Tuesday, May 3, 2016

முடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும் - 2



தாத்தா, சித்தப்பாக்கள் எனக் குடும்பத்தினர் பலர் பிரான்சில் இருந்ததால் அவர்கள் ஊர் திரும்பும் போதெல்லாம் சென்னை சென்று அழைத்து வருவோம். அந்த வயதில் விமான நிலையம் இருக்கும் மீனம்பாக்கத்தையே சென்னை என நம்பியிருந்தேன் !

தனியாக அல்லது குழுவாக எனப் பிரான்சிலிருந்து திரும்புபவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் கொண்டு வரும் பெட்டிகளின் அளவுக்கேற்ப வாடகை காரிலோ வேனிலோ பயணம் அமையும் ! பைபாஸ் சாலை, கிழக்கு கடற்கரை சாலைகளெல்லாம் தோன்றாத என்பதுகளில் எங்கள் ஊரிலிருந்து சென்னை செல்ல பத்து பதினோரு மணி நேரம் பிடிக்கும். அதுவும் மதுராந்தகம் எல்லையில் லாரிகளுக்கு மத்தியில் சிக்கிகொண்டால் இன்னும் இரண்டு மணி நேரம் கூடிவிடும் !

பின்னிரவு மூன்று மணிவாக்கில் தூக்கம் கலையாத கண்களின் எரிச்சலுடன் கிளம்பினால் அதிகாலையில் சிதம்பரத்தினுள் நுழைவோம். சென்னை போகும்போதெல்லாம் அங்கிருந்த நாயர் கடை ஒன்றில் காபி குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார் அப்பா ! ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை, அதிகாலையில் ஐந்தே நிமிடம் நீடிக்கும் நட்பு என்றாலும் ஞாபகமாக வரவேற்று உபசரிப்பார் நாயர் ! வழக்கமாய்ச் சாப்பிடும் உணவகங்கள், டீக்கடைகள் தொடங்கி அவ்வப்போது இளைப்பாற நிற்கும் சிற்றூர்கள் மற்றும் கிராமங்களின் சிலர் கூட எங்களை அறிந்துவைத்திருந்தனர் !

மிகவும் நெரிசலான சிதம்பரம், சீர்காழி சாலைகள், திருத்தமான அகலமான சாலைகளுடன் பளிச்சென்ற பாண்டிச்சேரி, லாரிகள் வரிசைகட்டி நிற்கும் மதுராந்தகம், கார்பாய்டு தொழிற்சாலையின் மணத்துடன் வரவேற்கும் கடலூர் என மனிதருக்கு மனிதர் வேறுபடும் குணம் மற்றும் மணம் போலவே ஒவ்வொரு ஊருக்கும் மணமும் குணமும் உண்டு !

ஒவ்வொரு ஊரை தாண்டும் போதும் ஒவ்வொரு விதமான உணர்வு தோன்றும் !

ன்பதாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியிலிருந்து கொடைக்கானல், கேரளா என மூன்று நாட்கள் சுற்றுலா சென்றோம்...

வகுப்பு தோழன் ஒருவனின் தந்தை தனியார் போக்குவரத்துக்கழக உரிமையாளர். சுற்றுலா பேச்சு ஆரம்பித்ததுமே தன் தந்தையிடம் பேசி " சகாய விலையில் " பேருந்து ஏற்பாடு செய்வதாகச் சொல்லி தலைமை ஆசிரியரிடம் அனுமதி வாங்கிவிட்டான் அவன் ! வகுப்பு லீடரான என்னையும் சேர்த்து ஒரு பத்து மாணவர்கள் பள்ளியின் " பெரிய பையன்கள் ! " ஆசிரியர் தினம், குடியரசு தினம் தொடங்கி ஆண்டு விழா போட்டிகள், நாடகம் என அனைத்திலும் முன்னால் நிற்கும் சட்டாம்பிள்ளைகள் !

பள்ளி சுற்றுலா என்றால் பேருந்து கணக்குதான். ஆனால் அவன் எப்படியோ பேசி பேருந்து மட்டுமல்லாது ஏ சி வேன் ஒன்றுக்கும் சேர்த்து அனுமதி வாங்கிவிட்டான் ! " பெரிய பையன்கள் " நாங்களெல்லாம் வேனிலும், மற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பேருந்திலும் கிளம்பினோம். பள்ளிக்கூடத்திலிருந்து கிளம்பிய போது எங்கள் வேனில் ஏறிய ஆசிரியர், எங்களின் திட்டமிட்ட ரகளைத் தாங்காமல் ஊர் எல்லையைத் தாண்டுவதற்கு முன்னரே பேருந்தில் தொற்றிக்கொண்டுவிட்டார் !

செங்கோட்டை வழியே கேரளா செல்லும் உத்தேசம். செங்கோட்டையின் கேரள சோதனை சாவடியில் " ரூட் பெர்மிட் " எனப்படும் பயணத் திட்ட அனுமதியை வாங்கிப்பார்த்த மலையாள சேட்டன் இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை !

" இது செங்கோட்டா... நீ சாரிக்கோட்டா வழியா போய்க்கோ ! "

அவர் கோபத்துடன் பறைய, எங்களுக்குப் பதைத்தது !

