Tuesday, September 16, 2014

தாய் மண்ணே வணக்கம் !

விமான பயணம் எனக்கு அலுப்பான விசயம் ! பெட்டிகளை எடை பார்ப்பதில் தொடங்கும் பரபரப்பு, சுங்க சோதனை, குடியேற்ற விதிமுறைகள் என அனைத்தையும் முடித்து விமானத்தில் ஏறி அமர்ந்த பிறகுதான் அடங்கும். அதுவும் கடந்த பத்து வருடங்களாக விமான பயணிகள் பாதுகாப்பு சோதனைகளில் படும் பாடு இருக்கிறதே... இந்த பாதுகாப்பு சோதனைகளின் போதான அலைகழிப்பில் பிள்ளை குட்டிகள், உடைமைகளை தவறவிடாது நிதானமாக இருப்பதற்காகவாவது தியானம் கற்றுக்கொள்ள வேண்டும் !

அனைத்தையும் முடித்து பிள்ளைகளோடு பிள்ளைகளின் பைகளையும் சேர்த்து சுமந்து  கொண்டு விமானத்தின் நுழைவாயிலை நெருங்க...

" தமிழாம்மா ? நல்லவிதமா போயிட்டு வாங்கம்மா ! "

 பின்னால் களைப்பாய் நடந்து வந்த என் அம்மாவை பார்த்து,  பயணச்சீட்டை சரிபார்த்து கொடுத்த தமிழ் அதிகாரி கூற,  " இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே ! " என்பதை அன்று அனுபவமாக உணர்ந்தேன் ! என் அம்மாவின் கண்களிலோ கண்ணீர் திரை ! பாரீஸ் சர்வதேச விமான நிலையத்தில் தமிழ் அலுவலர்கள் சகஜம் என்றாலும், பணி நேரத்தில் அவர்கள் தமிழில் பேசுவது அபூர்வம் !! இறுக்கமான தருணங்களின் போது தாய் மொழியில் கேட்கும் சில வார்த்தைகள்கூட மனதை நெகிழ்த்திவிடும் என்பதற்கு உதாரணமாக அமைந்துவிட்டது அந்த அன்பரின் வார்த்தைகள்.

விமானம் பறக்க தொடங்கியதும் சட்டென ஒரு விடுமுறை விடுதலையுணர்வு ! பணி கட்டாயங்கள், அன்றாட இயந்திரத்தனமான வேலைகள் இனி ஒரு மாதகாலத்துக்கு கிடையாது என்ற குதூகலம் ! முக்கியமாக என் தலைமை அதிகாரியின் பணி நிமித்தமான கைப்பேசி குறுஞ்செய்திகள் என்னை வந்தடைய முடியாத தூரத்துக்கு போகிறேன் என்ற குரூர மகிழ்ச்சி !

கடந்த ஒரு வருடத்தின் முக்கிய நிகழ்வுகள், நிறைவேறிய திட்டங்கள், கண்ணாமூச்சி காட்டும் பதவி உயர்வு என பலவற்றையும் மனம் அசைபோட, சட்டென வலைப்பூவின் பக்கம் தாவியது எண்ண ஓட்டம் ! வானில் பறந்துகொண்டிருந்ததாலோ என்னவோ என் ஞானக்கண் சற்று அதிகமாகவே திறந்துகொண்டது !

நமது சமூகத்தின் சீரழிவுகள், குறைகள் பற்றியே கழுவி கழுவி ஊற்றிக்கொண்டிருக்கிறோமே, அந்த குவளையில் குடிக்க ஒன்றுமே இல்லையா ?! தமிழ் சமூகத்தில், தமிழனிடத்தில் பாராட்டத்தக்கது எதுவுமே கிடையாதா என்றெல்லாம் எண்ணங்கள் !




வ்வொரு முறையும் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நான் பயணம் செய்த விமானம் தரையிறங்கும் போதே ஒரு விதமான ஆழ்ந்த நிம்மதி மனதில் பரவும் ! உலகின் மிக பாதுகாப்பான இடமாக தோன்றும் ! விமானத்திலிருந்து வெளியேறும் முதல் தருணத்தில் முகத்தில் வீசும், அனைவரும் அலுத்துக்கொள்ளும் சென்னையின் வெப்பம் எனக்கு மட்டும் கருவறை சூடாகப் படும் !

பதினேழு வயதில் பிரான்ஸ் வந்தேன். அன்றிலிருந்து எனக்கும் இந்தியாவுக்குமான பந்தம் ஓரிரு வருடங்களுக்கு ஒரு முறை வரும் ஒரு மாத காலகட்டம்தான். படிப்பு, வேலை, வாழ்க்கை என அனைத்தையுமே ஐரோப்பாவிற்கேற்ப அமைத்துக்கொண்டு குடியேறிய நாட்டுக்காக கட்டாய ராணுவ சேவையும் செய்து வீட்டுக்கு வெளியே பிரெஞ்சு குடிமகனாகவே வாழ்ந்து பழகி இருபது வருடங்களுக்கும் மேல் ஓடிவிட்டாலும் இன்றும் ஆழ்மனம் தமிழ்நாட்டையும், என் பூர்வீகமான புதுவையின் காரைக்காலையும்தான் சுற்றிவருகிறது ! வாய்ப்பு கிடைத்தால் மீன்டும் தாயகம் திரும்பிவிடலாம் என்ற எண்ணம் அவ்வப்போது எழாமலில்லை !

தாய் மண் என்பதற்கான வரைமுறைதான் என்ன ?

 ஒரு மனிதனுக்கு கருத்து தெரியும் காலகட்டம் தொடங்கி அவனின் பதிணென் பருவத்தின் முடிவுவரை எந்த தேசத்தில் வாழ்கிறானோ அதுவே அவனுக்கு தாய் மண் உணர்வாக நிலைக்கும் என தோன்றுகிறது. அதன் பிறகு அவன் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் தன் பால்யம் கழிந்த மண்ணையே தன் ஆதர்சமாக கொள்வான். காரணம் பதிணென் பருவம் மட்டுமே எந்த எதிர்பார்ப்புகளுமற்ற, வாழ்க்கையை, உலகை வியப்புடன் நோக்கும், உலகை கற்றுக்கொள்ள விழையும் பருவம். அதன் பிறகு படிப்புக்கேற்ற வேலை, காதல், திருமணம், குழந்தைகள் என பொறுப்புகள் ஏறி, வாழ்க்கை என்பது சேமித்தவற்றை தக்கவைத்துக்கொள்வதற்க்கான போராட்டமாக மட்டுமே மாறிவிடுகிறது ! இந்த விதி உலகின் அனைத்து தேசத்தவருக்குமே பொதுவானது.

