Sunday, December 31, 2017

ஒரு நொடி சிந்திப்போம்...

லைநட்புகளுக்கு,

மிகுந்த மனவேதனையுடனும், அவநம்பிக்கையுடனும் நான் எழுதிய பதிவு இது. முழுவதும் படித்து, குறைந்தபட்சம் ஒருவருக்காவது இதனைப் பகிர முடியும் என்றால் படியுங்கள்... மேலோட்டமாகப் படித்துவிட்டு, சாமானியனுக்காக நன்று, அருமை எனப் பின்னூட்டமிட்டு மறப்பதாயிருந்தால் படிக்கவே வேண்டாம். ஏனெனில் இது நம் மண்ணின் வருங்காலம் பற்றிய கவலை. மததுவேச அரசியலை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற அச்சம். நம் பிள்ளைகளுக்கு அன்பை கற்பிக்கப் போகிறோமா அல்லது வெறுப்பைக் கற்பிக்கப் போகிறோமா என்பதற்கான பதில்.

நன்றி



" றைவனே ! இதுவரை என்னைக் காப்பாற்று என வேண்டினேன்... இனி நீ உன்னைக் காப்பாற்றிக்கொள் ! ... இந்த மனிதர்களிடமிருந்து ! "

                                                                             - அப்துல் ரகுமானின் கவிதை வரிகள்




தத்தை மக்களின் ஓப்பியம் என வர்னித்த கார்ல் மார்க்ஸ், அது பூர்ஷ்வாக்களின் புத்தியில் உதித்தது என்றான் ! கார்ல் மார்க்ஸ் காலத்து பூர்ஷ்வாக்களையும் மிஞ்சும் அதிகார வெறிபிடித்த இன்றைய அரசியல்வாதிகளின் கையில் சிக்கிய அந்த ஓப்பியம் படுத்தும்பாடு பயமுறுத்துகிறது !

ஜெரூசலத்தைப் பகடையாக்கி, இரண்டாயிர வருடத்துத் தீயில் குளிர்காய்ந்து உலகை கூறுபோட அமெரிக்க ஏகாதிபத்தியம் முயல்கிறது... தாயேஷ் போன்ற அடிப்படைவாத பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் ஒட்டுமொத்த மனிதகுல ஒற்றுமையையும் ஆட்டிப்பார்க்கின்றன... மாட்டுக்கறி அரசியலோ இரண்டாயிரம் வருடங்களையும் தாண்டிய பண்முகக் கலாச்சார ஒற்றுமைக்கு உலைவைக்கப் பார்க்கிறது !

பசியின் பொருட்டுகூடத் தன் இனத்தைக் கொல்லுவதில்லை மிருகங்கள். மதவெறி பிடித்த மனிதனோ பிரார்த்தனைக்குக் கூடியவர்களைக்கூடக் கொல்லுகிறான். ஒட்டி உலர்ந்த அடிமாட்டுக்காக அடுத்தவீட்டுக்கரனை அடித்தே கொல்லுகிறான்... பசிக்கு சோறிட சொன்ன, அன்பை போதித்த, சகோதரத்துவத்தைப் போதித்த மதங்களின் பெயரால் மனிதத்தை அழிக்கிறான்... நிச்சயமில்லாத சொர்க்கத்துக்காகத் தான் வாழும் மண்ணை நரகமாக்குகிறான் !

இதற்கு அந்த மதம் இந்த மதம் என யாரும் விதிவிலக்கல்ல !

அனைத்து மதங்களிலும் மத அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். அவர்கள், கவிஞர் அப்துல் ரகுமான் ஒரு மேடையில் பேசியதை போல இறைவன் உண்டு எனக் கூறிவிட்டு அவர்களின் செயல்களால் அவனை மிகவும் கேவலப்படுத்துகிறார்கள் ! அவரே குறிப்பிட்டதைப் போல, மதம் படித்தவர்களைவிட மதம் பிடித்தவர்கள் அதிகமாகி போனதால் மனிதநேயத்துக்கு உண்டான அபாயம் இது !

