர் ?

ப‌த்திரிக்கை தொடங்கி, வெள்ளித்திரை, சின்னத்திரை என அத்தனை ஊடங்கங்களும் தமிழை சகட்டுமேனிக்கு துவம்சம் செய்கின்றன ! தமிழனுடன் சேர்ந்து அவன் மொழியும் ஏமாளியாகிவிட்டது !


வெகுஜன பத்திரிக்கைகள் நினைத்தால் குறுக்கெழுத்து போட்டி, வார்த்தை விளையாட்டு என மொழி அறிவை வளர்க்க எவ்வளவோ செய்யலாம். ஆனால்  நடிகைகளின் நாபிச்சுழி படங்கள் ஆக்ரமித்த பக்கங்களின் மிஞ்சிய இடங்களில் சினிமா கிசுகிசு ! இதில் குறுக்கெழுத்து போட்டிக்கும் சுருக்கெழுத்து போட்டிக்கும் எங்கே இடம் ?

வெள்ளித்திரையின் தமிழ் சேவையை பற்றி... வேண்டாம் !  சின்னத்திரையிலோ நடிகைகள்,

 " கொன்ச்சம் கொன்ச்சம் டாமில் பேசுது ! "

வெளிமாநில நடிகைகளை விடுங்கள், தமிழ் தெரியாத காரணத்தால் அவர்களுக்கு தெரிந்த ஆங்கில அறிவில் ( வயதை கேட்டால்தான் " இன்னும் பத்தாம் கிளாஸே முடிக்கல மச்சான் !" என போடுகிறார்களே ! ) பேசுகிறார்கள், மன்னித்துவிடலாம் !

அதே வெளிமாநில நடிகைகள், அவர்களின் சொந்த மாநில பேட்டிகளில் அவரவர் தாய் மொழியில்தான் பேசுகிறார்கள். நமது செந்தமிழ்நாட்டு நடிகைகளோ...

" எல்லார்க்கும் வண்க்கம், ஆக்ச்சுவ‌லீ... "

 என ஆரம்பித்துவிடுகிறார்கள் ! இது தமிழ் பேசுபவர்கள் பார்க்கும் நிகழ்ச்சி என நிகழ்ச்சி நடத்துபவர் கூறலாம்தான்  ! ஆனால் நடிகை ஆங்கிலத்தில் ஆரம்பித்தால் நிகழ்ச்சி தொகுப்பாளரும் தனது ஆங்கில அறிவை வெளிப்படுத்தும் கோதாவில் இறங்கிவிடுகிறார் !

ஒரு மொழியின் பண்டைய, சமகால இலக்கியங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் பொறுப்பு அதன் முன்னனி எழுத்தாளர்களுக்கும் உண்டு. ஆனால் தமிழின் பல முன்னனி, முற்போக்கு எழுத்தாளர்களின் பாணியே வேறு ! ஷேக்ஸ்பியர் தொடங்கி நீட்ஷே, விக்டர் ‍ஹூயூகோ பற்றியெல்லாம் பேசுவார்கள், லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களையெல்லாம் சிலாகிப்பார்கள். ஆனால் தமிழின் படைப்புகளை பற்றி, முக்கியமாய் அவர்களின் சமகால சக எழுத்தாளர்களைப்பற்றி மறந்தும் மூச்சுவிடமாட்டார்கள் !

இப்படி, இன்னும் நிறைய சொல்லலாம் தமிழ் மெல்ல சாவதற்கான காரணங்களை !

ஒரு சமூகத்தின் உயிரே அதன் மொழிதான். அந்த மொழியை சார்ந்தே அதன் கலையும் கலாச்சாரமும் ! தாய் மொழியை மறைக்க நினைப்பது தன் தகப்பனை மறைப்பதற்கு சமம் ! சங்கம் வைத்தெல்லாம் தமிழ் வளர்க்க வேண்டாம், தமிழை தமிழாக பேசினாலே போதும் ! தமிழ் தானாக வளர்ந்துவிடும் !






இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.


Monday, June 23, 2014

இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன ?




