Monday, June 23, 2014

இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன ?




ஸ்த்ரேலியாவுல‌ இருக்கற சொக்கன் சுப்ரமணியன் அபுதாபியில இருக்கற நம்ம கில்லர்ஜீயை உசுப்பிவிட்டு அவரு, பிரான்ஸ் ஈபில் டவருக்கு கீழ தேமேன்னு நின்னு எதையோ கிறுக்கிக்கிட்டிருந்த‌  என்னை இதுல மாட்டி, சாரி அவர்  பாஷையில கோர்த்துவிட்டு...நியாயமாரே... ஏன் ? ஏன்ங்கறேன் ?!... சென்னை விமான நிலையத்துல ஒரு நாளைக்கு சந்திக்காமலா போயிடுவோம் ? அப்ப நாட்டாமையை சொம்போட சேர்த்து தூக்கிடுவோம்ல !


மேட்டர் ஒண்ணுமில்ல மக்களே ! ஒரு பத்து கேள்விகளுக்கு நான் பதில் சொல்லனுமாம்... யான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்ன்னு நான் ஒரு பத்துபேரை இதுல கோர்த்துவேற‌ விடனும் ! சரி, சரி, ஆனந்த விகடன்லேருந்து பேட்டி காண விரும்பற அளவுக்கு நாம ஒண்ணும் பவர் ஸ்டார் கிடையாது ! கில்லர்ஜீ பேட்டியே போதும் !


படிக்க சகிக்காதுதான் என்றாலும் அன்பர்கள் இறுதிவரை படிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்... இறுதியில் அவர்களின் பெயர் பட்டியலில் இருக்ககூடிய வாய்ப்பு உள்ளதால் !




1. உங்களுடைய நூறாவது பிறந்த நாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள் ?
குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுடன் ( வளைப்பூ நண்பர்களுக்கு நிச்சயம் முன்னுரிமை  உண்டு ! ).., முடிந்தால் ஓடிப்பிடித்து விளையாடி கொண்டாட ஆசை !


2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் ?


கற்றுக்கொள்வதற்கு முன்னால் இந்த வாழ்க்கை ஓட்டம் எனக்கு என்ன கற்றுத்தர முயற்சித்துகொண்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன் !


3. கடைசியாக சிரித்தது எப்போது ? எதற்காக ?


இந்த பதிவை எழுத தொடங்குவதற்கு முன்னால்...


நண்பர் கில்லர்ஜி  இந்த சுழற்சி பதிவில் என்னை சேர்த்திருப்பதாக அவர் எனக்கு அனுப்பிய கமெண்ட்டை  படித்தபோது  ! அதை அப்படியே கீழே கொடுத்துள்ளேன்...


" நண்பா, உங்களை ஒருமேட்டரில் கோர்த்து விட்டு இருக்கிறேன்... "


அப்பாடா... மேட்டர், கோர்த்துவிட்டிருக்கிறேன்னுல்லாம் நீங்க பீடிகை போட்டதை படித்ததும் ஏதோ மோகனாவின் மோகினியாட்டம், மோகனின் மோகமுள் மாதிரி எதுகை மோனையா சாமானியனின் சல்லாபங்கள்ன்னு பதிவு போட்டுட்டீங்களோன்னு பயந்துட்டேன் ஜீ !


குட்டி, புட்டி மாதிரி மேட்டர் ( இது தமிழ் வார்த்தை இல்லன்னாலும் ! ), கோர்த்துவிடறது வார்த்தைக்கெல்லாம் எத்தனை அர்த்தமிருக்கு பாருங்க !


4. 24 மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன ?


இனிமேல் பழங்கால வாழ்க்கைக்கு திரும்புவோம் என மக்களுக்கு பிரச்சாரம் செய்வதோடு தாமஸ் ஆல்வா எடிசன் என்றொரு மனிதரை அனைவரும் உடனடியாக மறக்க வேண்டும் என கோரிக்கை வைப்பேன் !


