Saturday, August 2, 2014

விடுமுறை விண்ணப்பம் !

பிரான்சில் ஜூலை முதல் தேதியிலிருந்து கோடை விடுமுறை தொடங்கிவிட்டது  ! செப்டம்பர் முதல் தேதி வரை, இரண்டு மாதங்களுக்கு நாடே மந்தமாகிவிடும் !

" வருடத்தின் பத்து மாதங்களுக்கு மட்டும் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் ஒரே நாடு பிரான்ஸ் ! " என்றான் ஒரு அமெரிக்க பத்திரிக்கையாளன் ! உண்மைதான் !

தேசிய விழா நாளான ஜீலை 14 அன்று உலகின் மிக அழகிய சதுக்கம் என போற்றப்படும் சாம்ஸ் எலிசே சதுக்கத்தில் கொடியேற்றி ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டு சர்வதேச விருந்தினர்களுடன் மதிய உணவருந்திவிட்டு கோடை விடுமுறைக்கு பெட்டி படுக்கைளுடன் கிளம்பிவிடுவார் ஜனாதிபதி ! அவருடன் அரசு இயந்திரமும் இடம் மாறும் ! ( தமிழ்நாட்டின் கொடநாடு உங்களுக்கு ஞாபகம் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல ! )

பாரீஸ் மாநகரமே வெறிச்சோடி சுற்றுலா முனைகளில் மட்டுமே கூட்டம் அள்ளும் ! மற்ற இடங்களில் வணிகம் தொடங்கி மருத்துவசேவை வரை எங்கும் குறைந்தபட்ச ஊழியர்கள் மட்டுமே !

அவர்களுக்கு விடுமுறை தவிர்க்ககூடாத புனித யாத்திரை !

விடுமுறையை பற்றி பேசும் போதெல்லாம் என் பிரெஞ்சு தோழி கரோலினின் கண்கள் மின்னும் !

" நான் விடுமுறைகளின் பொழுதுகளில்தான் வளர்ந்தேன் ! "  என்பாள்

யக்கமும் இடம் பெயர்தலும் இயற்கையின் நியதி. உயிர்த்திருப்பதற்கான ஆதாரங்கள் ! ஆதிமனிதன் விடாது இடம்பெயர்ந்தான். கலாச்சாரங்கள் தோன்றி மொழிகள் வளமானதற்கு ஆதிமனிதர்களின் இடப்பெயர்வே காரணம்.

கலாச்சாரங்களும் மொழிகளும் ஸ்திரப்பட்டு நாடுகள் தோன்றிய பிறகு மனித வாழ்க்கையில் இடம் பெயர்தல்கள் குறைந்துவிட்டன ! போர்களின் பெயரிலும்,இன அழிப்பின் துயரிலும் இடம் பெயர்வது மரணிப்பதற்கு சமமானது !

ஆண்டு முழுவதும் வேலை வேலை என ஓடிவிட்டு விடுமுறையில் மட்டுமே சுதந்திரமாய் சுவாசிப்பதின் அருமையை உணரும் இன்றைய மனிதனின் நிலையை புரிந்துகொண்டால்  கரோலின் கூறியதின் அர்த்தம் புரியும். பணி நிமித்தமாய் பல நாடுகள் ஓடி பல்வேறு மனிதர்களை சந்திப்பதற்கும் எந்த கட்டுபாடுகளும் அற்ற விடுமுறை பொழுதுகளில் அந்நிய ஊர்களின், தேசங்களின் மனிதர்களுடன் பழகி அவர்களின் பண்பாடுகளை கற்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு !

சில ஆண்டுகளுக்கு முன்னர் பதிணெட்டு வயது பிரெஞ்சு இளைஞன் ஒருவன் பகுதிநேர ஊழியனாக என்னுடன் பணிபுரிந்தான். மது, போதை பொருட்கள் என வார‌ இறுதி முழுவதும் ஏதாவது ஒரு போதையில் திளைப்பான் ! சிக்கு தலையும் அழுக்கு உடையுமாக அவனை  காணும்போதெல்லாம் என் உயரதிகாரியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் என்றாலும் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாதபடி அவனின் வேலை சுத்தம் !

சட்டென ஒரு நாள் படிப்பையும் வேலையையும் ஒரு சேர உதறியவன் , பதிணெட்டு வயதில், அவனின் வயதையொத்த இளம் பெண்ணுடன்,  விமான டிக்கெட்டும் சில நூறு யூரோ டாலர்களுமாக இந்தியா போகிறேன் என கிளம்பினான்  !  ( கவனித்து வாசிக்கவும் ! அவர்கள் ஓடிப்போகவில்லை !! )



 ஆங்காங்கே தங்கி சிறுவேலைகள் செய்தபடி இமயம் முதல் குமரிவரை சுற்றிவிட்டு இரண்டு வருடங்களுக்கு பிறகு என்னை காண கோட்டும் டையுமாக வந்தான் !

