தாத்தா, சித்தப்பாக்கள் எனக் குடும்பத்தினர் பலர் பிரான்சில் இருந்ததால் அவர்கள் ஊர் திரும்பும் போதெல்லாம் சென்னை சென்று அழைத்து வருவோம். அந்த வயதில் விமான நிலையம் இருக்கும் மீனம்பாக்கத்தையே சென்னை என நம்பியிருந்தேன் !
தனியாக அல்லது குழுவாக எனப் பிரான்சிலிருந்து திரும்புபவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் கொண்டு வரும் பெட்டிகளின் அளவுக்கேற்ப வாடகை காரிலோ வேனிலோ பயணம் அமையும் ! பைபாஸ் சாலை, கிழக்கு கடற்கரை சாலைகளெல்லாம் தோன்றாத என்பதுகளில் எங்கள் ஊரிலிருந்து சென்னை செல்ல பத்து பதினோரு மணி நேரம் பிடிக்கும். அதுவும் மதுராந்தகம் எல்லையில் லாரிகளுக்கு மத்தியில் சிக்கிகொண்டால் இன்னும் இரண்டு மணி நேரம் கூடிவிடும் !
பின்னிரவு மூன்று மணிவாக்கில் தூக்கம் கலையாத கண்களின் எரிச்சலுடன் கிளம்பினால் அதிகாலையில் சிதம்பரத்தினுள் நுழைவோம். சென்னை போகும்போதெல்லாம் அங்கிருந்த நாயர் கடை ஒன்றில் காபி குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார் அப்பா ! ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை, அதிகாலையில் ஐந்தே நிமிடம் நீடிக்கும் நட்பு என்றாலும் ஞாபகமாக வரவேற்று உபசரிப்பார் நாயர் ! வழக்கமாய்ச் சாப்பிடும் உணவகங்கள், டீக்கடைகள் தொடங்கி அவ்வப்போது இளைப்பாற நிற்கும் சிற்றூர்கள் மற்றும் கிராமங்களின் சிலர் கூட எங்களை அறிந்துவைத்திருந்தனர் !
மிகவும் நெரிசலான சிதம்பரம், சீர்காழி சாலைகள், திருத்தமான அகலமான சாலைகளுடன் பளிச்சென்ற பாண்டிச்சேரி, லாரிகள் வரிசைகட்டி நிற்கும் மதுராந்தகம், கார்பாய்டு தொழிற்சாலையின் மணத்துடன் வரவேற்கும் கடலூர் என மனிதருக்கு மனிதர் வேறுபடும் குணம் மற்றும் மணம் போலவே ஒவ்வொரு ஊருக்கும் மணமும் குணமும் உண்டு !
ஒவ்வொரு ஊரை தாண்டும் போதும் ஒவ்வொரு விதமான உணர்வு தோன்றும் !
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியிலிருந்து கொடைக்கானல், கேரளா என மூன்று நாட்கள் சுற்றுலா சென்றோம்...
வகுப்பு தோழன் ஒருவனின் தந்தை தனியார் போக்குவரத்துக்கழக உரிமையாளர். சுற்றுலா பேச்சு ஆரம்பித்ததுமே தன் தந்தையிடம் பேசி " சகாய விலையில் " பேருந்து ஏற்பாடு செய்வதாகச் சொல்லி தலைமை ஆசிரியரிடம் அனுமதி வாங்கிவிட்டான் அவன் ! வகுப்பு லீடரான என்னையும் சேர்த்து ஒரு பத்து மாணவர்கள் பள்ளியின் " பெரிய பையன்கள் ! " ஆசிரியர் தினம், குடியரசு தினம் தொடங்கி ஆண்டு விழா போட்டிகள், நாடகம் என அனைத்திலும் முன்னால் நிற்கும் சட்டாம்பிள்ளைகள் !