ஸ்த்ரேலியாவுல‌ இருக்கற சொக்கன் சுப்ரமணியன் அபுதாபியில இருக்கற நம்ம கில்லர்ஜீயை உசுப்பிவிட்டு அவரு, பிரான்ஸ் ஈபில் டவருக்கு கீழ தேமேன்னு நின்னு எதையோ கிறுக்கிக்கிட்டிருந்த‌  என்னை இதுல மாட்டி, சாரி அவர்  பாஷையில கோர்த்துவிட்டு...நியாயமாரே... ஏன் ? ஏன்ங்கறேன் ?!... சென்னை விமான நிலையத்துல ஒரு நாளைக்கு சந்திக்காமலா போயிடுவோம் ? அப்ப நாட்டாமையை சொம்போட சேர்த்து தூக்கிடுவோம்ல !


மேட்டர் ஒண்ணுமில்ல மக்களே ! ஒரு பத்து கேள்விகளுக்கு நான் பதில் சொல்லனுமாம்... யான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்ன்னு நான் ஒரு பத்துபேரை இதுல கோர்த்துவேற‌ விடனும் ! சரி, சரி, ஆனந்த விகடன்லேருந்து பேட்டி காண விரும்பற அளவுக்கு நாம ஒண்ணும் பவர் ஸ்டார் கிடையாது ! கில்லர்ஜீ பேட்டியே போதும் !


படிக்க சகிக்காதுதான் என்றாலும் அன்பர்கள் இறுதிவரை படிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்... இறுதியில் அவர்களின் பெயர் பட்டியலில் இருக்ககூடிய வாய்ப்பு உள்ளதால் !




1. உங்களுடைய நூறாவது பிறந்த நாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள் ?
குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுடன் ( வளைப்பூ நண்பர்களுக்கு நிச்சயம் முன்னுரிமை  உண்டு ! ).., முடிந்தால் ஓடிப்பிடித்து விளையாடி கொண்டாட ஆசை !


2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் ?


கற்றுக்கொள்வதற்கு முன்னால் இந்த வாழ்க்கை ஓட்டம் எனக்கு என்ன கற்றுத்தர முயற்சித்துகொண்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன் !


3. கடைசியாக சிரித்தது எப்போது ? எதற்காக ?


இந்த பதிவை எழுத தொடங்குவதற்கு முன்னால்...


நண்பர் கில்லர்ஜி  இந்த சுழற்சி பதிவில் என்னை சேர்த்திருப்பதாக அவர் எனக்கு அனுப்பிய கமெண்ட்டை  படித்தபோது  ! அதை அப்படியே கீழே கொடுத்துள்ளேன்...


" நண்பா, உங்களை ஒருமேட்டரில் கோர்த்து விட்டு இருக்கிறேன்... "


அப்பாடா... மேட்டர், கோர்த்துவிட்டிருக்கிறேன்னுல்லாம் நீங்க பீடிகை போட்டதை படித்ததும் ஏதோ மோகனாவின் மோகினியாட்டம், மோகனின் மோகமுள் மாதிரி எதுகை மோனையா சாமானியனின் சல்லாபங்கள்ன்னு பதிவு போட்டுட்டீங்களோன்னு பயந்துட்டேன் ஜீ !


குட்டி, புட்டி மாதிரி மேட்டர் ( இது தமிழ் வார்த்தை இல்லன்னாலும் ! ), கோர்த்துவிடறது வார்த்தைக்கெல்லாம் எத்தனை அர்த்தமிருக்கு பாருங்க !


4. 24 மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன ?


இனிமேல் பழங்கால வாழ்க்கைக்கு திரும்புவோம் என மக்களுக்கு பிரச்சாரம் செய்வதோடு தாமஸ் ஆல்வா எடிசன் என்றொரு மனிதரை அனைவரும் உடனடியாக மறக்க வேண்டும் என கோரிக்கை வைப்பேன் !


( பதில் உபயம் : கில்லர்ஜீ. ( இந்த பதிலுக்கான அனைத்து உலக உரிமைகளும் அவருக்கே சொந்தமானது ! )


இத்துடன் நான் சேர்க்க நினைப்பது...


