Wednesday, January 21, 2015

மதமாற்றம் மனமாற்றமாகுமா ?

லகெங்கும் அடிப்படைவாத குழுக்களின் ஆதிக்கம் அதிகமாகி வரும் இன்று அடிக்கடி ஊடக தலைப்புகளில் தோன்றும் வார்த்தைளில் ஒன்று  மதமாற்றம். மதமாற்றம் என்பது நேற்று தோன்றியது அல்ல. என்று இரண்டாவதாக ஒரு மதம் பூமியில் தோன்றியதோ அன்றே மதமாற்றமும் நிகழ தொடங்கிவிட்டது ! மதமாற்றத்துக்கு தனிமனித உணர்வு தொடங்கி சமூகம், பொருளாதாரம் என பல காரணங்கள் உண்டு. ஆனாலும் இன்று மதமாற்றம் அதிகமாக பேசப்படுவதற்கு காரணம் மதம் சார்ந்த அரசியல் மற்றும் கடைக்கோடி வரை பாயும்  ஊடக வீச்சு !

ஒரு மொழி, ஒரு மத பெரும்பான்மையை கொண்ட மேற்கத்திய நாடுகள் தொடங்கி உலகின் வேறு எந்த நாட்டையும்விட, உலகின் அனைத்து மதங்களையும் தன்னுள்ளே கொண்டு, சிக்கலான ஜாதி அடுக்குகளுடன் பலமொழி கலாச்சாரங்களை கொண்ட இந்தியாவில் மதமாற்றம் ஏற்படுத்தும் தாக்கமும் அதிர்வும் மிக அதிகம் !

தங்களின் தோற்றம் மற்றும் தேவை பற்றிய கருத்தை முன்வைப்பது இந்த பதிவின் நோக்கம் அல்ல என்றாலும், சற்றே சுருக்கமாக அதனை இங்கு குறிப்பிடவேண்டியது அவசியமாகிறது... எனவே, ஆத்திக, நாத்திக மற்றும் இரண்டுக்கும் நடுவில் அல்லாடும் அன்பர்கள் அனைவரும் உணர்ச்சிவசப்படாமல் இறுதிவரை படித்துவிட்டு பின்னூட்டம் பற்றி யோசிக்க வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள் !


உலகின் ஏனைய உயிர்களைப்போல பசிக்கு வேட்டை, ஆபத்தை உணர்ந்தால் ஓடி ஒளிதல் என்ற அடிப்படை உயிர்ச்சுழலிலிருந்து விடுபட்டு, என்ன செய்தால் உயிரை தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் ஆறாம் அறிவு உதித்த தருணத்திலேயே வழிப்பாட்டுக்கான அவசியமும் தோன்றியிருக்க வேண்டும் !

மற்ற உயிரினங்களை அடக்கியும், அழித்தும் மனிதன் தன்னை மேலானவனாய் பாவிக்க தொடங்கிய கணத்தில் தன்னால் அடக்க முடியாத இயற்கை சீற்றங்களை தன்னைவிட மேலானதாக பாவிக்கத்தொடங்கி, அவற்றிலிருந்து தன்னை காத்துக்கொள்ள, அதாவது உயிரை தக்கவைத்துக்கொள்ள தோற்றுவித்ததே வழிப்பாடு ! மதம் தொடங்கி மனிதனின் கண்டுபிடிப்புகள் அனைத்துமே உயிரை தக்கவைத்துக்கொள்வதற்கான போராட்டம்தான்.

த நம்பிக்கைகளுக்கான அடிப்படை என்ன ? மரணம் பற்றிய பயம். இத்தனை போராட்டமும் வீணா என்ற அச்சம். மரணத்துக்கு பிறகு என்ன என்பதை அறிந்துகொள்ள முடியாததே மத தேடலுக்கான  காரணம் !

இரண்டு சூழ்நிலைகளில் மனிதன் மதத்தை உதறத்துணிவான் !

அவன் மரணத்தை வெல்லும் சூழ்நிலையில் ! மரணமே கிடையாது எனும் போது அதற்கு பிறகான சொர்க்கம், நரகம், தீர்ப்பு நாளுக்கெல்லாம் தேவையில்லாதபோது மனிதனுக்கு மதத்தின் தேவை இல்லாமல் போகும் !

அல்லது இறப்புக்கு பின்னர் இதுதான் நடக்கும் எனும்போதும் மதம் மற்றும் மார்க்கங்கள் அவசியமற்று போகலாம் ! உதாரணமாக இறந்தவர்கள் அனைவருக்கும் பூமியை விட மேலான அற்புத உலகம் காத்திருக்கிறது என்பது உறுதிப்பட நிருபிக்கப்படுமானால் மனிதர்கள் மரணத்தைவிரும்பி ஏற்கும் நிலைக்கூட ஏற்படலாம் !


ரி, இனி மதமாற்றத்துக்கு வருவோம்...

இன்று பொதுகருத்தாக இருப்பது போல இந்தியாவில் மதமாற்றம் மற்றும் கட்டாய மதமாற்றம் முகலாயர்கள், ஆங்கிலேயர்களால் மட்டுமே ஆரம்பிக்கப்படவில்லை. இவர்களின் வருகைக்கெல்லாம் முன்னால் இந்திய சமயங்களுக்கிடையேயான மோதல்களுடன்  ஒப்பிட்டால் முகலாய, ஆங்கிலேயே காலத்திய மத கொடுமைகள் குறைவுதான் !

முகலாய, ஆங்கிலேய காலத்தில் மதமாற்றத்துக்கான தூண்டிலாக அமைந்தது இந்திய சமூகத்தின் ஜாதிய அடுக்கும், அடக்குமுறையும் ! மெரும்பாலான இந்தியர்கள் இஸ்லாமிய மற்றும் கிருஸ்த்தவ மதங்களுக்கு மாறியதற்கான காரணம் ஜாதிக்கொடுமையே !

ஆனால் மதமாற்றத்தால் மறைந்திருக்க வேண்டிய ஜாதிகள் புதிய மதங்களிலும் குடியேறியதுதான் ஆச்சரியம். தேவாலயங்களில் கீழ்சாதிக்காரர்களுக்காக தனி இடம் ஒதுக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் குறுக்குச்சுவர் கூட எழுப்பப்பட்டது. இதனை எதிர்த்த பாதிரிமார்கள் மாற்றப்பட்டார்கள் ! இந்த அளவுக்கு இல்லையென்றாலும் கூட இந்திய இஸ்லாமிய மார்க்கத்துக்கு என சில பிரிவுகள் உண்டு. தென்னிந்திய மரைக்காயர் முஸ்லிம்கள் வட இந்திய பூர்வீக பதான் முஸ்லீம்களுடன் அவ்வளவாக ஒட்ட மாட்டார்கள். லெப்பை பிரிவும் உண்டு !

புதிய மத தேடலை இரண்டு வகையாக பிரிக்கலாம்...

ஒன்று நாத்திகனின் தேடல். மற்றொன்று ஆத்திகனின் வேறு மத தேடல் !

ஒரு நாத்திகன் தன் அந்திம காலத்தில் ஏதோ ஒரு மதத்தின் மீது பற்றுக்கொள்வது இயல்பானதாகவே தோன்றுகிறது ! காரணம் இந்த பதிவின் ஆரம்பத்தில் சொன்ன மரண பயம்  ! வாலிபத்தில் பகுத்தறிவு பேசும் பலருக்கு வயோதிகம் நெருங்க நெருங்க, இறப்புக்கு பின்னர் என்ன  என்ற கேள்வி எழும்போது மதத்தின் நினைவும் வந்துவிடுகிறது !

ஆத்திகர்களின் மாற்றத்துக்கு வாழ்க்கை சூழல், தங்கள் மதத்தில் அவர்கள் நடத்தப்படும் முறை என பல காரணங்கள். இனி என்ன செய்வது என தெரியாமல் வாழ்க்கையில் திக்கற்று நிற்கும் தருணங்களிலும், ஏதோ ஒரு காரணத்தால் சொந்த மதத்தை சேர்ந்தவனே தன்னை ஒதுக்கும் நிலையிலும் ஆத்திகன் தன் பூர்வீக மதத்திலிருந்து விடுபட விரும்புகிறான் !

உணர்ச்சிவசப்படாமல் உள்வாங்கி யோசித்தால் மேலே குறிப்பிட்ட இரண்டு பேருமே மனத் தெளிவற்ற நிலையிலேயே மதம் மாறுகின்றனர் !


சீக்கிய குரு நானக்கிடம்,

" உங்கள் புனித புத்தகத்தில் இருப்பது முழுவதையும் ஒரே வரியில் கூறிவிட்டால் உங்கள் மதத்தை ஏற்றுக்கொள்கிறேன் ! "

என நாத்திகர் ஒருவர் கேட்டதாகவும், அதற்கு குரு நானக்...

" மற்றவர்கள் உனக்கு எதை செய்யக்கூடாது என நீ நினைக்கிறாயோ அதனை நீ அவர்களுக்கு செய்யாதே ! அவ்வளவுதான் !! "

எனக்கூறியதாகவும், அதனை கேட்ட நாத்திகர் சீக்கிய மதத்தில் சேர்ந்ததாகவும் ஒரு குட்டிக்கதை உண்டு.

இந்த கதை சீக்கிய மதத்துக்கு மட்டுமல்ல, உலகின் அனைத்து மதங்களின் சாரமும் இதுதான் !

இந்த தெளிவு இயல்பாகவே இருப்பவர்கள் நாத்திகர்களாகவே தொடரலாம்... இல்லாதவர்கள் சொர்க்கம், நரகம் பயத்துடன் ஆத்திகர்களாக அவரவர் மதத்திலேயே இருக்கலாம்  என்றாலும் ஒருவன் மாற்றுமதம் ஒன்றினால் ஆத்மார்த்தமாக ஈர்க்கப்பட்டு மாறினால் அது தனிமனித உரிமை. அதை பேச வேறு எவருக்கும் உரிமை கிடையாது ! இதற்கு மேலை நாட்டவரின் மதம் பற்றிய கண்ணோட்டத்தை உதாரணமாக குறிப்பிடலாம்...

அவர்களை தீவிர மத பற்றுடையவர்கள், மிதவாதிகள், கடவுள் நம்பிக்கையற்றவர்கள் என மூன்று தெளிவான குழுக்களாக பிரித்துவிடலாம். அந்த மூவருக்குமே இறை சார்ந்த நம்பிக்கை அந்தரங்கமானது ! வெளியில் பேசமாட்டார்கள் ! இதில் மிதவாதிகளில் சிலர் தங்கள் பிள்ளைகளுக்கு அனைத்து மத தத்துவங்களையும் போதித்து, தங்கள் பிள்ளைகளுக்கான மத தேர்வு உரிமையை அவர்களிடமே விட்டுவிடுவதும் அங்கு சகஜம் !

