Saturday, December 7, 2013

கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு !



நண்பர் ஒருவரின் வீட்டுக்கு போயிருந்தபோது, அவரின் மனைவி அவர்களின் மகனின் திருமணத்தை பற்றி பேசி கொண்டிருந்தார்.

" தம்பி ! நான் இப்படி சொல்றேன்னு நீங்க தப்பா நினைச்சிடாதீங்க.... முக்கியமா பொண்ணு நல்ல சிகப்பா இருக்கனும் ! இல்லேன்னா எங்க பக்கத்துக்கு என்னால பதில் சொல்ல முடியாது ! எங்க குடும்பத்து மருமகளுங்க எல்லோருமே சிகப்புதான் ! "

" தப்பா நினைச்சிடாதீங்க " என்ற பீடிகையுடன் அவர் ஆரம்பித்த காரணம் அடியேன் கறுப்பு !

" எங்க தங்கச்சிக்கு எப்படியெல்லாம் மாப்பிளை பார்க்கனும்ன்னு ஆசைப்பட்டோம் தெரியுமா... அவ இப்படி ஒரு ஆளை.... "

காதல் திருமணம் செய்துகொண்ட தன் தங்கை புருசனின் போட்டோவை காட்டி அதங்கப்பட்டார் ஒரு நண்பர் ! " இப்படி ஒரு ஆளை " என்று நண்பர் குறிப்பிட்ட மனிதர் குடிகாரனோ குற்றவாளியோ அல்ல ! கறுப்பு !

" பெரும்பாலான தமிழ்நாட்டு திரைப்படங்களின் கதாநாயகிகளெல்லாம் சராசரி தென்னிந்திய பெண்களை போலில்லாமல் உயரமாக வெள்ளை நிறத்தில் இருக்கிறார்கள்... "

இது ஒரு பிரெஞ்சு நண்பனின் வியப்பு !

" பொண்ணு சுண்டினா சிவக்கற நிறத்தில இருக்கனும் ! "

" நம்ம ஐஸ்வர்யா ராய் மாதிரி பாருங்களேன் ! "

" என்னா மாப்பிளை கொஞ்சம் நிறம் கம்மி... "

" மாப்பிள்ளை துரை மாதிரி இருக்காரு ! "

வரதட்சணை கொடுக்கல் வாங்கல்களுக்கெல்லாம் முன்னால் ஆரம்ப கட்ட திருமண பேச்சுகள் பெரும்பாலும் இப்படிதான் ஆரம்பிக்கின்றன ! மாப்பிள்ளை பெண்ணின் நிறத்தைவைத்துதான் அடுத்தகட்ட விலைபேசுதல் !

எண்பதுகளின் தமிழ் சினிமாக்களை கவனித்து பார்த்தவர்களுக்கு புரியும் ! அந்த காலத்தின் பெரும்பான்மை சினிமாக்களில் வில்லனாக வருபவர்  நாயகனின் தங்கையை பாலியல்ரீதியாக பலவந்தப்படுத்தும் காட்சி கட்டாயம் இடம்பெறும் ! அந்தமாதிரி படங்களில் தங்கை நடிகை அறிமுகமாகும் காட்சியிலேயே ஒன்றை ஊகித்துவிடலாம்... நடிகை சிகப்பாக அழகாயிருந்தால் வில்லனால் பலவந்தபடுத்தபடுவார். கறுப்பு என்றால் அவரை வில்லன் தொட கூட மாட்டார் ! நாயகனை வில்லன் சுட யத்தணிக்கும்போது குறுக்கே பாய்ந்து அண்ணனை காப்பாற்றிவிடுவார் கறுப்பு தங்கை ! தமிழ் சினிமா நாயகியின் தோழிகள் அவளை விட நிறம் கம்மியாக, முக்கியமாய் கறுப்பாக இருக்க வேண்டியது அவசியம் ! மாப்பிள்ளை கிடைக்காத நாயகியின் அக்காவோ அல்லது நாயகனின் தங்கையோ எல்லா படங்களிலும் கறுப்பாக தான் இருப்பார்கள் ! நிஜத்தில் கறுப்பாகவோ அல்லது மாநிறமாகவோ இருக்கும் நடிகைகள் கூட மேக்கப் உத்தியினால் திரையில் சிகப்பாகவே ஜொலிப்பார்கள் ! கதைக்கு தேவையென்றால் உடல் முழுவதும் மை அப்பிய கலர்தான் கறுப்பு என கட்டப்படும் !  " தீய்ஞ்ச தோசை மாதிரி மூஞ்சி ", " தீச்சட்டி மாதிரி முகம் " என காமெடி நடிகர் கேலி பேசும்  அங்கவை சங்கவைகளும் கறுப்புதான் !  ஆகமொத்தம் தமிழ் சினிமாவில் அழகுக்கு எதிர்ப்பதமான அவலட்சணத்தை காட்சியாக்க முயல்வது கறுப்பை காட்டிதான் !