பிரான்சில் பிறந்த எனது பிள்ளைகள் என் மூலம் இந்தியாவை தெரிந்துகொள்வார்கள், விடுமுறை காலங்களில் என்னுடன் இந்தியா வருவார்கள், தமிழ் கலாச்சாரத்தை அறிந்து கொள்வார்கள், அவர்களின் பூர்வீக தேசம் என கொண்டாடுவார்கள் என்றாலும் இந்தியா பற்றிய எனது மனநிலை அவர்களுக்கு இருக்காது. காரணம் அவர்கள் வளர்ந்த சூழல் வேறு. அவர்களின் பால்ய நினைவுகள் பிரெஞ்சு கல்வி முறை மற்றும் அந்த தேசத்தின் பள்ளி, கல்லூரிகளின் சூழ்நிலை சார்ந்ததாகவே அமையும்.

ஏதோ ஒரு காரணத்துக்காக விரும்பி வேறு தேசம் செல்பவர்கள் தொடங்கி தாய் மண்ணின் உரிமைகள் இழந்து அகதிகளாய் அந்நிய தேசம் வந்து வாழ்பவர்கள் வரை அனைவரின் இரண்டாம் தலைமுறைக்கும் இது பொருந்தும்.


காரைக்காலில், மாதாகோவில் வீதியில் நின்று ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்... இருபது வருடங்களுக்கு முன்னால் அமைதியான, நகரின் மிக நீளமான,  அழகான தெருக்களில் ஒன்று. இன்றைய நகர்மயமாக்கலின் அசுர அலைகளில் முழ்கி ஒழுங்கற்ற வாகன போக்குவரத்தின் இரைச்சல்களுடனும், ஜன நெரிசல்களுடனும் இரையெடுத்த பாம்பாய் பிதுங்கி நெளிந்திருந்தது !

" ஒரு ஜீவன் அழைத்தது... ஒரு ஜீவன் துடித்தது... "

பக்கத்திலிருந்த கடை ஒன்றிலிருந்து தவழ்ந்து வந்த பாடல் வரிகள் அனைத்து இரைச்சல்களையும் இல்லாமல் பண்ண, காலம் பின்னோக்கி பாய்ந்த அந்த ஒரு கணத்தில் நான் இருபது வருடங்களுக்கு முன்னாலிருந்த பழைய மாதாகோவில் வீதியில் சீருடை மாணவனாய் அலைந்து திரும்பினேன் ! இந்த மனோரசவாதம் தாய் மண்ணில் மட்டுமே சாத்தியம் !

ந்தியாவின் ஜாதி மத அரசியல் பற்றி ஒரு நண்பனிடம் பேசிக்கொண்டிருந்த போது, இந்தியாவில் ஜாதி மத அடையாளம் அவசியம் தேவை என அவன் கூற, அவற்றினால் ஏற்படும் குழு மனப்பான்மை பற்றியும், அதன் ஆபத்தையும் நான் பேச, வாதம் சூடுபிடித்தது...

" ஆமாடா ! ஒரு மாசம் வந்த நீ ஒற்றுமையை பற்றி பேசலாம்... இங்க வாழ்றவனுக்குத்தான் வலி தெரியும் ! "

அவன் விளையாட்டாகத்தான் கூறினான் என்றாலும் என்னுள் சட்டென ஒரு முள் தைத்து அந்நியமாக உணர்ந்தேன்.


ரண்டு நாட்களுக்கு முன்னர் பாரீஸ் மெட்ரோ ரயிலில் ஏறும் அவசரத்தில் ஒரு பிரெஞ்சு மூதாட்டியின் காலை தெரியாமல் மிதித்துவிட்டு, உடனடியாக மன்னிப்பும் கேட்டேன்.

" ஆமாம் ! பிரான்சில் எங்களை போன்ற உண்மையான பிரெஞ்சு மக்களுக்கு பேசும் உரிமை கூட போய்விட்டது ! "

" அம்மணி ! வார்த்தைகளை புரிந்து பேசுங்கள் ! பிரெஞ்சு குடிமகனுக்கான உரிமையிலும் சரி, மனித உரிமைகளிலும் சரி அவர் உங்களுக்கு குறைந்தவர் அல்ல ! "

அருகே நின்றிருந்த வேறொரு பிரெஞ்சு முதியவர் எனக்கு ஆதரவாய் அந்த பெண்மணியை கண்டித்தாலும், என்னுள் ஏதோ நொறுங்குவதாய் உணர்ந்தேன் !

மனதார நேசிக்கும் தாய் மண்ணில் சுற்றுலா வருபவர்களாக கருதப்பட்டு, பிழைக்கவந்த மண்ணில் இரண்டாம் குடிமக்களாய் நடத்தப்படுவதுதான் புலம் பெயர்ந்தவர்களின் தலையாய சோகம் !

சரி, இந்த பதிவின் ஆரம்பத்தில் நான் கேட்ட தமிழ் சமூகத்தின் நல்லவை... ? அடுத்த பதிவில் பார்ப்போம் !






இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

57 comments:

  1. விடுமுறை முடிந்து ஊர் திரும்பி விட்டீர்களா?

    பிரெஞ்சுப் பெண்ணும், உங்கள் நண்பர் கேட்ட கேள்வியும் மனதை எப்படி பாதிக்கும் எனப் புரிகிறது. தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நல்லவிதமாக, புத்துணர்வுடன் திரும்பிவிட்டோம் தோழரே !

      உங்களின் முதல் பின்னூட்ட வார்த்தைகளுக்கு நன்றி.

