Sunday, December 31, 2017

ஒரு நொடி சிந்திப்போம்...

லைநட்புகளுக்கு,

மிகுந்த மனவேதனையுடனும், அவநம்பிக்கையுடனும் நான் எழுதிய பதிவு இது. முழுவதும் படித்து, குறைந்தபட்சம் ஒருவருக்காவது இதனைப் பகிர முடியும் என்றால் படியுங்கள்... மேலோட்டமாகப் படித்துவிட்டு, சாமானியனுக்காக நன்று, அருமை எனப் பின்னூட்டமிட்டு மறப்பதாயிருந்தால் படிக்கவே வேண்டாம். ஏனெனில் இது நம் மண்ணின் வருங்காலம் பற்றிய கவலை. மததுவேச அரசியலை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற அச்சம். நம் பிள்ளைகளுக்கு அன்பை கற்பிக்கப் போகிறோமா அல்லது வெறுப்பைக் கற்பிக்கப் போகிறோமா என்பதற்கான பதில்.

நன்றி



" றைவனே ! இதுவரை என்னைக் காப்பாற்று என வேண்டினேன்... இனி நீ உன்னைக் காப்பாற்றிக்கொள் ! ... இந்த மனிதர்களிடமிருந்து ! "

                                                                             - அப்துல் ரகுமானின் கவிதை வரிகள்




தத்தை மக்களின் ஓப்பியம் என வர்னித்த கார்ல் மார்க்ஸ், அது பூர்ஷ்வாக்களின் புத்தியில் உதித்தது என்றான் ! கார்ல் மார்க்ஸ் காலத்து பூர்ஷ்வாக்களையும் மிஞ்சும் அதிகார வெறிபிடித்த இன்றைய அரசியல்வாதிகளின் கையில் சிக்கிய அந்த ஓப்பியம் படுத்தும்பாடு பயமுறுத்துகிறது !

ஜெரூசலத்தைப் பகடையாக்கி, இரண்டாயிர வருடத்துத் தீயில் குளிர்காய்ந்து உலகை கூறுபோட அமெரிக்க ஏகாதிபத்தியம் முயல்கிறது... தாயேஷ் போன்ற அடிப்படைவாத பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் ஒட்டுமொத்த மனிதகுல ஒற்றுமையையும் ஆட்டிப்பார்க்கின்றன... மாட்டுக்கறி அரசியலோ இரண்டாயிரம் வருடங்களையும் தாண்டிய பண்முகக் கலாச்சார ஒற்றுமைக்கு உலைவைக்கப் பார்க்கிறது !

பசியின் பொருட்டுகூடத் தன் இனத்தைக் கொல்லுவதில்லை மிருகங்கள். மதவெறி பிடித்த மனிதனோ பிரார்த்தனைக்குக் கூடியவர்களைக்கூடக் கொல்லுகிறான். ஒட்டி உலர்ந்த அடிமாட்டுக்காக அடுத்தவீட்டுக்கரனை அடித்தே கொல்லுகிறான்... பசிக்கு சோறிட சொன்ன, அன்பை போதித்த, சகோதரத்துவத்தைப் போதித்த மதங்களின் பெயரால் மனிதத்தை அழிக்கிறான்... நிச்சயமில்லாத சொர்க்கத்துக்காகத் தான் வாழும் மண்ணை நரகமாக்குகிறான் !

இதற்கு அந்த மதம் இந்த மதம் என யாரும் விதிவிலக்கல்ல !

அனைத்து மதங்களிலும் மத அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். அவர்கள், கவிஞர் அப்துல் ரகுமான் ஒரு மேடையில் பேசியதை போல இறைவன் உண்டு எனக் கூறிவிட்டு அவர்களின் செயல்களால் அவனை மிகவும் கேவலப்படுத்துகிறார்கள் ! அவரே குறிப்பிட்டதைப் போல, மதம் படித்தவர்களைவிட மதம் பிடித்தவர்கள் அதிகமாகி போனதால் மனிதநேயத்துக்கு உண்டான அபாயம் இது !

இவனைக் கேட்டால் அவன் செய்வதால் செய்கிறேன் என்கிறான்... அவனைக் கேட்டால் இவன் செய்வதால் செய்கிறேன் என்கிறான் ! யாராவது ஒருத்தன் நிறுத்தினால் போதும்... அனைத்தையும் ஒரு நொடியில் சரிசெய்துவிடலாம். ஆனால் அந்த ஒரு நொடி, சராசரி மனிதனுக்குக் கிட்டிவிடாமல் ஆளும் வர்க்கத்தால் ஆண்டாண்டு காலமாக மறைக்கப்பட்டே வருகிறது !

மேற்கு நாடுகளில் கிறிஸ்த்துவமே பிரதானம். வளைகுடா நாடுகளில் இஸ்லாம் ஒன்றே மதம். ஆசிய நாடுகளின் பல நாடுகள் பெளத்த சமயத்தைப் பின்பற்றும் நாடுகள். இவற்றுக்கெல்லாம் விதிவிலக்காய் உலகின் அனைத்து மதங்களையும் தன்னுள்ளே கொண்டு, அந்தந்த மதத்தவருக்கெனத் தனித்தனி கலாச்சாரப் பினைப்புகளையும்கொண்ட உலகின் ஒரே தேசம் இந்தியா மட்டும்தான்.

இந்து மதத்தின் தாய் மடியாய் திகழும் இந்தியாவின் முஸ்லிம்கள் மற்ற நாடுகளின் முஸ்லிம்களிலிருந்து மிகவும் வேறுபட்ட, தனிக் கலாச்சார அடையாளம் கொண்டவர்கள். அதே போல இந்திய கிறிஸ்த்துவப் பாரம்பரியமும் தனித்துவமானது. கேரள திருச்சபையின் புகழ் வாட்டிகன்வரை பரவிய ஒன்று. தேசத்தின் பெருமைகளாய் பேசப்படவேண்டிய இவையனைத்தும் மக்களிடையே பகைமை வளர்க்க பகடைகளாய்ப் பயன்படுத்தபடுகின்றன !

மதவாத பரப்புரைகள் இருள்மேகங்களாய் இந்தியவான் முழுவதும் சூழ்ந்துவருகின்றன.