" என்ன திருந்திவிட்டாய் போலிருக்கிறது ?! " என கேட்டேன் !

" திருந்தவில்லை ! தெளிந்துவிட்டேன் ! இரண்டு வருடங்கள் உலகம் சுற்றி படித்தேன் ! " என கண்ணடித்தான் !

மேலை நாட்டவர்கள் அப்படித்தான் ! அவர்களின் தெளிவு வேறொரு நிலை ! லாபமோ நட்டமோ அனுபவமே பிரதானம் ! பதிணென் பருவத்தின் இறுதிவரை கஞ்சா புகைத்துகொண்டிருப்பவன் இருபது, இருபத்துமூன்றாம் பிறந்த நாளன்று திடீர் ஞானம் பெற்றுவிடுவான் ! திருத்திய முடியும் டையுமாய் அவசரமாய் இறுதியாண்டு படிப்பை முடித்து, வேலை தேடி, கேர்ள் பிரெண்டுடன் தனிக்குடித்தனம் ஆரம்பித்துவிடுவான் !

சரி, அது போகட்டும் !

ரு பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை கொடைநாள் திருவிழாக்கள், சந்தனகூடு வைபவங்கள், மேரிமாதாவின் ஊர்வல தினங்கள் என திருவிழாக்களால் நிறைந்தன‌ நம் விடுமுறைகள் !

கோடை விடுமுறைகளில் நகரங்களிளிருந்து ஊர் திரும்பிய பிள்ளைகள் கொண்டு வந்த ஆச்சரியங்கள் பல ! அதற்கு மாற்றாக கிணற்று நீச்சல், போர்வெல் குளியல், திருவிழா கொண்டாட்டங்களின் தூங்காத ராவுகள், தாத்தா பாட்டி, அத்தை மாமாமார்களின் அன்பு உபசரிப்பு என நீங்காத பல நினைவுகளுடனும், திரும்பி வரும் ஏக்கத்துடனும் ஊர் திரும்பினார்கள் !

இன்று நம்மை வரவேற்க ஆட்களில்லாமல் கிராமங்கள் வெறிச்சொடிவிட்டன ! தாத்தா பாட்டிகள் தங்களுக்கு பரிச்சயமில்லாத பெருநகரங்களின் அடுக்குமாடி குடியிருப்புகளில் பிள்ளைகளால் அன்புடன் அடைத்துவைக்கப்பட்டிருக்கின்றனர் ! மிச்சமிருக்கும் சித்தப்பா மாமாக்களெல்லாம் ஆன்லைன் வர்த்தகம், டாப் அப் பிசினஸ் என, கூட ஒரு வேலை தேடி வருமானத்தை பெருக்க வருடம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் ! சித்திகளும் அத்தைகளும் சின்னதிரையின் முன்னால், சீரியல்களினுள் வாழ்க்கையை தொலைத்துவிட்டார்கள் !

பிள்ளைகளுக்கு அடுத்த ஆண்டு படிப்பின் மினி வருடமாக மாறிவிட்டன கோடை விடுமுறைகள் ! மிச்சமிருக்கும் நேரத்தை கழிக்க கார்ட்டூன் சானலும் வீடியோ கேமும் ! கிராமத்து விழாக்கள் கூட தங்கள் காலகட்டத்தை சுருக்கிகொண்டுவிட்டன ! பல காவல்தெய்வங்கள் புழுதிபடிந்து வெறிச்சோடிய முற்றத்தை நோக்கியபடி நிற்கின்றன, மக்களைதேடி !




நாளை  இந்தியா கிளம்புகிறேன்...

எங்களை போன்ற வெளிநாடுவாழ் மக்களுக்கு விடுமுறைக்கு தாய்நாடு வருவது என்பது ஒரு கல்லில் மாமரத்தையே சாய்க்கும் திறமைக்கு ஈடான சாகசம் ! ஒரு வருட சேமிப்பின் கணிசமான பகுதியை செலவு செய்யும் போது, அங்கிருக்கும் ஒரு மாத காலகட்டத்தில் சொந்த பந்தங்களின் குடும்ப விழாக்கள் தொடங்கி ஊர் திருவிழா வரை எல்லாவற்றுக்கும் இருக்கும்படி திட்டமிட்டு, மிச்ச நாட்களில் பங்காளி பகையாளிகளை சந்தித்து, அடுத்து ஊர் திரும்பும் வரை அங்கே கிடைக்காத பொருட்களை இங்கே சேகரிப்பதுவரை ஒன்றையும் தவறவிட்டுவிடக்கூடாது !




 ஒரு சித்தப்புவை பார்க்க மறந்தால் கூட " வெளிநாட்டு சம்பாத்தியம்ல... எங்களையெல்லாம் கண்ணுக்கு தெரியாதப்பா ! " என்ற அவப்பெயரை சுமக்க‌ நேர்ந்து ஒரு மாத விடுமுறை சந்தோசமும் சட்டென மறைந்துவிடும் !

