Sunday, January 3, 2016

மனிதம் மலரட்டும் !

மனிதநேயத்தில் நம்பிக்கை இழந்து விடாதீர்கள். மனிதநேயம் ஒரு சமுத்திரம். சமுத்திரத்தின் சில துளிகள் மாசுபடுவதால் சமுத்திரம் என்றும் மாசடைந்துவிடாது.  - மகாத்மா காந்தி



" இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு சிசுவும் இறைவன் மனித இனத்தை கைவிடவில்லை 

என்பதற்கான சாட்சி "   - ரவீந்திரநாத் தாகூர்


காரைக்காலின் காமராஜர் சாலை... விடியலுக்கும் இரவுக்கும் இடையே மத்திய ரேகையாய் கவிழும் மாலை மறையும் பொழுது...

மொட்டையடிக்கப்பட்டு கோரையாய் முடி வளரத்தொடங்கிய தலை ! எந்த உணர்ச்சியும் இன்றி, இல்லாத இலக்கு ஒன்றை விட்டேத்தியாய் வெறிக்கும் பார்வை ! கால்முட்டிவரை நீண்ட, அழுக்கேறி கிழிந்த சட்டை !  தெருவிளக்குகள் இன்னும் எரியத்தொடங்காத மங்கிய வெளிச்சத்தில், தெருவோரத்தில் தள்ளாட்டமாய் நடக்கும் பெண். அவளுக்கு பின்னே,  அதே கோலத்தில்  மழலை மாறாத இரண்டு குழந்தைகள்.

அவ்வப்போது சாலையோர மண் பரப்பிலிருந்து அவளும் அவள் குழந்தைகளும் சாலையின் தார் பரப்பினுள் தள்ளாட்டமாய் நுழையும் போதெல்லாம் க்ரீச்சிட்டு, ஹாரன் அலறும் வாகனங்கள்... அவ்வாகன ஓட்டிகளின் வசவு வார்த்தைகள் !

தன்னை பின் தொடரும் பிள்ளைகள் பற்றியோ அல்லது தன்னை நோக்கி காற்றில் தெரிக்கும் வசவு வார்த்தைகள் பற்றியோ எந்த பிரக்ஜையும் இன்றி சாவகாசமாய் சாலையோரம் நகரும் சேறு படிந்த கால்கள் !

அவளுக்கு எதிர்புறம் விரைந்துகொண்டிருந்த நான், பக்கத்திலிருந்த பெட்டிக்கடையில் இரண்டு பிஸ்கெட் பாக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு அவரவர் அவசரத்துடன் பறக்கும் வாகனசாரிகளின் உக்கிர பார்வைகளுக்கிடையே வண்டியை திருப்பிக்கொண்டு வருவதற்குள் நீண்ட தூரம் நடந்து மூடப்பட்ட ஒரு கடை வாசலில் குழந்தைகளுடன் ஒதுங்கியிருந்தாள் ! நான் நீட்டிய பிஸ்கெட் பாக்கெட்டுகளை வாங்கியவளின் கண்களில் மனிதனை மற்ற உயிரிகளிடமிருந்து வேறுபடுத்தும் ஆறாவது அறிவு சார்ந்த எந்த உணர்ச்சியும் இல்லை !

மனித இனத்தின் இருட்டு பக்கத்தை வெளிச்சமிடும் இவளைப்போன்ற பெண்கள் தேச எல்லைகள் தாண்டி உலகில் எங்கு வேண்டுமானாலும் தென்படுவார்கள் !


பொருளாதார ரீதியாய் மிகவும் பின் தங்கிய ஐரோப்பிய நாடு ருமேனியா. மற்ற ஐரோப்பிய நாடுகளின்  தெருவோரங்களில் ருமேனியா நாட்டினர்  பிச்சை கேட்பது  சகஜம் !