காரணம், எங்கள் போக்குவரத்துக்கழக நண்பன் வேன் ஏற்பாட்டுடன் நிறுத்திக்கொள்ளாமல் தன் ஆங்கிலப் புலமையைத் தந்தைக்குக் காட்ட பயண அனுமதியையும் தானே தட்டச்சுச் செய்திருக்கிறான். அவனுக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் செங்கோட்டையைச் சாரிக்கோட்டை எனத் தவறாகத் தட்டச்சு செய்ததின் விளைவு !

" டேய் ! இதையெல்லாம் வேற மாதிரி டீல் பண்ணனும் ! "

நாதன் சார் பணப்பையுடன் இறங்கி இன்ஸ்பெக்டரை ஒதுக்குப்புறமாய் அழைத்துச் சென்றார். திரும்பி வந்த இன்ஸ்பெக்டர் சிரிப்புடன் அனுமதி கொடுத்ததோடு அல்லாமல் " குட் ஜர்னி ! " என்று வாழ்த்தி வழியனுப்பினார் !

எங்களுக்கு லஞ்சம் புரிந்த தருணம் அது !

கேரளாவிலிருந்து திரும்பும் வழியில், ஆளரவமற்ற சாலையின் இருமருங்கிலும் மலையடி போல உயர்ந்த மண்மேட்டின் மீது தென்னை மரங்களுக்கிடையே அமைந்த வீடுகள். சூரியன் தன் கதிர்களில் குளுமை கலந்து அடங்கும் நேரம். ஒரு வீட்டின் வாசலில் குத்துக்காலிட்டு கைகளைக் கன்னங்களுக்கு முட்டுக்கொடுத்து அமர்ந்திருந்தாள் எங்கள் வயதையொத்த ஒரு பெண்பிள்ளை. பேருந்திலிருந்த எங்களின் கூச்சலை கேட்டு துள்ளி எழுந்தவள் மகிழ்ச்சியும் சிரிப்புமாய்க் கைகளை ஆட்டி குதித்தாள் !

ஒரு சில நொடிகளே நீடித்த அந்த நிகழ்வு ஒர் ஓவியமாய், காட்சிக்குள் அடங்கிய கவிதையாய், தேர்ந்த நிழல்படக் கலைஞன் படம் பிடித்த காட்சியாய் எனக்குள் தங்கிவிட்டது !

யணத்தின் சுவாரஸ்யம் போகும் பாதைகளில் நாம் சந்திக்கும் மனிதர்களும், நிகழ்வுகளும்தான். சொந்தம், நட்பு, சுற்றம் என வாழ்க்கை முழுவதும் நம்முடன் பயணிப்பவர்கள் மீது நமக்கிருக்கும் நேசத்தின் அதே அளவு பயணங்களில் சில நிமிடங்களே நாம் சந்திக்கும் ஒரு சில மனிதர்களின் மீதும் படிந்துவிடுவதை உணர்ந்ததுண்டா ?


" நமக்கு எந்த ஊரு ?... "

சில பனைமரங்களுக்கு நடுவே அமைந்த குடிசை வீட்டுத் திண்ணையில் சிகரெட், கோலி சோடா, சர்பத் தொடங்கிப் பழைய பாலித்தீன் பைகளில் தொங்கும் முறுக்கு, கடலைமிட்டாயுடன் ஒரு வாழைத்தாரும் தொங்கும் கடை. கோடையின் அனலுடன் நாம் பயணிக்கும் வாகனத்தின் வெப்பமும் சேர்ந்து வாட்டும் பொட்டல்வெளி பயணத்தின் நடுவே இளைப்பாற நிறுத்துமிடத்தில் பேச்சு தொடங்கும் !

" அங்க நம்ம ஒண்ணுவிட்ட மாமா பையன் ஒருத்தன் இருக்கான்... எப்படிக் காஞ்சு கிடக்கு பாத்தீங்களா ?... உங்க பக்கம் எப்படி ?... "

" பொம்பளைங்களை வீட்டுக்கு பின்னால கால் கழுவ சொல்லுங்க... "

வாகனத்தினுள் தெரியும் பெண்களைக் கண்டு பேசுபவர் பதிலுக்குக் காத்திருக்காமல் தன் வீட்டுப் பெண்களைத் துணைக்கு அனுப்புவார் !

" திரும்பறப்போ முடிஞ்சா நிறுத்தி சொல்லிட்டு போங்க !... "

திரும்பும் வழியில் பெரும்பாலும் நிறுத்த தோன்றாது ! பின்னர் அந்த இடத்துக்குப் போகும் வாய்ப்பே கிட்டாது என்றாலும் அந்த மனிதரின் உபசரிப்புக் கோடை பயணங்களின் போதெல்லாம் இளநீர் இனிப்பாய் மனதின் ஏதோ ஒரு மூலையில் ஊற்றெடுக்கும் !