சென்ற ஆண்டு இந்தியா வந்தபோது உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்றிருந்தேன் ! என்னை திரும்பி பார்த்து வா என்றவர்கள் மீன்டும் டிவி சீரியலில் லயித்துவிட்டார்கள் !

சரிதான் ! நான் அடுத்த ஆண்டு மீன்டும் வரலாம் ஆனால் அன்றைய டிவி சீரியல் வருமா ?!

நேற்று கேம் பாய், நின்டென்டோ, ப்ளே ஸ்டேசன் என வீடியோ கேம்கள் தொடங்கி மடி கணினி வரை அனைத்தையும் தேடி தேடி பெட்டிக்குள் அடைத்துகொண்டிருந்தான் என் பத்து வயது மகன் !

" இதெல்லாம் வேண்டாம் ! அங்கு நீ படிக்க  நிறைய இருக்கிறது ! " என்றேன்.

" எதை படிக்க‌ ?! " என கேட்டான்.

" நம் மண்ணை, மனிதர்களை ! " என்றேன்

புரிந்தும் புரியாமலும் தலையாட்டினான் ! அவன் நன்றாக படிக்க‌ வேண்டும் !


வலைப்பூ என் ஆத்மார்த்தமானதாக மாறிவிட்டதால் விடுமுறையிலும் தொடர்வேன் !


 இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.


49 comments:

  1. //கோடை விடுமுறைகளில் நகரங்களிளிருந்து ஊர் திரும்பிய பிள்ளைகள் கொண்டு வந்த ஆச்சரியங்கள் பல !//

    ஆம்... ஆம்.... ஆம்...

    //அடுக்குமாடி குடியிருப்புகளில் பிள்ளைகளால் அன்புடன் அடைத்துவைக்கப்பட்டிருக்கின்றனர்//

    ஆம்... ஆம்... என்ன கொடுமை!

    எல்லோரும் உணர்ந்ததை அழுத்தமாக, அழகான வரிகளால் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நண்பரே !

      ஆமாம், " பணத்துரத்தலின் " பலனால் நாம் இழந்தவற்றில் விடுமுறை மகிழ்ச்சிகளும் அடக்கம். விடுமுறைகள் இல்லாமல் இல்லை, ஆனால் அதிலும் பரபரப்பு !

      நன்றி
      சாமானியன்

      Delete
  2. படிக்கப் படிக்க மகிழ்ச்சி மேலிடுகிறது நண்பரே
    தமிழகத்தில் குழந்தைகளின் நிலையை நினைத்தாலே பாவம்தான்.
    அவர்களுக்கு ஏது கோடை விடுமுறை
    கோடைகால பயிற்சி காத்திருக்கிறது,
    பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை கோடைக்காலப் பயிற்சிக்கு அனுப்ப
    தயாராய் காத்திருக்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. மேலை நாடுகளை பார்த்து நாம் சூடு போட்டுகொண்டவற்றில் இந்த கோடை பயிற்சியும் ஒன்று ! ஆனால் அவர்களின் பயிற்சி வேறு வகை. பெற்றோர்கள் ஒரு பக்கம் சுற்றுலா கிளம்பும் போது பிள்ளைகளை பயிற்சி முகாம்களின் மூலம் வேறு எங்காவது அனுப்புவார்கள். பாடப்புத்தகம் கட்டாயமாக கூடாது !

      நாம் விடுமுறையில் பள்ளி புத்தக பையை விடுவதாயில்லை !

      நன்றி
      சாமானியன்

      Delete
  3. ## எதை படிக்க‌ ?! " என கேட்டான்.

    " நம் மண்ணை, மனிதர்களை ! " என்றேன் ## இந்த வரிகளில் நிலைத்து விட்டது உங்கள் மொத்தக் கட்டுரையின் சாராம்சம் ..மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ! ஏட்டு சுரைக்காய்களை சமைக்க முயலும் இன்றைய காலத்தில் மனிதர்களை படிப்பது மிக அவசியம் !