இவனைக் கேட்டால் அவன் செய்வதால் செய்கிறேன் என்கிறான்... அவனைக் கேட்டால் இவன் செய்வதால் செய்கிறேன் என்கிறான் ! யாராவது ஒருத்தன் நிறுத்தினால் போதும்... அனைத்தையும் ஒரு நொடியில் சரிசெய்துவிடலாம். ஆனால் அந்த ஒரு நொடி, சராசரி மனிதனுக்குக் கிட்டிவிடாமல் ஆளும் வர்க்கத்தால் ஆண்டாண்டு காலமாக மறைக்கப்பட்டே வருகிறது !

மேற்கு நாடுகளில் கிறிஸ்த்துவமே பிரதானம். வளைகுடா நாடுகளில் இஸ்லாம் ஒன்றே மதம். ஆசிய நாடுகளின் பல நாடுகள் பெளத்த சமயத்தைப் பின்பற்றும் நாடுகள். இவற்றுக்கெல்லாம் விதிவிலக்காய் உலகின் அனைத்து மதங்களையும் தன்னுள்ளே கொண்டு, அந்தந்த மதத்தவருக்கெனத் தனித்தனி கலாச்சாரப் பினைப்புகளையும்கொண்ட உலகின் ஒரே தேசம் இந்தியா மட்டும்தான்.

இந்து மதத்தின் தாய் மடியாய் திகழும் இந்தியாவின் முஸ்லிம்கள் மற்ற நாடுகளின் முஸ்லிம்களிலிருந்து மிகவும் வேறுபட்ட, தனிக் கலாச்சார அடையாளம் கொண்டவர்கள். அதே போல இந்திய கிறிஸ்த்துவப் பாரம்பரியமும் தனித்துவமானது. கேரள திருச்சபையின் புகழ் வாட்டிகன்வரை பரவிய ஒன்று. தேசத்தின் பெருமைகளாய் பேசப்படவேண்டிய இவையனைத்தும் மக்களிடையே பகைமை வளர்க்க பகடைகளாய்ப் பயன்படுத்தபடுகின்றன !

மதவாத பரப்புரைகள் இருள்மேகங்களாய் இந்தியவான் முழுவதும் சூழ்ந்துவருகின்றன.

பெரியாரின் பூமியில் மதப்பருப்பு வேகாது எனக் கூவி கூவியே விஷ விதைகளைத் தமிழகத்திலும் தூவி வருகிறர்கள் ! தீவிர வலதுசாரிகளை எதிர்க்கும் பாணியில் தந்திரமாய் அவர்களை வளர்க்கும் பணியில் சில ஊடகங்களும் அடக்கம் !

தூண்டிவிடுபவர்களும் துண்டிக்கத் தூண்டுபவர்களும் எங்குமே பாதிக்கப்படுவதில்லை. உலகின் ஏனைய பிரச்சனைகளைப் போல மததுவேச அரசியலால் பதிக்கப்படுபவர்களும் தேசத்தின் அன்றாடங்காய்ச்சிகள்தான் ! அமெரிக்க அதிபரும், இஸ்ரேல் மற்றும் சிரியாவின் அரசியல்வாதிகளும் ஆபத்து வட்டத்துக்குள் இல்லை ! இந்திய பிரிவினையில் லட்சம் லட்சமாய் அழிந்தது அடுத்த வேலை சோற்றுக்கு வழியில்லாத இந்துக்களும் இஸ்லாமியர்களும்தான் !

இதையெல்லாம் ஒரு நொடிகூட யோசிக்கவிடாதபடி மதம் என்னும் ஓப்பியம் சாமானியர்களின் சிறுமூலையில் தொடர்ந்து ஏற்றப்படுகிறது !

இவற்றையெல்லாம் மீறி, நோன்பு தொழுகைக்குக் கோவில் இடத்தைக் கொடுத்த இந்துக்கள், இந்து குழந்தைகளைத் தத்தெடுத்த இஸ்லாமிய பெண்கள் என ஆங்காங்கே நிகழும் ஒரு நொடி நிகழ்வுகளும் அடுத்தடுத்த பரப்புரைகளில் கானல் நீராய்  காணாமல் போய்விடுகின்றன.