பூம்புகாரில் நண்பர்களுடன் நாள் முழுவதும் சுற்றி அலைந்து அரட்டையடித்த நினைவுகளைவிட அங்கிருந்து திரும்பும் வழியில் தரங்காம்பாடி அருகில் காரை நிறுத்தி ஒன்றும் பேசிக்கொள்ளாமல் அமைதியாய் டீயும் பக்கோடாவும் சாப்பிட்ட நினைவு கறுப்பு வெள்ளை புகைப்படத்தின் அழகுடன் மனச்சுவரில் இன்னும் தொங்குவதின் விந்தை புரியவில்லை !

ன்று கரைக்கால் நாகூர் சாலையின் முகம் மாறிவிட்டது !

இரு போக மகசூல் தந்த நிரவிச்சாலை நிலங்கள் தரிசு நிலங்களாக மாற்றப்பட்டு, வீட்டுமனை விற்பனையாளார்கள் நட்ட எல்லை கற்களுக்குள் அடங்கிவிட்டன ! தைக்கால் குளம்கூடக் குட்டையாய்ச் சுருங்கிவிட்டது ! சிறு தோட்டம் சூழ்ந்த குடிசைவீடுகளின் திண்ணைக்கடைகள் இருந்த நிலங்களிலெல்லாம் நாளுக்கு ஒரு நட்சத்திர ஹோட்டல் தோன்றி, சனிப்பெயர்ச்சிக்கு வரும் பிரபலங்களை எதிர்பார்த்து நிற்கின்றன !

வாஞ்சூர் சாலை வயல்வெளியின் ஒரு பக்கத்தைக் கார்பாய்டு தொழிற்சாலை விழுங்க, மறுபக்கம் துறைமுக வளர்ச்சிக்கு தாரை வார்க்கப்படுவிட்டது ! சிறு கடைகளெல்லாம் ஷாப்பிங் மால்களாக மாறும் நாள் வெகுதூரத்தில் இல்லை ! இத்தனை மாற்றங்களுக்குப் பிறகும் எனது பால்ய அனுபவத்தின் மிச்சமாக நிற்பது மதகடியும், வாஞ்சூரும் ! இன்றும் பச்சை விளக்கு மதுக்கடைகள் அப்படியே இருக்கின்றன.தடுமாறும் குடிமகன்கள் தள்ளாடி பாலம் கடந்து செல்கிறார்கள் !

விரைவுச் சாலைகள், அதிவிரைவுச் சாலைகள் என இன்றைய பயணங்கள் இலக்கை மட்டுமே அண்ணாந்துபார்த்துக்கொண்டு ஓடும் ஓட்டங்களாக மாறிவிட்டன !

சில மாதங்களுக்கு முன்னர் பாரீசிலிருந்து முன்னூறு கிலோ மீட்டர்கள் தள்ளி அமைந்த தோவீல் என்னும் கடற்கரை சிற்றூருக்கு வார இறுதி ஒன்றினை கழிக்கச் சென்றேன்...

கட்டணத்துடன் கூடிய அதிவிரைவுச்சாலைகள் நாடு முழுவதையும் இணைத்தாலும், அவற்றினைத் தவிர்த்து ஊர்களுக்குள் செல்லும் சாலைகளையும் பயன்படுத்தலாம். விரைவுச்சாலைகளிலிருந்து மாற வசதியாக இருவகைச்சலைகளையுமே அருகருகே அமைத்து இணைத்த, தொலைநோக்கு பார்வையுடைய உள்கட்டமைப்பு ! விரைவுச்சாலைகள் வழியே செல்லாமல் சிற்றூர்கள், கிராமங்கள் வழியே பயணித்தேன்.இனம், மொழி, கலாச்சாரம் என அனைத்துமே வேறுபட்டாலும் சந்தித்த மனிதர்களாலும், இயற்கையின் அழகினாலும் அந்தப் பயணம் என் பால்ய பருவத்து பயணங்களின் மீட்சியாய் அமைந்தது !

விரைவுச்சாலைகளைத் தவிர்த்து சென்று வந்ததை நண்பர்களிடம் கூறியபோது, மூன்று மணி நேர பிரயாணத்தை ஆறுமணி நேரத்தில் கடந்த ஆமை என்ற பட்டம் கிடைத்தது ! இன்றைய விடுமுறை பயணங்கள் கூடச் சீக்கிரமாய் ஊர் போக வேண்டும் என ஓடி, ஊர் சென்றவுடன் சீக்கிரமாய்த் திரும்ப வேண்டும் என்ற அவசரம் தொற்றிக்கொள்ளும் படபடப்பு பிரயாணங்களாய் தான் அமைகின்றன !

சென்ற முறை பிரான்ஸ் திரும்பச் சென்னைக்குக் கிளம்பிய போது கிழக்கு கடற்கரைச் சாலை வழியே சென்றால் ஐந்து மணி நேரத்தில் சென்றுவிடலாம் என்றார் நண்பர்.

இரவு நேரம்...

ஊர்களுக்கு வெளியே அமைக்கப்பட்ட அந்த விரைவுச் சாலை எனக்குக் கான்கிரீட் பாலைவனம் போலத் தோன்றியது !

