Sunday, January 3, 2016

மனிதம் மலரட்டும் !

மனிதநேயத்தில் நம்பிக்கை இழந்து விடாதீர்கள். மனிதநேயம் ஒரு சமுத்திரம். சமுத்திரத்தின் சில துளிகள் மாசுபடுவதால் சமுத்திரம் என்றும் மாசடைந்துவிடாது.  - மகாத்மா காந்தி



" இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு சிசுவும் இறைவன் மனித இனத்தை கைவிடவில்லை 

என்பதற்கான சாட்சி "   - ரவீந்திரநாத் தாகூர்


காரைக்காலின் காமராஜர் சாலை... விடியலுக்கும் இரவுக்கும் இடையே மத்திய ரேகையாய் கவிழும் மாலை மறையும் பொழுது...

மொட்டையடிக்கப்பட்டு கோரையாய் முடி வளரத்தொடங்கிய தலை ! எந்த உணர்ச்சியும் இன்றி, இல்லாத இலக்கு ஒன்றை விட்டேத்தியாய் வெறிக்கும் பார்வை ! கால்முட்டிவரை நீண்ட, அழுக்கேறி கிழிந்த சட்டை !  தெருவிளக்குகள் இன்னும் எரியத்தொடங்காத மங்கிய வெளிச்சத்தில், தெருவோரத்தில் தள்ளாட்டமாய் நடக்கும் பெண். அவளுக்கு பின்னே,  அதே கோலத்தில்  மழலை மாறாத இரண்டு குழந்தைகள்.

அவ்வப்போது சாலையோர மண் பரப்பிலிருந்து அவளும் அவள் குழந்தைகளும் சாலையின் தார் பரப்பினுள் தள்ளாட்டமாய் நுழையும் போதெல்லாம் க்ரீச்சிட்டு, ஹாரன் அலறும் வாகனங்கள்... அவ்வாகன ஓட்டிகளின் வசவு வார்த்தைகள் !

தன்னை பின் தொடரும் பிள்ளைகள் பற்றியோ அல்லது தன்னை நோக்கி காற்றில் தெரிக்கும் வசவு வார்த்தைகள் பற்றியோ எந்த பிரக்ஜையும் இன்றி சாவகாசமாய் சாலையோரம் நகரும் சேறு படிந்த கால்கள் !

அவளுக்கு எதிர்புறம் விரைந்துகொண்டிருந்த நான், பக்கத்திலிருந்த பெட்டிக்கடையில் இரண்டு பிஸ்கெட் பாக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு அவரவர் அவசரத்துடன் பறக்கும் வாகனசாரிகளின் உக்கிர பார்வைகளுக்கிடையே வண்டியை திருப்பிக்கொண்டு வருவதற்குள் நீண்ட தூரம் நடந்து மூடப்பட்ட ஒரு கடை வாசலில் குழந்தைகளுடன் ஒதுங்கியிருந்தாள் ! நான் நீட்டிய பிஸ்கெட் பாக்கெட்டுகளை வாங்கியவளின் கண்களில் மனிதனை மற்ற உயிரிகளிடமிருந்து வேறுபடுத்தும் ஆறாவது அறிவு சார்ந்த எந்த உணர்ச்சியும் இல்லை !

மனித இனத்தின் இருட்டு பக்கத்தை வெளிச்சமிடும் இவளைப்போன்ற பெண்கள் தேச எல்லைகள் தாண்டி உலகில் எங்கு வேண்டுமானாலும் தென்படுவார்கள் !


பொருளாதார ரீதியாய் மிகவும் பின் தங்கிய ஐரோப்பிய நாடு ருமேனியா. மற்ற ஐரோப்பிய நாடுகளின்  தெருவோரங்களில் ருமேனியா நாட்டினர்  பிச்சை கேட்பது  சகஜம் !

ஒருமுறை என் பணியிடத்துக்கு அருகேயிருந்த கடை வாசலில் அமர்ந்து பிச்சையெடுத்துகொண்டிருந்தாள் ஒரு ருமானிய மூதாட்டி. பிரெஞ்சு மனிதர் ஒருவர் அவளை நெருங்கினார்...

அவரது கையில் " பக்கேத் " எனப்படும் நீண்ட ரொட்டி.

தனக்கு கொடுக்க வருகிறார் என்ற ஆவலுடன் அவள் இரு கைகளையும் ஏந்தினாள்... அவளது உதடுகள் " மெர்ஸி... மெர்ஸி " என பிரெஞ்சு மொழியில் நன்றியை முனுமுனுத்தன...