இந்தியாவின் ஒவ்வொரு இந்துவின் வெற்றியிலும் ஒரு ஒற்றை இஸ்லாமியனுக்காவது பங்கிருக்கும் ! அதே போல ஒரு ஒற்றை இந்துவின் உதவியாவது இல்லாமல் ஒரு இ ஸ்லாமியனாலோ கிறிஸ்துவனாலோ இங்கு வளர முடியாது ! இதுதான் இந்த மண்ணின் நிலை ! இந்தத் தேசத்தின் வரம் ! இதை நாம் ஒவ்வொருவரும் ஒரு நொடி யோசித்தாலே அனைவரின் மீதும் நேசம் பிறக்கும் !

அளவுக்கு மீறிய அதிகாரவர்க்கத்தின் அராஜகமும், அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகளும், மதபோதகர்களின் விஷ பிரசங்கங்களும் அவர்களுக்கே எதிரான ஒரு நொடியை பிரசவிக்கும் ! அந்த ஒரு நொடியில் சாமானியர்களின் புத்தியில் வெடிக்கும் கிளர்ச்சிதான் உலகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கின்றது ! பிரெஞ்சு புரட்சியைத் தோற்றுவித்ததும் பொதுவுடமையைத் தூக்கிபிடித்ததும் அதுதான். காந்திக்கும் முன்னதாகச் சுதந்திர வேட்கையைத் தூண்டிவிட்ட சிப்பாய் கலகமும் சாமானிய மக்களின் புத்தியில் வெடித்த ஒரு நொடி கிளர்ச்சிதான் !

மத நம்பிக்கை என்பதும் காதலை போல, காமத்தை போல அந்தரங்கமானது. மதம் என்னும் வெற்றுடம்பை உங்கள் வீட்டின் நான்கு சுவற்றுக்குள் எப்படியும் ஆராதித்துக்கொள்ளுங்கள்... ஆனால் வெளியே வரும்போது மத நல்லிணக்க சட்டையை மறக்காமல் மாட்டிக்கொள்ளுங்கள். என் மதம் தான் பெரியது என்பவராக இருந்தால்... தயவுசெய்து மதச் சகிப்ப்புத்தன்மை சட்டையையாவது போட்டுக்கொள்ளுங்கள் !

ஒரு நொடி சிந்தித்துப் புத்தாண்டை தொடங்குவோம்... மதம் மறந்து மனிதம் போற்றுவோம் !

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் !


பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

17 comments:

  1. அன்பிற்கினிய அருமை நண்பர் சாமனியனுக்கு,
    தங்களது புத்தாண்டு படைப்பு பூவிதழ் சிந்தும் தேனாய் இனிக்கும் என்றே படிக்கத் தொடங்கினேன். ஆனால் ஆரம்பமே ஆழ்ந்த சிந்தனைக்குள் சிக்குண்ட சிலந்தியாகிப் போனேன். எச்சில் கூடு கட்டி எரிந்தே போனேன். ஏனெனில் சமத்துவத்தில் சாக்கடை நாற்றம் வீசும்போது, பூவிதழ் சிந்தும் தேனின் மணம் எப்படி வீச முடியும்?
    ஆன்மீக அரசியல் அடிச் சுவடு பதிக்கும் வேளை....
    அடுத்தவரை, ஏன்? ஆள்பவரை சுற்றும் துணைக் கோளாகிப் போனால் என் செய்வது?
    அச்சம் அனைவருக்கும் சமம்!
    ஆனால்?
    சட்டத்தின் சாட்டையில் அடி வாங்குபருக்கு மட்டுமே
    வலியின் கொடுமை வாலியின் வலிமையைவிட வலிமை வாய்ந்ததாக இருக்கும்.
    மனித உணர்வுகளுக்கு மதம் மார்கழி மாத குளிராய் இருத்தல் வேண்டும்வே.
    ஓன்றுபட்ட வலிமைமிகு தேசம் ஓங்க வேண்டும் ஒருதாய் பிள்ளைகளாக!
    நன்றி!

