இந்த இரண்டு மாத காலத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உடல்நிலையைப் பற்றியும், அந்நிகழ்வு தமிழ்நாடு தொடங்கி இந்திய அரசியல்வரை ஏற்படுத்திய தாக்கம் பற்றியும் அவரவர் கேட்டது, யார் யாருக்கோ தெரிந்தது, ஆதரப்பூர்வமானது, ஆதாரமற்றது எனச் சமூக ஊடகங்களில் நூற்றுக்கணக்கான செய்திகள்... பகிர்வுகள்...
முதல்வரின் மறைவை அறிந்த நொடியில், நேற்று வாட்ஸ் ஆப் மூலம் நான் படித்த பகிர்வு ஒன்று சட்டென நினைவில் தோன்றியது !
சில திருத்தங்களுடனான அப்பதிவு...
" அவர் சிறந்த முதல்வரா இல்லையா ? அவர் கொண்டுவந்த திட்டங்கள் எல்லாம் மக்களுக்குப் பலனளித்தனவா ? எம்ஜிஆர் அளவுக்கு நற்காரியங்களைச் செய்திருக்கிறாரா ? கலைஞரை விட அரசியல் ஞானம் கொண்டவரா ? தமிழகத்தின் மேல் உண்மையிலேயே பற்று கொண்டவரா ? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தெரியாது என்பதே பதிலாக வந்தாலும்கூட ஒன்று மட்டும் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்...
அந்தப் பெண்மணியின் தைரியம் !
ஆண் சிங்கங்கள் மட்டுமே கோலோச்சிய அரசியல் காட்டுக்குள் ஒற்றைப் பெண்சிங்கமாய் நுழைந்து தனியொரு பெண்மணியாய் பல ஆண்டுகள் ராஜ தர்பார் செய்தவர் !
இவர்களைப் போன்ற ராஜதந்திரிகளுக்கு மத்தியில் வேறொரு பெண்ணால் இப்படிச் சாதித்திருக்க முடியுமா என்றால் நிச்சயம் பெருத்த சந்தேகம் தான் ! கணவனோடும் குடும்பத்தோடும் சிறு சிறு பிரச்சனைகள் என்றாலே உடைந்து போவதும், சிதைந்து போவதும், செத்துப்போவதுமாய் இருக்கின்ற பெண்களுக்கு மத்தியில் கடைசிவரை போர்க்களத்தில் நின்று, வென்றாலும் வீழ்ந்தாலும் மீண்டும் எழுந்து நடந்து எல்லோரையும் அதிரவைத்த அந்தத் தைரியத்தை ஒவ்வொரு பெண்ணும் கற்றுக்கொள்ள வேண்டும்!
சம காலத்தில் வாழ்ந்த, இவரை விடச் சிறந்த சாதனை பெண்மணி வேறு யாருமில்லை!
அவர் வருவாரோ மாட்டாரோ தெரியாது, ஆனால் அவருடைய வாழ்க்கை நெருப்பின் ஊடே நிகழ்ந்த நெடும் வெற்றிப்பயணம் ! அந்த நெருப்புப் பயணத்தை நினைவில் வைத்துக்கொண்டாலே போதும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஓராயிரம் கைதாங்கும் பலம் வந்து கஷ்டங்களைக் கடந்துவிடுவார்கள்! குறைகள் பல இருந்தாலும் பெருமைப்பட நிறைய விஷயங்கள் இருக்கிறது ! இயற்கை அவர் பக்கம் நிற்கவே வேண்டுகிறேன் ! "
இன்று இயற்கை அந்த இரும்பு பெண்மணியைத் தன் பக்கம் அழைத்துக்கொண்டுவிட்டது !
" எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன் ! தேசிய தலைவரோ, பிரதம வேட்பாளரோ யாராயிருந்தாலும் என் தயவு வேண்டுமானால் அவர்கள்தான் என்னைத் தேடி வரவேண்டும் " என்ற துணிச்சலும் தைரியமும்தான் அவரின் வெற்றிக்கான காரணங்கள் !
ஆழ்ந்து யோசித்தால் சொந்தபந்தங்களை விட்டு விலகி, ஒரு கை விரல்களின் எண்ணிக்கைகளுக்குள் அடங்கிவிடக்கூடிய ( அவருக்கு ) நம்பிக்கையானவர்களுடன் மட்டுமேயான ஒரு தனிமை வாழ்க்கை வட்டத்தினுள் அவர் தன்னை ஒடுக்கிக்கொண்டதுகூட அந்தத் தைரியத்துக்குப் பங்கம் வந்துவிடக்கூடாது என்பதால்தானோ எனத் தோன்றுகிறது...
இனி அவர் விட்டுச்சென்ற வெற்றிடத்தைப் பிடிக்கவும், நிரப்பவும் மற்ற அரசியல்வாதிகள் ஆடுபுலி விளையாடலாம்... அவரது பெயரையும் புகழையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த திட்டமிடலாம்... அவர் கட்டிக்காத்த கட்சிக்கு அவர் விரும்பியவரோ விரும்பாதவரோ தலைவராகலாம்... அவரது பெயரை இருட்டடிப்புச் செய்து தங்களை முன்னிறுத்த முயற்சிக்கலாம்... அரசியலில் எதுவும் நிகழலாம்... நிகழும் !
ஆனால் அடிமட்ட அதிமுகத் தொண்டனின் மனதில் அவனது இறுதி மூச்சுவரை " அம்மா " நிறைந்திருப்பார் !
பட உதவி : GOOGLE