      நன்றி சகோதரி
      சாமானியன்

      Delete
  4. அண்ணா வணக்கம்.
    ராகுல சாங்கிருத்தியாயனின் ‘‘வால்காவிலிருந்து கங்கைவரை‘‘ படித்திருப்பீர்களோ என்னமோ அந்த முழுநூலின் சாரமும்
    “இயக்கமும் இடம் பெயர்தலும் இயற்கையின் நியதி. உயிர்த்திருப்பதற்கான ஆதாரங்கள் ! ஆதிமனிதன் விடாது இடம்பெயர்ந்தான். கலாச்சாரங்கள் தோன்றி மொழிகள் வளமானதற்கு ஆதிமனிதர்களின் இடப்பெயர்வே காரணம்.
    கலாச்சாரங்களும் மொழிகளும் ஸ்திரப்பட்டு நாடுகள் தோன்றிய பிறகு மனித வாழ்க்கையில் இடம் பெயர்தல்கள் குறைந்துவிட்டன .“ என்னும் வரிகளில் இருக்கிறது.
    இன்று பேசப்படும் தமிழின் மிகப்பெரும் எழுத்தாரளர்கள் பலரும் தேசாந்திரிகளாய்த் திரிந்து அதன் அனுபவங்கள் சேமித்தவர்களாகவே இருப்பதைக்காண முடியும்.
    பயணம் சுவரில்லாப் பள்ளிக் கூடம்.
    ஒவ்வொருவரிலும் ஒவ்வொன்றிலும் கற்க
    ஏராளமான விஷயங்களைக் கொண்ட மாபெரும் புத்தகம்,.....,
    “படிக்கத்தெரிந்தவர்களுக்கு“
    சரிதானே அண்ணா!
    விரும்பிப் படித்தேன்!
    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதர‌,

      சொன்னால் நம்புவீர்களா என தெரியவில்லை ! ராகுல சாங்கிருத்தியாயனின் ‘‘வால்காவிலிருந்து கங்கைவரை‘‘ புத்தகத்தை நான்கு வருடங்களுக்கு முன்னர் வாங்கினேன்... இன்னும் படிக்க நேரம் கூடவில்லை ! படிக்கும் ஆசையில் வாங்கி படிக்க முடியாமல் புத்தக அலமாரியில் காத்திருக்கும் புத்தகங்கள் பல ! " கண்டதையெல்லாம் படிக்க " ஆசைப்படுபவர்களுக்கு நேரும் நிலையிது !!!

      “படிக்கத்தெரிந்தவர்களுக்கு... பயணம் சுவரில்லாப் பள்ளிக் கூடம்.
      ஒவ்வொருவரிலும் ஒவ்வொன்றிலும் கற்க
      ஏராளமான விஷயங்களைக் கொண்ட மாபெரும் புத்தகம்,.....,

      அருமை சகோதரரே ! மிக சரியான வார்த்தைகள். இயற்கை நமக்கு கற்றுவிக்க விடாது முயன்றுகொண்டிருக்கிறது ! நாம் தான் விலகி போகிறோம் !

      நன்றி
      சாமானியன்


      Delete
  5. மிக அழுத்தமான ஒரு பதிவு! அதனால் அழுந்தப் பதிந்துவிட்டது!!!

    //இன்று நம்மை வரவேற்க ஆட்களில்லாமல் கிராமங்கள் வெறிச்சொடிவிட்டன ! தாத்தா பாட்டிகள் தங்களுக்கு பரிச்சயமில்லாத பெருநகரங்களின் அடுக்குமாடி குடியிருப்புகளில் பிள்ளைகளால் அன்புடன் அடைத்துவைக்கப்பட்டிருக்கின்றனர் ! மிச்சமிருக்கும் சித்தப்பா மாமாக்களெல்லாம் ஆன்லைன் வர்த்தகம், டாப் அப் பிசினஸ் என, கூட ஒரு வேலை தேடி வருமானத்தை பெருக்க வருடம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் ! சித்திகளும் அத்தைகளும் சின்னதிரையின் முன்னால், சீரியல்களினுள் வாழ்க்கையை தொலைத்துவிட்டார்கள் !//

    நிதர்சனம்!

    //இதெல்லாம் வேண்டாம் ! அங்கு நீ படிக்க நிறைய இருக்கிறது ! " என்றேன்.

    " எதை படிக்க‌ ?! " என கேட்டான்.

    " நம் மண்ணை, மனிதர்களை ! " என்றேன்//

    அர்த்தம் பொதிந்த வரிகள்!!!!

    பல தாத்தா பாட்டிகளும், அம்மா அப்பாக்களும், இங்கு அடுக்கு மாடி கட்டிடங்களில் மட்டுமா? அவர்களின் கிராமங்களின் காற்றில், வெளிநாட்டு சென்டும், சோப்பும் மணக்கின்றதே!

    நீங்கள் வெளிநாட்டிலிருந்து வருகின்றீர்கள் உங்களுக்கே அந்த வரவேற்புதான் என்றால் உள்நாட்டு வாசிகளாகிய எங்களுக்கு என்ன வரவேற்பு இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்!!

    மிகவும் ரசித்து வேதனித்த பதிவு!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி !

      சித்திகளும் அத்தைகளும் சின்னதிரையின் முன்னால், சீரியல்களினுள் வாழ்க்கையை தொலைத்துவிட்டார்கள்...

      தொலைத்துவிட்டார்கள் என்பதை விட தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது பொருத்தமாக இருக்குமா ?!!!