பனைமரங்கள் கூட இல்லாத வெட்டவெளிகளில் " அதிநவீன வசதிகளுடன் " கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள், மனிதர்களின் அருகாமையற்று மனிதர்களாய் வாழ ஆசைப்படும் புதிய மேட்டுக்குடி தலைமுறை குடும்பங்களுக்காகக் காத்திருக்கின்றன ! ஐம்பது நூறு குடியிருப்புகளைக் கொண்ட தொகுப்புகளில் ஒன்றிரண்டில் மட்டுமே விளக்கு வெளிச்சம் !

ஏதோ வேற்றுக்கிரகத்தில் பயணிக்கும் உணர்வுடன் கண்ணயர்ந்தேன் !

சென்னையை நெருங்கிய சமயத்தில் கண்விழித்தபோது சாலையின் இருபுறமும் பீட்சா ஹட், கே எப் சீ, குவிக் எனப் பிரான்சில் நான் அன்றாடம் காணும் உணவகங்கள் ! தூக்க கலக்கத்தில் பாரீஸ் விமான நிலையத்தை வந்தடைந்துவிட்டதாக ஒரு கணம் திகைத்து உடமைகளைத் தேட தொடங்கினேன் !

உள்நாட்டு அரசாங்கத்தின் உதவியுடன் பன்னாட்டு நிறுவனங்களின் லாபத்துக்காக அறிமுகப்பத்தப்படும் நுகர்வோர் கலாச்சாரம் என்ற கரப்பான் உலகின் ஆதி நாகரீகங்களில் சில தோன்றிய, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட தேசத்தின் அடையாளங்களையும், கலாச்சாரப் பண்பாடுகளையும், பழக்கவழக்கங்களையும் மிக வேகமாய் அரித்துக்கொண்டிருப்பது புரிந்தது !

முகலாய மன்னர் அக்பர் பீர்பாலை முதல்முறையாய்ச் சந்தித்தது பற்றிய கதை ஒன்று உண்டு.

வேட்டையின் போது வழி தவறிய மன்னர் காட்டு பாதை ஒன்றில் தன்னை மறந்து பாடிக்கொண்டு செல்லும் இளைஞர் பீர்பாலை எதிர்க்கொள்கிறார். படை பரிவாரங்களுடன் வரும் மன்னருக்கு கூட ஒதுங்காமல் செல்பவரை நிறுத்தி,

" இந்தப் பாதை எங்கே செல்கிறது ? " எனக் கேட்கிறார்.

அந்த இளைஞரோ,

" இந்தப் பாதை எங்கும் செல்லாது ! மன்னரே ஆனால் கூட நீங்கள் தான் இந்தப் பாதையில் எங்குச் செல்ல வேண்டுமோ அங்குச் செல்ல வேண்டும் ! " என்கிறார் !

அந்த இளைஞரின் புத்தி சாதுர்யத்தில் வியந்து அவரைத் தன்னுடன் அழைத்துக்கொள்கிறார் அக்பர் !

பீர்பால் கூறியது உண்மையென்றாலும், பயணிப்பவரின் பார்வைக்கும், நோக்கத்துக்கும் ஏற்ப விரிபவை பாதைகள் ! முட்டுச்சந்தில் முடியும் பாதைகள் கூட அதற்கு முன்னால் ஒரு கிளைப்பாதையைத் திறந்து வைத்து விட்டுத்தான் முடிகின்றன ! ஆண்டிப்பட்டியில் தொடங்கும் பாதை ஒரு நாடோடியின் நோக்கத்துக்காக அண்டார்டிகாவில் முடியும் ! அங்கே பனியில் சரிந்து தொடங்கிய பாதைவெளி ஆண்டிப்பட்டிக்கும் அழைத்துவரும் ! முடிவுகள் அற்றவை பாதைகள் !

ராபர்ட் ப்ராஸ்டின் கவிதை வரிகள் மழை நீர் அருந்திய மண்ணின் மனமாய் மனதில் எழுகிறது...

அடர்ந்து பரந்து அழகாய் இருக்குது காடு,
ஆனாலும் என் கடமைகள் முடியவில்லை,
உறக்கத்துக்கு முன்னான என் பயணமும் ,
உறக்கத்துக்கு முன்னான என் பயணமும் .

பாதைகளைப் போலவே நம் பயணங்களும் முடிவதில்லை !

 பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

34 comments:

 1. சாம்: நான் இன்னும் உங்க முதல் பகுதி பயணத்திற்கே பின்னூட்டம் இடவில்லை! :) நானும் நீங்கள் பதிவெழுதுறது மாதிரி ரொம்ப "நிதானம்" ஆயிட்டேன் போல! :(

  ReplyDelete
 2. ****" இந்தப் பாதை எங்கே செல்கிறது ? " எனக் கேட்கிறார்.

  அந்த இளைஞரோ,

  " இந்தப் பாதை எங்கும் செல்லாது ! மன்னரே ஆனால் கூட நீங்கள் தான் இந்தப் பாதையில் எங்குச் செல்ல வேண்டுமோ அங்குச் செல்ல வேண்டும் ! " என்கிறார் !****

  முக்கால்வாசி நேரம் இன்றைய வாழ்விலும் இதேபோல் "அசட்டுக் கேள்விகளை" நாம் கேக்கத்தான் செய்கிறோம். என்ன கேட்கிறார் என்பதை யூகித்து அதற்கு சரியான பதில் சொல்லும் புத்தி சாதூர்யம் நம்மிடம் இருக்கிறது. Sometimes "birball" kind of "sarcasm" irritates me! :( "You know what I mean? Tell me the f**king answer!" னுதான் நான் சொல்வது வழக்கம்!