பெரியாரின் பூமியில் மதப்பருப்பு வேகாது எனக் கூவி கூவியே விஷ விதைகளைத் தமிழகத்திலும் தூவி வருகிறர்கள் ! தீவிர வலதுசாரிகளை எதிர்க்கும் பாணியில் தந்திரமாய் அவர்களை வளர்க்கும் பணியில் சில ஊடகங்களும் அடக்கம் !

தூண்டிவிடுபவர்களும் துண்டிக்கத் தூண்டுபவர்களும் எங்குமே பாதிக்கப்படுவதில்லை. உலகின் ஏனைய பிரச்சனைகளைப் போல மததுவேச அரசியலால் பதிக்கப்படுபவர்களும் தேசத்தின் அன்றாடங்காய்ச்சிகள்தான் ! அமெரிக்க அதிபரும், இஸ்ரேல் மற்றும் சிரியாவின் அரசியல்வாதிகளும் ஆபத்து வட்டத்துக்குள் இல்லை ! இந்திய பிரிவினையில் லட்சம் லட்சமாய் அழிந்தது அடுத்த வேலை சோற்றுக்கு வழியில்லாத இந்துக்களும் இஸ்லாமியர்களும்தான் !

இதையெல்லாம் ஒரு நொடிகூட யோசிக்கவிடாதபடி மதம் என்னும் ஓப்பியம் சாமானியர்களின் சிறுமூலையில் தொடர்ந்து ஏற்றப்படுகிறது !

இவற்றையெல்லாம் மீறி, நோன்பு தொழுகைக்குக் கோவில் இடத்தைக் கொடுத்த இந்துக்கள், இந்து குழந்தைகளைத் தத்தெடுத்த இஸ்லாமிய பெண்கள் என ஆங்காங்கே நிகழும் ஒரு நொடி நிகழ்வுகளும் அடுத்தடுத்த பரப்புரைகளில் கானல் நீராய்  காணாமல் போய்விடுகின்றன.

இந்தியாவின் ஒவ்வொரு இந்துவின் வெற்றியிலும் ஒரு ஒற்றை இஸ்லாமியனுக்காவது பங்கிருக்கும் ! அதே போல ஒரு ஒற்றை இந்துவின் உதவியாவது இல்லாமல் ஒரு இ ஸ்லாமியனாலோ கிறிஸ்துவனாலோ இங்கு வளர முடியாது ! இதுதான் இந்த மண்ணின் நிலை ! இந்தத் தேசத்தின் வரம் ! இதை நாம் ஒவ்வொருவரும் ஒரு நொடி யோசித்தாலே அனைவரின் மீதும் நேசம் பிறக்கும் !

அளவுக்கு மீறிய அதிகாரவர்க்கத்தின் அராஜகமும், அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகளும், மதபோதகர்களின் விஷ பிரசங்கங்களும் அவர்களுக்கே எதிரான ஒரு நொடியை பிரசவிக்கும் ! அந்த ஒரு நொடியில் சாமானியர்களின் புத்தியில் வெடிக்கும் கிளர்ச்சிதான் உலகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கின்றது ! பிரெஞ்சு புரட்சியைத் தோற்றுவித்ததும் பொதுவுடமையைத் தூக்கிபிடித்ததும் அதுதான். காந்திக்கும் முன்னதாகச் சுதந்திர வேட்கையைத் தூண்டிவிட்ட சிப்பாய் கலகமும் சாமானிய மக்களின் புத்தியில் வெடித்த ஒரு நொடி கிளர்ச்சிதான் !

மத நம்பிக்கை என்பதும் காதலை போல, காமத்தை போல அந்தரங்கமானது. மதம் என்னும் வெற்றுடம்பை உங்கள் வீட்டின் நான்கு சுவற்றுக்குள் எப்படியும் ஆராதித்துக்கொள்ளுங்கள்... ஆனால் வெளியே வரும்போது மத நல்லிணக்க சட்டையை மறக்காமல் மாட்டிக்கொள்ளுங்கள். என் மதம் தான் பெரியது என்பவராக இருந்தால்... தயவுசெய்து மதச் சகிப்ப்புத்தன்மை சட்டையையாவது போட்டுக்கொள்ளுங்கள் !

ஒரு நொடி சிந்தித்துப் புத்தாண்டை தொடங்குவோம்... மதம் மறந்து மனிதம் போற்றுவோம் !

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் !


பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

Friday, September 29, 2017

ஒரு ஜிமிக்கி கம்மலும் பல தமிழ் பாடல்களும் !

எந்த வரையறைகளுக்குள்ளும் அடங்காத ஒரு இசைப்பிரியன் நான் ! சில நாட்களுக்குப் பாகவதரின் மன்மத லீலையைக் கேட்பேன்... அடுத்ததாக அமெரிக்கப் பங்க் ராக் குழுவான கிரீன் டே பாடிய " வாக் அலோன் " பாடலுக்குத் தாவி விடுவேன் ! சில வருடங்களுக்கு முன்னர்ப் பன்வாரி தேவி என்ற ராஜஸ்தான் மாநில நாட்டுபுற பாடகியும் ஹார்ட் கெளர் என்ற இந்திய ராப் பாடகியும் ராம் சம்பத்தின் இசையில் பாடிய பியூஷன் வகைப் பாடலை கேட்க நேர்ந்து, பல மாதங்களுக்கு அந்தப் பாடலை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தேன் ! எனக்கு ராப் ஆகாது என்றாலும் அத்தனை வாத்தியங்களின் இசையையும் மீறி, தனித்துத் தெறிக்கும் பன்வாரி தேவியின் குரல் அந்தப் பாடலை வேறு உயரத்துக்கு இழுத்துச் செல்லும் ! சமீப நாட்களாக " டசக்கு டசக்கு " பாடலை அடிக்கடி பரோட்டா நல்லிக்கறி சாப்பிட்டபடி கேட்டு கேட்டு அஜீரணக் கோளாறாகிவிட்டது !
இசைப்பிரியன் என்று சொல்லிக்கொள்கிறேனே தவிர, நான் ஒரு பாடலின் இரண்டு வரிகளைக் கூட ராகத்துடன் பாடத்தெரியாதவன் ! கூழாங்கற்களையும் தாண்டி, மலையையே விழுங்கி சாதகம் செய்தாலும் எனக்குக் குரல்வளம் தேறாது என்பதைப் பள்ளி பருவத்தில் பங்குபெற்ற முதல் பாட்டு போட்டியிலேயே தெரிந்துக்கொண்டதால் குளியலறையில் கூட நான் பாடுவதில்லை !