ஒருமுறை என் பணியிடத்துக்கு அருகேயிருந்த கடை வாசலில் அமர்ந்து பிச்சையெடுத்துகொண்டிருந்தாள் ஒரு ருமானிய மூதாட்டி. பிரெஞ்சு மனிதர் ஒருவர் அவளை நெருங்கினார்...

அவரது கையில் " பக்கேத் " எனப்படும் நீண்ட ரொட்டி.

தனக்கு கொடுக்க வருகிறார் என்ற ஆவலுடன் அவள் இரு கைகளையும் ஏந்தினாள்... அவளது உதடுகள் " மெர்ஸி... மெர்ஸி " என பிரெஞ்சு மொழியில் நன்றியை முனுமுனுத்தன...

" பிச்சை எடுக்க உனக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா ?... உடனடியாக இங்கிருந்து போ ! இல்லையெனில் போலீஸாரை அழைக்கவேண்டி வரும் ! "

நீண்ட ரொட்டியை கம்பினை போல அவளது முகத்துக்கு நேராக ஆட்டி மிரட்டிவிட்டு நகர்ந்தார் அந்த கணவான் !

உலகம் முழுமைக்கும் " நாகரீகமும், ஜனநாயகமும் " உபதேசிக்கும் பிரெஞ்சு தலைநகரத்தில் இப்போதெல்லாம் " தர்மம் " கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது ! மெட்ரோ ரயில்களில் ருமானிய தாய்மார்களுடன் அவர்களது பிஞ்சு குழந்தைகளும் கைகளை நீட்டுகின்றன ! அதிவேக சாலைகள் முடிவடையும் பாரீஸ் நகரின் எல்லை சிக்னல்களில் சிரியா அகதிகள் என்று எழுதிய அட்டைகளுடன் குடும்பங்கள் நிற்கின்றன !

" காப்21 " சுற்றுசூழல் மாநாட்டுக்கு வந்த நூற்றி நாற்பத்து சொச்சம் உலக தலைவர்கள் ஒருவரின் கண்களில் கூட இவர்கள் பட்டிருக்கமாட்டார்கள் !!!

டிக்கடி கண்ணில் படும் ஒரு பெண்மணி... தனக்குத்தானே பேசிக்கொள்ள ஆரம்பித்தார்... உடல் சுகாதாரம் பேணுவது குறைந்தது... உடைகளில் அழுக்கேற ஆரம்பித்தது... இப்போது கடும் குளிரிலும் தெருவோரங்களில் தூங்குகிறார் !

றந்த யானைக்கு சக யானைகள் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்துகின்றன ! காகங்கள் கூட பறக்க முடியாமல் தவிக்கும் காக்கையை சுற்றி வட்டமிட்டு பறந்து, கரைந்து பாதுகாக்க முயற்சிக்கின்றன்...

கண்ணெதிரே மனதாலும் உடலாலும் சோர்ந்து, அணுஅணுவாய் உருக்குலையும் சக மனிதனுக்கு உதவ முடியாத மனிதனின் விஞ்ஞான வளர்ச்சியினால், நாகரீக வாழ்க்கையினால் என்ன பலன் ? சக உயிரிக்கு பாசக்கரம் நீட்ட முடியாதவன் நிச்சயப்படுத்த முடியாத வேற்று கிரக உயிர்களுக்கு நேசக்கரம் நீட்டி சமிக்ஜை அனுப்புகிறான் !

மனித குலத்தின் தலையாய குணமாய் திகழ வேண்டிய மனிதம், அவர்கள் அழியும் பேரிடர்களிலும், போர் இழப்புகளிலும் மட்டுமே சேற்றுச் செந்தாமரையாய் தலை தூக்குகிறது !

ஒரு கனிவான பார்வை, ஒரு தொடுதல், சில இதமான வார்த்தைகள், ஆத்மார்த்தமான அரவணைப்பு, சிற்சில உதவிகள் என்ற எளிமையான விளக்கத்துக்குள் அடங்கிவிடும் மனிதம் நாம் பெருமையுடன் பாதுகாக்கும் ஐ போனை விடவும் விலை குறைந்ததுதான் ! நேசிக்க தெரிந்த எந்த நெஞ்சத்திலும் இலவசமாகவே பீரிடும் !