அடியாட்கள் தொடங்கி பிக்பாக்கெட் திருடன், கஞ்சா விற்பவன்வரை விளிம்புநிலை மனிதர்கள் அனைவரையும் சினிமாவில்  கறுப்பாகவே பார்த்து பழகி, தெருவில் யாராவது திருடன் என கத்தினால் அழுக்கான உடையணிந்த கறுப்பு நபர் மீது சட்டென சந்தேகம் கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டோம் ! மிகைபடுத்துவதாக தோன்றினாலும் உண்மை இதுதான் !

" கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு " என நூறு படங்களை தொட்ட தமிழ் ஹீரோவின் பட பாடலையும், " மேடம் நீங்க வெள்ளை நான் கறுப்பு ! அதானே பிரச்சனை ?! " என தொடங்கி தானும் வெள்ளையாக படாதபாடுபடும் சூப்பர் ஸ்டாரின் காமெடி காட்சிகளையும் பார்க்கும் போதும், " எங்களையெல்லாம் பார்த்தா பிடிக்காது... பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும் ! " என எகிறும் இன்றைய தலைமுறை ஹீரோவின் டையலாக்கை கேட்கும்போதும், புகழின் உச்சம் தொட்ட கறுப்பு நடிகர்களுக்குள்ளும் கறுப்பு காம்ப்ளெக்ஸ் இருக்குமோ என தோன்றுகிறது !

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பெண்களை மணந்து கொண்ட தமிழர்களை பற்றி பலருக்கு தெரியும். கனடா, ஆஸ்த்ரேலியா தொடங்கி, ஜப்பானிய பெண்ணை காதலித்து மணந்தவர்களை பற்றியும் தெரியும். சில ஆண்டுகளுக்கு முன்னர் அரபு நாடு ஒன்றிலிருந்து தமிழ் காதலனுக்காக தமிழ்நாட்டின் கிராமம்வரை கிளம்பிவந்த பெண்ணை பற்றி படித்ததாக ஞாபகம். உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஆப்ரிக்காவிலும் நிச்சயமாக இருக்கிறார்கள். ஆனால் ஆப்ரிக்கா வாழ் தமிழர்கள் அந்நாட்டின் கறுப்பின பெண்ணை காதலித்ததாய் எனக்கு தெரியவில்லை ! கண்டதும் காதலில் நம் காளையர் பெரும்பாலோர் வெள்ளை பெண்ணின் கடைக்கண் பார்வையிலேயே வீழ்கின்றனர் !

சுஜாதாவின் எழுத்துகளில் நம்முடைய கறுப்பு அலர்ஜிக்கான உளவியல், விஞ்ஞான காரணங்களை தேட தோன்றுகிறது !

கறுப்பு என நாம் நினைக்கும் நமது நிறம் கறுப்பே கிடையாது என சொன்னால் நம்புவீர்களா ?!  விஞ்ஞானரீதியாக மனிதர்கள் மூன்று விதம். அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆஸ்த்ரேலிய கண்டங்களின் வெள்ளையர்கள். ஆசியாவின் மஞ்சள் நிறத்தவர்கள். ஆப்ரிக்க கண்டத்தின் கறுப்பின மக்கள். இந்த நிற வேற்றுமைக்கு காரணம் அந்தந்த கண்டங்களின் தட்ப வெப்ப நிலை. ஆப்ரிக்க கறுப்புக்கும் தென்னிந்திய மாநிறத்துக்கும் நிறைய வித்யாசங்கள் உண்டு ! மேற்சொன்ன மூன்று நிறங்களுக்குள் அடங்காத நான்காவது நிறமான தென்னிந்தியர்களின் மாநிறம் தென்னிந்தியாவை தாண்டி இலங்கை மொரீசியஸ் போன்ற சிற்சில நாடுகளில் மட்டுமே உள்ள அரிய நிறம். இலங்கை, மொரீசியஸ் நாட்டு மக்கள் தென்னிந்திய வம்சாவழியினர் ! ஆக தென்னிந்தியாவின், தமிழனின் அரிதான மாநிறத்துக்கு காரணம் ? ... இந்தியாவின் தென்கோடியிலிருந்து தொடங்கி பரவியிருந்த லெமூரியா கண்டத்தினர் நாம் என்பது சில விஞ்ஞானிகள் நம்பும் காரணம். ஐரோப்பாவின் வெள்ளை, ஆப்ரிக்காவின் கறுப்பு போல கடல்கொண்ட லெமூரியா கண்டத்தினர் மாநிறமாக இருந்திருக்கலாம்.