ஒரு பாடல் பிரபலமாகி வருகிறது என்ற செய்தி காதில் விழுந்தால் அது எந்த மொழி பாடலாக இருந்தாலும் அந்தப் பாடலை எனக்கு உடனடியாகக் கேட்டுவிட வேண்டும் ! கல்லூரி மாணவ மாணவியரின் நடனம் தொடங்கி, வடிவேலு வெர்ஷன், மிஸ்டர்.பீன் வெர்ஷன் எனத் தறிக்கெட்டு பரவிய சமீபத்திய யூ டியூப் வைரலான ஜிமிக்கி கம்மல் மலையாள பாடலையும் அப்படித்தான் கேட்டேன்...

ஜிமிக்கி, கம்மல் போன்ற வார்த்தைகளை வைத்து கல்லூரி மாணவர்கள் மாணவிகளைக் கிண்டலடித்துப் பாடும் பாடலாக அது இருக்கும் என முதலில் நினைத்தேன்... நாம் ஒன்றை தேடினால் நாம் தேடிய ஒன்றுடன் அது சார்ந்த ஆயிரம் தகவல்களையும் கையூட்டுக் கேட்காமல் தரும் இணையம் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கான தமிழ் அர்த்தம் கொடுக்கும் ஒரு காணொளியையும் எனக்கு அருளியது !

கேரளாவை தாண்டி தமிழ் நாட்டையும் ஆட்டி வைக்கும் ஜிமிக்கி கம்மல் பாடல் மற்றும் நடனங்கள் இணையத்தில் தமிழ் நாட்டு கல்லூரி மாணவர்களால்தான் அதிகம் பிரபலபடுத்தபடுகிறது என ஆரம்பித்து, ஒரு அந்நிய மொழி பாடலை கேட்பதற்கு முன்னர் அந்தப் பாடலின் அர்த்தத்தைப் புரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்ற அறிவுரையுடன் தொடங்கிய அந்தக் காணொளியின் மூலம் பாடலின் முதல் இரண்டு வரிகளுக்கான அர்த்தத்தைத் தெரிந்துக்கொண்டேன்...

" என் அம்மாவின் ஜிமிக்கி கம்மலை அப்பா எடுத்துவிட்டார்..
அப்பாவின் சாராயப் பாட்டிலை அம்மா காலி செய்துவிட்டாள் ! "

முதல் வரியையாவது சகித்துக்கொள்ளலாம் இரண்டாவது வரியை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதாக முடிந்த அந்தக் காணொளியை போல இன்னும் பல கண்டன பதிவுகளை இணையத்தில் காண முடிகிறது. அவற்றின் பின்னூட்டங்களில் வாதம் என்ற பெயரில் பொதுவெளியில் பயன்படுத்த கூசும் வார்த்தைகளில் ஒருவரை ஒருவர் திட்டிகொள்கிறார்கள் ! தமிழ் பத்திரிக்கைகளிலும் அந்தப் பாடலின் அர்த்தம் பற்றிய புலம்பல்களைக் காண முடிகிறது. இவற்றையெல்லாம் கண்டவுடன் நான் அடிக்கடி எழுத நினைத்து முடியாமல் போன ஒன்று நினைவுக்கு வந்தது...

தமிழ் சினிமாவின் காதல் பாடல்கள் மற்றும் பெண்கள் சார்ந்த காட்சிகள் !

நான் நிறையத் தேடியும் ஜிமிக்கி கம்மல் பாடலின் முதல் இரண்டு வரிகளுக்கான அர்த்தத்தை மட்டுமே அறிய முடிந்தது. ஒரு தளத்தில் கிடைத்த அரைகுறை ஆங்கில மொழி பெயர்ப்பை வைத்து கணித்தால் அந்தப் பாடல் நாட்டுப்புற அல்லது கானா வகைப் பாடல் வரிகளைக் கொண்டதாக இருக்கும் எனப் புரிகிறது !

ஜிமிக்கி கம்மல் பாடல் வரிகளை ஒழுக்கம், மரியாதை சார்ந்து கண்டிப்பதாக இருந்தால் நம் தமிழ் சினிமாவின் பெருவாரியான பாடல்களைக் கேள்விக்குட்படுத்த வேண்டி வரும் !...

அன்றுமுதல் இன்றுவரை காமத்தை பிரதானப்படுத்தியே காதல் பாடல்களை எழுதி வருகிறார்கள் தமிழ் சினிமாவின் பாடலாசிரியர்கள் ! ஐம்பதுகளில் இலைமறை காயாகக் கவிதைகளில் பொதிந்து, எண்பதுகளில் நடிகைகளின் ஆடைகளைப் போலவே தரம் குறைந்து பின்னர் " எப்படி எப்படிச் சமைஞ்சது எப்படி ? " எனத் தரம் தாழ்ந்த கேள்வியையே பாடலாக்கும் அளவுக்குப் பரிணாம வளர்ச்சியைக் கண்ட திரையுலகம் நம் தமிழ் திரையுலகம் ! முக்கியமாய் எண்பதுகளில் பாடல்வரிகளில் ஆபாசம் கூடியது மட்டுமல்லாமல், அதன் உச்சமாக விசித்திரமான முக்கல் முனங்கல் சப்தங்களும் சேர்ந்துகொண்டன !

" விசித்திர சப்தங்கள் " கொண்ட பாடல் என்றதுமே தமிழ் சினிமா பாடல் ரசிகர்களுக்குச் சகலகலா வல்லவன் படத்தின் நேத்து ராத்திரி யம்மா பாடலும் நிலா காயுது பாடலும் நிச்சயம் ஞாபகத்துக்கு வரும் !