இங்கு மதமாற்றம் உணர்ச்சியுடன் விளையாடுவதாக அமைந்துவிடுவது சோகம் !

காதலுக்காக மதம் மாறுவதை ஒரு முக்கிய உதாரணமாக குறிப்பிடலாம்...

இதையும் மிக கவனமாக அலச வேண்டும் !

இரு வேறு மதங்களை சேர்ந்த ஜோடி திருமணம் முடிந்து ஒன்றாக பல காலங்கள் வாழ்ந்து, ஒருவர் ஏதோ ஒரு காரணத்தினால் மற்றவரின் மதத்தின்பால் ஈர்க்கப்பட்டு மதம் மாறுவது இயல்பானது ! தனிமனித உரிமை சார்ந்தது.



ஆனால் கண்டதும் காதலாகி, கல்யாணம் நெருங்கியவுடன் மதம் மாறினால்தான் திருமணம் என பெற்றோர்கள் சோல்லிவிட்டார்கள் என உணர்ச்சி மிரட்டலில் இறங்குவது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று ! வேற்றுமத திருமணத்துக்கு  பெற்றோர்கள் சம்மதிக்க மாட்டார்கள் என்று தெரியும் என்றால், அதனை எதிர்த்து நிற்கவோ, அல்லது எடுத்துச்சொல்லி சம்மதிக்கவைக்கவோ துணிச்சல் இல்லையென்றால் அந்த காதல் எதற்கு ?

காதலித்த காலத்தில் ஒருவர் மற்றொருவரின் மதத்தின் மீது ஆத்மார்த்த பற்றுக்கொண்டிருக்கலாம்தானே என்ற கேள்வி எழுகிறதா ?...

" இரு வேறு மதங்களை சேர்ந்த ஜோடி திருமணம் முடிந்து ஒன்றாக பல காலங்கள் வாழ்ந்து, ஒருவர் ஏதோ ஒரு காரணத்தினால் மற்றவரின் மதத்தின்பால் ஈர்க்கப்பட்டு மதம் மாறுவது இயல்பானது ! தனிமனித உரிமை சார்ந்தது. " ...

அதற்கு காலம் தேவை நண்பர்களே ! தைரியமாய் நின்று பேசக்கூட இடம் கொடுக்காத நம் சமூகத்தில் சில மாதங்களே கடந்த இளம் காதலர்களுக்கு அவரவர் மத தத்ததுவங்களை அலச ஏதய்யா நேரம் ?!!!

காதலுக்காகவும், அரசியலுக்காகவும் மதம் மாறவும், மதம் மாற்றவும் முயற்சிக்கும் வாலிப வயோதிக அன்பர்களே....

காதலிப்பவர்கள் ஓடிப்போயாவது திருமணம் செய்துக்கொண்டு பிள்ளைகள் பெற்று உங்கள் குடும்பத்தை வளர்ப்பதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் ஓட்டு வங்கி வளர்ப்புக்கு பிரியாணி பொட்டலங்களை மட்டும் பயன்படுத்திக்கொள்ளுங்கள் ! ( பிரியாணியில் வெஜிடபிளும் இருப்பதால் அனைத்து தரப்புக்கும் இதுவே போதுமானது ! )  உங்கள் ஓட்டு பிச்சைக்கு கட்சியின் கலர்களும், கறைகளும் படிந்த வேட்டியே போதும் ! தயவு செய்து மத சட்டையை கழற்றிவிடுங்கள் !

கடவுள்தான் மதங்களை படைத்தார் என்றால் அந்த மதங்களையும் அவரே பாதுகாத்துக்கொள்வார் !

இருந்த மதத்தின் அருமையை புரிந்துகொள்ளமுடியாத உங்களால் வந்த மதத்தில் எதையும் புரிந்துகொள்ள முடியாது ! இரண்டு மதங்களுமே உங்களால் கேவலப்படுவது மட்டுமே எஞ்சும் !




பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

58 comments:

  1. தலைப்பில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு...

    குரு நானக் சொன்னது போல், பிறரிடம் நம்மை கண்டால் அனைத்தும் சுபம்...!

    முடிவில் நச்...!

    ReplyDelete
    Replies
    1. உடனடியாக படித்து, முதல் கருத்தை முத்தான கருத்தாய் பதித்த வலைச்சித்தருக்கு நன்றிகள் பல !

      Delete
  2. வலிந்து திணிக்கப்படும்போது பலர் சுயத்தை இழந்து தம்மையும் சமுதாயத்தையும் இழக்கிறார்கள். இது ஆண்டாண்டு காலமாக நடந்துவருகின்ற கசப்பான உண்மையாகும்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அய்யா,

      ஆமாம் ! ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூகத்தின் ஒரு சாரார் மீது மதமோ, மொழியோ ஏதோ ஒன்று வலிந்து திணிக்கப்படுவது தொடர்ந்து நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. மனித குலத்தின் அவமானங்களில் ஒன்று இது !

      நன்றி

      Delete
  3. ஒரு அமெரிக்கன் என் வீட்டிற்கு வருவார். ரொம்ப "ஸ்பிச்சுவல்" அவர். சுத்திச் சுத்தி கடைசியில் ஒரே இடத்திலேயே வந்து நிற்பார்.

    "நீ எதுக்காக பிறந்து இருக்கிறாய்?" "நம் வாழ்க்கையின் அர்த்தம் என்ன?"

    "எனக்குத் தெரியலை"னு சொல்லுவேன்.

    "தெரிந்து கொள்ள ஆசையில்லையா?' என்பார்.

    "ஆசை இருந்து என்ன பயன்? நான் எப்படி யோசித்தாலும் இக்கேள்விக்கு பதில் கிடைக்கப் போவதில்லை. எதுக்கு கஷ்டப்பட? இது மாதிரி அர்த்தமற்ற கேள்விக்கு பதில் கண்டு பிடிப்பதற்கு என்னை நானே விளையாட்டில் அல்லது வேலையில் அல்லது பிறருக்கு உதவுவதில் நான் பிஸியாக இருந்தால் எனக்கு இச்சிந்தனை எல்லாம் வருவதில்லை"னு சொல்லுவேன்.

    "உன்னால எப்படி இல்லடி இருக்க முடியுது?" னூ ஆச்சர்யப்படுவார்.

    மேலும் அவர் அவர் ஏன் பிறந்து இருக்கிறார்னு ஒரு கதை சொல்லுவார். அதைக்கேட்டு நான் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டு இருப்பேன்.

    "எல்லாமே நம் மனதில்தான் இருக்கு" கடவுள், மதம், சந்தோஷம் துக்கம் எல்லாமே நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் சிற்றின்பம்தான். இதுதான் வாழ்க்கை, சாம்! :)

    ReplyDelete
    Replies
    1. " கடவுள், மதம், சந்தோஷம் துக்கம் எல்லாமே நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் சிற்றின்பம்தான்... "

      ஆமாம் வருண் ! ஒரு கட்டத்துக்கு மேல் ஒன்றுமே இல்லை என்பதை ஏற்க மறுக்கும் ஆறாம் அறிவு கற்பித்துக்கொள்ளும் சிற்றின்பங்கள்...

      நன்றி

      Delete
  4. கடவுள்தான் மதங்களை படைத்தார் என்றால் அந்த மதங்களையும் அவரே பாதுகாத்துக்கொள்வார் !

    இருந்த மதத்தின் அருமையை புரிந்துகொள்ளமுடியாத உங்களால் வந்த மதத்தில் எதையும் புரிந்துகொள்ள முடியாது ! இரண்டு மதங்களுமே உங்களால் கேவலப்படுவது மட்டுமே எஞ்சும் !//

    மிக மிக அருமை! அருமை! செம பஞ்ச். ஆம்! எல்லா மதங்களும் போதிப்பது அன்பும், மனித நேயமும்தான் . அதைப் புரிந்து கொள்ளாத, கொள்ள முடியாத ஒருவர், தன் மதத்தை விட்டு வேறு மதத்திற்கு மாறுகிறார் என்றால் அவர் அந்த மதத்தையும் எப்படிப் புரிந்து கொள்வார்?! என்பது மிகப் பெரிய கேள்வி. எல்லா மதத்திலும் சொல்லப்படும் இந்த அன்பைப் பற்றிப் புரிந்து கொண்டு ஒருவன் பிறந்த மதத்தை மட்டுமல்ல எல்லா மதத்தையும் நேசிக்கக் கற்றுக் கொண்டால் இந்த மதம் மாற்றம் என்ற வார்த்தையே பேசப்படமாட்டாது. எல்லாம் நம்முள்ளே இருக்க எதற்கு இந்தத் தேடல் வெளியில்?!

    இந்த மதம் என்பதை அப்புறப்படுத்திவிட்டு, அதில் ஒரு னி யை ம விற்கு அடுத்து இட்டுப்பார்ப்போமே "மனிதம்". மனிதன் மனிதம் பார்த்தால் "மதம்" பிடிக்காமல் வாழலாமே!

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. முதலில் இந்த பதிவை, பதிவின் கருவை மிகச் சரியாக உள்வாங்கி வாசித்தமைக்கு நன்றி !

      " எல்லா மதத்திலும் சொல்லப்படும் இந்த அன்பைப் பற்றிப் புரிந்து கொண்டு ஒருவன் பிறந்த மதத்தை மட்டுமல்ல எல்லா மதத்தையும் நேசிக்கக் கற்றுக் கொண்டால் இந்த மதம் மாற்றம் என்ற வார்த்தையே பேசப்படமாட்டாது. எல்லாம் நம்முள்ளே இருக்க எதற்கு இந்தத் தேடல் வெளியில்?! "

      பிரென்சு மொழியில் parole de sage என்றொரு வார்த்தை பிரயோகம் உண்டு... சாதுவின் அல்லது புனிதரின் வார்த்தை என தமிழில் கொள்ளலாம் ! அப்படிப்பட்ட் வரிகள் ! தன் மதத்தின் தத்துவத்தை ஆழ அறிந்தவனின் அடுத்த படி நீங்கள் மேல் சொன்ன வரிகள்தான் !

      " இந்த மதம் என்பதை அப்புறப்படுத்திவிட்டு, அதில் ஒரு னி யை ம விற்கு அடுத்து இட்டுப்பார்ப்போமே "மனிதம்". மனிதன் மனிதம் பார்த்தால் "மதம்" பிடிக்காமல் வாழலாமே! "

      இந்த பதிவை பிரசுரிக்கும்வரை மனிதம் தழைக்கும் என தீர்மானமாய் நம்பிய எனக்கு, இன்று சற்று பயமாக இருக்கிறது ஆசானே !.... மத போதை மனிதத்தையும் மயங்க செய்து விடுமோ என கவலையாக உள்ளது !!