நிற்க, இதற்கான காரணமாக அடியேன் நினைப்பது....

கைபர் கணவாய் வழியே பண்டைய இந்தியாவினுள் நுழைந்த ஆரியர்கள் தொடங்கி ஆப்கான் மன்னர்கள் வரை, கேரளாவில் கால்பதித்த வாஸ்கோடகாமாவிலிருந்து ஆங்கிலேயர்கள் வரை இந்தியத்திருநாட்டின் தென்கோடி தமிழன் கண்ட ஆளும்வர்க்கம் அனைத்துமே வெள்ளைதான் ! திராவிட மன்னர்களின் ராஜகுருக்களில் பலரும் ஆரியர்களே ! சுதந்திர இந்தியாவிலும் நேரு தொடங்கி இந்திரா, ராஜிவ், வாஜ்பாய் என வெற்றிகரமான பிரதமர்கள் அனைவருமே  குங்குமப்பூ நிறம் ! இதில் சந்திரசேகர் மட்டும் நிறம் கம்மி என ஞாபகம் !! ( சிகப்பு இந்திராவை பிரதமராக்கியதில் மிக முக்கிய பங்கு வகித்த கருப்பு காமராஜரை காங்கிரசே மறந்துவிட்டது அரசியல் ! )

ஆக, ஆள்வதற்கான தகுதியில் முக்கியமானது வெள்ளை நிறம் என்ற எண்ணம் உருவாகி ஜீன்களில் படிந்திருக்குமோ என தோன்றுகிறது ! முக்கியமாய் எங்கோ இருக்கும் ஐரோப்பிய கண்டத்திலிருந்து கிளம்பி இந்தியாவில் கால்பதித்து சுதேசி மாமன்னர்களையெல்லாம் தந்திரமாய் விழ்த்தி இந்திய துணைகண்டம் முழுவதையும் ஒரு குடையின் கிழ் கொண்டுவந்த வெள்ளைக்காரர்கள் மீது இன்றும் நமக்கு ஒரு "விசுவாசம் " உண்டு ! " வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன்தாண்டா ! " என்ற சிலாகிப்புக்கான காரணம் இதுதான் !  இன்றும் வெள்ளைக்கார சுற்றுலா பயணிகளுக்கு நம்மவர்கள் போடும் கும்பிடு சற்று பெரிதுதான் ! ( ஆறு ரூபாய் பெறும் சோழி பொம்மைகளை ஆயிரம் ரூபாய்க்கு வெள்ளைக்காரர்களின் தலையில் கட்டும் கேடி பில்லா கில்லாடி ரங்காக்கள் இதில் சேர்த்தி கிடையாது ! )

மேலும் நம் ஜாதி கட்டமைப்பிலும் கறுப்பு அலர்ஜிக்கான காரணங்கள் உண்டு !  பெரும்பாலும் நிறத்தின் மூலமாகவே ஜாதிகட்டமைப்பு தமிழ் சினிமாவில் மிகவும் தந்திரமாய், ஜாக்கிரதையாய் பாதுகாக்கப்படுகிறது ! இதை விளக்கவேண்டுமானால் இன்னொரு கட்டுரை தேவை !

சிகப்பும் கறுப்பும் வெறும் நிறங்கள்தான். சிகப்பானவர்களில் சுமாரானவர்கள் உண்டு. கறுப்பிலும் லட்சணமானவர்கள் உண்டு. மேலே சொன்ன சுமார், லட்சணம் போன்ற அழகை குறிக்கும் பதங்களும் அவரவர் பார்வைக்கும் பக்குவத்துக்கும் ஏற்ப மாறுபடும் ! பொதுவான சமூக கட்டமைப்பு எண்ணங்களில் சிக்கிவிடாமல், ஒரு மனிதனின் நிறம், அங்க அமைப்புகளை கடந்து அகத்தின் அழகை அறிய முயற்சிப்பவர்களுக்கு மட்டுமே அழகு... இல்லையில்லை உண்மையான நிலையான பேரழகு புலப்படும் !

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.





Wednesday, October 9, 2013

மறைந்தும் மறையாத தமிழ் காமிக்ஸ் கலாச்சாரம் !