பள்ளி சுற்றுலா என்றால் பேருந்து கணக்குதான். ஆனால் அவன் எப்படியோ பேசி பேருந்து மட்டுமல்லாது ஏ சி வேன் ஒன்றுக்கும் சேர்த்து அனுமதி வாங்கிவிட்டான் ! " பெரிய பையன்கள் " நாங்களெல்லாம் வேனிலும், மற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பேருந்திலும் கிளம்பினோம். பள்ளிக்கூடத்திலிருந்து கிளம்பிய போது எங்கள் வேனில் ஏறிய ஆசிரியர், எங்களின் திட்டமிட்ட ரகளைத் தாங்காமல் ஊர் எல்லையைத் தாண்டுவதற்கு முன்னரே பேருந்தில் தொற்றிக்கொண்டுவிட்டார் !
செங்கோட்டை வழியே கேரளா செல்லும் உத்தேசம். செங்கோட்டையின் கேரள சோதனை சாவடியில் " ரூட் பெர்மிட் " எனப்படும் பயணத் திட்ட அனுமதியை வாங்கிப்பார்த்த மலையாள சேட்டன் இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை !
" இது செங்கோட்டா... நீ சாரிக்கோட்டா வழியா போய்க்கோ ! "
அவர் கோபத்துடன் பறைய, எங்களுக்குப் பதைத்தது !
காரணம், எங்கள் போக்குவரத்துக்கழக நண்பன் வேன் ஏற்பாட்டுடன் நிறுத்திக்கொள்ளாமல் தன் ஆங்கிலப் புலமையைத் தந்தைக்குக் காட்ட பயண அனுமதியையும் தானே தட்டச்சுச் செய்திருக்கிறான். அவனுக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் செங்கோட்டையைச் சாரிக்கோட்டை எனத் தவறாகத் தட்டச்சு செய்ததின் விளைவு !
" டேய் ! இதையெல்லாம் வேற மாதிரி டீல் பண்ணனும் ! "
நாதன் சார் பணப்பையுடன் இறங்கி இன்ஸ்பெக்டரை ஒதுக்குப்புறமாய் அழைத்துச் சென்றார். திரும்பி வந்த இன்ஸ்பெக்டர் சிரிப்புடன் அனுமதி கொடுத்ததோடு அல்லாமல் " குட் ஜர்னி ! " என்று வாழ்த்தி வழியனுப்பினார் !
எங்களுக்கு லஞ்சம் புரிந்த தருணம் அது !
கேரளாவிலிருந்து திரும்பும் வழியில், ஆளரவமற்ற சாலையின் இருமருங்கிலும் மலையடி போல உயர்ந்த மண்மேட்டின் மீது தென்னை மரங்களுக்கிடையே அமைந்த வீடுகள். சூரியன் தன் கதிர்களில் குளுமை கலந்து அடங்கும் நேரம். ஒரு வீட்டின் வாசலில் குத்துக்காலிட்டு கைகளைக் கன்னங்களுக்கு முட்டுக்கொடுத்து அமர்ந்திருந்தாள் எங்கள் வயதையொத்த ஒரு பெண்பிள்ளை. பேருந்திலிருந்த எங்களின் கூச்சலை கேட்டு துள்ளி எழுந்தவள் மகிழ்ச்சியும் சிரிப்புமாய்க் கைகளை ஆட்டி குதித்தாள் !
ஒரு சில நொடிகளே நீடித்த அந்த நிகழ்வு ஒர் ஓவியமாய், காட்சிக்குள் அடங்கிய கவிதையாய், தேர்ந்த நிழல்படக் கலைஞன் படம் பிடித்த காட்சியாய் எனக்குள் தங்கிவிட்டது !
பயணத்தின் சுவாரஸ்யம் போகும் பாதைகளில் நாம் சந்திக்கும் மனிதர்களும், நிகழ்வுகளும்தான். சொந்தம், நட்பு, சுற்றம் என வாழ்க்கை முழுவதும் நம்முடன் பயணிப்பவர்கள் மீது நமக்கிருக்கும் நேசத்தின் அதே அளவு பயணங்களில் சில நிமிடங்களே நாம் சந்திக்கும் ஒரு சில மனிதர்களின் மீதும் படிந்துவிடுவதை உணர்ந்ததுண்டா ?
