Tuesday, July 22, 2014

ரெளத்திரம் பழகு !

மது சமூகத்தில் கோபத்தை பெரும்பாலும் பெருமையான தகுதியாகவே முன்னிறுத்துகிறோம் !

" சாருக்கு கோபம் வந்தா என்ன செய்வாருன்னு தெரியாது ! "

" எங்க வீட்டுக்காரரோட கோபத்துக்கு முன்னால யாராலும் நிக்க முடியாது ! "

" நான் கொஞ்சம் முன்கோபி ! "

கோபத்தில் ஒரு மனிதனின் உருவமே முற்றிலும் வேறுவிதமாக மாறிவிடுகிறது ! குரலை உயர்த்தி பேசுவதில் தொடங்கி, பொருட்களை வீசி எறிவது வரை, சில நேரம் எதிரிலிருப்பவரை அடித்துவிடுவது வரை கோபத்தின் வெளிப்பாடு பலவகை !

சரி, " ஆத்திரத்தில் அறிவிழத்தல் " உண்மைதானா ?

ஆழமாக யோசித்தால் இல்லை என்றே படுகிறது ! கோபமும் இடம், பொருள், ஏவல் அறிந்தே வெளிப்படும் என தோன்றுகிறது ! மேலிருந்து கீழாக பாயும் நீரை போன்றது கோபம் ! அது எப்போதும் நம்மைவிட வலிமையில் குறைதவரிடமே தோன்றுகிறது. இங்கு வலிமை என்று நான் குறிப்பிடுவது உடல் வலிமையை மட்டுமல்ல. அது பொருளாதாரமாக, சமூக ஏற்ற தாழ்வாக கூட இருக்கலாம்.


அரசியல்வாதி கூட கோபத்தில்கண் சிவக்கும்போது அருகில் நிற்கும் அப்பாவி தொண்டனை தான் அறைகிறார் ! அவரை திட்டமிட்டு தரக்குறைவாய் விமர்சிக்கும் மாற்றுகட்சி தலைவரிடம் கூட்டணிக்காக போகும்போது அரவணைத்து அகமகிழுகிறார் ! அதிக இடம் கிடைக்கவேண்டுமல்லவா ?!


ஒரு உதாரணம்...

தெருவில் நடந்து கொண்டிருக்கிறோம்... எங்கிருந்தோ ஓடி வந்த சிறிய நாய்க்குட்டி நமது விலை உயர்ந்த கால்சட்டையில் சிறுநீர் கழிக்க முற்படுகிறது... ஒரே எத்தாக எத்தி நாய்க்குட்டியை விரட்டிவிடுவோம்தானே ?

அந்த சிறிய நாய்க்குட்டியின் இடத்தில் நம் இடுப்புயரம் வளர்ந்த ஒரு முரட்டு நாயை கற்பனை செய்துகொள்ளுங்கள் !

கால் சதைக்கு வந்தது கால்சட்டையோடு போயிற்று என நினைத்து அந்த நாய் சிறுநீர்கழித்து செல்லும்வரை சப்தநாடியும் ஒடுங்கி நிற்போம் இல்லையா ?!

மற்றொரு உதாரணம் !

இன்று நமக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்க போகிறது... தலைமை அதிகாரியை சந்திக்க போகிறோம்... ஏற்கனவே தாமதமாகிவிட்டது ! நேர்த்தியான உடையில் வீட்டிலிருந்து அவசரமாய் வெளியேறும் நேரம்...

" பேனாவை மறந்துட்டீங்க... "

கொண்டுவருபவர் மனைவியோ, பிள்ளையோ, வேலைக்காரரோ யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் ! ஏதோ ஆர்வக்கோளாறில் உங்களிடம் நீட்டும் பேனாவை அவர் அவசரமாய் திறக்க, அதிலிருந்து தெரித்த மை நம் சட்டை முழுவதும் !

" அறிவிருக்கா உனக்கு... " என தொடங்கி ஆடிவிட மாட்டோம் ?!

இதுவே நம் உயரதிகாரியின் முன்னால்...

நமது வேலை உயர்வு உத்தரவில் கையெழுத்திடுவதற்கு அவர் பேனா மூடியை திறக்க, மை நம் சட்டையில் தெரித்துவிடுகிறது ! அவர் பதறுகிறார்...

" அட விடுங்க சார் ! துவைச்சிட்டா போயிடும்... அப்படி போகலேன்னாலும் என்னோட பதவி உயர்வு ஞாபகார்த்தமா இருந்துட்டு போகட்டுமே சார் ! எங்க சார் என்னோட சட்டையிலேயே பதவி உயர்வு கையெழுத்து போட்டுட்டார்ன்னு சொல்லிக்குவேன் ! "

எப்படி வழிவோம் ?!