                    




சமீபத்தில் இந்தியா டுடே இதழில் " வலையில் வாழும் பாத்திரங்கள் " கட்டுரையை படிக்க நேர்ந்த போது என் பால்ய பருவம் மீன்டும் திரும்பியதை போல உணர்ந்தேன் ! அந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்த  கலீல், செளந்திரபாண்டியன், கார்த்திக் சோமலிங்கா, ரபீக், விஸ்வா போன்றவர்கள் நடத்தும் வலைதளங்களையும், வலைப்பூக்களையும் தேடி கண்டபோது மீன்டும் என் பால்யபருவ காமிக்ஸ் உலகம் என் கண்முன் விரிந்தது ! எங்கள் ஊரின் காமிக்ஸ் அலிபாபா குகையான " ரஹ்மானியா பேப்பர் ஸ்டோர் " மீன்டும் என் முன்னால் உருப்பெற்ற பிரமை !

" தபால் தலை சேகரிப்பதுபோல சித்திரக்கதைகள் என்பது ஒரு ஹாபி, இது ஒரு தனி உலகம். சித்திரக்கதைகளை படிக்காதவர்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியை தவரவிடுகிறார்கள் "

" தமிழ் சித்திரக்கதைகள் என்பது ஒரு கலாச்சாரம்போல், ஒரு மதத்தை போன்றது "

என்பது போன்ற கருத்துகள் மிகையல்ல !

மேலே குறிப்பிட்ட தோழர்கள் அனைவரின் வயதுமே முப்பதுக்கு மேல் தொடங்கி, நாற்பதின் ஆரம்பத்திற்குள்தான் இருக்கும். எண்பதில் தொடங்கி தொன்னூறின் ஆரம்பம் வரையிலான தமிழ் காமிக்ஸின் பொற்காலத்தில் பால்ய பருவம் கண்ட அனைவரையும் காமிக்ஸ் தலைமுறை என்று குறிப்பிடலாம் என தோன்றுகிறது.

அந்த காலகட்டத்தில் தமிழில் படக்கதைகள் தாங்கிய காமிக்ஸ் மட்டுமன்றி அம்புலிமாமா, கோகுலம், பூந்தளிர், ரத்னமாலா என பல சிறுவர் வார மாத இதழ்களும் வெளிவந்து கொண்டிருந்தன. தமிழின் சிறுவர் இலக்கியம் செழித்தோங்கிய பொற்காலம் அது ! சிறுவர்கள் மட்டுமன்றி பெரியவர்களும் ஆனந்தவிகடன், குமுதம் இதழ்களுக்கு ஈடாக சிறுவர் பத்திரிக்கைகளை படித்து ரசித்த காலம் அது !

ஜாதி மத வேறுபாடுகளும் சமூக ஏற்ற தாழ்வுகளும் நிரம்பிய ஒரு தேசத்தின் ஒற்றுமை இணைப்புகளான சினிமா, கிரிக்கெட்டுக்கு இணையாக விளங்கியது காமிக்ஸ் இலக்கியம் என்றால் அது மிகையாகாது !

ஆடி காற்றுடன் மழையும் பெய்த ஒரு பின்மாலை பொழுதில் தொடங்கியது எனக்கும் பட கதைகளுக்குமான உறவு ! பக்கத்து ஊரில் கடை வைத்திருந்த என் தந்தை வாங்கி அனுப்பிய மீன்களுடன் வந்தது முன் அட்டை இல்லாத காமிக்ஸ் புத்தகம் ! இரும்புக்கை மாயாவி என ஞாபகம் ! அந்த சிறுவயதில் இரும்புக்கை மாயாவியை விட என்னை அதிகம் கவர்ந்தது அதன் கடைசி இரண்டு பக்கங்களிலிருந்த கார்ட்டூன் கதை ! " சுட்டிக்குரங்கு கபீஷ் ! "

நான் அந்த புத்தகத்தில் லயித்திருந்ததை கண்ட என் தந்தை அடுத்த சில நாட்களில் மற்றொரு புத்தகத்தை கொண்டு வந்தார் ! அது சிறுவர் இதழான பூந்தளிர் ! அடுத்தடுத்து அம்புலிமாமா, கோகுலம், ரத்னமாலா என அந்த காலத்தில் வெளியான அத்தனை சிறுவர் பத்திரிக்கைகளும் எனக்கு பரிச்சயமாயின !