( பதில் உபயம் : கில்லர்ஜீ. ( இந்த பதிலுக்கான அனைத்து உலக உரிமைகளும் அவருக்கே சொந்தமானது ! )


இத்துடன் நான் சேர்க்க நினைப்பது...


மின்சாரம் இல்லாத காரணத்தால் பிளேடு, ஜல்லியடி பதிவுகளை வளைப்பூவில் பிரசுரிக்க முடியாத வலைப்பூ நண்பர்களை கூட்டி சங்கம் ஆரம்பித்து இயற்கை விவசாயம் செய்வேன்  ! ஒருவர் வெட்டிய பாத்தியை பற்றி மற்றொருவர் " லைக் " போடும் வசதியுடன் !


5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் நீங்கள் அவர்களுக்கு சொல்ல விரும்புவது என்ன ?


உங்களின் பிரச்சனைகள் அனைத்தையும் நான்கு சுவற்றுக்குள், உங்களுக்குள் பேசி தீர்த்து கொள்ளுங்கள். ஒரு ஜோடியின் வாழ்க்கையில் மூக்கை நுழைக்கும் மூன்றாவது நபரின் பெயர்தான் பிரச்சனை ! உங்கள் பிரச்சனை மற்றவர்களுக்கு பொழுதுபோக்கு செய்தி மட்டுமே என்பதை மறந்துவிடாதீர்கள்.


பெண்ணியம், ஆணியம் போன்ற பட்டிமன்ற தலைப்புகளையெல்லாம் வாழ்க்கைக்குள் நுழைத்து குழம்பாதீர்கள் ! இல்லறம் என்பது விட்டுகொடுத்தல்... ஈகோ அறுத்தல் !


6. உலகத்தில் உள்ள பிரச்சனைகளில் ஒன்றை உங்களால் தீர்க்க முடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள் ?


பட்டினி சாவு !


" தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் " என முழங்கிய பாரதியின் புத்த‌கங்கள் அலமாரியை அலங்கரிக்க, ஊர் மொத்தமும் எலும்பும் தோலுமாய் சிறுக சிறுக செத்துக்கொண்டிருக்கும் ஆப்ரிக்க பஞ்ச காட்சியை தொலைக்காட்சியில் பார்த்து உச் கொட்டியபடி பிட்சா, பர்கரை விழுங்கி, கோக் குடித்து ஏப்பம் விடும் நாகரீக மனித குணம் ... மானுட அவமானம் !


7. நீங்கள் யாரிடம் அட்வவைஸ் கேட்பீர்கள் ?

பிரச்சனையை பொறுத்து நெருங்கியவர்களிடம் கலந்தாலோசித்தாலும் இறுதி முடிவு மிஸ்ட்டர் மனசாட்சி தீர்மானிப்பதுதான் !


8. உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள் ?


தவறானவர்களால்தான் " தவறான " தகவலை பரப்ப முடியும் ! என்னை பற்றி எனக்கும், என்னை நேசிப்பவர்களுக்கும் நன்றாகவே தெரியும் ! ஆகையால்... மெளனம் என்னும் மிக வலிமையான ஆயுதத்தை பயன்படுத்துவேன் !


9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள் ?


... அந்த இழப்பின் வலியை அனுபவித்து, வடுவை சுமப்பவன் என்ற முறையில், வாழும் காலம் முழுவதும் இணந்து வருவாள் என்ற நம்பிக்கையுடன் கைப்பிடித்தவளை வாழ்வின் ஆரம்பத்திலேயே இழக்கும் நிலை என் நண்பர்களுக்கு மட்டுமல்ல, யாருக்கும் வரவேண்டாம் என இறைவனை பிரார்த்தித்துகொண்டு...