      Delete
  2. சாம்,

    சொல்லவந்த கருத்தை அடுத்த பதிவுக்கு தள்ளிவைத்துவிட்டாலும் இந்தப் பதிவு சிலிர்ப்பைக் கொடுக்கத் தவறவில்லை. அது உங்கள் எழுத்தின் வசீகரம் என்று நினைக்கிறேன். குறிப்பாக

    ---முக்கியமாக என் தலைமை அதிகாரியின் பணி நிமித்தமான கைப்பேசி குறுஞ்செய்திகள் என்னை வந்தடைய முடியாத தூரத்துக்கு போகிறேன் என்ற குரூர மகிழ்ச்சி !---

    ----நமது சமூகத்தின் சீரழிவுகள், குறைகள் பற்றியே கழுவி கழுவி ஊற்றிக்கொண்டிருக்கிறோமே, அந்த குவளையில் குடிக்க ஒன்றுமே இல்லையா ?!----

    ---விமானத்திலிருந்து வெளியேறும் முதல் தருணத்தில் முகத்தில் வீசும், அனைவரும் அலுத்துக்கொள்ளும் சென்னையின் வெப்பம் எனக்கு மட்டும் கருவறை சூடாகப் படும் !----

    போன்ற வரிகள் அபாரம். தாய் மண் என்றால் என்னவென்பதை நீங்கள் மிகச் சரியாகவே உணர்ந்திருக்கிறீர்கள். மக்கள் நெரிசல் நம்மை இறுக்கினாலும் இடைவிடாத சத்தங்கள் காதுகளை குடைந்தாலும், அசுத்தமான தெருக்களும் தூசியும் வெப்பமும் ஏகத்துக்கு சபித்தாலும் புரையோடிப்போன மூட நம்பிக்கைகள் கோபத்தை கிளறினாலும் இது என் மண். இதுவே எனது மண்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் காரிகன்,

      எனது விடுமுறையின் போது, நீங்கள் இட்ட பின்னூட்டத்தினை படித்து வியந்தேன் ! அந்த சமயத்தில், பதிவு எழுத நேரமில்லையே என நான் எண்ணிக்கொண்டிருந்ததை அப்படியே அறிந்துகொண்டவர் போல நீங்கள் கொடுத்திருந்த பின்னூட்டம் ஆச்சரியம் !

      சொல்ல வந்த கருத்தை அடுத்த பதிவுக்கு மற்றியதற்க்கான காரணம் பதிவின் நீளம். மேலும் அதனை சொல்வதற்கு முன்னால் தாய் மண் என்பதன் அர்த்தத்தையும், புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் சிரமங்களையும் பதிப்பது முக்கியம் என தோன்றியது !

      என் எழுத்தில் வசீகரம் இருப்பதாக நீங்கள் நினைத்தால் அதற்கு காரணமான பலரில் நீங்களும் ஒருவர். உங்கள் முதல் வருகையிலேயே என் எழுத்தின் பாணி வரை அலசி நீங்கள் அளித்த ஆலோசனைகள், எழுதுவதை செம்மையாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் நிரந்தரமாக விதைத்துவிட்டன !

      நன்றி

      Delete
    2. காரிகன் நான் உணர்ந்ததையே நீங்கள் பதிவு செய்துவிட்டீர்கள் :-)

      நடோடியை ஆதிவாசியை நவீனமும் அறிவியலும் சிறை ஆக்கிவிட்டதை அழகாய் உணர்த்திய வரிகள்

      Delete
  3. waiting for your next post. good writing sir.

    ReplyDelete
    Replies
    1. Thanks for your comment dear Mahesh, The next post in one week !

      Delete
  4. புலம் பெயர்ந்த தமிழர்களின் மன உணர்வினை மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள்! சிறப்பான பதிவு! பிறந்த மண்ணிலும் அன்னியமாகி புகுந்த மண்ணிலும் மதிப்பிழந்து போவது கொடுமையான ஒன்றுதான்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பரே,

      தமிழன் எந்த தேசம் சென்றாலும் தமிழ்நாட்டை மறக்க மாட்டான் என நேரு கூறியதாக படித்த ஞாபகம். அது உண்மைதான் !

      நன்றி

      Delete
  5. இலக்கியவாதியின் உரையை கண்முன் காண்கிறேன். அழுத்தமான உண்மையான, அனுபவத்துடன் செதுக்கப்பட்ட ஆரோக்கியமான பதிவு.
    வாழ்த்துகள்.

    sattia vingadassamy

    ReplyDelete
    Replies
    1. நன்றி சத்யா அவர்களே,

      இலக்கியவாதியின் ஆரோக்கியமான உரையா என்பதை உங்கள் தீர்ப்புக்கே விட்டுவிடுகிறேன்... ஆனால் உண்மையான அனுபவத்துடன் எழுதப்பட்டது என்பது உண்மை !!

      Delete
  6. நண்பரே இந்தியமண்ணை மிதித்து விட்டு மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியமைக்கு வாழ்த்துக்கள் தொடருங்கள் எழுத்துப்பணியை எழுச்சியுடன், நானும் கூட தங்களுக்கு பணி கொடுத்துள்ளேன் கீழே காண்க...

    ‘’அன்பு நண்பரே வணக்கம், விருது ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்’’ பெற்றுக்கொள்ளவும்.
    அன்புடன்
    கில்லர்ஜி.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், எழுத்து பணியில் எல்லோரும் டீம் ஒர்க் பண்ணுவோம்ஜீ !!!

      விருதைவிட என்னை மகிழ்வித்த விசயம் இதனை கொடுத்தவர்களின் மனதில் நான் இருக்கிறேன் என்பதுதான் !

      நன்றிகள்ஜீ !

      Delete
  7. அண்ணா,
    வணக்கம்.தாமதமாகக் காண நேர்ந்தாலும் தங்களின் பதிவுகளை படித்தேன். படித்தேன் . மீண்டும் படித்தேன்.
    புரியாமல் அல்ல, ஏதோ பின்னூட்டமிட்டுப் போகவேண்டும் என்பதற்காகவும் அல்ல!
    வெறுமனே வாசித்துப் போதல் என்பதைக் கடந்து மீண்டும் மீண்டும் படிக்க வசீகரிக்கும் உங்கள் நடை!
    ஒரு எழுத்தாளனின் வெற்றிக்கு வேறென்ன வேண்டும்.?
    அனுபவங்களை அனுபவித்துக் கொடுப்பதைப் படிக்கும் அனுபவம்....அருமை!
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரரே !

