Friday, April 1, 2016

முடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும் - 1

என்னை பயணம் பற்றி எழுதத் தூண்டிய சகோதரி மகிழ்நிறை மைதிலி கஸ்தூரி ரெங்கனுக்கு நன்றிகள் பல.


யணம் என்ற வார்த்தை ஏற்படுத்தும் அதிர்வுகளையும், கால அட்டவணைக்குள் அடங்காத மனவெளியில் அந்த வார்த்தை மத்தாப்பு கோடுகளாய் விசிறிவிடும் நினைவொளித் துகள்களையும், வெளிச்சமாய், இருட்டாய், ஈரமாய், வரட்சியாய், பசுமையாய், பாலைவனமாய் அது பரவவிடும் பாதைகள் அனைத்தையும் எழுத்தில் பதிந்துவிட முடியுமா எனத் தெரியவில்லை ! ...

மனிதனுக்குப் பயணங்கள் சாத்தியமற்றுப் போயிருக்குமானால் அவனது ஆறாம் அறிவு இவ்வளவு கூர்மை பெற்றிருந்திருக்காது ! மொழிகள் தழைத்து, கலாச்சாரங்கள் ஸ்திரப்பட்டு மனிதனின் அறிவும் ஞானமும் விருத்தியானதற்கு அவனது இடைவிடாத பயணங்களே காரணம். நாம் தீர்மானித்த இலக்கைவிடப் பலபடங்கு அதிகமான ஆச்சரியங்களையும், புதிர்களையும் நாம் கடக்கும் பாதைகளில் நிரப்பி வைத்திருப்பவை பயணங்கள் !

பயணம் என்ற சொல்லைவிட யாத்திரை என்னும் சொல் ஆழமானதாகத் தோன்றுகிறது. எப்படி வாழ்ந்தாலும் நிறைவு தோன்றாமல், வாழ்க்கையையே யாசிக்கும் பயணம் ! நாடோடி இன்னும் மேன்மையாகத் தோன்றுகிறது.எந்த தேடுதலுமற்று, வாழ்க்கை பற்றிய தர்க்க, தத்துவங்களற்று இடம் பெயர்தல் மட்டுமே நோக்கமாய்க் கொண்ட ஒரு நாடோடியின் வாழ்க்கை பெரும்பேறு ! மண்ணைத் தேடி, அதன் மனிதர்களை, அவர்களின் மொழிகள் மற்றும் கலாச்சாரங்களைத் தேடியலைந்த மனிதர்களால்தான் மனித குலம் கடந்த பாதை வரலாறாய் நிலைத்தது.

பிரான்ஸ் வந்த புதிதில், கட்டாய ராணுவ சேவையின் போது போர் பயிற்சி நிமித்தமாய்ப் பல இடங்களுக்குக் குழுவாய் பயணித்த போது அந்தத் தேசத்தின் பூகோள அமைப்பு, அதன் மனிதர்கள், அவர்களின் குணம் மற்றும் கலாச்சாரம், கிராமபுற, நகர் புற வாழ்க்கை முறை என அந்த ஓராண்டு வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த அனுபவம் அதற்குப் பின்னர் வேலை, குடும்பம் என்ற வட்டத்தினுள் தங்கிவிட்ட இருபதாண்டுக்கும் மேலான வாழ்க்கையில் கிடைக்கவில்லை !

பதினான்கு வயதளவில் படித்த ஒரு கவிதையின் ஞாபகம் வருகிறது...

பிறந்த தெருவிலிருந்து நகராமல், பக்கத்து தெருவிலேயே மணமுடித்து, பிள்ளைகள் பெற்று, பேரக்குழந்தைகளையும் பார்த்து இரண்டு தெருவுகளுக்குள்ளேயே தன் வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கும் ஒரு பெண்மனியின் கதைசொல்லும் " ஆயிஷா பீபியின் உலகம் " என்ற கவிதை !

மீசை அடரத்தொடங்கிய பதிணென் பருவத்தில் எங்கள் தெருக்கோடி சலவை கடைக்கு உடைகளை இஸ்த்திரி போட கொண்டு செல்வேன்.

நடுத்தர வயது கணவன், மனைவி இருவரும் கடையில் உழைப்பார்கள்.

ஒரு முறை சலவைக்காரர் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார்...

" அது நம்ம ஊரைத்தாண்டி எங்கேயும் போனது கிடையாதுங்க... "

" ஆமாண்ணே... தோ பக்கத்திலிருக்கற நிரவிக்குக் கூடப் போனதில்லைண்ணே... "

வெள்ளந்தியாய் ஆமோதித்துக்கொண்டிருந்தார் அவர் மனைவி !

உலகம் சுற்றியும் வாழ்க்கை புரியாமல் போனவர்களும் உண்டு ! இரண்டு தெருக்களுக்குள் முடிந்த வாழ்க்கையிலேயே உலக ஞானம் படித்தவர்களும் உண்டு !!