      நன்றி

      Delete
  5. இருந்த மதத்தின் அருமையை புரிந்துகொள்ளமுடியாத உங்களால் வந்த மதத்தில் எதையும் புரிந்துகொள்ள முடியாது ! இரண்டு மதங்களுமே உங்களால் கேவலப்படுவது மட்டுமே எஞ்சும் !// மிகவும் உண்மையான வார்த்தைகள்! மனிதம் உயரும் போது மதமாச்சர்யங்கள் காணமல் போகும்! மதம் பிடிக்கும்போது மனிதம் மறைந்து போகும்! அருமையான அலசல் பதிவு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. " மனிதம் உயரும் போது மதமாச்சர்யங்கள் காணமல் போகும்! மதம் பிடிக்கும்போது மனிதம் மறைந்து போகும்! "

      துளசிதரன் அவர்களின் பின்னூட்டத்தில் நான் குறிப்பிட்டது போன்ற மற்றொரு புனித வரி !

      ஆமாம் நண்பரே, மதமாச்சார்யங்கள் தோன்றியதே மனிதத்தை எழுப்பி உயர்த்த தான்... மதத்தின் தத்துவம் ஏற வேண்டிய மூளையில் சடங்குகளும் சம்பிரதாயங்களும் மட்டுமே குடியேறும் போது மதம் பிடித்துவிடுகிறது !

      நன்றி

      Delete
  6. கடவுள்தான் மதங்களை படைத்தார் என்றால் அந்த மதங்களையும் அவரே பாதுகாத்துக்கொள்வார்
    இது மட்டுமல்ல ஒவ்வொரு வரிகளுமே செதுக்கி இருக்கிறீர்கள் வேறு ஒன்றும் சொல்வதற்க்கில்லை நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு எழுத்தையும் செதுக்கும் நீங்கள் வார்த்தைகளை செதுக்குவதாக என்னை வாழ்த்தியதை பெருமையாக கருதுகிறேன் நண்பரே !

      நன்றி

      Delete
  7. சாம்: சாதிக் கொடுமைக்காக மதம் மாறுவது. பணத்திற்காக வேலைக்காக மதம் மாறுவது, வாழ்க்கை துணைக்காக மதம் மாறுவதெல்லாம் ஒருவருடைய தனிப்பட்ட விசயம். அவர்களை மாறக்கூடாது, மாறுவது தவறு னு நாம் சொல்ல நமக்கு எந்தத் தகுதியும் இல்லை.

    ஒரு சிலர் மதம்மாறி நிம்மதியாகத்தான் இருக்காங்க.

    ஒரு சிலரை நீஙக் என்னதான் செய்தாலும் மதம் மாற்ற முடியாது.

    ஒருத்தர் பணம் கிடைக்கிது, வேலை வாய்ப்பு தர்ராங்க, சாதிக்கொடுமை தாங்க முடியவில்லை என்கிற காரணங்களால் ஒரு மதம் மாறுகிறார் என்றால், அம்மதத்தில் அவருக்கு பெருசாகப் ப்பிடிப்பு இல்லை என்றே அர்த்தம். அப்படி பிடிப்பில்லாதவர் போவதில் யாருக்கு என்ன நஷ்டம்னு எனக்கு விளங்கவில்லை.

    அவரைப் போகக்கூடாதுனு சொல்ல யாருக்கும் (உங்களுக்கும் எனக்கும் கூட) எந்தத் தகுதியும் இல்லை. போகிற மதமும் இப்படித்தான், சாதிக்கொடுமை இருக்கும்னு நான் சொல்ல முடியாது. அது அவர் பிரச்சினை. நான் யாரு அவருக்கு எது நல்லதுனு சொல்ல???

    ReplyDelete
  8. நான் பிறந்த இருக்கிற மதத்தைவிட்டு மாறவில்லை (நாத்திகம் எல்லாம் ஒரு மதமில்லை).. காரணம் என்னனா இந்த மதத்திலும் எனக்கு பிடிப்பு இல்லை, பிறமதங்களிலும் இல்லை. எனக்கு சாதிக்கொடுமையோ, மதம் மாரி பெறுகிற பணத்தேவையோ, கிடைக்கப்போகும் வேலை வாய்ப்போ பெருசாத் தெரியவில்லை. ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள் படும் கஷ்டங்களை பார்த்து இருக்கிறேன். ஒரு பெரிய சாதிச்சண்டைக்குப் பிறகு கிராமம் கிராமமாக இஸ்லாத்தை தழுவியவர்களையும் பார்த்து இருக்கிறேன். அதில் எந்தத்தவறும் எனக்குத் தெரியவில்லை. என்னால அவர் படும் இன்னல்களில் இருந்து காப்பாத்த முடியாது. இப்படி மதம் மாறுவதால் சாதிக்கொடுமை குறையும் அவர்கள் நினைப்பதில் தவரேதும் இல்லை. மதம் மாறுவதும் தவறில்லை.

    ReplyDelete
    Replies
    1. வருண்...

      நானும் அதையேதான் இந்த பதிவின் மூலம் சொல்ல வருகிறேன்...

      எதுவுமே தவறில்லை வருண்... அதனை நினைத்து வருந்தாதவரை ! மதமாற்றம் நிச்சயமாய் தனிமனித உரிமை சார்ந்தது என்பதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை ! அது எந்த காரணமாக இருந்தாலும் அந்த காரணம் மாறியவனின் சுய புத்தியில் உதித்ததாக இருக்கும்வரை !

      ஆனால் அந்த தனிமனித உரிமைக்கு சமூக கட்டாயம் பூசி, எளியவனின் வறுமையை சந்தர்ப்பவாதமாக்கி மதமாற்றத்தையோ அல்லது வேறு எதையோ ரொட்டித்துண்டாய் அவன் முன் நீட்டி மூளைச்சலவை செய்ய முயல்வதைதான் சாடுகிறேன் !

      நன்றி

      Delete
  9. அமெரிக்க பூர்வ குடிமக்கள் சொன்னதாக கேள்விப்பட்ட ஒரு விஷயம்" பாதிரியார்கள் இங்கே காலடி வைத்தபோது, எங்களிடம் வயல்கள் இருந்தன, அவர்கள் கையில் பைபிள் இருந்தது. இன்று எங்கள் கையில் பைபிள் இருக்கிறது, எங்கள் வயல்கள் அவர்களிடம் இருக்கிறது:) தற்போது எனது ஆறாம் வகுப்பு ஆங்கில பாடத்தில் An open letter என்றொரு பாடம் உண்டு. அமேரிக்காவின் ஆதி மக்களின் தலைவரான சீப் சியாட்டல் பிரசிடன்ட் முதலாம் ஜார்ஜ் வாஷிங்டன் னுக்கு எழுதிய உருக்கமான கடிதம். முன்பு கேள்விபட்டது உண்மைதான் என்பது புலனானது.

    குரு நானக் சொன்னதை தான் பெரியாரும் சொல்லுறார் "உன்னிடம் மற்றொருவர் எப்படி நடந்துகொள்ளகூடாது என நினைக்கிறாயோ, அப்படி நீ மற்றவர்களிடம் நடந்து கொள்ளாமல் இருப்பது தான் நாகரிகம் என்கிறார் பெரியார்:)

    அன்வர் பாலசிங்கம் எழுதிய கருப்பாயி என்கிற நூர்ஜஹான் என்றொரு புத்தகம், சாதிகொடுமை தாளாமல் கூட்டமாக இஸ்லாத்தை தழுவிய கீழ்சாதி மக்கள் பின்னர் தன் பெண்பிள்ளைகளை மணமுடிக்க முடியாமல் தடுமாறும் அவலத்தை உருக்கமாக சொல்கிறது.
    நீங்கள் சொன்ன மற்றொன்றுடன் நான் ஒத்துபோகிறேன். மதமாற்றகொடுமை முகலாயர் ஆட்சிக்கு முன்னரே மிக கொடியதாக இருந்துள்ளது. சமணர்களை கழுவேற்றிய சைவர்கள் அன்பே சிவம் என்று கூறிக்கொள்வது கமலஹாசனின் அன்பே சிவம் படத்தின் வில்லனைதான் நினைவு படுத்துகிறது:)))

    ReplyDelete
    Replies
    1. " வயல்கள் இருந்தன, அவர்கள் கையில் பைபிள் இருந்தது. இன்று எங்கள் கையில் பைபிள் இருக்கிறது, எங்கள் வயல்கள் அவர்களிடம் இருக்கிறது:) "

      " சாதிகொடுமை தாளாமல் கூட்டமாக இஸ்லாத்தை தழுவிய கீழ்சாதி மக்கள் பின்னர் தன் பெண்பிள்ளைகளை மணமுடிக்க முடியாமல் தடுமாறும் அவலத்தை உருக்கமாக சொல்கிறது. "

      நான் முன்னரே அறிந்த இந்த செய்திகளை எப்படி இந்த பதிவில் மறந்தேன் என மலைப்பாக உள்ளது !

      ஆக, நான் சொல்ல வந்தது உண்மை என்றாகிறது இல்லையா ?! மதமாற்றம் மேற்கூறியவர்களின் ஒரு அவலத்தை விலக்கி மாற்றாக மற்றொரு அவலத்தையே அளித்துள்ளது !!!

      "உன்னிடம் மற்றொருவர் எப்படி நடந்துகொள்ளகூடாது என நினைக்கிறாயோ, அப்படி நீ மற்றவர்களிடம் நடந்து கொள்ளாமல் இருப்பது தான் நாகரிகம் என்கிறார் பெரியார்:)

      தமிழ்நாட்டில் தழைத்திருந்த மிதவாத மத கண்ணோட்டத்துக்கு ஒரே காரணமாக நான் கருதுவது பெரியாரை மட்டும்தான் !

      ( தழைத்திருந்த... ? ஆமாம் சகோதரி ! அடக்கப்பட்டது மிக வேகமாய் எழும் என்ற விதிக்கேற்ப தமிழனின் தலையிலும் " மதம் " பிடித்து வருகிறதோ என அச்சமாக உள்ளது சகோதரி ! )

      நன்றி

      Delete
    2. ஆம் சகோ! நீங்கள் சொல்வது சரி என்று தான் சொல்கிறேன். அம்பேத்கார் தன் குழுவோடு பௌதம் தழுவியபோது பெரியார் சொன்னதும் அதைதான்:)
      **( தழைத்திருந்த... ? ஆமாம் சகோதரி ! அடக்கப்பட்டது மிக வேகமாய் எழும் என்ற விதிக்கேற்ப தமிழனின் தலையிலும் " மதம் " பிடித்து வருகிறதோ என அச்சமாக உள்ளது சகோதரி ! )** உண்மை தான் என்றாலும். என்னளவில் என் மாணவர்களுக்கு போதிய வழிகாட்டுதல்களை செய்தே வருகிறேன். யார் சமூகத்தின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை இழந்தாலும், ஒரு ஆசிரியர் முற்றுமாக நம்பிக்கை இழக்கக்கூடாது என நினைக்கிறேன் சகோ:)

      Delete
    3. நான் அடிக்கடி குறிப்பிடுவதையே மீன்டும் குறிப்பிட விரும்புகிறேன்...