மின்சாரம் இல்லாத காரணத்தால் பிளேடு, ஜல்லியடி பதிவுகளை வளைப்பூவில் பிரசுரிக்க முடியாத வலைப்பூ நண்பர்களை கூட்டி சங்கம் ஆரம்பித்து இயற்கை விவசாயம் செய்வேன்  ! ஒருவர் வெட்டிய பாத்தியை பற்றி மற்றொருவர் " லைக் " போடும் வசதியுடன் !


5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் நீங்கள் அவர்களுக்கு சொல்ல விரும்புவது என்ன ?


உங்களின் பிரச்சனைகள் அனைத்தையும் நான்கு சுவற்றுக்குள், உங்களுக்குள் பேசி தீர்த்து கொள்ளுங்கள். ஒரு ஜோடியின் வாழ்க்கையில் மூக்கை நுழைக்கும் மூன்றாவது நபரின் பெயர்தான் பிரச்சனை ! உங்கள் பிரச்சனை மற்றவர்களுக்கு பொழுதுபோக்கு செய்தி மட்டுமே என்பதை மறந்துவிடாதீர்கள்.


பெண்ணியம், ஆணியம் போன்ற பட்டிமன்ற தலைப்புகளையெல்லாம் வாழ்க்கைக்குள் நுழைத்து குழம்பாதீர்கள் ! இல்லறம் என்பது விட்டுகொடுத்தல்... ஈகோ அறுத்தல் !


6. உலகத்தில் உள்ள பிரச்சனைகளில் ஒன்றை உங்களால் தீர்க்க முடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள் ?


பட்டினி சாவு !


" தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் " என முழங்கிய பாரதியின் புத்த‌கங்கள் அலமாரியை அலங்கரிக்க, ஊர் மொத்தமும் எலும்பும் தோலுமாய் சிறுக சிறுக செத்துக்கொண்டிருக்கும் ஆப்ரிக்க பஞ்ச காட்சியை தொலைக்காட்சியில் பார்த்து உச் கொட்டியபடி பிட்சா, பர்கரை விழுங்கி, கோக் குடித்து ஏப்பம் விடும் நாகரீக மனித குணம் ... மானுட அவமானம் !


7. நீங்கள் யாரிடம் அட்வவைஸ் கேட்பீர்கள் ?

பிரச்சனையை பொறுத்து நெருங்கியவர்களிடம் கலந்தாலோசித்தாலும் இறுதி முடிவு மிஸ்ட்டர் மனசாட்சி தீர்மானிப்பதுதான் !


8. உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள் ?


தவறானவர்களால்தான் " தவறான " தகவலை பரப்ப முடியும் ! என்னை பற்றி எனக்கும், என்னை நேசிப்பவர்களுக்கும் நன்றாகவே தெரியும் ! ஆகையால்... மெளனம் என்னும் மிக வலிமையான ஆயுதத்தை பயன்படுத்துவேன் !


9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள் ?


... அந்த இழப்பின் வலியை அனுபவித்து, வடுவை சுமப்பவன் என்ற முறையில், வாழும் காலம் முழுவதும் இணந்து வருவாள் என்ற நம்பிக்கையுடன் கைப்பிடித்தவளை வாழ்வின் ஆரம்பத்திலேயே இழக்கும் நிலை என் நண்பர்களுக்கு மட்டுமல்ல, யாருக்கும் வரவேண்டாம் என இறைவனை பிரார்த்தித்துகொண்டு...


உன் குழந்தைகளுக்கு தாயுமானவனாக இரு ! இனி வாழ்க்கையில் நீ எடுக்கும் எந்த முடிவும் உன் குழந்தைகளின் நல்வாழ்க்கைக்கு சாதகமானதாகவே இருக்க வேண்டும் ! உன் குழந்தைகளை நீ நடத்தும்விதம்தான் நீ உன் மனைவியை எப்படி நேசித்தாய் என்பதை சொல்லும்.


இழப்பை பொறுத்தவரை...

இதுமட்டுமல்ல...
எதுவும் கடந்துபோகும் !
மனவெளியில்
அதன் ஞாபக துகள்களை
நிரந்தரமாய் விட்டுவிட்டு !!


