Wednesday, May 28, 2014

முபாரக்

வாழ்க்கையின் சில சமயங்களில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் " கைப்புள்ள " கேரக்டர்களை  சந்திக்கவும், அவர்களுடன் பழகவும் நேரிடும் ! வாய்ச்சவடாலும், குடித்துவிட்டு சலம்புவதுமாக சமூக வரைமுறைகளை இவர்கள் அசால்ட்டாக மீறினாலும் இந்த  கைப்புள்ளைகளின் பேரில் நமக்கு கரிசணமே மிஞ்சும் ! காரணம் அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் கள்ளங்கபடமற்ற மனசு ! எப்படி உதார்விட்டு திரிந்தாலும், எவ்வளவு அவமானப்பட்டாலும் நட்புக்கு ஒரு உதவியென்றால் இவர்கள்தான் முதலில் நிற்பார்கள்.

முபாரக்கும் அப்படிப்பட்டவன் தான் !

விடலைப் பருவத்தில் நாங்களெல்லாம்   தெருவோரமாய்  நின்று பயபார்வையுடன் சைட் அடிப்பதை மட்டுமே கெட்டபழக்கமாக (!) கொண்ட சுமார் கெட்டவர்கள் என்றால் எங்களைவிட இரண்டு வயது மூத்தவனான முபாரக் பாரில் அமர்ந்து குடிக்கும் அளவுக்கு தைரியமான ராஜா ரெக்கார்டிங் சென்ட்டர் குரூப்பை சேர்ந்த மகா பொல்லாதவன் !!

நான் முபாரக்கை முதன் முதலில் சந்தித்ததே ஒரு சுவாரஸ்யமான கதை !

தனியாக நின்று சைட் அடித்தால் பிகர் மடங்காது என்பது ஜொள்ளுதாத்தா காலத்து நம்பிக்கை என்பதால் ரொம்ப சுமார் மூஞ்சி குமாரான நான் தான் என் ஏனைய சுமார் மூஞ்சி குமார் நண்பர்களுக்கு சைட் துணை ! அப்படி ஒரு நாள் நண்பனின் காதலுக்கு துணையாக தெருவோரத்தில் நின்ற சமயத்தில் எதிர்கொண்டு மடக்கினான் முபாரக் ! என் நண்பன் சைட் அடித்தது முபாரக்கின் ஆள் !

எங்களிருவரையும் பக்கத்திலிருந்த பெட்டிக்கடைக்கு தள்ளி சென்றவன், ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டு அவனின் காதல் பிரதாபங்களைப் பேச தொடங்கிவிட்டான் !

அந்த பெண்ணை காலேஜுக்கு அழைத்துவரும் ரிக்சாக்காரருக்கு சட்டை வாங்கிகொடுத்ததிலிருந்து, அவள் வரும் ரிக்சாவை சைக்கிளில் துரத்தி சென்று ரோஜாப்பூ வீசியது வரை அவன் சொல்லிமுடித்தபோது இருட்டிவிட்டது ! ஒரு வழியாய் அவனிடமிருந்து தப்பித்து ஓடினோம் !

ஒரு வாரம் கழித்து என்னை மீன்டும் கடைதெருவில் வைத்து மடக்கினான் !

" என்னாடா ?! அந்த காலேஜ் பக்கமே காணோம் ?....! "

"  அந்த பொண்ணை நான் சைட் அடிக்கல முபாரக்  ! என்னோட பிரெண்டு தான்... இப்ப அது உன்னோட ஆளுன்னு தெரிஞ்சதும்.... "


" ஏண்டா... நான் அவளை லவ் பண்றேன்னு சொன்னனே தவிர அவ என்னை லவ் பண்றான்னு சொல்லலையே ! "

நான் ஜகாவாங்கி முடிக்கும் முன்னரே ஒரே போடாக போட்டான்  முபாரக் !

அந்தப் பெண் என் நண்பனையும் ஏறெடுத்து பார்க்கவில்லை என்றாலும் முபாரக்குடனான  என்  நட்பு இறுகியது !