வலிமையின் வெளிப்பாடாக‌ முன்னிறுத்தப்படும் கோபம் உண்மையில் பயத்தின்,இயலாமையின் வெளிப்பாடு !

சிறிய நாயாகட்டும், பெரிய நாயாகட்டும், அதிகாரி உதாரணமாகட்டும், அனைத்திலும் பயமே கோபத்தின் வெளிப்பாடாக அமைகிறது ! விலை உயர்ந்த கால்சட்டையை அசிங்கபடுத்திவிட்டதே என்ற இயலாமையில் நாய்க்குட்டியை எட்டி உதைத்த கோபம், பெரிய நாயை ஒன்றும் செய்ய முடியாது எனும் போது அடங்கி விடுகிறது ! வேலைக்கு தாமதமாகிவிடுமே என்ற கோபத்தில் கத்தும் நாம், இந்த மைக்காக கோபித்தால் அதிகாரி எங்கே நமது வேலை உயர்வுக்கு உலை வைத்துவிடுவாரோ என பம்மிவிடுகிறோம் !

நம் பேட்டையின் சண்டியர் தெருவில் வம்புக்கிழுத்தால் ஒதுங்கிவருவோம் !

" சாக்கடையில கல்லெறிஞ்சா நமக்குதான் சார் அசிங்கம் ! "

அறிவுரை வேறு !

ஆனால் நமது இயலாமையினால் அடங்கிய கோபம் நமக்கு அடங்கி நடப்பவர்கள்மீது இன்னும் ஆக்ரோசமாய் பாயும் !

" என்னா காபி இது.....?!  சூடும் இல்ல... சர்க்கரையும் இல்ல... ! "

மாலையில் வீடு திரும்பியதும் ஆசையாய் வரவேற்கும் அப்பாவி மனைவிமீது பாயும் ! நமது சமூகத்தில் பல ஆண்களின் கோபத்துக்கான இடிதாங்கிகளாக இருப்பது அப்பாவி மனைவிகள்தான் !

மதிப்பெண் குறைந்த பிள்ளைகளை இழுத்துபோட்டு அடிப்பதும் இலயாமைதான் !

" ஏன்டா.. உன்னை டாக்டராக்கனும்,கலெக்ட்டராக்கனும்ன்னு நான் ராத்திரி பகலா உழைக்கிறேன்... "

இதுதான் ! நாமே நமது சமூக அந்தஸ்த்துக்காக, அவர்களின் விருப்பம் அறியாமல் தீர்மானித்துக்கொண்டவை நடக்காமல் போய் விடுமோ என்ற பயம் ! இயலாமை !

கோபத்தைவிட மோசம் முன்கோபம் ! ஏதோ ஒன்று நடந்த பிறகு கோபப்படுவதையாவது நியாயப்படுத்த முயலலாம்... அதென்ன முன்கோபம் ?!

" சார் ரொம்ப முன்கோபி ! "

இதைவிட கேவலமான அறிமுகம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை ! தன் கோபத்தையே திறமையாய் முன்னிறுத்தும் அறியாமை !

ஒரு நிமிட கோப உணர்வால் நமது உடலும் மனதும் எவ்வளவு பாதிக்கப்படுகிறது தெரியுமா ? சட்டென உயரும் இரத்த அழுத்தத்தில் தொடங்கி, நரம்புத்தளர்ச்சிவரை கோபத்தினால் உண்டாகும் கேடுகளை பல பக்கங்களுக்கு எழுதலாம் !

கோபம் தவறென்றால் நம்மை சுற்றி நடக்கும் தவறுகளை பார்த்துக்கொண்டு சும்ம இருக்க முடியுமா ?

கோபம் இயலாமையின் வெளிப்பாடென்றால் தன் வாழ்க்கை முழுவதுமே கோபக்கார மனிதனாக உலாவி சமூக சீரழிவுகளை சினந்து கவிதைவடித்தானே பாரதி ? எமனையே எள்ளி நகையாடி, அந்த எமனின் வாகனமும் நெருங்க பயப்படும் யானையின் காலால் மாய்ந்த அவனின் வாழ்க்கை தவறா ?!

இல்லை தவறில்லை ! கோபம் தவறில்லை, அது நமது கட்டுக்குள் இருக்கும்வரை ! ஒருவர் மீதான கோபத்தை அதற்கு சம்மந்த்தமில்லாத  ! மற்றொருவரிடம் காட்டாதவரை !