      இப்போதெல்லாம் நான் அடிக்கடி நினைத்து நெகிழும் விசயம், வலைப்பூவின் மூலம் நான் கொண்ட, உங்களை போன்றவர்களின் பேரன்பு ! இதற்காகவே இன்னும் நிறைய எழுத தோன்றுகிறது.

      Delete
  8. "ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது" பாடலை இசை ஞானி இளையராஜாவின் குரல் இன்னிசையில் தாய் மண்ணில் சாமானியரே நீங்கள் கேட்ட தருணத்தில் உங்களது அனுபவம் அப்பப்பா!!! இது சத்தியமாக தாய் மண்ணில் மட்டுமே சாத்தியம். புலம் பெயர்ந்தவர்களின் தலையாய சோகத்தை கட்டுரையில் களம் இறக்கிய பண்பு இருக்கிறதே அது!.. உங்களது மனித நேயத்தின் மாண்புக்கு மணி மண்டபமே கட்டலாம். பாடத் திட்டத்தில் "பயணக் கட்டுரைகள்" பகுதியில் இடம் பெற வேண்டிய மிக அருமையான பதிப்பு.
    "ஒரு சராசரி மனிதனின் பார்வையில் உலகத்தை" அளந்து, உலகளந்த பெருமாளின் அருளை பெற்று விட்டீர்கள். வாழ்த்துக்கள்
    புதுவை வேலு(kuzhalinnisai.blogspot.com)

    ReplyDelete
    Replies
    1. உலகளந்த பெருமாளின் கடாட்சம் நம் அனைவருக்குமே உண்டு நண்பரே !

      புலம் பெயர்ந்தவர்களின் சோகத்தை குறிப்பிட்டது பண்பு என்பதையும் தாண்டிய ஆத்மார்த்த கடமை அல்லவா ?

      இந்திய பாடத் திட்டத்தில் பயணகட்டுரைகளுக்கு இடமேது நண்பரே ?!

      நன்றியுடன்
      சாமானியன்



      Delete
  9. அருமையான பதிவு! வசீகரமான எழுத்து! நாற்பது வருட வெளிநாட்டு வாழ்க்கையில் ஒவ்வொரு முறையும் நான் தமிழகம் வரும்போது என்னவெல்லாம் உணர்ந்தேனோ, உணர்கிறேனோ அதெல்லாவற்றையும் உங்கள் எழுத்தில் கண்டேன். தாய் மண்ணில் அந்நியப்படுதலும் வாழும் மண்ணில் ஒட்டாத நிலைக்குத் தள்ள‌ப்படுதலுமான திரிசங்கு வாழ்க்கை தான் நம்முடையது!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அம்மா,

      வயதில் மூத்த, வெளிநாட்டில் நீண்டகாலமாய் வாழும் உங்களின் வார்த்தைகள் இந்த எளிய பதிவுக்கான பெரிய அங்கீகாரம் !

      Delete
  10. இன்றைய ‘செல்லப்பா தமிழ் டயரி’ யில் புதிய பதிவு ‘அபுசி-தொபசி-45’ வெளிவந்துள்ளது. அதில் தங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அன்புகூர்ந்து படிக்க வேண்டுகிறேன்.

    கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்கவும்:
    http://chellappatamildiary.blogspot.com/2014/09/107-45.html

    படித்து, கருத்துரை வழங்கினால் மகிழ்ச்சியடைவேன்.

    அன்புடன்,
    இராய செல்லப்பா

    ReplyDelete
    Replies
    1. அய்யா, உங்களின் பேரன்புக்கும் ஊக்கத்துக்கும் நன்றி.

      இன்று காலையிலேயே உங்கள் பதிவினை படித்து நெகிழ்ந்து, பின்னூட்டமளித்துவிட்டேன்.

      நன்றி

      Delete
  11. பின்னால் களைப்பாய் நடந்து வந்த என் அம்மாவை பார்த்து, பயணச்சீட்டை சரிபார்த்து கொடுத்த தமிழ் அதிகாரி கூற, " இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே ! " என்பதை அன்று அனுபவமாக உணர்ந்தேன் ! என் அம்மாவின் கண்களிலோ கண்ணீர் திரை ! பாரீஸ் சர்வதேச விமான நிலையத்தில் தமிழ் அலுவலர்கள் சகஜம் என்றாலும், பணி நேரத்தில் அவர்கள் தமிழில் பேசுவது அபூர்வம் !! இறுக்கமான தருணங்களின் போது தாய் மொழியில் கேட்கும் சில வார்த்தைகள்கூட மனதை நெகிழ்த்திவிடும் என்பதற்கு உதாரணமாக அமைந்துவிட்டது அந்த அன்பரின் வார்த்தைகள்.//

    மனதைத்தொட்ட வரிகள்! இது மட்டுமல்ல தங்கள் ஒவ்வொரு பத்தியும் படிக்க படிக்க பல எண்ண ஓட்டங்கள் மனதில்....தாயகம் பிரிந்து வாழும் மக்களின் உணர்வுகள் அலை மோதின. அழாகான விவரணம்....இறுதியாகச் சொன்ன அந்த ப்ஃப்ரெஞ்சுப் பெண்ணிமணியின் வார்த்தைகள்....புரிகின்றது தங்கள் உணர்வுகள்.

    விடுமுறை முடிந்து மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியாயிற்றோ! தொடர்கின்றோம்!

    ReplyDelete
    Replies
    1. மிக சிறப்பான உரைநடை கட்டுரைகளை படைக்கும் நீங்கள் எனது பதிவுகளை தொடர்ந்து படித்து பின்னூட்டமிடுவது எனக்கு பெரும் ஊக்கம்.

      ஆமாம் விடுமுறையை மிக மகிழ்ச்சியாக
      கழித்தாயிற்று... இனி புத்துணர்வுடன் தொடர்வோம் !

      நன்றி

      Delete
  12. நலமா?! :) கவலை வேண்டாம்... நான் இந்தியாவுக்குள்ளேயே அப்படி அன்னியமாக உணர்ந்திருக்கிறேன்... வடக்கிலும், சமயங்களில் தெற்கிலும்! சில பொழுதுகளில் தமிழ்நாட்டினுள்ளும் கூட! :D

    ReplyDelete
    Replies
    1. கார்த்திக்,

      அந்நிய உணர்வினை பற்றி எழுதும் போது சொந்த தேசத்திலேயே மாநிலம்விட்டு மாநிலம் மாறும்போது அந்நியமாகதானே உணருகிறோம் என நான் நினைத்ததை அப்படியே பின்னூட்டத்தில் கொடுத்துள்ளீர்கள், அதுவும் உங்கள் பாணி " Take it easy " வார்த்தைகளில் !