ஜூலியஸ் வெர்னேயின் " உலகை சுற்றிவர எண்பது நாட்கள் " என்னை மிகவும் கவர்ந்த படைப்புகளில் ஒன்று.

பிரெஞ்சு இலக்கியகர்த்தாக்களில் ஒருவரான ஜீலியஸ் வெர்னேயின் " உலகை சுற்றிவர எண்பது நாட்கள் " இந்தியாவின் முதல் இருப்பு பாதை, கல்கத்தாவின் டிராம் என அன்றைய இந்தியாவின் விஞ்ஞான வசதிகள் முதல், சமூகத்தின் மூட நம்பிக்கைகள், உடன்கட்டை ஏற்றும் பழக்கம் வரை ஆங்கிலேயர் காலத்து இந்தியாவுக்குப் படிப்பவர்களைக் கடத்திவிடும் புதினம் ! இந்தியா மட்டுமல்லாது கதை நகரும் தொழிற்புரட்சி காலத்து நாடுகள் அனைத்தை பற்றியும் துல்லியமான விபரங்களைக் கூறும் நாவலாசிரியர் பயண அனுபவமே இல்லாதவர் என்று கூறினால் நம்ப முடியாது ! பாரீஸ் நகரசபையில் பணிபுரிந்த ஜீலியஸ் வெர்னே பிரான்ஸை தாண்டி வேறெங்கும் பயணிக்காதவர் ! அவர் சந்தித்த மாலுமிகளின் வழியே கேட்டறிந்த பயண அனுபவங்களை வைத்து எழுதியது தான் உலகை சுற்றிவர எண்பது நாட்கள் புதினம் !

ன் தாய் வழி பாட்டியின் தந்தை ஊரின் முக்கியஸ்த்தர்களில் ஒருவர். அந்தக் காலத்திலேயே பல தொழில்கள் செய்த, பிரெஞ்சு காலனி நகரசபையில் உறுப்பினராக இருந்த பிரபலம் !

அடிக்கடி நின்றுவிடும், மோட்டரில் இரும்பு கம்பி போட்டு சுழற்றி கிளப்பும் காரில் அவருடன் பல நாட்கள் பயணித்துச் சென்னை சென்றதையும், ஒரு ஊரே வசிக்கும் அளவுக்கு வியாப்பித்திருந்த மரத்துக்குக் கீழே நின்றிருந்த போது குருவிகள் போல வானத்தில் பல விமானங்கள் பறந்த நிகழ்வையும், வெள்ளைக்காரன் குண்டு போடப்போகிறான் என அறிந்து உடனடியாக ஊர் திரும்பியதையும் பாட்டி கதையாய் சொல்லும்போதெல்லாம் கற்பனைகதை என நினைத்து அலட்சியப்படுத்தியது உண்டு. அவள் குறிப்பிட்ட காலம் இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்த காலம் , அந்த மரம் அடையாறு ஆலமரம், அவள் குறிப்பிட்ட குண்டு ஜெர்மனியின் எம்ட்டன் கப்பல் என்பதெல்லாம் புரியத்தொடங்கி, அவளிடம் இன்னும் பல செய்திகள் கேட்க ஆசைப்பட்ட காலத்தில் பாட்டி இல்லை !


பால்ய வயதில் என் தந்தையுடன் காரைக்காலிலிருந்து அவரது கடை இருந்த நாகூருக்கு விடுமுறை தினங்களில் சென்று வருவதுதான் முழுவதும் நினைவிலிருக்கும் எனது முதல் பயணம். இரு ஊர்களுக்கும் இடைபட்ட அந்தப் பதிமூன்று கிலோமீட்டர் சாலை பயணம் ஒவ்வொரு முறையும் எனக்களித்த அனுபவங்கள் அற்புதமானவை.

பேருந்துகளின் கடைசி இருக்கைகளில் பயணிப்பது என் தந்தைக்குப் பிடிக்கும். ஏறும் பேருந்தின் வயதுக்கு ஏற்ப ஆட்டங்களும், குலுங்கல்களுமான பயணம் பரபரப்பான காலை வேளைகளில் ஒரு அனுபவத்தையும் உழைத்த அலுப்புடனான மாலை மயங்கும் வேளைகளில் ஒரு அனுபவத்தையும் இரவு நேரங்களில் வேறு ஒரு அனுபவத்தையும் ஏற்படுத்தும்.

நாகூர் தர்காவின் சந்தனக்கூடு வைபவத்தின் போதெல்லாம் மல்லிகை, ரோஜா, சந்தன வாசத்துடன் கந்தூரி கடைகளில் விற்கபப்டும் எல்லுமிட்டாய்களின் வாசமும் காலந்த வாசனையுடன் நாகூர் ஹனிபாவின் பாடல்களைக் காற்றில் வீசி விரையும் பேருந்துகள் வேளாங்கன்னி திருவிழா சமயங்களில் மாதா படம் ஏந்திய யாத்ரீகர்களுடன் " எனையாளும் தேவமாதா " பாடி விரையும். திருநள்ளாறு கோயில் விழாக்களின் போது நாகை வழியே வரும் பக்தர்களைச் சுமக்கும் பேருந்து முழுவதும் திருநீறு, குங்கும மணம் வீசும் !

