Monday, June 1, 2015

பொறுமை என்னும் புதையல் !

வலைநட்புகளுக்கு வணக்கம்...

சொந்த கடமைகளின் பொருட்டு, என் வலைப்பூ பங்களிப்பு நிறையக் குறைந்து வருகிறது. சில புதிய பொறுப்புகளை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொள்ள நிறைய அவகாசம் தேவைப்படுவதால் இந்தத் தொய்வு. வலைப்பூவுக்கான நேரத்தை தினசரி ஒதுக்கும்படியான சூழலை உருவாக்க முயன்றுவருகிறேன். நான் காணாமல் போகும் தருணங்களில் என் நலன் நாடும் நண்பர்களுக்கு மன்னிப்புடனான நன்றிகள் !




" பொறுமை கடலினும் பெரிது... பொறுத்தார் பூமி ஆள்வார்  " எனப் பொறுமை குணத்தைப் பெருமையாய்ப் போற்றுகிறது தமிழ் !

"உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின் "

எனப் பொறுமையைத் துறவுக்கும் மேலாகத் தூக்கி நிறுத்துகிறார் திருவள்ளுவர் ! ....

" அட என்னங்க ?!... போன் பண்ணினா பத்து நிமிசத்துல பீட்சாவும் பர்கரும் வீட்டுக்கு வர்ற ஸ்பீட் கலாச்சாரத்துல பொறுமையைப் பத்தி மொக்கையா ?!... "

" ஆமாங்க சார் ! பொறுமைன்னு சுவத்துல எழுதியிருக்கற வார்த்தையைகூடப் படிக்கப் பொறுமையில்லாம ஓடுற இன்னைக்குத்தான் பொறுமை ரொம்ப அவசியமா எனக்குப் படுது... ஏன்னா, நாம ஓடுற வேகத்துக்கு எதுலயாவது மோதிட்டோம்ன்னா எதுல மோதிக்கிட்டோம்ன்னு தெரிஞ்சிக்கவாவது பொறுமை தேவைங்க...! "

அதனால பொறுமையா இந்தப் பதிவை படிங்க !

பொறுமை என்பது என்ன ?




லட்சக்கணக்கான யூதர்கள் ஹிட்லரால் கொல்லப்பட்டுக்கொண்டிருந்த இரண்டாம் உலகப்போரின் போது யூதர்களுக்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதினார் காந்தி...

" தோழர்களே... ஹிட்லருக்கு பயந்து ஓடாதீர்கள் ! அவருக்குத் தேவை உங்கள் உயிர் தான் என்றால் உலகின் யூதர்கள் அனைவரும் ஒன்று திரண்டு அவரிடம் செல்லுங்கள்.... "

என்பதாக நீளும் அந்தக் கடிதம்,

" ஹிட்லர் வேண்டுமானால் உங்களின் உயிரை அழிக்கலாம் ஆனால் உங்களின் ஆன்மாவை ஒன்றும் செய்ய இயலாது ! நீங்கள் யூதனாகப் பிறந்து யூதனாக இறப்பதை அவரால் மாற்ற முடியாது ! "

என முடியும் !

மேலை நாட்டினரால் இன்றும் அதிர்ச்சியுடன் விவாதிக்கப்படும் வரலாற்றுக் கடிதங்களில் ஒன்று அந்தக் கடிதம் ! ஆனால் காந்தியின் அறிவுரை ஆன்மா சம்மந்தப்பட்டது !

" ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு  " என்ற ஏசுநாதரின் போதனை இன்றளவும் சரி தவறு என விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது ! ஜே. கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ போன்றவர்கள் கூட அடித்தால் திருப்பி அடி ! ஆனால் அத்துடன் நிறுத்திக்கொள் என்றே போதிக்கிறார்கள் !!

காந்தி தன் கடித்தத்தில் கூறுவதைப் புரிந்துக்கொள்ள முடியுமானால் ஏசுநாதரின் வார்த்தை சரி என்பது புரியும்...

தெருவில் போகும்போது நம்மை நிறுத்தி அறைபவனைக் கூறவில்லை ஏசுநாதர் ! அவர் குறிப்பிட்ட அடி, உங்கள் நம்பிக்கைக்கு மாற்றான நம்பிக்கை உடையவன் அடிக்கும் அடி...

ஒரு கன்னம் என்ன ? வேண்டுமானால் இரண்டு கன்னங்களிலும் அடித்துக்கொள்... உன்னால் என் உடலைதான் சிதைக்க முடியுமே தவிர, என் ஆன்மா கொண்டிருக்கும் நம்பிக்கையை அசைக்க இயலாது என்ற பெருமை செருக்கு மிக்கப் போதனை ! எனக்கான நேரம் வரும்வரை அவசரப்பட்டு என் கொள்கையைக் கொன்றுவிடமாட்டேன் என்ற பொறுமை என்னும் பெரும்பலம் !

ஏசுநாதரின் போதனை புரியுமாயின், உலகம் உருண்டை என ஆதாரத்துடன் நிருபித்த கலிலியோ திருச்சபையின் முன்னால் மண்டியிட்டு தன் கூற்றைத் தானே மறுத்தது பயத்தினால் அல்ல என்பதும் புரியும் !

 சாங்கிய தத்துவம் குணங்களை மூன்றாக வகைப்படுத்துகிறது.சத்வ, ரஜோ, தமோ ஆகிய அந்த மூன்று குணங்களில் முதன்மையானது சத்வ குணம். படைப்பின் குணமாகப் போற்றப்படும் சத்வ குணத்தின் அடிப்படை பொறுமை மற்றும் அமைதி !

பிள்ளையாரின் யானை முகமும், அவரது காலடி சுண்டெலியும் கற்றுவிக்கும் வாழ்க்கை தத்துவம் எத்தனை பேருக்கு தெரியும் ?!...

சுண்டெலியை போன்ற அவசரமான, அலைபாயும் மனதை யானையைப் போலப் பொறுமை காத்து அடக்க வேண்டும் என்பதே அந்தத் தத்துவம் !

ரபு மொழியில் சபர் என்றொரு வார்த்தை உண்டு. இஸ்லாமிய மார்க்கத்தில் அடிக்கடி உபயோகிக்கப்படும் வார்த்தைகளில் ஒன்று சபர். சபர் என்றால் பொறுமை, சாந்தி எனப் பொருள்படும்.

தென்னிந்திய இஸ்லாமிய பரம்பரை குட்டிக்கதை ஒன்று...


ஒரு ஆடம்பரமான மன்னனுக்கு மூன்று பெண்கள். இளைய பெண்கள் இருவரும் அரச குடும்பத்துக்கு ஏற்ப பகட்டு வாழ்க்கை வாழ, மூத்தவள் மட்டும் சதா சர்வகாலமும் இறை வணக்கத்தில் ஈடுபாடு கொண்டு, மிக எளிமையாக வாழ்பவள். எந்தச் சூழ்நிலையிலும் சலனப்படாத பொறுமையானவள்.

மூத்த மகளின் எளிமையாலும் பொறுமையாலும் எரிச்சலாகும் மன்னன் அவளை அரண்மனை வாழ்க்கைக்கு ஒத்துவராதவள் என்று ஊருக்கு வெளியே குடிசை ஒன்றில் வசிக்க அனுப்பிவிடுகிறான். அவளும் மறு சொல் பேசாமல் பொறுமையுடன் அங்கு இறைவனைத் தொழுதவாறு தன் வாழ்க்கையைக் கழிக்கிறாள்.

புனித ஹஜ் யாத்திரைக்குப் புறப்படும் மன்னன், அனைவரிடமும் சொல்லிக்கொண்டு தன் இளைய மகள்கள் இருவரிடமும் என்ன கொண்டுவர எனக் கேட்கிறான். அவர்களும் விலை உயர்ந்த, அரிதான பரிசு பொருட்களை வாங்கி வருமாறு வேண்டுகிறார்கள். புனித யாத்திரைக்காக மன்னன் கப்பல் ஏறும்போது ஒரு தடங்கல்...

