Monday, March 30, 2015

த்ரோ தேம்பெர்மாசியோன் துய் லேம்பெர்மாசியோன் !

ன்ன ஆச்சு ? ஏதோ அப்படி இப்படிக் கிறுக்கினாலும் நல்லா தான் இருந்தார்... திடீர்ன்னு அடிக்கடி வலைதளத்திலிருந்து காணாமல் போக ஆரம்பிச்சார்... இப்ப புரியாத மொழியில தலைப்போட கிறுக்கறார்... என்ன ஆச்சு இந்தச் சாமானியனுக்கு ?

வுட்வேர்ட்ஸ் கிரேப் வாட்டர் கொடுக்கச் சொல்லலாமா ?!...

குழம்ப வேண்டாம் அன்பர்களே !


" Trop d'information tue l'information " என்ற பிரெஞ்சு மேற்கோளை அப்படியே தமிழில் எழுதி தலைப்பிட்டேன்... !

 பிரெஞ்சு அரசியல்வாதியான நோயேல் மாமேர் ( Noël Mamère )

என்பவரால் முதலில் பயன்படுத்தப்பட்ட இந்த மேற்கோள் இன்று மேலாண்மை துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் மேற்கோள். இன்றைய இணைய வாழ்க்கைக்கு மிகப் பொருத்தமாக அமைந்த வார்த்தை தொடர் !

" Too much information kills information " என ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம்.

இந்த மேற்கோளை " அதிகமான செய்தி செய்தியை கொன்றுவிடும் ! " என ஜூனூன் தமிழில் மொழி பெயர்க்கவேண்டிய அவசியமே இல்லாமல் பண்ணிவிட்டார்கள் நம் முன்னோர்கள் !

" அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு " என்ற சொல் வழக்கிலேயே எல்லாம் அடங்கிவிட்டது !( இன்றைய " மச்சான் டாமில் " போல என்பதுகளில் பிரபலமான ஜூனூன் தமிழ் பற்றித் தெரியாத அன்பர்கள் எனக்குத் தனிமடலில் விண்ணப்பம் வைத்தால் விளக்கமாக எழுதுவேன் !!! )

ஒரு செய்தியை பற்றி அதிகமாகப் பேசும் போது அந்தச் செய்தியின் முக்கியத்துவம் போய் விடுகிறது என்பதே இந்த மேற்கோளின் விளக்கம்.

கணினி திரையின் முன்னால் அமர்ந்து ஒரு வார்த்தையைத் தட்டினால் ஓராயிரம் விளக்கங்கள் வந்துவிழும் இன்றைய நிலையில் நாம் தேடுவதின் முக்கியத்துவம் குறைந்தால் கூடப் பரவாயில்லை, சில வேளைகளில் சாதாரணமான ஒரு வார்த்தைக்குக் கூடப் பூதகரமான பல தகவல்கள் வந்துவிடுவதுதான் பிரச்சனை ! அதுவும் நாம் தேடுவது உடல்நிலை மற்றும் நோய்நொடிகள் சம்மந்தமான செய்தி என்றால் சொல்லவே வேண்டாம்...

" அங்கு வலித்தால் அந்த நோயாக இருக்கலாம், இங்கு இழுத்தால் இந்த வியாதியாக இருக்கலாம் ! "

என வந்து விழும் விளக்கங்களின் மூலமாகவே தகவல் தேடுபவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிடும் ஆபத்து  உண்டு ! ஆக, அதிகமான செய்தி செய்தி செய்தியை கொன்றுவிடுமோ இல்லையோ ஆனால் படிப்பவரை கொல்லும் அபாயம் இணையத்தில் உண்டு !!!

நாற்பதை தொட்டுவிட்ட ஞானம் திடீரெனப் பிறந்ததால், சில மாதங்களுக்கு முன்னால் முழு மருத்துவ பரிசோதனை  செய்துகொண்டேன்... எல்லாம் நன்றாக இருந்தாலும் இரத்ததில் கொழுப்பின் அளவு கொஞ்சம் அதிகம். என் வாய்க்கொழுப்பை பற்றி எனக்கே தெரியும் என்றாலும் இந்தக் கொழுப்பு சற்றுப் பயம் ஏற்படுத்திவிட, வழக்கமாக நான் பார்க்கும் மருத்துவர் விடுப்பில் இருந்ததால் வேறொரு மருத்துவரை பார்த்தேன்.

" சர்க்கரையைவிடக் கொழுப்பு ஆபத்தாச்சே... இரத்தநாளம் அடைத்தால் போச்சு... "

என்ற ரீதியில் பேசிவிட்டு கொழுப்புக்கான மருந்தினை தொடர்ந்து உட்கொள்ளச் சொல்லிவிட்டார்.

நானும் மாத்திரையோடு நிறுத்திக்கொள்ளாமல் அவித்த காய்கறி, பாலில்லாத டீயென வெகு சிரத்தையாய் செயல்பட்டு மெலிந்துவிட்டேன். ( மெலிவதற்கு முன்பாகவே நான் நடிகர் மனோபாலா போல் இருந்தவன் ! )

ரு மாதம் ஓடியிருக்கும்... வேலையின் போது இடது கையில் மெல்லிய கடுப்பு... உடனடியாக மருத்துவரை பார்க்க போயிருக்கலாம் !