கிறிஸ்துமஸ் தினத்தன்று வேலை முடித்து வேகமாக கிளம்பிக்கொண்டிருந்தாள் என்னுடன் பணிபுரியும் ஒரு பெண்...

" குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாட போகும் அவசரமா ?!... "

" இந்த வருடம் பிள்ளையை என் கணவனுடன் அவனது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பிவிட்டேன்... நானும் என் தோழிகளும் இன்று இரவு முழுவதும் நகரின் தெருக்களில் உறங்குபவர்களுக்கு இலவச உணவு வழங்க போகிறோம் ! "

எனது பதிலுக்கு காத்திருக்காமல் சட்டென வெளியேறிவிட்டாள் !

இந்த பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட பெண்ணை போலவே இவளுக்கும் தேச எல்லைகள் கிடையாது... சென்னை மாநகரை அரவணைத்த அதே மனிதம்தான் பாரீஸ் நகரத்தின் தெருவாசிகளுக்கும் உணவளிக்கிறது !

இப்புத்தாண்டில் மனிதம் தழைக்க வேண்டுவோம் ! வலைநட்புகளுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !


பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

32 comments:

  1. புத்தாண்டில் மனிதம் தழைக்கட்டும்
    புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  2. உண்மைதான் நண்பரே! மனிதம் மரித்துவிடவில்லை! ஆங்காங்கே துளிர்த்துக் கொண்டுதான் இருக்கிறது! துளிர்த்து தழைக்கட்டும்! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. மனித நேயத்தின் மாண்பினை
    சமீபத்தில் நமக்கு உணர்த்தியது
    இயற்கை என்னும் இறைவனே!

    இவ்வளவு கொடுமையானவரா? இயற்கை என்னும் இறைவன் என்றே எனது உள்மனது உளறிக் கொட்டியது?
    இல்லை.... இல்லை... நல்லவர்களை அடையாளம் காணவே இந்த அடைமழை?
    பிழைக்கு காரணத்தை அறிய ? ஓர் சந்தர்ப்பம்?
    தெரிந்தது எத்தனை எத்தனை நல்ல உள்ளங்கள்,
    உயிரை பொருட்படுத்தாது அவர்கள் செய்த தியாகங்கள்தான் என்ன?
    நன்றி சொல்லே! அவர்களூக்காக அல்லவா பிறந்திருக்க வேண்டும் என்று எண்ணியதுண்டு.
    பிறப்பின் பயனை நமக்கு கற்றுத் தந்த "தன்னார்வலர்களை" தலையில் வைத்து தாங்க வேண்டும்.
    அருமையான பதிவுதனை புத்தாண்டில் பூக்கச் செய்து இருக்கிறீர்கள் நண்பரே?
    மனித நேயம் மரித்துவிட வில்லை!!!
    புனிதம் என்னும்பூக்களாக!
    மனிதம் மலரட்டும்
    தங்களைப் போன்ற பதிவாளர்களூம்
    இதுபோன்ற இரக்கத்தை பண்புமிகு பதிவாக படைப்பதால்
    மனித நேயம் என்னும் மலராகவே,
    எனது விழிகள் தங்களைக் காண்கிறது.
    சிறப்பு!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  4. //ஒரு கனிவான பார்வை, ஒரு தொடுதல், சில இதமான வார்த்தைகள், ஆத்மார்த்தமான அரவணைப்பு, சிற்சில உதவிகள் என்ற எளிமையான விளக்கத்துக்குள் அடங்கிவிடும் மனிதம் நாம் பெருமையுடன் பாதுகாக்கும் ஐ போனை விடவும் விலை குறைந்ததுதான் ! நேசிக்க தெரிந்த எந்த நெஞ்சத்திலும் இலவசமாகவே பீரிடும் !//

    மிக அருமை!!