அந்தப் படம் வெளிவந்த காலகட்டத்தில் கமல் உச்ச நட்சத்திரமாக ஜொலித்தார் என்றால் இசையமைத்த இளையராஜா எதையும் சாதிக்கும் இடத்தில் இருந்தார். இந்த இரு ஆளுமைகளும் நினைத்திருந்தால் அந்தச் சப்தங்கள் இல்லாமலேயெ அந்தப் பாடல்களை அமைத்திருக்கலாம். மிக அருமையான அந்தப் பாடல்களும் " விசித்திர சப்தங்கள் " இல்லாமல் வெளிவந்திருந்தாலும் நிச்சயம் வெற்றிப் பெற்றிருக்கும் ! அப்படிப்பட்ட சூழலில் அந்தச் சப்தங்களுக்கான அவசியத்தையும் தேவையையும் நாம் அலசுவதைவிட அவர்களிடமே ஏதாவது பேட்டியின் போது யாராவது கேட்டால் நியாயமாக இருக்கும் எனத் தோன்றுகிறது !

மேற்கண்ட வரிகளுக்காகக் கமல் மற்றும் ராஜா ரசிகர்கள் தயவு செய்து சண்டைக்கு வந்து விடாதீர்கள் ! இது ஒரு உதாரணம் மட்டும் தான் ! அந்தக் காலகட்டத்தில் இளையராஜா முதல் டி.ராஜேந்தர் வரை இன்னபிற இசையமைப்பாளர்களும் அப்படிப்பட்ட பாடல்களை இயற்றியிருக்கிறார்கள்... ரஜினிகாந்தும் " அடிக்குது குளிரு " எனப் பிதற்றியிருக்கிறார் ! நான் மேலே குறிப்பிட்ட " எப்படி எப்படி " பாடல் தேவா இசையமைத்தது !

பலாத்காரத்துக்கு ஆளான பெண் தற்கொலை செய்துகொள்வது அல்லது அவளைப் பாலியல் பலாத்காரம் செய்தவனுக்கே மணம் முடித்து வைப்பது, கேடுகெட்டு அலையும் கணவன் திருந்திவரும் வரையிலும் மனைவி மட்டும் பத்தினி பதிவிரதையாகக் காத்திருப்பது போன்ற காட்சிகள் தொடங்கி, கணவன் வீட்டுக்குச் செல்லும் பெண் தன் கணவனின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி மிச்சமிருக்கும் நேரத்தில் மாமனார் மாமியார் தொடங்கி அந்த வீட்டுத் தொழுவத்தில் இருக்கும் மாடுகள் வரை பணிவிடை செய்து பிறந்த வீட்டின் புகழை நிலைநாட்ட வேண்டும் என்பதான பாடல் வரிகள் என அனைத்திலும் பெண் ஆணுக்கு கீழ்படிந்தே வாழ பிறந்தவள் என்ற ஆணாதிக்க நிலைப்பாட்டின் உச்சமாக, பெண்களை உடல் ரீதியாகவே மட்டும் ஆணுக விரும்பும், பெண்ணைப் போகப் பொருளாக மட்டுமே நினைத்து அடைய துடிக்கும் ஒரு சமூகத்தின் பிரதிபலிப்பாகவே இருந்தது என்பதுகளின் தமிழ் சினிமா !

இதனை இல்லை என மறுக்க விரும்புபவர்களின் உதாரணங்களாக நூறாண்டு கண்ட சினிமாவில் நிறைய விதிவிலக்கான படங்களும், பாடல்களும் உண்டு என்றாலும் பாலியல் அர்த்தம் பொதிந்த காதல் பாடல்களும், கதாநாயகியின் உடல் கவர்ச்சியை முன்னிறுத்தும்காட்சிகளுமே அதிகம் என்பதை யாராலும் மறுக்க இயலாது.

சரி, இனி ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு வருவோம்...
 வேற்று மொழி பாடல்கள் தமிழ் நாட்டில் தறிகெட்டு ஹிட்டடிப்பது ஒன்றும் புதிதில்லை. அதே போலப் பல தமிழ் பாடல்களும் எல்லை, மொழி பேதங்கள் தாண்டி பிரபலமாகியதும் உண்டு ! பிரபுதேவா நடித்த லவ்பேர்ட்ஸ் படம் வெளிவந்த சமயத்தில் அந்தப் படத்தின் " நோ ப்ராப்ளம் " பாடலை ஒரு ஆப்ரிக்க இளைஞன் பாரீஸ் மெட்ரோ ரயிலில் பாடிக்கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன் ! அந்தப் பாடலின் வரிகளும் தரமானவை அல்ல ! ஒரு பாடல் பிரபலமாவதற்குப் பிரதானம் அதன் தாளக்கட்டும் இசையும்தானே தவிர மொழி இரண்டாம் பட்சம்தான் ! கொரிய பாடலான கங்னம் ஸ்டைலை ஐரோப்பியர்கள் தொடங்கி அமெரிக்கர்கள்வரை அனைவரும் அரசியல் மறந்து ஹிட்டாக்கியதை மறக்க கூடாது !!!

என்பதுகளின் நடுவில் பாகிஸ்தான் பாப் பாடகரான ஹசன் ஜஹாங்கீர் பாடிய 
" ஹவா ஹவா " பாடல் தமிழ் நாட்டை ஆட்டிவைத்தது ! யூ டியூப் இல்லாத அந்தக் காலத்தின் அனைத்து பள்ளி கல்லூரி விழாக்களிலும் அந்தப் பாடலுக்கு நடனம் ஆடினார்கள் ! இன்றுவரை அந்தப் பாடலுக்கான அர்த்தம் யாருக்கும் தெரியாது ! " சோலி கே பீச்சே " பாடலும் தமிழர்களைக் கிறுகிறுக்க வைத்து, பின்னர் " சோலிக்குள் என்ன இருக்கு " எனத் தமிழ் பதிப்பாகவே வெளியான போதும் பெரிதாகக் கண்டிக்கப்படவில்லை !

ஜிமிக்கி கம்மல் மட்டும் இத்தனை வாத பிரதிவாதங்களை உண்டு பண்ணுவதற்குக் காரணம் ? ...

அம்மாவின் கம்மலை சுடும் அப்பாவை மன்னித்துவிடலாம் ! அப்பாவின் பாட்டிலை அண்ணனோ தம்பியோ காலி செய்ததாகக் கூறினாலும் தவறில்லை !ஆனால் அம்மா குடித்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை ! சட்டென உணர்ச்சிவசப்படாமல் யோசிக்க வேண்டும்... அம்மாவுக்குப் பதிலாக அக்கா என்றாலும் தங்கச்சி என்றாலும் இங்குச் சலசலப்புதான் எழும் !