" பிச்சை எடுக்க உனக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா ?... உடனடியாக இங்கிருந்து போ ! இல்லையெனில் போலீஸாரை அழைக்கவேண்டி வரும் ! "

நீண்ட ரொட்டியை கம்பினை போல அவளது முகத்துக்கு நேராக ஆட்டி மிரட்டிவிட்டு நகர்ந்தார் அந்த கணவான் !

உலகம் முழுமைக்கும் " நாகரீகமும், ஜனநாயகமும் " உபதேசிக்கும் பிரெஞ்சு தலைநகரத்தில் இப்போதெல்லாம் " தர்மம் " கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது ! மெட்ரோ ரயில்களில் ருமானிய தாய்மார்களுடன் அவர்களது பிஞ்சு குழந்தைகளும் கைகளை நீட்டுகின்றன ! அதிவேக சாலைகள் முடிவடையும் பாரீஸ் நகரின் எல்லை சிக்னல்களில் சிரியா அகதிகள் என்று எழுதிய அட்டைகளுடன் குடும்பங்கள் நிற்கின்றன !

" காப்21 " சுற்றுசூழல் மாநாட்டுக்கு வந்த நூற்றி நாற்பத்து சொச்சம் உலக தலைவர்கள் ஒருவரின் கண்களில் கூட இவர்கள் பட்டிருக்கமாட்டார்கள் !!!

டிக்கடி கண்ணில் படும் ஒரு பெண்மணி... தனக்குத்தானே பேசிக்கொள்ள ஆரம்பித்தார்... உடல் சுகாதாரம் பேணுவது குறைந்தது... உடைகளில் அழுக்கேற ஆரம்பித்தது... இப்போது கடும் குளிரிலும் தெருவோரங்களில் தூங்குகிறார் !

றந்த யானைக்கு சக யானைகள் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்துகின்றன ! காகங்கள் கூட பறக்க முடியாமல் தவிக்கும் காக்கையை சுற்றி வட்டமிட்டு பறந்து, கரைந்து பாதுகாக்க முயற்சிக்கின்றன்...

கண்ணெதிரே மனதாலும் உடலாலும் சோர்ந்து, அணுஅணுவாய் உருக்குலையும் சக மனிதனுக்கு உதவ முடியாத மனிதனின் விஞ்ஞான வளர்ச்சியினால், நாகரீக வாழ்க்கையினால் என்ன பலன் ? சக உயிரிக்கு பாசக்கரம் நீட்ட முடியாதவன் நிச்சயப்படுத்த முடியாத வேற்று கிரக உயிர்களுக்கு நேசக்கரம் நீட்டி சமிக்ஜை அனுப்புகிறான் !

மனித குலத்தின் தலையாய குணமாய் திகழ வேண்டிய மனிதம், அவர்கள் அழியும் பேரிடர்களிலும், போர் இழப்புகளிலும் மட்டுமே சேற்றுச் செந்தாமரையாய் தலை தூக்குகிறது !

ஒரு கனிவான பார்வை, ஒரு தொடுதல், சில இதமான வார்த்தைகள், ஆத்மார்த்தமான அரவணைப்பு, சிற்சில உதவிகள் என்ற எளிமையான விளக்கத்துக்குள் அடங்கிவிடும் மனிதம் நாம் பெருமையுடன் பாதுகாக்கும் ஐ போனை விடவும் விலை குறைந்ததுதான் ! நேசிக்க தெரிந்த எந்த நெஞ்சத்திலும் இலவசமாகவே பீரிடும் !

கிறிஸ்துமஸ் தினத்தன்று வேலை முடித்து வேகமாக கிளம்பிக்கொண்டிருந்தாள் என்னுடன் பணிபுரியும் ஒரு பெண்...

" குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாட போகும் அவசரமா ?!... "

" இந்த வருடம் பிள்ளையை என் கணவனுடன் அவனது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பிவிட்டேன்... நானும் என் தோழிகளும் இன்று இரவு முழுவதும் நகரின் தெருக்களில் உறங்குபவர்களுக்கு இலவச உணவு வழங்க போகிறோம் ! "

எனது பதிலுக்கு காத்திருக்காமல் சட்டென வெளியேறிவிட்டாள் !

இந்த பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட பெண்ணை போலவே இவளுக்கும் தேச எல்லைகள் கிடையாது... சென்னை மாநகரை அரவணைத்த அதே மனிதம்தான் பாரீஸ் நகரத்தின் தெருவாசிகளுக்கும் உணவளிக்கிறது !

இப்புத்தாண்டில் மனிதம் தழைக்க வேண்டுவோம் ! வலைநட்புகளுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !


பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.