" நமக்கு எந்த ஊரு ?... "
சில பனைமரங்களுக்கு நடுவே அமைந்த குடிசை வீட்டுத் திண்ணையில் சிகரெட், கோலி சோடா, சர்பத் தொடங்கிப் பழைய பாலித்தீன் பைகளில் தொங்கும் முறுக்கு, கடலைமிட்டாயுடன் ஒரு வாழைத்தாரும் தொங்கும் கடை. கோடையின் அனலுடன் நாம் பயணிக்கும் வாகனத்தின் வெப்பமும் சேர்ந்து வாட்டும் பொட்டல்வெளி பயணத்தின் நடுவே இளைப்பாற நிறுத்துமிடத்தில் பேச்சு தொடங்கும் !
" அங்க நம்ம ஒண்ணுவிட்ட மாமா பையன் ஒருத்தன் இருக்கான்... எப்படிக் காஞ்சு கிடக்கு பாத்தீங்களா ?... உங்க பக்கம் எப்படி ?... "
" பொம்பளைங்களை வீட்டுக்கு பின்னால கால் கழுவ சொல்லுங்க... "
வாகனத்தினுள் தெரியும் பெண்களைக் கண்டு பேசுபவர் பதிலுக்குக் காத்திருக்காமல் தன் வீட்டுப் பெண்களைத் துணைக்கு அனுப்புவார் !
" திரும்பறப்போ முடிஞ்சா நிறுத்தி சொல்லிட்டு போங்க !... "
திரும்பும் வழியில் பெரும்பாலும் நிறுத்த தோன்றாது ! பின்னர் அந்த இடத்துக்குப் போகும் வாய்ப்பே கிட்டாது என்றாலும் அந்த மனிதரின் உபசரிப்புக் கோடை பயணங்களின் போதெல்லாம் இளநீர் இனிப்பாய் மனதின் ஏதோ ஒரு மூலையில் ஊற்றெடுக்கும் !
பூம்புகாரில் நண்பர்களுடன் நாள் முழுவதும் சுற்றி அலைந்து அரட்டையடித்த நினைவுகளைவிட அங்கிருந்து திரும்பும் வழியில் தரங்காம்பாடி அருகில் காரை நிறுத்தி ஒன்றும் பேசிக்கொள்ளாமல் அமைதியாய் டீயும் பக்கோடாவும் சாப்பிட்ட நினைவு கறுப்பு வெள்ளை புகைப்படத்தின் அழகுடன் மனச்சுவரில் இன்னும் தொங்குவதின் விந்தை புரியவில்லை !
இன்று கரைக்கால் நாகூர் சாலையின் முகம் மாறிவிட்டது !
இரு போக மகசூல் தந்த நிரவிச்சாலை நிலங்கள் தரிசு நிலங்களாக மாற்றப்பட்டு, வீட்டுமனை விற்பனையாளார்கள் நட்ட எல்லை கற்களுக்குள் அடங்கிவிட்டன ! தைக்கால் குளம்கூடக் குட்டையாய்ச் சுருங்கிவிட்டது ! சிறு தோட்டம் சூழ்ந்த குடிசைவீடுகளின் திண்ணைக்கடைகள் இருந்த நிலங்களிலெல்லாம் நாளுக்கு ஒரு நட்சத்திர ஹோட்டல் தோன்றி, சனிப்பெயர்ச்சிக்கு வரும் பிரபலங்களை எதிர்பார்த்து நிற்கின்றன !
