Monday, February 16, 2015

மீண்டும் முபாரக்


இது " முபாரக் " பதிவின் தொடர்ச்சி.

ராஜா ரெக்கார்டிங் சென்ட்டர் நண்பர்களிடம் ஒரு தனித்தன்மை உண்டு. என்னதான் " மகா கெட்ட பசங்க " என்றாலும் நண்பர்களின் குடும்பத்தினர் யாராவது கண்ணில் பட்டுவிட்டால் போதும் !  ஒரு நொடியில் அந்நியன் கெட்டப்பிலிருந்து அடக்கமான அம்பியாக மாறிவிடுவார்கள் !

இந்த பதிவின் முதல் பாகத்தில் முபாரக் பாலகுமாரனை பொசுக்கியதை படித்தவர்களுக்கு அவன் கெட்டப் வித்தையில் கில்லாடி என்பது புரிந்திருக்கும் ! ஆனால் அவனின் கெட்டப் கிழிந்து தொங்கிய ஒரு சம்பவமும் உண்டு ! அதனை கிழித்தது என் அம்மா !!

என் அம்மா எல்லா விசயத்திலும் படு உஷார் ! முக்கியமாய் மனிதர்களை படிப்பதில் !

"  குடிச்சிட்டு வரான்... ஒதுங்கு ! "

வெகு தூரத்தில் நடந்துவருபவனின் தடுமாற்றத்தையும் மிக சரியாக கணித்துவிடுவாள் !

" தோ வந்துடறேன் அத்தை !... "

" இவன் எப்ப சிகரெட் குடிக்க ஆரம்பிச்சான் ?...! "

மதிய சாப்பாட்டுக்கு பிறகு கொல்லைப்புறம் ஓடும் என் இளம் மச்சினனுக்கு பின்னால் முனுமுனுப்பாள்...

" சொன்னேன்ல... பாத்தியா ? "

அவன் சென்றபிறகு கொல்லைப்புறம் சென்று துப்பறியும் சாம்புவாக மாறி சிகரெட் துண்டினை கண்டுபிடித்து காட்டுவாள் ! அம்மாவின் கணிப்பு தப்பியதே கிடையாது ! அதே போல தவறுகளை கண்டிப்பதிலும் படு சிக்கனமாய், நிதானமான ஆனால் யோசிக்க வைக்கும் வார்த்தைகளை உபயோகிப்பாள்.

ரு மாலை நேரம்...

குவார்ட்டர் மப்பும் கையில் சிகரெட்டுமாய் கடைக்கு முன்னால் நின்று என்னுடன் பேசிக்கொண்டிருந்தான் முபாரக்...

" டேய் ! உங்க அம்மாடா ! "

பதிவு செய்யும் பாடலுக்கு ஷார்ப்பை கூட்டிவிட்டு கடைக்கு வெளியே வந்த பாஸ்கர்  சன்னமாய் அலற, முபாரக் சிகரெட்டை பின்னால் மறைத்தான். அம்மா முபாரக்கை சந்திப்பது அதுதான் முதல் முறை ...

" யாரு வீடு தம்பி நீங்க ?... "

" அட... உங்க பாட்டி பேரு.... சுன்னாம்புக்கார வீதியில தானே பூர்வீக வீடு ?... உங்க அம்மாவும் நானும் சின்ன வயசுல ஒண்ணா விளையாடியிருக்கோம் தம்பி... ஏம்பா ? முபாரக் அந்த வீட்டு பிள்ளைன்னு என்கிட்ட நீ சொல்லவே இல்லையே ? "

முபாரக்கின் அம்மா தன் சிறுவயது தோழி என்ற சந்தோசத்தில் அம்மா தொடர, நான் நெளிய ஆரம்பித்தேன்... என்னைவிட அதிகமாய் முபாரக் ! அவன் பின்னால் பிடித்திருந்த சிகரெட் துண்டு விரலை சுட தொடங்கியிருந்தது !!

" சரி தம்பி... அம்மாவை கேட்டேன்னு சொல்லுங்க... "

ஒரு வழியாய் கிளம்பிய என் அம்மா அடுத்து கூறியதில்தான் முபாரக்கின் கெட்டப் கிழிந்தது !