இன்றுதான் தொலைபேசி தொடங்கி அலைபேசி வரை அனைத்திலும் இணைய வசதி இருக்கிறதே ! ...

" கொழுப்பின் அளவு கூடுதல்... இடது கையில் வலி... " எனத் தட்டியதுதான் தாமதம்...

" தோள்பட்டையில் வலி தொடங்கும்.... நடுவிரல் வரை பரவும்... விட்டுவிட்டு வலிக்கும்... இதயம் அதிகமாகத் துடிக்கும்... வியர்த்துவிடும்... "

என்றெல்லாம் தகவல்கள் விழ விழ, எனக்குக் கண்கள் கட்டி, அதுவரையிலும் கேட்காத இதயத்துடிப்பு ,நண்பர் காரிகன் சிலாகிக்கும் ஆங்கில பாடல்களின் ட்ரம்ஸ் போல ஷார்ப், பேஸ் சகிதம் அதிர, வியர்த்துவழிய தொடங்கியது !


அவசர சிகிச்சைக்கு அலைபேசலாமா... உடனடியாக மருத்துவமனைக்கு ஓடலாமா... இந்த நிலையில் கார் ஓட்ட கூடாதே என்றெல்லாம் பதைத்து...

மதங்களைப் பற்றியெல்லாம் மானாவாரியாய் வலைப்பூவில் எழுதிவிட்டோமே.... உண்மையிலேயே நரகம் இருந்தால் என்னாகும் என்றெல்லாம் பயந்து...

விடுமுறையிலிருந்து திரும்பியிருந்த மருத்துவருக்கு உடனடியாகப் போன் செய்தேன் ! இணையத்தில் மேய்ந்ததைச் சொல்லாமல் வலி என்று மட்டும் சொன்னேன் !!

" பயப்பட ஒண்ணுமில்லை... இருந்தாலும் உடனடியா கிளம்பி வாங்க ! "

வலி விபரங்களைப் பொறுமையாய் கேட்டவர் கூற, " பயப்பட ஒன்றுமில்லை " என்ற வார்த்தையே என்னை ஆசுவாசப்படுத்தியது !

" நான் வருவதற்குள்ள என்ன அவசரம்... ? அப்படி ஒண்ணும் அதிகமா இல்லையே ! முதல்ல உணவுல கட்டுப்பாடா இருந்து மூன்று மாதம் பார்த்துட்டு அடுத்ததா ஒரு பரிசோதனை பண்ணி, குறையலேன்னா மருந்து எடுத்துக்கலாம்... "

நாடி முதல் இதயத்துடிப்புவரை பரிசோதித்துவிட்டு டாக்டர் கூறினாலும், மனதில் இணைய இம்சை !

" அப்ப... கை வலி டாக்டர் ?.... "

" ம்ம்ம்... ஏதாச்சும் கடுமையான வேலை செஞ்சீங்களா ? "

அந்த வார இறுதியில் தோழி வீட்டுத் தோட்டத்தில் ரோஜா பதியன்களுக்காக மாங்கு மாங்கென மண் கிளறியது அப்போதுதான் ஞாபகம் வந்தது !

" ஆ... ஆமா டாக்டர் ! "

" திடீர்ன்னு கடுமையா வேலை செஞ்சா கை வலிக்காம என்ன பண்ணும் ?! "

அசடு வழிய விடை பெற்றேன் !

ணயம் ஒரு மாபெரும் புரட்சி ! ஒரு பத்தாண்டுகள் முன்பு வரை சமூகத்தின் ஒரு சில பிரிவினருக்கு மட்டுமே சாத்தியமாக இருந்த தகவல்களும், பொது அறிவும் இன்று உலகின் கடைக்கோடி மனிதனுக்கும் கிடைப்பதற்குக் காரணம் இணையமே !

ஆனால் அந்த இணயம் நம் முன்னால் இழுத்து வீசும் தகவல்களின் நம்பகத்தன்மை சில வேளைகளில் சந்தேகத்துக்கிடமானதாக அமைந்துவிடுவது தவிர்க்க முடியாதது ! காரணம்,  யார் வேண்டுமானாலும் எதையும் உள்ளிடலாம் என்ற கட்டற்ற கருத்துச் சுதந்திரம் !

இதயம் என்று தேடினால் இதயநோய் நிபுணர் செரியனின் ( இவரின் புகழும் பரிதாப முடிவும் ஞாபகத்தில் இருப்பவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடலாம் ! ) தகவல்கள் கிடைக்கும் அதே நேரத்தில், இதயம் உண்மையிலேயே மன்மத அம்பு துளைத்த ஹார்ட்டின் வடிவத்தில்தான் இருக்கும் என இன்றும் நம்பிக்கொண்டிருக்கும் ரோமியோக்கள் இறவா புகழுக்காக இணையத்தில்  உள்ளிட்ட  தகவல்களும் வந்து விழும் !