உன் குழந்தைகளுக்கு தாயுமானவனாக இரு ! இனி வாழ்க்கையில் நீ எடுக்கும் எந்த முடிவும் உன் குழந்தைகளின் நல்வாழ்க்கைக்கு சாதகமானதாகவே இருக்க வேண்டும் ! உன் குழந்தைகளை நீ நடத்தும்விதம்தான் நீ உன் மனைவியை எப்படி நேசித்தாய் என்பதை சொல்லும்.


இழப்பை பொறுத்தவரை...

இதுமட்டுமல்ல...
எதுவும் கடந்துபோகும் !
மனவெளியில்
அதன் ஞாபக துகள்களை
நிரந்தரமாய் விட்டுவிட்டு !!


10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள் ?


வாசிப்பு... மற்றும் எழுத்து !


இந்த வாய்ப்பை எனக்களித்த நண்பர் கில்லர்ஜீக்கு நன்றி ( மெய்யாலுங்க... காமெடி கீமெடி பண்ணல ! )


இனி யான் பெற்ற துன்பத்தை பகிர்ந்துகொள்ளப்போகும் என் வலைநண்பர்கள்...


கிங் விஸ்வா - tcuintamil.blogspot.fr
கார்த்திக் சோமலிங்கா - www.bladepedia.com
காரிகன் - kaarigan-vaarththaiviruppam.blogspot.fr
அமுதவன் - amudhavan.blogspot.fr
மது எஸ் - www.malartharu.org
அருணா செல்வம் - arouna-selvame.blogspot.com
ஊமைக்கனவுகள் - oomaikkanavugal.blogspot.fr
ஸ்கூல்பையன் - www.schoolpaiyan.com
வாலிமீகி தேவகோட்டை - valmeegi.blogspot.com
முட்டா நைனா - muttanina.blogspot.com


பின்குறிப்பு : இந்த பத்து பேரில் பதிலளிக்கும் முதல் மூன்று பேருக்கு, எனது சாமானியனின் கிறுக்கல்கள் முதல் பாகம் புத்தகம் இனாமாக அனுப்பிவைக்கப்படும். ( நான் இப்படியே எழுதிகொண்டிருந்து, மக்கள் தாமஸ் ஆல்வா எடிசனை மறக்கும் சூழ்நிலையும் ஏற்படாதிருந்தால் இந்த புத்தகம் 2020ல் வெளிவரும் என்பதை தெரிவித்துகொண்டு, புத்தகத்தை பெற சுய விலாசமிட்ட பெரிய கவருடன், பிரான்சிலிருந்து உங்கள் முகவரிக்கு அனுப்ப தேவைப்படும் தொகையையும் தாங்கள் அனுப்பவேண்டும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் !!! )

41 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. இவை நண்பர் ஊமைக்கனவுகள் எனக்கு அனுப்பிய பதில்கள் !

      " சங்கிலித் தொடர் வணிகம் போல்தான். பத்து கேள்விகள் . நான் நுழைகின்ற வலைப்பூக்களில் எல்லாம் நுழைந்து என்னையும் உள்ளிழுத்து விட்டுவிட்டன. விருப்பமில்லாவிட்டாலும், என்னையும் பொருட்டெனக் கருதிப் பதிலிடக் கோரிய நட்புகளைப் புறந்தள்ள முடியாமையால் மட்டுமே இதற்கு விடையளிக்கக் கருதினேன். தயவு செய்து எந்தப் பதிலையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீங்க!

      1.உங்களுடைய 100 பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?

      நானில்லாமல் என் குடும்பத்தார் மட்டும் கொண்டாட விரும்புகிறேன்.

      2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

      இன்னம் கற்றுக்கொள்ளாதவற்றைத்தான்!