      " பல தாத்தா பாட்டிகளும், அம்மா அப்பாக்களும், இங்கு அடுக்கு மாடி கட்டிடங்களில் மட்டுமா? அவர்களின் கிராமங்களின் காற்றில், வெளிநாட்டு சென்டும், சோப்பும் மணக்கின்றதே! "

      இந்த வரிகளின் நான் எழுத மறந்த ஒடு உண்மையை குறிப்பிட்டுள்ளீர்கள்... பிழைக்க போன நாடுகளில் எப்படி வாழ்கிறோமோ ஆனால் தாயகம் திரும்பும் போதெல்லாம் செண்ட்டும் சோப்புமாக, படோப வாழ்க்கை நடத்தி வெளிநாடுகள் பற்றிய ஒரு மாய கனவினை விதைத்ததில் எங்களை போன்றவர்களின் பங்கும் உள்ளது !

      " நீங்கள் வெளிநாட்டிலிருந்து வருகின்றீர்கள் உங்களுக்கே அந்த வரவேற்புதான் என்றால் உள்நாட்டு வாசிகளாகிய எங்களுக்கு என்ன வரவேற்பு இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்!!"

      இதுவும் நிதர்சனம் !

      நன்றி
      சாமானியன்

      Delete

  6. " நம் மண்ணை, மனிதர்களை !

    அருமை நண்பா,,, சென்று வாருங்கள் நமது இந்தியாவுக்கு....

    ReplyDelete
    Replies
    1. தாயகத்திலிருந்து பதிலிடுகிறேன் நண்பரே !

      " சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா " பாடல், அதன் வரிகளுக்காக ஞாபகம் வருகிறது !

      நன்றி

      Delete
  7. அந்தக் கால விடுமுறை நாட்களின் கொண்டாட்டமே தனிதான்! இன்று இணையத்திலும் டீவியிலும் கழிந்து போகின்றது விடுமுறை! தாயகம் தங்களை அன்போடு வரவேற்கிறது. வருக! வருக!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பரே !

      தீபாவளி, பொங்கல் நாட்களில் கூட குடும்பத்தினரை காண போவதைவிட தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளில் முழ்கிவிடுவோர் அதிகமாகிவிட்டனர் !

      தங்களின் வரவேற்பு என்னை நெகிழச்செய்துவிட்டது !

      நன்றி

      Delete
  8. ***சென்ற ஆண்டு இந்தியா வந்தபோது உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்றிருந்தேன் ! என்னை திரும்பி பார்த்து வா என்றவர்கள் மீன்டும் டிவி சீரியலில் லயித்துவிட்டார்கள் !**

    பிரஞ்சு மக்கள் எல்லாம் முன்னேறிவிட்டார்கள். தற்போது அவர்கள் முன்னேறிக்கொண்டிருக்கும் வேகம், அதிவேகமாக முன்னேறிக்கொண்டு இந்தியர்களின் வேக்கத்தைவிட மிகக்குறைவே. எனக்கெல்லாம் "கல்ச்சர் ஷாக்" கொடுப்பது வேகமாக முன்னேறிக்கொண்டு இருக்கும் நம் தாயக மக்கள்தான். :)

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வருண் !

      நீங்கள் கூறியது உண்மை ! நுகர்வோர் கலாச்சாரம் தொடங்கி பொருளாதார வளர்ச்சி வரை அனைத்திலும் ஒரு உயரத்தை எட்டிவிட்ட மேலை நாடுகளின் வளர்ச்சியில் தேக்கநிலை வந்துவிட்டது ! எட்டடி, பதினாரடியெல்லாம் பாய்வது நம் தாயகம்தான் !

      தொடர்ந்து வருகை தாருங்கள் நண்பரே !

      நன்றி

      Delete
  9. Replies
    1. ---நம் மண்ணும் நம் வாழ்வாதாரமும் இன்று மறுகாலனியாதிக்கத்தால் கொள்ளை போய் கொண்டு இருக்கிறது. மனிதர்களின் போராட்ட சிந்தனையும் சீரியல்களால்.டாஸ்மாக்கால் சீரழிந்து கொண்டு இருக்கிறது. நண்பரே.......

      Delete
    2. மறுகாலனியாதிக்கம்...

      மிக அருமையான சொல் தோழரே ! ஆமாம் ! வாசல்புறமாக வெளியேறிய ஆங்கில காலனியாதிக்கம் மேல்நாட்டு நுகர்வோர் கலாச்சாரம் என்ற பெயரில் பின்வாசல்வழியாக நுழைந்துவிட்டது !

      டாஸ்மார்க் சுதேசி என்றாலும் அதில் விற்கபடுவதெல்லாம் சீமைசரக்குதானே ?!!!

