Sunday, July 7, 2019

என் முதல் தோழன்

ஜாதி மதங்களை தாண்டி மனிதர்களை நேசித்தவர்,
சகலரின் உணர்வுகளையும் மதித்தவர்.
வீட்டுக்கு வருபவர் யாராயினும் தான் உண்ணுமிடத்தில்,
தனக்கு பக்கத்தில் அமரவைத்து தன் உணவை பகிர்ந்துண்டவர்.
பெரியாரின் கொள்கைகளில் பெரும் ஈர்ப்பு கொண்டவர்,
மூடநம்பிக்கைகளை நம்பும் பேச்சுகளுக்கு மட்டுமே அவருக்கு கோபம் வரும்.

இடம், பொருள், ஏவல் அறிந்து நடப்பதில் என்றும் வழுக்காதவர்,
கடன் என்ற வார்த்தையை வெறுத்து கண்ணியம் காத்தவர்.
வாழ்க்கையின் எத்தருணத்திலும் நிதானம் இழக்காதவர்,
முதியவர்களை போற்றி இளையவர்களை வாழ்த்தி வாழ்ந்தவர்.
உணர்ச்சிவசப்படாமல் பலமுறை யோசித்து வாக்களித்தவர்,
கொடுத்த வாக்கிலிருந்து என்றும் பிழலாதவர்.

பிள்ளைகளை தோழர்களாய் பாவித்து வளர்த்தவர்,
எங்களுடன் அரசியல் முதல் தத்துவம் வரை அனைத்தையும் அளவளாவியவர்.
எங்களின் அறிவுத்தேடலுக்கு எந்நேரத்திலும் தடை போடாதவர்,
பொருளாதார நெருக்கடியில் கூடவாசிக்க கேட்ட அனைத்தையும் வாங்கி குவித்தவர்.
யதார்த்தமான வார்த்தைகளால் வாழ்வின் நிதர்சனத்தை புரியவைத்தவர்,
அவரது அறிவுரைகளால் வாழ்வில் வளம் பெற்றவர்கள் பலர்.
என் முதல் தோழனை, என் வாழ்வின் முதல் தருணம் முதல் தொடர்ந்த ஒரு நீண்ட நெடிய நட்பை இழந்த உணர்வில் என்னை தவிக்க வைக்கிறது என் தந்தையின் மறைவு.

ஒரு தந்தையின் மறைவு உண்டாக்கும் சஞ்சலத்தை வார்த்தைகளில் வரைந்த சகோதரர் "ஊமைக்கனவுகள்" ஜோசப் விஜுவின் கீழ்கண்ட இந்த கவிதையை விடவும் மேலான ஒரு அஞ்சலியை என் தந்தைக்கு செலுத்த முடியும் என தோன்றவில்லை...


குழி விழுந்தவொரு யானையின்
இறுதிநாள் குறித்து,
அதீதப் பிளிறலோடு
வாசிக்கப்பட்ட மருத்துவ சாசனத்தின்
மூன்று மாதக் கெடுவை,
சலனமற்ற நதியாய்க்
கேட்கக் கூடிற்று உனக்கு...!

துடுப்பொன்றை அண்ணனிடத்தும்,
திசைகாட்டியை அம்மையிடத்தும் கொடுத்த பின்,
" எனக்கு..........................."
 எனக்கேட்டு நீண்ட என் கைகள் ,
இறுகப் பிடித்தொரு முத்தம்!

ஓட்டை விழுந்த களஞ்சியங்களிலிருந்து,
நீ ஒழுகிக்கொண்டிருப்பதை
அடைக்க முயற்சித்துக் கொண்டே இருந்தனர்,
அண்ணனும் அம்மாவும்!

ஒருவழி மூட இருவழி திறக்கும்
மர்மம் அறியா வேதனையூடே,
கையில் கிடைப்பதெல்லாம் கொண்டு
தீரத் தொடங்கியிருந்த உன் 
மீதமேனும் சேர்த்துவைக்கப்
பிரயத்தனப்பட்டனர் அவர்கள்!

சேறுற்ற நெடுங்குளத்தில்,
பசிமுற்ற உன்னைப் பிடித்து,
சுழற்றியவாறே உள்ளிழுக்கும்
முதலையின் வாய்க்குள்
மெல்லப் போய்க்கொண்டிருக்கும்போதும்,
கலங்கும் எம் கண்கள் குறித்தே
கவலை கொண்டிருந்தாய் நீ!

உறங்குவதாய்த்
தலையணை நனைத்துக்கிடந்த
பாவனை இரவொன்றில்,
அதிசயமாய்
அன்று உறங்கிப்போன அம்மாவின்
உறக்கம் கலைந்திடக் கூடாதென“
சிரமறுக்கும் வலிபொறுத்துப்
பற்கடித்தழுத உன் வேதனை
பார்த்திடப் பொறுக்கவில்லை எனக்கு!

எத்தனையோ முறை
நான் ஏறிவிளையாடிச்
சாய்ந்துகிடந்த மார்பின்,
உள்ளிருக்கும் இதயம்
உறங்காமலிருக்க,
என்ன செய்யட்டும் நான்?

கடைசியாய்,
காற்று,
நீரெனத் திரண்டு
சுவாசப்பை பாய்ந்தது போன்றொரு அவஸ்தையில்,
குமிழ் வெடிக்கத் தீர்ந்ததுன் பாடுகள்!

மரணத்தூரிகை
நெருக்கத் தெழுதிய
விதம் கேட்க வருமொரு கூட்டம்
 கண்திறந்த பொழுதுகள் 
பற்றிக் கேட்டவாறே
கைபிடித்துக் கலையும்!

இருக்கும் போதைய
அருமையுணராமல்,
இல்லாதானபின் சொல்லித்திரிய,
எல்லாரிடத்தும் இருக்கின்றன
இதுபோன்ற நூறாயிரம் கதைகள்!

ஆனாலும் அப்பா,

என் பன்னிரு பிராயத்தில்,
வாசிக்கக் கிடைக்காதொரு புத்தகம் குறித்து,
வருந்திக்கிடக்க,
கோவையில் கிடைப்பதாய் அறிந்து
வாங்கிவந்து
என் கண்படும் இடத்தில் வைத்து
என் கண்ணீர் ரசித்த
உன் அன்பினில்
ஒரு துளியளவேனும்
திரும்பக் கொடுத்ததில்லை நான்!

எப்பொழுதும்,
என் கலக்கம் காணச் சகியாது உனக்கு!

இரு நாட்களாய்,
என்ன எழுத...... “,   
எனக் கலங்கிக்
கண்ணிறைந்திருந்த போது
என்னை எழுதேன்” என
உன்னைக் கொடுத்துவிட்டுப் போகிறாய்
இப்பொழுதும்!

  பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.