காற்று இருந்தும், பாய்மரம் விரித்தும் கப்பல் நகரவில்லை !

கலங்கும் மன்னன் அரண்மனை முதியவரிடம் ஆலோசனை கேட்க, மூத்த மகளிடம் சொல்லாமல் கிளம்புவதை இறைவன் ஏற்கவில்லை எனக் கூறுகிறார். மன்னனும் வேண்டா வெறுப்பாய் ஒரு சேவகனை அழைத்து, தான் புனித யாத்திரை போவதை மகளிடம் கூறிவிட்டு அவளுக்கும் என்ன வேண்டும் எனக் கேட்டுவருமாறு அனுப்புகிறான்...

அந்தச் சேவகன் மூத்த இளவரசியின் குடிலுக்குச் செல்லும் சமயத்தில் அவள் தொழுகையில் இருக்கிறாள்... சேவகனுக்கோ அவசரம் !

வந்த விசயத்தை அவன் கூற... தொழுகையை நிறுத்தாமலேயே " சபர்.. சபர்... ! " எனக் கூறுகிறாள் இளவரசி !

அவன் மீன்டும் என்ன வேண்டும் எனக் கேட்க, மீன்டும் சபர் என்ற வார்த்தையே பதிலாக வருகிறது !

அலுப்புடன் மன்னரிடம் திரும்பிய சேவகன் இளவரசியாருக்கு சபர் கட்டை ஒன்று வேண்டுமாம் என்கிறான் ! மன்னனும் தலையில் அடித்துக்கொண்டு சரி என்று சொல்ல, கப்பல் கிளம்புகிறது !

புனித யாத்திரையின் சடங்குகள் முடித்த மன்னன் தன் இளைய பெண்கள் இருவரும் கேட்டது அனைத்தையும் வாங்கிகொண்டு பயணம் திரும்பும் போது மீன்டும் அதே சோதனை ! கப்பல் நகரவில்லை !

அப்போதுதான் மூத்த மகள் கேட்ட சபர் கட்டையின் ஞாபகம் வருகிறது. அதனை வாங்க ஒரு ஆளை அனுப்ப, நகர் முழுவதும் கேட்டலைந்தும் அப்படி ஒரு கட்டை கிடைக்காததால் அலுத்துபோன அவன் ஒரு சவுக்குக் கட்டையைக் கொண்டு வந்து இதுதான் சபர் கட்டை எனக் கூறுகிறான் !

நாடு திரும்பிய மன்னன் சபர் கட்டையை, என்ன வேண்டும் எனக் கேட்டு அனுப்பிய அதே சேவகனிடம் மூத்த மகளுக்கு அனுப்புகிறான்...

இதோ நீங்கள் கேட்ட சபர் கட்டை என நீட்டும் சேவகனை பார்த்து சிரிக்கிறாள் அந்தப் பெண் !

" தொழுகையில் இருந்த என்னை அவசரப்படுத்தியதால் பொறுமையாக இரு என்னும் பொருளில் சபர் என்றேன்... நீயோ அவசரமாய்ப் போய்ச் சபர் கட்டை கேட்டதாகச் சொல்லிவிட்டாய் ! ... சரி, அப்படி வைத்துவிட்டு போ ! "

எனக் கூறுகிறாள். அவனும் அந்தக் கட்டையைச் சுவரோரம் சாய்த்து வைத்துவிட்டுத் திரும்புகிறான்.

அந்த மூத்த இளவரசி தொழுகை முடித்து, எனக்கு ஒரு சிறந்த கணவனைக் காட்டு என இறைவனிடம் இறைஞ்சி கேட்டுக் கண் திறக்கும் போது அந்தச் சவுக்குக் கட்டை பிளந்து அதிலிருந்து ஒரு ராஜகுமாரன் வெளிப்பட்டு அவளை மணமுடித்துக் கொள்வதாய்க் கதை முடியும் !

ஸ்லாமிய மரபின் ஒரு பிரிவான சூபி தத்துவம் மற்றும் ஜென் பெளத்தம் பொறுமையை மனிதன் முழுமை அடைவதற்கான முழுமுதல் தகுதியாய் முன்நிறுத்துகின்றன !

ஜென் தத்துவத்தில் தவம் என்பதின் விளக்கமே பொறுமையுடன் காத்திருத்தல் ! தவத்தின் முடிவில் கிடைக்கும் வரத்தைவிட, அந்த வரத்துக்காகக் காத்த பொறுமையே பெரிதாகப் போற்றப்படுகிறது ! ஏனெனில் நாம் பெற விரும்பும் ஒன்றுக்காகக் காத்திருக்கும் தருணமே நாம் அடைய விரும்பும் அந்த ஒன்றுக்கு தகுதியுடையவராக நம்மை மற்றிக்கொள்ளக் காலம் நமக்களித்த வரம் !

து எப்படி ? எல்லாவற்றுக்கும் பொறுத்து பொறுத்துப் பொறுமை காத்தால் என்ன ஆவது ? நமக்கான மரியாதை கிடைக்க வேண்டாமா ?!... யாருக்கு யார் அடிபணிவது ?...


அடிபணிவது வேறு பொறுமையாய் கடந்து செல்வது வேறு ! மெளனம் காத்து பொறுத்திருப்பதால் நமது மரியாதை குறைந்துவிடாது... வேகமாய் வந்து விழும் வார்த்தைகளின் சப்தத்தைவிடப் பொறுமையான மெளனம் ஏற்படுத்தும் பயமும் தாக்கமும் பெரிது !

அடிபணிதலோ பல்லை கடித்துக் கோபத்தை அடக்கி, பின்னால் நம்மைவிட எளியவரிடம் கொட்டுவதோ பொறுமை அல்ல ! பொறுமை என்பது விருப்பு வெறுப்பற்று சலனமற்ற மனதுடன் இருத்தல்... எந்தச் சூழ்நிலையிலும் நிதானம் இழக்காமல் நின்று, நாம் வகுத்துக்கொண்ட நியாயத் தர்மங்களையும் தாண்டிய பரந்த நோக்குடன் சிந்தித்துச் செயல்படுதல்.

ணினி முன் அமர்ந்தவரெல்லாம் கருத்தும் எதிர்கருத்தும் சொல்ல வசதியாகிவிட்ட இன்றைய உடனடி ஊடகத்தால் கருத்துச் சுதந்திரம் என்பது கருத்து அவசரமாய் மாறிவிட்டது ! முகம் தெரியாத ஒருவர் எழுதிய வரிகளுக்காக நமக்கு இரத்த அழுத்தம் எகிறுகிறது ! எழுதிய அவர் எங்கோ சாவகாசமாய்ப் பீட்சா மென்றுகொண்டிருக்க நாம் நம் உற்ற தோழருடன் அதன் பொருட்டுச் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறோம் !

கத்தரிக்காய் விலை தொடங்கிச் சினிமா முதல் அரசியல்வரை அடித்துப் பிழிந்து அவசர நொடியில் உடனடி தீர்ப்பு... உடனடியாக அடுத்தச் செய்தி ! நேற்று நடந்ததின் இன்றைய நிலை பற்றியெல்லாம் கவலையில்லை ! அதுவே ஜாதி மதச் செய்திகள் என்றால் சொல்லவே வேண்டாம் !

ஊடகம் ஒரு உதாரணம் மட்டுமே !...

இன்றைய வாழ்க்கை முழுவதுமே பொறுமையற்ற படபடப்பாய் அமைந்துவிட்டது !