அம்மா என்ற மரியாதை மதிப்புமிக்க ஒழுக்க ஓட்டுக்குள் ஒளிந்திருப்பது பெண் எப்படிக் குடிக்கலாம் அல்லது குடிப்பதாகச் சொல்லலாம் என்ற ஆணாதிக்கக் கசப்பு தான் ! பெண்கள் பார்க்க நடு வீட்டில் வைத்து ஆண்கள் குடிக்கலாம்... அப்படிக் குடிக்கும் ஆணுக்கு பெண்பிள்ளை சிக்கனும், ஆம்லட்டும் சைடு டிஷ்ஷாகச் சமைத்துக் கொடுக்கலாம்... ஆனால் அதையெல்லாம் பார்த்து அவள் குடிக்க முயன்றால் போச்சு !

மேலும் இந்தப் பாட்டுக்கு நடனமாடி பிரபலமான ஷெரின் என்ற பெண்ணைப் பற்றிய யூ டியூப் பதிவுகளும் நம் சமூகத்தில் புரையோடியிருக்கும் பாலியல் வக்கிரத்துக்குச் சாட்சி. இவ்வளவுக்கும் அந்தப் பெண் பாரம்பரிய உடையில், கண்ணியமான நடன அசைவுகளுடன் தான் ஆடியிருக்கிறார்... இது போன்ற நடனங்கள் இன்று பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சகஜம். நம் வீட்டு பெண்பிள்ளை இப்படி ஆடிய ஒரு நடனத்துக்கு வக்கிர கருத்துகள் வந்து விழுந்தால் நம் பாடு எப்படி இருக்கும் ?

பாலியல் உணர்ச்சியைத் தூண்டும் விதமாக அமைந்த ஊடக சாளரங்கள் ஒருபுறம்,பாலியல் உணர்ச்சி பேசக்கூடாத பாவம் என்பதான ஒழுக்கம் மறுபுறம் எனப் பிரிந்த இரெண்டுங்கெட்டான் சமூகத்தின் யதார்த்த அவலம் இது !

சமீப படம் ஒன்றின் நகைச்சுவை காட்சியில் அப்பாவின் மது பாட்டிலை அவரது இரு மகன்களும் தங்களுக்காக ஒளித்துக்கொள்வார்கள். அப்பா தேடி அலுத்த பிறகு, இருவரும் குடிக்க ஆரம்பிக்கும் நேரத்தில் அம்மா ஒரு குவளையை வளைந்து நெளிந்து உடம்பெல்லாம் வலி என்றபடி நீட்டுவார்... " நீயும் சரக்கு போடுவியா ? " எனக் கேட்கும் மகனிடம், எனக்கு அல்ல உன் அப்பாவுக்கு என்பார் !

இந்தக் காட்சியை விடவும் ஜிமிக்கி கம்மல் பாடல் வரிகள் ஒன்றும் மோசமானதாகத் தோன்றவில்லை ! மேலும் அந்தப் பாடலோ அல்லது அதன் காட்சி அமைப்போ என்னைப் பெரிதாகக் கவரவுமில்லை ! ஜிமிக்கி கம்மல் பாடல் ஒரு சீசன் ஹிட் ! அவ்வளவுதான் !
 சரி, பாலிவுட் பாட்ஷாவான ஷாருக்கான் தன் மார்க்கெட்டை நம்பாமல் சன்னி லியோனின் ஜாக்கெட்டை நம்பும் இன்று தமிழ் சினிமாவில் பெண்களைப் பற்றிய பார்வை மாறியிருக்கிறதா ?

சூப்பர் ஸ்டார், உலக நாயகன் தொடங்கித் தல தளபதிகளின் படங்களில் இன்னும் நாபிச்சுழி நடனங்கள் மாறவில்லை என்றாலும் கதையை நம்பும் இயக்குனர்கள், இயக்குனர்களை நம்பும் நடிகர்கள் எனப் புதுஅலையாய்க் கிளம்பியிருக்கும் இளம் தலைமுறை படங்களில் பெண்களைக் காட்சிபடுத்துவதில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை பற்றிச் சினிமாவை அக்குவேறு ஆணிவேறாக அலசும் எந்த விமர்சகரும் இதுவரை விரிவாக அலசாதது ஆச்சரியம் !

தமிழ் சினிமாவின் மாற்றத்தை விளக்க எத்தனையோ சமீபத்திய படங்களை உதாரணமாகச் சொல்லலாம் என்றாலும் , ஒரு நல்ல சினிமா தரும் அனுபவத்தை எனக்கு முழுவதுமாக வழங்கிய விக்ரம் வேதா படத்தின் இரு காட்சிகளைக் குறிப்பிட்டாலே போதும் எனத் தோன்றுகிறது !

இளம் கணவன் மனைவி கூடலின் ஆரம்பமாகத் தொடங்கும் யாஞ்சி பாடல்... ஒரு காட்சிக்குள் மிகத் தாமதமாக நுழைந்து, விரைவாக வெளியேறுவதே ஒரு சிறந்த இயக்குனருக்கான அடையாளம் என்பதற்கு உதாரணமாக அமைந்த இந்தப் பாடலின் காட்சியமைப்பை நிலா காயுது பாடலுடன் ஒப்பிட்டு யோசித்தால் மாற்றம் புரியும் !

அதே போல டசக்கு டசக்கு பாடல் !

எண்பதுகளின் சினிமாவில் கடத்தல்காரர்களும் அடியாட்களும் கூடும் கொண்டாட்ட காட்சி என்றால் மதுபாட்டில்கள் உருளும் மேசை மேல் டூ பீஸ் உடையில் ஒரு நடன மங்கையும் உருண்டு குலுங்கி ஆட வேண்டியது அவசியம் ! ஷாருக்கானின் ராயீஸ் படத்திலும் அப்படிப்பட்ட காட்சி இடம்பெற்றதைதான் அவர் ஜாக்கெட்டை நம்பியதாகக் குறிப்பிட்டேன் !

ஆனால் டசக்கு டசக்குப் பாடலில் தாடி மீசையுடன் தாதாக்கள் மட்டுமே ஆடி களித்தது தமிழ் சினிமாவின் அற்புத மாற்றம் !



பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

Thursday, September 14, 2017

வாழ்த்துகிறோம் !