ரு நல்ல முகுர்த்தத்தில் என்னை ராஜா ரெக்கார்டிங் செண்ட்டர் குரூப்புக்கு அறிமுகம்  செய்துவைத்தான் ! கடைக்கு வரும் மற்ற நண்பர்களெல்லாம் வேலை முடித்தோ, காலேஜிக்கு பிறகோ வருவார்கள். ஆனால் கடையின் முழுநேர உறுப்பினன் முபாரக் !  சரியாக கடை திறக்கும் நேரத்தில் வெள்ளை வேட்டி, ஏதாவது ஒரு கலர் பிளெய்ன் முழுக்கை சட்டையில் ஆஜராகிவிடுவான் முபாரக். மதியத்துக்கு முன்னால் வடை, சமோசா, இரண்டு மூன்று டீ, சிகரெட்... மதியம் உணவுக்கு செல்பவன் குட்டித்தூக்கத்துக்கு பிறகு மீன்டும் வருவான் ! இரவு கடை மூடும்வரை டீ, சிகரெட் !


ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும் முபாரக்கின் திருநாள் !

" அண்ணே ! சீக்கிரமா கடையை மூடுங்க... பாருல டேபிள் அரேஞ்செல்லாம் பண்ணிட்டேன்... கிளம்புங்க கிளம்புங்க ! "

ஆரம்பத்திலிருந்தே பரபரப்பவனின் சலம்பல் பாரில் சுருதி ஏறியவுடன் அதிகமாகும் !

" அண்ணே... பில்லை நல்லா பாருங்கண்ணே...போன தடவை ரெண்டு வாட்டர் பாக்கெட்டை கூட்டிட்டான் ! "

புல் மப்பிலும் முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக சலம்புவான் !

ரிட்சையில் பிட் அடித்ததால் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டான் எனபது தெரியுமே தவிர,அவன் படித்தது எத்தனை வகுப்புகள் என்பது யாருக்கும்  தெரியாது !

" ம்ம்ம்... சவுத் ஸ்கூல்ல சிங்கமா  சுத்திக்கிட்டிருந்த என்னை அந்த பி டி மாஸ்டர் மட்டும் பிடிக்காம விட்டிருந்தா.... "

மப்பில் சலம்பும்போது வகுப்பை  கேட்டால் தலையில் குட்டுவான் !

" டேய் ! டேய் ! நிறுத்து ! எங்க சைட் அடிக்கவா ? இடுப்புயரம் வளரல... அதுக்குள்ள... சரி சரி ! ‍‍ஹீரோ யாரு நீயா ? அப்ப நீ கேரியருக்கு போ ! டேய் துணைக்கு போற நாயி நீ சைக்கிள் மிதி ! பின்னால  உக்காந்து வர்றவனுக்குதான் பிகர் மடங்கும் தெரியும்ல.... அப்புறம்... சட்டையை  இன் பண்ணாத.... "

பெண்கள் உயர்நிலைப்பள்ளி பக்கம் சுற்றும் விடலைகளை அவ்வப்போது நிறுத்தி லவ் டிப்ஸை அள்ளி வீசுவான் !

" இவளையெல்லாம்.... இவளையெல்லாம்.... "

ஒரு மாலை கடைக்கு வந்தவன் திரும்ப திரும்ப பேசிக்கொண்டே புகைவிட்டான் !

" ஏன் முபாரக் ? என்னாச்சி... ? "

தான் ரெக்கார்ட் செய்துகொண்டிருந்த பாட்டுக்கு ஷார்ப்பை ஏற்றிவைத்துவிட்டு வந்து முபாரக் அருகில் அமர்ந்து கேட்டார் கடை ஓனர் சகாயம் அண்ணன் ! மெல்லிய சிரிப்புடன் எந்த சலனமுமில்லாமல் பேசி, பசங்களை பேச வைக்கும் கலையில் சகாயம் அண்ணன் கைதேர்ந்தவர் !

" அது வந்துண்ணே... நம்ம மில் ஓனர் பொண்ணு இருக்கால்ல... அவ... அவ... என்ன சொல்லியிருக்கா தெரியுமா ?.... "

" ம்... சொல்லு... சொன்னாதானே தெரியும் ?! "

முபாரக் பேச்சில் சுவாரஸ்யமாக, அவனின் கையிலிருந்த சிகரெட் அண்ணன் கைக்கு மாறியது !

