Friday, April 1, 2016

முடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும் - 1

என்னை பயணம் பற்றி எழுதத் தூண்டிய சகோதரி மகிழ்நிறை மைதிலி கஸ்தூரி ரெங்கனுக்கு நன்றிகள் பல.


யணம் என்ற வார்த்தை ஏற்படுத்தும் அதிர்வுகளையும், கால அட்டவணைக்குள் அடங்காத மனவெளியில் அந்த வார்த்தை மத்தாப்பு கோடுகளாய் விசிறிவிடும் நினைவொளித் துகள்களையும், வெளிச்சமாய், இருட்டாய், ஈரமாய், வரட்சியாய், பசுமையாய், பாலைவனமாய் அது பரவவிடும் பாதைகள் அனைத்தையும் எழுத்தில் பதிந்துவிட முடியுமா எனத் தெரியவில்லை ! ...

மனிதனுக்குப் பயணங்கள் சாத்தியமற்றுப் போயிருக்குமானால் அவனது ஆறாம் அறிவு இவ்வளவு கூர்மை பெற்றிருந்திருக்காது ! மொழிகள் தழைத்து, கலாச்சாரங்கள் ஸ்திரப்பட்டு மனிதனின் அறிவும் ஞானமும் விருத்தியானதற்கு அவனது இடைவிடாத பயணங்களே காரணம். நாம் தீர்மானித்த இலக்கைவிடப் பலபடங்கு அதிகமான ஆச்சரியங்களையும், புதிர்களையும் நாம் கடக்கும் பாதைகளில் நிரப்பி வைத்திருப்பவை பயணங்கள் !

பயணம் என்ற சொல்லைவிட யாத்திரை என்னும் சொல் ஆழமானதாகத் தோன்றுகிறது. எப்படி வாழ்ந்தாலும் நிறைவு தோன்றாமல், வாழ்க்கையையே யாசிக்கும் பயணம் ! நாடோடி இன்னும் மேன்மையாகத் தோன்றுகிறது.எந்த தேடுதலுமற்று, வாழ்க்கை பற்றிய தர்க்க, தத்துவங்களற்று இடம் பெயர்தல் மட்டுமே நோக்கமாய்க் கொண்ட ஒரு நாடோடியின் வாழ்க்கை பெரும்பேறு ! மண்ணைத் தேடி, அதன் மனிதர்களை, அவர்களின் மொழிகள் மற்றும் கலாச்சாரங்களைத் தேடியலைந்த மனிதர்களால்தான் மனித குலம் கடந்த பாதை வரலாறாய் நிலைத்தது.

பிரான்ஸ் வந்த புதிதில், கட்டாய ராணுவ சேவையின் போது போர் பயிற்சி நிமித்தமாய்ப் பல இடங்களுக்குக் குழுவாய் பயணித்த போது அந்தத் தேசத்தின் பூகோள அமைப்பு, அதன் மனிதர்கள், அவர்களின் குணம் மற்றும் கலாச்சாரம், கிராமபுற, நகர் புற வாழ்க்கை முறை என அந்த ஓராண்டு வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த அனுபவம் அதற்குப் பின்னர் வேலை, குடும்பம் என்ற வட்டத்தினுள் தங்கிவிட்ட இருபதாண்டுக்கும் மேலான வாழ்க்கையில் கிடைக்கவில்லை !

பதினான்கு வயதளவில் படித்த ஒரு கவிதையின் ஞாபகம் வருகிறது...

பிறந்த தெருவிலிருந்து நகராமல், பக்கத்து தெருவிலேயே மணமுடித்து, பிள்ளைகள் பெற்று, பேரக்குழந்தைகளையும் பார்த்து இரண்டு தெருவுகளுக்குள்ளேயே தன் வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கும் ஒரு பெண்மனியின் கதைசொல்லும் " ஆயிஷா பீபியின் உலகம் " என்ற கவிதை !

மீசை அடரத்தொடங்கிய பதிணென் பருவத்தில் எங்கள் தெருக்கோடி சலவை கடைக்கு உடைகளை இஸ்த்திரி போட கொண்டு செல்வேன்.

நடுத்தர வயது கணவன், மனைவி இருவரும் கடையில் உழைப்பார்கள்.

ஒரு முறை சலவைக்காரர் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார்...

" அது நம்ம ஊரைத்தாண்டி எங்கேயும் போனது கிடையாதுங்க... "

" ஆமாண்ணே... தோ பக்கத்திலிருக்கற நிரவிக்குக் கூடப் போனதில்லைண்ணே... "

வெள்ளந்தியாய் ஆமோதித்துக்கொண்டிருந்தார் அவர் மனைவி !