      ஒரு ஆசிரியர் முயன்றால் ஒரு எதிர்கால சமூகம் முழுவதையுமே மாற்ற முடியும் என்பதை ஆணித்தரமாக நம்புபவன் நான் ! நாற்பதை தொட்ட என்னிடம் புதினமான பணி எது என்று கேட்டால் ஆசிரியப்பணி என தயங்காமல் சொல்வேன் !

      சமூக மாற்றம் உங்களால் நிகழும் சகோதரி ! ஆசிரியர்கள் நீங்கள் ஒன்றுகூடினால் சக்கரங்களற்ற தேரையும் நகர்த்த முடியும் !

      நன்றி

      Delete
  10. எந்த மதமானால் என்ன
    அனைத்து மதங்களுமே அன்பைத் தானே போதித்தன
    மனிதர்களால்தான் அனைத்துமே மாசுபட்டுவிட்டன
    அருமையான கட்டுரை நண்பரே

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அய்யா,

      கடவுள் மதத்தை அருளினார் என்பதில் வேண்டுமானால் கூட மாற்றுக்கருத்துகள் இருக்கலாம்... ஆனால் மனிதன் அதை மாசுப்படுத்தினான் என்பதில் வேறு கருத்துக்கே இடமில்லை !

      நன்றி

      Delete
  11. வணக்கம்!
    இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
    வாழ்த்துக்கள்!
    ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!
    திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
    பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
    படைப்புகள் யாவும்.

    நட்புடன்,
    புதுவை வேலு,

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே,

      " ஈன்ற பொழுதினில்... " என்ற உவகையோடு என்னை வழ்த்த வந்த தங்களுக்கு நன்றி என்ற சொல போதுமா ?!

      Delete
  12. சாம்,

    அருமையான தலைப்பிட்ட நேர்த்தியான கட்டுரையை எழுதியதற்கு பாராட்டுக்கள். மதம் ஒரு மதம் பிடித்த விஷயம். எனக்கு ஏன் மதம் பிடிக்கவில்லை? என்ற தலைப்பில் நான் ஒரு பதிவை ஆரம்பித்து இன்னும் முடிக்காமல் இருக்கிறேன். நேரம் வரும்போது பூர்த்தி செய்து வெளியிடலாம் என உத்தேசம்.

    பயத்தின் அழுத்தமே உலக மதங்களின் ஆரம்பம். சரிதான். அதுவும் மரண பயம் என்று வந்துவிட்டால் சிலருக்கு அனைத்தும் அடங்கிப் போய் ஒரே பஜனைதான்.

    கடவுள் நம்பிக்கை அவசியமானது. ஆனால் அதை வைத்து நாம் என்ன செய்கிறோம் என்பதில்தான் வருகிறது எல்லா பிரச்சினைகளும். சில மதங்கள் மற்றவர்களை உள்ளே விடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. சில மதங்கள் அப்படியில்லை. யாரும் வரலாம் என்று போஸ்டர் ஒட்டுகின்றன. மதம் என்றாலே அங்கு அரசியல் இல்லாமல் இருக்குமா? மத மாற்றம் வெளிப்படையாகத் தெரியக்கூடியது. மனமாற்றமே உண்மையானது என்பது என் எண்ணம்.

    உலகில் இதுவரை நடந்த போர்களில் மதம் மற்றும் கடவுளின் பெயரால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கைதான் மிக அதிகம். ஆச்சர்யமாக கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மதம் என்று பிரிந்து கிடக்கிறார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் ஒரே அணியில் ஒன்றாகவே இருக்கிறார்கள். உலகின் மூன்றாவது பெரிய மதமாக நாத்திகம் வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற தகவல் மதவாதிகளுக்கு ஒரு எச்சரிக்கை மணி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் காரிகன் !

      எழுத்தில் எனது பலவீனம் எழுதியதை ஆறப்போட்டு, காத்திருந்து மீன்டும் படித்து மெருகூற்றாமல் சட்டென பிரசுரித்து விடுவது ! அதற்கு நேரமின்மையும் ஒரு காரணம் ! இந்த பதிவில் எனக்கு முழுத்திருப்தியில்லை என்பதே உண்மை ! இன்னும் நிறைய சேர்த்திருக்கலாம்...

      சரி, உங்களுக்கு மதம் பிடிக்காத காரணத்தை அறிய ஆவலாயிருக்கிறேன் நண்பரே ! நிச்சயமாய் அது ஒரு மிகவும் ஆக்கப்பூர்வமான பதிவாய் அமையும்.

      " அதுவும் மரண பயம் என்று வந்துவிட்டால் சிலருக்கு அனைத்தும் அடங்கிப் போய் ஒரே பஜனைதான்... "

      மூன்று வருடங்களுக்கு முன்னர் நடந்த ஒரு சம்பவம்...

      விமான பயணத்தின் போது காற்றழுத்த பிரச்சனை... பல்லாண்டுகால விமான அனுபவத்தில் அப்படி ஒரு குலுக்கலை நான் விமானத்தில் கண்டதில்லை ! விமானமெங்கும் கூச்சல் ! சில நொடிகளே நீடித்த ந்த சம்பவம் பலமணி நேரங்கள் தொடர்ந்தது போன்ற பிரமை !

      இது நடந்தது இத்தாலியிலிருந்து சில நிமிட பயண தூரத்தில். அதற்கு பிறகு இந்தியா வந்து சேரும் வரை விமானமே அமைதியாகிவிட்டது ! அந்த சில நொடி நேரங்களில் அனைத்து மதத்தினரும் அவரவர் சுலோகங்களை சொல்ல... வேதபுத்தகங்கள் கொண்டுவந்தவர்கள் அவற்றை மார்போடு அனைத்துக்கொள்ள... விண்ணிலேயே ஒரு சர்வமத பிரார்த்தனை !

      " உலகின் மூன்றாவது பெரிய மதமாக நாத்திகம் வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற தகவல் மதவாதிகளுக்கு ஒரு எச்சரிக்கை மணி."

      காரிகன்,

      உங்கள் எச்சரிக்கை உண்மையானால் மகிழ்வேன்... காரணம், சில ஆண்டுகளுக்கு முன்புவரை மூன்றாம் உலகப்போர் குடி நீருக்காக மூளும் என காரண காரியங்களோடு விளக்கினார்கள்... ஆனால் இன்றைய நிலையை பார்த்தால் அது மதங்களினால் மூன்டு விடுமோ என அச்சமாக உள்ளது !

      நன்றி

      Delete
  13. வணக்கம்!

    "இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"
    ஜெய் ஹிந்த்!

    நன்றியுடன்,
    புதுவை வேலு


    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே !

      சாதிமத பேதமற்ற, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கவல்ல உதாரண ஜனநாயகத்தை உருவாக்குவதன் கடமை நம்மை போன்ற வலைப்பூ எழுத்தாளர்களுக்கும் உண்டு.

      நன்றி
      சாமானியன்

      Delete
  14. அம்மா,

    என்னையும் உங்கள் அறிமுகங்களில் சேர்த்து, தகவலும் தந்தமைக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  15. அண்ணா வணக்கம்,
    என் தாமத வருகைக்கு மன்னிப்புக் கேட்கப் போவதில்லை. படித்து ஓரிருவரிகளில் பின்னூட்டமிட்டுப் போக முடியாத நிலையில் சில நெருக்கடிகளால் இணையப்பக்கம் வர முடியவில்லை என்றாலும் உங்கள் பதிவை வெளியிட்ட அன்றே படித்துவிட்டேன்.
    அலை பேசியில் தமிழில் தட்டச்ச முடியவில்லை. அதனால் பின்னூட்டம் இடவில்லை.
    அன்பினைப் போதித்த மதங்களைப் போல் உலகில் மனித ரத்தத்தில் ஊறியது வேறொன்றும் இல்லை.
    இருந்தாலும் மதங்கள் இன்னும் உயிர் ( வாங்கும் ) துடிப்போடு உலகத்தில் வீற்றிருக்கின்றன.
    நம் அறிவு இன்னும் கடக்காத பெருவெளிகள் இருக்கும் வரை அது அதே உயிர்ப்போடுதான் இருக்கும்!
    அச்சத்தின், அவநம்பிக்கையின் கடைசிச் சொட்டு மனித நெஞ்சில் உலராதிருக்கும் வரை மதங்கள் இருக்கும்.
    கடவுளர்கள் இருப்பார்கள். உன் கடவுள் பெரியவனா என் கடவுள் பெரியவனா என்ற மோதல் நடக்கும்.
    பாவம் மனிதர்கள் அநியாயமாய்ப் பலியாவார்கள்.
    ஏனோ அவர்களை உயிர்ப்பிக்க அவரவர்களின் கடவுளர் எப்போதும் வருவதே இல்லை.

    இறையும் மதமும் இறையின்மையும் அவரவர் நம்பிக்கை சார்ந்த விடயங்கள் .
    உணர்வுப்பூர்வமானவை!
    இருப்பைக் காட்ட முடியாத இல்லாமையை ஏற்க முடியாத மனப்போராட்டம் !
    எல்லா மதங்களும்,
    நாமறியாமல் நமது பிறப்பிலேயே பூட்டப்படுகின்ற சங்கிலிகளாய்த்தான் இருக்கின்றன.
    கடைசிவரை அதை அணிகலனாகக் கருதிப் பூரிப்படைவர்களே பெரும்பாலானோர்.
    இப்போதிருப்பதை விட இந்தச் சங்கிலி நன்றாய் இறுக்கமாய் இருக்கிறது என வேறொன்றினைத் தேர்ந்து தம்மைப் பூட்டிக் கொள்பவர் வெகுசிலர்.
    எனக்கெதற்கு இதென்று ஒருகட்டத்தில் தளை தகர்த்து இத்துணைகாலம் இறுக்கப்பட்ட தங்களின் தழும்புகளைத் தடவிக் கொடுத்து இப்பொழுது எவ்வளவு நன்றாய் இருக்கிறது என ஆனந்தம் அடைபவர் மற்று சிலர்.
    ஆனால் இந்தக் கட்டாய மதமாற்றம் ............
    உண்மையில் அது ஒரு கேலிக்கூத்துத்தான்,
    சரித்திரம் தனது இரத்தக் கறை படிந்த பக்கங்களில் அதைப் பதிவு செய்து வைத்திருக்கிறது.
    ஆசைகாட்டி சங்கிலியில் பூட்டுவது ஒரு வகையென்றால்,
    அச்சுறுத்திப் பூட்டியதுதான் மிகப்பலவும்!
    அவர்கள் காத்திருக்க வேண்டியது அவ்வடிமைகளின் ஒரு தலைமுறை தாண்டும் வரை கவனமாய்ப் பார்த்துக் கொள்வதுதான்!
    பின்பு தொடர்ந்து நீளும் உற்பத்தி, எவரும் வலியுறுத்தாமல், தன் கடிவாளங்களைத் தானே இட்டுக் கொள்ளும்.