    தரமான எழுத்தின் மூலம் கூட விழிப்புனர்ச்சியினை பல மனங்களுக்குள் ஏற்படுத்த முடியும்! அதில் ஏன் இத்தனை இடைவெளி!! அடிக்கடி இந்த மாதிரி நல்ல சிந்தனைகளை வெளியிடுங்கள்!!

    ReplyDelete
  5. அன்புள்ள அய்யா,

    எல்லா இடத்திலும் இல்லாதவர் இருக்கிறார்கள்...!

    எல்லாம் இருப்பவர்களுக்கு உதவும் உள்ளம் வருவதென்பது

    எல்லாருக்கும் வந்துவிடுவதில்லை...!

    பசித்தவன் புசிக்க அந்த வேளையிலேயே உதவ வேண்டும்...!

    பசியோடு இருப்பவனுக்கே அந்தக் கொடுமை தெரியும்...!

    ‘பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்...’

    காலத்தே அவனுக்கு உதவி செய்வதே மனிதம்...!

    மழை வெள்ளத்தில் எத்தனை உயிரையெடுத்து

    மனிதம் வளர விதையை விதைத்துச் சென்றது இயற்கை...!

    சுயநலம் தொழைந்தால் மனிதம் தழைக்கும்...!

    ‘எதைக் கொண்டு வந்தாய் எதை இழப்பதற்கு...?’

    நன்றி.

    ReplyDelete
  6. அன்புள்ள அய்யா,

    சுயநலம் தொலைந்தால் மனிதம் தழைக்கும்...!

    ‘எதைக் கொண்டு வந்தாய் எதை இழப்பதற்கு...?’

    பிழையாக தட்டச்சு செய்து விட்டேன். மன்னிக்கவும்.

    ReplyDelete
  7. //ஒரு கனிவான பார்வை, ஒரு தொடுதல், சில இதமான வார்த்தைகள், ஆத்மார்த்தமான அரவணைப்பு, சிற்சில உதவிகள் என்ற எளிமையான விளக்கத்துக்குள் அடங்கிவிடும் மனிதம் நாம் பெருமையுடன் பாதுகாக்கும் ஐ போனை விடவும் விலை குறைந்ததுதான் ! நேசிக்க தெரிந்த எந்த நெஞ்சத்திலும் இலவசமாகவே பீரிடும் !//

    ஆஹா! என்ன ஒரு அருமையான சிந்தனை! கருத்து! உண்மைதானே! அருமையான பதிவு. அப்படியே தெளிந்த நீரோடை போலத தவழ்ந்துவந்து கைகளையும் கால்களையும் தழுவிச் சென்றது மனிதத்துடன்!!

    புத்தாண்டிலும் மனிதம் தழைக்கட்டும்.

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! நண்பரே!

    ReplyDelete
  8. சக உயிரிக்கு பாசக்கரம் நீட்ட முடியாதவன் நிச்சயப்படுத்த முடியாத வேற்று கிரக உயிர்களுக்கு நேசக்கரம் நீட்டி சமிக்ஜை அனுப்புகிறான் !
    உண்மை தான் சாம்! தன்னைச் சுற்றியிருக்கும் சக மனிதர்களிடம் நட்பு பாராட்டாமல் பாராமுகமான இருப்பவன், முக நூலில் முகம் தெரியாத யாரோ சிலரிடம் நட்பு கொள்ளத் துடிக்கிறான்! கிறிஸ்துமஸ் அன்று குடும்பத்துடன் விழா கொண்டாட நினைக்காமல், தோழிகளுடன் தெருவாசிகளுக்கு உணவளிக்கச் சென்ற பெண்ணின் செயல் மனதைத் தொட்டது! இப்படிப் பட்ட நல்ல மனிதர்கள் இன்னும் சிலர் இருப்பதால் தான் மனிதம் இன்னும் உயிர்த்திருக்கிறது! தங்களுக்கும் குடும்பத்துக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் சாம்!