    இந்தியாவின் ஒவ்வொரு இந்துவின் வெற்றியிலும் ஒரு ஒற்றை இஸ்லாமியனுக்காவது பங்கிருக்கும் ! அதே போல ஒரு ஒற்றை இந்துவின் உதவியாவது இல்லாமல் ஒரு இ ஸ்லாமியனாலோ கிறிஸ்துவனாலோ இங்கு வளர முடியாது ! இதுதான் இந்த மண்ணின் நிலை ! இந்தத் தேசத்தின் வரம் ! இதை நாம் ஒவ்வொருவரும் ஒரு நொடி யோசித்தாலே அனைவரின் மீதும் நேசம் பிறக்கும் !
    ஒரு நொடி சிந்தித்துப் புத்தாண்டை தொடங்குவோம்... மதம் மறந்து மனிதம் போற்றுவோம் !
    தங்களது வரிகளுக்கு புத்தாண்டு மலர்ச் சூடி வரவேற்கின்றேன்.புதுவை வேலு

    ReplyDelete
  2. மதம் மறந்து மனிதம் போற்றுவோம் !
    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நட்பிற்கினிய சாமானியன் அவர்களுக்கு நேச வணக்கம்!

    பதிவின் முன்னுரை, எவ்வளவு வேதனையோடு இக்கட்டுரையை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. இந்திய ஆளுங்கட்சியின் சமயவாதப் போக்கைப் பற்றி மட்டுமே நாள்தோறும் கவலைப்பட்டு வந்த என்னைப் போன்றவர்களுக்கு, "அட, முட்டாள்களே! உலகமே இன்று இப்படித்தானடா இருக்கிறது!" எனச் செவிட்டிலடித்து எச்சரிப்பவையாக அமைந்திருக்கின்றன ஜெருசலேம் விவகாரம் பற்றிய வரிகள். செய்திகளில் அறிந்து கடந்து போனவைதாம் என்றாலும் தங்களைப் போன்றவர்கள் எடுத்துரைக்கும் வரை இத்தகைய நிகழ்வுகளின் கனம் புரிவதில்லை.

    ஆனால், கவலை வேண்டா ஐயா! உலகம் முழுதும் ஒரு போக்கில் போனால் அதனால் ஏற்படும் தீமைகளைக் கண்டு பொங்கியெழ இன்னோர் உலகம் தோள்தட்டும். தீயவர்கள் அளவு கடந்து போகும்பொழுதுதான் நல்லவர்கள் சிலிர்த்தெழுந்து வெளியில் வருவார்கள். எனவே, எப்பொழுதும் மிதவாதிகளின் கை ஓங்குவதை விடத் தீவிரவாதிகளின் கை ஓங்குவதே நல்லவர்களை வெடித்தெழுந்து வர வைக்கும். இது இயற்கை நியதி! யாராலும் தடுக்க முடியாது. ஆள்பவர்கள் ஆடும் வரை ஆடட்டும்! அடுத்த தலைமுறை வீறு கொண்டு சீறட்டும்! ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! கண்டிப்பாக இக்கட்டுரையை மற்றவர்களுடனும் பகிர்வேன்!

    ReplyDelete
  4. இந்தியாவின் ஒவ்வொரு இந்துவின் வெற்றியிலும் ஒரு ஒற்றை இஸ்லாமியனுக்காவது பங்கிருக்கும் ! அதே போல ஒரு ஒற்றை இந்துவின் உதவியாவது இல்லாமல் ஒரு இ ஸ்லாமியனாலோ கிறிஸ்துவனாலோ இங்கு வளர முடியாது ! இதுதான் இந்த மண்ணின் நிலை ! இந்தத் தேசத்தின் வரம் ! இதை நாம் ஒவ்வொருவரும் ஒரு நொடி யோசித்தாலே அனைவரின் மீதும் நேசம் பிறக்கும் !//