" ஐம்பது நாட்களில் அம்பானியாவது எப்படி ?! " என்ற புத்தகத்தை வாங்கும்போதே அம்பானியின் இன்றைய நிலைக்கு அவரது ஐம்பது வருட உழைப்பும், கொஞ்சம் அரசியல் தந்திரமும் ஒளிந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டால் அவர் வாழ்க்கையில் எவ்வளவு பொறுமையாக யோசித்துக் காய்களை நகர்த்தியிருப்பார் என்பது புரியும் !

ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டென்பது விஞ்ஞானப் பூர்வமாய் நிருபிக்கப்பட்ட ஒரு இயற்கை நியதி.

அவசரமான வினைகள் மிக வேகமான எதிர்வினைகளை விளைவிக்கும் என்பதைப் புரிந்துகொண்டால், இயங்குதலைவிட இருத்தலே முக்கியம் என்ற நியதியும் புரியும் !

விரைவாகத் தயாரிக்கப்பட்ட அவசரத்துக்கான உணவான பீட்சா உண்டாகும் எதிர்வினை கொழுப்பு சேருதல் ! நிறைவாகச் சமைக்கப்பட்ட கேழ்வரகோ இருத்தலை, அதாவது இருக்கும் வரைக்கும் உடலை பராமரிக்க உதவுகிறது !

வேடிக்கையான உதாரணம் என்றாலும் உண்மை அதுதானே ?!

வாழ்க்கையில் எது நடந்தாலும், இதுவும் மாறும் என்ற எண்ணத்தோடு, " எதுவும் மாறும் " என்ற தெளிவையும் கவனத்தில் கொண்டு பொறுமையாய் யோசித்தால் எதற்கும் தீர்வு கிடைக்கும் என்பதோடு நமது இரத்த கொதிப்பும் சமன்படும் !

வாழ்வோம் வளமுடன் !


பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

58 comments:

  1. பொருமையாக....பெருமையாக படித்துவிட்டேன் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. பொறுமை பற்றிய என் பதிவை பொறுப்புடன் படித்து முதல் கருத்திட்ட உங்களை பற்றி பெருமை கொள்கிறேன் தோழரே !

      நன்றி

      Delete
  2. வணக்கம் சாமானியரே! வருக!
    பதிவு என்னும் பாதையில் பாதம் பதித்தமைக்கு
    வலைப் பூ என்னும் மாலை கொண்டு வாசல் வரை வந்து
    வரவேற்கின்றேன்!
    பொறுமையின் பொருள் தங்களது அருளால் இன்று கிடைத்தது!
    அதுவும் அந்த சுண்டெலி கதை
    சுண்டி விட்டது எமது பொறுமை உணர்ச்சிகளை!
    இப்ப சொல்லுங்க நண்பரே அருளால் என்று சொன்னது சரிதானே?
    தென்னிந்திய இஸ்லாமிய பரம்பரை குட்டிக்கதை யில் சொன்னது போல்
    அந்த மூத்த இளவரசி தொழுகை முடித்து, எனக்கு ஒரு சிறந்த கணவனைக் காட்டு என இறைவனிடம் இறைஞ்சி கேட்டுக் கண் திறக்கும் போது அந்தச் சவுக்குக் கட்டை பிளந்து அதிலிருந்து ஒரு ராஜகுமாரன் வெளிப்பட்டு அவளை மணமுடித்துக் கொள்வதாய்க் கதை முடியும் ! என்றே சொல்லி கதையை முடித்து இருந்தீர்கள் அல்லவா?
    அதேபோன்று சபர் கட்டையானது பிளந்து அதிலிருந்து ஒரு ராஜகுமாரி வெளிப்பட்டு
    அவளை தாங்கள் மணம் முடிப்பதாக நான் கனவு காண்கிறேன்! கதை நிஜமாகுமா?
    நண்பரே!
    பொறுமையோடு பதில் தாருங்கள்! நன்றி! நண்பரே நல்ல பதிவை தந்தமைக்கு!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நண்பரே...

      ஏற்றுக்கொண்டேன் உங்களின் அறிவு மணம் வீசும் வலைப்பூ மாலையை !

      " இப்ப சொல்லுங்க நண்பரே அருளால் என்று சொன்னது சரிதானே? "

      ஏதோ இந்த அருகம்புல்லால் இயன்றது... !!! ( அட ! அருகம்புல்லும் பிள்ளையாருக்கு உகந்தது அல்லவா ?! )

      " சபர் கட்டையானது பிளந்து அதிலிருந்து ஒரு ராஜகுமாரி வெளிப்பட்டு
      அவளை தாங்கள் மணம் முடிப்பதாக நான் கனவு காண்கிறேன்! கதை நிஜமாகுமா?
      நண்பரே! "

      நல்லவர்களின் உள்ளன்புடனான கனவுகளும் பிரார்த்தனைகளும் நிச்சயம் நிஜமாகும் நண்பரே...

      அந்த நிகழ்வில் நிச்சயமாய் நீங்களும் முன் நிற்பீர்கள்.

      நன்றி என்ற வார்த்தை மட்டும் போதுமானதாகுமா ?...

      Delete
  3. உங்களை வலையுலகில் பார்க்க பொறுமை ரொம்ப அவசியம்தான், சாம்! :))

    ReplyDelete
    Replies
    1. சாரி வருண்... இனி இடைவெளியின்றி தொடர முயற்சிக்கிறேன்...

      Delete
  4. பொறுமை கடலினும் பெரிது... பொறுத்தார் பூமி ஆள்வார் " எனப் பொறுமை குணத்தைப் பெருமையாய்ப் போற்றுகிறது தமிழ் !

    ***"உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
    இன்னாச்சொல் நோற்பாரின் பின் "

    எனப் பொறுமையைத் துறவுக்கும் மேலாகத் தூக்கி நிறுத்துகிறார் திருவள்ளுவர் ! ....***

    இதனால்தானோ என்னவோ, ஆறு மணிக்கு வர்ரேன்னு சொல்லீட்டு 9 மணிக்கு வர்ரானுக நம்மாளுக. வள்ளுவர் சொல்றபடி பொறுமைக காத்து நடக்கிறோமோ? னு பார்க்கத்தானா?

    ஆனால் ஒண்ணு சாம், வள்ளுவரே அவர் எல்லாரையும் குறல் குறளா எழுதி இப்படி செய்தால் சாலச் சிறந்ததுனு செய்ய சொன்னதுல ஒரு 10% செய்து இருப்பாரா?னு எனக்கு ஒரு சந்தேகம்! :)

    வள்ளுவரையே விமர்சிக்கிறான் தமிழின துரோகினு எல்லாரும் கட்டையை தூக்கிக் கொண்டு அடிக்க வரப்போறாங்க! :))

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதில் எனக்கும் உடன்பாடு உண்டு வருண்...

      தமிழர்கள் மட்டுமல்ல... ஒட்டுமொத்த இந்தியர்களின் குறைகளில் ஒன்று நீங்கள் குறிப்பிட " TOUCH HIM NOT ! " குணம் !

      திருவள்ளுவர் தொடங்கி இந்திய அளவில் காந்தி, தமிழ்நாட்டில் எம் ஜி ஆர் என நாம் விமர்சனத்துக்கு அப்பால் வைத்தவர்களின் பட்டியல் இந்திய ஜனத்தொகையை போலவே நீளம் !

      இன்றும் மேல் நாட்டில் காந்தியின் அஹிம்சா கொள்கையே கேள்விக்குள்ளாக்கி விவாதம் செய்துகொண்டிருக்கிறார்கள்... அனைத்துமே ஆரோக்யமான விவாதங்கள். அவர்கள் நம்மவர்களை போல, விவாதத்தில் தடுமாறினால் அக்காள் தங்கைகளை அசிங்கமாய் வைவதையெல்லாம் செய்வது கிடையாது !!!

