Monday, December 5, 2016

இரும்பு பெண்மணிக்கு இறுதி வணக்கம்

ந்த இரண்டு மாத காலத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உடல்நிலையைப் பற்றியும், அந்நிகழ்வு தமிழ்நாடு தொடங்கி இந்திய அரசியல்வரை ஏற்படுத்திய தாக்கம் பற்றியும் அவரவர் கேட்டது, யார் யாருக்கோ தெரிந்தது, ஆதரப்பூர்வமானது, ஆதாரமற்றது எனச் சமூக ஊடகங்களில் நூற்றுக்கணக்கான செய்திகள்... பகிர்வுகள்...

முதல்வரின் மறைவை அறிந்த நொடியில், நேற்று வாட்ஸ் ஆப் மூலம் நான் படித்த பகிர்வு ஒன்று சட்டென நினைவில் தோன்றியது !

சில திருத்தங்களுடனான அப்பதிவு...

" வர் சிறந்த முதல்வரா இல்லையா ? அவர் கொண்டுவந்த திட்டங்கள் எல்லாம் மக்களுக்குப் பலனளித்தனவா ? எம்ஜிஆர் அளவுக்கு நற்காரியங்களைச் செய்திருக்கிறாரா ? கலைஞரை விட அரசியல் ஞானம் கொண்டவரா ? தமிழகத்தின் மேல் உண்மையிலேயே பற்று கொண்டவரா ? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தெரியாது என்பதே பதிலாக வந்தாலும்கூட ஒன்று மட்டும் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்...

அந்தப் பெண்மணியின் தைரியம் !

ஆண் சிங்கங்கள் மட்டுமே கோலோச்சிய அரசியல் காட்டுக்குள் ஒற்றைப் பெண்சிங்கமாய் நுழைந்து தனியொரு பெண்மணியாய் பல ஆண்டுகள் ராஜ தர்பார் செய்தவர் !

இவர்களைப் போன்ற ராஜதந்திரிகளுக்கு மத்தியில் வேறொரு பெண்ணால் இப்படிச் சாதித்திருக்க முடியுமா என்றால் நிச்சயம் பெருத்த சந்தேகம் தான் ! கணவனோடும் குடும்பத்தோடும் சிறு சிறு பிரச்சனைகள் என்றாலே உடைந்து போவதும், சிதைந்து போவதும், செத்துப்போவதுமாய் இருக்கின்ற பெண்களுக்கு மத்தியில் கடைசிவரை போர்க்களத்தில் நின்று, வென்றாலும் வீழ்ந்தாலும் மீண்டும் எழுந்து நடந்து எல்லோரையும் அதிரவைத்த அந்தத் தைரியத்தை ஒவ்வொரு பெண்ணும் கற்றுக்கொள்ள வேண்டும்!

சம காலத்தில் வாழ்ந்த, இவரை விடச் சிறந்த சாதனை பெண்மணி வேறு யாருமில்லை!

அவர் வருவாரோ மாட்டாரோ தெரியாது, ஆனால் அவருடைய வாழ்க்கை நெருப்பின் ஊடே நிகழ்ந்த நெடும் வெற்றிப்பயணம் ! அந்த நெருப்புப் பயணத்தை நினைவில் வைத்துக்கொண்டாலே போதும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஓராயிரம் கைதாங்கும் பலம் வந்து கஷ்டங்களைக் கடந்துவிடுவார்கள்! குறைகள் பல இருந்தாலும் பெருமைப்பட நிறைய விஷயங்கள் இருக்கிறது ! இயற்கை அவர் பக்கம் நிற்கவே வேண்டுகிறேன் ! "


ன்று இயற்கை அந்த இரும்பு பெண்மணியைத் தன் பக்கம் அழைத்துக்கொண்டுவிட்டது !

" எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன் ! தேசிய தலைவரோ,  பிரதம வேட்பாளரோ யாராயிருந்தாலும் என் தயவு வேண்டுமானால் அவர்கள்தான் என்னைத் தேடி வரவேண்டும்  " என்ற துணிச்சலும் தைரியமும்தான் அவரின் வெற்றிக்கான காரணங்கள் !

ஆழ்ந்து யோசித்தால் சொந்தபந்தங்களை விட்டு விலகி, ஒரு கை விரல்களின் எண்ணிக்கைகளுக்குள் அடங்கிவிடக்கூடிய ( அவருக்கு ) நம்பிக்கையானவர்களுடன் மட்டுமேயான ஒரு தனிமை வாழ்க்கை வட்டத்தினுள் அவர் தன்னை ஒடுக்கிக்கொண்டதுகூட அந்தத் தைரியத்துக்குப் பங்கம் வந்துவிடக்கூடாது என்பதால்தானோ எனத் தோன்றுகிறது...

னி அவர் விட்டுச்சென்ற வெற்றிடத்தைப் பிடிக்கவும், நிரப்பவும் மற்ற அரசியல்வாதிகள் ஆடுபுலி விளையாடலாம்... அவரது பெயரையும் புகழையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த திட்டமிடலாம்... அவர் கட்டிக்காத்த கட்சிக்கு அவர் விரும்பியவரோ விரும்பாதவரோ தலைவராகலாம்... அவரது பெயரை இருட்டடிப்புச் செய்து தங்களை முன்னிறுத்த முயற்சிக்கலாம்... அரசியலில் எதுவும் நிகழலாம்... நிகழும் !

ஆனால் அடிமட்ட அதிமுகத் தொண்டனின் மனதில் அவனது இறுதி மூச்சுவரை " அம்மா " நிறைந்திருப்பார் !

 பட உதவி : GOOGLE

11 comments:

 1. ///எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன் ! தேசிய தலைவரோ, பிரதம வேட்பாளரோ யாராயிருந்தாலும் என் தயவு வேண்டுமானால் அவர்கள்தான் என்னைத் தேடி வரவேண்டும் " என்ற துணிச்சலும் தைரியமும்தான் அவரின் வெற்றிக்கான காரணங்கள் !///

  உங்களின் இந்த கருத்துதான் அவரது பலம். இவ்வளவு துணிச்சலான பெண்மணி பெண்களுக்கு அதிகம் செய்யவில்லை என்பதுதாம் எனது மனக்குறை... ஒரு பெண்ணால் பெண்களின் கஷ்டத்தை உணரமுடியவில்லை என்றால் வேறு யாரால் முடியும்

  ReplyDelete
 2. அவரது ப்ளஸ்ஸே அவருக்குச் சில சமயம் மைனஸாகியது. என்றாலும் இனி அவரது கட்சி என்னாகும் என்று தெரியவில்லை...

  ஆழ்ந்த இரங்கல்கள்

  ReplyDelete
 3. நம் காலத்தில் வாழ்ந்து, வரலாறு படைத்த இரும்புப்பெண்மணி

  ReplyDelete
 4. ஆழ்ந்த இரங்கல்கள்..... பல சமயங்களில் அவர் சூழ்நிலைக் கைதியாகவே இருந்திருக்கிறார் என்பது தான் சோகம்.

  ReplyDelete
 5. பெற்ற தாய் தந்தையரை இன்றைய திராவிடர்கள் மதிப்பதில்லை. எப்போ சாவார்கள்னு காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இது மிகைப் படுத்தப் படாத உண்மை. ஆனால் யாரு பெத்த பிள்ளையோ இந்த "ஈழத்தாய்"க் "தன் அம்மா"வுக்காக கண்ணீர்விட்டு அழறா, தற்கொலை பண்ணி சாவுறா. என்ன ஒரு பெருந்தன்மை! தேசத் தலைவர் பக்தி!!