உலகம் சுற்றியும் வாழ்க்கை புரியாமல் போனவர்களும் உண்டு ! இரண்டு தெருக்களுக்குள் முடிந்த வாழ்க்கையிலேயே உலக ஞானம் படித்தவர்களும் உண்டு !!

ஜூலியஸ் வெர்னேயின் " உலகை சுற்றிவர எண்பது நாட்கள் " என்னை மிகவும் கவர்ந்த படைப்புகளில் ஒன்று.

பிரெஞ்சு இலக்கியகர்த்தாக்களில் ஒருவரான ஜீலியஸ் வெர்னேயின் " உலகை சுற்றிவர எண்பது நாட்கள் " இந்தியாவின் முதல் இருப்பு பாதை, கல்கத்தாவின் டிராம் என அன்றைய இந்தியாவின் விஞ்ஞான வசதிகள் முதல், சமூகத்தின் மூட நம்பிக்கைகள், உடன்கட்டை ஏற்றும் பழக்கம் வரை ஆங்கிலேயர் காலத்து இந்தியாவுக்குப் படிப்பவர்களைக் கடத்திவிடும் புதினம் ! இந்தியா மட்டுமல்லாது கதை நகரும் தொழிற்புரட்சி காலத்து நாடுகள் அனைத்தை பற்றியும் துல்லியமான விபரங்களைக் கூறும் நாவலாசிரியர் பயண அனுபவமே இல்லாதவர் என்று கூறினால் நம்ப முடியாது ! பாரீஸ் நகரசபையில் பணிபுரிந்த ஜீலியஸ் வெர்னே பிரான்ஸை தாண்டி வேறெங்கும் பயணிக்காதவர் ! அவர் சந்தித்த மாலுமிகளின் வழியே கேட்டறிந்த பயண அனுபவங்களை வைத்து எழுதியது தான் உலகை சுற்றிவர எண்பது நாட்கள் புதினம் !

ன் தாய் வழி பாட்டியின் தந்தை ஊரின் முக்கியஸ்த்தர்களில் ஒருவர். அந்தக் காலத்திலேயே பல தொழில்கள் செய்த, பிரெஞ்சு காலனி நகரசபையில் உறுப்பினராக இருந்த பிரபலம் !

அடிக்கடி நின்றுவிடும், மோட்டரில் இரும்பு கம்பி போட்டு சுழற்றி கிளப்பும் காரில் அவருடன் பல நாட்கள் பயணித்துச் சென்னை சென்றதையும், ஒரு ஊரே வசிக்கும் அளவுக்கு வியாப்பித்திருந்த மரத்துக்குக் கீழே நின்றிருந்த போது குருவிகள் போல வானத்தில் பல விமானங்கள் பறந்த நிகழ்வையும், வெள்ளைக்காரன் குண்டு போடப்போகிறான் என அறிந்து உடனடியாக ஊர் திரும்பியதையும் பாட்டி கதையாய் சொல்லும்போதெல்லாம் கற்பனைகதை என நினைத்து அலட்சியப்படுத்தியது உண்டு. அவள் குறிப்பிட்ட காலம் இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்த காலம் , அந்த மரம் அடையாறு ஆலமரம், அவள் குறிப்பிட்ட குண்டு ஜெர்மனியின் எம்ட்டன் கப்பல் என்பதெல்லாம் புரியத்தொடங்கி, அவளிடம் இன்னும் பல செய்திகள் கேட்க ஆசைப்பட்ட காலத்தில் பாட்டி இல்லை !


பால்ய வயதில் என் தந்தையுடன் காரைக்காலிலிருந்து அவரது கடை இருந்த நாகூருக்கு விடுமுறை தினங்களில் சென்று வருவதுதான் முழுவதும் நினைவிலிருக்கும் எனது முதல் பயணம். இரு ஊர்களுக்கும் இடைபட்ட அந்தப் பதிமூன்று கிலோமீட்டர் சாலை பயணம் ஒவ்வொரு முறையும் எனக்களித்த அனுபவங்கள் அற்புதமானவை.

பேருந்துகளின் கடைசி இருக்கைகளில் பயணிப்பது என் தந்தைக்குப் பிடிக்கும். ஏறும் பேருந்தின் வயதுக்கு ஏற்ப ஆட்டங்களும், குலுங்கல்களுமான பயணம் பரபரப்பான காலை வேளைகளில் ஒரு அனுபவத்தையும் உழைத்த அலுப்புடனான மாலை மயங்கும் வேளைகளில் ஒரு அனுபவத்தையும் இரவு நேரங்களில் வேறு ஒரு அனுபவத்தையும் ஏற்படுத்தும்.