அதைதான் " ரெளத்திரம் பழகு " என்றான் பாரதி !

சமூகத்தின் பெண்ணடிமை கொடுமையை கண்ட பாரதி அதனை தன்னால் மாற்ற முடியாது என்ற இயலாமையில் தன் மனைவியிடம் எரிந்து விழவில்லை ! மாறாய் அந்த வழக்கத்தை ஒழிக்க தானே முன்னுதாரணமாய் திகழ்ந்தான். மனைவி கணவனின் பின்னால் நடந்த அந்த காலகட்டத்தில் தன் மனைவியின் தோள் மீது கைபோட்டுவீதிகளில் உலா வந்தவன் பாரதி !

இரயில் பெட்டியிலிருந்து தன்னை வெளியே தள்ளிய வெள்ளை அதிகாரியை எட்டி உதைக்கவில்லை காந்தி ! அந்த கோபத்தை கனலாய் தன்னுள் தாங்கி இந்திய சுதந்திரத்துக்கே வழிவகுத்தார் !

" வெங்காயம் " என திட்டியதோடு நில்லாமல் சமூக ஏற்ற தாழ்வுகள் தொடங்கி மூட பழக்கங்கள் வரை அனைத்தையும் சாடியதால்தான் பெரியாரை பற்றி இன்றும் பேசுகிறோம் !

இதுதான் ரெளத்திரம் பழகுதல் ! கோபத்தை மடை மாற்றுதல் !!  நமக்கு கோபம் தரும் செயல்களை முதலில் நாம் செய்யாதிருக்க வேண்டும். நமக்கு முன்னாலிருப்பவர் யாராக இருந்தாலும் அவர் செய்தது தவரென்றால் நேரடியாக நிதானமாக சுட்டிக்காட்டும் நெஞ்சுரம் வேண்டும்.

குரல் உயர்த்தி பேசினால்தான் கோபத்தை தெரிவிக்கலாம் என்றில்லை. நம் கோபம் நியாயமெனில் நமது ஒரு பார்வையே எதிராளியை அடக்கிவிடும் !  ஆத்திரத்தில் நிலை தடுமாறி குழறி பேசும் வார்த்தைகளைவிட வலுவானது சட்டென தோன்றிவிடும் மெளனம் !

இல்லை ! என்ன முயற்சித்தாலும் என்னையும் அறியாமல் கோபத்தில் நிலைத்தடுமாறி விடுகிறேன் என்கிறீர்களா ?  சட்டென அங்கிருந்து நகர்ந்துவிடுங்கள் ! இரண்டு மூன்று முறை ஆழ மூச்சிழுத்து, முடிந்தால் ஒரு தம்ளர் தண்ணீர் குடித்து பாருங்கள் ! கோபம் காணாமல் போய்விடும் !  கோபத்துக்கான காரணத்தை,முடிந்தால் அந்த கோபத்தையே உற்று நோக்குங்கள் ! சட்டென ஒரு வெளிச்சம் பரவுவதை காண்பீர்கள் !

திரும்பி சென்று உங்கள் தரப்பை நிதானமாய் விளக்குங்கள் ! உங்கள் தரப்பின் காரண காரியங்களை விளக்குங்கள். பல தருணங்களில் கோபத்துக்கான காரணம் சரியான புரிதலின்மையே ! " இதனை செய் ! " என கட்டளையிடுவதைவிட ஏன் செய்ய வேண்டும் என விளக்கி கூறுங்கள். 

ஆத்திரத்துக்கான மற்றொரு முக்கிய காரணம் கெளரவம் ! இவன் சொல்லி நான் கேட்பதா, இவன் என்னை எதிர்ப்பதா என்பவை போன்ற போலி கெளரவங்கள் ! சிறியவரோ பெரியவரோ, ஆனோ பெண்ணோ, ஏழையோ பணக்காரனோ யாராக இருந்தாலும் அவர்களின் பேச்சிலிருக்கும் நியாயத்தை உணர்ந்தோமானாலும் பல நேரங்களில் கோபம் தவிர்க்கலாம்.

ஒரு நிமிடத்துக்கும் குறைந்த நேரத்துக்கு நீடிக்கும் கோபத்தில் தவறி விழும் வார்த்தைகள் பல வருட நட்பை, உன்னதமான உறவுகளை முறித்துவிடலாம். ஆத்திரத்தில் ஓங்கிய கையால் நாம் மிகவும் நேசித்த உயிரை கூட பலி கொடுத்துவிடக்கூடிய சூழ்நிலை அமைந்துவிடலாம்.