பதிணென் பருவத்தின் ஆரம்பத்தில் கபீஷை தாண்டி காமிக்ஸ் படக்கதைகள் மீதான  ஆர்வம் தொடங்கியது ! முதலில் அறிமுகமானது முத்து காமிக்ஸ் ! இரும்புக்கை மாயாவியும், ஸ்பைடர் மேனும் வியக்க வைத்தனர் ! ராணி காமிக்ஸ் ! ஜேம்ஸ் பாண்ட் கதைகளும் பார் வெஸ்ட் கெளபாய் கதைகளும் சாகச கனவுகளை மனதில் விதைக்க, லயன் காமிக்ஸ் சாகசகதைகளுடன் நிற்காமல் மினி லயன், ஜூனியர் லயன், திகில் காமிக்ஸ் என வாரம், வாரம் இருமுறை, மாதம் என கோலோச்சியது ! மிக குறைந்த விலையில் முற்றிலும் கலரில் கார்ட்டூன் ரக கதைகளுடன் வெளியான மினி லயன் அந்த கால காமிக்ஸ் உலகின் புரட்சி ! ஒன்றரை ரூபாய் விலையில் முழுவதும் கலர் பக்கங்களுடன் மினி லயனை அன்று வெளியிட முடிந்ததென்றால் எந்த அளவுக்கு அதன் " சர்க்குலேசன் " இருந்திருக்கும் ?! ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் இதழ்களுக்கு இணையாக காமிக்ஸ் இதழ்கள் கோலோச்சிய காலமது !

அடுத்ததாக அறிமுகமானது பைக்கோ கிளசிக்ஸ் ! தென்னிந்தியாவில் வெளியான அமர்சித்திரகதாவுக்கு இனையான தரத்தில், ஆங்கில இலக்கிய கதைகளை இலகுவான படக்கதைகளாக தந்த பைக்கோ கிளாசிக்ஸ் புத்தகங்களை பாதுகாக்காமல் விட்டுவிட்ட வருத்தம் எனக்கு இன்றைக்கும் உண்டு ! ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் தொடங்கி மார்க் ட்வெய்ன், ஜூலியஸ் வெர்னே, விக்டர் ஹூயூகோ, ஓ ஹென்றி என மேல்நாட்டு இலக்கியகர்த்தாக்களின் படைப்புகளை புரிந்துகொள்ள எளிதான படக்கதைகளாக அறிமுகபடுத்தியது பைக்கோ கிளாசிக்ஸ் காமிக்ஸ்.

அதற்கு பிறகு, இந்தியா டுடே கட்டுரையில் குறிப்பிட்டது போல தமிழ் காமிக்ஸ் கலாச்சாரம் இரும்புக்கை மாயாவியாய் மறைந்துவிட்டது பெரும் சோகம் என்றாலும், அவரின் உடல் மறைந்த நிலையிலும் இரும்புக்கை மட்டும் சாகசம் நிகழ்த்துவதை போல தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கும் லயன் காமிக்ஸும், இணையத்தின் மூலம் இந்த கலாச்சாரத்தை கட்டிக்காக்கும் நண்பர்களும் தமிழ் காமிக்ஸ் ஜோதி அணையாமல் பாதுகாத்துகொண்டிருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது ஆறுதலாக உள்ளது.



தமிழ் படக்கதைகளின் வீழ்ச்சிக்கு பல காரணங்கள் இருக்கின்றன ! முதலானது தமிழில் வெளியான படக்கதைகளில் தொண்ணூறு சதவிகிததுக்கு மேல் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கதைகள்தான் ! உலகலாவிய வர்த்தகமயமான தொண்ணூறுகளில் அத்தகைய கதைகளுக்கான காப்பிரைட் உரிமை கடுமையாக்கப்பட்டு சிக்கல்கள் ஏற்பட்டிருக்கலாம். ! இதற்கு உதாரணம் ராணி காமிக்ஸ் ! ஒரு காலகட்டதுக்கு பிறகு அதில் வந்த ஜேம்ஸ்பாண்ட் கதைகளுக்கு உள்ளூர் ஓவியர்களே படம் வரைந்தனர் ! ஆனால் தரம் மிக மோசம் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும் ! ட்ராட்ஸ்கி மருது ஒரு பேட்டியில் கூறியது போல நமக்கு கார்ட்டூன் மற்றும் காமிக்ஸ் ஓவியக்கலை முற்றிலும் கைக்கூடாத ஒன்று ! ! மேல்நாட்டு படக்கதைகளின் மூலம் அவர்கள் தயாரிக்கும் சினிமாவில் உள்ளது. சினிமா தயாரிப்பில் ஸ்டோரி போர்டு முறையை மேல்நாட்டவர்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த முறையில், படம் தொடங்குவதற்கு முன்னரே எந்தெந்த இடத்தில் எப்படிபட்ட காட்சியமைப்பில் எந்த நடிகரைவைத்து, எந்த கோணத்தில் படமாக்கவேண்டும் என அனைத்தையும் படங்களாக வரைந்து தயாரான பின்னரே படபிடிப்புக்கு செல்கின்றனர் ! அதுவே பின்னர் பட கதைகளாகவும் வெளிவருகிறது ! ஜேம்ஸ்பாண்ட் படக்கதைகள்  இதற்குசிறந்த உதாரணம் ! அந்த கால கட்டதில் வெளியான ஜேம்ஸ்பாண்ட் படங்களின் ஓவ்வொரு பிரேமும் ஒரு படகட்டமாக கதைகளில் அச்சுஅசலாக இருக்கும்.

ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலமாக ஜேம்ஸ் பாண்ட், ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், இரும்புக்கை மாயாவி என பல்வேறு கற்பனை கதாபாத்திரங்கள் மேலை நாடுகளில் பட கதைகளின் மூலம் உருவமும் பெற்று சஞ்சீவிகளாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் ( பத்துக்கும் மேற்பட்ட கற்பனை சாகச புருசர்களை கொண்ட மார்வல் காமிக்ஸ் இன்றைய நவீன சினிமா தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களை உலகளாவிய வெள்ளித்திரை நாயகர்களாகவும் மாற்றி பலகோடி டாலர்கள் லாபமீட்டுவது தனிக்கதை ! )

மேல் நாட்டு காமிக்ஸூகளின் உரையாடல்களை மொழிபெயர்த்து வெளியிடுவதுடன் திருப்திபட்டுகொண்ட நாம் அதை தாண்டி இந்தியதன்மையுடைய சுதேசி நாயகர்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டவில்லை ! இதில் வேடிக்கை என்னவென்றால் மேல்நாட்டு காமிக்ஸ் ஹீரோக்களைவிடவும் சுவாரஸ்யமான நாயகர்கள் நம் இதிகாசங்களில் உள்ளனர் ! ( சக்திமான் சற்றே ஆறுதல் ! )

காமிக்ஸ் கதைகள் படிப்பதால் படிப்பு கெட்டுவிடும் என நினைத்த, இன்றும் நினைக்கும் பல பெற்றோர்களும் தமிழ் பட கதைகளின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என தோன்றுகிறது !

அனைத்திற்கும் மேலாக, இந்திய மொழிகளில், முக்கியமாக தமிழ் மொழி இலக்கியத்தில் சிறார் இலக்கியத்துக்கான முயற்சி மிக மிக குறைவு ! எனது சிறுபுத்திக்கு எட்டிய வகையில் சிறார் இலக்கியம் ஒன்றையே தன் உயிர்மூச்சாக எண்ணி உழைத்தவர் வாண்டுமாமா ஒருவர்தான் !

காமிக்ஸ் கதைகளுக்கும் வாண்டுமாமாவுக்குமான உறவு கம்மிதான் என்றாலும் தமிழ் சிறுவர்  கார்ட்டுன் முயற்சிகளில் அவரின் பங்களிப்பு அசாத்தியமானது. என்பது, தொண்ணூறுகளில் பூந்தளிர் போன்ற சிறுவர் இதழ்களில் மிகவும் முனைப்பாக அவர் உழைத்து ஏற்படுத்திய சூழ்நிலையும் தமிழ் காமிக்ஸ் செழித்தோங்க ஒரு காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது !

எண்பதுகளின் மத்தியில் தொடங்கி முழுவீச்சில் பரவிய பாக்கெட் நாவல்களும் தமிழ் காமிக்ஸுகளின் மறைவுக்கு ஒர் காரணமாக இருக்கலாம் என தோன்றுகிறது ! மேல்நாட்டு கலாச்சாரத்தை பின்னனியாக கொண்டு காமிஸுகள் வெளிவந்த நேரத்தில் ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார் போன்ற நாவலாசிரியர்கள் மேல்நாட்டு " போலார் " க்ரைம் கதைகளுக்கு ஈடாக இந்திய கலாச்சார பின்னனியில் எழுதிய நாவலகள் இளைஞர்கள் மற்றும் முதிய வாசகர்களை பாக்கெட் நாவல்கள் பக்கம் ஈர்த்துகொண்டன ! ( " பாவம் தமிழன் ! பாக்கெட் நாவலின் பாக்கெட்டிலிருந்தே வெளிவரவில்லை " என்ற வகையில் பிரபல தமிழ் கவிஞர் ஒருவர் வெந்து எழுதும் அளவுக்கு பாக்கெட் நாவல்கள் கோலோச்சியதும், அந்த கவிதையை தொடர்ந்து அந்த காலகட்டத்தில் மிகவும் பிரபலமான " க்ரைம் " பாக்கெட் நாவல் இதழ் ஒன்றின் ஆசிரியர் அந்த கவிஞர் மீது தொடுத்த தலையங்க யுத்தமும் அன்றைய காலக்கட்டத்தின் சுவாரஸ்ய மீடியா பரபரப்பு ! )

