ஆஸ்த்ரேலியாவுல இருக்கற சொக்கன் சுப்ரமணியன் அபுதாபியில இருக்கற நம்ம கில்லர்ஜீயை உசுப்பிவிட்டு அவரு, பிரான்ஸ் ஈபில் டவருக்கு கீழ தேமேன்னு நின்னு எதையோ கிறுக்கிக்கிட்டிருந்த என்னை இதுல மாட்டி, சாரி அவர் பாஷையில கோர்த்துவிட்டு...நியாயமாரே... ஏன் ? ஏன்ங்கறேன் ?!... சென்னை விமான நிலையத்துல ஒரு நாளைக்கு சந்திக்காமலா போயிடுவோம் ? அப்ப நாட்டாமையை சொம்போட சேர்த்து தூக்கிடுவோம்ல !
மேட்டர் ஒண்ணுமில்ல மக்களே ! ஒரு பத்து கேள்விகளுக்கு நான் பதில் சொல்லனுமாம்... யான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்ன்னு நான் ஒரு பத்துபேரை இதுல கோர்த்துவேற விடனும் ! சரி, சரி, ஆனந்த விகடன்லேருந்து பேட்டி காண விரும்பற அளவுக்கு நாம ஒண்ணும் பவர் ஸ்டார் கிடையாது ! கில்லர்ஜீ பேட்டியே போதும் !
படிக்க சகிக்காதுதான் என்றாலும் அன்பர்கள் இறுதிவரை படிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்... இறுதியில் அவர்களின் பெயர் பட்டியலில் இருக்ககூடிய வாய்ப்பு உள்ளதால் !
1. உங்களுடைய நூறாவது பிறந்த நாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள் ?
குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுடன் ( வளைப்பூ நண்பர்களுக்கு நிச்சயம் முன்னுரிமை உண்டு ! ).., முடிந்தால் ஓடிப்பிடித்து விளையாடி கொண்டாட ஆசை !
2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் ?
கற்றுக்கொள்வதற்கு முன்னால் இந்த வாழ்க்கை ஓட்டம் எனக்கு என்ன கற்றுத்தர முயற்சித்துகொண்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன் !
3. கடைசியாக சிரித்தது எப்போது ? எதற்காக ?
இந்த பதிவை எழுத தொடங்குவதற்கு முன்னால்...
நண்பர் கில்லர்ஜி இந்த சுழற்சி பதிவில் என்னை சேர்த்திருப்பதாக அவர் எனக்கு அனுப்பிய கமெண்ட்டை படித்தபோது ! அதை அப்படியே கீழே கொடுத்துள்ளேன்...
" நண்பா, உங்களை ஒருமேட்டரில் கோர்த்து விட்டு இருக்கிறேன்... "
அப்பாடா... மேட்டர், கோர்த்துவிட்டிருக்கிறேன்னுல்லாம் நீங்க பீடிகை போட்டதை படித்ததும் ஏதோ மோகனாவின் மோகினியாட்டம், மோகனின் மோகமுள் மாதிரி எதுகை மோனையா சாமானியனின் சல்லாபங்கள்ன்னு பதிவு போட்டுட்டீங்களோன்னு பயந்துட்டேன் ஜீ !
குட்டி, புட்டி மாதிரி மேட்டர் ( இது தமிழ் வார்த்தை இல்லன்னாலும் ! ), கோர்த்துவிடறது வார்த்தைக்கெல்லாம் எத்தனை அர்த்தமிருக்கு பாருங்க !
4. 24 மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன ?
இனிமேல் பழங்கால வாழ்க்கைக்கு திரும்புவோம் என மக்களுக்கு பிரச்சாரம் செய்வதோடு தாமஸ் ஆல்வா எடிசன் என்றொரு மனிதரை அனைவரும் உடனடியாக மறக்க வேண்டும் என கோரிக்கை வைப்பேன் !
( பதில் உபயம் : கில்லர்ஜீ. ( இந்த பதிலுக்கான அனைத்து உலக உரிமைகளும் அவருக்கே சொந்தமானது ! )
இத்துடன் நான் சேர்க்க நினைப்பது...
மின்சாரம் இல்லாத காரணத்தால் பிளேடு, ஜல்லியடி பதிவுகளை வளைப்பூவில் பிரசுரிக்க முடியாத வலைப்பூ நண்பர்களை கூட்டி சங்கம் ஆரம்பித்து இயற்கை விவசாயம் செய்வேன் ! ஒருவர் வெட்டிய பாத்தியை பற்றி மற்றொருவர் " லைக் " போடும் வசதியுடன் !
5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் நீங்கள் அவர்களுக்கு சொல்ல விரும்புவது என்ன ?
உங்களின் பிரச்சனைகள் அனைத்தையும் நான்கு சுவற்றுக்குள், உங்களுக்குள் பேசி தீர்த்து கொள்ளுங்கள். ஒரு ஜோடியின் வாழ்க்கையில் மூக்கை நுழைக்கும் மூன்றாவது நபரின் பெயர்தான் பிரச்சனை ! உங்கள் பிரச்சனை மற்றவர்களுக்கு பொழுதுபோக்கு செய்தி மட்டுமே என்பதை மறந்துவிடாதீர்கள்.