நம் கோபத்தினால் உறவு முறிந்த யாரையாவது இனி சந்திக்க நேர்ந்தால்... இன்முகத்துடன் முதல் வணக்கம் நம்முடையதாக இருக்கட்டும் !







இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

47 comments:

  1. அற்புதமான விசயத்தை கொடுத்த சாமானியன் அவர்களுக்கு முதற்கண் நன்றி
    நானும்கூட திருத்திக்கொள்ள முயற்சிக்கிறேன் நண்பா.....

    ReplyDelete
    Replies
    1. நானும் ஒரு காலத்தில் மிகவும் கோபக்காரனாக ஆறியப்பட்டவன் தான் ஜீ ! அன்றைக்கு கோபப்பட்ட விசயங்கள் இன்று மிகவும் அற்பமானதாக தோன்றுகிறது !

      நன்றி
      சாமானியன்

      Delete
  2. இதில் “கொபம் இருக்கிற இடத்தில் தான் குணமிருக்கும்” என்று ஒரு சமாளிபிகேஷன் வேறு!

    ReplyDelete
    Replies
    1. " கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் ! "

      அட இந்த பதிவின் ஆரம்பத்துக்கு அருமையாக பொருந்தும் வாசகத்தை எபப்டி விட்டோம் என வருத்தப்படவைத்துவிட்டீர்கள் விஸ்வா !!!

      நன்றி
      சாமானியன்

      Delete
  3. Replies
    1. தங்களின் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி அய்யா.

      சாமானியன்

      Delete
  4. உண்மை - சொல்லப்பட்ட உதாரணங்களும்...

    /// பல தருணங்களில் கோபத்துக்கான காரணம் சரியான புரிதலின்மையே... ///

    உண்மை... நமக்குள் நம்மைப் பற்றியே...

    ReplyDelete
    Replies
    1. அந்த புரிதலின்மை நெருங்கிய நட்பு, குடும்பத்துக்குள்ளேயே நேருவதுதான் வருத்தம் !

      நன்றி
      சாமானியன்

      Delete
  5. சாம்,

    அருமையான பதிவுக்கு முதலில் பாராட்டுக்கள். புல்லெட் ட்ரைன் போன்று உங்கள் எழுத்தின் வீரியம் கூடிக்கொண்டே போகிறது. வாழ்த்துக்கள்.

    கோபம் ஒரு இரட்டை கூர் முனை கொண்ட கத்தி போன்றது. சரியாக கையாளாவிட்டால் நம்மையே பதம் பார்த்துவிடும்.அதன் பாதிப்புகள் சில சமயங்களில் வாழ்கையின் போக்கையே கூட மாற்றிவிடக்கூடிய வலிமை பெற்றவை. கோபம் அவசியமா இல்லையா என்றால் அது தேவையான ஒரு துளி விஷம்.(விஷத்திற்கும் மருத்துவ குணம் உண்டு.)

    பிரட் இல்லையென்றால் கேக் சாப்பிடவேண்டியதுதானே என்ற பிரெஞ்சு இளவரசியின் அலட்சியத்தின் எதிர் வினையாக வெடித்த கோபமே பிரெஞ்சு புரட்சிக்கு வித்திட்டது. சமாதான பிரபு என்று அழைக்கப்படும் ஏசுவே கோபம் கொண்டு சாட்டையால் தேவாலய வியாபாரிகளை அடித்து விரட்டியது விவிலியத்தில் உள்ளது.

    இருந்தும் நாம் யார் மீது கோபம் கொள்கிறோம் என்பது பொதுவாக நீங்கள் சொல்வதுபோல " கீழ் நோக்கிப் பாயும் நீர்" போன்றே இருக்கிறது. உண்மை. ஒரு ஆங்கிலச் சொல்லாடல் இருக்கிறது. " The one who CAN'T be angry is a fool; The one who WON'T be angry is wise".

    ReplyDelete
    Replies
    1. காரிகன்,

      எனது எழுத்தில் உண்மையிலேயே ஏதாவது வீரியம் தெரிந்தால் அதற்கு உங்களை போன்ற‌வர்களின் ஊக்குவிப்புதான் காரணம்.

      " கோபம் அவசியமா இல்லையா என்றால் அது தேவையான ஒரு துளி விஷம்.(விஷத்திற்கும் மருத்துவ குணம் உண்டு.) "

      அருமை காரிகன் ! சற்று முன்புதான் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் வலைப்பூவில் ( karanthaijayakumar.blogspot.com )தேவதாசி முறைக்கு எதிரான பெரியாரின் வார்த்தைகளை படித்தேன்...