பட கதைகள் கோலோச்சிய காலக்கட்டம் தொடங்கி இன்று வரை தமிழின் எந்த ஒரு  பிரபல பத்திரிக்கை குழுமமும் படக்கதைகள் வெளியிடுவதற்கு முயற்சிக்கவில்லை ! பக்தி தொடங்கி பங்குசந்தை, மோட்டார், விவசாயம் என பல துறைகளுக்கும் தனி இதழ்கள் தொடங்கி அதில் வெற்றியும் பெற்ற, அச்சுக்கலையில் தலைமுறை அனுபவம் கொண்ட இந்த குழுமங்கள் முயற்சித்தால் மேல்நாட்டு காமிக்ஸுகளுக்கு இணையான தரத்தில் உள்நாட்டு படக்கதைகளை உருவாக்கி, அதற்கென ஒரு வாசகர்வட்டத்தையும் உருவாக்கமுடியும் என தோன்றுகிறது ! முயற்சிப்பார்களா ?!

 இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.



Monday, January 21, 2013

னைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் !

இதை செய்ய வேண்டும், அதை நிறுத்த வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என பல்வேறு உறுதிமொழிகளுடன் ஒவ்வொரு புத்தாண்டையும்  தொடங்கி, அந்த உறுதிமொழிகளெல்லாம் காலண்டர் தாள்களைவிடவும் வேகமாய் உதிர்ந்து மறைந்த வேகத்தில் ஆண்டின் இறுதியை நெருங்கி, மீன்டும் ஒரு புத்தாண்டினை புது சத்தியத்துடன் தொடங்கி...

ஆகையால் தோழர் தோழிகளே... உறுதியற்ற உறுதிமொழிகளும் சாத்தியபடாத சத்தியங்களும் வேண்டாம் !

மகிழ்ச்சியாய் இருப்போம் ! இந்த ஆண்டு முழுவதையும் சந்தோசமாய் கழிப்போம் !!

நீண்ட ஆயுள், ஆரோக்யம், செல்வம் என்றெல்லாம் வாழ்த்துகிறோமே தவிர சந்தோசமாக இருங்கள், அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள், உங்களை சுற்றி உள்ள இவ்வுலகின் அற்புதங்களை உணருங்கள் என வாழ்த்துவது அரிது !

சற்றே ஓடுவதை நிறுத்திவிட்டு யோசித்தோமானால் இந்த நொடி மட்டுமே நிரந்தரம் என்பது புரியும் ! நிலையற்ற இவ்வாழ்க்கையின் நிலயான இத்தருணத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்ளுங்கள். இன்னும் நிறைய நேரமிருக்கிறது இன்னும் நிறைய நாட்கள் இருக்கின்றன என்றே நினைக்கிறோம். ஆனால் நாளையே இந்த வாழ்க்கை நின்றுவிடுமானால்... நீங்கள் சாதிக்க நினைத்தையெல்லாம் சாதித்து விட்டீர்களா ? நீங்கள் நேசிப்பவர்களிடம் சொல்ல நினைத்ததையெல்லாம் சொல்லி விட்டீர்களா ? நான் எப்படி வாழ நினைத்தேனோ அப்படி வாழ்ந்துவிட்டேன் அல்லது வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என நம்மில் எத்தனை பேரால் சொல்ல முடியும் ?!

உங்களுக்கு நல்லது என நீங்கள் மனதில் வரித்துகொண்ட கற்பனைகளை தேடி நித்தமும் ஓடுவதை சற்றே நிறுத்திவிட்டு நிதானித்து பார்த்தோமானால் நம்மை சுற்றி நமக்காக நிகழ்ந்து கொண்டிருக்கும் நல்லவைகள் புலப்படும் ! நம்மை தேடிவரும் நன்மைகளை நாம் உணராதது புரியும் !

உங்களின் பெற்றோர்களை கொண்டாடுங்கள். வயோதிகத்தின் நிழல் வேகமாய் படரும் அவர்கள் உங்களுடன் இருக்கும் பொழுதை பெருமையுடன் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

உங்க்ளை இன்னும் பிள்ளைகளாய் நேசிப்பது அவர்கள் மட்டும்தான். அவர்கள் உங்களை வளர்த்த விதத்தில், உங்களுக்கு அளித்த வசதிகளில் குறைகள் இருந்திருக்கலாம், ஆனால் அவர்களால் முடிந்ததை முழு மனதுடன் உங்களுக்கு அளித்தார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். இன்றும் அவர்கள் உங்களின் பின்னால் இருக்கிறார்கள். உங்களின் வெற்றிகளை பாராட்ட ! தோல்வியின் போது தோள்தொட்டு தூக்க ! உங்களின் மகிழ்ச்சியை அவர்களுடையதாய் கொண்டாட ! உங்களின் துக்கத்தை தாங்கள் ஏற்று கொள்ள !