    மற்றபடி,
    உங்களின் பதிவு வழக்கம் போலவே,
    அறுவை சிகிச்சை நிபுணனின் கத்திபோல தேவையான இடங்களில், தேவையான அளவு, தேவையான அழுத்தத்தில் கிழித்துச் சென்றிருக்கிறது.
    உங்களைப் போல் வார்த்தை வசப்பட வேண்டும் என எனக்கும் என்று வேண்டத் தோன்றுகிறது.
    ஆனால் யாரிடம்?!!!!
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் படித்திருப்பீர்கள் என்பது நிச்சயமாய் தெரியும் சகோதரரே !

      எனது பதிவுகளை உங்களை போன்றவர்கள் தொடர்ந்து படிப்பதே எனக்கு பெருமை ! இதில் மன்னிப்பெல்லாம் தேவையா ?!

      வழக்கம் போலவே வார்த்தைகளை பக்குவமாய் வடித்தெடுத்த, அழுத்தமான பின்னூட்டம். வார்த்தைக்கு வார்த்தை நிதர்சனமான உண்மையும் கூட ! பின்னூட்டத்துக்கான பதிலே ஒரு பதிவாய் நீளம்...

      " அவர்கள் காத்திருக்க வேண்டியது அவ்வடிமைகளின் ஒரு தலைமுறை தாண்டும் வரை கவனமாய்ப் பார்த்துக் கொள்வதுதான்!
      பின்பு தொடர்ந்து நீளும் உற்பத்தி, எவரும் வலியுறுத்தாமல், தன் கடிவாளங்களைத் தானே இட்டுக் கொள்ளும். "

      சத்தியமான உண்மை ! எந்த ஒரு மாற்றத்தையும் விட மதமாற்றத்தின் வலிமை இதுதான் ! ஏதோ ஒரு தலைமுறையில் தன் தாய் மொழி மறக்கடிக்கப்பட்டவன் கூட மீன்டும் அதனை தேட வாய்ப்புகள் உண்டு ! ஆனால் மதம் என்றால்... மூச் !!!

      களமாடும் உங்களின் தமிழ் வீச்சையெல்லாம் கண்கள் விரிய பார்த்தபடி, மொன்னை கத்தியால் வெங்காயம் நறுக்க பழகி கொண்டிருப்பவன் நான்... என்னைப்போல் உங்களுக்கு வார்த்தை வசப்பட வேண்டுமா ?!!!...

      உங்கள் அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றிகள் !

      Delete
  16. அன்புடையீர், வணக்கம்.

    தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


    இணைப்பு:- http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_30.html

    ReplyDelete
    Replies
    1. என வலைதளத்தினை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி, எனக்கு தகவலும் தந்தமைக்கு நன்றிகள் பல.

      Delete



  17. yathavan nambiJanuary 29, 2015 at 1:33 PM

    அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
    நல்வணக்கம்!
    திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
    வலைச்சரம் ஐந்தாம் நாள் - "வேருக்கு நீர் ஊற்றுவோம்"
    இன்றைய வலைச் சரத்தின்
    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
    வாழ்த்துக்களுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. வழக்கம் போலவே வாசமிகு நட்புடன் என் வலைதள அறிமுகம் அறிவித்தமைக்கு நன்றிகள் பல !

      Delete
  18. வணக்கம் சாமானியன் அவர்களே, புதுவை வேலு பல முறை இந்த பதிவை படிக்குமாறு சொல்லும்போது சொந்த சூழ்நிலை காரணமாக படிக்க முடியவில்லை. நான் இப்போது படித்து என் கருத்தை பதிகிறேன்.
    மரணம் அனைவருக்கும் நிச்சயக்க பட்ட உண்மை, இதனால் மாற்றம் நிகழவில்லை. மதமாற்றம் என்னும் குடை, இந்திய சமுகத்தின் ஜாதிக கொள்கை ஒரு காரணமாக இருக்க வாய்ப்பு என்பதில் சில சதவிகிடம் உண்மை. இதில் பொருளாதார அரசியல் இருக்கிறது நண்பரே. என்னதான் மாற்றம் நடந்தாலும் உள்பிரிவு மறுபடியும் வேறொரு நோக்கத்தில் உறவு முறைகள் என்னும் வலுவான போர்வைக்குள் படுங்கிகொள்ளும் வாய்ப்பே அதிகம். ஆத்திகனோ நாத்திகனோ இங்கு இல்லை, வாழ்வாதாரம் மட்டுமே ஒருவனை நிலைகுலைய செய்யும்போது, அவன் ஒரு குடையை தேடி செல்ல வாய்ப்புகள் அதிகம் - அது மத கூடாரமாக கூட இருக்கலாம்.
    நாட்டில் இருக்கும் அனாதைகளுக்கு மதம் என்னும் வார்த்தை தெரியுமா ?
    அவர்களின் சதவிகிடம் மாநில வாரியாக உண்டா ?
    குடும்பத்தால் பிரிக்கப்பட்ட மக்களின் மாநில வாரியாக சதவிகிதம் என்ன ?
    இவர்களுக்கு உறவு முறையும், பொருளாதாரமும், முக்கியமாக தோன்றும் தருணத்தில் இவர்களின் முடிவு என்ன ?
    இப்படி பல கேள்விகள் இருக்கலாம்....
    எனவே மனமாற்றமே அனைத்துக்கும் காரணமே.

    மனதில் தோன்றியதை எழுதினேன் சாமானியன் அவர்களே. நன்றி

    sattia vingadassamy

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சத்யா அவர்களே !

      ஒவ்வொரு பதிவின்போதும் நான் ஆவலுடன் எதிர்பார்க்கும் பின்னூட்டங்களில் உங்களுடையதும் ஒன்று !

      மரணம் நிச்சயமான ஒன்று என்ற தெளிவுடையவர்களுக்கு மதமாற்றம் ஒரு பொருட்டல்லதான் ! ஆனால் அந்த " சொந்த " தெளிவு சமூகத்தில் எத்தனை பேரிடம் ?!...

      தர்க்கத்தில் இறங்காமல் உண்மையை சொல்ல வேண்டுமானால் உங்கள் நியாயமான கேள்விகள் நிறைய யோசிக்க வைக்கின்றன...

      " அவன் ஒரு குடையை தேடி... "

      தன் சொந்த வாழ்வாதாரத்துக்காக எந்த குடையையும் தேடி எடுக்க கடைக்கோடி குடிமகனுக்கும் உரிமை உண்டுதான் ! ஆனால் அது கட்டாயமாக அவன் கையில் திணிக்கப்படுவதைதான் சாடுகிறேன் ! பல சமயங்களில் அவனிடம் திணிக்கப்படும் குடையின் எடையே அவனை இன்னும் நிலைகுலையச்செய்து விடுகிறதே !

      " மனதில் தோன்றியதை எழுதினேன் சாமானியன் அவர்களே "

      நீங்கள் மனதில் தோன்றியதை எழுதுபவர் என்பதால்தான் உங்கள் பின்னூட்டங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சத்யா அவர்களே !

      நன்றி


      Delete
  19. ஏற்கனவே விரிவாக இதைப் பற்றி எழுதியுள்ளேன். நன்றி.

    http://deviyar-illam.blogspot.com/2012/08/blog-post_31.html

    ReplyDelete
    Replies
    1. படித்து பின்னூட்டமும் பதிந்துவிட்டேன்... ! நன்றி.

      Delete
  20. அன்புள்ள அய்யா,



    உயிரை தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் ஆறாம் அறிவு உதித்த தருணத்திலேயே வழிப்பாட்டுக்கான அவசியமும் தோன்றியிருக்க வேண்டும் ! மத நம்பிக்கைகளுக்கான அடிப்படை என்ன ? மரணம் பற்றிய பயம். இதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை!

    நாம் பிறப்பால் ஒரு மதத்தில் இருப்பது... எப்படித் தாய் தந்தையை நாம் தீர்மானிக்க முடியாதோ அதுபோல மதமும் நாம் தீர்மானிக்க முடியாமல் பிற்ப்பிலேயே ஒட்டியிருக்கிறது. தாய் தந்தையின் வளர்ப்பிலே அவர்களைப் பின்பற்றி நாமும்... பயத்தின் அடிப்படையில் அந்தந்த மதத்தில் சடங்குளை விருப்பு வெறுப்புடன் ஒட்டியே வளர்ந்து வருவது இயற்கையாகிவிட்டது என்பது உண்மைதான். ஆனால் நாம் வளரவளர... நாம் ஒரு தெளிவிற்கு வருகிறோம். சிலர் முடிவெடுக்கிறார்கள்... சிலர் முடிவெடுத்தாலும்.. எடுத்த முடிவை செயல்படுத்த தயங்குகிறார்கள்... ஆனால் மனிதனை தெளிவடைய விடாமல் மூளையை மழுங்கடிப்பதிலேயே மும்முரமாக இருக்கிறது மதம்.

    மதங்கள்... பெரியோர்கள்... காட்டியது ... சென்றது எல்லாம்...அன்பு... தவறு செய்யாமல் வாழவேண்டும்... தவறு செய்தால் உனக்கு நரகம்.... நல்லவனாக... நல்லது செய்தால் சொர்க்கம்... மோட்சம்... வீடுபேறு... என்றெல்லாம்... பயமுறுத்தி வைத்தார்கள்...’ எந்த மதமும் அழிவு வழியைக் காட்டவில்லை...! ஆனால் மனிதன்?

    மதத்தின் பெயரால் தமக்கு ஒரு கூட்டத்தைக் கூட்ட நினைத்து... கடவுளின் அவதாரமாக தன்னைக் காட்டிக்கொண்டு... மூளைச் சலவை செய்து... எந்த நேரமும் கடவுளை நினைத்து வாழ்வை அழித்து... நிம்மதி...சுகத்தைத்தேடி இவ்வுலக வாழ்வைத் தொலைத்து... சாமியார்களை... அல்லது பூசாரிகளை வாழச் செய்ய மக்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கிறார்கள் ... அவர்களின் வாழ்க்கை நன்றாகப் போய்க்கொண்டிருக்கின்றன.