10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள் ?


வாசிப்பு... மற்றும் எழுத்து !


இந்த வாய்ப்பை எனக்களித்த நண்பர் கில்லர்ஜீக்கு நன்றி ( மெய்யாலுங்க... காமெடி கீமெடி பண்ணல ! )


இனி யான் பெற்ற துன்பத்தை பகிர்ந்துகொள்ளப்போகும் என் வலைநண்பர்கள்...


கிங் விஸ்வா - tcuintamil.blogspot.fr
கார்த்திக் சோமலிங்கா - www.bladepedia.com
காரிகன் - kaarigan-vaarththaiviruppam.blogspot.fr
அமுதவன் - amudhavan.blogspot.fr
மது எஸ் - www.malartharu.org
அருணா செல்வம் - arouna-selvame.blogspot.com
ஊமைக்கனவுகள் - oomaikkanavugal.blogspot.fr
ஸ்கூல்பையன் - www.schoolpaiyan.com
வாலிமீகி தேவகோட்டை - valmeegi.blogspot.com
முட்டா நைனா - muttanina.blogspot.com


பின்குறிப்பு : இந்த பத்து பேரில் பதிலளிக்கும் முதல் மூன்று பேருக்கு, எனது சாமானியனின் கிறுக்கல்கள் முதல் பாகம் புத்தகம் இனாமாக அனுப்பிவைக்கப்படும். ( நான் இப்படியே எழுதிகொண்டிருந்து, மக்கள் தாமஸ் ஆல்வா எடிசனை மறக்கும் சூழ்நிலையும் ஏற்படாதிருந்தால் இந்த புத்தகம் 2020ல் வெளிவரும் என்பதை தெரிவித்துகொண்டு, புத்தகத்தை பெற சுய விலாசமிட்ட பெரிய கவருடன், பிரான்சிலிருந்து உங்கள் முகவரிக்கு அனுப்ப தேவைப்படும் தொகையையும் தாங்கள் அனுப்பவேண்டும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் !!! )

Sunday, June 15, 2014

முற்பகல் செய்யின்... ( சிறுகதை )

பிரபல ஐந்துநட்சத்திர ‍ஹோட்டல் ஒன்றின் அறை...


" கொண்டாந்துட்டீங்கல்ல...நம்ம வாக்கு சுத்தம்... என்னால முடியும்ங்கற காரியத்துக்குதான் ஒத்துக்குவேன் ! நமக்கு... கையில காசு... ம்ம்ம்... டேய் அப்புறம் என்னா ?! "


" ...ம்ம்ம்... வாயில தோச தலைவரே ! "


சோடாவில் கலந்த விஸ்கியை விழுங்கியபடி இழுத்த‌ அமைச்சரின் பேச்சுக்கு எடுத்துகொடுத்தான் அவருக்கு பக்கத்தில் நின்றிருந்த அந்தரங்க தொண்டரடிபொடி !


" இதுல நீங்க கேட்ட ஒரு கோடி இருக்கு சார் ! "


எதிரிலிருந்த கோட்சூட் மனிதர் தயக்கமாய் சூட்கேஸை நீட்டினார் !



" ம்ஹும்... அதை நான் தொட மாட்டேன்... கொடுக்கற மாதிரி கொடுத்துட்டு படம் புடிச்சிட்டா... "


போதையிலும் புத்திசாலித்தனமாக (!) அமைச்சர் பேச, விழித்தார் கோட்சூட் !


" ஐயா வாங்கமாட்டாரு... நான் வாங்குவேன்ல... ! "


பாய்ந்து பெட்டியை பிடுங்காத குறையாக வாங்கிய தொண்டரடிபொடியிடமிருந்து வீசிய பட்டை வாடைக்கு முகம் திருப்பிகொண்டார் கோட்சூட் !


" ஐயா... நீங்க மத்தவங்க மாதிரியா ? படம் புடிக்கறவன் கொடலை உருவிட மாட்டோம் ?! " 


கை உயர்த்தி சொறிந்து கொள்வது போன்ற பாவனையில் இடுப்பு வேட்டியில் சொருகியிருந்த பிச்சுவாவை தொட்டுக்காட்டியபடி தொண்டரடிபொடி உறும, ஏஸியை மீறி கோட்சூட்டின் முகத்தில் வியர்வை ஊற்று !