  ReplyDelete
 3. பயணத் தொடர் பதிவை இப்படிக் கூட எழுத முடியுமா? அருமையாக சுவாரஸ்யமாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் வருண் ! முதல் வருகைக்கு மிகவும் நிதானமாக பதில் பதிகிறேன்... ! வலைப்பூவுக்கென தொடர்ச்சியாக நேரம் ஒதுக்க எவ்வளவு முயற்சித்தாலும் நீண்ட இடைவெளிகளை இப்போதெல்லாம் தவிர்க்க முடியவில்லை ! எப்படியும் பயணத்தை தொடருவோம் வருண் !

   முதல் பின்னூட்டத்துக்கு நன்றி.

   Delete
  2. சாம், எங்கள் பிளாக்கில் உங்கள் அழைப்பைக் கண்டேன். நான்தான் முன்னரே வாசித்துப் பின்னூட்டம் இட்டிருக்கிறேனே..

   Delete
 4. உங்கள் கூட நாங்களும் பயணம் செய்த உணர்வு,,,
  சுற்றுலா சென்ற அனுபவம்,, கத்தில் கை வைத்த பெண் துள்ளிக் குதித்து மகிழ்ந்தது,, தங்கள் ,,,, அருமை அருமை, தொடருங்கள்..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், சில பயணங்கள் நம்முள் ஏற்படுத்தும் சலனங்கள் ஆயுளுக்குமான சிற்பங்களாய் மனச்சுவரில் நிலைத்துவிடுவது விந்தைதான் !

   தொடருவோம் சகோதரி...

   Delete
 5. // மிகவும் நெரிசலான சிதம்பரம், சீர்காழி சாலைகள், திருத்தமான அகலமான சாலைகளுடன் பளிச்சென்ற பாண்டிச்சேரி//

  சரியாய் சொன்னீர்கள். கடலூருக்கும் பாண்டிக்கும் இடையே உள்ள சாலையில் தமிழக ஊர்களும் புதுவை மாநில ஊர்களும் மாறி மாறி வந்து கொண்டு இருக்கும். சாலைகள் விசாலமாகவும் தார் பூசப்பட்டும் இருந்தால் அது புதுவை மாநிலப்பகுதி என்றும் ஆங்காங்கே சாலைகள் குண்டும் குழியுமாய் இருந்தால் அது தமிழகப்பகுதி என்றும் சுலபமாக கண்டுகொள்ளலாம். இரவில் பயணிக்கும்போது தெரு விளக்குகள் எரியும் இடம் புதுவை மாநிலம் என்றும் இருட்டாய் இருப்பது தமிழகம் என்றும் புரிந்துகொள்ளலாம்.

  சுவையான பயணக்கட்டுரையை சுருக்கமாக முடித்துவிட்டீர்கள். ஆனாலும் முத்தாய்ப்பாக ராபர்ட் ப்ராஸ்டின் கவிதை வரிகளோடு முடித்திருப்பதால் திரும்பவும் பயணத்தை தொடருவீர்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. அய்யா,

   இந்த இரு பாக பதிவில் நான் பெருமையாக கருதுவது தங்களின் ஆழமான பின்னூட்டம். இந்த படைப்புடன் மிகவும் ஒன்றி ரசித்து பின்னூட்டமிட்டுள்ளீர்கள்...

   இன்றைய மாற்றங்களில் நான் குறிப்பிடாத ஒன்றை உங்களின் பின்னூட்டத்தில் கொடுத்துள்ளீர்கள்... நேர்த்தியான சாலைகள், பழுதற்ற சாலை விளக்குகள் கொண்ட புதுவை என்ற பெருமையும் பழங்கதையாகி விட்டது ! தமிழ் நாட்டு சாலைகள் நேர்த்தியாய் தார்பூசிக்கொள்ள ஆரம்பித்துவிட்டன ! நாகூர், நாகப்பட்டிணத்து மக்கள் பார்த்து ஏங்கிய காரைக்காலின் நேர்த்தியான பாதைகள் குண்டும் குழியுமாய், குப்பைகள் மண்டி இருண்டு கிடக்கின்றன !


   எழுதிய எனக்கும் ஆத்மார்த்தமாய் அமைந்த இந்த பதிவினை வாய்ப்பு கிடைத்தால் தொடருவேன். தங்களின் ஊக்கத்துக்கு நன்றிகள் பல அய்யா

   Delete
 6. அக்பருக்கு பீர்பால் சொன்ன பதிலை மிகவும் ரசித்தேன்! குடும்பத்தில் மனைவி, பிள்ளைகளுக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டமையால் சில மாதங்களாக இணையம் ரெகுலராக வர முடியவில்லை! வாசிப்பு சீராக இன்னும் சில வாரங்கள் பிடிக்கும். பயண அனுபவங்களை சுவையாக சொன்னீர்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நலமா நண்பரே...