      வருகைக்கும், ஆரோக்யமான கருத்துக்கும் நன்றி வருண்

      Delete
  5. வணக்கம், நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு நீண்ட பதிவு, பொருமையாக படித்தேன்.
    ஆனா பொருமை எருமையினும் பெரிது என்பார்கள், சாரி சாரி,
    அருமையான பதிவு. நன்றி.

    ReplyDelete
  6. வாருங்கள் சகோதரி...

    " ஆனா பொருமை எருமையினும் பெரிது..."

    அட ! இதை படிக்கும் போதுதான் தோனுது... எமனோட வாகனத்தை எருமையா படைச்சதுக்கு காரணம் அவன் பொறுமையாகவே வரட்டும்ன்னு தானா ?!

    நன்றி

    ReplyDelete
  7. வணக்கம் சகோ
    அவசர உலகத்தில் பொறுமை காப்பது ரொம்பக் கஷ்டம் தான் ஆனாலும் பொறுமையாக படித்தேன் பதிவை.
    பொறுமை காக்கின் பெருமை கொள்வார் என்றும் சொல்வார். பொறுமை பற்றிய அருமையான பதிவை தந்தமைக்கு நன்றி ! பொறுமையை கடைபிடிக்க முயல்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி...

      இந்த அவசர உலகத்தை நிர்மாணித்துகொண்டதும் மனிதன் தான் !... அதை மீன்டும் பொறுமையான வாழ்க்கையாக மாற்றுவதற்கும் மனிதனால் (முயற்சித்தால்) முடியும் !

      நன்றி சகோ !

      Delete
  8. பொறுமை, நிதானம் தற்போதைய தேவை என்பதைப் பதிவினைப் படிக்கும்போது உணர்ந்தேன். நல்ல உதாரணங்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அய்யா...

      பொறுமை, நிதானம் இரண்டுக்குமான தேவை என்றைக்கும்விட இன்றைக்கு மிக அவசியமானதாக படுகிறது !

      நன்றி அய்யா

      Delete
  9. மிக அவசியமான பதிவு
    மவுனம் பொறுமை என கிளாசிக் கருத்துப் பேசும் மாஸ் பதிவு...
    வாழ்த்துக்கள் சாம்ஜி
    எனக்கு மிக தேவையான பதிவு மிகவும் அவசியமான தருணத்தில்

    ReplyDelete
    Replies
    1. எனது இந்த பதிவு உங்களிடத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி !

      நன்றி

      Delete
  10. குட்டிக்கதைகள் என்றாலே ரொம்பவும் பிடிக்கும்... +

    உண்மைகள் 100%

    blogspot.in to blogspot.com மாற்றினால் தான் தமிழ்மணம் செயல்படும்...

    ReplyDelete
    Replies
    1. இந்த பதிவு வலைசித்தர் அவர்களின் உள்ளம் கவர்ந்ததில் மகிழ்ச்சி...

      சில சொந்த கடமைகளை முடித்துவிட்டு தமிழ்மணம் சேர உதவி நாடிவருவேன்... தாமதத்துக்கு மன்னிக்கவும் !

      நன்றி

      Delete
  11. மிக மிக அருமையான பதிவு! இத்தனை நாள் பொறுமை காத்து அருமையான ஒரு பதிவை தந்திருக்கின்றீர்கள் என்றால் அது மிகையல்ல. இப்படி நிதானமாக எழுதுவதால் தான் அரிதாகத் தந்தாலும் பெரிதாக (இது பதிவின் நீளம் அல்ல....பெரிய கருத்தை) எழுதுகின்றீர்கள்! குட்டிக் கதைகள் எல்லா மதங்களையும் அருமையாக இணைத்து.....ஒரு அக்மார்க் பதிவு!!!

    அவசரமான வினைகள் மிக வேகமான எதிர்வினைகளை விளைவிக்கும் என்பதைப் புரிந்துகொண்டால், இயங்குதலைவிட இருத்தலே முக்கியம் என்ற நியதியும் புரியும் !

    விரைவாகத் தயாரிக்கப்பட்ட அவசரத்துக்கான உணவான பீட்சா உண்டாகும் எதிர்வினை கொழுப்பு சேருதல் ! நிறைவாகச் சமைக்கப்பட்ட கேழ்வரகோ இருத்தலை, அதாவது இருக்கும் வரைக்கும் உடலை பராமரிக்க உதவுகிறது !

    வேடிக்கையான உதாரணம் என்றாலும் உண்மை அதுதானே ?!// உண்மை உண்மை!

    ReplyDelete
    Replies
    1. ஆசான் அவர்களே...

      வழக்கம் போலவே, ஆழ்ந்து படித்து கருத்துரை வழங்கியுள்ளீர்கள்...

      சற்றே நின்று யோசித்தால், எதற்காக இவ்வளவு அவசரமாய் பொறுமையற்று ஓடி வாழ்கிறோம் என்ற கேள்வி எழுகிறது !

      தங்களின் மனமார்ந்த கருத்துக்கு நன்றி.

      Delete
  12. சாம்,

    பொறுமையின் உண்மையான நிறத்தை உங்கள் எழுத்துக்களால் வண்ணமயமான ஓவியமாக வரைந்தது போலிருக்கிறது. பாராட்டுக்கள்.

    ஏசுவின் பிரபலமான ஒருவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்ற போதனையை பலர் தவறாக புரிந்துகொண்டிருக்கிறார்கள். நீங்கள் அதன் ஆன்மாவை எளிமையாக விவரித்து என்னை ஆச்சர்யப்பட வைத்துவிட்டீர்கள். சபாஷ்.வன்முறைக்கு வன்முறை தீர்வல்ல என்ற அதன் அர்த்தம் புரிவதற்கு சற்று யோசிக்கவேண்டும்.

    அங்கிருந்து சுண்டெலி, யானை என்று வந்து சபர் கட்டை கதையோடு பொறுமைக்கான அவசியத்தை அழகாக எடுத்துரைத்ததற்கு இன்னொரு பாராட்டு.

    உங்கள் பதிவு வர நீண்ட நாட்கள் ஆகின்றன. பரவாயில்லை. இது போன்ற ஆழமான கருத்தை ரசனையுடன் சொல்லும் பதிவுக்கு முன் இந்த நீண்ட காத்திருத்தல் பெரிய விஷயமல்ல என்று தோன்றுகிறது.

    இறுதியாக நண்பர் புதுவை வேலு (யாதவன் நம்பி) கூறிய கருத்தை வரவேற்கிறேன். ஆனால் ஒரு சிறிய திருத்தம். உங்கள் ராஜகுமாரி எந்த சபர் கட்டைக்குள்ளும் இல்லை உங்கள் அருகிலேயே இருப்பது போல நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. காரிகன்,

      வழக்கம் போலவே மிக அழகான வார்த்தைகளில் அமைந்த ஆழமான பின்னூட்டம் !

      இந்த பதிவை உங்களுக்காக எழுதினேன் என்றால் நம்புவீர்களா ?!...

      தாமதமாகிவிட்டதே... எங்கே அடுத்த பதிவு என்று காரிகன் செல்லமாய் குட்டுவாரே என்று நினைத்தே எழுத தொடங்கினேன் ! அதே போல நீங்களும் கேட்டிருந்தீர்கள் !!!

      உங்களின் பாராட்டை ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில் எழுத்தில் நான் கற்க வேண்டியதும் கடக்க வேண்டியதும் நிறைய உள்ளது என்பதையும் நினைவில் கொள்கிறேன் !

      " உங்கள் ராஜகுமாரி எந்த சபர் கட்டைக்குள்ளும் இல்லை உங்கள் அருகிலேயே இருப்பது போல நினைக்கிறேன். "

      காரிகன், மேலே குறிப்பிட்ட உங்களின் வரிகளை படித்தபோது கண்கலங்கிவிட்டேன் என்ற உண்மையை சொலவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை ! என்னை நன்கு அறிந்த ஆத்ம நண்பர்களில் யாராவதுதான் காரிகன் என்ற பெயரில் ஒளிந்திருக்கிறார்களா என தோன்றுகிறது ?!