காலை பயணங்களைவிட இரவின் ஏகாந்தத்தில் பயணித்த அனுபவங்கள் இதயச்சுவர்களில் பசுமையான பாசியாய் இன்றும் படர்ந்து கிடக்கின்றன !

கோடை, மழை, முன்பனி என ஒவ்வொரு காலத்தின் காற்றுக்கும் ஒரு தனி வாசனை உண்டு ! முன்னிரவை தாண்டிய அமைதியான சாலை வழியே விரையும் பேருந்தின் ஜன்னல் இருக்கையில் கண்கள் மூடி அமர்ந்து பயணிக்கையில் வேகமாய் முகத்தில் வழுக்கி முடி கலைத்து அலம்பும் காற்றில் கோடையின் வெப்பத்தையும், மழை நாட்களின் ஈரத்தையும் முன்பனியின் குளிரையும் நுகர்ந்து உணர்ந்து, பேருந்து நிற்கும் போதேல்லாம் காற்றுத் தடைபட்ட இடைவெளியில் ஒரு வெறுமையை உணரும் அனுபவமுள்ளவர்கள் ஆயுளுக்கும் பேருந்து பயணங்களை மறக்க மாட்டார்கள் ! தான் சுமந்து சென்றவர்களின் வாசனைகளையெல்லாம் தேக்கியபடி பேருந்துகள் பெருஞ்சாலைகளில் விரைய, அவற்றின் குலுங்கல்களும் அதிர்வுகளும் நம் மனதடியில் தங்கிவிடுகின்றன.

இறங்கும் போதெல்லாம் தன் தடதடப்பில் கொஞ்சத்தை நம் இதயத்தில் இறக்கிவிட்டு விரைந்து மறையும் புகைவண்டியை போல, யாருமற்ற ஊர் எல்லை நிறுத்தத்தில் இறங்கும்போது அறுவடைக்குக் காத்திருக்கும் முற்றிய நெற்கதிர்களின் வாசனையைச் சுமந்து சஞ்சரிக்கும் காற்றில் டீசல் மணம் வீசும் புகையையும் கலந்துவிட்டு விரையும் பேருந்து நம்முள் விட்டுச் செல்லும் தாக்கமும் அலாதியானது !


ஒரு டி வி எஸ் வாங்கினார் அப்பா ! ...


வண்டியில் அவருக்கு முன்னாலோ பின்னாலோ அமர்ந்து நாகூர் செல்வேன்...

அந்த வயதிலேயே என்னை ஒரு தோழன் போலப் பாவித்து அவரது பால்யம் தொடங்கி அன்றைய அரசியல் நிலவரம் வரை சொல்லிக்கொண்டே ஓட்டுவார்.


ரவு பத்துமணிக்கு கடையை மூடிவிட்டு கிளம்புவோம்.

என் தந்தை சரியான முன் ஜாக்கிரதை முத்தண்ணா ! கடையின் மூன்று பூட்டுகளையும் சரியாகப் பூட்டப்படிருக்கின்றனவா என இழுத்து ஆட்டி பார்த்த பின்னரே கிளம்புவார். அப்படியும் சில இரவுகளில் நாகூர் பாலம் தாண்டிய பிறகு சரியாகப் பூட்டினோமா என்ற சந்தேகம் அப்பாவுக்கு வந்துவிடும் ! மீன்டும் திரும்பிப்போய்ச் சரிபார்த்த நாட்களும் உண்டு !

சைக்கிள் கூட முந்திவிடும் " வேகத்தில் " வண்டி ஓட்டும் என் தந்தை நாகூர் பாலத்தைக் கடக்கும் போதும், காரைக்காலின் எல்லையான மதகடியை நெருங்கும் போதும் இன்னும் மெல்ல உருட்டுவார் ! காரணம் அந்த இரு எல்லைகளில் இருந்த மதுக்கடைகளிலிருந்து வெளியேறி சாலையில் அலம்பும் குடிமகன்கள் !

இரண்டு சக்கர வாகனங்கள் தொடங்கிப் பேருந்துகள் கூட அதிகம் இல்லாத காலம் அது. வாஞ்சூரிலிருந்து திருமலைராயன் பட்டிணம் வரை சாலையோர மரங்கள் மற்றும் இருபுற வயல்வெளிகளைத் தவிர்த்து வேரெதுவும் கிடையாது. சர்வகாலமும் தெருவிளக்குகள் பழுதுபட்டு இருண்ட சாலை !