      3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

      இதோ இதைத் தட்டச்சு செய்யும் இந்தக் கணம்,
      நான் மிக மதிப்பவர்களையும் உள்ளிழுத்துப்போட்டு இப்படிப் பத்துக் கேள்விகள் கேட்டு விளையாட்டை ஆரம்பித்துவைத்த அந்தப் புண்ணியாத்மாவை நினைத்துத்தான். இதுக்காகவே ரூம் போட்டு உட்காந்து யோசிப்பாங்களோ?

      4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?

      24 மணி நேரம் பவரிலேயே உள்ளவர்கள் தானே அதற்காகக் கவலைப்பட வேண்டும் என்னிடம் தான் எந்தப் பவரும் இல்லையே!

      5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன ?

      முதலில் ஒன்றைச் சொல்லி விடுகிறேன்.

      நான் குழந்தைத்திருமணத்தை ஆதரிப்பவன் இல்லை. அதனால் குழந்தைகளின் திருமணம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
      அவர்கள் பெரியவர்கள் ஆன பின் அவர்களுக்கு நான் சொல்ல என்ன இருக்கிறது?

      6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

      உலகப் பிரச்சனையைத் தான்!

      7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

      யாரெல்லாம் எனக்கு அட்வைஸ் கொடுக்கிறார்களோ அனைவரிடமும். காதைப் பொத்திக்கொள்வது நாகரிகமாக இருக்காதே!


      8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?

      அவர்கள் இன்னும் எப்படி அதைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்று நினைவிலுள்ள நாலு புத்தகங்களை வைத்துக் கொண்டு அவர்களுக்கு வலைப்பூ இருந்தால் அதில் பின்னூட்டம் இடுவேன்.

      9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

      பத்தாவது கேள்வியை அவரிடம் கேட்பேன்.
      “உங்கள் வீட்டில் தனியாக என்ன செய்வீர்கள்?“

      10.உங்கள் வீட்டில் தனியாக என்ன செய்வீர்கள்?

      மனைவியை இழந்த அந்த நண்பரைத் துணைக்கு அழைத்து வந்து தனிமையை விரட்டுவேன்.



      ( இவனப் போயி பதில்சொல்லச் சொன்னோமே என இணைய உறவுகள் கோபித்துக் கொள்ள வேண்டாம் ) "

      இல்லை நண்பரே ! கோபித்துகொள்ளவில்லை ! உங்களிடம் பதில்கள் கேட்டதற்கு மகிழ்கிறேன் ! அனைத்து பதில்களுமே அருமை !

      - ‍‍சாமானியன்


      ஊமைக்கனவுகள் மற்றும் நண்பர் கார்த்திக் சோமலிங்கா ஆகியோரின் பின்னூட்டங்களை படித்தபிறகுதான் இந்த சுழற்சி முறையில் உள்ள அபத்தங்களும் புரிந்தது ! ஆனாலும் என் அழைப்புக்கு மதிப்பளித்து விடைகளை பின்னூட்டமாக அனுப்பிய இவர்களுக்கு என் நன்றிகள் பல. மேலும் இவர்கள் இருவரின் பதில்களும் படு யதார்த்தமாக, முக சுவாரஸ்யமாக உள்ளன.

      Delete
    2. ithai saamaaniyanidam ethirparkavillai
      kelvi ketpathu oru vagai thodar
      bathil alipathu oru vagai thodarkathai
      sila bathilgal logic
      sila bathilgal janakavarchi
      sila bathilgal poyaiyana unmai
      unarthanvanuku unmai unmai
      sabash sabash
      sattia

      Delete
    3. உண்மையான வார்த்தைகள் சத்யா அவர்களே !