      அமாம் காரிகன் ! நீங்கள் நினைத்தது முற்றிலும் உண்மை ! சபர் கட்டையிலிருந்து வெளிப்படும் அதிசயத்துக்கு ஈடான ஒரு நிகழ்வில் நான் கண்டடைந்த என் ராஜகுமாரி என் அருகில்தான் இருக்கிறாள் ! நான் பொறுமை பற்றி எழுதியதற்கு காரணமும் அவள்தான் !

      நீங்கள் என் மீது கொண்டுள்ள உள்ளார்ந்த அன்புக்கும் ஆத்மார்த்தமான நட்புக்கும் நன்றியெல்லாம் கூற மாட்டேன் காரிகன் !



      Delete
  13. வணக்கம் நண்பரே நலம்தானே... தங்களது பதிவுகளிலேயே நான் மிகவும் விரும்பி படித்த பதிவு இதுதான் என்று சொல்வேன் அற்புதமான விடயத்தை அழகாக நகர்த்திக்கொண்டு சென்ற விதம் அருமை தொடருங்கள் இடைவெளி வேண்டாமே....

    ஸஃபூர் இதை அடிக்கடி உபயோகப்படுத்தும் அரேபியர்கள் எந்த நேரமும் ஸூர்ராஹ்,, ஸூர்ராஹ் (சீக்கிரம்) என்று நொடிக்கு நொடி அவசரப் பட்டுக்கொண்டே வாழ்கின்றார்கள் நண்பரே...

    தொடர்பு கொள்ளுங்கள் sivappukanneer@gmail.com

    - கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நண்பர்ஜீ !!!

      உங்களின் வரிகள் என்னை நெகிழச்செய்துவிட்டன ! நிச்சயமாய் இடைவெளியின்றி தொடர முயல்கிறேன் தோழரே !*

      ஸூர்ராஹ்,, ஸூர்ராஹ் (சீக்கிரம்) என்று நொடிக்கு நொடி அவசரப் பட்டுக்கொண்டே வாழ்கின்றார்கள் நண்பரே...

      அவசரப்படுவது மட்டுமல்ல, நிறைய அராபியர்கள் இஸ்லாம் போதித்த சகோதரத்துவத்திலிருந்து நீண்ட தூரம் விலகிவிட்டார்கள் என்பது என் கருத்து.

      விரைவில் தொடர்பு கொள்கிறேன் நண்பரே...

      நன்றி

      Delete
  14. மூன்று மதங்களிலும் கூறப்பட்டிருக்கும் பொறுமைப் பற்றி பெருமையாக கூறியிருப்பது அருமை. தங்கள் தளத்தில் இணைந்து தொடர்கிறேன் நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. நண்பரே,

      தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

      இணைந்து தொடருவோம்...

      Delete
  15. மூன்று மதங்களிலும் கூறப்பட்டிருக்கும் பொறுமைப் பற்றி பெருமையாக கூறியிருப்பது அருமை. தங்கள் தளத்தில் இணைந்து தொடர்கிறேன் நண்பரே!

    ReplyDelete
  16. பொறுமையாக வந்து அந்தப் பொறுமை எனும் வார்த்தைக்கே விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள். குட்டிக்கதையும், உதாரணங்களும் பிரமாதம்.

    ReplyDelete
    Replies
    1. பொறுமையாக படித்து அருமையாக பின்னூட்டமிட்டதற்கு நன்றி !

      Delete
  17. அண்ணா வணக்கம்.

    நிறைய சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன்.

    உங்கள் பதிவைவிட அதிகமாகப் போய்விடும் என்றும் நினைக்கிறேன்.

    ஆற்றொழுக்கு என்று சொல்வார்கள் எழுத்தில்.

    அப்படிப்பட்ட நடையிது.

    எனக்கென்னமோ,

    ஒரு மிகச்சிறந்த உரையை உங்கள் எழுத்தில் நிகழ்த்திவிட்டுப் போய்விட்டீர்கள் எனத்தோன்றியது முதல் வாசிப்பில்.

    இப்பொழுதைக்கு இதை மட்டும் கூறிச்செல்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஜோசப்...

      உங்களின் முதல் பின்னூட்டத்திலிருந்து இன்றுவரை என்னை ஊக்குவித்து, என் செம்மைபடுத்த உதவுபவர்களில் நீங்களும் ஒருவர் !

      " ஆற்றொழுக்கு என்று சொல்வார்கள் எழுத்தில்.
      ஒரு மிகச்சிறந்த உரையை உங்கள் எழுத்தில் நிகழ்த்திவிட்டுப் போய்விட்டீர்கள் எனத்தோன்றியது முதல் வாசிப்பில்... "

      ஜடப்பொருட்கள் கூட ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் இந்த பூமியில் சுயம்புவாக எதுவும் கிடையாது என்பது என் எண்ணம்... என்னை செதுக்குவதில் நண்பர் காரிகனை போல உங்களுக்கும் பங்குண்டு !...

      " இப்பொழுதைக்கு இதை மட்டும் கூறிச்செல்கிறேன்..."

      சீக்கிரம் வாருங்கள் ஜோசப்... சத்வ, ரஜோ, தமோ பற்றிய உங்களின் கருத்தை அறிய ஆவலாக காத்திருக்கிறேன்.

      நன்றி

      Delete
    2. அண்ணா வணக்கம்.
      பதிவுகளுக்குப் பின்னூட்டமிட விரும்பும் என் கைகளைக் கட்டிக் கொண்டு சில நாளாயிற்று. அவை பெரிதும் விரும்பப்படுவதில்லை. வாயடக்கம் தேவைப்படுவதுபோல பதிவுகளுக்குப் பின்னூட்டம் இடும்போது கை அடக்கமும் தேவைப்படுகிறது.
      உங்கள் பதிவு படிக்க முதலில் என் கண்ணை உறுத்தியது, //இந்து மதம் மனித குணங்களை மூன்றாக வகைப்படுத்துகிறது.சத்வ, ரஜோ, தமோ ஆகிய அந்த மூன்று குணங்களில் முதன்மையானது சத்வ குணம். படைப்பின் குணமாகப் போற்றப்படும் சத்வ குணத்தின் அடிப்படை பொறுமை மற்றும் அமைதி !// என்னும் பகுதி. ஏனெனில் இது இந்து மதம் கூறும் கருத்தல்ல. இதனைக் கூறுவது சாங்கியம்.
      ( இந்து மதம் வரையறு என்று கேட்டுவிடாதீர்கள்! அதற்குள் நான் வரவில்லை.)
      இந்து மதம் என்பதனுள் (உலகாயதம் தவிர), கிறித்தவ, இஸ்லாமிய சமயங்களின் வருகைக்கு முன்பிருந்த சமயக் கருத்துக்கள் பெரிதும் உள்ளடக்கப்பட்டபின், இதை இந்து மதக் கருத்து என்று நீங்கள் சொல்வதில் உள்ள பொதுமரபினைத் தவறு என முடியாது எனவே என் கண் உறுத்தியதற்கு இதுவன்று காரணம்.
      நான் தற்போது ஆரம்பித்திருக்கும் ( ஆரம்பித்து அறுக்கும் என்பதே இன்னும் சரியான பதம் :) ) சமயங்கள் தொடர்பான இடுகையில், பகிர நினைத்திருந்த செய்தி இது.
      அறிந்ததை இங்கு பகிர்வதில் எனக்குத் தடையில்லை. ஆனால் பதிவில் வரும் ஒரு சிறு செய்தி, பதிவின் முதன்மைக் கருத்திற்குப் பெரிதும் தொடர்பில்லாச் சிற்றிழை..! அதைப் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டுமா என்றுதான் தவிர்த்தேன்.
      இந்தியத் தொல் சமயங்களை வேதங்களைப் பிரமாணமாக ஏற்பன, ஏலாதன என இரு கூறுகளாகப் பகுத்தோமானால், வேதத்தைப் பிரமாணமாக ஏலாதன உலகாயுதம், சமணம், பௌத்தம், என்னும் மூன்றும் ஒரு புறமும், வேதத்தை ஏற்பனவாக, சாங்கியம், யோகம், வைசேடிகம், நியாயம், மீமாம்சை, வேதாந்தம், சித்தாந்தம், முதலாயின மறுபுறமும் நிற்கும்.
      சாங்கியம் என்பதன் பொருள் பூரண அறிவு.
      எது அறிவு..?
      சாங்கியர் கொள்கைப்படி,
      மாற்றத்திற்கு உள்ளாகும் எதுவும் அறிவுள்ளதாகாது.
      அறிவே உருவான பொருள் மாற்றம் அடையாது.
      இதுவே அவர்களின் தத்துவ அடிப்படை.