ன்று திருமண வெள்ளிவிழா காணும் புதுவை வேலு ராஜலெட்சுமி தம்பதியரை வலைநட்புகள், பிரான்ஸ் அக்லி தமிழ் சங்கம், குடும்பதினர்கள் மற்றும் நண்பர்கள் சார்பில் வாழ்த்துகிறேன்...

குழலின்னிசை மற்றும் பிரான்ஸ் அக்லி தமிழ் சங்கம் மூலமாக தமிழ் தொண்டாற்றும் இனிய நண்பர் புதுவை வேலு, அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் பதினாறு சீர்களையும் சிறப்புடன் பெற்று, இன்னும் ஒரு நூற்றாண்டு செழித்தோங்க இயற்கையை வேண்டுகிறோம்.

Saturday, January 14, 2017

ஜல்லிக்கட்டு



 " னி உலகின் ஒவ்வொரு பிரபலத்துக்கும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே கிடைக்கும் ! " என்ற வரி தனி மனிதர்களுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, தமிழ்நாட்டு அரசியல் சூழலுக்கு முற்றும் பொருந்தும் !

கச்சத்தீவு, ஈழத்தமிழர் பிரச்சனை, நதிநீர் பங்கீடு போன்றவைகளோடு இப்போது ஜல்லிக்கட்டும் சேர்ந்துவிட்டது ! சேது சமுத்திர திட்டத்தின் இன்றைய நிலை என்ன என்பது யாருக்கும் தெரியாது ! ரூபாய் நோட்டுப் பிரச்சனை தீர்ந்ததா எனத் தெரியாது... ஜெயலலிதாவின் மரணம் குறித்த ஐயப்பாடுகள் மறக்கப்படத் தொடங்கிவிட்டன... சென்னையைத் தாக்கிய இரண்டாவது புயலைப்பற்றிப் பேசவே இல்லை ! வரலாறு காணாத தலைமை செயலக வருமானவரி சோதனைக்கான காரணங்கள் மற்றும் அதன் விபரங்கள் அடுத்த ஒரு " அரசியல் மிரட்டலுக்கான " தேவை வரும் வரை வெளியிடப்படமாட்டாது !...

அதற்குள் அடுத்த ஐந்து நிமிடத்தை ஜல்லிக்கட்டுக்காகத் தமிழக அரசியல்வாதிகள் ஒதுக்கிவிட்டார்கள் !

தமிழ்நாட்டின் அனைத்து பிரபலங்களும், முக்கியமாய்த் தமிழனின் கலாச்சாரம் தள்ளாடுவதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்றான சினிமாவின் பிரபலங்களும் வரிந்துகட்டிக்கொண்டு வந்துவிட்டார்கள் ! பீப் பாடலின் மூலம் " தமிழர் கலாச்சாரம் " பரப்பிய நடிகர் கூட ஜல்லிக்கட்டு தடையைக் கண்டித்துக் கூவுகிறார் ! இவர்களுக்கெல்லாம் மேடை அளிக்கும் தமிழக ஊடகங்களும் அதன் மக்களைப் போலவே மறக்க பழகிவிட்டன ! மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி, எதிர்கட்சிதான் காரணம், ஆளும் கட்சிதான் காரணம் என வழக்கம் போலவே ஒருவருக்கொருவர் உதைத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள் !

உணர்ச்சிவசப்பட்டுப் பேசி பேசியே பாழாய் போன சமூகம் நாம் என்பதை மீன்டும் ஒருமுறை
நிருபிக்கப் போகிறோம் !

நான் இந்தக் கட்டுரையைப் பதிவேற்றிய வேலையில் தமிழ்நாட்டில் " தன் எதிர்காலம் " கருதி மத்திய அரசு ஏதாவது அவசர சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டை அனுமதித்திருக்கலாம் அல்லது ஜல்லிக்கட்டு நடத்தப்படாமலேயே தமிழர் திருநாள் முடிந்திருக்கலாம்... அத்துடன் ஜல்லிக்கட்டுக்கான ஐந்து நிமிடம் முடிந்துவிடும்...
அடுத்தப் பொங்கல் வரை !

ளவட்டக்கல், சிலம்பம் போன்ற எத்தனையோ பழந்தமிழ் வீரவிளையாட்டுகள் மறக்கப்பட்டும் மறைந்துக்கொண்டும் இருக்கும் வேலையில் ஜல்லிக்கட்டை மட்டும் தமிழனின் தன்மானம், வீரத்தின் அடையாளம் என்றெல்லாம் அதிகம் பேசி, ஆராவாரப்படுத்துவதற்குச் சுயநல அரசியலே காரணம். மேலும் வீரம் என்பதின் அடையாளம் காலத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப மாறக்கூடியது. பழந்தமிழர் போற்றிய அறம், அன்பு, ஈகையுடன்
 " பிறன்மனை நோக்கா பேராண்மையுடன் " வாழ்ந்து கட்டுவதே இன்றைய சூழலில் வீரம் என நான் நினைக்கிறேன்... இவையிரண்டும் என் தனிப்பட்ட கருத்துகள் !

சரி, இனி போராட்டத்துக்கு வருவோம்...

ல்லிக்கட்டு தமிழர்களின் அடையாளம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை ! அதனை நடத்துவது நடத்தாதது பற்றித் தமிழ் சமூகம்தான் தீர்மானிக்கவேண்டும் என்பதிலும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது ! ஆனால் ஜல்லிக்கட்டை காக்கிறோம் எனத் தங்களின் மார்க்கெட்டை தக்கவைத்துக்கொள்ளச் சினிமா நடிகர்களும், தங்களின் சுயநல அரசியலுக்காக அரசியல்வாதிகளும் அடித்துபிடித்து ஓடி வருவதுதான் கொடுமை ! தமிழ்நாடு சரியான தலைமை இன்றி எடுப்பார்கைப்பிள்ளையாகக் கிடப்பதுதான் வேதனை !

சரி, அப்படியானால் இந்தப் போராட்டத்தை யார் முன்னெடுக்க வேண்டும் ?