வாஞ்சூர் சாலை வயல்வெளியின் ஒரு பக்கத்தைக் கார்பாய்டு தொழிற்சாலை விழுங்க, மறுபக்கம் துறைமுக வளர்ச்சிக்கு தாரை வார்க்கப்படுவிட்டது ! சிறு கடைகளெல்லாம் ஷாப்பிங் மால்களாக மாறும் நாள் வெகுதூரத்தில் இல்லை ! இத்தனை மாற்றங்களுக்குப் பிறகும் எனது பால்ய அனுபவத்தின் மிச்சமாக நிற்பது மதகடியும், வாஞ்சூரும் ! இன்றும் பச்சை விளக்கு மதுக்கடைகள் அப்படியே இருக்கின்றன.தடுமாறும் குடிமகன்கள் தள்ளாடி பாலம் கடந்து செல்கிறார்கள் !
விரைவுச் சாலைகள், அதிவிரைவுச் சாலைகள் என இன்றைய பயணங்கள் இலக்கை மட்டுமே அண்ணாந்துபார்த்துக்கொண்டு ஓடும் ஓட்டங்களாக மாறிவிட்டன !
சில மாதங்களுக்கு முன்னர் பாரீசிலிருந்து முன்னூறு கிலோ மீட்டர்கள் தள்ளி அமைந்த தோவீல் என்னும் கடற்கரை சிற்றூருக்கு வார இறுதி ஒன்றினை கழிக்கச் சென்றேன்...
கட்டணத்துடன் கூடிய அதிவிரைவுச்சாலைகள் நாடு முழுவதையும் இணைத்தாலும், அவற்றினைத் தவிர்த்து ஊர்களுக்குள் செல்லும் சாலைகளையும் பயன்படுத்தலாம். விரைவுச்சாலைகளிலிருந்து மாற வசதியாக இருவகைச்சலைகளையுமே அருகருகே அமைத்து இணைத்த, தொலைநோக்கு பார்வையுடைய உள்கட்டமைப்பு ! விரைவுச்சாலைகள் வழியே செல்லாமல் சிற்றூர்கள், கிராமங்கள் வழியே பயணித்தேன்.இனம், மொழி, கலாச்சாரம் என அனைத்துமே வேறுபட்டாலும் சந்தித்த மனிதர்களாலும், இயற்கையின் அழகினாலும் அந்தப் பயணம் என் பால்ய பருவத்து பயணங்களின் மீட்சியாய் அமைந்தது !
விரைவுச்சாலைகளைத் தவிர்த்து சென்று வந்ததை நண்பர்களிடம் கூறியபோது, மூன்று மணி நேர பிரயாணத்தை ஆறுமணி நேரத்தில் கடந்த ஆமை என்ற பட்டம் கிடைத்தது ! இன்றைய விடுமுறை பயணங்கள் கூடச் சீக்கிரமாய் ஊர் போக வேண்டும் என ஓடி, ஊர் சென்றவுடன் சீக்கிரமாய்த் திரும்ப வேண்டும் என்ற அவசரம் தொற்றிக்கொள்ளும் படபடப்பு பிரயாணங்களாய் தான் அமைகின்றன !
சென்ற முறை பிரான்ஸ் திரும்பச் சென்னைக்குக் கிளம்பிய போது கிழக்கு கடற்கரைச் சாலை வழியே சென்றால் ஐந்து மணி நேரத்தில் சென்றுவிடலாம் என்றார் நண்பர்.
இரவு நேரம்...
ஊர்களுக்கு வெளியே அமைக்கப்பட்ட அந்த விரைவுச் சாலை எனக்குக் கான்கிரீட் பாலைவனம் போலத் தோன்றியது !
பனைமரங்கள் கூட இல்லாத வெட்டவெளிகளில் " அதிநவீன வசதிகளுடன் " கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள், மனிதர்களின் அருகாமையற்று மனிதர்களாய் வாழ ஆசைப்படும் புதிய மேட்டுக்குடி தலைமுறை குடும்பங்களுக்காகக் காத்திருக்கின்றன ! ஐம்பது நூறு குடியிருப்புகளைக் கொண்ட தொகுப்புகளில் ஒன்றிரண்டில் மட்டுமே விளக்கு வெளிச்சம் !