      " தேவதாசி முறை தொடர வேண்டும் என்று, கொந்தளிக்கிறீர்களே, கொக்கரிக்கிறீர்களே, உங்கள் வீட்டுப் பெண்களைப் பொட்டுக் கட்டி அனுப்பத் தயாரா? "

      எபப்டிப்பட்ட சாட்டையடி வார்த்தைகள் ?!நீங்கள் குறிப்பிட்ட நியாயமான கோபம் இதுதானே ! சமூக சீரழிவுகள் பற்றிய தனி மனிதர்களின் கோபம் தானே பிரெஞ்சு புரட்சி தொடங்கி பெரியாரின் போராட்டம் வரை அனைத்துக்கும் காரணம் ?!

      நீங்கள் குறிப்பிட்ட ஆங்கில சொல்லாடலை போலவே வாழ்பவர்கள் மேலை நாட்டினர் ! உணர்ச்சிவசப்பட்டு குரலை உயர்த்தாமலேயே காரியம் சாதிக்கும் அவர்களின் திறமை நாம் கற்றுக்கொள்ள்வேண்டியவைகளில் ஒன்று !

      உங்களின் பின்னூட்டத்தை படித்ததும் அட இதையெல்லாம் விட்டுவிட்டோமே என உங்கள் மீது செல்லமான பொறாமை (!) ஏற்பட்டது உண்மைதான் !

      நன்றி
      சாமானியன்


      Delete
  6. கீழ்வரும் இணைப்பில் தங்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளேன்.
    http://wp.me/p3oy0k-5e

    ReplyDelete
    Replies
    1. தங்களின் ஆதரவுக்கு நன்றி

      சாமானியன்

      Delete
  7. மனிதனின் சுய இயல்பை அருமையாக பதிவு செய்தீர். உண்மையான வரிகள்.
    கோபம் என்னும் குணம் எப்படி பயன்படுத்த வேண்டும் என்னும் உங்கள் கருத்து உண்மையானது.

    sattia

    ReplyDelete
    Replies
    1. நன்றி சத்யா அவர்களே !

      சமூக கோபம் கொண்ட உங்களின் பதிவுகளை நாங்கள் படிக்கப்போவது எப்போது ?

      சாமானியன்

      Delete
  8. மகாகவி ஒருவேளை ரௌத்ரம் பழக்கு என்று சொல்லியிருப்பாரோ...! பொதுஆகச் சொல்லப்போனால் இயலாமையின் வெளிப்பாடுதானே கோபம்!

    ReplyDelete
    Replies
    1. அருமையான ஒரு பதிவுக்கு தலைப்பு கொடுத்து விட்டீர்களே !!!

      தங்களின் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி

      சாமானியன்

      Delete
  9. ரௌத்திரம் பழகு மகா கவி பாரதியின் - தலைப்புக்கு தலைப் பாகை சூடி விட்டீர்! சாமானியரே
    வாழ்த்துக்கள் கோபம் என்பது கோவைப் பழமும் அல்ல அதை கொத்தித் திண்பதற்கு நாம் கிளிகளும் அல்ல என்பதை இதைவிட வேறு யாராலும் சிற்ப்பாக கூற முடியாது.
    இன்றுமுதல் சாமானியன் "மகா எழுத்தாளன்" என்பதை வரலாறு பதிவு செய்யட்டும்.

    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் புதுவை வேலு அவர்களே !

      " மகா எழுத்தாளன் " ... கவிதைக்கு பொய் அழகு என்பது உண்மையோ, இல்லையோ ஆனால் பாராட்டுக்கு பொய் மிக அழகு ! உங்களின் வார்த்தைகளை தூய நட்பினால் விளைந்த பாராட்டாய் எடுத்துக்கொள்கிறேன் !

      மகா எழுத்தாளர்களின் வாசகனாய் நிலைக்கும் வாய்ப்பு நீடித்தாலே போதும் என்பதே இந்த சாமானியன் ஆசை !

      நன்றி
      சாமானியன்

      Delete
  10. மிக மிக அருமையான ஒரு பதிவு! பாராட்டுக்கள்!