ஹாரன் அலற விரைந்து மறையும் கடைசிப் பேருந்துக்குப் பிறகு, சாக்கு போர்வைக்குள் குத்துக்காலிட்டு தூங்கும் வண்டி ஓட்டிகளுடன் லாந்தர் விளக்கு ஆடும் வண்டிகளை இழுக்கும் பாதைக்குப் பழகிய மாடுகள், அரிதாகக் கடந்து செல்லும் லாரிகள் என வெறிச்சோடிய சாலை ! முகத்தில் மோதி மேலெழுந்து தலைமுடி கலையும் காற்றில் உழுத நிலத்தின் மணம், கோடையின் காய்ந்த மண்ணின் மணம், முற்றி தலை சாய்த்த நாற்றின் மணம் என அந்தந்த பருவத்துக்கான மணத்துடன் வண்டியில் தொங்கும் பையிலிருக்கும் கோலா மீனின் மணமோ அல்லது மாம்பழ, பலாப்பழ மணமோ கலந்திருக்கும் !

பெரிய பாலத்தின் விளக்கு வெளிச்சம் கண்ணில் தென்படும் தருணத்தில் என்னைப் பயம் பற்றிக்கொள்ளும் !


மீன், மல்லிகைப்பூவுடன் சைக்கிளில் பாலத்தைக் கடந்தவர் இரத்தம் கக்கியது, நள்ளிரவு பேருந்து தானாக நின்றது என அந்தப்பாலத்தைப் பற்றிப் பாட்டிகள் சொன்ன கதைகளெல்லாம் ஞாபகம் வரும் ! பேய் பயத்தைச் சொன்னால் பெரியாரின் கொள்கைகளில் ஈர்ப்புக் கொண்ட அப்பா கோபிப்பார் என்ற பயமும் சேர்த்துக்கொள்ள, எங்கே வண்டி நின்றுவிடுமோ என்ற பயம் திருமலைராயன் பட்டின எல்லைவரை என்னை ஆட்டும் !

அதுவரையிலும் காதில் ஒலித்த சில்வண்டுகளின் ரீங்காரம் மறைந்து, "  டடட டட் டட்... டடட டட் டட்... "  என கொத்துப்புரோட்டா சத்தத்துடன் திருமலைராயன் பட்டிணம் தாண்டினால் மறுபுற எல்லையிலிருக்கும் மஸ்த்தானியா ஹோட்டல் முதலாளி அப்பாவின் வண்டி தென்பட்டதும் தெருவில் இறங்கி கையாட்டுவார்...

" கந்தூரி ஸ்பெசல் பரோட்டா... ஒரு பார்சல் நீங்க வருவீங்கன்னு எடுத்து வச்சேன்... வேளாங்கன்னி திருவிழா பிரியாணி... சிக்கன் பீஸ் ... "

எனச் சீசனுக்குத் தகுந்தமாதிரி எடுத்துவிடுவார் !

" விக்கலைன்னு சொல்லுங்க நானா !... நம்மகிட்டேயே கதையா ?... "

" காசெல்லாம் நாளைக்குக் காலையில பாத்துக்கலாம் ! "

என் தந்தை பேசுவதைக் காதில் வாங்காதது போல, அசட்டு சிரிப்புடன் பொட்டலத்தை வண்டியில் தொங்கும் பையில் தினித்து விடுவார் !

பட்டிணம் பாலம் தாண்டினால் பளிச்சென்ற விளக்குகளுடன் அகலமான யூனியன் பிரதேச சாலை ! நிரவி நெருங்குவதை உணர்த்தும் ஓ என் ஜீ சி வளாகத்தின் சோடியம் வேப்பர் விளக்குகள் ! இருபுறமும் பசுமையான வயல்கள் சூழ்ந்த நிரவி எலந்தர் ஹலந்தர் தைக்காலின் குளத்தில் கோடையில் கூடத் தண்ணீர் மிச்சமிருக்கும் !

அம்பாள் சத்திரத்தில் தொடங்கும் காரைக்கால் எல்லையில் அரசலாற்றில் ஏறி வரும் கடல் காற்று உடல் வருடும் ! வீட்டு வாசலில் வண்டி நின்றதும் சட்டென ஒரு வெறுமை தோன்றும் ! இழுத்துபோர்த்திக்கொண்டு தூங்கும் வரையிலும் பயணக் குளிர் உடம்பில் சிலிர்ப்பாய் ஒட்டிக்கொண்டிருக்கும் !

பயணம் அடுத்தப் பதிவில் முடியும் !


 பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.





48 comments:

  1. பயணம் பற்றிய பதிவில் உங்கள் பதிவுதான் மிகவும் சூப்பர். எனக்கு மிகப் பெரிய பதிவு என்றால் மிக அலர்ஜி ஆனால் இந்த பதிவை படிக்கும் போது என்னடா இவ்வளவு சின்னதாக எழுதி இருக்கிறாரே என்று எண்ணும்படியாகத்தான் இருந்தது இந்த பதிவு. மிகவும் சுவராஸ்யமாக சென்றது......பயணம் தொடரும்....பாராட்டுக்கள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நண்பரே...

      சராசரியாக நூறு வரிகள் அளவுக்கு என் பதிவுகள் அமையும்... பயணம் மிகவும் நீண்டு விட்டது !!! அதனாலேயே இரண்டு பாகமாக்கினேன்.