      நீங்கள் மிகவும் யதார்த்தவாதி என தோன்றுகிறது !

      வலைப்பூவின் மூலம் கிடைத்த நட்புகளில் நீங்கள், நண்பர் "வார்த்தைவிருப்பம்" காரிகன் மற்றும் சகோதரர் " ஊமைக்கனவுகள்" ஜோசப்விஜு ஆகியோரின் பின்னூட்டங்கள் பல நேரங்களில் ஒத்தஎண்ணம் உடைய எனது நீண்ட கால நண்பர்களின் வார்த்தைகளை போன்று அமைந்துவிடுவது ஆச்சரியம்.

      நன்றி

      Delete
    2. @கார்த்திக் தல மொதல்ல பெங்களூருவ விட்டு இந்தாண்ட வாங்க :-)

      Delete
  13. அன்புள்ள அய்யா,

    வணக்கம்.

    தங்களுக்கெல்லாம் விமானப் பயணம் அலுப்பான விசயம். சமான்யனான எங்களுக்கெல்லாம் அது வியப்பான விசயம். ஒரே ஒரு முறை சமீபத்தில் கோவாவில் இருந்து சென்னை வமானத்தில் பயணம் செய்து பார்க்க வேண்டும் என்ற அனுபவத்திற்காக விமானத்தில் வந்தேன்.

    நாங்கள் டெல்லி சென்ற பொழுது யாராவது தமிழில் பேசினால் நம் தமிழர்கள் என அவர்களின் பேச்சைக் கேட்டு மிகுந்த பெருமிதம் கொண்டோம். அப்பொழுது இட்லி தோசை நமது தென்னிந்திய உணகம் எங்காவது இருக்காத என்று தேடி அலைந்து கிடைத்தால் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை, அதைப் போல தாங்கள் தமிழ் அதிகாரியின் தேன் தமிழ்ப் பேச்சு கேட்டதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தது போல இருந்திருக்கும் என எண்ணிக் கொண்டேன்.


    ஓரிரு வருடங்களுக்கு ஒரு முறை தாங்கள் வரும் போது தாய் மண்ணில் மீது தனியாத தாகம்... தாய் மண்ணிற்கே திரும்பி விடலாம் என்ற தங்களின் உண்மையான ஏக்கம்...இதயத்தின் சுகவேதனை தெரிகிறது.

    காரைக்காலில்...தங்களின் கால் பதித்தலைந்த பழங்கால நிகழ்வுகள் தங்கள் நெஞ்சில் நீங்காமல் நிலைத்து நிற்கும் என்பதில் அய்யமில்லை.

    பிள்ளைகள் பற்றிய மனிநிலை பற்றி ஒரு அருமையாக சொல்லியிருந்தீர்கள்... உங்கள் மூலம் இந்தியாவை அவர்களுக்கு அறிமுகப்டுத்துவது...அவர்களின் பால்ய நினைவுகள்- கல்வி முறை வேறு...அவர்கள் அதைச் சுற்றித்தானே இருப்பார்கள் என்பது நிதர்சனமான உண்மைதான். அதை எண்ணுகிறபோது தங்களின் இதயம் சற்று கணக்கத்தான் செய்யும். தங்கள் பிள்ளைகளும் தமிழ் மண்ணில் பிறந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? (ஏழை நாடாக இருந்தாலும் பரவாயில்லை) என்றே எண்ணுவீர்கள் என்று நினைக்கிறேன். இந்த தேசத்தில் தாங்கள் தாய்ப்பால் குடித்ததைப் போல பிள்ளைகளும் கிட்டி இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கம்...என்னதான் இருந்தாலும் இந்த மண் அவர்களுக்கு புட்டிப்பால் போன்றதுதானே! இருந்தாலும் தாய்ப்பால் போலவே தங்கப் பிள்ளைகளுக்கு ஊட்டியெ வளர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை நிரம்ப உண்டு.

    நன்றி. வளருங்கள் செல்வங்களை ‘தாய் மண்ணே வணக்கமென்று’

    வளர்க்க தந்தைக்கு ...வளர்க்கும் தந்தைக்கு வாழ்த்துகள்.

    manavaijamestamilpandit.blogspot.in
    -மாறாத அன்புடன்,

    மணவை ஜேம்ஸ்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா,

      தங்களின் முதல் வருகைக்கும் மிக விரிவான பின்னூட்டத்துக்கும் நன்றி.

      தங்கள் வலைப்பூவினை கண்டேன்... இனி தொடருவோம் !

      நன்றி

      Delete
    2. அன்புள்ள அய்யா அவர்களுக்கு,
      வணக்கம். எனது வலைப்பூவைக் கண்டு கருத்திடும் படி அன்புடன் அழைக்கிறேன்.
      -manavaijamestamilpandit.blogspot.in
      -மாறாத அன்புடன்,
      மணவை ஜேம்ஸ்.

      Delete
  14. புலம் பெயர்ந்த தமிழர்களின் மன உணர்வினை மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா,

      தங்களின் வார்த்தைகள் பெரும் ஊக்கம்.

      Delete
  15. திரு. வருண் அவர்களின் தளத்திலிருந்து இங்கு வருகிறேன்.
    வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் மன நிலையைப் படம் பிடித்துக் காட்டியது உங்கள் பதிவு.
    ஆனால் உங்கள் மன நிலை உங்கள் நண்பருக்குப் புரிய வாய்ப்பில்லை சார்.அவர் உங்களை சுற்றுலாப் பயணியாகப் பார்த்திருந்தால் கண்டிப்பாக உரிமையோடு உங்களுடன் விவாதித்திருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.

    மேலோட்டமாகப் பார்த்தால் நீங்கள் சொன்னது உண்மை என்றே தோன்றும். அனால் அதன் அர்த்தம் வேறாக இருந்திருக்கலாம் என்பது கணிப்பு.

