Tuesday, September 16, 2014

தாய் மண்ணே வணக்கம் !

விமான பயணம் எனக்கு அலுப்பான விசயம் ! பெட்டிகளை எடை பார்ப்பதில் தொடங்கும் பரபரப்பு, சுங்க சோதனை, குடியேற்ற விதிமுறைகள் என அனைத்தையும் முடித்து விமானத்தில் ஏறி அமர்ந்த பிறகுதான் அடங்கும். அதுவும் கடந்த பத்து வருடங்களாக விமான பயணிகள் பாதுகாப்பு சோதனைகளில் படும் பாடு இருக்கிறதே... இந்த பாதுகாப்பு சோதனைகளின் போதான அலைகழிப்பில் பிள்ளை குட்டிகள், உடைமைகளை தவறவிடாது நிதானமாக இருப்பதற்காகவாவது தியானம் கற்றுக்கொள்ள வேண்டும் !

அனைத்தையும் முடித்து பிள்ளைகளோடு பிள்ளைகளின் பைகளையும் சேர்த்து சுமந்து  கொண்டு விமானத்தின் நுழைவாயிலை நெருங்க...

" தமிழாம்மா ? நல்லவிதமா போயிட்டு வாங்கம்மா ! "

 பின்னால் களைப்பாய் நடந்து வந்த என் அம்மாவை பார்த்து,  பயணச்சீட்டை சரிபார்த்து கொடுத்த தமிழ் அதிகாரி கூற,  " இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே ! " என்பதை அன்று அனுபவமாக உணர்ந்தேன் ! என் அம்மாவின் கண்களிலோ கண்ணீர் திரை ! பாரீஸ் சர்வதேச விமான நிலையத்தில் தமிழ் அலுவலர்கள் சகஜம் என்றாலும், பணி நேரத்தில் அவர்கள் தமிழில் பேசுவது அபூர்வம் !! இறுக்கமான தருணங்களின் போது தாய் மொழியில் கேட்கும் சில வார்த்தைகள்கூட மனதை நெகிழ்த்திவிடும் என்பதற்கு உதாரணமாக அமைந்துவிட்டது அந்த அன்பரின் வார்த்தைகள்.

விமானம் பறக்க தொடங்கியதும் சட்டென ஒரு விடுமுறை விடுதலையுணர்வு ! பணி கட்டாயங்கள், அன்றாட இயந்திரத்தனமான வேலைகள் இனி ஒரு மாதகாலத்துக்கு கிடையாது என்ற குதூகலம் ! முக்கியமாக என் தலைமை அதிகாரியின் பணி நிமித்தமான கைப்பேசி குறுஞ்செய்திகள் என்னை வந்தடைய முடியாத தூரத்துக்கு போகிறேன் என்ற குரூர மகிழ்ச்சி !

கடந்த ஒரு வருடத்தின் முக்கிய நிகழ்வுகள், நிறைவேறிய திட்டங்கள், கண்ணாமூச்சி காட்டும் பதவி உயர்வு என பலவற்றையும் மனம் அசைபோட, சட்டென வலைப்பூவின் பக்கம் தாவியது எண்ண ஓட்டம் ! வானில் பறந்துகொண்டிருந்ததாலோ என்னவோ என் ஞானக்கண் சற்று அதிகமாகவே திறந்துகொண்டது !

நமது சமூகத்தின் சீரழிவுகள், குறைகள் பற்றியே கழுவி கழுவி ஊற்றிக்கொண்டிருக்கிறோமே, அந்த குவளையில் குடிக்க ஒன்றுமே இல்லையா ?! தமிழ் சமூகத்தில், தமிழனிடத்தில் பாராட்டத்தக்கது எதுவுமே கிடையாதா என்றெல்லாம் எண்ணங்கள் !