   பல சிரமங்களுக்கு மத்தியிலும் படித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றிகள் பல.

   குடும்பமும், அவர்களுக்காக நாம் செய்யும் தொழிலும் முக்கியம். நம்மை சார்ந்தவர்கள் நலமாக இருந்தால் தான் நம்மால் நிம்மதியாக இயங்க முடியும்.

   உங்கள் நலனுக்கு வேண்டுகிறேன்...

   Delete
 7. //பேருந்திலிருந்த எங்களின் கூச்சலை கேட்டு துள்ளி எழுந்தவள் மகிழ்ச்சியும் சிரிப்புமாய்க் கைகளை ஆட்டி குதித்தாள் ! ஒரு சில நொடிகளே நீடித்த அந்த நிகழ்வு ஒர் ஓவியமாய், காட்சிக்குள் அடங்கிய கவிதையாய், தேர்ந்த நிழல்படக் கலைஞன் படம் பிடித்த காட்சியாய் எனக்குள் தங்கிவிட்டது !//
  - மைசூர் போகையில் ஒரு முறை இதுபோன்ற நிகழ்வு எங்களுக்கும் நடந்தது..., எங்கள் வயதையொத்த நான்கு பெண்கள் உற்சாகாக கையசைத்து குதித்தது இன்று வரை மறக்க இயலாதது.

  //விரைவுச் சாலைகள், அதிவிரைவுச் சாலைகள் என இன்றைய பயணங்கள் இலக்கை மட்டுமே அண்ணாந்துபார்த்துக்கொண்டு ஓடும் ஓட்டங்களாக மாறிவிட்டன//
  - ஒரு பத்து வருடங்கள் முன்பு கூட ECR இல் பயணிப்பது சுகானுபவமாகத்தான் இருந்தது. இப்போது கண்ணுக்கு கடலோ, சவுக்கு தோப்போ எதுவுமே தெரிவதில்லை, அடுக்குமாடி சேரிகளும், ஹோட்டல்களும் தான் துருத்திக் கொண்டு தெரிகின்றன. மீன் வாசமே இல்லாத கடற்கரைப் பயணம்.

  ReplyDelete
  Replies
  1. " மீன் வாசமே இல்லாத கடற்கரைப் பயணம். "

   இந்த பதிவின் ஆதங்கம் அனைத்தையும் அழகான "ஹைகூ " வரியில் வடித்துவிட்டீர்கள் !

   மொத்த வாழ்வில் ஒரு சில நொடிகளே நாம் வாழும் சில சம்பவங்கள் ஆயுளுக்குமான அனுபவமாய், அழிக்கவே முடியாத மனச்சுவற்று ஓவியங்களாய் நிலைத்துவிடுவது வாழ்க்கை விந்தைகளில் ஒன்று !

   அடுக்குமாடி சேரிகள்...

   மிக அருமையான சொல்லாடல் !

   உணர்வுப்பூர்வமாய் வாசித்து கருத்து பதிந்தமைக்கு நன்றி தோழரே !

   Delete
 8. பயணப் பதிவு அருமை நண்பரே...
  பயணங்கள் தொடரட்டும்....
  நாங்களும் தொடர்கிறோம்....

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு நன்றிகள் பல...

   எழுத்தால் தொடருவோம் !

   Delete
 9. //முடிவுகள் அற்றவை பாதைகள்!// - பொருட்செறிவு மிக்க வார்த்தை! மிகவும் அருமையான பதிவு. பயணங்கள் பற்றிய என் பட்டறிவு வெகு குறைவு. நீங்கள் பயணவிரும்பியாக இருக்கிறீர்கள். எனவே, அண்ணாந்து பார்க்கிறேன் இப்பதிவுகளை.

  இனிமையான பயண அனுபவங்கள், பயணங்களில் சந்திக்கும் மனிதர்கள், நினைவில் இனிக்கும் நேரங்கள், பயணங்களின் பெருமை எனப் பயணம் பற்றிய ஒரு முழுமையான பதிவாக இதை எழுதியிருக்கிறீர்கள். அழகான ஒரு பயணத்தைப் போலவே வெகு நாட்களுக்கு இது மனதில் நிலைத்திருக்கும்; அல்லது தங்களுடைய முந்தைய பதிவைப் போல என்றும் சொல்லலாம். :-)

  ReplyDelete
  Replies
  1. அய்யா...

   பக்குவமான வார்த்தைகளால் வார்க்கப்பட்ட தங்களின் கருத்துக்கு நன்றி.

   பயணங்களை ரசிப்பவன் என்றாலும் எனக்கு அதிகமான பயண அனுபவங்கள் கிடையாது ! நண்பர் காரிகன் குறிப்பிட்டத்தை போல வீட்டைவிட்டு வெளியேறாமலேயே உலகை அறியும் வேட்கை கொண்டவன் தான் நானும் !

   சிறப்பான, சமூக அக்கறை மிகுந்த எழுத்துக்கு சொந்தக்காரரான உங்கள் வார்த்தைகள் எனக்கு ஊக்கம்.