    வர்ணசிரமத்திற்குள் சிக்குண்டதிலிருந்து... அம்பேத்கர் முதல் புத்த மதத்திற்கு மாறியதைப்போல ஒடுக்கப்பட்டவர்கள்... தாழ்த்தப்பட்டவர்கள் மாறினார்கள் என்பது உண்மைதான். மதம் மாறினாலும் மாறியமதத்தில் அந்த ஜாதி மாறிபாடகத் தெரியவில்லை... !

    மனிதன் விரும்பினால் எந்த மதத்திற்கு வேண்டுமானாலும் மாறிக்கொள்ளட்டும். என்னைப் பொறுத்தவரை ‘மதம் யானைக்குப் பிடித்திருப்பதும்... மனிதனுக்குப் பிடித்திருப்பதும் ஒன்றுதான்’ என்று எண்ணுகிறேன். மதம் மனிதனை ‘அபினைப்’ போன்று எப்பொழும் போதையில் வைத்திருப்பதையே விரும்புகிறது என்று கருதுகிறேன். எந்த மதத்தில் இருந்தாலும் ... எப்படி வண்ணச் சட்டைகளை மாற்றி மாட்டிக்கொள்கிறோமே அதைப் போன்றதுதான் என்று எண்ணுகிறேன். சட்டையைப்பற்றிச் சட்டை செய்யாமல் இருப்பதுதான் நல்லது என்று நினைக்கிறேன். சட்டையில்லாமல் இருந்த காந்தியைப்போல... (கடவுளைப்பற்றி... மனுதர்மத்தைப் பற்றி அவர் கூறியதைப்பற்றிச் சொல்லவில்லை)... இந்த நாட்டில் எனது மக்கள் உடுக்க ஆடையின்றி கோவணம் கட்டிக்கொண்டு இருக்கையில் எனக்கு இவ்வளவு ஆடை எதற்கு என்று ஒரு முடிவுடன் தமிழகத்தில் விவசாயிகளை எண்ணி அரையாடை கட்டினாரே... அதுதான் தேவை என்று எண்ணுகிறேன்.
    வாழுகின்ற போது உன்னுடன் வாழும் மக்களை நினை... அவர்களுக்காக... அவர்களுடன் நீயும் சேர்ந்து... அன்போடு... சந்தோசமாக வாழ்... தேடல்... தேடல் என்று தேடித் தேடியே வாழ்வைத் தொலைக்காமல் வாழ்வதே சிறந்தது.


    ReplyDelete
    Replies
    1. உங்களின் மிக ஆழமான பின்னூட்டத்துக்கு நன்றிகள் பல !

      " அவர்களைப் பின்பற்றி நாமும்... பயத்தின் அடிப்படையில் அந்தந்த மதத்தில் சடங்குளை விருப்பு வெறுப்புடன் ஒட்டியே வளர்ந்து வருவது இயற்கையாகிவிட்டது "

      மனித வாழ்க்கைக்கு முக்கியமான, மிகவும் ஆழ்ந்து யோசிக்க வேண்டிய வரிகள் இவை ! பயத்தின் அடிப்படையில் நன்மை செய்வதற்கும், ஒரு செயலின் பின் விளைவினை யோசித்து காரியம் ஆற்றுவதற்கும் மிகப்பெரிய வித்யாசம் உண்டு. பின்னதின் பெயர்தான் தெளிவு ! அல்லது... ஞானம் ! ஞானம் அடைந்தவனுக்கு மதமே தேவையில்லை !

      " சாமியார்களை... அல்லது பூசாரிகளை வாழச் செய்ய "

      இதையே மதகுருமார்களை என பொதுவாக சொல்லலாம் ! மதங்களுக்கு " மதம் " பிடிக்க வைத்தவர்களே மதத்தை தொழிலாக ஆக்கிக்கொண்ட மத குருமார்கள்தான் !

      சட்டையைப்பற்றிச் சட்டை செய்யாமல் இருப்பதுதான் நல்லது என்று நினைக்கிறேன். சட்டையில்லாமல் இருந்த காந்தியைப்போல... (கடவுளைப்பற்றி... மனுதர்மத்தைப் பற்றி அவர் கூறியதைப்பற்றிச் சொல்லவில்லை)...

      இந்த வரிகள் உங்களின் வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்தையும், தெளிவையும், அறிவையும் காட்டுகின்றன.

      நன்றி


      Delete
  21. அன்புள்ள அய்யா,
    தாகூர் கூறியதாக நண்பர் சொன்னார்...

    ‘நான் பாடவந்த பாடலை இன்னும் பாடி முடிக்கவில்லை...
    யாழுக்கு இசைகூட்டுவதிலேயே என் காலம் முடிந்துவிட்டது...
    நான் பாடவந்த பாடலை இன்னும் பாடி முடிக்கவில்லை...’
    காதலித்த காலத்தில் ஒருவர் மற்றொருவரின் மதத்தின் மீது ஆத்மார்த்த பற்றுக்கொண்டிருக்கலாம்தானே என்ற கேள்வி எழுகிறதா ?...
    காதலிக்கின்ற பொழுது... மதத்தின் மீது பற்று கொண்டு வருவதில்லை என்றே எண்ணுகிறேன்....! ஒருவர் மீது ஏதோ காரணத்தால் காதல் வந்து விட்டால் அதன் பிறகு அவர்களைப் பொறுத்தவரை மதம் அவர்களின் காதலுக்கு குறுக்கீடா இருக்குமே ஒழியே இவர்கள் அந்த மதம்... இந்த மதம் என்று விரும்பமாட்டார்கள்... மதம் ஒரு பொருட்டாக அவர்களின் கண்களுக்குத் தெரிவதில்லை... எந்த மதம் என்றாலும் சம்மதம்தான்... காதல் ஜெயிக்கவேண்டும்... அவ்வளவுதான்.
    கடவுள்தான் மதங்களை படைத்தார் என்றால் அந்த மதங்களையும் அவரே பாதுகாத்துக்கொள்வார் !
    அவர் படைத்திருந்தால் அவரே பார்த்துக்கொள்வார்... ?! அவரின் கோயில்களைப் பாதுகாக்க ... அவரின் பொன்நகைகளைப் பாதுகாக்க... மின்வேலி தேவைப்படாதே! காவலர் துப்பாக்கியுடன் காவல் காக்க வேண்டிய அவசியம் எதற்கு? அவரைப் பாதுகாப்ப முடியாதவர்... நம்மை பாதுகாப்பது முடிகிற காரியமா? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
    காக்க... காக்க... மதத்தை அல்ல... மதமாற்றத்தை அல்ல... மனிதன் மனிதத்திற்கு மாற... காக்க காக்க... யாராக இருந்தாலும் காக்க... காக்க! மனிதத்தை...!!

    நன்றாகச் சிந்தித்து ‘மதமாற்றம் மனமாற்றமாகுமா ?’ என்றதொரு கருத்து அன்பர்களின் பார்வைக்கு அழகாக... அரிய பல கருத்துகளைத் தந்து சிந்திக்கத் தூண்டியதற்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நன்றி.



    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ! மிருக குணத்துடன் வாழ்ந்த மனிதனை பண்படுத்தி, மனிதம் வளர்க்க தோன்றிய மதங்கள், இன்று அரசியல் சுயநல லாப நோக்கு கொண்டவர்களால் மனிதத்தை கொல்ல பயன்படுத்தப்படுவதுதான் வேதனை !

      நன்றி

      Delete
  22. அருமையான பதிவு :)

    // என்று இரண்டாவதாக ஒரு மதம் பூமியில் தோன்றியதோ அன்றே மதமாற்றமும் நிகழ தொடங்கிவிட்டது ! மதமாற்றத்துக்கு தனிமனித உணர்வு தொடங்கி சமூகம், பொருளாதாரம் என பல காரணங்கள் உண்டு. ஆனாலும் இன்று மதமாற்றம் அதிகமாக பேசப்படுவதற்கு காரணம் மதம் சார்ந்த அரசியல் மற்றும் கடைக்கோடி வரை பாயும் ஊடக வீச்சு ! //

    இது மிகவும் உண்மையான FACT.

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் வார்த்தைகளும் நன்றி நாரதரே !

      அந்த நாரதர் கலகம் நன்மையில் முடிவதைப்போல, இந்த நாரதரின் வருகை தொடர வேண்டுகிறேன் !

      Delete
  23. அன்பு நண்பரே!
    நல் வணக்கம்!
    பிறக்கும்! பிறக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன் தங்களது புதிய பதிவை எதிர்நோக்கியபடி,
    தங்களது "மதமாற்றம் மனமாற்றமாகுமா ?
    பதிவு பின்னூட்டத்தால் சதம் அடிக்க வேண்டும்! சாதனை படைக்க வேண்டும்! நூறாவது பின்னூட்டமாக எனது பின்னுட்டம் இருக்க வேண்டும் என்று காத்திருந்தேன்.
    முடியல சாமி! சாமானியனின்

    அறிவை புரட்டும் அனுபவக் கட்டுரை அடுத்து மலர்ந்து மனம் வீச வேண்டுகிறேன்.

    "அன்பும் அறமும் தழைக்கும் தலம்
    மாண்பு பிறக்கும் மனிதகுலம்"

    புதிய பதிவை எதிர்நோக்கியபடி,

    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. " பதிவு பின்னூட்டத்தால் சதம் அடிக்க வேண்டும்! சாதனை படைக்க வேண்டும்! நூறாவது பின்னூட்டமாக எனது பின்னுட்டம் இருக்க வேண்டும் என்று காத்திருந்தேன். "

      நண்பரே,

      தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் ஜாதி, மத, மொழி, பிராந்திய தளைகளை தழைத்துக்கொண்டு மனிதநேயத்தில் நம்பிக்கை வைத்து, என் மனதுக்கு, மனசாட்சிக்கு சரியென பட்டதை அரைகுறை மொழியில் கிறுக்கிக்கொண்டிருப்பவன் நான் ! ஒரே நிம்மதி... நான் வாழ்க்கையில் கடைபிடிப்பவைகளை மட்டுமே என் எழுத்திலும் கொடுக்கிறேன் !

      சதம், சாதனை, நூறாவது நாள் ( ?! ) என்றெல்லாம் உசுப்பிவிட்டு என்னை சினிமா தயாரிப்பாளாராக்கி விடாதீர்கள் !

      நன்றி
      சாமானியன்

      Delete
  24. படித்தேன் ஐயா!