    ReplyDelete
  9. ஒரு கனிவான பார்வை, ஒரு தொடுதல், சில இதமான வார்த்தைகள், ஆத்மார்த்தமான அரவணைப்பு, சிற்சில உதவிகள் என்ற எளிமையான விளக்கத்துக்குள் அடங்கிவிடும் மனிதம் நாம் பெருமையுடன் பாதுகாக்கும் ஐ போனை விடவும் விலை குறைந்ததுதான் ! நேசிக்க தெரிந்த எந்த நெஞ்சத்திலும் இலவசமாகவே பீரிடும் ! //
    மிக சரியான வார்த்தைகள் .
    பதிவின் ஒவ்வொரு வார்த்தையும் இதயம் வருடி செல்கின்றன புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. மிகவும் மனதை நெகிழ வைத்த பதிவு, சாம்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இந்த புத்தாண்டில் உடல் நலமும், மன அமைதியையும் வேண்டுகிறேன்.

    ReplyDelete
  11. அருமையான பதிவு...தென்றலென நடை...புதுவையின் வீதிகள் கண்முன் விரிகின்றன....மிகவும் மகிழ்ந்தேன் நண்பரே....

    ReplyDelete
  12. நீங்கள் சொன்னதுபோல் மனித நேயத்திற்கு நாட்டு எல்லைகள் இல்லை. ஒரு சிலர் வேண்டுமானால் இளகிய மனது இல்லாதவர்களாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலோர் நேரம் வரும்போது அதை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை சென்ற மாதம் சென்னையை புரட்டிப்போட்ட வெள்ளம் காண்பித்துவிட்டது.

    புத்தாண்டின் தொடக்கத்தில் ஒரு அருமையான கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி! தங்களுக்கு இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. மனிதம் தழைக்க....சுயநலத்தை தொலைப்போம்............

    ReplyDelete
  14. உள்ளத்தைத் தொடும் உண்மையாக
    உணரப்பட வேண்டிய எண்ணமாக
    'மனித நேயம்!'

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
    இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

    ReplyDelete
  15. நேசிக்க தெரிந்த எந்த நெஞ்சிலும் இலவசமாகவே பிரீடும்,,,,,,

    அழகாக அருமையாக சொல்லியுள்ளீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. முடிவில் தந்த விடயம் அருமை நண்பரே மனிதம் இனியெனினும் தழைக்கட்டும்.
    தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும் 2016 ஆம் புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே....

    ReplyDelete
  17. திக்கற்ற மனிதர்கள் பெருகுவது ,நாகரீக உலகத்துக்கு பெரும் பின்னடைவு .மனிதம் வளர்த்து மாண்புடன் வாழ்வோம் !

    ReplyDelete
  18. மனிதநேயம் போற்றும் கட்டுரை. ஒருவேளை உணவு வாங்கிக் கொடுத்து விடுவதாலேயே ஒரு மனிதனின் வறுமை நீங்கி விடாது. நிரந்தரத் தீர்வு காணவேண்டும்.

    “ஒரு மனிதனுக்கு கொடுக்கப்படும் ஒரு மீன் ஒருநாளைக்கு மட்டும் உணவாகும். ஆனால் அவனுக்கு மீன் பிடிப்பது எப்படி என்று சொல்லிக் கொடுப்பது வாழ்நாள் முழுக்க உணவளிக்கும் “ - (Give a man a fish and you feed him for a day. Teach a man to fish and you feed him for a lifetime.) என்ற சீனப்பழமொழி இங்கு நினைவுக்கு வருகிறது.