    உண்மைதான்! மிகவும் சரியான வரிகள்! ஒவ்வொரு நாட்டிலும், மத வாதம் இன வாதம் எல்லாம் நிறையவே இருக்கின்றன தான். இடையில் ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு நாட்டில் பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு விடுவிக்கப்படாமல் சில மத தீவிரத்துடன் நடந்ததை மறந்திட முடியுமா அது போலவே ஜெருசலெம் பிரச்சனையும்...பாலஸ்தீனிய பிரச்சனை என்று பல உள்ளன. அப்படிப் பார்க்கும் போது நம் நாடு எத்தனையோ தேவலாம் என்றே தோன்றுகிறது சகோ!

    நிச்சயம் நல்லது நடக்கும்!

    கீதா

    நல்ல கட்டுரைப் பதிவு. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. வணக்கம் சாம்! நீங்கள் சொல்வது மிகவும் சரி. மதத்துவேசம் தற்போது தலை விரித்து ஆடுகின்றது. மாட்டுக்கறியின் பெயரால் எத்தனை கொலைகள்? இந்தியா முழுதும் காவிமயமாகி வருகின்றது. சகிப்புத்தன்மை சுத்தமாக இல்லை. எதிர்த்து எழுதினாலோ, பேசினாலோ கொலை! தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் ஆதரவோடு பாஜக காலூன்றப் பார்க்கின்றது. சென்னை வெள்ளத்தில் இந்துக் கோயில்களைச் சுத்தம் செய்த இஸ்லாம் சகோதரர்களைத் தொலைகாட்சியில் பார்த்தோம். . செருப்பைக் கழற்றிக் கைகளில் தூக்கிக் கொண்டு கோயில்களில் தஞ்சம் புகுந்திருந்த மக்களுக்கு உணவு எடுத்துக் கொண்டு வந்த இஸ்லாம் பெரியவர்கள் எத்தனை பேர்? அப்போது மதம் மக்களைக் காப்பாற்றவில்லை. மனிதம் தான் காப்பாற்றியது. எம்மதமும் சம்மதம் என்று அமைதிப் பூங்காவாய்த் திகழ்ந்த பெரியார் பிறந்த மண்ணில், மதத்துவேசம் வளர்ந்து வருவது மிகவும் ஆபத்து. நாமெல்லாரும் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரமிது! சிந்திக்க் வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய பதிவுடன் புத்தாண்டு பதிவினைத் துவங்கியமைக்கு நன்றி சாம்!

    ReplyDelete
  6. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  7. மதம் மறப்போம். மனிதம் வளர்ப்போம்....

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. சிந்திக்க வைத்துள்ள பதிவு. இக்காலகட்டத்திற்குத் தேவையானதும்கூட. மதத்தை ஒரு காரணியாக்கி பிழைப்பு நடத்துவது பலருக்கு வாடிக்கையாகப் போய்விட்டது என்பது வேதனையே.

    ReplyDelete
  9. தமிழகத்தைப் பொறுத்தவரை, சாதிவெறியை அடித்தளமாக வைத்து ஆட்சி நடத்தும்இரண்டு திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து வெளிவந்தால்தான் இந்துக்கள் சுதந்திரமாக நடமாட இயலும் என்ற நிலைதான் உள்ளது. வடக்கிலோ, பெருவாரியான இந்துக்கள், மைனாரிட்டியினரின் தாக்குதல்களுக்கு அஞ்சியே வாழ்க்கை நடத்தவேண்டி உள்ளது. உலகிலேயே, சிறுபான்மையினருக்கு அஞ்சிப் பெரும்பான்மையினர் வாழும் ஒரே நாடு இந்தியா தான். எனவே இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல் அல்லது மறைத்துவிட்டோ, மறந்துவிட்டோ பேசுவதால் பயனில்லை. சரித்திர உண்மைகள் யாருக்காவும் மாறுவதில்லை. எனவே, ஒரே வழி என்னவென்றால், வேறெந்த மனிதனைவிடவும் எனக்கு அதிக உரிமை வேண்டும் என்று யாரோ ஒருவர் எண்ணுவதோ, செயல்படுவதோ இரும்புக்கரம் கொண்டு தடுக்கப்படவேண்டும் என்பதே. அனைவருக்கும் சம உரிமை என்பதை அமல்படுத்திவிட்டால் அமைதி தானே வரும். புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    -இராய செல்லப்பா சென்னை

    ReplyDelete
  10. அப்துல் ரகுமான் வரிகளை வழிமொழிகிறேன்.