  பாவம் பார்ப்பனர்களுக்குத்தான் இடி மேல் இடி விழுகிறது. எல்லாரும் தேம்பித் தேம்பி அழறா. :( ஈழத்தாய் மறைந்த ரெண்டே நாட்களில் நம்ம சோ ராமசாமியும் மறைந்துவிட்டார்.

  திராவிட அடிமைகள் நிறைந்த தமிழ்நாடு பார்ப்பன ஆளுனர்கள் இல்லாமல் எப்படி எப்படி பரிதவிக்கப் போகிறதோ என்கிற என் ஐயம் உங்க பதிவு, நிஷா பதிவிலிருந்து விளங்குகிறது, சாம்.

  அடுத்த பார்ப்பனத் தலைவர் இல்லாமல். பார்ப்பன ஊடக அரசியல்வாதி இல்லாமல் நீங்கள்ல்லாம் அனாதையாக நிற்பதைப் பார்த்து எனக்கென்னவோ கண்ணீர் வரவில்லை. என்ன ஒரு கல் இதயம் எனக்குனு என்னை நானே நினைத்து நொந்து கொள்கிறேன். வேறென்ன நான் செய்ய முடியும் சாம்?.

  உங்க நிலைமையே இப்படினா, பாவம் நம்ம காவீர மைந்தன் நிலைமை?. ஒண்ணு பண்ணுங்க எல்லாருமாக் கூட் ஒப்பாரி வைத்து அழுதால் மனது ஆறுதல் அடையலாம், சாம்.

  ReplyDelete
  Replies
  1. வருண் ஐயா! நான் மேற்படி கட்டுரையைப் படிக்க வந்த அன்றைக்கே உங்களுடைய இந்தக் கருத்தைப் பார்த்தேன். ஆனால், இதற்கு நான் பதிலளிப்பது சரியாக இருக்குமா என்ற ஐயத்தில் சாமானியன் அவர்களே பதிலளித்துக் கொள்ளட்டும் என்று சென்று விட்டேன். ஆனால், இன்னும் அவர் இதற்குப் பதிலளிக்காதிருப்பதால் இதைப் படித்தவன் எனும் முறையில் என் கருத்தைத் தெரிவிப்பதில் தவறில்லை எனக் கருதி இதை எழுதுகிறேன்.

   நீங்கள் கூறியிருக்கும் இந்தக் கருத்து மிகவும் நாகரிகமற்றது! நம் சாமானியன் அவர்களின் எல்லாப் பதிவுகளையும் நான் படித்ததில்லை என்றாலும், படித்த வரையில் அவர் ஒன்றும் பார்ப்பனியச் சிந்தனை உள்ளவராகத் தெரியவில்லை. பார்ப்பனியத்துக்கு ஆதரவாகவோ தமிழர்களுக்கு எதிராகவோ இதுவரையில் அவர் ஏதும் எழுதி நான் பார்த்ததில்லை. அப்படியிருக்க, அவர் பிறப்பால் பார்ப்பனர் எனும் ஒரே காரணத்துக்காக நீங்கள் இப்படி எழுதியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. காவிரி மைந்தன் பற்றி நான் பேசவில்லை. அவர் எப்பேர்ப்பட்ட ஜெ ஜால்ரா என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால், அதற்காக எல்லாரையும் ஒன்றாக வைத்துப் பேச வேண்டியதில்லை.

   Delete
  2. வணக்கம்,

   எனது பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு மிகத்தாமதமானாலும் கூட நன்றி தெரிவிப்பதையும், பதிலிடுவதையும் கட்டாய கொள்கையாக கொண்டிருக்கும் நான் புத்தாண்டு வாழ்த்து பதிவுகள், இரங்கல் பதிவுகள் மற்றும் எனது சொந்த வாழ்க்கை சம்மந்தப்பட்ட பதிவுகளுக்கு பதில் பின்னூட்டமிடுவதில்லை !

   ஆனாலும் ஞானப்பிரகாசன் அய்யா அவர்களின் பின்னூட்டத்துக்கு பிறகும் மெளனம் காப்பது சரியல்ல என்பதால் ...