    இன்றுதான் உங்கள் கட்டுரையைப் படிக்க முடிந்தது. எனது உளங்கனிந்த புத்தாண்டு – 2016 நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. மனிதம் எவ்வளவு புனிதம் என்பதை அழகாக பதிவிட்டுக் காண்பித்துள்ளீர்கள் . ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாத ஆறுதலை இலேசான தொடுதல் தந்து விடும் என்று எங்கோ வாசித்திருக்கிறேன். நீங்களும் அதை குறிப்பிட்டிருக்கிறீர்கள். பேரிடரில் மட்டுமல்ல ஏதிடரும் இல்லாதபோதும் மனிதம் மலரட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. மனதைத் தொட்ட பதிவு!
    மனிதம் தழைக்கட்டும்!!
    வாழ்த்துகள்!
    .

    ReplyDelete
  21. # கனிவான பார்வை,இதமான வார்த்தை ,ஆத்மார்த்தமான அரவணைப்பு ,சிற்சில உதவிகள் #
    மனிதம் குறித்த நிதர்சனம் தங்கள் பதிவிலே அழகாக தெரிகிறது . நவீன தகவல் தொடர்பு சாதனங்களால் தொலைக்கப்பட்ட மனித த்தை மீட்டுக்கொணர பேரிடர்கள் ஏற்பட வேண்டியிருக்கிறதே என்றென்னும் போது வருத்தமாகத் தானிருக்கிறது .
    பிறந்திருக்கும் புத்தாண்டு புதுப்பொலிவைத் தரட்டும் .
    பகைமை மறந்து மனிதம் மலரட்டும் .
    வறுமை நீங்கி வளம் செழிக்கட்டும்

    ReplyDelete
  22. சில விஷயங்கள் நம் மனதை மயிலிறகாய் வருடிச் செல்லும். அதிலொன்று உங்கள் தோழி கிறிஸ்துமஸ் தினத்தன்று பலருக்கு 'சாண்டா'வாக இருப்பது . உண்மை.! நீங்கள் சொல்வது போல் இவர்களுக்கு தேச எல்லைக் கிடையாது.
    அதே போல் பிச்சைக் காரக்ளும் தேச எல்லைக் கடந்து எங்கும் வியாபிப்பவர்கள் என்பதை எடுத்துக் காட்டியதற்கு நன்றி சாம். இந்தியாவில் மட்டுமே பிச்சைக் கார்கள் இருக்கிறார்கள் என்கிற மாயையை உடைக்கக் உதவும் உங்கள் பதிவு.
    மனிதம் பற்றிய உங்கள் பதிவிற்கு ஒரு சல்யுட்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. சாம்,

    புத்தாண்டில் நாம் எல்லோருமே திடீர் மனிதம் கொண்டவர்களாக மாறிவிடுவோம். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நம் பழைய இயல்பு நம்மை ஆட்கொண்டுவிடும்.

    ஒவ்வொரு புத்தாண்டிலும் இந்த மனிதம் பற்றிய எதிர்ப்பார்ப்பு, வாஞ்சை, ஆசை துளிர் விடுவது இயற்கைதான். அப்படியான பாஸிடிவ் பதிவு எழுதிய உங்களுக்குப் பாராட்டுக்கள். நன்மையையே எண்ணுவோம். பரிசளிப்போம். மாற்றம் நம்மிடம் இருந்தும் வரலாமல்லவா?

    உங்களுக்கு என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. மனிதம் பற்றிய மனதை உலுக்கும் பதிவு..
    இலவசமாக மனதில் பீறுடுவதைத் தடுக்காமல் இருக்கப் பழகுவோம்..அருமை சகோ

    மனிதம் தழைக்கட்டும்! இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சகோ

    ReplyDelete
  25. மனிதம் மரிக்கவில்லை மரிக்காது;மறைந்திருக்கலாம்.நேரத்தில் வெளிப்படும்.அருமை

    ReplyDelete
  26. மனிதம் நிச்ச்சயம் மலர்த்தான் செய்யுது, சாம். ஆனால் என்ன இப்பெரிய உலகில் அது துளியோண்டுதான் மலருது. :( அது நாளுக்கு நாள் அதிகமாக மலர்ந்தால் நன்றே! :)

    ReplyDelete
  27. மனிதம் தழைக்கட்டும் எங்கும் அது நிலைக்கட்டும் நிலைத்து, மயான வைராக்கியம் மாதிரி இல்லாமல்.
    நல்லதோர் பதிவு சகோ வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  28. வணக்கம் அண்ணா.