      முதலாய் வருகை தந்து, பாராட்டு வார்த்தைகள் பதிந்ததுக்கு நன்றி.

      தொடருவோம்

      Delete
  2. Replies
    1. ரசித்து படித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி நண்பரே

      Delete
  3. சொந்த ஊருக்குச் சென்று எல்லா இடங்களிலும் பயணித்து மீண்ட உணர்வு! நீங்கள் சொல்லியிருக்கும் நாகூர், பட்டினம் காரைக்கால் வழித்தடங்கள் எல்லாம் எனக்கு அத்துப்படி! நாகூர் என் அம்மா ஊர் என்பதால் காரையிலிருந்து அடிக்கடி நாகூருக்குச் செல்வோம். சுவையான நினைவலைகளை மீட்டிய பதிவு! நீண்ட இடைவெளி விட்டாலும் சுவாரசியமான பதிவுடன் வந்து கலக்கிவிட்டீர்கள் சாம்! தொடருங்கள். தொடர்கிறேன். என்னைக் கவர்ந்த பதிவுகள்- 1 பார்க்க அழைக்கிறேன். http://www.unjal.blogspot.com/2016/03/1.html

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரி...

      நாகூர் உங்கள் தாயாரின் ஊரா ? எனது தந்தைக்கு பூர்வீகம் நாகூர் !!!

      இடைவெளியை குறைக்கத்தான் முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்... தங்கள் தளத்தில் என் அறிமுகம் கண்ட பிறகு இனி எப்படியேனும் நேரம் ஒதுக்கவேண்டும் என முடிவு செய்துள்ளேன்...

      தாங்கள் எனக்கு வழங்கியது மிகப்பெரிய அங்கீகாரம் சகோதரி... என் எழுத்தில் சிறப்பிருந்தால் அதற்கு உங்களை போன்றவர்களின் ஊக்கம் தான் காரணம்.

      வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      தொடருவோம்

      Delete
  4. அனுபவங்கள் என்றாலே பெரும்பாலும் இனிமையாகத்தான் இருக்கும். தங்களது பதிவு வித்தியாசமாக ரசிக்கும்படி இருந்தது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. படித்து, ரசித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி அய்யா...

      தொடருவோம்

      Delete
  5. ஆஹா! வெகுநாட்களுக்குப் பிறகு உங்கள் பதிவு அதுவும்... ஒரு கிராமத்து நதிக்கரையின் ஓரமாக அப்படியே அந்த நீரோட்டத்துடன் அதை ரசித்தபடியே மன அமைதியுடன், இயற்கையின் ஒலிகளுடன் பயணித்தது போன்ற நடையில் உங்கள் பயணப்பதிவு! உங்களுடன் இரு சக்கர வாகனத்தில் அருகில் நடந்து வந்தோம் ரசித்தபடியே!!!!! அருமை அருமை....தொடர்கின்றோம்...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஆசானே...

      " உங்களுடன் இரு சக்கர வாகனத்தில் அருகில் " நடந்து வந்தோம் " ரசித்தபடியே!!!!! "

      பதிவை ஆழ்ந்து வாசித்திருக்கிறீர்கள் ... :-)

      இதன் இரண்டாம் பாகம் இன்னும் மிச்சமிருப்பதால், நடையை நிறுத்திவிடாதீர்கள் !

      இதமான பின்னூட்டத்துக்கு நன்றி

      Delete
  6. அருமையான நண்பரே,
    தேர்ந்த சொற்களை கொண்டு அருமையாக கட்டுரை வடிப்பதில் வல்லவர்கள் நீங்கள் என்பதை இந்த பயணக்கட்டுரை தெளிவுபடுத்தியது. மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  7. அருமையான பதிவு நண்பரே என்று வந்திருக்க வேண்டும். பதிவு விடுபட்டு போய்விட்டது.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அருமையான நண்பரே...

      ( பதிவு விட்டுப்போய்விடவில்லை !!! )... நண்பரே என்பதைவிட அருமையான நண்பரே இன்னும் நன்றுதான் இல்லையா ?... டியர் ப்ரெண்ட் போல ?...

      ரசித்தமைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றிகள் பல

      தொடருவோம்

      Delete
  8. எமக்கு அப்படியான தந்தையுடன் சென்ற பயண அனுபவம் எதுவும்கிட்டவில்லை..என் தந்தை நான் பிறந்த சில வருடங்களிலே இறந்துவிட்டார். தங்களின் பதிவைப்படித்து தங்களின் தந்தையுடான பயணத்தை தெரிந்து கொண்டேன். வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. தோழரே...

      உங்கள் பின்னூட்டத்தை படித்தபோது மனம் கனக்கிறது... அனைத்துமே அனுபவங்கள் தான் !

      தொடருவோம் தோழரே

      Delete
  9. அருமையான பயணம் மன்னிக்கவும் யாத்திரை நண்பரே தங்களுடன் நானும் நடந்து கடக்கும் நிலையின் ஊடே பழைய நினைவுகளும் எம்மை எட்டிப் பார்த்தது தொடர்கிறேன் நண்பரே விரைவில் தருக.. பகுதியை....