" அவளோட பிரெண்ட் ஒருத்தி அவ குஸ்பூ மாதிரி இருக்கான்னு சொன்னதுக்கு இவ, நான் என்னா அவ்ளோ அசிங்கமாவா இருக்கேன்னு கேட்டிருக்காண்ணே ! இவளையெல்லாம்... "

" சரி, விடு முபாரக் ! மேக்கப் இல்லாத குஸ்பூவை நாம யாருமே பார்த்ததில்லதானே ?! "

கூலாக பேசிக்கொண்டே முடிந்துபோன சிகரெட் துண்டை தூரவீசிவிட்டு மீன்டும் ரெக்கார்டிங் போய்விட்டார் சகாயம் அண்ணன் ! நாங்கள் சிரிக்க தொடங்குவதற்கு முன்னாலேயே வேறு சிகரெட் வாங்க தெருவில் இறங்கியிருந்தான் முபாரக் !

" ச்சீ ! போய்யா... ஆண்டவன் உனனக்கு புண்ணியம் பண்ணாததாலதானே நீயே பிச்சை எடுக்கறே... இதுல எனக்கு புண்ணியமா ?! "

" அய்யா தர்மம் பண்ணுங்க ! ஆண்டவன் உங்களுக்கு புண்ணியத்தை கொடுப்பார் !..."

என இரைஞ்சும் பிச்சைக்காரரை எரிந்து விழுந்து விரட்டுவான் !

மதியம் அதே பிச்சைக்காரருக்கு கையேந்திபவன் மாமி கடையில் மீல்ஸ் வாங்கிகொடுத்துவிட்டு இவன் சிங்கிள் டீ அடித்துகொண்டிருப்பான் !

" யப்பா... தர்மபிரபு... உண்னோட கணக்கு நோட்டே முடியபோகுதுப்பா... சீக்கிரமா காசைகொடு ! "

" தலைவர் சொல்லிட்டாரு மாமி ! ஆண்டவன் எனக்கு புண்ணியம் கொடுத்ததும் முதல் போனி மாமிக்குதான் ! "

புலம்பும் மாமிக்கு நக்கல் பதில் !


விசிறி, ரசிகன் என்பதையெல்லாம் தாண்டி இளையராஜா வெறியன் முபாரக் ! அவரின் பாடல்களைதான்,அவரின் பாடல்களை மட்டும்தான் கேட்பான்.

" என்னா மியூசிக்... நம்ம மொட்டை... மொட்டைதாண்டா ! "

ஒரு கையில் சிகரெட்டும் மறுகையில் டீயுமாய் கண்கள் மூடி சொக்குவான் ! ( ராஜாவின் ரசிகர்கள் மன்னிப்பார்களாக ! இளையராஜாவுக்கு முபாரக் வைத்திருந்த செல்லப்பெயர்தான் மொட்டை ! )

ரோஜா பாடல்கள் வெளிவந்து ரஹ்மான் புயல் வீச தொடங்கிய காலம்...

" ம்ம்‍ஹும் ! வேதம் புதிது அது இதுன்னு எத்தனை பேரை பாத்துட்டோம்... ?! இதெல்லாம் சும்மா சீசன் மியூசிக் ! நாளைக்கு நம்ம மொட்டையோட படப்பாட்டு ரிலீசாகுதுல்ல... அண்ணே ! நம்ம ரெக்கார்டிங் செண்ட்டருல அந்த ரோஜா பட பாட்டு வரக்கூடாது ! "

" டேய் லூசு ! ராஜா ரெக்கார்டிங்ன்னு பேர்தான் வச்சிருக்கேன்.... ராஜா பாட்டு மட்டும்தான் கிடைக்கும்ன்னு எழுதலை ! ஏன்டா ? எம்.எஸ்.வி, சங்கர் கணேஷ் பாட்டுக்கெல்லாம் ஒன்னும் சொல்லாத இப்ப இந்த சின்ன பையனோட பாட்டு மட்டும் வேணாங்கற... ஏன் உங்க தலைவரை இந்த பையன் மிஞ்சிடுவான்னு பயமா இருக்கா ?! "

சகாயம் அண்ணனின் கிண்டலுக்கு சட்டென எழுந்துபோய்விட்டான் முபாரக்.