      சமணர் கொண்ட சீவன், ஆசீவன் என்பதைப் ‘புருடன், பிரகிருதி’ என்கிறது சாங்கியம். இங்குச் சாங்கியர் பிரகிருதியின் குணங்களாகக் கொள்பவையே நீங்கள் காட்டிய சாத்வீகம், ராஜசம், தாமசம் என்னும் குணங்கள். இவையே பிரகிருதிக்கு அடிப்படை.
      சாங்கிய தத்துவத்தில் இந்தக் குணம் என்பது, நாம் இன்று வழங்கும் ஒன்றன் இயல்பு அல்லது தன்மை என்ற பொருளில் கையாளப்படவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.
      சாங்கியர் கோட்பாட்டின் படி,
      குணம் என்பது ஒரு பொருள்.
      இந்த மூன்று குணங்களும் மூன்று பொருட்கள்.
      சாத்வீகம் என்பது, இலேசான, மேலெழுகின்ற, ஒன்றன் உருவத்தைப் பிரதிபலிக்கின்ற ஒரு பொருள்.
      தீ, காற்று போன்றவை மேலெழுவது அவற்றின் சாத்வீக குணத்தினால்தான்.
      கருணை, மகிழ்ச்சி, கூச்சம் போன்றவை சாத்வீகத்தின் இயல்புகள்.
      ராஜசம் என்னும் பொருள், தானும் இயங்கிப் பிறவற்றையும் இயக்குவது.
      தீயைப் பரவச் செய்வதும், காற்றை வீசச் செய்வதும், நம் ஐம்புலன்களைப் பொருள்கள் மேல் செலுத்துவதும் ராஜசமே!
      வீரம், ஆசை, தற்புகழ்ச்சி, திமிர் போன்றன அதன் குணங்கள்.
      தாமசம் என்னும் பொருள் எந்த இயக்கத்தையும் தடுப்பது. இருள், மயக்கம் போன்றன அதன் தன்மைகள்.
      இம்மூன்றிடையேயும் சதா போர் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. சில நேரங்களில் ஒன்றன் ஆதிக்கம் மிகும். ஏனையவற்றின் ஆதிக்கம் குறையும். அதே நேரம் இம்மூன்றும் ஒன்றைவிட்டு மற்றன எப்போதும் நீங்குவதில்லை. அவற்றை நீ்க்கவும் முடியாது என்னும் கருத்துடையவர் சாங்கியர்.
      இதற்குச் சாங்கியர் காட்டும் உவமை, எண்ணை, திரி, சுடர் என்பன.
      இவை மூன்றும் தம்மில் முற்றிலும் மாறுபட்ட இயல்பை உடையன. ஆயினும் மூன்றும் சேர்ந்தே ஒளியை உருவாக்குகின்றன. இவ்வுவமையின் பரிமாணம் சாத்வீக, ரஜோ, தாமச குணங்கள் இணைந்து உலகின் பொருட்கள் அனைத்தையும் உருவாக்குவதாக விரிகிறது. இம்மூன்று குணமும் இல்லாமல் உலகில் எந்தப் பொருளும் இல்லை என்கிறது சாங்கியத் தத்துவம்.
      மனிதனிடத்திலும் இம்மூன்று குணங்களும் இருக்கின்றன.
      எண்ணையும் தீயும் திரியுமாய் ஒளிரும் வாழ்வில், ஒளிர்தலும் எரிதலும் தீர்தலும் கூடியும் குறைந்தும் தொடர்கின்றன. அவ்வவற்றிற்கான இயல்புகளுடன்.
      சாத்வீகம் - அமைதி,
      ராஜசம் - அசுரம்
      தாமசம் - சோம்பல்
      என மட்டுமே பொதுவாகப் பார்க்கப் படுகின்ற இக்குணங்கள் பற்றிய என் எண்ணம் உங்கள் பதிவினைப் படித்த போது மனதின் உருப்பெருக்கி ஒன்றைப் பெருகத் திறந்து எறும்பொன்றை யானையாக்கிற்று.
      விரிவஞ்சியும் நேரமின்மையாலும் உங்கள் பதிவுக்குப் பெரிய தொடர்பில்லாததாலும் இம்முக்குணங்களையும் இதழோரம் குறுநகையுடன் படித்துக் கடந்தேன்.
      எப்படிப் பார்த்தீர்கள்..? …. :)
      பொறுமை பற்றி நான் சொல்ல வேண்டிய கருத்தும் உள்ளது.
      இது போல் இரு மடங்கு வரும்..!

      வாய்ப்பளிப்பின் வருவேன்.

      நன்றி.

      Delete
    3. " பதிவுகளுக்குப் பின்னூட்டமிட விரும்பும் என் கைகளைக் கட்டிக் கொண்டு சில நாளாயிற்று. அவை பெரிதும் விரும்பப்படுவதில்லை. வாயடக்கம் தேவைப்படுவதுபோல பதிவுகளுக்குப் பின்னூட்டம் இடும்போது கை அடக்கமும் தேவைப்படுகிறது. "

      ஜோசப்...

      நீங்கள் குறிப்பிட்டது, " எல்லாம் கற்று தேர்ந்தவர்களின் " பதிவுகளுக்கு வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். நான் எழுதுவது கற்றுக்கொள்ள, அறியாதவற்றை அறிந்துக் கொள்ள... அறிந்தவற்றை இன்னும் செம்மைபடுத்திக்கொள்ள !

      ஒவ்வொரு பதிவுக்கு பின்னரும் நான் எதிர்பார்ப்பது ஆரோக்யமான அறிவுப் பகிர்வைதான் ! இதுதான் வலைப்பூ எழுத்தின் தனித்தன்மையும் கூட !...

      " ஆனால் பதிவில் வரும் ஒரு சிறு செய்தி, பதிவின் முதன்மைக் கருத்திற்குப் பெரிதும் தொடர்பில்லாச் சிற்றிழை..! அதைப் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டுமா என்றுதான் தவிர்த்தேன்... "

      தவிர்க்கக்கூடாது ஜோசப் ! சிறு செய்தி என பலவற்றை தவிர்த்து தவிர்த்து தான் நமது சமூகத்தை இந்த நிலைக்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறோம் !

      உண்மையை கூற வேண்டுமானால்... நான் எழுதிய வரிகளில் எனக்கே சந்தேகம் இருந்தது... சாங்கியம் என சமீபத்தில் விரிவாக படித்ததும் ஞாபகம் இருந்தது. ஆனால் நேரமின்மை என்ற அவசரத்தால் சரிபார்க்காமல் விட்டுவிட்டேன். ( சாங்கியம் பற்றி எந்த நாவலில் படித்திருப்பேன் என உங்களுக்கு புரியும் ?! )

      அந்த வரியை திருத்திவிட்டேன்.