    முதலில், இவ்வளவு பெரிய விதயத்தை இத்தனை சில வரிகளில் அடக்கிவிட்ட உங்கள் எழுத்துத் திறமையை வியக்கிறேன்.

    கண்டிப்பாக மத மாற்றம் மன மாற்றம் ஆகாதுதான். சொல்லப் போனால், மன மாற்றம்தான் மதம் மாறத் தூண்ட வேண்டுமே தவிர, மதம் மாறுவதன் மூலம் நம் மனமோ வேறு எதுவுமோ மாறிவிடப் போவதில்லை.

    ஆனால், எனக்கு ஒன்று புரியவில்லை. கடவுள் நம்பிக்கையின் தோற்றம், மதம் மாறுவதில் மனிதர்களுக்கு இருக்கும் உரிமை, மதம் மாறுதல் என்பதே மனவலிமை குறையும்பொழுது தோன்றுவதுதான் என்பதால் எப்படிப் பார்த்தாலும் அது வீண்தான் என்பது - என எல்லாவற்றையும் மிகவும் நடுநிலையாக எழுதி வந்த நீங்கள் கடைசியில், மதமாற்றத்துக்கு எதிராகப் பதிவை முடித்தது ஏன்? காதலுக்காக மதம் மாறுவது கிறுக்குத்தனம் என்கிறீர்களா? அதை வேண்டுமானால் ஒப்புக் கொள்கிறேன். காரணம், அது காதல் வேகத்தில் செய்யப்படும் செயல். அதற்கு எந்தப் பொருளும் இல்லை. மற்றபடி, கட்டாயமாகவெல்லாம் யாரையும் யாரும் மதம் மாற்றிவிட முடியாது ஐயா. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அப்படி மாற முதலில் துணியவே மாட்டார்கள். நீங்களே கூறியுள்ளபடி, வாழ்க்கையில் ஏற்படும் நம்பிக்கையின்மை, இறுதிக்காலத்தில் ஏற்படும் அச்சம், தன் சமயத்தில் உள்ள மூடநம்பிக்கைகள் அல்லது சாதி/குழு சார்ந்த பாகுபாடுகள் போன்ற காரணங்களாலும், தன் கடவுள் மீது நம்பிக்கை இழத்தல் அல்லது இன்னொரு சமயத்துக் கடவுள் மீது ஏற்படும் ஈர்ப்புக் காரணமாகவும்தாம் ஒருவர் தன் சமயத்தை விட்டு இன்னொன்றுக்கு மாறுகிறாரே தவிர, மற்றவர்களின் மூளைச் சலவையோ அது போன்ற பிற முயற்சிகளோ ஒருவரை மதம் மாற்றிவிட முடியாது.

    அதற்காக, மதம் மாற்றும் முயற்சிகள் இங்கு நடக்கவேயில்லை எனக் கூற மாட்டேன். கண்டிப்பாக நடக்கின்றன; எங்கள் குடும்பத்திடமே கூட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவை அனைத்துமே நாங்கள் கும்பிடும் கடவுள்களை விட அவர்களின் கடவுள்களுக்கு ஆற்றல் சில கிலோவாட்டுகள் (!) கூடுதல் என்கிற தோரணையில்தான் மேற்கொள்ளப்பட்டன. இப்படிப்பட்ட முயற்சிகள்தாம் எல்லா இடங்களிலும் தனிப்பட்ட முறையிலும், பொதுமேடை போட்டும் மீண்டும் மீண்டும் கையாளப்படுவதை நான் பார்க்கிறேன். "எங்கள் மதத்துக்கு வந்தால் உங்கள் உடல்நலக் குறைபாடு சரியாகவிடும், உங்கள் குடும்பச் சிக்கல்கள் தீர்ந்துவிடும், உங்கள் சாதிய இழிவு நீங்கிவிடும்" என இவர்கள் கூறும் அத்தனை காரணங்களையும் ஒரே வரியில் அடக்கிவிடலாம். அதாவது, இந்தச் சமயத்தில் இருந்து அந்தச் சமயத்துக்குச் சென்றுவிட்டால் எல்லாச் சிக்கல்களும் தீர்ந்துவிடும் என்பதுதான் அது. இப்படி ஒருவர் கூறும்பொழுது, அப்படிக் கூறுபவரின் மதத்தைச் சேர்ந்தவர்களில் யாருக்கும் இந்தப் பிரச்சினைகள் எதுவும் இல்லையா (சாதிப் பிரச்சினை தவிர) என்பதை ஒரு நொடி சிந்தித்துப் பார்த்தாலே யாரும் ஒரு சமயத்திலிருந்து இன்னொரு சமயத்துக்கு மாற மாட்டார்கள். ஆனால், அதைக் கூடச் சிந்திக்கவொண்ணா அளவுக்கு மக்களை மடையர்களாக்கி வைத்திருப்பது யாரென்று கேட்டால், இன்று மதமாற்றத்தால் தங்கள் கட்சியின் வாக்குகள் குறைகின்றனவே என்பதற்காக வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறதே ஒரு கட்சி? அந்தக் கட்சியின் மதம்தான்.

    ஆம்! இந்துச் சமயம் மட்டும் தன் மக்களை இத்தனை பிரிவுகளாகப் பாகுபடுத்தியும், படாத பாடுபடுத்தியும் வைத்திராவிட்டால் இன்றிருக்கும் எந்தப் பிரச்சினையும் உண்மையில் முளைத்தே இரா. தனிமனித உடல்நலப் பிரச்சினைகள், சாதிச் சழக்குகள், வறுமை, குடும்பச் சிக்கல்கள் என இந்தியாவிலுள்ள எந்த ஒரு சிறு பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும் அதற்கு ஏதோ ஒரு வகையில் இந்துச் சமயம்தான் காரணமாக இருக்கிறது என்பதை ஆழ்ந்து சிந்தித்தால் உணரலாம். அதே சமயம்தான், இன்னார்தான் படிக்க வேண்டும், இன்னாரெல்லாம் படிக்கக்கூடாது என்றும், இதைக் கடவுளே கால் டாக்சி பிடித்து வந்து தங்களிடம் கூறிவிட்டுப் போனதாகவும் எழுதி வைத்தது. இப்பொழுது அந்தப் பிரச்சினைகளையே காரணம் காட்டி, மக்களைத் தங்கள் மதத்துக்கு இழுக்கிறார்கள் மற்றவர்கள். படிக்காத, அல்லது படித்தும் சிந்திக்கத் தெரியாத நம் மக்களும் இதை நம்பி அந்த மதங்களுக்குப் போகிறார்கள். அதற்கு இப்பொழுது அவர்கள் வயிறெரிந்து எந்தப் பயனுமில்லை? அவர்களுடைய ஏற்பாடுதான் இன்று அவர்கள் கழுத்துக்கே கத்தியாக வந்திருக்கிறது. இந்த மக்கள் மட்டும் வேண்டா, இவர்களின் வாக்கு மட்டும் வேண்டுமோ!

    ReplyDelete
  25. என்னைப் பொறுத்த வரை, கடவுளே வீண்! அப்புறம்தானே சமயம்?

    சிங்களன், கோயில் கோபுரத்தில் சிறுநீர் கழித்ததால் கொதித்துப் போய் அதற்கு எதிராகப் போராடியவர்கள் ஈழத் தமிழர்கள். அந்த நிகழ்வு, தமிழீழப் போராட்டம் தொடங்கியதற்கான முதன்மையான காரணங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. ஆனால், கடைசியில் அந்தக் கடவுள், காலங்காலமாகத் தன்னைப் பன்னீரால் குளிப்பாட்டிய தமிழனைத் தோற்கடித்துவிட்டு, தனக்குச் சிறுநீர் திருமுழுக்குச் செய்வித்த சிங்களனைத்தான் வெல்ல வைத்தது! ஈழத்தில் மட்டுமில்லை, ஈராக்கில், இட்லரின் ஜெர்மனியில், பாலத்தீனத்தில் என உலகெங்குமே எல்லாச் சமயத்து மக்களும் சொல்ல முடியாத கொடுமைகளை வெவ்வேறு காலக்கட்டத்தில் அனுபவித்துதான் இருக்கிறார்கள். அவர்கள் கும்பிடும் கடவுள்கள் ஒருநாளும் நேரில் வந்து அவர்களைக் காப்பாற்றியதாகத் தெரியவில்லை. கடவுள்களே இப்படி உதவாக்கரைகளாக இருக்க, இந்தச் சமயங்களை வைத்து என்ன செய்ய? நாக்குக் கூட வழிக்க முடியாது இவற்றை வைத்து. அது மட்டுமில்லை, தமிழர்களைப் பொறுத்த வரை, நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாக எப்பொழுதோ மதம் மாற்றப்பட்டு விட்டோம்!

    ஆம்! தமிழர்கள் உண்மையில், இந்துக்களே இல்லை. இந்துச் சமயம் வேறு, தமிழர் சமயம் வேறு. தமிழர்கள் கடவுளை வழிபடும் முறை, தமிழர்களின் கடவுள் கொள்கை, ஆவி - மறுபிறவி போன்றவற்றில் தமிழர்கள் கொண்டிருக்கும் கோட்பாடு என அனைத்தும் இந்துச் சமயக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரணாக உள்ளன. (சொல்லப் போனால், சில விதங்களில் அவை இந்து சமயக் கோட்பாடுகளை விடக் கிறித்துவச் சமயக் கோட்பாடுகளோடு பெரிதும் ஒத்துப் போகின்றன). இந்து எனத் தங்களைத் தமிழர்கள் எப்பொழுது குறிப்பிட்டுக் கொள்ளத் தொடங்கினார்களோ, அப்பொழுதே தமிழர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக மதமாற்றப்பட்டு விட்டார்கள். இனி தமிழர்கள் கிறித்தவராகவோ, இசுலாமியராகவோ, சீக்கியராகவோ, பௌத்தராகவோ எதற்கு மாறினாலும் அது இரண்டாவது முறை மாறுவதாகத்தான் ஆகும். தமிழர்களைப் பார்த்துத் தங்கள் வழிபாட்டு முறைகளை அமைத்துக் கொண்ட ஆரியர்கள் பின்னாளில் இரண்டும் ஒன்று என நிறுவியதால், அனைத்தும் 'இந்து' என்கிற ஒரே சமயத்தின் கீழ் வந்துவிட்டன. இதுதான் வரலாறு! இதுதான் உண்மையான, பச்சையான மூளைச்சலவை! "எங்கள் மதத்துக்கு வந்தால் உங்கள் பிரச்சினைகளெல்லாம் தீர்ந்துவிடும்" என்று கூறினால், ஒவ்வொருவராகத்தான் மதத்துக்கு ஆள் சேர்க்க முடியும். ஆனால், முற்றிலும் முரண்பட்ட இருவேறு மதங்களை ஒரே மதம் என நம்ப வைத்துவிட்டால், மொத்த இனத்தையே தங்கள் மதத்துக்குள் வளைத்துப் போட்டுவிடலாம். அதைத்தான் செய்தது இந்து மதம்! பின்னர், வெள்ளைக்காரர் காலத்தில், அவர்களுக்கு உதவியாக அதிகார மட்டத்தில் இருந்த பார்ப்பனர்கள், கிறித்தவ, இசுலாமிய, சீக்கிய மதத்தினர் தவிர, மற்றவர்கள் எல்லாரும் இந்துக்களே என்று ஆங்கிலேயர்களுக்குத் தவறாக வழிகாட்டி, இந்த மதத்தினரைத் தவிர்த்த மற்ற அனைவரையும் தங்கள் இந்து மதத்தில் சேர்த்துக் கொண்டார்கள்.