    ReplyDelete
    Replies
    1. வாங்கஜீ !

      என்னுடன் நடந்து, இனிய நினைவுகளை மீட்டி, யாத்திரையை சிறப்பித்ததற்கு நன்றிஜீ !

      பயணத்தை மிகவிரைவில் தொடருவோம் !

      Delete
  10. ஆஹா! சகோ ஆழமான பயணக் கட்டுரை. முதல் பத்தியில் சொல்லியிருப்பதைப் போல் பயணத்தின் பாதைகளை எழுத்தில் அடக்குவது கடினம். ஆனால் அதை அழகாகச் செய்திருக்கிறீர்கள். தாத்தா பாட்டியிடம் அவர்கள் இருந்த காலத்தில் நிறையக் கேட்காமல் விட்டுவிட்டோமே என்று எனக்கும் தோன்றும்.
    பயணங்கள் அனுபவங்களைத் தருவதோடு நம் பார்வையையும் விசாலமாக்குகின்றன. ஆனால் பலர் ஒரே தெருவில் வாழ்வு முடிவதை இன்றும் விரும்புகின்றனர். உங்கள் அப்பாவுடனான உங்கள் அனுபவங்கள் இனிமை. அடுத்தப் பகுதிக்குக் காத்திருக்கிறேன் சகோ.
    வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ

      பல உறவுகளின் அருமை நமக்கு மிகவும் தாமதமாகவே புரிகிறது ! வாழ்க்கை தன் அத்தனை அறிவு கதவுகளையும் திறந்துவைத்தாலும் தங்களின் அறிவு ஜன்னல இறுக்க மூடிக்கொள்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் !

      வருகைக்கும் இதமான வார்த்தைகளுக்கும் நன்றி சகோ. தொடருவோம்.

      Delete
  11. அருமையான பயணப் பதிவு
    பயணத்தை ரசித்தேன்.....

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அஜய்...

      முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      தொடருவோம்

      Delete
  12. சாம்,

    முதல் மூன்று பத்திகளில் தெறிக்கும் கவிதை கொண்ட வார்த்தைகள் உங்களின் எழுத்து வலிமையை மீண்டும் நிரூபித்துவிட்டன. சபாஷ். பிரமாதமான எழுத்து. வாழ்த்துக்கள்.

    பயணங்கள் இல்லையெனில் காலாச்சார மாற்றங்கள் சாத்தியமில்லை என்ற கருத்துக்கு எனது பாராட்டு.

    கொலம்பஸ், வாஸ்கோடகாமா, யுவான் சுவாங் என பள்ளிப் புத்தகத்தில் படித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணங்கள் இதற்கு ஒரு சான்று.

    நானொரு armchair traveller. இருந்த இடத்தில் இருந்துகொண்டே உலகை அறிந்து கொள்ளும் வேட்கை கொண்டவன். ஏறக்குறைய Jules Verne போன்று.

    பயணம் தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் காரிகன் !

      பாராட்டு வார்த்தைகளுக்கு நன்றிகள் பல.

      தனிமனிதர்களின் முயற்சியில் தொடங்கிய பயணங்களாலேயே மனிதகுல வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. அந்ததந்த காலகட்ட ஆளும் வர்க்கத்தின் உதவிகள் இருந்தாலும் நீங்கள் குறிப்பிட்ட கொலம்பஸ், வாஸ்கோடகாமா, யுவாங் சுவாங் தொடங்கி இன்னும் எத்தனையோ தனிமனிதர்களின் தீரமிக்க பயண குறிப்புகளின் வழியேதான் வரலாறு கட்டுவிக்கப்படுகிறது என்றால் அது மிகையாகாது !

      நானும் armchair traveller தான் ! நான் காணும், கற்கும் உலகம் புத்தக ஜன்னல்கள் வழியே காணுவதுதான் !

      தொடருவோம்...

      Delete
  13. ஒ ஹெல்மெட் இவ்வளவு பணிகளை செய்யுமா?
    அது ஒரு கனாக்காலம் தோழர்

    நிறைவான பதிவு

    அடுத்த பகுதிக்கும் காத்திருக்கிறேன்

    நடுவே பல சங்கடமான நிகழ்வுகளால் வர இயலவில்லை
    சாரி பாஸ்
    இனி தொடர்வேன்

    ReplyDelete
    Replies
    1. நலமா நண்பரே ?...

      ஆமாம், நான் ஹெல்மெட் பற்றி குறிப்பிட்டவை அனைத்தும் சற்றும் மிகைப்படுத்தப்படாத உண்மைகள் !

      மீன்டும் திரும்பாதா என ஏங்கும் கனாக்காலங்கள்தான் அவை !

      இனி நன்மையே நிகழும்...