" கையை பச்சை தண்ணியில காட்டுங்க தம்பி... இல்லேன்னா கொப்புளிச்சிடும் ! டேய்... தம்பிக்கு ஏதாச்சும் பாக்கு வாங்கி கொடுடா ! "

முகத்தில் எந்த சலனமும் காட்டாமல் கூறிவிட்டு சட்டென அம்மா நகர, முபாரக்கின் முகம் இருண்டது !

" ஏன்டா... அந்த வீட்டு பையனா இப்படி... "

நான் வீடு திரும்பியதும் மிகவும் வருந்தினாள். முபாரக் குடும்பம் ஊரின் பாரம்பரியமான குடும்பங்களில் ஒன்று. முபாரக்கின் தந்தை வங்கி மேனேஜர். அவனின் அக்காள்கள், அண்ணன் அனைவரும் பட்டதாரிகள்.


ரெக்கார்டிங் சென்ட்டரில் நடக்கும் எங்கள் அரட்டை நள்ளிரவையும் தாண்டும் சமயங்களின்  சில வேளைகளில் முபாரக்கின் தந்தை அவனை தேடி வருவார்.

" டேய்... தம்பி ! சாப்பாட்டை முடிச்சிட்டு வந்து பேசிக்கிட்டிருடா.... "

" நீங்க போங்கப்பா... தோ வந்திடறேன்.... நீங்க சாப்டீங்களாப்பா... ? "

சிகரெட்டை பின்னால் மறைத்துக்கொண்டு கெஞ்சும் தந்தையுடன்  முகம் திருப்பி பேசுவான் முபாரக். அவர் சென்றவுடன் தவறவிட்டதை தேடும் பார்வையுடன் தூர வெறித்தபடி அவசரமாய் புகையிழுப்பான்.

" டேய்... போய் சாப்டுட்டு வாடா ! நீ இப்படியே இருந்தா கடையை இழுத்து  மூடிடுவேன்  ஆமா ! "

சகாயம் அண்ணனின் அதட்டல் மெளனத்தை கலைக்கும் போது சிகரெட்டை தூர வீசிவிட்டு அவசரமாய் எழுந்து போவான் !

முபாரக்குடனான என் நட்பினால் தன் பால்ய தோழியுடனான என் அம்மாவின் தொடர்பு புதுப்பிக்கப்பட்டது ! அவர்கள் வீட்டுக்கு சென்றவள் அவனை பற்றி விசாரித்தபோது,

" அவனையும் மதித்து விசாரிக்கறீங்களே.... "

என அவனின் மூத்த அக்காள் சிரித்ததை வருத்தத்துடன் குறிப்பிட்டாள்.

" எல்லோரும் நல்லா படிக்கற குடும்பத்துல ஒருத்தனுக்கு படிப்பு ஏறலைன்னா பக்குவமா சொல்லனும்... மத்த திறமையை வளர்த்துவிடனும்... அதில்லாம பிஞ்சியிலேயே ஒண்ணுக்கும் உதவாதுன்னு திட்டினா வெம்பிதான் போகும் ! "

இன்று நினைத்தால் முபாரக்கின் நிலைக்கான உளவியல் காரணங்களை அம்மா அன்று அட்சரம் பிசகாமல் சொன்னது புரிகிறது !

" என்னா ?... உங்க பையன் அந்த ரெக்கார்டிங் சென்ட்டர் செட்டோட இருக்கறாப்போல... "

" பழக்கம்ன்னா நல்லவன் கெட்டவன் நாலு பேரும்தான் இருப்பான்... ! நாம இப்படித்தான் இருக்கனும்ங்கற தெளிவு இருந்தா யாரும் யாரு கூடவும் பழகலாம் ! "

வாரம் தவறாமல் அவர்களுடன் பாருக்கு சென்றாலும், சில்லி சிக்கனுடன் நிறுத்திக்கொண்டு நான் தடம் புரளாமல் தொடர்ந்ததற்கு என் பெற்றோர் என் மீது வைத்த நம்பிக்கையும், எனக்கு ஊட்டிய சுய பொறுப்புணர்ச்சியும் காரணமாக இருக்கலாம் என தோன்றுகிறது !

சிங்கிள் டீயும், சிசர்ஸ் சிகரெட்டும் சுகமாய் அமைந்து சுதி ஏறும் மாலை நேரங்களில் முபாரக்கின் பேச்சு களை கட்டும் ! அலுங்காமல் நலுங்காமல் மற்றவர்களை கிண்டலடிப்பான் ! கிண்டலடிக்கப்படுபவர்களுக்கு யாராவது " வக்காலத்து " வாங்கினால் தொலைந்தது....