   தொடருவோம்...

   Delete
 10. Heard that Paris is flooded just like Madras was last year. Wish to hear from you about your safety and the flood situation there.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் காரிகன்...

   உங்களை போன்றவர்களின் அக்கறையான விசாரிப்புகளுக்கும், பின்னூட்டங்களுக்கும் பதிலிடவே மாதங்கள் பல ஆகும் நிலமையாகிவிட்டது !

   சென்னையை போன்ற பாதிப்பு இல்லையென்றாலும் சேன் நதி நிரம்பிய வேகம் அனைவரையும் பீதி கொள்ள வைத்தது உண்மைதான் !

   நன்றிகள் பல காரிகன்

   Delete
 11. என்ன சாம் ஆளையே காணோம்?

  ReplyDelete
  Replies
  1. வேலை பளு பற்றும் சில வாழ்க்கை மாற்றங்கள் வருண்...

   விரைவில் தொடருவோம்...

   நன்றி

   Delete
 12. இரண்டாம் முறையும் வாசித்துப் பார்த்து மகிழ்ந்தேன் . பயணங்களை மிகவும் ரசித்து அனுபவிப்பீர்கள் என்பது தெரிகிறது. அவசர அவசரமாய் ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்கள் மத்தியில் நிதானமாய் நடப்பவர் அபூர்வம். நீங்கள் அவர்களில் ஒருவர் . முற்றுப் பெறாத பயணங்களில் அலுப்பு இல்லாத அனுபவம் எல்லோருக்கும் சாத்தியமில்லை. உங்கள் அனுபவம் அழகு!

  ReplyDelete
  Replies
  1. மிக அழகான பின்னூட்டம் சார்லஸ் !

   நிதானமாக நடப்பதால் ஓடுபவர்களோடு ஒன்ற முடியாமல் ( ஊரோடு ஒத்துபோக முடியாமல் ?! ) தனியாக உணரும் தருணங்களும் எனக்கு உண்டு !

   இலக்குகள் பற்றிய எதிர்பார்ப்பு இல்லையென்றால் முற்றுப்பெறாத பயணம் முழுவதுமே அலுப்பற்ற ஆனந்தமாக மாறிவிடும் இல்லையா ? !

   தொடருவோம் !

   Delete
 13. என்ன அழகாக விவரித்திருக்கிறீர்கள்! ஊருக்குள் நுழையாத பைபாஸ்பயணங்கள் எனக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றன.

  ReplyDelete

 14. பாதைகளைப் போலவே நம் பயணங்களும் முடிவதில்லை !---பயணங்கள் தொடரட்டும்...

  ReplyDelete
 15. விரைவுச்சாலைகளைத் தவிர்த்து சென்று வந்ததை நண்பர்களிடம் கூறியபோது, மூன்று மணி நேர பிரயாணத்தை ஆறுமணி நேரத்தில் கடந்த ஆமை என்ற பட்டம் கிடைத்தது ! இன்றைய விடுமுறை பயணங்கள் கூடச் சீக்கிரமாய் ஊர் போக வேண்டும் என ஓடி, ஊர் சென்றவுடன் சீக்கிரமாய்த் திரும்ப வேண்டும் என்ற அவசரம் தொற்றிக்கொள்ளும் படபடப்பு பிரயாணங்களாய் தான் அமைகின்றன !// ஆஹா!!! உண்மை உண்மை..... மிகவும் நிதானமாகப் பயணிப்பதையே அதுவும் பலவற்றையும் அனுபவைத்துப் பயணிப்பதையே விரும்புபவள்.

  கிழக்குக் கடற்கரைச் சாலைப் பயணம் எனக்கு நான்கு வருடங்களுக்கு முன்பு வரை அதாவது 2007 லிருந்து 2012 வரை 5 வருடங்கள் எனது ஜாகை பாண்டிச்சேரியானதால் பயணம் பயணம் தான். நான் மிகவும் அனுபவித்திருக்கிறேன். அடர்ந்த மரங்களுக்கு நடுவில் ஆங்காங்கே வீடுகள் கடப்பாக்கம் மரக்காணம் பகுதிகளில், கடற்கரை மணல் மேடுகள், காயல்கள், ....உப்பளங்கள் என்று அதுவும் மழை பெய்து ஓய்ந்திருக்கும் சமயத்தில் அருமையாக இருக்கும். நான் பயணம் செய்வது பெரும்பாலும் பகல் நேரம் ஆனதால். இப்போதும் நான் நீர் நிலைகளையும் மாற்றங்களையும் கண்டு பயணிக்கின்றேன். இருந்தாலும் கிராமங்களின் நடுவில் பயணிப்பது தனி சுகம். நான் எல்லாவற்றையும் உங்களைப் போன்றே ரசித்துப் பயணிப்பது வழக்கம். இப்போது கிகசாலை மாறித்தான் வருகிறது. தன் பொலிவை இழந்து வருகிறது. அதற்கும் மூப்பெய்துகிறதோ? நான் ஏதோ எனக்குத் தெரிந்த தமிழில் கவிதை என்று சொல்லிக் கொண்டு கவிதையாய் எழுதியிருந்தேன் எனது ஆதங்கத்தை...