    உங்களின் பதிவை முதலிலேயே படித்துவிட்டேன். ஆனாலும் பின்னூட்டம் இட முடியவில்லை.

    எல்லாச் சமயங்களும் அன்பை போதிக்கின்றன. இரக்கத்தைப் பரிவை பிற உயிர்கள் மேல் கொள்ளுமாறு சொல்கின்றன.

    ஆனால், தீவிர இறை தாசர்களிடம் கூட இப்பண்பு மழுங்கி இருக்கிறது.

    “ ஏழைக்குச் செய்ததெல்லாம் எனக்கே செய்தாய்” என்பதெல்லாம் அந்தக்காலம்.

    ஏழையாய் இருந்தாலும் எனக்குச் செய் என்பதே இக்காலம்.

    தங்களின் பதிவு, வழக்கம் போலவே நிதானமாயும் ஆழமாயும் அமைந்த சொல்லாடலுடன் வெளிப்பட்டிருக்கிறது.

    அருமை.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    நன்றி.

    ReplyDelete
  29. தாமாதமான... 1) பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும் நண்பரே! 2) இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! எழுதினால் கருத்தாழமிக்க, பயனுள்ள பதிவுகளையே எழுதுவது என்ற கட்டுப்பாடுடன் சிறப்பாக எழுதி வருகிறீர்கள்! இவை போன்ற பதிவுகள் இணையத்தில் வெகு சொற்பமே, நன்றி!

    ReplyDelete
  30. அன்பினும் இனிய நண்பரே
    தங்களுக்கும், தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும்
    இணையில்லாத இன்பத் திருநாளாம்
    "தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  31. மிக நல்ல பதிவு தோழர்

    பத்திரப்படுத்த வேண்டியதும் கூட ...

    அந்த பெண்ணின் பணி உண்மையான இறைப்பணி அல்லவா...
    நெகிழ்வும் மகிழ்வும்
    நன்றி

    ReplyDelete
  32. மனித இனத்தின் இருட்டுப் பக்கத்தில் இருப்பவர் பலர். இளங்கோ ஐயா சொல்வது போல் அவர்களுக்கான நேசம் ஒரு நாள் உணவில் முடிந்துவிடுவதில்லை. வாழ்க்கையை பயணப்பட கற்றுக்கொடுத்தலில் இருக்கிறது. பிச்சை எடுப்பது என்பது பல இட்ங்களில் இயலாமையின் காரணியாய் இல்லாமல் எளிதான காரணியாய் போய்விட்டது. தினமும் சிக்னலில் சந்திக்கும் கண் தெரியா பிச்சையெடுப்பவரும் , அவரின் துணையாய் அழைத்து வரும் இளவயது பெண்ணும், இள வயது பையன் துணையுடன் வரும் கால் ஊனமுற்றவரையும் பார்க்கும் போது நேசம் மறத்துப் போகிறது, கண் தெரியாமல் மாதந்தோறும் வரும் ஊதுபத்தி விற்பவரும் , ஒரு முறை ஊதுபத்தி வேண்டாம் இந்தாங்க பத்து ரூபாய் என்றதற்கு இது போல வாங்கிப் பழகிட்டால் உழைக்கத் தோன்றாதுங்க என்று மறுத்து விட்டுச் சென்ற வார்த்தைகளும் செவியில் வந்து போகிறது.....

    ReplyDelete