ஏதோ வேற்றுக்கிரகத்தில் பயணிக்கும் உணர்வுடன் கண்ணயர்ந்தேன் !
சென்னையை நெருங்கிய சமயத்தில் கண்விழித்தபோது சாலையின் இருபுறமும் பீட்சா ஹட், கே எப் சீ, குவிக் எனப் பிரான்சில் நான் அன்றாடம் காணும் உணவகங்கள் ! தூக்க கலக்கத்தில் பாரீஸ் விமான நிலையத்தை வந்தடைந்துவிட்டதாக ஒரு கணம் திகைத்து உடமைகளைத் தேட தொடங்கினேன் !
உள்நாட்டு அரசாங்கத்தின் உதவியுடன் பன்னாட்டு நிறுவனங்களின் லாபத்துக்காக அறிமுகப்பத்தப்படும் நுகர்வோர் கலாச்சாரம் என்ற கரப்பான் உலகின் ஆதி நாகரீகங்களில் சில தோன்றிய, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட தேசத்தின் அடையாளங்களையும், கலாச்சாரப் பண்பாடுகளையும், பழக்கவழக்கங்களையும் மிக வேகமாய் அரித்துக்கொண்டிருப்பது புரிந்தது !
முகலாய மன்னர் அக்பர் பீர்பாலை முதல்முறையாய்ச் சந்தித்தது பற்றிய கதை ஒன்று உண்டு.
வேட்டையின் போது வழி தவறிய மன்னர் காட்டு பாதை ஒன்றில் தன்னை மறந்து பாடிக்கொண்டு செல்லும் இளைஞர் பீர்பாலை எதிர்க்கொள்கிறார். படை பரிவாரங்களுடன் வரும் மன்னருக்கு கூட ஒதுங்காமல் செல்பவரை நிறுத்தி,
" இந்தப் பாதை எங்கே செல்கிறது ? " எனக் கேட்கிறார்.
அந்த இளைஞரோ,
" இந்தப் பாதை எங்கும் செல்லாது ! மன்னரே ஆனால் கூட நீங்கள் தான் இந்தப் பாதையில் எங்குச் செல்ல வேண்டுமோ அங்குச் செல்ல வேண்டும் ! " என்கிறார் !
அந்த இளைஞரின் புத்தி சாதுர்யத்தில் வியந்து அவரைத் தன்னுடன் அழைத்துக்கொள்கிறார் அக்பர் !
பீர்பால் கூறியது உண்மையென்றாலும், பயணிப்பவரின் பார்வைக்கும், நோக்கத்துக்கும் ஏற்ப விரிபவை பாதைகள் ! முட்டுச்சந்தில் முடியும் பாதைகள் கூட அதற்கு முன்னால் ஒரு கிளைப்பாதையைத் திறந்து வைத்து விட்டுத்தான் முடிகின்றன ! ஆண்டிப்பட்டியில் தொடங்கும் பாதை ஒரு நாடோடியின் நோக்கத்துக்காக அண்டார்டிகாவில் முடியும் ! அங்கே பனியில் சரிந்து தொடங்கிய பாதைவெளி ஆண்டிப்பட்டிக்கும் அழைத்துவரும் ! முடிவுகள் அற்றவை பாதைகள் !
ராபர்ட் ப்ராஸ்டின் கவிதை வரிகள் மழை நீர் அருந்திய மண்ணின் மனமாய் மனதில் எழுகிறது...
அடர்ந்து பரந்து அழகாய் இருக்குது காடு,
ஆனாலும் என் கடமைகள் முடியவில்லை,
உறக்கத்துக்கு முன்னான என் பயணமும் ,
உறக்கத்துக்கு முன்னான என் பயணமும் .
பாதைகளைப் போலவே நம் பயணங்களும் முடிவதில்லை !
பட உதவி : GOOGLE
இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.