      உங்களை எண்ணி வியக்கிறேன் ஜோசப் ! நீங்கள் என் தளத்தை தொடர்வதில் பெருமையும் படுகிறேன்.

      " பொறுமை பற்றி நான் சொல்ல வேண்டிய கருத்தும் உள்ளது.
      இது போல் இரு மடங்கு வரும்..!

      வாய்ப்பளிப்பின் வருவேன்... "

      நீண்ட பின்னூட்டம் மட்டுமல்ல, நீங்கள் விரும்பினால் எனது தளத்தில் பதிவே எழுதலாம் வாய்ப்பளிப்பேன் சகோதரா !

      நன்றி








      Delete
  18. சாம் சார்

    வாசிப்பதற்கு பொறுமையில்லாத உலகத்தில் பொறுமையைப் பற்றி போதித்துள்ளீர்கள் . அழகான உதாரணங்களோடு அருமையான விளக்கங்களும் கொடுத்துள்ளீர்கள்.

    ///கணினி முன் அமர்ந்தவரெல்லாம் கருத்தும் எதிர்கருத்தும் சொல்ல வசதியாகிவிட்ட இன்றைய உடனடி ஊடகத்தால் கருத்துச் சுதந்திரம் என்பது கருத்து அவசரமாய் மாறிவிட்டது ! முகம் தெரியாத ஒருவர் எழுதிய வரிகளுக்காக நமக்கு இரத்த அழுத்தம் எகிறுகிறது ! எழுதிய அவர் எங்கோ சாவகாசமாய்ப் பீட்சா மென்றுகொண்டிருக்க நாம் நம் உற்ற தோழருடன் அதன் பொருட்டுச் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறோம் !///

    இந்தப் பகுதியை நான் மிகவும் ரசித்தேன். எழுத்துச் சுதந்திரம் இருப்பதால் மனதில் உள்ளதையெல்லாம் எழுத ஒரு கூட்டம் உண்டு. அதை மறுக்க ஒரு கூட்டம் உண்டு . ஆனால் வார்த்தைகளால் தாக்கிக் கொள்வதை சிலர் கொள்கையாகவே வைத்திருக்கிறார்கள். என்னையும் நான் அதில் சேர்த்துக் கொள்வேன். அது எவ்வளவு அபத்தம் என்பது இப்போது புரிகிறது. எதிர்க் கருத்துகளையும் நாகரீகமாக கொடுக்க பொறுமை கற்றுக் கொள்ள வேண்டும். உங்கள் பதிவு அதைச் சொல்லி கொடுக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. சார்லஸ்...

      " என் கருத்தை நான் சொல்வதற்க்கு எனக்கிருக்கும் அதே உரிமை அந்த கருத்தை எதிர்ப்பதற்கு உனக்கும் உண்டு ! " என்றான் விக்டர் ஹூயூகோ !

      கருத்தில் மாறுபடுவதோ, காரசாரமாய் விவாதிப்பதோ தப்பில்லை... மேலும் ஆரோக்யமான கருத்து விவாதமே ஒரு சமூகம் அறிவு ரீதியாய் முன்னேற உதவும். ஆனால் நீங்களே குறிப்பிட்டதை போல, விவாதம் என்ற பெயரில் வார்த்தைகளால், அதுவும் ஆபாசமாய் அடித்துக் கொள்வது அபத்தம் ! இதை பற்றியே ஒரு பதிவிடலாம் !

      என் பதிவுகளை தொடர்ந்து படித்து ஆழமாய் பின்னூட்டமிடுவதற்கு நன்றி. நேரமின்மையால் உங்களின் தளம்வர தாமதமாகிவிட்டது... இனி தொடருவேன் !

      Delete
  19. பொறுமை என்று சொன்னாலே "நீங்க எந்த காலத்தில் இருக்கீங்க?"-ன்னு கேட்கும் இந்த கால கட்டத்தில் பொறுமையின் அருமையை பெருமையாக விளக்கியுள்ளீர் நண்பரே.
    பொறுமையை விளக்க பொறுமையோடு மூன்று மதங்களிலிருந்தும் கதைகளையும் கருத்துக்களையும் கூறிச்சென்றது மிகவும் சாமர்த்தியமே!
    பீட்சா-வை விட மாக்கீ-யின் உதாரணம் சொல்லப்பட்டிருந்தால் காலத்தோடு ஒட்டியிருக்கும்.
    ஆக மொத்தத்தில் சாமின் சாமர்த்தியம் இந்த பதிவு. வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. பொறுமையாக படித்து அருமையாக பின்னூட்டமிட்டதற்கு நன்றி...

      மாக்கியின் உதாரணம்... ஆமாம் ! உண்மைதான் ! இதை போல இன்னும் பல உதாரணங்களை கொடுக்க வழியுள்ள இன்றைய " நாகரீக " உணவு பழக்கம் பயமுறுத்துகிறது !

      Delete
  20. அன்பு வலைப்பூ நண்பரே!
    நல்வணக்கம்!
    இன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் "குழலின்னிசை"க்கு
    தங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.

    முதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்
    அன்பின் இனிய வலைப் பூ உறவுகளே!
    "குழலின்னிசை" என்னும் இந்த வலைப் பூ!
    உங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.
    ஆம்!
    கடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, "குழலின்னிசை" வலைப்பூ மலர்ந்தது.
    http://kuzhalinnisai.blogspot.com/2015/06/blog-post_7.html#comment-form
    சரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.
    தங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.
    மற்றும்!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...

      தங்களின் வலைப்பூ பணி மேன்மேலும் சிறக்க வேண்டி வாழ்த்தி, என் கருத்தினை பதிந்துவிட்டேன் !

      Delete
  21. பொறுமை பற்றி பொறுமையுடனும் பொறுப்புடனும் பகிர்ந்த கட்டுரை கண்டு மகிழ்ந்தேன் நண்பரே
    ///சுண்டெலியை போன்ற அவசரமான, அலைபாயும் மனதை யானையைப் போலப் பொறுமை காத்து அடக்க வேண்டும் ////
    அற்புதமான சிந்தனை நண்பரே நன்றி

    ReplyDelete
    Replies
    1. அய்யா...

      எனது பதிவை படித்து, மகிழ்ந்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி.

      இன்றைய அவசர உலகத்தில் பொறுமை காக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் தேவை !

      நன்றி

      Delete
  22. பொறுமை பற்றிய மிகச் சிறப்பான பகிர்வு பல அருமையான தகவல்களுடன்

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாட்களுக்கு பிறகு நீங்கள் என் வலைதளம் வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. தொடருங்கள் அய்யா... நானும் தொடர்கிறேன் !

      நன்றி

      Delete
  23. எனக்கும் வலைத்தள வருகைக்குத் தொய்வு ஏற்பட்டுவிட்டது சகோ, நீங்கள் சொல்வது போல நானும் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.

    பொறுமை பற்றிய பதிவு அருமை, சொடுக்கியவுடன் தளம் திறக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் எனக்கு அவசியம் தான் :)
    நீங்கள் சொல்லியிருக்கும் தகவல்களும் கதையும் அருமை. சமர் என்றால் பொறுமையா? தமிழில் போர் என்று அர்த்தம் அல்லவா? என்ன ஒரு முரண்!
    பதிவுகளைத் தொடர வாழ்த்துகள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரி,

      தாமதமானாலும் தொடருங்கள் சகோ... உங்களை போன்றவர்களின் பங்களிப்பு எங்களுக்கு அவசியம் தேவை.

      சமர் அல்ல சகோதரி சபர். சரியான உச்சரிப்பில் எழுத வேண்டுமானால் நண்பர் கில்லர்ஜீ குறிப்பிட்டபடி " ஸஃபூர் " என எழுதுவதுதான் சரியாக இருக்கும் !