    ஆக, எந்த வழியில் வந்ததோ அந்த வழியாகவே அதிகாரம் அவர்கள் கையை விட்டு இன்று செல்கிறது, அவ்வளவுதான். இதில் கட்டாய மதமாற்றம் என்றோ, மூளைச்சலவை என்றோ நம்மைப் போன்ற நடுநிலையாளர்கள் கவலைப்பட ஏதுமில்லை.

    ReplyDelete
    Replies
    1. அய்யா,

      தங்களின் மிக மிக சிறப்பான பின்னூட்டத்துக்கு முதலில் என் நன்றிகள் பல. பின்னூட்டம் என்பதைவிட ஒரு மிக அருமையான பதிவையே கொடுத்துள்ளீர்கள்.

      " மதமாற்றத்துக்கு எதிராகப் பதிவை முடித்தது ஏன்?... "

      மத மாற்றத்துக்கு எதிராக அல்ல, மத மாற்றத்தை சுயலாப அரசியலுக்கான தூண்டிலாக பயன்படுத்துபவர்களுக்கு எதிராகத்தான் முடித்துள்ளேன் ! கட்டாயமாக யாரையும் மதமாற்றம் பண்ண முடியாது என்பது உண்மை என்றாலும், கத்தி முனையில் நடத்தப்படும் கட்டாய மதமாற்றத்தை விடவும் கொடியதாக நான் நினைப்பது அவலத்தின், விளிம்பில் நிற்பவனிடம் போய் இங்கே வந்தால் எல்லாம் கிடைக்கும் என்ற பொய்யான நப்பாசையை விதைப்பது ! ஆக மதம் மாறுபவர்களுக்கு எதிராக அல்ல, மதம் மாற்றுபவர்களுக்கு எதிராக !!

      உணமையை ஆணித்தரமாய், பூசி மெழுகாமல் உள்ளது உள்ளப்படி அழுத்தமான வார்த்தைகளில் பதியும் உங்களின் தைரியத்துக்கு என் மரியாதை வணக்கங்கள் ! இப்படிப்பட்ட ஒரு பின்னூட்டம் என் வலைப்பூவில் வந்ததையே பெருமையாக கருதுகிறேன்.

      " ஆக, எந்த வழியில் வந்ததோ அந்த வழியாகவே அதிகாரம் அவர்கள் கையை விட்டு இன்று செல்கிறது, அவ்வளவுதான். இதில் கட்டாய மதமாற்றம் என்றோ, மூளைச்சலவை என்றோ நம்மைப் போன்ற நடுநிலையாளர்கள் கவலைப்பட ஏதுமில்லை. "

      அதிகாரம் மட்டுமல்ல, எதுவும் வந்த வழியே வெளியேறும் என்பது மட்டும்தான் உண்மை !

      நன்றி




      Delete
    2. ஐயா! மிக மிக உயர்ந்த சொற்களால் சிறியேனைப் பாராட்டியிருக்கிறீர்கள்! மிக்க நன்றியுடனும் பணிவன்புடனும் ஏற்கிறேன்.

      (இந்தப் பதிவுக்கு வந்ததையும், கருத்திட்டதையும் நான் முற்றிலும் மறந்துவிட்டேன். அதனால்தான் இத்தனை நாட்களாகப் பதிலளிக்கவில்லை. தங்களுடைய இவ்வளவு பெரிய பாராட்டுக்கு நான் நன்றி கூடப் பாராட்டவில்லையே எனத் தவறாக நினைக்க வேண்டாவெனக் கேட்டுக் கொள்கிறேன்!).

      Delete
    3. நான் குறிப்பிட்டது உண்மை மட்டுமே ! அவை உயர்ந்த சொற்களாக உங்களுக்கு படலாம் , ஆனால் நீங்கள் சிறியேன் அல்ல ! அறிவின் அளவில் சிறிது பெரிதெல்லாம் கிடையாது அய்யா !

      எனது நிலையில் நான் கற்றது இதென்றால் உங்கள் நிலையில் நீங்கள் கற்றது அது ! ஆகமொத்தம் நாம் அனைவருமே உண்மை எனும் கடலை மறந்துவிட்டு அறிவென நினைத்து அதன் கரையில் கிடக்கும் கிளிஞ்சல்களை பொறுக்குபவர்கள்தான் !

      வாருங்கள் ! ஒன்றாய் கற்போம் அய்யா !

      Delete
  26. இ.பு.ஞானப்பிரகாசன்

    ஒவ்வொரு இடத்திலும் கலக்குறீங்க. தொடர்ந்து உங்களை கவனித்து வருகின்றேன். நீண்ட நாளைக்குப் பிறகு தெளிவான விமர்சனம் செய்பவரை பார்த்த மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா! மூத்த பதிவரும் சமூக அக்கறையில் முன்னோடியுமான தங்களுடைய பாராட்டு சிறியேனுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அளிக்கிறது. மிகவும் நன்றி ஐயா!

      (இந்தப் பதிவுக்கு வந்ததையும், கருத்திட்டதையும் நான் முற்றிலும் மறந்துவிட்டேன். அதனால்தான் இத்தனை நாட்களாகப் பதிலளிக்கவில்லை. தங்களுடைய மனமுவந்த பாராட்டுக்கு நான் நன்றி கூடப் பாராட்டவில்லையே எனத் தவறாக நினைக்க வேண்டாவெனக் கேட்டுக் கொள்கிறேன்!).

      Delete
  27. மனித மனத்தில் பயமும் ஆசையும் இருக்கும் வரை கடவுள் என்ற கான்செப்ட் இருக்கத்தான் செய்யும் சுப வீர பாண்டியன் அவர்கள் சொன்னது அதில் எனக்கு உடன்பாடுண்டு இவை இரண்டுக்குமான ஆதரவாகத்தான் கடவுள் அந்தந்த பகுதிகளின் வாழ்வியலுக்கேற்ப கடவுள் உருவாக்கப்பட்டார்கள் அதற்கேற் ற கருத்தாக்கங்களே மதமாயின இந்தியாவைப் பொறுத்தவரை பல்வேறு குழுக்கள் பல்வேறு கருத்தாக்கங்கள் நம் வாழ்வியல் கட்டுக்கோப்பிற்கு என்று சொல்லப்பட்ட கருத்தாக்கங்கள் எப்போது ஆளுமைக்காக பயன்பட ஆரம்பித்ததோ அப்போதே அவற்றில் நம்பகத்தன்மை இல்லாமல் போய்விட்டது தன் கொள்கைக்கு உடன்பட்டவனே நண்பனாகிறான் எப்படி வளர்க்கப்பட்டாலும் தன் மனதுக்கு ஏற்புடைதாய் அமையும்போதே நாத்திகனாகிறான் அதற்கு மனபலமும் அறிவார்ந்த பார்வையும் அவசியமாகிறது அது இல்லாதபோது அங்கும் குழப்பவாதிகள்தான் நிறைய முடியும் மனிதனுக்கு பயமின்மையும் அறிவையும் கொடுக்க விளையும் கருத்தாக்கங்கள் அதிகரிக்க வேண்டும் அப்போது கடவுளே தேவையில்லை என்றாகும் நிலையில் மதத்திற்கு என்ன வேலையிருக்கப் போகிறது

    ReplyDelete
    Replies
    1. சகோதரி,

      அளவான வார்த்தைகளில் மிக ஆழமான பின்னூட்டம் ! வாழ்க்கை பற்றிய உங்களின் பார்வையையும் புரிதலையும் பறைசாற்றும் வரிகள் !

      " தன் கொள்கைக்கு உடன்பட்டவனே நண்பனாகிறான்... "

      என்னை நீண்ட நேரம் ஸ்தம்பிக்கவைத்த வரிகள் !

      நன்றி சகோதரி.

      Delete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. மதமாற்றம் குறித்து தட்டையாக விமர்சிக்காது பல்வேறு காரணிகளை நீங்கள் பட்டியலிடிருப்பது அருமை.

    பொதுவாக மதமாற்றத்தை தடை செய்ய முயல்வோரை நான் கடுமையாக வெறுக்கிறவன்.

    அம்பேத்கரின் வழியில் கூட்டம் கூட்டமாக மதம் மாறச் செய்யும் நிகழ்வுகள் இப்போது இல்லை.

    இது வேர்டிகள் மொபிலிட்டி குறித்து மனிதன் பயணப்படுவது எனவே நான் ஆதரிக்கவே செய்வேன்.

    சனாதானம் இருக்கும் வரை நான் மதம் மாறுதலை உறுதியாக ஆதரிப்பேன்.

    கருவறையில் எல்லா மனிதர்களும் நின்று பூசை செய்யலாம் என்கிற நிலை வரும் வரை நான் மதமாற்றங்களை ஆதரிக்கவே செய்வேன்.

    நன்றிகள்.



    ReplyDelete
  30. திரு சாம் அவர்களே.. மதம் தவறானது அல்ல. அதிலுள்ள விசயங்கள் அனைத்துமே, மனித வாழ்வை செம்மையாக்கி, அமைதியாக வாழவே.. அதன் கருத்தை புரிந்து கொண்டு வாழ்ந்தால் நல்லதே. மற்றும் மத ஒப்பீடு செய்வதனால் ஏற்படும் கசப்பும், அந்த எண்ணமும் மனித எண்ணத்தில் நஞ்சை விதைக்கிறது. மதம் என்பது ஒருவர் தனது வாழ்வை, கொண்டு செல்ல பிடித்துக் கொள்ளும் ஒரு வழிமுறை.. பாதை.. எந்த பாதை பெரியது என தவிர்த்து, தனது பாதையில் உள்ள இடர்களை களைந்து, நல்லபடியாக நடந்து கடந்தேறினால், சுகம்.

    ReplyDelete