      நன்றி தோழரே

      Delete
  10. #எங்களையெல்லாம் கண்ணுக்கு தெரியாதப்பா ! "#இப்படி சொல்றவங்க வீட்டுக்கு போனால் #வா என்றவர்கள் மீன்டும் டிவி சீரியலில் லயித்துவ#விடுவார்கள் ,நரம்பில்லாத நாக்கு எப்படி வேணா பேசும்னு நம்ம வேலையைப் பார்த்துகிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான் !

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது உண்மைஜீ ! ஆனாலும் நமது நேரமின்மை மற்றும் சிறிய கவன‌குறைவால் ஏற்படும் தவறுகள் கூட " பணத்திமிர் " என்ற பார்வையால் மட்டுமே பார்க்கபடுவது என்னை மிகவும் வேதனைப்படுத்தும் விசயங்களில் ஒன்று !

      நன்றி

      Delete
  11. சாம்,

    விடுமுறை என்ற ஓய்வின் தேவையை உங்களின் அழகான எழுத்தில் அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள். குறிப்பாக " விடுமுறையின் பொழுதுகளில்தான் வளர்ந்த" அந்த வாக்கியத்தில்தான் எத்தனை ஆழமான உண்மை இருக்கிறது! ஓய்வு என்று இல்லாவிட்டால் நம் சுய தேடலின் ஆரம்பப் புள்ளியே தோன்றியிருக்காது.

    விடுமுறையை கொண்டாடும் மேற்கத்திய பாணியும் மன நிலையம் நம்மிடம் வேறுவிதமாக இருப்பதாக எண்ணுகிறேன். நமக்கு குடும்ப சேர்த்தல் மிக முக்கியம் தனி மனித தேடல்களை நாம் அவ்வளவாக மேற்கொள்ளுவதில்லை வெகு சிலரைத் தவிர. இப்போதோ விடுமுறையின் நோக்கமே சில திரவங்களின் மிதப்பில் மூழ்கிவிட்டது. ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு பலருக்கு படிப்பேன், எழுதுவேன், இசை கேட்பேன், என்று சொல்வதில் சிக்கல்கள். அவ்வாறு வடிகால்கள் இருக்கின்றன என்ற சிந்தனையே இப்போது அரிதாகி வருகிறது.

    இந்தியா வருகிறீர்கள். நல்வரவு. இங்கிருந்தும் ஒரு பதிவு எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. காரிகன்,

      வழக்கம் போலவே ஆழமான பின்னுரை !

      நம் சுய தேடலின் ஆரம்பப் புள்ளியே ஓய்வுதான் !

      மிக அழகான, உண்மையான வரிகள் !

      " யுரேகா ! " என்ற வெற்றிக்கூச்சல் ஓய்வான குளியலின் போதுதான் நிகழ்ந்தது !

      " நமக்கு குடும்ப சேர்த்தல் மிக முக்கியம் தனி மனித தேடல்களை நாம் அவ்வளவாக மேற்கொள்ளுவதில்லை "

      மேற்கத்திய வாழ்க்கை முறைக்கும் நம் சமூகத்துக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை மிக எளிதாக விளக்கிவிட்டீர்கள் காரிகன் ! படிப்பு, எழுத்து, இசை போன்ற அழகிய வடிகால்கள் திரவ அலையில் முழ்கிவிட்டது மிகுந்த சோகம் !

      நன்றி காரிகன், விமானத்திலேயே அடுத்த பதிவுக்கான எண்ண ஓட்டங்கள் ஆரம்பமாகிவிட்டன ! நிச்சயமாய் தாயகத்திலிருந்து ஒன்றிரண்டு பதிவுகள் உண்டு !

      Delete
  12. //இயக்கமும் இடம் பெயர்தலும் இயற்கையின் நியதி. உயிர்த்திருப்பதற்கான ஆதாரங்கள் ! ஆதிமனிதன் விடாது இடம்பெயர்ந்தான். கலாச்சாரங்கள் தோன்றி மொழிகள் வளமானதற்கு ஆதிமனிதர்களின் இடப்பெயர்வே காரணம்//

    அடிமனதில் பதிந்துவிட்ட அர்த்தம் செறிந்த வரிகள்.

    கையாண்ட மொழிநடை மிகச் சிறப்பானது.

    புத்தம் புதிய அனுபவத்தத் தந்த பதிவு.

    மிக்க மகிழ்ச்சி. பாராட்டுகள் சாமானியன்.

    ReplyDelete
    Replies
    1. //அனுபவத்தத்...// -பிழை. ‘அனுபவத்தைத்...’ என்று வாசிக்கவும்.

      Delete
    2. வணக்கம் உலகளந்த நம்பி அவ‌ர்களே,

      தங்களின் அழகான பாராட்டுக்கு நன்றி. தொடர்ந்து வருகை தாருங்கள்.