      நன்றி
      சாமானியன்

      Delete
  2. நண்பர் சாமானியன் அவர்களுக்கு 6 வது, 9 வது பதில்கள் தங்களின் உயர்ந்த (ஈபில் டவர் போன்ற) மனதை வெளிப்படுத்தியது எனது மனம் திறந்த பாராட்டுக்கள், அடுத்து 1 வது பதில் எனக்கு புரியவில்லை காரணம் 100 வயதில் எப்படி.... ஓடி... அதுவும் பிடித்து... அதுசரி பத்துப்பேரில் ஒருவராக வால்மீகி தேவகோட்டை யை ஏன் ? இணைத்தீர்கள் நான் உங்களை மாட்டி விட்டதற்கா ? ஐயாசாமி ஆளை விடுங்க வால்மீகியும் நானே Killergeeயும் நானே யேன் அறிவுக்கு அதுவே ஓஓஓஓஓவ்வ்வ்வர்ர்ர்ரு.....

    ReplyDelete
  3. " அதுசரி பத்துப்பேரில் ஒருவராக வால்மீகி தேவகோட்டையை ஏன்... "

    ஐயா... சாமி... ஏதோ ஒண்ணு கண்ணை கட்டிடிச்சி... அவனா நீயீ கதை உண்மையாகிடிச்சே ஆத்தாடி ! சரி சரி, அரசியல் மாதிரி வலைதளங்களிலும் இதெல்லாம் சகஜம்ஜீ !

    சாமானியன்

    ReplyDelete
  4. சார், இப்படி கோர்த்து விடுவீர்கள் என்று நினைக்கவே இல்லையே?

    முயல்கிறேன்.

    இருந்தாலும் உங்கள் பதில்கள் அபாரம்.

    குறிப்பாக அந்த கரண்ட் கட் பதில்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி விஸ்வா !

      உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன்....

      சாமானியன்

      Delete
  5. // மிஸ்ட்டர் மனசாட்சி தீர்மானிப்பதுதான் ! //

    அப்படிச் சொல்லுங்க...

    பாராட்டுக்கள்...

    ReplyDelete
  6. அருமையான பதில்கள் தோழர்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. வெளியிட அல்ல
    மீண்டும் பதில்கள் வேண்டுமா என்ன தோழர்..?
    நண்பனாக அறிவித்தது மகிழ்வு..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழர் !

      " மீண்டும் பதில்கள் வேண்டுமா... "

      உங்க‌ளின் சமூக அக்கறை கொண்ட பதில்களை உங்கள் வலைப்பூவிலேயே படித்துவிட்டேன். அருமையான பதில்கள் !

      நன்றி
      சாமானியன்

      Delete
  8. சாம்,

    என்னை உங்கள் நண்பர்கள் வட்டத்தில் சேர்த்ததற்கு நன்றி.

    பட்டினிக் கொடுமை பற்றிய உங்கள் கருத்து, மனைவி இல்லாத நிலை குறித்த உங்கள் கருத்து இரண்டும் என் மனத்தைக் கவர்ந்தன. உங்களின் வலி மிக ஆழமானது. இதை நான் எதிர்ப்பார்க்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. காரிகன்,

      உங்கள் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி.

      எழுத்தில் என் சொந்த வலிகளை குறிப்பிட என்றுமே நான் விரும்பியதில்லை... ஆனால் அப்படி ஒரு கேள்வியின் முன்னால் ஏனோ உண்மை நிலையை சொல்ல தோன்றிவிட்டது !

      சாமானியன்

      Delete
  9. நன்றி நண்பரே! சுழற்சி முறை பதிவுகளுக்கு ஏற்கனவே சில நண்பர்களிடம் (மிகுந்த தர்மசங்கடத்துடன்) மறுப்பு தெரிவித்து இருந்ததால், அந்த முடிவில் இருந்து பின்வாங்க இயலாத நிலையில் இருக்கிறேன்! :(

    இருந்தாலும் பின்னூட்டமாகவே பதில்களை பகிர்ந்து விடுகிறேன்! :)

    1. உங்களுடைய நூறாவது பிறந்த நாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள் ?
    அந்த வயதில், மற்றவர்கள் கொண்டாடுவதை உட்கார்ந்து அல்லது படுத்துக் கொண்டு வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்! :)

    2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் ?
    ஃபிரெஞ்சு மொழி - நேரடியாக ஃபிரெஞ்சு காமிக்ஸ் படிப்பதற்காக!