    அது எப்போதும் நம்மைவிட வலிமையில் குறைதவரிடமே தோன்றுகிறது. இங்கு வலிமை என்று நான் குறிப்பிடுவது உடல் வலிமையை மட்டுமல்ல. அது பொருளாதாரமாக, சமூக ஏற்ற தாழ்வாக கூட இருக்கலாம்// மிக மிக உண்மை! கோபம் என்பது நமது இயலாமையே! அதாவது நமக்கு யார் மீது கோபம் வருகின்றதோ அவர்களிடம் அது உண்மையான கோபமாக இருந்தால் கூட காட்ட முடியவில்லை என்றால், அதை சுமந்து கொண்டு வந்து , அடுத்து யார் முதலில் நம் முன் வருகின்றார்களோ அதுவும் அவர்கள் நம்மை விட ஆளுமைத் திறன் குறைந்தவராக இருந்தால் அவரிடம் வெளிப்படுத்துவோம்! இதுதான் பொதுவான மனித மனம். அதற்கு தாங்கள் கொடுத்துள்ள நாய் எடுத்துக்காட்டு அருமை! அதுனம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் நல்லது இல்லையென்றால் அதனால் நாம் பல நல்ல மனிதர்களை இழக்க நேரிடலாம்.

    ReplyDelete
  11. கோபத்தில் சிதறிய வார்த்தைகளைத் திரும்ப எடுத்தல் அரிது! தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு...சும்மாவா சொன்னார் திருவள்ளுவர்!

    ReplyDelete
    Replies
    1. " அதுனம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் நல்லது இல்லையென்றால் அதனால் நாம் பல நல்ல மனிதர்களை இழக்க நேரிடலாம். "

      மிக உண்மையான வார்த்தைகள் !

      நாம் பக்கம் பக்கமாக எழுதுவதையெல்லம் சுருக்கி பொட்டில் அடிக்கும் குறளாய் கொடுத்துவிட்டாரே திருவள்ளுவர் !

      நன்றி
      சாமானியன்

      Delete
  12. வணக்கம்

    புரிதலுடன் நடந்தால் எப்படிப்பட்ட விபரிதங்களையும் நாம் சமாளித்துக்கொள்ளமுடியும்... நல்ல விதமாக கருத்துகளை சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்களின் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரூபன்.

      சாமானியன்

      Delete
  13. வழக்கம் போல மற்றுமொரு சிறப்பான பதிவு!

    //ஆத்திரத்தில் நிலை தடுமாறி குழறி பேசும் வார்த்தைகளைவிட வலுவானது சட்டென தோன்றிவிடும் மெளனம் !//
    பெண்களின் அதியற்புத ஆயுதம்! :) நாம் பாட்டுக்கு கோபத்தில் உளறிக் கொட்டிக் கொண்டிருப்போம்; அவர்களோ அவை அத்தனையையும் மௌனமாக மனதில் பதிவு செய்து கொண்டு, அடுத்த (கட்ட) வாக்குவாதத்தில் அவற்றையே நமக்கு எதிராக பிரயோகிப்பார்கள்! :P

    ReplyDelete
    Replies
    1. பெண்களின் மனநிலை பற்றிய மிக அருமையான, உண்மையான கருத்தினை பதிவு செய்துள்ளீர்கள் நண்பரே ! எந்த நேரத்திலும் நிதானம் தவறாமை பெண்களின் குணம்.

      சாமானியன்

      Delete
  14. ஆஹா அருமையான பதிவு அனைத்தும் நிதர்சனமான உண்மைகள். கோபம் வலிமையற்றவர்கள் மீது தான் காட்டப் படுகிறது . இயலாமையின் வெளிப்பாடு தான் சரியாக சொன்னீர்கள். நன்றி வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வ‌ருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி

      சாமானியன்

      Delete
  15. #மேலிருந்து கீழாக பாயும் நீரை போன்றது கோபம் !#
    எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும் உலகே உன் செயல்தான் மாறாதா என்ற பாடலை நினைவுபடுத்தியது, உங்களின் ரௌத்திரம் பழகு !
    தொடருங்கள் ,தொடர்கிறேன் !

    ReplyDelete
    Replies
    1. அருமையான பாடல் வரியை உதாரணப்ப‌டுத்தி அழகான கருத்தை கொடுத்துள்ளீர்கள் ஜீ ! நிச்சயம் தொடருவோம்

      நன்றி
      சாமானியன்

      Delete
  16. ரௌத்திரம் பழகு என்ற தலைப்பில் கோபத்தின் வகைகளை விளக்கி நம் கோபம் கையாலாகாத கோபமாக இருக்க கூடாது. சமூக அநீதிகளிடம் பொங்குமாறு இருக்க வேண்டும் என்று அழகாக சொன்னது பதிவு! அருமையான பதிவு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. உங்களின் கருத்துக்கு நன்றி நண்பரே