      Delete
  13. //எங்களை போன்ற வெளிநாடுவாழ் மக்களுக்கு விடுமுறைக்கு தாய்நாடு வருவது என்பது ஒரு கல்லில் மாமரத்தையே சாய்க்கும் திறமைக்கு ஈடான சாகசம் ! ஒரு வருட சேமிப்பின் கணிசமான பகுதியை செலவு செய்யும் போது, அங்கிருக்கும் ஒரு மாத காலகட்டத்தில் சொந்த பந்தங்களின் குடும்ப விழாக்கள் தொடங்கி ஊர் திருவிழா வரை எல்லாவற்றுக்கும் இருக்கும்படி திட்டமிட்டு, மிச்ச நாட்களில் பங்காளி பகையாளிகளை சந்தித்து, அடுத்து ஊர் திரும்பும் வரை அங்கே கிடைக்காத பொருட்களை இங்கே சேகரிப்பதுவரை ஒன்றையும் தவறவிட்டுவிடக்கூடாது !//

    மிக அருமையான வரிகள்! நிதர்சனமான உண்மை! 40 வருட வெளி நாட்டு வாழ்க்கையை வாழ்ந்து கொன்டிருக்கும் இந்திய பெண்மணி என்ற முறையில் உங்களின் அனைத்துக் கருத்துக்களுக்கும் நான் உடன்படுகிறேன்!!

    வாழ்த்துக்கள்!!



    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி அம்மா !

      ஆமாம் ! நீங்கள் குறிப்பிட்ட வரிகளை வெளிநாடு வாழ் தமிழர்கள் அனைவரும் தங்களின் வாழ்வில் ஒரு முறையாவது உணர்ந்திருப்பார்கள் !

      நன்றி

      Delete
  14. சகோ;
    நலமா? இப்போ இந்தியால இருக்கீங்கன்னு நினைக்கிறன்:))
    ரொம்ப சந்தோசம் ! பதிவு அருமை சகோ! ஐந்தில் நான்கு என்ற சிறுகதை எனக்கு பதினோராம் வகுப்பில் பாடமாக வந்தது(நாஞ்சில் நாடன் என நினைக்கிறன்) அதை நினைவு படுத்துகிறது உங்க பதிவு! பயணம் இனிதாகுக:))))

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி !

      ஆம் ! என் சொந்த ஊரான காரைக்காலில் இருக்கிறேன். உங்களை போன்ற நட்புகளின் வாழ்த்தினால் விடுமுறை இனிதாக போகிறது ! மிக விரைவில் இங்கிருந்து ஒரு பதிவில் சந்திப்போம் !

      நன்றி

      Delete
  15. மாற்றங்களை யாராலும் தடுக்க இயலாதே. நல்லதா கெட்டதா என்று உணரும் முன்னே மாற்றங்கள் வந்து மறைந்து போகின்றன,
    நிறைவு வரிகள் மிக அற்புதம் .
    இந்திய வருகை இன்பம் தர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வார்த்தைகளுக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல !

      Delete
  16. உங்கள் பதிவுகளை தமிழ்மணம் உள்ளிட்ட திரட்டிகளில் இணையுங்கள். கூடுதலாக இன்னும் பலர் படிக்க வாய்ப்பு ஏற்படும்

    ReplyDelete
    Replies
    1. தமிழ்மணத்தில் என் வலைப்பூவினை இணைக்க பல மாதங்களாக முயற்சித்து வருகிறேன், ஏனோ முடியவில்லை ! என்ன காரணம் என தெரிந்தால் சொல்லுங்களேன் !

      நன்றி

      Delete
  17. உங்களை இன்று என் வலைத்தளத்தில் தொடர்பதிவிற்கு அழைத்திருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. என்னை தங்களின் நட்பு வட்டத்தில் சேர்த்தமைக்கு நன்றி அம்மா

      Delete
  18. நல்வரவு நண்பரே! :) எங்கள் நிறுவனத்தில், இந்தியர்கள் மாங்கு மாங்கென்று விடுமுறை அதிகம் எடுக்காமல் வேலை செய்து கொண்டிருக்க, மேலை நாட்டவர்களிடம் இருந்து "Vacation" மின்னஞ்சல்கள் சுழற்சி முறையில் தவறாது வந்து கொண்டிருக்கும்! நாம் விடுமுறை எடுத்தாலும், (வீட்டு) வேலையாக இருப்போம்! அவர்களோ, விடுமுறை தினங்களை, தங்களுள் புத்துணர்வு பாய்ச்சிக் கொள்ள பயன்படுத்துகிறார்கள்! (இது பொதுவான ஒரு கருத்து / கவனிப்பு மட்டுமே - ஆளாளுக்கு மாறுபடலாம்!)

    ReplyDelete
    Replies
    1. நண்பரே,

      நம்மவர்களின் விடுமுறையை பற்றி நீங்கள் கூறியது உண்மை ! வாழ்க்கையின் ஒரு கட்டத்துக்கு பிறகு நாம் நமக்காக செலவிடும் நேரம் குறைவு. குடும்பம் பிள்ளைகள் என யோசிக்கும் நம் சமூக கட்டமைப்பு அப்படி.