அடுத்தடுத்த நாட்களில் அவர் வியாபார தேவைகளை விளக்கி கூறியும் மசிவதாயில்லை முபாரக் ! அவனுக்கு தெரியாமல் ரோஜா பட ரெக்கார்டை வாங்கிவிட்டார் சகாயம் அண்ணன். விசயம் தெரிந்ததும் கோபித்துகொண்டு போய்விட்டான் முபாரக் !

" விடுங்கடா நாளைக்கு காலையில கடைக்கு முன்னால நிப்பான்..   இல்ல... வார கடைசியில பாருக்கு  வரனுமுல்ல... ! "

இல்லை ! ஒரு மாதம்வரை கடைபக்கமே வரவில்லை முபாரக் ! வெற்றிலை பாக்கு நீங்கலாக அனைவரும் சகாயம் அண்ணன் தலைமையில் அவன் வீட்டுக்கு கிளம்பினோம்...

" புரிஞ்சிக்கோ முபாரக்... இன்னைய தேதிக்கு அந்த பட பாட்டை தான் அத்தனைபேரும் ரெக்கார்ட் பண்ணி கேக்கறான்... கடை மேல இருக்கற லோன் உனக்கு தெரியும்தானே... "

வீட்டு திண்ணையில் குந்தி அமர்ந்திருந்த முபாரக்கிடம் தங்கையின் கல்யாணம்,தம்பியின் படிப்பு என,  சொந்த சோக கதைகளையெல்லாம் கலந்துகட்டினார் சகாயம் அண்ணன் !

" ஆனா ஒரு கண்டிசன்... நான் இருக்கறப்போ அந்த பட பாட்டை ரெக்கார்ட் போட கூடாது ! "

நீண்ட பஞ்சாயத்துக்கு பிறகு மனமிறங்கினான் முபாரக் !

" நீ சொல்லிட்டீல்ல... சரி முபாரக் ! "

"  கிழிஞ்சுது போ ! இவன் கடையில இல்லாத நேரம்ன்னு ஒன்னு இருந்தாதானே... "

சகாயம் அண்ணனின் பதிலுக்கு கமெண்ட் அடித்த ரமேஷின் வாயை அவசரமாய் பொத்தினேன் !

" சரிப்பா ! வாங்க கடைக்கு கிளம்பலாம் ! "

" இல்ல... இல்ல... முதல்ல பாருக்கு... அப்புறமா கடைக்கு ! "

" எல்லா கோட்டையும் அழிச்சிட்டு முதல்லேயிருந்து " கதையாய் திண்ணையிலிருந்து குதித்தான் முபாரக் !

" பாருடீ ! இந்த வெட்டி ஆபீசரை அழைச்சிக்கிட்டு போக இத்தனை வெட்டிங்க ! நல்லவேலை... திண்ணை தேய்ஞ்சிடுமேன்னு பயந்துக்கிட்டிருந்தேன் ! "

ஜன்னலிலிருந்து கேட்ட முபாரக்கின் பெரிய அக்காவின் குரல் சத்தியமாய் எங்கள் காதுகளில் விழவில்லை !

 ளையராஜாவின் சிம்பொனி வெளியீட்டுவிழா நடந்த நேரத்தில், ஊரின் பிரமுகர் ஒருவருக்கு வந்திருந்த அந்த விழா அழைப்பிதழை எப்படியோ வாங்கிகொண்டு வந்துவிட்டான். இளையாராஜாவின் முகம் ஆயில் பெயிண்ட்டினால் வரையப்பட்ட ஓவியம் அச்சிடப்பட்ட அழைப்பிதழ் !