    சாமானியன்

    ReplyDelete
  18. இந்த கோபத்துக்கு மூல காரணம் எது சமூகமா? அல்லது தனிமனிதர்களின் செயலா? திரு.சாமானியன்

    ReplyDelete
    Replies
    1. நமது சமூக ஜாதிய கட்டமைப்பே காரணம் என தோன்றுகிறது தோழரே ! இங்கே வசதியும் செல்வாக்கும் படைத்தவர்களுக்கு கோபம் தார்மீக உரிமையாக தாரைவார்க்கப்பட்டுள்ளது ! மயிலே மயிலேன்னா இறகு போடாது, செவிட்டுல ரெண்டு விடு ! என கோபம் " கல்யாண குணமாக ", " புருச லட்சணமாக " கொண்டாடபடுகிறது !

      ஆண்டை தன் வீட்டின் நாய் மீது கொண்ட கோபத்தினைகூட வேலையாளிடம் காட்டலாம். அதே நேரத்தில் அந்த வேலைக்காரன் இரண்டுபடி அரிசி கூட கேட்டால் என்ன நடக்கும் என நான் எழுதி தெரியவேண்டியதில்லை !!!

      இன்றைய நமது ஜனநாயகமும் அப்படித்தான் ! ஆளுங்கட்சி அல்லது அவர்களது கூட்டணி கட்சியினர் எப்படி வேண்டுமானாலும் போராட்டம் நடத்தலாம் ! பொருள் சேதம் உயிர்சேதம் ஏற்பட்டாலும்கூட ! அதே வேண்டாத கட்சியின் போராட்டம் முலையிலேயே கிள்ளப்படும் !

      மேற்சொன்ன கோபங்களுக்கும் பயமே பிரதானம் ! எங்கே இன்று இரண்டு படி அரிசி கேட்பவன் நாளை இன்னும் என்னெவெல்லாம் கேட்பானோ என்ற பயம் ! வேண்டாத கட்சி செல்வாக்கு பெற்று ஆட்சியை பிடித்துவிடுமோ என்ற கிலி !

      ஆனால் தனி மனிதர்கள் முயற்சித்தால் எதையும் மாற்றலாம் காரணம் பல தனிமனிதர்களை கொண்ட குழுவே சமூகம் !

      நன்றி
      சாமானியன்

      Delete
  19. ரௌத்திரம் எப்படி இருக்கவேண்டும் என்கிற இந்த பதிவை copy பண்ணி பாடமாவே நடத்தலாம் போல அட்டகாசம் சகா! வள்ளுவர்கூட செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
    காக்கின்என் காவாக்கா. என்று இதை தான் அருமையா சொல்லுறார் இல்லையா சகா .

    ReplyDelete
    Replies
    1. உங்களை போன்ற ஆசிரிய, ஆசிரியைகளின் பாடம் கேட்டுதான் இந்த சாமானியனின் கோபம் ஒழிந்தது சகோதரி !

      நன்றி
      சாமானியன்

      Delete
  20. கோபத்தைப் பற்றியும் அழகாகப் பதிவிட முடியும் என்று சொல்கிறது உங்கள் பதிவு. கோபத்தின் வெளிப்பாடு என்னவோ நீங்கள் சொல்வது போல தான் அமைகிறது பெரும்பாலான நேரங்களில். பாரதி, பெரியார் போன்று நியாயமான கோபத்தை சரியாகத் திசைதிருப்பி வெற்றி காண்பது கடினம் தான், அதற்கு மிகுந்த தெளிவும் சுயகட்டுப்பாடும் தேவை, அதை அனைவரும் பழகிக் கொள்ள வேண்டும்..முதலில் நான் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன்.. பகிர்விற்கு நன்றி சகோ.

    ReplyDelete
    Replies
    1. ன்று கோபத்தை பற்றி பதிவு எழுதினாலும் சில வருடங்களுக்கு முன்னர் வரை நானும் முன்கோபி (!) தான் சகோதரி ! நம்மால் முடியும் ! தங்களின் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி

      சாமானியன்

      Delete
  21. அண்ணா வணக்கம்!
    தங்களின் பதிவு பண்டைய இலக்கண இலக்கியங்களை ஒரு சேர நினைவுபடுத்துகிறது. இன்றைய மொழியில்
    எளிதாக விளங்கிக் கொள்ளும் படியும், ஆர்வத்துடன் படிக்கும் படியும் எழுதும் எழுத்து கைவருகிறது. நிறைய எழுதத்தோன்றுகிறது. அது தனிப்பதிவாக நீளும் அபாயம் கருதித் தவிர்க்கிறேன். சுவைபடச் சொல்ல முடியாவிட்டாலும் இலக்கண இலக்கியங்களைத் தோட்டுக் கோபம் குறித்த கட்டுரை ஒன்றை எழுதினால் நன்றாய் இருக்கும் எனத் தோன்றுகிறது.
    பகிர்விற்கு நன்றிகள்!