ஒரு காலத்தில் அந்தந்த துறை சார்ந்தவர்களுக்கு மட்டுமே கிடைத்த தகவல்களும், நிபுணர்கள் மட்டுமே அறிந்திருந்த செய்திகளும் இன்று சாமானியனுக்கும் இணையம் மூலம் எட்டி விடுகிறது ! அப்படி எட்டும் செய்திகள் வியாதிகளைப் பற்றியது எனும்போது, அவை பலருக்கு தேவையில்லாத மன உளைச்சலை ஏற்படுத்திவிடுகின்றன !


உதாரணமாக, சில வருடங்களுக்கு முன்புவரை தலைவலி என்றால் சரியான தூக்கமில்லை என்போம்... அல்லது வேலைபளு என்போம்... அதுவே சில நாட்கள் தொடர்ந்தால் நேரடியாக மருத்துவரை பார்த்துவிடுவோம்.

இன்று இடைபட்ட நேரத்தில் இணையத்தினால் குழம்பிவிடுவதுதான் பிரச்சனை ! தலைவலி என்று தட்டி பாருங்கள்... தூக்கமின்மை என்ற வார்த்தைக்கு முன்னால் தலை சம்மந்தமான பல நோய்களின் தகவல்கள் முன்னால் பாயும் ! அதுவரையிலும் மருத்துவரை பார்க்கலாம் என நினைத்திருந்தவர் அவசரமாய் அந்த இணையமே விளம்பரம் செய்யும் அதிநவீன மருத்துவமனைக்கு ஓடுவார் !

லஞ்சத்தையும் சேர்த்து பல கோடிகளில் மருத்துவபடிப்பை முடித்து, இன்னும் பல கோடிகள் வங்கி கடன் வாங்கி நவீன மருத்துவமனை கட்டிய மருத்துவர், உங்கள் தலைவலிக்கான காரணம் ஓய்வெடுக்காமல் பேஸ் புக்கில் லைக்ஸ் போட்டுக்கொண்டிருந்ததுதான் என ஒரு வரியில் சொல்லி அனுப்புவதற்கு முன்னால் அத்தனை சோதனைகளையும் முடித்துப் பல ஆயிரம் தொடங்கி ஒரு லட்சம் வரை வாங்கி விடுவார் !

வரும் முன் காப்பது நல்லதில்லையா ?...

நல்லதுதான் ! ஆனால் காப்பதற்கு முன்னால் வந்ததோ இனி வரப்போவதோ என்ன என்று சரியாகத் தெரிய வேண்டுமல்லவா ?!

என்னதான் செய்வது ?

கை கடுப்புக்கான காரணம் ரோஜா பதியனாகவும் இருக்கலாம்... அல்லது இதய நோயின் அறிமுறியாகவும் இருக்கலாம்தான் ! ஆனால் அதனைப் பரிசோதித்து முடிவு செய்ய வேண்டியது " உங்கள் மருத்துவரே " தவிர , இணைய தகவல்கள் அல்ல ! நான் " உங்கள் மருத்துவர் " எனக் குறிப்பிட்டிருப்பதைக் கவனமாக வாசியுங்கள்...

நமக்கென வாடிக்கையான ஒரு பொதுநல மருத்துவர் இருப்பது முக்கியம். அப்படி இருக்கும் பட்சத்தில் உங்களின் தொழில், உணவு பழக்கம், வாழ்க்கை முறை தொடங்கி உங்களுக்கு அடிக்கடி ஏற்படும் உடல்நல குறைவுகள், அதற்கான காரணங்கள் ,நீங்கள்  உட்கொண்ட மற்றும் உட்கொள்ளும் மருந்துகள், அவற்றின் தன்மை என அனைத்தும் அவருக்குத் தெரியும். இந்த தகவல்களின் உதவியாலும், அவரது அனுபவத்தாலும் உங்கள் தலைவலிக்கான காரணத்தை அவர் கண்டுபிடித்துவிடுவார். இல்லையெனில் மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகளையோ அல்லது பார்க்க வேண்டிய மருத்துவ நிபுணரையோ அவரே பரிந்துரைப்பார்.

வாழ்க்கையில் அவசர சிகிச்சைக்கான தேவையும் ஏற்படும்தான். தெரியாத மருத்துவரிடமோ அல்லது அவசரமாய் மருத்துவமனைக்கோ போக நேரிடும்தான். அப்படிப்பட்ட சூழலுக்குப் பிறகு அந்த மருத்துவ முடிவுகளைக் குடும்ப மருத்துவரிடம் காட்டி ஆலோசிப்பது முக்கியம்.

அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுமாயின், கால அவகாசம் இருக்குமானால் குடும்ப மருத்துவரிடமோ அல்லது அவர் பரிந்துரைக்கும் அந்தத் துறை சார்ந்த மற்றொரு மருத்துவ நிபுணரிடமோ ஆலோசித்தல் நலம் !

நலமாய் வாழ்ந்து நாலு பேருக்கு நல்லது செய்வோம் !பட உதவி : GOOGLE
 
இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.