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கெனத் தமிழ்நாடு தழுவிய ஒரு தனி அமைப்பு அல்லது சம்மேளனம் உண்டா எனத் தெரியவில்லை... அப்படி இருக்கும் பட்சத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பு அவர்களுக்கே உண்டு ! அரசியல்வாதிகளும் இன்ன பிறரும் அவர்களுக்கு ஆதரவாக இயங்கலாம்... அப்படி ஒரு சம்மேளனம் இல்லாவிட்டால் அதை ஏற்படுத்தவேண்டிய அவசியத்தைச் சற்று விரிவாகவே பார்ப்போம்...

மிருகங்களை மனிதன் அடக்கும் வீரவிளையாட்டுகள் உலகின் அனைத்து ஆதி நாகரீகங்களிலும் உண்டு. இவ்விளையாட்டுகளை இரண்டுவிதமாகப் பிரிக்கலாம்... தனி மனிதனோ அல்லது ஒரு சிறு குழுவோ மிருகத்தை ஆயுதங்களுடன் எதிர்கொண்டு அடக்கி கொன்றுவிடுவது முதல் வகை. எதிர்கொள்ளும் மிருகம் வலுவிழக்கும்வரை அதனை அலைகழித்து, தன் பலத்தின் மூலம் அதனைக் களைப்புறச்செய்வதுடன் நிறுத்திகொள்வது இரண்டாம் வகை. ஜல்லிக்கட்டு இரண்டாம் வகையைச் சார்ந்தது.


ஜல்லிக்கட்டுக்கு ஈடாக ஸ்பெயின் நாட்டின் கொரிதா எனப்படும் எருது அடக்கும் விளையாட்டைக் குறிப்பிடலாம். ஆனால் கொரிதாவில் விடப்படும் எருது " தொரெரோ " என்றைழக்கப்படும் வீரனால் அலைக்கழிக்கப்பட்டுச் சிறு குத்தீட்டிகளால் குத்தப்பட்டு இறுதியில் பரிதாபமாக உயிரிழக்கும்.

இந்தக் கொரிதா விளையாட்டுக்கு எதிராக மேலை நாடுகளில் ஒரு பெரும் இயக்கமே போராடிக்கொண்டிருக்கிறது. இதில் கலைஞர்களும் அடக்கம். இந்த விளையாட்டுக்கு எதிராக, கொல்லப்படும் எருதுவே பாடுவதாக அமைந்த பிரெஞ்சு பாடகன் பிரான்சில் கப்ரேலின் பாடலை கேட்பவர்களின் கண்களில் நீர் கோர்த்துவிடும் !

ஜல்லிக்கட்டின் விதிமுறைகளைக் கொஞ்சமும் அறிந்திராத பீட்டா போன்ற அமைப்புகள் அதனைக் கொரிதா விளையாட்டாகப் பாவிப்பது ஜல்லிக்கட்டு தடைக்கான முதல் காரணம்.

அடுத்ததாக, மிருகவதை காரணத்துக்கு முன்னதாகவே அதில் பங்குபெறுவோரும், பார்வையாளர்களும் காயமடைவதையும், உயிரிழப்பதையும் காரணமாகக் கொண்டு சில அமைப்புகள் ஜல்லிக்கட்டை எதிர்த்ததை இந்தத் தருணத்தில் குறிப்பிட வேண்டும். அதில் உண்மை இல்லாமல் இல்லை ! மேலும் மாடுகளை விளையாட்டு விதிகளுக்குப் புறம்பான வழிகளில் வெறியூட்டும் செயல்களும் உண்டு என்பதை ஜல்லிக்கட்டின் விபரம் அறிந்தவர்கள் மறுக்கமாட்டார்கள் !

காலத்துக்கு ஏற்ப மாறுவதும் மாற்றப்படுவதுமே நிலைக்கும் என்ற இயற்கை விதியையும் கருத்தில் கொள்ள வேண்டும் ! ஒரு காலத்தில் கத்தி சண்டை என்றால் தோற்பவன் காயப்பட வேண்டும் அல்லது கொல்லப்பட வேண்டும் என்ற விதி இருந்தது. அந்தச் சண்டை கலையின் விதிகள் காலத்துக்கு ஏற்ப மற்றப்பட்டதினால்தான் இன்றும் அக்கலை " Fencing " என்ற பெயரில் ஒலிம்பிக்கிலும் விளையாடப்படுகிறது.

நான் குறிப்பிடும் ஜல்லிக்கட்டுக்கான அமைப்பு முதலில் விளையாட்டு நடத்தப்படும் முறையை இக்காலத்துக்கு ஏற்ப, பார்வையாளர்களுக்கும் மைதானத்துக்கும் இடையே பாதுகாப்பு அரண், வாடிவாசலின் அமைப்பு, விளையாட்டில் பங்குபெறும் எருதுகள் மற்றும் வீரர்களுக்கு மருத்துவப் பரிசோதனை என விதிகளை வரையறுக்கவேண்டும். அவசர சிகிச்சைக்கான ஏற்பாடுகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு முழுமைக்குமான அந்த அமைப்பின் அனுமதி மற்றும் கண்காணிப்பின்கீழ்தான் ஜல்லிக்கட்டு நடத்தப்படவேண்டும் என்ற விதி முக்கியம்.

மேலும் தமிழ் கலாச்சாரம் இந்திய தலைநகரத்துக்கே சரியாகப் புரியாத நிலையில் பீட்டா போன்ற சர்வதேச அமைப்புகள் புரிந்துகொள்ளும் என நினைப்பது நம் தவறு ! தமிழ் கலாச்சாரச் சூழலை தமிழ்நாட்டின் எந்த அரசியல் பிரதிநிதியும் டெல்லியில் முறையாக, தொடர்ந்து பதிவு செய்யவில்லை என்ற உண்மையையும் நாம் உணர வேண்டும். சுப்ரமணியம் சுவாமி போன்றவர்களை நம்பாமல் (!) இந்தப் பொறுப்பையும் ஜல்லிக்கட்டு அமைப்பே ஏற்க வேண்டும்.

இப்படியான ஒரு கட்டுக்கோப்பான அமைப்புடன் நீதிமன்றத்தில் வாதாடி மட்டுமே ஜல்லிக்கட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியும் !

சில நாட்களாய் ஒரு கேள்வியை என் மனதிலிருந்து நீக்கமுடியவில்லை..