      தொடருவோம். நன்றி

      Delete
  14. பலவிதமான பயண அனுபவங்களை சுவார ஷ்யமாகச் சொல்லியிருக்கின்றீர்கள். சொந்த ஊர் நாகூர் அனுபவங்களை அனுபவித்துச் சொன்னது சிறப்பாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. தொடர வேண்டுகிறேன்.

      Delete
  15. பயணக் கட்டுரையின் ஆழத்தைச் சொல்லில் புகழ வார்த்தையில்லை ஐயா. மிகவும் அனுபவித்து, நினைவுகளைக் கண்முன் நிறுத்தி, வாசகனையும் அருகினிலே பயணிக்கச் செய்தீர்கள் என்றால் அது மிகையல்ல. வாழ்த்துகள். தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. என் அனுபவங்களை எழுத்தில் பதிப்பதன் மூலம் அத்தருணங்களை மீன்டும் வாழ்கிறேன் என்றால் அது மிகையாகாது !

      வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. தொடருவோம்

      Delete
  16. ஏற்கனவே படித்து விட்டேன். பின்னூட்டம் இட்ட நினைவு,,,

    கடைசி பத்தி அருமை,,, தந்தையுடன் பயணம் இல்லை,, சென்றவையும் மனம் விட்டு நீங்காதவை,,,
    தொடருங்கள்,,

    ReplyDelete
    Replies
    1. படித்து பின்னூட்டமிட்டு ஊக்குவிப்பதற்கு நன்றிகள் பல.

      தொடருவோம்.

      Delete
  17. மதுரைத் தமிழன் சொன்னது போல இதுவரை படித்தவற்றில் இருந்து வித்தியாசமான பயணப் பதிவு. கவிதைத் தனமான தலைப்பு, சிறப்பான எழுத்து நடை அந்தந்த காலக் கட்டத்தை பிரதிபலித்த விதம் அனைத்தும் அற்புதமாக சொல்லி இருக்கிறீர்கள். தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நண்பரே,

      படித்து ரசித்து பாராட்டு வார்த்தைகளால் பின்னூட்டமிட்டதற்கு நன்றிகள் பல.

      தொடருவோம்

      Delete
  18. ‘முடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும்’ என்ற தலைப்பைப் பார்த்ததும் ஒரு நீண்ட தொடரை எழுத இருக்கிறீர்கள் என எண்ணினேன்.ஆனால் சுவாரஸ்யமாக போய்க்கொண்டிருந்த பயணம் அடுத்த பதிவில் முடியும் என பதிவின் இறுதியில் எழுதியிருந்ததைப் படித்ததும் ஏமாற்றமாகிவிட்டது. அருமையான தொடக்கம். உங்களோடு பயணிப்பது போன்ற உணர்வை உணர்ந்தேன் உங்களின் எழுத்தை வாசிக்கையில். மிக லாகவகமாக எழுத்தை கையாண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

    கடலூரில் பணி புரிந்துகொண்டு இருந்தபோது பாண்டி செல்லும்போது கடலூரிலிருந்து 3 கிலோ மீட்டரில் தமிழக எல்லை முடிந்து புதுச்சேரி எல்லை ஆரம்பமாகிறது என்பதை அந்த’ பச்சை குழல் விளக்குகள்’ தெரிவிக்கும். எனக்கும் அந்த பச்சை வண்ணம் பற்றிய ரகசியம் அறிய ஆசைதான்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா,

      உங்களின் பின்னூட்டம் எனக்கு மிகுந்த ஊக்கத்தை அளிக்கிறது.

      ஒரே பதிவாக வெளியிட எண்ணி எழுதியதுதான்... இரண்டு பாகமாக அமைந்துவிட்டது ! தங்களின் பின்னூட்டத்துக்கு பிறகு தலைப்பை மீன்டும் வாசித்து பார்த்த போது நிறைய எழுத வாய்ப்புள்ள ஒரு ஆழமான தலைப்பு என்றே தோன்றுகிறது.

      இந்த பதிவினை படித்த யாராவது பச்சை விளக்கு பின்னணியை விளக்குவார்களா என பார்ப்போம் !

      நன்றிகள் பல அய்யா, தொடருவோம்

      Delete
  19. நினைவுகள் என்றுமே இனிமையானவை
    அருமையான பயணப் பகிர்வு நண்பரே
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வரலாற்று நினைவுகளை மீட்டெடுக்கும் நீங்கள் என் பயண நினைவுகளை பாராட்டியது பெருமை.

      நன்றி அய்யா

      Delete
  20. ஏற்கெனவே சிலர் சொன்னது போல் அருமையான பயணக் கட்டுரை. அழகான எழுத்து நடை. இதற்கு முன் உங்கள் பதிவுகள் படித்திருக்கின்றேனா தெரியவில்லை.... இனி படிக்கிறேன். வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய சில பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டுள்ளீர்கள் சகோதரி...

      வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி. தொடருங்கள்... தொடருவோம் !

      Delete
  21. அருமையான நடை. கூடவே பயணித்தேன் என்று தான் சொல்லவேண்டும். நூல் பிடித்தார் போல் நீங்கள் எழுதிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே.