    3. கடைசியாக சிரித்தது எப்போது ? எதற்காக ?
    கடந்த கேள்விக்கு பதில் அளிக்கையில்! முதலில் ஆங்கிலத்தை உருப்படியாக கற்றுக் கொள் என்கிறது உள்ளக் குரல்!

    4. 24 மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன ?
    பெங்களூரில் அந்த அசம்பாவிதம் இதுநாள் வரை நேரவில்லை!

    5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் நீங்கள் அவர்களுக்கு சொல்ல விரும்புவது என்ன ?
    வாழ்த்துக்கள் மட்டும்! :) அந்த நாளில் அட்வைஸ் மழை பொழிய விரும்பவில்லை!

    6. உலகத்தில் உள்ள பிரச்சனைகளில் ஒன்றை உங்களால் தீர்க்க முடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள் ?
    பசி!

    7. நீங்கள் யாரிடம் அட்வவைஸ் கேட்பீர்கள் ?
    கேட்காமலேயே தருவதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள்!

    8. உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள் ?
    தன்னிலை விளக்கம் அளிப்பேன். கட்டுப்படுத்த இயலவில்லை என்றால் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையாக இருந்து விடுவேன்.

    9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள் ?
    அந்த நேரத்தில் அவரை தனிமையில் விடுவதே நல்லது... ஈடு செய்ய இயலாத இழப்பு அது! (இதற்கான உங்கள் பதிலை படித்தேன், வருந்துகிறேன் நண்பரே)

    10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள் ?
    என் அறையை ஒழுங்கு செய்வேன்!

    :)

    ReplyDelete
    Replies
    1. உங்கள் நிலையிலிருந்து மாறாத அதே நேரத்தில் என் விருப்பத்துக்கு மதிப்பளித்து பதில்களை பின்னூட்டமாய் பதித்து மனதை தொட்டு விட்டீர்கள் ! என்னால் இதே போன்ற இக்கட்டு நிலைக்கு ஆளானவர் நண்பர் ஊமைக்கனவுகள்.

      உங்கள் இருவரின் கருத்துகளை கண்ட பின்னர்தான் இந்த மாதிரி சுழற்சி முறைகளில் இருக்கும் அபத்தங்களும் எனக்கு புரிந்தன !! இந்த மாதிரி முறைகளில் ஒளிந்திருக்கும் உளவியல் ரீதியிலான காரணங்களே நான் இந்த சுழலுக்குள் விரும்பி முழ்க காரணம் !

      ஒரே கேள்வி ஒவ்வொருவரிடத்திலும் ஏற்படுத்தும் தாக்கத்தை தெரிந்து கொள்ளலாம் என்பதை தாண்டி ஒருவருக்கொருவர் மாறுபடும் வாழ்வியல் கண்ணோட்டம் சுவாரஸ்யமான ஒன்று !

      உதாரணமாக நான் ஒவ்வொரு கேள்வியையும் படு சீரியசாக எடுத்துக்கொண்டு யோசித்து கருத்து கந்தசாமியாக, வார்த்தை அலங்காரங்களோடு பதலளிக்க முயன்றிருக்கிறேன்... நீங்கள் மற்றும் ஊமைக்கனவுகள் படு யதார்த்தம் !!!

      Rabbit shoot பதில்கள் ! உங்கள் இருவரின் பதில்களையும் மிகவும் ரசித்து படித்தேன் !

      " இதற்கான உங்கள் பதிலை படித்தேன், வருந்துகிறேன் நண்பரே "

      எழுத்தில் என் சொந்த வலிகளை குறிப்பிட என்றுமே நான் விரும்பியதில்லை... ஆனால் அப்படி ஒரு கேள்வியின் முன்னால் ஏனோ உண்மை நிலையை சொல்ல தோன்றிவிட்டது !