" சார் மெர்ஸலாகிட்டாபோல... சும்மா தமாசுக்கு சார் ! "


" அப்ப நான் கிளம்பறேங்க ! காண்ட்ராக்ட் கிடைச்சதும் மிச்சத்தை செட்டில் பண்ணிடறேன்... "



தொண்டரடிபொடியின் தமாசுக்கு அமைச்சரும் பெரிதாய் சிரிக்க, அவசரமாய் கிளம்பினார் கோட்சூட் !


" டேய்... சாரை வாசலாண்ட விட்டுட்டு வா... "


"லைவரே... யாரோ ஒரு சின்ன பொண்ணு உங்களாண்ட பேசனும்னு டார்ச்சர் கொடுக்குது தலைவரே.... "


" அது யாருடா ? நான் இங்க இருக்கறது நம்ம கட்சிகாரனுங்களுக்கே தெரியாதே... "


கோட்சூட்டை வழியனுப்பிவிட்டு வந்த தொண்டரடிபொடி சொல்ல சற்றே உஷாரானார் அமைச்சர் !


" இல்லீங்க தலைவரே நல்லா மிரட்டி உருட்டி விசாரிச்சிட்டேன்... தப்பா தெரியல... நீங்க கார்லேருந்து இறங்குனதை பாத்திருக்கு... இளசு தலைவரே... இருபது இருபத்திரெண்டுதான் இருக்கும்... சும்மா சினிமா ஸ்டாராட்டம் இருக்கு தலைவரே ! "


" எங்கடா ? "


தலைவரின் சபலம் விழிக்க தொடங்கியது !


" கெஞ்சிக்கினே என் பின்னாடியே ரூம் வாசல் வரைக்கும் வந்துடிச்சி தலைவரே... தோ கூப்பிடறேன் ! "


" ணக்கம் சார் ! "


அலைபாயும் கூந்தலும், டைட் டீ ஷர்ட்,  ஜீன்சுமாய் அறைக்குள் நுழைந்த இளம் பெண்ணை கண்டதும் போதையில் இடுங்கியிருந்த அமைச்சரின் கண்கள் அகல விரிந்தன !


" ‍ஹய்யோ... நான் உங்க பேன் சார்... நீங்க செஞ்ச நல்ல காரியங்களையெல்லாம் நான் கேள்விப்பட்டிருக்கேன் சார்... யூ ஆர் ரியலி கிரேட் சார் ! "


ஏதோ சினிமா நடிகரிடம் பேசுவதை போல அவள் வழிகிறாள் என புரிந்தாலும் அது அமைச்சருக்கு பிடித்திருந்தது ! அவள் கைகள் உயர்த்தியபோது குட்டை டீ ஷர்ட் விலகி தெரிந்த சிவந்த சின்ன இடுப்பு இன்னும் பிடித்திருந்தது !


" ம்ம்ம்... சொல்லும்மா என்ன வேணும் ? "


" அது வந்து... சார் ! இந்த ஆளை கொஞ்சம் வெளிய அனுப்புங்க சார் ! மீசையும் தொப்பையுமா... ஐயே ! "


சட்டென அருகில் வந்து கிசுகிசுத்தவளை கண்டு அமைச்சரின் இதயதுடிப்பு எகிறியது !



" டேய் ! நீ கீழ பார்ல இரு... கையில செல்போனை வச்சிக்க... நான் பாப்பாகிட்ட பேசிட்டு கூப்பிடறேன்... "


தனது தொப்பையை ஒரு கையாலும் மீசையை மறுகையாலும் தடவிகொண்டே  தொப்பை தொண்டரடிபொடியை விரட்டினார் அமைச்சர் !


" டேய்... இரு ! இரு ! இந்த பெட்டியை எடுத்துக்கிட்டு போயிடு... இல்ல ! வேணாம் ! பாருல வச்சுக்க வேணாம் ! "


உஷாராக ஆரம்பித்து படு உஷாராக முடித்தார் அமைச்சர் !