நான் கொஞ்சம் சுமாராக வரைவேன் ! ஒரிஜினலின் மீது கட்டமிட்டு வரையும் பாணியில், ஏறக்குறைய தத்ரூபமாய் வரைந்துவிடுவேன் ! இளையராஜா ஆயில் பெயிண்டிங் படத்தை என்னிடம் வரைந்து கேட்டான் முபாரக். அதுவும் கேன்வாசில் ! அதனை ரெக்கார்டிங் செண்ட்டரில் மாட்ட வேண்டுமென்பது அவன் ஆசை ! அது எனக்கு சரியாக வராது என எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ஓவியத்துக்கான அனைத்து உபகாரணங்களையும் வாங்கி வந்துவிட்டான் !

பல மாதங்கள் உழைத்து, ஒரு வழியாய் வரைந்து முடித்து, ஒரு சுபமுகுர்த்த நாளில் கடைக்கு எடுத்து சென்றேன்...

" என்னாடா ?... முபாரக் இளையராஜா படம் கேட்டான்... நீ அவரோட பையன் கார்த்திக் ராஜாவை வரைஞ்சி கொண்டுவந்திருக்க... "

சகாயம் அண்ணன் சீரியசாக கேட்க, சிறிது நேரம் என்னை முறைத்த முபாரக்...

" சரி விடுங்கண்ணே ! ராஜாவோ ராஜாவோட மகனோ... மாட்டிடுவோம் ! "

ராஜா ரெக்கார்டிங் செண்ட்டரில் கார்த்திக் ராஜா கொஞ்ச காலம் முறைத்துக்கொண்டிருந்தார் !" இதென்னா புஸ்த்தகம் ?!... டேய் உள்ளார கில்மா புக் தானே ஒளிச்சி வச்சிருக்கற... ? "

" இல்ல முபாரக்... பாலகுமாரன் புக்தான் ! "

" பாலகுமாரனா ?... அது யாரு ! "

நான் லைப்ரரியிலிருந்து எடுத்து சென்றிருந்த புத்தகத்தை பிடுங்கி வைத்துகொண்டு சலம்பியவன், கடைக்கு இளம் பெண்கள்கூட்டம் ஒன்று வருவதை கண்டதும் சட்டென புத்தகத்தை விரித்துவைத்துகொண்டான் !

" சும்மா சொல்லக்கூடாதுடா.... பலகுமாரன் பாலகுமாரன் தான் ! இவரும் நம்ம மொட்டையை போல பெரிய ஆளுடா ! "

" டேய் முபாரக் !உன் மாமாடா ! "

ஸ்டைலாய் தம் இழுத்தபடி கடைக்கண்ணால் பெண்களை பார்த்துகொண்டே உச் கொண்டி கொண்டிருந்தவன் சகாயம் அண்ணன் அலர்ட் கொடுத்ததும் சட்டென எழுந்தான்...

" டேய் ! அந்த முப்பதாவது பக்கத்தை படிச்சி பாரு...இன்னாமா எழுதியிருக்காரு தலைவரு ! "

புத்தகத்தை சட்டென மூடி என் கையில் திணித்துவிட்டு போயே போய்விட்டான் !

சில நிமிடங்களிலேயே முபாரக்கை பாலகுமாரன் விசிறியாய் மாற்றியதில் நான் மகிழ...

" டீ ! ஏதோ தீயிற ஸ்மெல் வருதுல்ல ! "

பெண்கள் கூட்டம் கிசுகிசுக்க...

" சொல்றாங்கள்ல... அவன் சொன்ன முப்பதாம் பக்கத்தை பாரு ! "

சகாயம் அண்ணன் நமுட்டு சிரிப்புடன் கூற, புரியாமல் புத்தகத்தை திறந்தேன்... மாமாவிடமிருந்து முபாரக் மறைத்த சிகரெட் துண்டு... பாலகுமாரன் பல பங்கங்களுக்கு பொத்தலாகியிருந்தார் !

முபாரக் மீன்டும் வருவான் !

 இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.
Tuesday, May 6, 2014

நம்மால் முடியும் !

ன்றைய  சமூகத்தின் அனைத்து மட்டத்திலும் அடிக்கடி உச்சரிக்கப்படும் வசனம் அல்லது புலம்பல்...