"ஓய்... நீரு மட்டும் என்ன யோக்கியமா  ? "

எனத்தொடங்கிவிடுவான் ! கடை ஓனர் சகாயம் அண்ணனுக்கும் அதே " டிரீட்மெண்ட் " தான் ! ஆனாலும் யாரும் கோபித்துக்கொள்ள மாட்டார்கள். காரணம் அவன் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கும். இன்று நினைத்துபார்த்தால் அன்று நாங்கள் பேச நினைத்ததையெல்லாம் பயமின்றி பேசும் எங்கள் மனசாட்சியாக முபாரக் இருந்திருக்கிறான்  என  தோன்றுகிறது !



பெளர்ணமி இரவில் கள் குடிக்க போன அனுபவத்தை " கதை திரைக்கதை வசனம் " தம்பி ராமைய்யாவை போல வர்ணித்து கூறுவான்...

" பாரு... ஒத்தை பனைமரத்துக்கு கீழ... இந்தா... அங்க சகாயம்... அப்புறமா சூசை... ரமேஷ், பிச்சை, பாஸ்கர் அப்புறம் நானெல்லாம் இந்தப்பக்கமா உக்காந்திருக்கோம்... எல்லோர் கையிலயும் கள்ளு பானை ! இங்கிலீஸ்காரன் மாதிரி சகாயம் அண்ணன் நம்ம கள்ளு பானையை தூக்கி சியர்ஸ் சொல்றாரு...

" ஓய் ! கள்ளுக்கே சியர்ஸ் சொன்ன ஒரே ஆளு நீ தான்யா ! "

சட்டென கதையை விட்டுவிட்டு கலாட்டாவில் இறங்குவான். போதையில் சகாயம் அண்ணனும் " வா போ " தான் !

" என்னாண்ணே... உங்களையே வா போங்கறான் ?! "

" டேய் நீ சும்மா இருடா ! நான், அதை கேட்டா இன்னும் சொல்லாததையெல்லாம் சந்திக்கு கொண்டு வந்திடுவான் ! "

சகாயம் அண்ணனுக்கு கொம்பு சீவிவிட நினைத்தால் வாய் பொத்தி பம்முவார் !

" ம்ம்ம்... எங்க விட்டேன் ?... ஆங் ! எல்லோரும் பானையை தூக்கி வாயில வெச்சிருப்போம்... "

இன்று சின்ன திரையில் முக்கியமான தருணத்தில் விழும் விளம்பரங்களை போல அன்று சுவாரஸ்யம் கூடும் போது சட்டென நிறுத்தி தம் இழுப்பான் முபாரக் !

" டேய் பாம்புடான்னு கத்தறாரு சூசை... எங்களுக்கு நடுவுல இவ்ளோ நீள நல்லப்பாம்பு ! ஆளுக்கு ஒரு பக்கமா தெரிச்சி ஓடுறோம்... இதுல என்னா பியூட்டிங்கறியா ?... ஒருத்தன் கூட கள்ளுப்பானையை கீழ போடலடா ! ஓடி ஒதுங்கி குடிச்சிட்டோமுல்ல ?! "

ஜமா களைக்கட்டி அதிரும் !

நுகர்வோர் கலாச்சாரம் தொடங்கி ஊரின் கடைத்தெருவில் மாற்றங்களும் வளர்ச்சியும் வேகமாகி  உள்ளூர் டைமண்ட் கலர் சோடாவை கோக்கும் பெப்சியும் ஓரங்கட்ட அரம்பித்த காலம்...

ரெக்கார்டிங் சென்ட்டருக்கு எதிர்புறம் இருந்த தோட்டம் காம்ப்ளக்ஸாகி கீழ் கடை கூல் டிரிங்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் சென்ட்டராக மாறியது ! அந்த கடை ஓனருக்கு ஏனோ ஆரம்பத்திலிருந்தே எங்களை பிடிக்கவில்லை. சதா சர்வகாலமும் சிகரெட்டும் கையுமாய் நிற்கும் இளைஞர் கூட்டத்தினால் தன் கடைக்கு பெண் கஸ்டமர்கள் வருவதில்லை என்பது அவரது புலம்பல் ! ஆனால் உண்மையான காரணம் அவர் கடையின் ஜீஸை குடித்த பலருக்கு வயிற்றுபோக்கு ஏற்பட்டதுதான் என உறுதியாக நம்பினான் முபாரக் !