" ம்... இப்ப சொல்லும்மா ! "


" அது வந்து சார்... ‍ஹய்யோ ! என்ன சார் இது ? விஸ்கியை சோடாவுல கலந்து... நானே ரா தான் சார் ! "


அமைச்சரின் முகத்துக்கு நேராக அலைபாய்ந்த அவளின் கூந்தல் மணத்திலும், பெர்ப்ப்யூமிலும் அவரின் ரத்தத்தில் ஒரு பெக் கூடியது ! அவளோ உரிமையாய் அவரின் கிளாசில் ஸ்காட்சை தாராளமாய் கவிழ்த்துவிட்டு பக்கத்து கிளாசில் தனக்கென கொஞ்சமே கொஞ்சம் ஊற்றிகொண்டாள் !


" ஆ‍ஹா ! இந்த காலத்து பொண்ணுங்க இருக்கீங்களே... "


முடிக்காமலேயே அவள் கொடுத்த கிளாசை தன் வாயில் கவிழ்த்துகொண்டார் அமைச்சர் !


" வா ! வா ! வந்து சீக்கிரமா வண்டில ஏறு ! "


சூட்கேசுடன் ஓடிவந்தவளை அவ‌சரப்படுத்தினான் அவன் !


" தூ... உங்கப்பன் இருக்கானே.... சரியான தூ....டா ! எங்க கிழவன் கையைபிடிச்சி இழுத்துடுவானோன்னு பயந்துட்டேன் ! அதோட... ரூமுலேருந்து வெளியே வந்தப்போ ரிசப்சன்ல போலீஸ்க்காரங்க அவரோட ரூமை விசாரிச்சிக்கிட்டிருந்தாங்க...


" அந்தாளை பார்க்க போலீஸ் வர்றது சகஜம்... அதுவும் மாச ஆரம்பம்... மாமுலுக்கா இருக்கும்...


" ஏன்டா ? என்ன இருந்தாலும் அப்பா காசையே இப்படி... "


" சும்மா இருடீ ! நல்லவாயன் சம்மாதிச்சதை நாரவாயன் திங்கறான்னு சொல்வாங்க... எங்கப்பனே ஒரு நாரவாயன்தாண்டி ! இது மாதிரி எத்தனை சூட்கேஸ் அந்தாளு பெட்ரூமுல திறக்காம கிடக்கு தெரியுமா ?... சரி ! சரி ! பிரெண்ட்ஸ் எல்லோருக்கும் போன் பண்ணி இன்னைக்கு நைட் பார்ட்டியோட ஜமாவை ஆரம்பிக்கறோம்ன்னு சொல்லு ! "


" மிஸ்டர்... அந்த பெட்டியை கொடுத்துட்டு எங்ககூட வர்றீங்களா ப்ளீஸ் ! "


" யோவ் ? யாருய்யா நீ ? நான் யாருன்னு தெரியுமா ? "


" தெரிஞ்சுதான் பேசறேன் தம்பி ! நான்... லஞ்ச ஒழிப்பு துறை... "


புன்சிரிப்போடு தன் அடையாள அட்டையை காட்டினார் நான்கைந்து பேர் புடைசூழ நின்றிருந்த மனிதர் !


" ஏய்... நீ எங்கம்மா ஓட பார்க்குற ? "


சட்டென ஓட யத்தணைத்த இளம்பெண்ணை பாய்ந்து பிடித்தார் மப்டியில் இருந்த பெண் போலீஸ் அதிகாரி !


ஞ்சம் வங்கிய அமைச்சர் மதுபோதையில் கைது செய்யப்பட்டார் ! லஞ்ச பணத்துடன் தப்பிக்க முயன்ற அமைச்சரின் மகனும் இளம் அழகியும் பிடிபட்டனர் !!


மறுநாள் தினசரிகளின் தலைப்பு செய்தியில் அச்சிடப்பட்டிருந்த புகைப்படங்களில் மட்டுமே அமைச்சர் சிரித்துகொண்டிருந்தார் !





இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.