      நன்றி
      சாமானியன்

      Delete
  10. #பெண்ணியம், ஆணியம் போன்ற பட்டிமன்ற தலைப்புகளையெல்லாம் வாழ்க்கைக்குள் நுழைத்து குழம்பாதீர்கள் ! இல்லறம் என்பது விட்டுகொடுத்தல்... ஈகோ அறுத்தல் !#

    எவரும் சொல்லியிராத அற்புதமான பதிலுரை சாமானியன்.

    ReplyDelete
    Replies
    1. ன்றி ஐயா !

      இதனை நான் வார்த்தை அலங்காரத்துக்காக குறிப்பிடவில்லை ! இன்றைய‌ நவீன வாழ்க்கை முறையின் அபத்த வாதங்களில் இதுவும் ஒன்றாக படிந்துவிட்டது !

      சாமானியன்

      Delete
  11. சாமானியரே! உங்கள் அசாதாரணமான பதில்கள் கண் டேன் . கேள்விகள் தயாரிப்போர் எவ்வளவு ஜாக்கிரதை யாகத் தயாரிக்க வேண்டும் என்பது 9வது கேள்வியிலிருந்து தெரிகிறது. தான் இழக்காத ஒன்றைப்பற்றிய ஒருவனின் கருத்தும் , அதை இழந்துவிட்ட ஒருவனின் கருத்தும் எப்படி ஒன்று பட முடியும் ? எப்போதும் நகைச்சுவை யோடு மட்டுமே விஷயங்களை அணுகி விட முடியாது என்பதைப் புரிந்து கொண்டேன் .

    ReplyDelete
    Replies
    1. ஐயா,

      வயது,அனுபவம், அறிவு அனைத்திலும் மூத்தவரான நீங்கள் என் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து எனது வலைப்பூவில் உடனடியாக கருத்திட்டதற்கு நன்றி.

      என் சொந்த வாழ்க்கையின் சம்பவங்கள் வெளியே தெரிய தேவையில்லை என்பதாலேயே " சாமானியன் " முகமூடி அணிந்தேன் ! ஆனால் அந்த கேள்விக்கு முன்னால் முகம் காட்ட வேண்டிய நிலை !

      துன்பியல் சம்பவங்கள் நேரும் போது வேண்டுமானால் சாத்தியப்படாது போகலாம், ஆனாலும் அவற்றிலிருந்து மீள நகைச்சுவை உணர்வு அவசியம் தான் ஐயா !

      " இடுக்கண் வருங்கால் நகுக "... வள்ளுவனின் வாக்கு சத்தியம் ! அதனால்தான் இந்த சாமானியனாலும் வாழ்க்கையை தொடர முடிகிறது !!

      நன்றி
      சாமானியன்

      Delete
  12. //ஒருவர் வெட்டிய பாத்தியை பற்றி மற்றொருவர் " லைக் " போடும் வசதியுடன் !//


    ஹா ஹா... சரியான அணுகுமுறை...

    ஆறு மற்றும் ஏழாம் பதில்களில் தனித்துவமாக நிற்கிறீர்கள்.....

    ஊமைக்கனவுகள் மற்றும் கார்த்திக் சோமலிங்கா ஆகியோரின் பதில்களும் அருமை....

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்கூல்பையன் அவர்களே !

      Delete
  13. அனைத்தும் அருமை.
    ஐந்தாவது பதில் அசத்தல் சாமானியன் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அருணா செல்வம் அவர்களே !