    " இப்படி எங்களை விட்டு விட்டு எங்கோ தூர தேசத்தில் கஷ்டப் படுகிறாயே ? "
    " இங்கிருக்கும் குறைபாடுகளை எல்லோருமாக சேர்ந்து களைந்து விடலாம் என்றால் ஒரே மாதத்தில் ஊர் திரும்புகிறேன் என்கிறாயே?"
    " உன்னைப் பார்க்க இன்னும் ஒரு வருடமோ, இருவருடமோ நான் காத்திருக்க வேண்டியிருக்குமே "
    அடுக்கிக் கொண்டே போகலாம். ஒற்றை வரியில் சொல்வதானால் உங்கள் நண்பர் உங்களை மிஸ் செய்கிறார் என்றே சொல்வேன்.இந்த ஆதங்ககங்களில் ஒன்றாகவும் இருக்கலாமே ! அதன் வெளிப்பாடே இது.உங்களைப் போன்ற NRI கள் யாருமே இந்தியாவில் சுற்றுலாப் பயணி அல்ல, எங்கள் உறவுகள். இம்மண்ணின் மைந்தர்கள் , திரைக் கடலோடி திரவியம் தேட சென்றிருக்கிறீர்கள். அவ்வளவே.

    ReplyDelete
    Replies
    1. அம்மா,

      தங்களின் முதல் வருகைக்கும் மிக ஆழமான கருத்துக்கும் நன்றி.

      என் நண்பனை பொறுத்த வகையில் உங்களின் கருத்து மிக சரி ! அந்த நண்பன் நிச்சயமாய் என்னை சுற்றுலா பயணியாக கருதவில்லை, அவனால் கருதவும் முடியாது ! ஏனென்றால் எல் கே எஜி முதலாய் என்னுடன் பயணிக்கும் ஆத்மார்த்தமான நண்பன் அவன் !

      எனவேதான் " அவன் விளையாட்டாகத்தான் கூறினான் "என குறிப்பிட்டிருந்தேன் ! எனது அந்த அனுபவத்தின் வாயிலாக நான் முன்வைத்தது சமூகத்தின் பொதுவான கண்ணோட்டத்தைதான். " திரைகடல் ஓடி திரவியம் " தேடுபவர்கள் அதிகம் உள்ள ஊர்களில் " நீங்க ஒரு மாசம் வந்து ஆடிட்டு போயிடறீங்க ! " என்ற அலுப்பு இருப்பது உண்மை ! ஆனால் அதற்கு காரணம் எங்களில் சிலர் நடந்துகொள்ளும் முறையும் தான் என்பதையும் நான் மறுப்பதற்கில்லை.

      ஊரிலிருக்கும் ஒரு மாத காலத்துக்கு சட்டை பளபளக்க, செண்ட்ட் மணமணக்க, " வெற்றிக்கொடி கட்டு " வடிவேலு போல " ஒட்டக பால் டீ " என்றெல்லாம் சலம்பும் NRIகளும் ஒரு காரணம் !

      மேலும் நான் கூறிய " புலம் பெயர்ந்தவர்களில் " திரவியம் தேடுவதற்காக வெளிநாடு வந்தவர்களையும் தாண்டி, அகதிகளாய் தாய்தேசம் துறந்தவர்களும் அடக்கம். அவர்கள் தங்கள் தாயகத்தில் சந்திக்கும் புறக்கணிப்பையும் சேர்த்தேதான் குறிப்பிட்டிருக்கிறேன்.

      தொடர்ந்து வருகை தாருங்கள்.
      நன்றி




      Delete
  16. உங்களின் தொடர் வருகைக்கும், வலைப்பூ அறிமுகங்களுக்கும் நன்றி

    ReplyDelete
  17. //உலகின் மிக பாதுகாப்பான இடமாக தோன்றும்// இந்த எழுத்தை முதலில் மிக சாதாரணமாகக் கடந்தாலும் பதிவின் இறுதியில் நீங்கள் கூறியதன் விஷயத்தை உணரும் போது இதன் ஆழத்தை உணர முடிகிறது... சுகமாக வாசிக்கும்படி எழுதுகிறீர்கள் சார்... :-)

    ReplyDelete
    Replies
    1. உங்களின் பாராட்டுக்கு நன்றி நண்பரே. தொடர்ந்து வருகை தாருங்கள்.

      Delete
  18. வெளிநாடு என்றில்லை... சொந்த ஊர் தாண்டி வெளியூர் வந்துவிட்டாலும் இதே நிலை தான்... 2001இல் தமிழ் நாட்டை விட்டு வெளியேறியாகி விட்டது... பின் வருடத்துக்கு ஒரு முறைதான் சொந்த ஊர்... அதுல என்ன இருக்கு, நெனைச்சா கிளம்பிடலாம் என்று சொல்லலாம்... ஆனால், முடிவதில்லை... அலுவல் ரீதியாகவோ, பெர்செனலாகவோ ஆயிரம் ifs and buts கிளம்பும்...

    ஹ்ம்ம்... உங்களுக்கு பிரான்ஸ் என்றால் எனக்கு மும்பை...

    ReplyDelete
    Replies
    1. நண்பரே,

      " நான் இந்தியாவுக்குள்ளேயே அப்படி அன்னியமாக உணர்ந்திருக்கிறேன்... வடக்கிலும், சமயங்களில் தெற்கிலும்! சில பொழுதுகளில் தமிழ்நாட்டினுள்ளும் கூட! "

      என பதிவு செய்த கார்த்திக் சோமலிங்காவின் ஆதங்கம் உங்கள் வார்த்தைகளிலும் ! உலகின் எந்த தேசத்தவருக்கும் மற்ற நாடுகளே அந்நியமாய் அமையும். தென் தேசத்தின் பல்வேறு பகுதிகளிலேயே அந்நியமாய் நடத்தப்படும், உணரும் மனிதன் இந்தியன் மட்டும்தான் என தோன்றுகிறது !

      தங்களின் கருத்துக்கு நன்றி

      Delete
  19. சாம்: நீங்க இந்தியாவை ரொம்பவே மிஸ் பண்ணுறீங்கனுதான் தோணுது. ஒவ்வொரு வரியும் உங்கள் உள்ளுணர்வை எதர்த்தமாக வெளிப்படுத்துவதால் நீங்கள் ஒரு திறந்த புத்தகம்தான். உண்மையைச் சொன்னால நான் உங்களவுக்கு மிஸ் பண்ணவில்லைனுதான் சொல்லணும்.