தமிழ்நாட்டில் நூறு விவசாயிகளுக்கு மேல் தற்கொலையாலும், அதிர்ச்சியினால் உண்டான மாரடைப்பாலும் இறந்துவிட்டதாகவும், பதிணெட்டு லட்சம் ஏக்கர் அளவுக்கான டெல்டா நிலங்கள் தூர்ந்துவிட்டதாகவும் செய்தி...

ஜல்லிக்கட்டு விவசாயியின் வீர விளையாட்டு... தான் பாடுபட்டு வளர்த்த பயிர் அறுவடையாகி வீடு வந்து சேர்ந்த மகிழ்ச்சியில், உழவில் தனக்குத் துணை நின்ற காளைகளைச் சீண்டி விளையாடி வீரத்துடன் தழுவும் நிகழ்வு...

அந்த விவசாயச் சமூகமே அழியும்போது ஜல்லிக்கட்டை மட்டும் போராடி பாதுகாப்பதினால் யாருக்கு என்ன பயன் ?



இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

 பட உதவி : GOOGLE


Sunday, January 1, 2017

நடப்பவை நன்மைகளாகட்டும் !



மீன்டும் ஒரு ஜனவரி பிறந்துவிட்டது ! .. ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டைவிட வேகமாக ஓடி மறைவதாகத் தோன்றுகிறது ! அப்படி ஓடி மறையும் ஆண்டுகளுடன் தனிமனித ஒழுக்கம், மனிதநேயம்,சகிப்புத்தன்மை, இரக்கம் போன்றவையும் வேகமாக அடித்துச் செல்லப்படுகின்றனவோ என்ற அச்சம் எழுகிறது...

" நாம் இத்தனை காலமாய்ப் பேணி போற்றும் தனிமனித சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற மனிதகுல மதிப்பீடுகள் அனைத்தும் சட்டெனத் தலைகீழாக மாறக்கூடிய நிச்சயமற்ற ஆண்டாக அமையலாம்... "

பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹோலாந்த் நாட்டு மக்களுக்கு ஆற்றிய புத்தாண்டு உரையின் வரிகள் ! ஒர் அரசியல்வாதியாய் அவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளில் ஒருவர்தான் என்றாலும் இந்த வரிகள் நிதர்சனமானவை !

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் அமைந்த இடதுசாரி மற்றும் வலதுசாரி அரசுகளின் காலம் முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது. அவர்களின் எழுபது ஆண்டுகால ஆட்சியில் அலுத்துப்போன உலக மக்களின் தேர்வாய் தீவிர வலதுசாரிகள் பல நாடுகளில் ஆட்சிக்கு வந்துகொண்டிருக்கிறார்கள்... மதத்தின் நிழலில் குளிர்காயும் பயங்கரவாதமும், பிராந்திய போர்களும் உலகெங்கும் பரவுகின்றன !

மொழி, இனம், நிறம், ஜாதி, பிராந்தியம் என மக்களைப் பிளவுபடுத்தி " பய அரசியல் " நடத்தும் இத்தீவிர வலதுசாரி அரசுகளையும் பின் நின்று ஆட்டுவிப்பது ஒரு பெருவணிகக் கூட்டம் ! ஒவ்வொரு நாட்டின் விதியும், அந்நாட்டு ஏழைபாழைகளின் தலையெழுத்தும் விரல் எண்ணிக்கைக்குள் அடங்கிவிடும் அந்நாட்டு பெருதொழிலதிபர்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது !

இலங்கையில் நடந்ததையும், சிரியாவில் நடப்பதையும் சலனமற்றுத்தான் பார்த்துக்கொண்டிருந்தோம்... பார்த்துக்கொண்டிருக்கிறோம் ! இஸ்ரேலில் பூகம்பம் என்றால் பாலஸ்த்தீனியர்களுக்குக் கொண்டாட்டம் ! இந்தியாவில் புயலடித்தால் பாகிஸ்தானில் மகிழ்ச்சி தெரிகிறது ! பாகிஸ்தானில் குண்டு வெடித்தால் இந்தியாவில் குதூகலம் !

"மக்களின் மென்முனைகளைத் தட்டிவிட்டால் நாகரீகத்தின் உச்சியில் இருப்பவர்களுக்கும் இதுதான் நடக்கும் " என, நண்பர் மீரா செல்வக்குமார் காவிரி நதி கலவரத்தின் போது பதிந்த வரிகள் உலகின் அனைத்து பகுதிக்கும் பொருந்துகிறது !

இயற்கைக்கு முன்னால் இஸ்ரேலும் பாலஸ்த்தீனமும், இந்தியாவும் பாகிஸ்தானும், அமெரிக்காவும் ரஷ்யாவும் அனைத்தும் ஒன்றுதான் என்பது ஏனோ இன்னும் புரியவில்லை !

பூமியை, அதன் இயற்கை வளங்களை வன்புணர்ந்த பாவமும் " அந்தப் பெருவணிகக் கூட்டத்தையே " சாரும் ! அந்தந்த கால விஞ்ஞான வளர்ச்சியினால் கண்டு பிடித்தவற்றையும், உற்பத்தி செய்தவற்றையும் நீண்ட காலக் கேடுகளைப் பற்றிச் சிந்திக்காமல், சரியாக ஆராயாமல் வியாபாரம் ஒன்றையே நோக்கமாக்கி சந்தைபடுத்தி, இருந்த ஒரே பூமி பந்தையும் ஓட்டையாக்கிவிட்டார்கள் ! அவர்கள் சந்தை படுத்திய அனைத்தையும் வாங்கித் தின்ற, அடுக்கிச் சேர்த்த ஆட்டுமந்தை கூட்டங்களான நமக்கு இன்னும் விழிப்பு வாய்க்கவில்லை !

சாமானிய மக்கள் சகிக்க முடியாமல் பொங்கியெழுந்த போதெல்லாம் சரித்திரம் சரியாகத் திருத்தப்பட்டிருக்கிறது என்ற வரலாற்றுச் சான்று ஒன்று தான் இத்தனை அவநம்பிக்கைகளையும் தாண்டித் தெரியும் பெருநம்பிக்கை ஒளி !

ஒவ்வொருவரும் பகுத்தறிவுடன் சற்றே சிந்தித்து அவரவர் " மென்முனைகளை " விழிப்புடன் பாதுகாத்தாலே போதும்... இவ்வுலகின் தலைவிதி மாறும் !

இனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !


 இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

 பட உதவி : GOOGLE