      உங்களின் பின்னூட்டத்தை படித்தபோதுதான் போருக்கு சமர் என பெயர்க்காரணம் சமம் என்ற அர்த்தத்தில் வந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது... சமமான பலம் பொருந்திய இருவர் நேருக்கு நேர் சமர் செய்தல்... ?!

      நிச்சயமாய் பதிவுகளை தொடருவேன் சகோதரி... நீங்களும் தொடருங்கள் !

      நன்றி

      Delete
  24. பொறுமையையும் அதன் பயன்களையும் பொதுமறை மற்றும் மதங்களின் கருத்தின் வாயிலாகவும், குட்டிக்கதை வழியாகவும் இட்ட பதிவு.
    பல நேரங்களில் பொறுமை தவறி பின்னர் நான் வருத்தப்பட்டதுண்டு. பயில்கிறேன் ஐயா. வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. நானும் அப்படி பலமுறை வருத்தப்பட்டு, காலம் கொடுத்த சில அடிகளை ஏற்று பயின்றவன் தான் அய்யா !

      சித்திரம் போல, செந்தமிழ் போல பொறுமையும் பழகினால் கைக்கூடக்கூடியதுதான் !

      கருத்துக்கு நன்றி

      Delete
  25. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்ற ஏசுநாதரின் போதனைக்கு நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கம் வியக்க வைத்தது. இதுவரை சிந்திக்காத கோணம். எனக்கான நேரம் வரும் வரை என் கொள்கையைக் கொன்று விட மாட்டேன் என்ற பொறுமை!
    சபர் என்ற சொல்லுக்குப் பொறுமை என்பதை அறிந்தேன். பொறுமை என்றால் எந்தச் சூழ்நிலையிலும் நிதானம் இழக்காமல், நாம் கொண்ட கொள்கையின் படி பரந்த நோக்குடன் சிந்தித்துச் செயல்படுதல் என்ற விளக்கம் அருமை.
    இன்றைய அவசர யுகத்தில் எல்லோருக்கும் படபடப்பு, அவசரம். நிதானமோ பொறுமையோ துளியும் இல்லை. பெரும்பாலோர் மன அழுத்தத்துக்கு ஆளாகித் தவிக்கின்றனர். எனவே இன்றைய காலத்துக்கு மிகவும் அவசியமான பதிவு.
    எதையும் பொறுமையாய் நிதானமாய் யோசித்தால் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும் என்பது முழுக்க முழுக்க உண்மை. அதனால் தான் ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்றார்கள். ஆத்திரமும், அவசரமும் இருக்கும் வரை மூளை சரியாக வேலை செய்யாது.
    பொறுமையின் அவசியத்தை வலியுறுத்தும் நல்லதொரு பதிவுக்குப் பாராட்டுக்கள் சகோ! ஊமைக்கனவுகள் சகோவைப் போலவே உங்கள் எழுத்தும் என்னை வியக்க வைக்கிறது! தொடர்வேன்!

    ReplyDelete
    Replies
    1. சகோதரி...

      பொறுமையாக படித்து பொறுமை பற்றி அருமையாக பின்னூட்டமிட்டுள்ளீர்கள்!

      " ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்றார்கள். ஆத்திரமும், அவசரமும் இருக்கும் வரை மூளை சரியாக வேலை செய்யாது. "

      அனுபவபூர்வமாய் உணர்ந்த உண்மை சகோ !

      எனது எழுத்தில் உங்களுக்கு பிடிக்கிறது என்றால் அதற்கு காரணம் ஊமைக்கனவுகள் விஜு தொடங்கி உங்களை போன்றவர்கள்வரை அனைவரும் கொடுக்கும் ஊக்கம்தான் !

      தொடருவோம் !

      நன்றி

      Delete
  26. அடுத்த பதிவை பொருமையை எதிர்பார்த்து காத்திருக்கும்..வலிப்போக்கன்.

    ReplyDelete
    Replies
    1. அதிகம் காக்கவைத்துவிட மாட்டேன் தோழரே... !

      Delete
  27. வாழ்க்கையில் எது நடந்தாலும், இதுவும் மாறும் என்ற எண்ணத்தோடு, " எதுவும் மாறும் " என்ற தெளிவையும் கவனத்தில் கொண்டு பொறுமையாய் யோசித்தால் எதற்கும் தீர்வு கிடைக்கும் என்பதோடு நமது இரத்த கொதிப்பும் சமன்படும் !

    மிக அருமையான வரிகள்!

    உங்கள் வயது அறுபதா ஸாம்? பக்குவப்பட்ட வரிகள் இந்தக் கேள்வியைக்கேட்கத் தூண்டிற்று!

    உண்மையில் வயதானாலும் இந்தப்பக்குவம் நிறைய பேருக்கு வருவதில்லை. புரிதலுண‌ர்வும் பகுத்தறிந்து பார்த்தலும் தான் பொறுமையாக இருக்க காரண‌ங்களாகின்றன. இது எந்த வயதிலும் வருவது தான்!!

    ReplyDelete
    Replies
    1. அம்மா...

      வாழ்க்கை அனுபவத்தில் மூத்த தங்களின் வார்த்தைகளுக்கு நன்றிகள் பல.

      " உங்கள் வயது அறுபதா ஸாம்? பக்குவப்பட்ட வரிகள் இந்தக் கேள்வியைக்கேட்கத் தூண்டிற்று! "

      நாற்பதின் ஆரம்பத்தில் நிற்பவன் நான் !


      " உண்மையில் வயதானாலும் இந்தப்பக்குவம் நிறைய பேருக்கு வருவதில்லை. புரிதலுண‌ர்வும் பகுத்தறிந்து பார்த்தலும் தான் பொறுமையாக இருக்க காரண‌ங்களாகின்றன. இது எந்த வயதிலும் வருவது தான்!! "

      மிக உணமையான வரிகள் அம்மா. அனைத்துமே நாம் வாழ்க்கையை பார்க்கும் பார்வையில்தான் உள்ளது !

      நன்றி


      Delete
  28. வணக்கம் நண்பரே! வருகை தாமதம் ஆகிவிட்டது மன்னிக்கவும்! மிகச்சிறப்பான பதிவுடன் மீண்டும் துவங்கியிருப்பதற்கு வாழ்த்துக்கள்! எலி,யானை பற்றிய விளக்கம் மிகவும் அருமை! பொறுமை மிகவும் அவசியம் என்று உணர்த்தும் அந்த குட்டிக்கதையும் சிறப்பு! பொறுமையை கடைபிடிக்க சொல்லும் பல்வேறு தத்துவங்களை எளிமையாக விளக்கியமை நன்று! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நண்பரே...

      மன்னிப்பெல்லாம் எதற்கு ?!.... உங்கள் வருகையே மகிழ்ச்சி !

      வாழ்த்து பின்னூட்டத்துக்கு நன்றி நண்பரே.... தொடருவோம் !

      Delete
  29. தனிப்பட்ட காரணங்களால் எனது வலைப்பூ பங்களிப்பு அதிகம் தடைப்படுகிறது....

    தங்களின் வலைச்சரபொறுப்பு அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். தங்களின் எழுத்துப்பணி மேன்மேலும் சிறக்கட்டும்.

    என்னையும் உங்களின் தொகுப்பில் குறிப்பிட்டு, எனக்கு தகவலும் தந்தமைக்கு நன்றிகள் பல. தாங்கள் அறிமுகப்படுத்திய படைப்பாளிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. Are you in need of a loan?
    Do you want to pay off your bills?
    Do you want to be financially stable?
    All you have to do is to contact us for
    more information on how to get
    started and get the loan you desire.
    This offer is open to all that will be
    able to repay back in due time.
    Note-that repayment time frame is negotiable
    and at interest rate of 2% just email us:
    reply to us (Whats App) number: +919394133968
    patialalegitimate515@gmail.com
    Mr Jeffery

    ReplyDelete