வ்வொரு முறையும் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நான் பயணம் செய்த விமானம் தரையிறங்கும் போதே ஒரு விதமான ஆழ்ந்த நிம்மதி மனதில் பரவும் ! உலகின் மிக பாதுகாப்பான இடமாக தோன்றும் ! விமானத்திலிருந்து வெளியேறும் முதல் தருணத்தில் முகத்தில் வீசும், அனைவரும் அலுத்துக்கொள்ளும் சென்னையின் வெப்பம் எனக்கு மட்டும் கருவறை சூடாகப் படும் !

பதினேழு வயதில் பிரான்ஸ் வந்தேன். அன்றிலிருந்து எனக்கும் இந்தியாவுக்குமான பந்தம் ஓரிரு வருடங்களுக்கு ஒரு முறை வரும் ஒரு மாத காலகட்டம்தான். படிப்பு, வேலை, வாழ்க்கை என அனைத்தையுமே ஐரோப்பாவிற்கேற்ப அமைத்துக்கொண்டு குடியேறிய நாட்டுக்காக கட்டாய ராணுவ சேவையும் செய்து வீட்டுக்கு வெளியே பிரெஞ்சு குடிமகனாகவே வாழ்ந்து பழகி இருபது வருடங்களுக்கும் மேல் ஓடிவிட்டாலும் இன்றும் ஆழ்மனம் தமிழ்நாட்டையும், என் பூர்வீகமான புதுவையின் காரைக்காலையும்தான் சுற்றிவருகிறது ! வாய்ப்பு கிடைத்தால் மீன்டும் தாயகம் திரும்பிவிடலாம் என்ற எண்ணம் அவ்வப்போது எழாமலில்லை !

தாய் மண் என்பதற்கான வரைமுறைதான் என்ன ?

 ஒரு மனிதனுக்கு கருத்து தெரியும் காலகட்டம் தொடங்கி அவனின் பதிணென் பருவத்தின் முடிவுவரை எந்த தேசத்தில் வாழ்கிறானோ அதுவே அவனுக்கு தாய் மண் உணர்வாக நிலைக்கும் என தோன்றுகிறது. அதன் பிறகு அவன் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் தன் பால்யம் கழிந்த மண்ணையே தன் ஆதர்சமாக கொள்வான். காரணம் பதிணென் பருவம் மட்டுமே எந்த எதிர்பார்ப்புகளுமற்ற, வாழ்க்கையை, உலகை வியப்புடன் நோக்கும், உலகை கற்றுக்கொள்ள விழையும் பருவம். அதன் பிறகு படிப்புக்கேற்ற வேலை, காதல், திருமணம், குழந்தைகள் என பொறுப்புகள் ஏறி, வாழ்க்கை என்பது சேமித்தவற்றை தக்கவைத்துக்கொள்வதற்க்கான போராட்டமாக மட்டுமே மாறிவிடுகிறது ! இந்த விதி உலகின் அனைத்து தேசத்தவருக்குமே பொதுவானது.

பிரான்சில் பிறந்த எனது பிள்ளைகள் என் மூலம் இந்தியாவை தெரிந்துகொள்வார்கள், விடுமுறை காலங்களில் என்னுடன் இந்தியா வருவார்கள், தமிழ் கலாச்சாரத்தை அறிந்து கொள்வார்கள், அவர்களின் பூர்வீக தேசம் என கொண்டாடுவார்கள் என்றாலும் இந்தியா பற்றிய எனது மனநிலை அவர்களுக்கு இருக்காது. காரணம் அவர்கள் வளர்ந்த சூழல் வேறு. அவர்களின் பால்ய நினைவுகள் பிரெஞ்சு கல்வி முறை மற்றும் அந்த தேசத்தின் பள்ளி, கல்லூரிகளின் சூழ்நிலை சார்ந்ததாகவே அமையும்.

ஏதோ ஒரு காரணத்துக்காக விரும்பி வேறு தேசம் செல்பவர்கள் தொடங்கி தாய் மண்ணின் உரிமைகள் இழந்து அகதிகளாய் அந்நிய தேசம் வந்து வாழ்பவர்கள் வரை அனைவரின் இரண்டாம் தலைமுறைக்கும் இது பொருந்தும்.