உங்களின் குழந்தைகளுடனான நேரத்தை அவர்களுக்காக முழுமையாய் செலவிடுங்கள். மிக வேகமாய் வளரும் அவர்களின் சிறகுகள் விரிந்து அவர்களின் வாழ்க்கைக்காக அவர்கள் பறந்து விடுவார்கள்.

நம் குழந்தைகளை கண்காணிப்பதிலும், கண்டிப்பதிலும், அறிவுரைகள் கூறுவதிலுமே அவர்களுக்கான நேரத்தை செலவிடும் நாம் நம் குழந்தைகளை பற்றி பெருமைபட்டது எப்போது ? அவர்களை கடைசியாய் பாராட்டியது எப்போது ? அவர்களின் வளர்ச்சிக்கு தேவை நம் ஊக்கம். அது மட்டும் தான் நாம் நம் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு அளிக்கும் உறுதியான அஸ்த்திவாரம்.

காதலனோ காதலியோ அல்லது கணவனோ மனைவியோ, உங்கள் துணைக்கான நேரத்தை அவர்களுடன் முழுமையாக செலவிடுங்கள்.

நம் வேலை பளு, குடும்ப தேவைகள், அன்றாட காரியங்கள் என பலவற்றுக்கு மத்தியில் நமக்கென காத்திருக்கும், நமக்கென வாழும் நம் துணையின் தேவைகளை பல நேரங்களில் மறந்து விடுகிறோம் ! ஆனால் வாழ்க்கை படகு ஒரு துடுப்பை விட இரு துடுப்புகளால் செலுத்தபடும்போது சீராய் போகும் என்பதை மறந்துவிடாதீர்கள் !பரஸ்பர புரிதலும், ஒற்றுமையும், விட்டுகொடுத்தலும் இல்லையென்றால் இல்லறத்துக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும் !

நண்பர்களை நினைவில் கொள்ளுங்கள் !

எந்த எதிர்ப்பார்ப்புகளும் அற்ற பால்ய பருவத்தில் நம் தோள் மீது கைபோட்டு நடந்தவர்கள் தொடங்கி, வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நம்முடன் இணைந்தவர்கள் எத்தனைபேர் ? ஓடி வந்து உதவியவர்கள் எத்தனை பேர் ? அவ்வப்போது அவர்கள் நமக்காக நம் பாதையை மறைத்த தடைகளை நகர்த்தியிராவிட்டால் நாம் இன்று இங்கிருந்திருப்போமா ? தவறான புரிதல்களால் அவர்களுக்கும் நமக்குமான உறவில் விரிசல்கள் ஏற்பட்டிருக்கலாம் ! தொடர்பு நின்று போயிருக்கலாம் ! ஆனால் அவர்களுடன் நாம் கழித்த இனிய தருணங்கள் நம் மனங்களில் கல்வெட்டுகளாய் பதிந்தேதான் இருக்கும் !

அந்த நண்பர்களை மீன்டும் சந்திக்க நேர்ந்தால் முதல் புன்னகை நம்முடையதாக இருக்கட்டும் !

மொத்தத்தில் இந்த உலகத்தை, அது நாம் கேட்காமலே நமக்கு கொடுத்திருக்கும் கொடைகளை நேசிப்போம் ! மகிழ்ச்சியாக இருப்போம் ! நிரந்தரமற்ற இவ்வாழ்வின் நிரந்தரமான இத்தருணத்தை நிறைவாக அனுபவிப்போம் ! நம்மை சுற்றியுள்ள இவ்வுலகின் அற்புதங்களை ரசிப்போம் ! நம் அன்பினால் இவ்வுலகுக்கு இன்னும் கொஞ்சம் அழகூட்டுவோம் !

வாழ்க்கை அழகானது ! அதனை அழகாக நீங்கள் நினைக்க நினைக்க, அது இன்னும் அழகாக உருவெடுக்கும் ! ஒரு குழந்தையாய் விளையாடுங்கள் ! பைத்தியமாய் நடனமாடுங்கள் ! கிறுக்கனைபோல் கத்தி ஆழ சுவாசியுங்கள் !!!

இவ்வுலகம் அற்புதங்கள் நிரம்பியது ! இத்தருணத்தில் வாழ்வதால் மட்டுமே அந்த அற்புதங்களை உணர முடியும் !

ஒவ்வொரு விடியலையும் ஒரு புத்தாண்டாய் கொண்டாடுங்கள் !

 இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.