      Delete
  14. ஊமைக்கனவுகளின் பதில்கள் எதார்த்தமாகவும் சுவையாகவும் இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. அவரின் சார்பில் என் நன்றிகள் ! தங்களுக்கு நேரம் கிடைப்பின் ஊமைக்கனவுகளின் வலைப்பூவினை க‌ட்டாயம் படியுங்கள்... உங்களுக்கு மிகவும் பிடிக்கும் கவிதை வலைப்பூ ! http://oomaikkanavugal.blogspot.fr/

      சாமானியன்

      Delete
  15. நன்றி!! நன்றி!!! சாமானியன் அவர்களுக்கு... நன்றி! சொல்வதின் அர்த்தம் உங்களுக்கு தெரியும் என்று நிணைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நான் கொஞ்சம் ட்யூப் லைட் நண்பரே... சத்தியமா புரியல... பொதுவுல வேணாம்ன்னா என்னோட மின் அஞ்சலுக்கு நன்றிக்கான காரணத்தை அனுப்புங்களேன்....!!!!

      Delete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. உங்க விடைகளையும், ஊமை கனவுகளையும் மாற்றிமாற்றி பார்த்து குழம்பி போய்டேன். சாரி!//ஒருவர் வெட்டிய பாத்தியை பற்றி மற்றொருவர் " லைக் " போடும் வசதியுடன் !// செம !!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்களே,

      உங்களின் முதல் வருகை தொடர் வருகைகளாகுக ! உங்களை போன்றவர்களின் கருத்துகள் எங்களை போன்ற புதிய சாமானியர்களுக்கு அவசியம்.

      சாமானியன்

      Delete
  18. // உங்களை போன்றவர்களின் கருத்துகள் எங்களை போன்ற புதிய சாமானியர்களுக்கு அவசியம்//
    நீங்க வேற சகோ :)) நான் எல்.போர்டு தான்!!
    //உங்களின் முதல் வருகை தொடர் வருகைகளாகுக// இதோ வந்துட்டேனே:))

    ReplyDelete
    Replies
    1. அட்ரா ! அட்ரா ! கலக்குறீங்களா இல்லை கடிக்கறீங்களான்னே தெரியலையே சகோதரி ?!!!

      Delete
  19. நன்றிக்கு அர்த்தம். பத்தில் ஒருவராக என்னை கோர்த்து விடாததற்கு ..........!!!

    ReplyDelete
    Replies
    1. அப்ப... எல்லா கோட்டையும் அழிச்சிட்டு மறுபடியும் ஆரம்பிச்சிடலாமா ?!!!

      Delete
  20. சிந்திக்க வைக்கும் சிறந்த பதில்கள்

    http://ypvn.0hna.com/

    ReplyDelete
  21. alganara varthai mattumillai nanbere arumaiyana karuthu petagam.endraiya elasuku thevaiyana arivurai.valiyin kodumai marathathuthan.thangikolla erivan valimai kodukkattum nanba.

    ReplyDelete
  22. ழி !

    தங்களின் முதல் வருகைக்கும் இதமான வார்த்தைகளுக்கும் நன்றிகள் பல ! கருத்து, அறிவுரை என்பதைவிட என் வாழ்க்கையின் அனுபவங்களை குறுக்குவெட்டு பார்வையாகவே என் பதிவுகளில் வைக்க விரும்புகிறேன்.

    இறைவன் கொடுக்கும் வலிமை உங்களை போன்றவர்களின் ஆதரவின் மூலமே என்னை வந்தடைகிறது தோழி !

    நன்றி

    ReplyDelete
  23. சிறப்பான கேள்விகள்! நல்ல பதில்கள்! ஒன்பதாவது கேள்விதான் கொஞ்சம் திகைப்புத் தருவதாக இருந்தது. இப்படிப்பட்ட கேள்வி எதற்காக எனத் தோன்றியது. பிறகு, கேள்வி கில்லர்ஜியுடையதாக இருக்கலாம் என்று புரிந்து, எந்த மனநிலையில் இதை அவர் கேட்டிருப்பார் என உணர முடிந்தது. :-( மிகவும் நல்ல மனிதர் அவர். அவரைப் போன்ற கணவன்மார்களை இனி காண்பது அரிது!

    ReplyDelete