    மதம் மறப்போம். மனிதம் வளர்ப்போம்.

    ReplyDelete
  11. அறிந்தோ..அறியாமலோ 24 மணி நேர மதவெறியில் இருக்கும் சிந்தனை..... அந்த ஒரு நொடியில் சிந்திக்க முடியாது..
    அப்படியே... ஒரு நொடியில் சிந்தித்தாலும் கடலில் கரைந்த பெருங்காயம் போல்தான் நண்பரே..........

    ReplyDelete
  12. ///இந்தியாவின் ஒவ்வொரு இந்துவின் வெற்றியிலும் ஒரு ஒற்றை இஸ்லாமியனுக்காவது பங்கிருக்கும் ! அதே போல ஒரு ஒற்றை இந்துவின் உதவியாவது இல்லாமல் ஒரு இ ஸ்லாமியனாலோ கிறிஸ்துவனாலோ இங்கு வளர முடியாது ! இதுதான் இந்த மண்ணின் நிலை ! இந்தத் தேசத்தின் வரம் !///


    இந்த கருத்து இந்தியா முழுவதற்கும் என்று சொலவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது தென் இந்திய மாநிலங்களுக்கான கருத்து என்று சொல்லாம். அது சரி என்றுபடுகிறது... வட இந்தியாவில் இப்படி இல்லை என்று பல வட மாநில நண்பர்கள் சொல்லை கேள்விபட்டு இருக்கிறேன். அங்கே மத வெறியர்கள் இரண்டு பக்கம் அதிகம்..... அவர்கள் தென்னிந்தியாவில் பரவ பரவதான் இப்போது இங்கே மத ஒற்றுமைகள் குலைந்த்து பொயி இருக்கின்றன.... நான் கடந்த முறை பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா சென்ற போது இதை கண்கூடாக என்னால் பார்க்க முடிந்தது.



    அதுமட்டுல்லாமல் இங்கே வலைபதிவர்களாக பலர் இணையத்தில் மதவேறுபாடுகள் இல்லாமல் பழகி வந்தவர்களுக்கிடையே பேஸ்புக்க பழக்கம் வந்ததும் துவேஷம் மிக அதிகமாகி இருக்கிறது.

    ReplyDelete
  13. முதலில
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
    அடுத்து
    மதங்கள் நல்வழி காட்டுகின்றன
    அதற்கடுத்து
    மதவாதிகள், மதங்கள் கூறும் நல்வழிகாட்டலைப் படிக்காது மக்களைக் கெடுக்கின்றனர்.
    எனவே, மக்கள் விழிப்போடு நல்லுறவைப் பேணுவதே நலம்!

    ReplyDelete
  14. புத்தாண்டில் சிந்திக்க வைத்த அருமையான பதிவு. மதத்தின் பெயரால் மக்களிடையே உள்ள இணக்கத்தை கெடுப்பவர்களை மக்கள் புரிந்து கொண்டு அவர்களை விலக்கி வைக்கவேண்டும். இந்த ஆண்டு மனிதம் போற்றும் ஆண்டாக இருக்க விழையும் தங்கள் எண்ணம் ஈடேறட்டும். புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்!

    ReplyDelete
  15. சாம்
    ரோஜாத்தோட்டத்தின் படம் போடுங்க...
    அப்புறம்
    இது சாமான்ய மகளின் உளக்கிடக்கை

    இது என்குரலும்கூட

    நன்றிகள் சாம்
    முக்நூலில் பகிர்கிறேன்

    ReplyDelete
  16. மக்கள் விழிப்போடு நல்லுறவைப் பேணுவதே நலம்.

    ReplyDelete