நாகூர் தர்காவின் சந்தனக்கூடு வைபவத்தின் போதெல்லாம் மல்லிகை, ரோஜா, சந்தன வாசத்துடன் கந்தூரி கடைகளில் விற்கபப்டும் எல்லுமிட்டாய்களின் வாசமும் காலந்த வாசனையுடன் நாகூர் ஹனிபாவின் பாடல்களைக் காற்றில் வீசி விரையும் பேருந்துகள் வேளாங்கன்னி திருவிழா சமயங்களில் மாதா படம் ஏந்திய யாத்ரீகர்களுடன் " எனையாளும் தேவமாதா " பாடி விரையும். திருநள்ளாறு கோயில் விழாக்களின் போது நாகை வழியே வரும் பக்தர்களைச் சுமக்கும் பேருந்து முழுவதும் திருநீறு, குங்கும மணம் வீசும் !

காலை பயணங்களைவிட இரவின் ஏகாந்தத்தில் பயணித்த அனுபவங்கள் இதயச்சுவர்களில் பசுமையான பாசியாய் இன்றும் படர்ந்து கிடக்கின்றன !

கோடை, மழை, முன்பனி என ஒவ்வொரு காலத்தின் காற்றுக்கும் ஒரு தனி வாசனை உண்டு ! முன்னிரவை தாண்டிய அமைதியான சாலை வழியே விரையும் பேருந்தின் ஜன்னல் இருக்கையில் கண்கள் மூடி அமர்ந்து பயணிக்கையில் வேகமாய் முகத்தில் வழுக்கி முடி கலைத்து அலம்பும் காற்றில் கோடையின் வெப்பத்தையும், மழை நாட்களின் ஈரத்தையும் முன்பனியின் குளிரையும் நுகர்ந்து உணர்ந்து, பேருந்து நிற்கும் போதேல்லாம் காற்றுத் தடைபட்ட இடைவெளியில் ஒரு வெறுமையை உணரும் அனுபவமுள்ளவர்கள் ஆயுளுக்கும் பேருந்து பயணங்களை மறக்க மாட்டார்கள் ! தான் சுமந்து சென்றவர்களின் வாசனைகளையெல்லாம் தேக்கியபடி பேருந்துகள் பெருஞ்சாலைகளில் விரைய, அவற்றின் குலுங்கல்களும் அதிர்வுகளும் நம் மனதடியில் தங்கிவிடுகின்றன.

இறங்கும் போதெல்லாம் தன் தடதடப்பில் கொஞ்சத்தை நம் இதயத்தில் இறக்கிவிட்டு விரைந்து மறையும் புகைவண்டியை போல, யாருமற்ற ஊர் எல்லை நிறுத்தத்தில் இறங்கும்போது அறுவடைக்குக் காத்திருக்கும் முற்றிய நெற்கதிர்களின் வாசனையைச் சுமந்து சஞ்சரிக்கும் காற்றில் டீசல் மணம் வீசும் புகையையும் கலந்துவிட்டு விரையும் பேருந்து நம்முள் விட்டுச் செல்லும் தாக்கமும் அலாதியானது !


ஒரு டி வி எஸ் வாங்கினார் அப்பா ! ...


வண்டியில் அவருக்கு முன்னாலோ பின்னாலோ அமர்ந்து நாகூர் செல்வேன்...

அந்த வயதிலேயே என்னை ஒரு தோழன் போலப் பாவித்து அவரது பால்யம் தொடங்கி அன்றைய அரசியல் நிலவரம் வரை சொல்லிக்கொண்டே ஓட்டுவார்.


ரவு பத்துமணிக்கு கடையை மூடிவிட்டு கிளம்புவோம்.

என் தந்தை சரியான முன் ஜாக்கிரதை முத்தண்ணா ! கடையின் மூன்று பூட்டுகளையும் சரியாகப் பூட்டப்படிருக்கின்றனவா என இழுத்து ஆட்டி பார்த்த பின்னரே கிளம்புவார். அப்படியும் சில இரவுகளில் நாகூர் பாலம் தாண்டிய பிறகு சரியாகப் பூட்டினோமா என்ற சந்தேகம் அப்பாவுக்கு வந்துவிடும் ! மீன்டும் திரும்பிப்போய்ச் சரிபார்த்த நாட்களும் உண்டு !

சைக்கிள் கூட முந்திவிடும் " வேகத்தில் " வண்டி ஓட்டும் என் தந்தை நாகூர் பாலத்தைக் கடக்கும் போதும், காரைக்காலின் எல்லையான மதகடியை நெருங்கும் போதும் இன்னும் மெல்ல உருட்டுவார் ! காரணம் அந்த இரு எல்லைகளில் இருந்த மதுக்கடைகளிலிருந்து வெளியேறி சாலையில் அலம்பும் குடிமகன்கள் !

