Saturday, May 19, 2018

பேரன்பின் பெருஞ்சுடர்


பாலகுமாரன் என்றதுமே எனக்குச் சித்திக் அண்ணன் மற்றும் ஆனந்தின் ஞாபகங்கள் மனதில் பொங்கும்.கல்லூரியில் யதார்த்தமாய்க் கிடைத்த பாலகுமாரனின் நாவல் ஒன்றினை படித்ததிலிருந்து அவரது நாவல்களுக்கு அடிமையாகிப்போன சித்திக் அண்ணன் அதற்கு முன்னர்த் தினசரிகள் வாசிக்கும் பழக்கம் கூட இல்லாதவர் ! பிரான்ஸில் நட்பான ஆனந்துக்குப் பாலகுமாரனின் எழுத்துகள் மட்டுமே வேதம் ! உலக இலக்கியம் பேசினால்கூட அதுவும் பாலகுமாரனின் எழுத்தில் உண்டு என உதாரணம் காட்டக்கூடியவர் !

பாலகுமாரனின் படைப்புகள் இலக்கியத்தில் சேரும் சேராது என அவரது மெர்க்குரிப்பூக்கள் வெளிவந்ததிலிருந்து இன்றுவரை சர்ச்சைகள் உண்டு. ஆனால் தமிழ்நாட்டில் சினிமா நட்சத்திரங்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் மட்டுமே சேரக்கூடிய அதிதீவிர ரசிகர்களுக்கு ஈடாக, சித்திக், ஆனந்த் போன்ற வாசகர்களைக் கொண்டிருந்த ஒரே எழுத்தாளர் பாலகுமாரனாக மட்டும்தானிருக்க முடியும் ! தினசரிகள், வார மாத இதழ்களுடன் ஜோதிட சமையல்கலை புத்தகங்கள் நிரம்பி வழியும் தமிழ்நாட்டு பேருந்து நிலைய புத்தகக் கடைகளில் க்ரைம் எழுத்தாளர்கள் தவிர்த்து ஏகபோக இடம் பிடித்த முதல் எழுத்தாளர் பாலகுமாரன் தான் ! அவரது வாசகர்கள் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் பரவியிருந்தனர்.

சமூகத்தின் சகலவிதமான மனிதர்களின் குணநலன்களையும் விருப்பு வெறுப்பின்றிக் குறுக்குவெட்டு பார்வையாய் நோக்கிய பாலகுமாரனின் எழுத்து, மனித உறவுகளை, அதன் சிக்கல்களை, அச்சிக்கல்களைத் தாண்டி அனைத்து மனங்களிலும் நிரம்பி வழியும் அன்பை வெளிக்காட்டியது. சக மனிதனை தான் படித்ததைப் போலவே தன் வாசகனையும் படிக்க, நேசிக்கப் பழக்கினார் பாலகுமாரன். தன் கதை மாந்தர்களின் வழியே சமூகத்தின் இருட்டுப் பக்கங்களைக் கூட எந்தவிதமான ஒழுக்கப் போதனைகளுமின்றி வாசகனுக்குக் காட்சிபடுத்த அவரால் முடிந்தது. லாரியிலிருந்து இறக்கும் முதல் அரிசிமூட்டையைக் கிடங்கு பெருக்கும் பெண்களுக்காகக் கிழித்துவிடும் கூலித்தொழிலாளியின் இரக்கத்தை வாசகனுக்கு உணர்த்த முடிந்த பாலகுமாரனால் மெர்க்குரிப்பூக்கள் நாவலின் தொழிற்சாலை முதலாளியின் மனதில் ஒளிந்திருந்த ஈரத்தையும் வெளிக்காட்ட முடிந்தது !

காதலை கர்வமாய், காமத்தை பாவமாய்ப் பாவிக்கும் சமூகத்துக்கு " காதல் என்பது விட்டுக்கொடுத்தல், காதலுக்காகக் காதலையே விட்டுக்கொடுத்தல் " என இடையறாது உணர்த்த முயன்றன அவரது படைப்புகள். அதீத காமம் வேறு காரியங்களில் ஈடுபடாதபடி மனதின் சமன்பாட்டைக் குலைத்துவிடும் எனக் காமத்தை உளவியல்ரீதியில் விளக்கியது அவரது எழுத்து.

பல்வேறு ஒழுக்கக் கோட்பாடுகளையும் போதனைகளையும் கொண்ட ஒரு சமூகத்தில் தன் வாழ்க்கையைத் திறந்த புத்தகமாய்க் காட்ட, சமூகம் குற்றமாய்க் கருதும் செயல்களைக் கூட இதை இதைச் செய்தேன் என்று ஒரு செய்தியாய் பகிர எத்தனை பிரபலங்களால் முடியும் ? மனிதத்தின் மீது பற்றுக்கொண்டு, தன் சமூகத்தின்பால் பேரன்பு கொண்ட ஒருவனால் மட்டுமே அசைவ உணவகத்தில் கறியை ஒதுக்கிவிட்டு பிரியாணியைச் சாப்பிட்டுப் பின்னர்ப் பசிஅடங்காமல் கறியையும் சாப்பிட்டதையும், விலைமாதுவை கடற்கரைக்கு அழைத்துச் சென்று கவிதை வாசித்துக் காட்டியதையும் இதுதான் நான் கடந்து வந்த பாதை என எழுத்தோவியமாய்த் தீட்ட முடியும். சமூகம், வரலாறு, ஆன்மீகம் என அவரது படைப்புகளின் களங்கள் மாறினாலும் அவைகள் அனைத்திலும் பிரதிபலன் இல்லாத பேரன்பு பரவியிருக்கும்.

உடம்பிலிருந்து வெளியேறிய எழுத்துச்சித்தரின் ஆன்மா அவரது படைப்புகளின் வழியே பேரன்பின் பெருஞ்சுடராய் என்றென்றும் ஒளிர்ந்திருக்கும்.பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.