      நண்பர் காரிகன் தன் பின்னூட்டத்தில் குறிப்பிட்டபடி...

      " நமக்கு குடும்ப சேர்த்தல் மிக முக்கியம் தனி மனித தேடல்களை நாம் அவ்வளவாக மேற்கொள்ளுவதில்லை வெகு சிலரைத் தவிர. "

      நன்றி

      Delete
  19. கோடை விடுமுறை என்பதே ஒரு உணர்வில் கலந்த சந்தோஷம்.
    இதை நல்ல பதிவாக செய்தது சிறப்பு.
    விடுமுறை சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் அமைய வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வார்த்தைகளுக்கு நன்றி.

      விடுமுறையிலும் வலைப்பூவினை தொடரலாம் என்று நினைத்து வந்தேன்... ஆனால் நேரம் கிடைப்பதே அரிதாக உள்ளது ! ஆனாலும் என்ன ? விடுமுறை முடிந்து எழுதுவதற்கு நிறைய அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன !

      Delete
  20. எங்களை போன்ற வெளிநாடுவாழ் மக்களுக்கு விடுமுறைக்கு தாய்நாடு வருவது என்பது ஒரு கல்லில் மாமரத்தையே சாய்க்கும் திறமைக்கு ஈடான சாகசம் ! ஒரு வருட சேமிப்பின் கணிசமான பகுதியை செலவு செய்யும் போது, அங்கிருக்கும் ஒரு மாத காலகட்டத்தில் சொந்த பந்தங்களின் குடும்ப விழாக்கள் தொடங்கி ஊர் திருவிழா வரை எல்லாவற்றுக்கும் இருக்கும்படி திட்டமிட்டு, மிச்ச நாட்களில் பங்காளி பகையாளிகளை சந்தித்து, அடுத்து ஊர் திரும்பும் வரை அங்கே கிடைக்காத பொருட்களை இங்கே சேகரிப்பதுவரை ஒன்றையும் தவறவிட்டுவிடக்கூடாது !//
    அருமை

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ! இந்த பதிவினை எழுத தொடங்கியபோது மனதிலிருந்து சட்டென வந்த வார்த்தைகள் இவை ! அதனால்தானோ என்னவோ பலரையும் வசீகரித்துவிட்டன இந்த வரிகள்.

      நன்றி

      Delete
  21. வணக்கம் சாம்,
    சாமானியனின் பதிவை சாதாரணமாக நினைத்த என்னைப் பிரமிக்க வைத்து விட்டீர்கள். ஒவ்வொரு பதிவும் ஆழமான அழுத்தத்தை என் மனதில் ஏற்படுத்திச் செல்கிறது. நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சேகர் !

      உங்களின் மறுவரவு என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது ! எனது வலைப்பூவின் ஆரம்பத்தில் தொடர்ந்து பின்னூட்டமிட தொடங்கிய சிலரில் நீங்களும் ஒருவர்.

      இடையில் என்ன ஆயிற்று நண்பரே ? உங்களின் வலைப்பூவையும் காணவில்லை ?

      உங்களின் வார்த்தைகளுக்கு நன்றி

      Delete
  22. சாம்,

    தாய் மண்ணில் இருக்கிறீர்கள். இது ஒரு நெகிழ்ச்சியான தருணம்தான். விடுமுறையில் பதிவுகள் எழுதமுடியாவிட்டால் போகிறது. விடுங்கள். பிறகு எழுதலாம்.நிறைய சம்பவங்கள் கிடைத்திருக்கும் அடுத்த பதிவுக்காக.

    ReplyDelete
    Replies
    1. நன்றி காரிகன்,

      உண்மைதான் ! இந்தியாவில் வலைப்பூ பக்கம் வரவதற்க்கான நேரம் வாய்க்கவில்லை ! என் மீதான உங்கள் அக்கறை என்னை நெகிழச்செய்கிறது. உங்களின் இந்த பின்னூட்டம் என்னுடன் அன்றாடம் பழகி, என் எண்ண ஓட்டங்களை முற்றிலும் படித்துவிட கூடிய நெருங்கிய நண்பரின் வார்த்தைகளாய் அமைந்தது ஆச்சரியம் !

      Delete
  23. ‘’அன்பு நண்பரே வணக்கம், விருது ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்’’ பெற்றுக்கொள்ளவும்.
    அன்புடன்
    கில்லர்ஜி.

    ReplyDelete
    Replies
    1. இனிய நண்பரே,

      உடனடியாக எனக்கு தெரியபடுத்தியமைக்கு நன்றிகள் பல.

      Delete
  24. உடனடியாக உங்கள் தளம் வந்து ஏற்றுக்கொண்டேன் ! நன்றிகள் பல !!

    ReplyDelete