  பீர்பால் கதை அருமை....

  முடிவுகள் அற்ற பாதைகள்!!! ஆஹா அருமையான பொருள் செறிந்த வரிகள்!!!!!உண்மைதான்...

  பயணம் ரசித்தது! நீங்கள் இருப்பது ஃப்ரான்ஸ் என்றாலும் உங்களுடனே வெனிஸில் படகில் பயணித்தது போன்ற ஓர் சுகானுபவம். தொடர்கின்றோம் உங்களுடன்...

  கீதா

  ReplyDelete
 16. யதார்த்த பயணத்தில் எதிர்கொள்ளும் நிகழ்வுகளை உடனிருப்பது போல உணர்வை ஏற்படுத்திப் பதிந்துள்ள விதம் அருமை. அந்நாள் நிலையும், இந்நாள் நிலையும் அதற்கான ஒப்புமைகளும் சற்றே சிந்திக்கவைத்துவிட்டன. பீர்பால் கதை, ராபர்ட் ப்ராஸ்ட் கவிதை என்ற நிலையிலான மேற்கோள்கள் பொருத்தமானவை.

  ReplyDelete
 17. பயண அனுபவத்தை மிகவும் அழகாக எடுத்து சொல்லியவிதம் மிக சுவாராஸ்யமாக இருந்தது. பாராட்டுக்கள்.பயணங்கள் தொடரட்டும்

  சுற்றுலா பயணம் என்றால் நான் மிகவும் நிதானமாக இயற்கை வளங்களை ரசித்தவாறு செல்லுவது எனக்கு பிடிக்கும் அதற்காகவே நான் எனது வேனில் பயணம் மேற்கொள்ளுவேன்

  ReplyDelete
 18. மிக ஆழமான...கொஞ்சம் நீளமான பதிவேயானாலும், உங்கள் ஞாபகநதிக்குள் எங்களையும் நீச்சலடிக்க வைத்திருக்கின்றீர்கள்.
  ராஜபாட்டையாக இருந்த நமக்கான கிராமத்துச்சாலைகள் நம்மை எங்கெல்லாம் நடத்திப்போய் இருக்கின்றன? பள்ளிகளின் சுற்றுலாக்கள் இப்போதெல்லாம் எப்படியெல்லாம் மாறிவிட்டன..
  நினைத்தல் ஒரு ஆனந்தம் நண்பரே...
  அதிலும் பயனங்களை நினைவு கூறுதல்..
  பீர்பாலும் அக்பரும் கடந்த பழக்கூழ் அடர்ந்த பாலம்...
  நெஞ்சுக்கு நெருக்கமாய் இருக்கிறது எழுத்து...
  உண்மை..
  வஞ்சகப்புகழ்ச்சியல்ல...
  வாழ்த்துகள்...

  ReplyDelete
 19. பயணம் என்பது ஓர் உன்னதமான அனுபவமே!
  வாழ்க்கையே ஒரு பயணம்தானே நண்பரே!
  நம்மில் பலருக்கு பயணத்தில் கிடைக்கும் அனுபவங்களை ரசிக்க போதுமான நேரத்தை ஒதுக்குவதில்லை என்பதே உண்மை. உங்களின் இந்த அனுபவம், எழுத்திலும் எம்மை கட்டிப்போட்டுவிட்டதிலிருந்தே புரிகிறது நீங்கள் எவ்வளவு ரசித்துள்ளீர்கள் பயணத்தை என்று. இந்த பயணத்தில்தானே அரசு அதிகாரிகளை எப்படி வளைப்பது என்பதை புரிந்துகொண்டீர்கள். அதுமட்டுமா, அன்றுவரை நேராக நில் நீதியாக நட பிழையில்லாமல் எழுது என்று எல்லாம் கற்றுத்தந்த ஆசிரியரே லஞ்சத்தையும் கற்றுத்தந்த குருவானார். அருமையான அனுபவ பயணம். ரசித்தேன்.

  ReplyDelete
 20. வணக்கம் நண்பா நலமா ?
  இனிய இந்தியா சென்று வந்தேன் ஆகவே தளம் வரமுடியவில்லை....

  அருமையான பயணக்கட்டுரை நண்பரே நானும் தங்களுடன் பயணித்தது போன்ற உணர்வு
  பீர்பால் கதை நல்லதொரு தத்துவத்தை சொன்னது நண்பரே....
  உண்மை பயணங்கள் என்றுமே முடிவதில்லை.

  ReplyDelete
 21. கால இயந்திரத்தில் ஏறிப் பயணித்த உணர்வைத் தந்தது தங்களின் பகிர்வு.
  நன்றி சகோ

  ReplyDelete
 22. Are you in need of a loan?
  Do you want to pay off your bills?
  Do you want to be financially stable?
  All you have to do is to contact us for
  more information on how to get
  started and get the loan you desire.
  This offer is open to all that will be
  able to repay back in due time.
  Note-that repayment time frame is negotiable
  and at interest rate of 2% just email us:
  reply to us (Whats App) number: +919394133968
  patialalegitimate515@gmail.com
  Mr Jeffery

  ReplyDelete