இப்படி இருந்த உறவை தூதரகம் மூடும் அளவுக்கு மோசமாக்கியது எங்கள் குரூப்பின் மெத்தப்படித்த சித்திக் !

 
ன்றாவது கடைப்பக்கம் வந்து மறைவாய் தம் இழுத்துவிட்டுபோகும் சித்திக் அண்ணன் அன்று எதிர்கடையை வெகு நேரம் முறைத்துக்கொண்டிருந்துவிட்டு சட்டென தெருவில் இறங்கி அந்த கடைக்கு போனார். சித்திக் அண்ணன் கை ஆட்டி பேச பேச, ஓனரின் முகம் பேஸ்த்தடிப்பது எங்கள் கடையிலிருந்தே தெரிந்தது !

" ஏன்டா... இத்தனை பேர் இருக்கீங்க... நாள் முழுக்க எதிர்க்கத்தானே பார்த்துக்கிட்டு இருக்கீங்க... ஒருத்தன் கண்ணுக்கும் தெரியலையாடா ?! "

" என்னா விசயம் சித்திக் ? சொன்னாதானே தெரியும்... ?! "

வழக்கம் போலவே சலனமற்ற குரலில் கேட்டார் ரிக்கார்டுகளை துடைத்து அடுக்கி கொண்டிருந்த சகாயம் அண்ணன் !

" எதிர் கடை போர்டை பாத்தீங்களா ?... cool drinks and snacksல  snacksக்கு  பதிலா snakes னு எழுதி வச்சிருக்கான் ? "

" டேய் ! டிகிரி படிச்சதை நிருபிச்சிட்டாருடா சித்திக் அண்ணன்... சகாயம் அண்ணே... சித்திக்குக்கு படிக்காத மேதை பாட்டை போடுங்க ! "

கலாட்டாவில் இறங்கிய முபாரக் அதோடு விடவில்லை...

" டேய் இப்ப புரியுதா நான் சொன்னது ?... மாப்ள பாம்பு ஜூஸ் வித்திருக்காருடா... அதான் ஒருத்தியும் வரலை ! "

முபாரக்கின் கூச்சல் எதிர்கடையை எட்ட, அந்த கடையின் ஓனர் எங்கள் மீது போர் பிரகடனம் செய்துவிட்டார் !

அடுத்த நாள் ஜூஸ் கடைக்கு வந்த டிராபிக் சார்ஜெண்ட்டுக்கு தன் கையாலேயே  ஜூஸ் கொடுத்த கடை ஓனர் எங்கள் கடையை காட்டி பேச அலர்ட் ஆனோம் ! முக்கியமாய் அவரிடம் காசு வாங்காததை கண்டு சொன்னார் படு ஜாக்கிரதை பாஸ்கர் அண்ணன் ! முபாரக் விசாரணையில் இறங்கினான்...

டீ குடிக்க சென்ற எதிர்கடை பையனின் பின்னால் சென்றவன் அன்றிரவு கடை மூடும் சமயத்தில் தான் திரும்பினான். வழக்கத்தைவிட கொஞ்சம் ஓவர் !

" யோவ் ! நீயெல்லாம் பெரிய மனுசனா... எங்க மேல கம்ப்ளெய்ண்ட் கொடுக்கனும்ன்னா வா ! நானே ஸ்டேசனுக்கு கூட்டிக்கிட்டு போறேன்... எஸ் ஐ நமக்கு இப்படி ! தெரியும்ல... காக்கி சட்டை போட்ட போலீஸ்காரனுக்கும் வெள்ளைசட்டை போட்ட டிராபிக் போலீசுக்கும் வித்யாசம் தெரியாத நீயெல்லாம்.... ஹரா.... "

அவன் காறியதில் கடைத்தெருவே கூடிவிட்டது ! மறுநாள் கடைத்தெரு பஞ்சாயத்துக்கு சென்று, இனி குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே நண்பர்கள் ஜமா, நள்ளிரவிலெல்லாம் கடைக்கு முன்னால் கூட கூடாது என சிலபல கட்டளைகளுக்கு தலைவணங்கி திரும்பினார் சகாயம் அண்ணன் !

முபாரக் மீன்டும் வருவான் !


பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.