   "பார்ப்பனிய எதிர்ப்பு " என்பதை, " பார்ப்பன எதிர்ப்பு " என நண்பர் வருண் போல மிகபலர் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது எனது ஐயம் ! தவறு அவர்களுடையது அல்ல ! பெரியார் என்னும் ஆகப்பெரும் சமுதாய சீர்த்திருத்தவாதியின், தீர்க்கதரிசியின் வழிவந்தவர்களாக கூறிக்கொள்ளும் திராவிட அரசியல்வாதிகள் தங்களின் ஆட்சி ஆசைக்காக அந்த பெருங்கிழவனின் கொள்கைகளில் செய்த திரிபும், இருட்டடிப்புமே காரணம் !

   பார்ப்பனிய எதிர்ப்பு என்பது ஒரு ஆழமான குறியீடு. உலகின் ஆதி நாகரீகங்களின் தொடர்ச்சியாய் அமைந்த ஒரு பெரும் சமூகத்தின் விடியலுக்காக பெரியாரின் பேரறிவில் உதித்த " பார்ப்பனிய எதிர்ப்பு " என்பதன் விளக்கத்தை ஒரு பின்னூட்டத்தில் முழுவதுமாய் விளக்கிட இயலாது என்பதால் எனது அடுத்த பதிவாக அதனை எழுதுகிறேன்...

   வருண்,

   சில மாதங்களுக்கு முன்னர் ஆனந்த விகடனில் கருணாநிதியின் பேட்டி ஒன்று பிரசுரிக்கப்படிருந்தது...

   ஜெயலலிதாவிடம் பிடித்தது என்ன என்ற கேள்விக்கு " நடனம் " என பதில் அளித்திருந்தார் தன்னை " சூத்திரன் " என வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சுய அறிவிப்பு செய்துக்கொள்ளும் " அந்த அரசியல் " சாணக்கியர் " !

   ஜெயலலிதா நடிகையாக பரிணமித்திருந்த காலகட்டத்தில் அவரைவிட மிக சிறப்பாக நடனம் ஆடுபவர்களை கொண்டிருந்தது தமிழ் சினிமா உலகம் என்பதை சினிமா ரசிகர்கள் மறுக்க மாட்டார்கள் ! அவர்களே மறுத்துரைத்தால் கூட பராசக்தி படைத்து தமிழ் சினிமாவில் கோலோச்சிய கருணாநிதியின் உள்மனம் மறுக்காது !

   அந்த பதிலுக்குள் ஒளிந்திருக்கும் " ஆணாதிக்க " பிடிவாதம் உங்களுக்கு புரியுமானால் இந்த பதிவின் அர்த்தமும், " தேவையும் " புரியும் !

   நன்றி

   Delete
 6. கடைசி வரி மறுக்க முடியாத உண்மை!

  ReplyDelete
 7. அன்பார்ந்த சாமானியன் சாம் அவர்களுக்கு நம் வலைப்பதிவர்களுக்கென தனியாக ஒரு பதிவகம், முத்துநிலவன் அண்ணா, செல்வா, டிடி அவர்களின் தொடர் முயற்சியால் அவர்கள் குழுவினரால் காண்செவிக் குழுவில் (வாட்சப்) தொடங்கப்பட்டுள்ளது. தாங்கள் தங்கள் வாட்சப் எண்ணை டிடியிடம் தெரிவித்தால் உடன் தங்களையும் குழுவில் இணைத்துவிடுவார். இக்குழு நமது பதிவுகளை இணைப்பதற்காக. அனுப்ப வேண்டுகிறோம் நண்பரே! கிறித்துமஸ் தின வாழ்த்துக்கள்

  மிக்க நன்றி

  ReplyDelete
 8. ஏன் இவ்வளவு இடைவெளி தோழர்
  எல்லாம் நலம்தானே ?

  ReplyDelete