    ******இரண்டு நாட்களுக்கு முன்னர் பாரீஸ் மெட்ரோ ரயிலில் ஏறும் அவசரத்தில் ஒரு பிரெஞ்சு மூதாட்டியின் காலை தெரியாமல் மிதித்துவிட்டு, உடனடியாக மன்னிப்பும் கேட்டேன்.

    " ஆமாம் ! பிரான்சில் எங்களை போன்ற உண்மையான பிரெஞ்சு மக்களுக்கு பேசும் உரிமை கூட போய்விட்டது ! "****


    பிரஞ்சு மூதாட்டிக்கு என்ன பிரச்சினையோ. அவள் வளர்ந்தபோது நம்மைபோல், கறுப்பர்களை, பார்த்தே இருக்கமாட்டார். பொதுவாக பெரியவர்கள் கண்சர்வேட்டிவாகவும், இளையவர்கள் திறந்த மனதுள்ளவர்களாக்வும்தான் இருக்கிறார்கள். அதில் வெள்ளைக்காரகளும் விதிவிலக்கு இல்லை!

    ஒரு முறை.. நம் தாய் மண்ணில் நடந்த ஒன்றை நியாபகப்படுத்துறேன்..

    மதுரையைச் சுத்தி உள்ள கிரமாத்தைக் கடந்து போகும் "டவுன்/சிட்டி பஸ்ஸில்" ஒரு கல்லூரி மாணவன், கூட்டமாக உள்ள பஸ்ஸில் ஏறி உள் நுழையும்போது, அவன் கால்மிதி ஒரு கிராமப் பெரியவர் மேல் பட்டுவிட்டது. "தெரியாமல் பட்டுவிட்டது, மன்னிச்சுக்கோங்க"னு அவரிடம் அவன் மன்னிப்பு கேட்டான்.

    உடனே கிராமப் பெரியவர்.. "படும்! பேண்ட் ஷூட் போட்டால் உங்களுக்கெல்லாம் கண்ணு தெரியாது இல்லை? படிச்சுட்டனு திமிரு"னு சொல்லம்புகளுடன் ஒரு முறைப்பு! அந்த மாணவனுக்கு அந்தப் பெரியவர் "ரியாக்ஷன்"க்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை!

    இதுவும் நம் தாய் மண்தான்! நம்முடன் வாழும்/வாழ்ந்த பெரியவர்தான் இவரும்! ஆனால் தாய்மண்ணில் நடப்பதால் இதெல்லாம் நமக்குப் பெரிதாகத் தோணாது. கோழி மிதிச்சா குஞ்சி செத்துடும்னு பழமொழி பேசிட்டுப் போயிடுவோம்!

    When worst things happens to me in foreign nation, I have a habit of recalling worst things I have seen happened to others around me when I lived in India and convince myself that there is a "spectrum of people" everywhere. :-)

    ---------------

    BTW, Are you familiar with "pdalangai" a nick name used by a "internet forumer"?? Your "picture identity" reminds me of him! If you are "clueless", just let it go! Thanks

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வருண்,

      உங்களின் பாராபட்சமற்ற, நிதர்சணமான, துணிச்சலான பதிவுகள் என்னை மிகவும் கவர்ந்தவை. மற்ற வளைப்பூக்களிலும் அதே துணிச்சலுடன் நீங்கள் பதியும் கருத்துகளையும் ரசித்திருக்கிறேன் !

      உங்களின் தொடர்வருகைக்கும், அதையும் தாண்டி எனது பதிவுகளை நீங்கள் உங்கள் வலைதளாத்தில் குறிப்பிடுவதற்க்கும் நன்றிகள் பல.

      நான் இந்தியாவை மிஸ் பண்ணுகிறேன் என்பது உண்மைதான் வருண் ! தேசப்பற்று என்பதே ஒருவிதமான சுயநலம்தான் என்பது புரிந்திருந்தாலும் (!) ( ஜெ. கிருஸ்ணமூர்த்தியை நிச்சயமாய் நீங்கள் வாசித்திருப்பீர்கள் என தோன்றுகிறது ) பிறந்த தேசத்தின் மீதான பற்று எனக்கு சற்று அதிகம்தான் ! அடியாழம் வரை புரையோடிப்போன ஜாதி வெறியையும், மத துவேசத்தையும் அந்த தேசத்திலிருந்து ஒரே இரவில் விரட்டிவிட துடிக்கும் கோபம் என்னுள் உள்ளது !

      " பொதுவாக பெரியவர்கள் கண்சர்வேட்டிவாகவும், இளையவர்கள் திறந்த மனதுள்ளவர்களாக்வும்தான் இருக்கிறார்கள். "

      உங்களின் வரிகளை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன் வருண் ! உண்மை ! அதனால்தான் இந்த பதிவில் இனவெறி என்ற வார்த்தையை குறிப்பிடவில்லை நான்.

      " தாய்மண்ணில் நடப்பதால் இதெல்லாம் நமக்குப் பெரிதாகத் தோணாது. கோழி மிதிச்சா குஞ்சி செத்துடும்னு பழமொழி பேசிட்டுப் போயிடுவோம்! "

      " When worst things happens to me in foreign nation, I have a habit of recalling worst things I have seen happened to others around me when I lived in India ... "

      இதுவும் சரிதான் ! ஒன்று தோன்றுகிறது... மதங்களின் பெயரிலும், ஜாதிகளின் அடுக்கிலும் சக தேசத்தவர்களையே நிறுத்தி நாள்தோறும் இனப்பாகுபாடு பார்க்கும் இந்தியர்களுக்கு மற்ற நாட்டின் இனவெறி பற்றி பேசுவதற்கு கூட தார்மீக உரிமை இல்லை என்றே தோன்றுகிறது !

      No, i am not familiar with that " pudalangai ", My picture identity is a cartoon caracter " the commonman " created by the famous cartoonist R.K.Lakshman... சமூக அவலங்களையும், அரசியல் கோமாளித்தனங்களையும் தோலுரிக்கும் அவரின் கேலிச்சித்திரங்கள் அனைத்திலும், நாட்டில் நடக்கும் கூத்துகள் அனைத்தையும் மெளனசாட்சியாய் பார்த்துக்கொண்டிருப்பார் ஓட்டு போட மட்டுமே உரிமையுள்ள இந்த மிஸ்டர். காமன்மேன் !!!