இரண்டு சக்கர வாகனங்கள் தொடங்கிப் பேருந்துகள் கூட அதிகம் இல்லாத காலம் அது. வாஞ்சூரிலிருந்து திருமலைராயன் பட்டிணம் வரை சாலையோர மரங்கள் மற்றும் இருபுற வயல்வெளிகளைத் தவிர்த்து வேரெதுவும் கிடையாது. சர்வகாலமும் தெருவிளக்குகள் பழுதுபட்டு இருண்ட சாலை !

ஹாரன் அலற விரைந்து மறையும் கடைசிப் பேருந்துக்குப் பிறகு, சாக்கு போர்வைக்குள் குத்துக்காலிட்டு தூங்கும் வண்டி ஓட்டிகளுடன் லாந்தர் விளக்கு ஆடும் வண்டிகளை இழுக்கும் பாதைக்குப் பழகிய மாடுகள், அரிதாகக் கடந்து செல்லும் லாரிகள் என வெறிச்சோடிய சாலை ! முகத்தில் மோதி மேலெழுந்து தலைமுடி கலையும் காற்றில் உழுத நிலத்தின் மணம், கோடையின் காய்ந்த மண்ணின் மணம், முற்றி தலை சாய்த்த நாற்றின் மணம் என அந்தந்த பருவத்துக்கான மணத்துடன் வண்டியில் தொங்கும் பையிலிருக்கும் கோலா மீனின் மணமோ அல்லது மாம்பழ, பலாப்பழ மணமோ கலந்திருக்கும் !

பெரிய பாலத்தின் விளக்கு வெளிச்சம் கண்ணில் தென்படும் தருணத்தில் என்னைப் பயம் பற்றிக்கொள்ளும் !


மீன், மல்லிகைப்பூவுடன் சைக்கிளில் பாலத்தைக் கடந்தவர் இரத்தம் கக்கியது, நள்ளிரவு பேருந்து தானாக நின்றது என அந்தப்பாலத்தைப் பற்றிப் பாட்டிகள் சொன்ன கதைகளெல்லாம் ஞாபகம் வரும் ! பேய் பயத்தைச் சொன்னால் பெரியாரின் கொள்கைகளில் ஈர்ப்புக் கொண்ட அப்பா கோபிப்பார் என்ற பயமும் சேர்த்துக்கொள்ள, எங்கே வண்டி நின்றுவிடுமோ என்ற பயம் திருமலைராயன் பட்டின எல்லைவரை என்னை ஆட்டும் !

அதுவரையிலும் காதில் ஒலித்த சில்வண்டுகளின் ரீங்காரம் மறைந்து, "  டடட டட் டட்... டடட டட் டட்... "  என கொத்துப்புரோட்டா சத்தத்துடன் திருமலைராயன் பட்டிணம் தாண்டினால் மறுபுற எல்லையிலிருக்கும் மஸ்த்தானியா ஹோட்டல் முதலாளி அப்பாவின் வண்டி தென்பட்டதும் தெருவில் இறங்கி கையாட்டுவார்...

" கந்தூரி ஸ்பெசல் பரோட்டா... ஒரு பார்சல் நீங்க வருவீங்கன்னு எடுத்து வச்சேன்... வேளாங்கன்னி திருவிழா பிரியாணி... சிக்கன் பீஸ் ... "

எனச் சீசனுக்குத் தகுந்தமாதிரி எடுத்துவிடுவார் !

" விக்கலைன்னு சொல்லுங்க நானா !... நம்மகிட்டேயே கதையா ?... "

" காசெல்லாம் நாளைக்குக் காலையில பாத்துக்கலாம் ! "

என் தந்தை பேசுவதைக் காதில் வாங்காதது போல, அசட்டு சிரிப்புடன் பொட்டலத்தை வண்டியில் தொங்கும் பையில் தினித்து விடுவார் !

பட்டிணம் பாலம் தாண்டினால் பளிச்சென்ற விளக்குகளுடன் அகலமான யூனியன் பிரதேச சாலை ! நிரவி நெருங்குவதை உணர்த்தும் ஓ என் ஜீ சி வளாகத்தின் சோடியம் வேப்பர் விளக்குகள் ! இருபுறமும் பசுமையான வயல்கள் சூழ்ந்த நிரவி எலந்தர் ஹலந்தர் தைக்காலின் குளத்தில் கோடையில் கூடத் தண்ணீர் மிச்சமிருக்கும் !

அம்பாள் சத்திரத்தில் தொடங்கும் காரைக்கால் எல்லையில் அரசலாற்றில் ஏறி வரும் கடல் காற்று உடல் வருடும் ! வீட்டு வாசலில் வண்டி நின்றதும் சட்டென ஒரு வெறுமை தோன்றும் ! இழுத்துபோர்த்திக்கொண்டு தூங்கும் வரையிலும் பயணக் குளிர் உடம்பில் சிலிர்ப்பாய் ஒட்டிக்கொண்டிருக்கும் !

பயணம் அடுத்தப் பதிவில் முடியும் !


 பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.