" ஆமா... நாம மட்டும் யோக்யமா இருந்தா போதுமா...   நம்ம ஒருத்தரால என்ன பண்ண முடியும் ?! "

ஊழல், வன்முறை, ஜாதி மத பிரச்சனைகள் என அனைத்து சமூக பிணிகளுக்கும் நமது பதில் இதேதான் ! ஊரோடு ஒத்து வாழ் என்ற பழமொழி இன்று தவறான காரணங்களுக்காக உபயோகிக்கப்படுகிறது ! சமூகம் என்ற வார்த்தையே நம்மை சாராதது போலவும், சமூகத்தை சுத்தம் செய்யவென ஒரு தேவதூதன் ஒரு நாள் தோன்றுவார் என்ற எண்ணத்துடனும் நமது அன்றாட செயல்பாடுகள் உள்ளன !ரு ஞானி தன் மூன்று சீடர்களை அழைத்து தன் உள்ளங்கையில் இருப்பதை காட்டி அது என்னவென்று கேட்டார்...

ஏதோ பழத்தின் கொட்டை என்றான் முதல் சீடன்.

ஒரு விதை என்று இன்னும் தெளிவாக்கினான் இரண்டாவது சீடன்.

மூன்றாவது சீடனோ,

" குருவே ! உங்களின் உள்ளங்கையில் ஒரு காடு இருக்கிறது ! " என்றான் !

" நீங்கள் இந்த விதையை விதைத்தால் அது விருட்சமாகும்... அதன் கனிகளை உண்ணவரும் பறவைகள் மற்றும் சிறு விலங்குகளால் பல விருட்சங்கள் தோன்றி தோட்டமாகி மேன்மேலும் பல்கிபெருகி காடாகும் ! " என்றான்.

ல நூறு, பல்லாயிரம் மனிதர்கள் ஒன்றுகூடி அமைத்த வாழ்க்கைமுறையே சமூகம். சமூகம் ஒரு காடென்றால், தனி மனிதனும் அவன் சார்ந்த குடும்பமுமே அதன் வித்து ! நாம் வாழும் சமூகத்தில் நல்லவைகள் போலவே தீயவைகளும் ஏதோ ஒரு தனிமனிதனால் ஆரம்பித்துவைக்கபட்டதுதான் ! அதே போல அந்த தீயவைகளை அழித்தொழிக்க புறப்படுவதும் ஒரு தனிமனிதன் தான் ! அஹிம்சை போராட்டம் என்ற அறவழிப்போராட்டம் காந்தி என்ற தனிமனிதரின் சிந்தனையில் உதித்ததுதான். தீண்டாமைக்கு எதிராய் முதலில் கறுப்புசட்டை அணிந்த போது பெரியாரும் தனியர்தான் !

உதாரணமாய் லஞ்சத்தை ஒழிக்க வேண்டுமானால் நான் லஞ்சம் கொடுக்கவோ வாங்கவோ கூடாது என ஒரு தனி மனிதன் உறுதியாக இருந்தால், அவனின் குடும்பத்தை, அவன் பிள்ளைகளை உறுதியாக்கினால் அவனின் செயல் நிச்சயமாய் சமூகத்தில் எதிரொலிக்கும்.

ற்றொரு கதை...

விகடகவியின் வேடிக்கை கவிதையில் மகிழ்ந்த மன்னர் என்ன பரிசு வேண்டுமென கேட்கிறார்,

அதற்கு அந்த விகடகவி,

" நான் கேட்பதை உங்களால் கொடுக்க முடியாது மன்னா ! " என பணிவாக கூறுகிறான் !

"  என்னால் முடியாததும் உண்டோ  ? கேள் ! " என்கிறார் மன்னர்.

" பெரிதாக ஒன்றும் வேண்டாம் மன்னா... சதுரங்க கட்டத்தின் முதல் கட்டத்தில் ஒரு அரிசி மூட்டையை வைத்து இறுதிவரை ஒவ்வொரு கட்டத்தின் எண்ணிக்கையையும் அதே எண்ணிக்கையால் பெருக்கி இறுதியில் எத்தனை மூட்டைகள வருகிறதோ அதனை  பரிசாக தாருங்கள் ! " என கேட்கிறான்.