      தொடருவோம்

      Delete
  22. மிக அருமையான எழுத்து..ஒரு இறப்புவீட்டில் உட்கார்ந்து படிக்கிறேன்..துக்கத்தின் சாயலை கொஞ்சம் மாற்றிவிட்டது..இதற்குமேல் என்ன சொல்ல?

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நண்பரே...

      உங்களின் பின்னூட்டம் என்னை திகைக்க வைத்தது ! என்ன எழுதுவது என தெரியவில்லை !!

      தொடருவோம்.நன்றி

      Delete
  23. ஆகா! ஆகா!! ஆகா!!! என்னே ஒரு பதிவு!! இப்படி ஒரு கட்டுரையை இணையத்தில் படித்து வெகு காலம் ஆகிறது. 'நான் உன்னைக் கூப்பிட்டே வெகு காலம் ஆகிறது' எனும் உங்கள் எண்ணவோட்டம் புரிகிறது. என்ன செய்ய? இதைப் படிக்க எனக்கு இப்பொழுதுதான் கொடுத்து வைத்தது.

    செம்மையான பதிவு ஐயா! அதுவும் பயணம் என்பது எப்பேர்ப்பட்டது என விவரிக்கும் தொடக்க வரிகளிலேயே கட்டிப் போட்டு விட்டீர்கள். பேருந்துப் பயணம் பற்றிய வரிகள் ஒரு சுவையான புதினத்தைப் படிப்பது போல் இருந்தன. விதவிதமான பயணங்கள், பயண அனுபவங்கள் மட்டுமல்லாமல் பயணத்துக்கு உதவும் ஊர்திகளை வாங்கும்பொழுது ஏற்படும் அனுபவங்களையும் எழுதியது எதிர்பாராச் சுவை! இப்படியொரு கட்டுரையை நீங்கள் எழுதக் காரணமாயிருந்த சகா மைதிலி அவர்களுக்கு நன்றி! பயணம் பற்றிய உங்கள் அடுத்த பதிவை எதிர்நோக்கி ஆவலுடன் இக்கருத்துரையை முடிக்கிறேன். நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அய்யா,

      முதலில் உங்கள் வருகைக்கு நன்றி. வலைப்பதிவர்களான நம் அனைவருக்குமே வேறு பல சொந்த அலுவல்கள் உண்டு. கிடைக்கும் நேரத்தில் நம் படைப்புகளையும் நிர்வாகித்துக்கொண்டு சகபதிவர்கள் அனைவரின் தளங்களுக்கும் சென்றுவருவது எளிதல்ல !

      தாமதமாக படித்தாலும் நிதானமாக உள்வாங்கி வாசித்து, விரிவாக பின்னூட்டமிட்டதற்கு நன்றி.

      நண்பர் காரிகன் அவரை பற்றி குறிப்பிட்டதை போலவே நானும் இருந்த இடத்திலிருந்தே உலகை அறியும் ஆவல் கொண்டவன் ! என் பயண அனுபவங்கள் சொற்பமானவையே ! புத்தக ஜன்னல்கள் வழியாக நான் பார்த்த உலகமே என் அனுபவம். ஆனாலும் எனது சொற்ப அனுபவங்களும் உங்களை போன்றவர்களால் பாராட்டப்படுவது மகிழ்ச்சியை தருகிறது.

      இந்த பதிவுக்கான நன்றிகள் அனைத்தும் நீங்கள் குறிப்பிட்டதை போல சகோதரி மைதிலி கஸ்தூரிரெங்கனுக்கு உரியவை !

      பயணத்தை தொடருவோம் !

      Delete
  24. //என் பயண அனுபவங்கள் சொற்பமானவையே ! புத்தக ஜன்னல்கள் வழியாக நான் பார்த்த உலகமே என் அனுபவம்// - நானும் அப்படியேதான் ஐயா! உங்கள் விரிவான பதிலளிப்புக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  25. உங்களின் பயணக் கட்டுரை வாசித்தபோது உங்களுடன் சேர்ந்து பயணித்த உணர்வு உண்டானது. தூசி படிந்து போகாதவை இந்த மாதிரியான சுகமான நினைவுகள் மட்டுமே! நினைவுகள் எவ்வளவு பழையவை ஆனாலும் நாம் நேசித்த அந்த கணங்கள் எப்போதும் புதிதாய் நம் நெஞ்சுக்கு நெருக்கமாய் இருக்கும். பொக்கிஷமான நினைவுகளை இப்படி அடிக்கடி பகிர்ந்தீர்கள் என்றால் என் நினைவுகளையும் நான் மீட்டுக் கொள்வேன். தொடர்ச்சிக்காக காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  26. ரசித்துப் படித்தேன் ஐயா. "ஆயிஷா பீபியின் உலகம்" என்ற கவிதை முழுதாக ஞாபகத்தில் இருந்தால் பகிருங்கள். நன்றி - ஆபிதீன்

    ReplyDelete