    ReplyDelete
    Replies
    1. ஏதோ எழுதுகிறேன் என்பது மட்டுமே உண்மை சகோதரரே !

      இன்னும் ஒரு பத்து வருடங்கள் விடாது எழுத்து சாதகம் செய்தால் ஒரு வேளை என் எழுத்து குறிப்பிடும்படியானதாக அமையலாம் ! அதற்கு நான், உங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஒரளவுக்காவது தமிழில் புலமை பெற வேண்டும். கற்றுகொள்ள நிறைய இருக்கிறது.

      " சுவைபடச் சொல்ல முடியாவிட்டாலும் "....

      நடைமுறை வாழ்க்கையை பற்றி சுவையாக எழுதுவதைவிடவும் சவாலானது சங்க இலக்கியங்களை பற்றி கட்டுரைகள் எழுதுவது ! உங்களின் புதையலின் வரைபடம் மற்றும் இருட்டில் மறைந்த விளக்கு பதிவுகளை படித்தவர்களுக்கு தெரியும் அதன் சுவை ! உங்களின் கட்டுரையை படிக்க ஆவலாக காத்திருக்கிறோம்.

      நன்றி
      சாமானியன்

      Delete
  22. தங்களைப்பற்றி...
    http://oomaikkanavugal.blogspot.ae/2014/08/blog-post.html
    கிசுகிசு...

    ReplyDelete
    Replies
    1. அவரும் கிசுகிசு எழுத ஆரம்பிச்சிட்டாரான்னு பயந்துட்டேன் ஜீ !

      சாமானியன்

      Delete
  23. மிக சிறப்பான கட்டுரை கோபத்தை அலசி ஆராய்ந்து விட்டீர்கள். நமது கோபங்கள் சுயநலம் உடையது என்பதை இதை விட அருமையாக விளக்க முடியாது.
    வள்ளுவன் சொல்வதை நாம் மனதில் கொள்வதே இல்லை .
    செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான் அல்லிடத்துக்
    காக்கின் என் காவாக்கால் என்
    ரொத்திரம் பழகுவிற்கும் அழகான விளக்கம் நன்றி . நீங்கள் உண்மையில் சாமான்யன் அல்ல

    ReplyDelete
  24. உங்களை போன்ற சிறந்த வலைப்பூ எழுத்தாளர்களின் வார்த்தைகள்தான் என் எழுத்துக்கான ஊக்கம் ! நன்றி

    ReplyDelete
  25. அன்பின் அருந்தகையீர்!
    வணக்கம்!
    இன்றைய...
    வலைச் சரத்திற்கு,
    தங்களது தகுதி வாய்ந்த பதிவு
    சிறப்பு செய்துள்ளது!
    வருக!
    வலைச்சரத்தில் கருத்தினை தருக!
    http://blogintamil.blogspot.fr/
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  26. அருமையான செய்தி

    ReplyDelete
  27. சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட் கோபத்தை அடக்குவதற்கு ரொம்ப சிரமப்பட வேண்டியதில்லை .. கோபம் வரும்போது கண்ணாடி முன் நின்று நம்டைய முகத்தை நாமே பார்த்தால் முகத்துக்கு பின்னால் ஒரு பயம் நிழலாடுவது மிக தெளிவாக தெரியுமாம் ... கோபம் போயேபோச்சு... இப்போது பல பேருக்கு மனைவி பூரிகட்டையோடு நிற்பது போல் ஒருகணம் நினைத்துக்கொண்டாலே போதும் அடுத்த கணமே கோபம் காணமல் போய் விடுகிறதாம். ட்ரை மீ...

    ReplyDelete
  28. Are you in need of a loan?
    Do you want to pay off your bills?
    Do you want to be financially stable?
    All you have to do is to contact us for
    more information on how to get
    started and get the loan you desire.
    This offer is open to all that will be
    able to repay back in due time.
    Note-that repayment time frame is negotiable
    and at interest rate of 2% just email us:
    reply to us (Whats App) number: +919394133968
    patialalegitimate515@gmail.com
    Mr Jeffery

    ReplyDelete