" இதென்ன பிரமாதம் ? "  என முதலில் ஒத்துக்கொண்ட மன்னர் பின்னர் திகைக்கிறார் !

முதல் மூட்டையானது, இரண்டாகி, அடுத்து நாலாகி, நாலாவது கட்டத்திலேயே பதினாறாக பெருகி, இறுதியில் களஞ்சியமே கொடுத்தாலும் பத்தாது என்ற எண்ணிக்கையில் நிற்கிறது !

விகடகவியின் புத்தி சாதுர்யத்துக்காக சொல்லப்படும் இந்த கதையை பற்றி தெனாலிராமன் கதை, பீர்பால் கதை, இந்திய நாடோடி கதை என பல ஆருடங்கள் இருந்தாலும், இதனுள் ஒளிந்திருக்கும் சமூகவிவியல்  கருத்து மிகவும் நுட்பமானது. ( சதுரங்கம் பண்டைய இந்தியாவின் கண்டுபிடிப்பு என்பது கொசுறு தகவல் ! )


னிமனிதனால் துவங்கப்படும் எந்த ஒரு காரியமும் முதலில் மலைப்பானதாக தோன்றுவது இயற்கை. ஆனால் விடாது முயலும் போது, அந்த தனிமனிதனுடன் மற்றொருவர் சேருவார். அந்த இருவருக்காக மேலும் இரண்டுபேர்... ஆரம்பத்தில் தேக்கநிலையில் தொடங்கும் வளர்ச்சியானது ஒரு கட்டத்தில் அதிவேகமாக பரவி முழு சமூகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம் !

ண்பதுகளில் பல சமூகவியல் விஞ்ஞானிகளால் பேசப்பட்டது " நூறாவது குரங்கு விதி "

1952ம் ஆண்டில் ஜப்பானின் ஓக்கினோவா மற்றும் கோஷிவா தீவுகளில் வாழ்ந்த குரங்குகளை பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள் அக்குரங்குகளுக்கு உணவாக சர்க்கரைவல்லி கிழங்குகளை ஹெலிகாப்டர்களிலிருந்து வீசுவது வழக்கம். ஒரு நாள் அப்படி வீசப்பட்ட கிழங்கை பொறுக்கிய ஒரு பெண்குரங்கு கடல் நீரில் அந்த கிழங்கை கழுவிட்டு தின்பதை கண்டனர். மறுநாளும் அந்த குரங்கு கிழங்கை கழுவ, அதனுடன் மேலும் சில குட்டி குரங்குகள் ! இதனை கேலி கெக்கெலிப்புடன் பார்த்துகொண்டிருக்கும் கிழ குரங்குகள் ! அடுதடுத்த நாட்களில் மேலும் பல இளம் குரங்குகள் அந்த பெண் குரங்குடன் சேர்ந்து கிழங்குகளை கழுவி விட்டு தின்ன தொடங்கின !

1952 தொடங்கி 1958 வரை ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக கிழங்கை கழுவும் குரங்குகளை எண்ணிகொண்டிருந்த விஞ்ஞானிகளுக்கு ஒரு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது....

1958ல் குரங்குகளின் எண்ணிக்கை நூறை தொட்ட நாளில்... அந்த தீவின் அனைத்து குரங்குகளும் ஒரு சேர கிழங்குகளை கழுவ கிளம்பின  ! இதையும்விட பெரிய ஆச்சரியம் அதே நாளில், அருகாமை தீவுகளில் இருந்த குரங்குகள்கூட தங்களின் கிழங்குகளை கழுவதொடங்கின !