பெண்ணியம், ஆணியம் போன்ற பட்டிமன்ற தலைப்புகளையெல்லாம் வாழ்க்கைக்குள் நுழைத்து குழம்பாதீர்கள் ! இல்லறம் என்பது விட்டுகொடுத்தல்... ஈகோ அறுத்தல் !
6. உலகத்தில் உள்ள பிரச்சனைகளில் ஒன்றை உங்களால் தீர்க்க முடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள் ?
பட்டினி சாவு !
" தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் " என முழங்கிய பாரதியின் புத்தகங்கள் அலமாரியை அலங்கரிக்க, ஊர் மொத்தமும் எலும்பும் தோலுமாய் சிறுக சிறுக செத்துக்கொண்டிருக்கும் ஆப்ரிக்க பஞ்ச காட்சியை தொலைக்காட்சியில் பார்த்து உச் கொட்டியபடி பிட்சா, பர்கரை விழுங்கி, கோக் குடித்து ஏப்பம் விடும் நாகரீக மனித குணம் ... மானுட அவமானம் !
7. நீங்கள் யாரிடம் அட்வவைஸ் கேட்பீர்கள் ?
பிரச்சனையை பொறுத்து நெருங்கியவர்களிடம் கலந்தாலோசித்தாலும் இறுதி முடிவு மிஸ்ட்டர் மனசாட்சி தீர்மானிப்பதுதான் !
8. உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள் ?
தவறானவர்களால்தான் " தவறான " தகவலை பரப்ப முடியும் ! என்னை பற்றி எனக்கும், என்னை நேசிப்பவர்களுக்கும் நன்றாகவே தெரியும் ! ஆகையால்... மெளனம் என்னும் மிக வலிமையான ஆயுதத்தை பயன்படுத்துவேன் !
9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள் ?
... அந்த இழப்பின் வலியை அனுபவித்து, வடுவை சுமப்பவன் என்ற முறையில், வாழும் காலம் முழுவதும் இணந்து வருவாள் என்ற நம்பிக்கையுடன் கைப்பிடித்தவளை வாழ்வின் ஆரம்பத்திலேயே இழக்கும் நிலை என் நண்பர்களுக்கு மட்டுமல்ல, யாருக்கும் வரவேண்டாம் என இறைவனை பிரார்த்தித்துகொண்டு...
உன் குழந்தைகளுக்கு தாயுமானவனாக இரு ! இனி வாழ்க்கையில் நீ எடுக்கும் எந்த முடிவும் உன் குழந்தைகளின் நல்வாழ்க்கைக்கு சாதகமானதாகவே இருக்க வேண்டும் ! உன் குழந்தைகளை நீ நடத்தும்விதம்தான் நீ உன் மனைவியை எப்படி நேசித்தாய் என்பதை சொல்லும்.
இழப்பை பொறுத்தவரை...
இதுமட்டுமல்ல...
எதுவும் கடந்துபோகும் !
மனவெளியில்
அதன் ஞாபக துகள்களை
நிரந்தரமாய் விட்டுவிட்டு !!
10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள் ?
வாசிப்பு... மற்றும் எழுத்து !
இந்த வாய்ப்பை எனக்களித்த நண்பர் கில்லர்ஜீக்கு நன்றி ( மெய்யாலுங்க... காமெடி கீமெடி பண்ணல ! )
இனி யான் பெற்ற துன்பத்தை பகிர்ந்துகொள்ளப்போகும் என் வலைநண்பர்கள்...
கிங் விஸ்வா - tcuintamil.blogspot.fr
கார்த்திக் சோமலிங்கா - www.bladepedia.com
காரிகன் - kaarigan-vaarththaiviruppam.blogspot.fr
அமுதவன் - amudhavan.blogspot.fr
மது எஸ் - www.malartharu.org
அருணா செல்வம் - arouna-selvame.blogspot.com
ஊமைக்கனவுகள் - oomaikkanavugal.blogspot.fr
ஸ்கூல்பையன் - www.schoolpaiyan.com
வாலிமீகி தேவகோட்டை - valmeegi.blogspot.com
முட்டா நைனா - muttanina.blogspot.com
பின்குறிப்பு : இந்த பத்து பேரில் பதிலளிக்கும் முதல் மூன்று பேருக்கு, எனது சாமானியனின் கிறுக்கல்கள் முதல் பாகம் புத்தகம் இனாமாக அனுப்பிவைக்கப்படும். ( நான் இப்படியே எழுதிகொண்டிருந்து, மக்கள் தாமஸ் ஆல்வா எடிசனை மறக்கும் சூழ்நிலையும் ஏற்படாதிருந்தால் இந்த புத்தகம் 2020ல் வெளிவரும் என்பதை தெரிவித்துகொண்டு, புத்தகத்தை பெற சுய விலாசமிட்ட பெரிய கவருடன், பிரான்சிலிருந்து உங்கள் முகவரிக்கு அனுப்ப தேவைப்படும் தொகையையும் தாங்கள் அனுப்பவேண்டும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் !!! )