காரைக்காலில், மாதாகோவில் வீதியில் நின்று ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்... இருபது வருடங்களுக்கு முன்னால் அமைதியான, நகரின் மிக நீளமான,  அழகான தெருக்களில் ஒன்று. இன்றைய நகர்மயமாக்கலின் அசுர அலைகளில் முழ்கி ஒழுங்கற்ற வாகன போக்குவரத்தின் இரைச்சல்களுடனும், ஜன நெரிசல்களுடனும் இரையெடுத்த பாம்பாய் பிதுங்கி நெளிந்திருந்தது !

" ஒரு ஜீவன் அழைத்தது... ஒரு ஜீவன் துடித்தது... "

பக்கத்திலிருந்த கடை ஒன்றிலிருந்து தவழ்ந்து வந்த பாடல் வரிகள் அனைத்து இரைச்சல்களையும் இல்லாமல் பண்ண, காலம் பின்னோக்கி பாய்ந்த அந்த ஒரு கணத்தில் நான் இருபது வருடங்களுக்கு முன்னாலிருந்த பழைய மாதாகோவில் வீதியில் சீருடை மாணவனாய் அலைந்து திரும்பினேன் ! இந்த மனோரசவாதம் தாய் மண்ணில் மட்டுமே சாத்தியம் !

ந்தியாவின் ஜாதி மத அரசியல் பற்றி ஒரு நண்பனிடம் பேசிக்கொண்டிருந்த போது, இந்தியாவில் ஜாதி மத அடையாளம் அவசியம் தேவை என அவன் கூற, அவற்றினால் ஏற்படும் குழு மனப்பான்மை பற்றியும், அதன் ஆபத்தையும் நான் பேச, வாதம் சூடுபிடித்தது...

" ஆமாடா ! ஒரு மாசம் வந்த நீ ஒற்றுமையை பற்றி பேசலாம்... இங்க வாழ்றவனுக்குத்தான் வலி தெரியும் ! "

அவன் விளையாட்டாகத்தான் கூறினான் என்றாலும் என்னுள் சட்டென ஒரு முள் தைத்து அந்நியமாக உணர்ந்தேன்.


ரண்டு நாட்களுக்கு முன்னர் பாரீஸ் மெட்ரோ ரயிலில் ஏறும் அவசரத்தில் ஒரு பிரெஞ்சு மூதாட்டியின் காலை தெரியாமல் மிதித்துவிட்டு, உடனடியாக மன்னிப்பும் கேட்டேன்.

" ஆமாம் ! பிரான்சில் எங்களை போன்ற உண்மையான பிரெஞ்சு மக்களுக்கு பேசும் உரிமை கூட போய்விட்டது ! "

" அம்மணி ! வார்த்தைகளை புரிந்து பேசுங்கள் ! பிரெஞ்சு குடிமகனுக்கான உரிமையிலும் சரி, மனித உரிமைகளிலும் சரி அவர் உங்களுக்கு குறைந்தவர் அல்ல ! "

அருகே நின்றிருந்த வேறொரு பிரெஞ்சு முதியவர் எனக்கு ஆதரவாய் அந்த பெண்மணியை கண்டித்தாலும், என்னுள் ஏதோ நொறுங்குவதாய் உணர்ந்தேன் !

மனதார நேசிக்கும் தாய் மண்ணில் சுற்றுலா வருபவர்களாக கருதப்பட்டு, பிழைக்கவந்த மண்ணில் இரண்டாம் குடிமக்களாய் நடத்தப்படுவதுதான் புலம் பெயர்ந்தவர்களின் தலையாய சோகம் !

சரி, இந்த பதிவின் ஆரம்பத்தில் நான் கேட்ட தமிழ் சமூகத்தின் நல்லவை... ? அடுத்த பதிவில் பார்ப்போம் !






இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.