மண் அப்பியிருக்கும் கிழங்கினை கழுவிவிட்டு உண்ணலாம் என ஒரு பெண் குரங்கின் புத்தியில் உதித்த எண்ணமானது அந்த சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட சதவித குரங்குகளுக்கு தொற்றிய பிறகு, முழு சமூகத்துக்குமான தனிச்சை  குணமாக  மாறிவிட்டது ! (இந்த நிகழ்வை  உதாரணம் காட்டி morphic resonance,  morphic fields போன்ற  கட்டுரைகளும் எழுதலாம் ! )

ஒரு வகையில் இந்த விதியின் அடிப்படையிலேயே நவீன கருத்துகணிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன எனலாம் ! ஆண், பெண், இளையவர், முதியவர், ஏழை, பணக்காரன் என ஒரு சமூகத்தின் அனைத்துமட்டங்களிலிருந்தும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தவர்களின் கருத்தை கேட்டு அதனை கணிதவிதிகளுக்கு உட்படுத்தி முடிவு தீர்மானிக்கப்படுகிறது ! ( ஆனால் நீங்கள் கருத்து கேட்பவர் உண்மை பேச வேண்டும் ! உட்டாலக்கடி என்றால், " என்ன நடந்துச்சி... நான் அவர்கிட்ட கேள்வியை கேட்டேன்... " என நடுவுல கொஞ்சம் பக்கம் காணாமல் போய், கணிப்பு தவறாகிவிடும் ! )

னி இந்த கட்டுரையின் கருவுக்கு வருவோம்...

லஞ்சம் கொடுக்கவும் மாட்டேன், வாங்கவும் மாட்டேன் என ஒரு தனிமனிதன் உறுதியாக நின்று, அதே எண்ணத்தை அவனை சார்ந்த யாராவது ஒரு நபருக்கு தோற்றுவிப்பாரானால்... அந்த இருவர் மேலும் இருவருக்கு.... நால்வர் மேலும் நால்வருக்கு...

சில ஆயிரம் ஜனத்தொகை கொண்ட சிறிய ஊர் ஒன்றில் ஒரு நூறு பேரிடம் ஏற்படும் மாற்றத்தினால் உண்டாகும் தாக்கத்தை எண்ணி பாருங்கள்... தனிமனிதனால் எதுவும் முடியும் என்பது புரியும் ! இது கணிதம் நண்பர்களே ! கணிதம் பொய்க்காது !குடி பழக்கத்தை எடுத்துகொள்வோம்....

அரசாங்கமே விக்குது, குடிக்கறேன் என்பதை நான் குடிப்பதால்தான் அரசாங்கம் விற்கிறது என மாற்றி யோசித்து பாருங்கள் ! குடிப்பவர்களில் கணிசமானோர் குடியை நிறுத்திவிட்டால் மதுக்கடையை திறந்த அரசாங்கமே அதனை மூடவும் செய்யும் ! அதிகம் பேர் குடிக்கிறார்கள் என்ற லாபநோக்கில்தானே திறந்தார்கள் ? குடிப்பவனே இல்லையென்றால் கடை எப்படி இருக்கும் ?

தெருவில் இறங்கி கோஷமிடுவதுமட்டுமே புரட்சியல்ல ! எண்ண மாற்றம், மன உறுதி, நல்ல சிந்தனைகள்  என தனிமனிதனால் முடிந்தது அனைத்துமே ஒருவகை சமூக புரட்சிதான் ! மெளன புரட்சி ! லஞ்சமும், குடியும் உதாரணங்கள் மட்டுமே ! நாம் வாழும் சமூகத்தின் அனைத்து பிரச்சனைகளையும் சாதாரண மனிதர்களால் சரிசெய்ய முடியும் ! ஜாதிமத பேதம் பார்க்க மாட்டேன், குடிக்க மாட்டேன், ஊழலுக்கு ஆதரவாய் செயல்படமாட்டேன், என்னால் இயன்றவரை எளியவருக்கு உதவுவேன் என நாம் ஒவ்வொருவரும் உறுதியாக நின்றால், அந்த உறுதியை நம்மை சார்ந்த ஒரே ஒருவருக்கு ஊட்டினால்....அந்த ஒருவர் மற்றவருக்கு என அடுதடுத்து பரவி காந்தியும், பெரியாரும் கனவு கண்ட சமூகம் நாம் பார்த்திருக்க, இன்னும் சில ஆண்டுகளிளேயே சாத்தியமாகும் !

காந்தியாலும் பெரியாராலும் ஆரம்பிக்கபட்டது ....நம்மால் நிறைவேறும் ! !
இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.