      அப்பப்ப நமக்கு முருங்கைக்காய் ஜோக்ஸ் வருமே தவிர புடலங்காயை தெரியாது வருண் !

      நன்றிகள் பல.


      Delete
  20. ***BTW, Are you familiar with ***"pdalangai" ***a nick name used by a "internet forumer"??**

    Should read as ***"podalangai"!*** :)

    ReplyDelete
  21. தாய் மண்ணை விட்டுப் புலம்பெயர்ந்தவர்கள் நிலைமை இப்படித்தான். இங்கே நாம் வேறு நாட்டவர், அதுபோல் எங்கள் தேசத்திலும் நாங்கள் வேறு நாட்டவர். அங்கு ஏதும் பேசினால் நீங்கள் இப்போது வந்து இப்படிக் கதைக்கின்றீர்கள் என்பார்கள். இவ்வாறான நிலைமை ...
    நமது சமூகத்தின் சீரழிவுகள், குறைகள் பற்றியே கழுவி கழுவி ஊற்றிக்கொண்டிருக்கிறோமே, அந்த குவளையில் குடிக்க ஒன்றுமே இல்லையா ?! தமிழ் சமூகத்தில், தமிழனிடத்தில் பாராட்டத்தக்கது எதுவுமே கிடையாதா என்றெல்லாம் எண்ணங்கள் ! அற்புதம்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி.

      நம்மிடமும் நல்லவை இருக்கின்றன... அடுத்த பதிவை தவறவிட்டுவிடாதீர்கள் !

      Delete
  22. விருது பகிர்ந்துள்ளேன் மனமுவந்து ஏற்று கொள்ளுங்கள் சகோ. வந்து கருத்து இடுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தழறிந்தவர்களுடன் என்னையும் நிறுத்தி பெருமைபடுத்திவிட்டீர்கள். பெற்றுக்கொண்டு ஏற்புரையும் எழுதிவிட்டேன் !

      நன்றி

      Delete
  23. வலைச்சரத்தில் அறிமுகம், உங்கள் கட்டுரையின் நடை அழகுக்கு பெருமை. வாழ்த்துகள்.

    sattia vingadassamy

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் பல.

      Delete
  24. தாமதமாகப் படிப்பதில் ஒரு சுகம் இருக்கிறது அனைவரின் கருத்துகளையும் அறிந்து உங்களின் பதிலையும் கண்டு ...
    முழுமையான புரிதலுடன்

    நல்லா கீது தொடர்க என்று நாலு வார்த்தையில் போட்டால் ...
    நல்லவா இருக்கும்

    பொதுவாக எம்.ஜி.ஆர் பாடல்களை கேட்கையில் எனது அம்மாசியின் அன்பு நினைவில் வரும்...
    ஆராதனா கேட்கையில் அப்பாவின் ரசனை நினைவில் வரும்

    பாடல்கள் இசையில் ஒரு கால யந்திரத்தை பொதித்து வைத்திருப்பதை உணர்ந்திருக்கிறேன் ...
    உங்கள் பதிவில் ஜீவன் அழைத்த உடன் வந்த சீருடை மாணவர் ...

    நான் உணர்ந்த அடிக்கடி அனுபவிக்கும் விசயம் அது...

    தொடர்ந்து கலக்குங்கள் ...

    ReplyDelete
    Replies
    1. //பாடல்கள் இசையில் ஒரு கால யந்திரத்தை பொதித்து வைத்திருப்பதை உணர்ந்திருக்கிறேன் ....//
      எப்படித்தான் இப்படிப் பின்னூட்டம் இடுகறீர்களோ தோழர்!
      நன்றி

      Delete
    2. " வாசிப்பில் மட்டும் எந்த சூழலிலும் இயந்திரத்தனம் கூடாது ! அப்படி நேரும் சமயத்தில் வாசிப்பதை நிறுத்திடல் நன்று ! "

      இனி நான் கடைபிடிக்கபோகும் இந்த நீதி என் புத்தியில் உதிக்க காரணம் உங்களின் பின்னூட்டம் சகோதரரே !


      " பாடல்கள் இசையில் ஒரு கால யந்திரத்தை பொதித்து வைத்திருப்பதை உணர்ந்திருக்கிறேன் ... "

      வரிகளின் ஆழத்தை உணராமல் தாவிப்போனதை எண்ணி வெட்கப்படுகிறேன் ! அதே நேரத்தில் தம்பியுடையான் படைக்கு மட்டுமல்ல, தவறுகள் நேரும்போதுகூட அஞ்சவேண்டியதில்லை என்பதை நினைத்து பெருமையும் படுகிறேன் ! திருத்த தம்பி இருக்கிறார் இல்லையா ?

      மிகமிக நன்றி !

      Delete
  25. எனது பதிவை ஆழ்ந்து படித்து அனுபவபூர்வமாக உணர்ந்து எழுதிய கருத்துக்கு நன்றி.

    உங்களின் " விடுதலை வேள்வியில் வீரத்தமிழர்கள் " வரலாற்று பொக்கிசம். விடுமுறைக்கு பின்னான பரபர அலுவல்களினால் அதிகம் வரமுடியவில்லை.

    இனி தொடருவோம் !

    நன்றி

    ReplyDelete
  26. சிறு சிறு ஆதங்க வரிகள் மனதிற்கு நெகிழ்ச்சியாய்... ம்... மதுரையில் சந்திப்போம்(மா?)...

    ReplyDelete
  27. நன்றி சார் ! ... இந்த முறை நிச்சயம் சாத்தியப்படாது...

    ReplyDelete
  28. மனதின் ஆதங்கத்தையும் நினைவுகள் தாய் தேசத்தின் மீதான தேடலையும் அழகாய் சொல்லி இருக்கின்றீர்கள் தொடர்ந்து எழுதுங்கோ ஐயா!

    ReplyDelete
  29. உங்கள் முதல் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி ! தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  30. வணக்கம்!
    இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
    வாழ்த்துக்கள்!
    ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!
    திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
    பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
    படைப்புகள் யாவும்.

    நட்புடன்,
    புதுவை வேலு,
    www.kuzhalinnisai.blogspot.com


    ReplyDelete