எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த காலம்...
திமுக சட்டமன்ற உறுப்பினர் ரகுமான்கான் பேசுவதற்காக ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டதை அறிவிக்க மணி அடித்தும், பேசுவதை நிறுத்துமாறு வேண்டியும் ரகுமான்கானின் பேச்சை நிறுத்த முடியாத சபாநாயகர் முதலமைச்சர் எம்ஜிஆரை நோக்குகிறார். முதலமைச்சரே எழுந்து பேச்சை நிறுத்துமாறு கேட்ட பிறகும் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார் ரகுமான்கான் !
" உங்களை அந்த ஆண்டவனால் கூட நிறுத்தமுடியாது ! " என எம்ஜிஆர் நொந்துக்கொள்ள, எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதி எழுந்து ரகுமான்கானை அமரச்சொல்கிறார். தன் கட்சி தலைவருக்கு தலைவணங்கி பேச்சை முடித்துக்கொள்கிறார் திமுக சட்டமன்ற உறுப்பினர்.
அடுத்ததாக கருணாநிதி பேசுகிறார்...
" தம்பி ரகுமான்கானை ஆண்டவனாலும் நிறுத்த முடியாது என்றார் முதலமைச்சர்... நான் நிறுத்திவிட்டேன்... காரணம் நான் ஆண்டவன் ! தமிழ்நாட்டை இரண்டுமுறை ஆண்டவன் ! "
” மாதமோ சித்திரை !
மணியோ பத்தரை !
மக்களுக்கோ நித்திரை !
வழங்குவீர் உதய சூரியனில்
உங்கள் முத்திரை ! "
என எளிய தமிழில் எதுகைமோனையில் விளையாடி சங்கத்தமிழை பாமரன் கொஞ்சும் தமிழாய் மாற்றிய அண்ணாவின் இதயத்தை கடன் கேட்ட கலைஞர் கருணாநிதி மீளாநித்திரையில் ஆழ்ந்துவிட்டார்.
தான் நினைத்த நேரத்தில், தான் நினைத்த திசையில் அரசியலை சுழற்றிவிடும் அச்சாணியாக அறுபதாண்டுகளுக்கும் மேலாக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஒரே அரசியல்வாதி இந்தியாவிலேயே கருணாநிதி ஒருவராகத்தான் இருக்க முடியும் ! அப்படிப்பட்ட தீவிரமான அரசியல் பணிகளுக்கு மத்தியில் பத்திரிகையாளர், எழுத்தாளர், இலக்கியவாதி, நாடக மற்றும் சினிமா பணிகள் என தன் அனைத்து பண்முகத்திறமைகளிலும் தனி முத்திரை பதித்த மனிதர் உலகிலேயே கருணாநிதி மட்டும்தான் என்றால்கூட அது மிகையாகாது ! கலைஞர் தொலைக்காட்சிக்கு வெற்றிகரமான ஆலோசனைகள் வழங்கியது முதல் எண்பதை தாண்டிய வயதில் முகநூலிலும் முத்திரை பதிக்க முயன்றதுவரை கருணாநிதியின் அரசியலை தாண்டிய ஆளுமை பற்றி பல பக்கங்கள் எழுதலாம் !
அவர் எழுதிய நெஞ்சுக்கு நீதி தமிழக அரசியலின் அரைநூற்றாண்டுக்கான வரலாற்று ஆவணம் !
ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, திமுக சட்டமன்ற உறுப்பினர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொண்டிருந்த காலமாகட்டும் அல்லது ஒற்றை உறுப்பினருடன் மங்கியிருந்த காலமாகட்டும் கருணாநிதியே அரசியலின் மையம் ! தன்னை நோக்கி தகிக்கும் பிரச்சனையை ஒரு ஒற்றை கேள்வியினால் தன் எதிரி பக்கமே திருப்பிவிடும் பிரம்மாஸ்த்திர சாதுர்யம் கொண்டவர் அவர் !
பூமியின் இரவு பகலை போல தமிழ்நாட்டின் அரசியல் உலகுக்கும் இரண்டே நிலைகள்தான். ஒன்று கருணாநிதி ஆதரவு மற்றொன்று கருணாநிதி எதிர்ப்பு ! கருணாநிதியை சாதுர்யமாக எதிர்கொண்டாலே போதும் அரசியல் கிணற்றை தாண்டிவிடலாம் என்ற நிலை இருந்ததாலோ என்னவோ, தான் பெற்ற செல்வாக்குக்கு ஈடான விமர்சனங்களையும் வெறுப்பையும் சம்பாதித்த அரசியல்வாதியும் அவர்தான் ! அவரை எதிர்த்து அரசியல் செய்தவர்கள் சிலர் என்றால் அவருக்கு பயந்து அரசியல் ஆசையை ஒதுக்கிவைத்தவர்கள் பலர் ! அவர் பேச்சை நிறுத்தி, வீட்டில் முடங்கிய பிறகுதான் பல பிரபலங்கள் அரசியல் பேச வெளியே வந்தனர் !
அவரது முதிர்கால அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் குடும்ப ஆதிக்கம் பற்றி பல விமர்சனங்கள் இருந்தாலும் ஐந்து முறை முதலமைச்சராக தமிழகத்தின் வளர்ச்சிக்கான கருணாநிதியின் சாதனைகள் ஏராளம். அந்த சாதனைகளில் பலவற்றை சட்டபூர்வமாக்கி வெற்றி கணடவர். பூம்புகார், வள்ளுவர்கோட்டம், மாபெரும் நூலகம் என கலை பண்பாட்டு தளத்திலும் பல திட்டங்களை செயல்படுத்தியவர் கருணாநிதி.மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் போன்ற சொல்லாடல்களை வழக்கு மொழியாக்கியவரும் கலைஞர் தான்.
கருணாநிதியின் மறக்கப்பட்ட சாதனைகளில் மிசா காலகட்டமும் ஒன்று...
இந்திரா காந்தி நெருக்கடி நிலையை பிரகடணப்படுத்தி இந்திய ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்து மாநில ஆட்சிகளை காவு கொண்டபோது அதனை கண்டித்து, நெருக்கடி நிலையை திரும்ப பெறவேண்டும் என செயற்குழுவை கூட்டி தீர்மானம் இயற்றிய இந்தியாவின் முதல் கட்சி திமுக. நெருக்கடி நிலையை ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால் எதிர்க்கக்கூடாது என இந்திராகாந்தி கேட்டுக்கொண்டதையும் மீறி கருணாநிதி செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கான விலையாய் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு, அந்தக்கட்சியின் முன்னணி தலைவர்கள் முதல் மாவட்ட நிர்வாகிகள்வரை நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிட்டி பாபு,முரசொலி மாறன், மு க ஸ்டாலின் என பல திமுகவினர் சிறையில் கொடுமைப்படுத்தப்பட்டனர். சிறையில் நடந்த தாக்குதல்களின் காரணத்தால் சிட்டி பாபு உடல்நலம் குன்றி உயிர்நீத்தார்.
அதே மிசா காலகட்டத்தில் கடுமையான தணிக்கை விதிகளினாலும், மிரட்டல்கள் மற்றும் கைதுகளின் மூலமாகவும் பத்திரிக்கை சுதந்திரம் நாடு முழுவதும் பறிக்கப்பட்டது. இந்தியாவின் தேசிய பத்திரிக்கைகளே அரசுக்கு எதிராக எழுத தயங்கிய போது திமுகவின் முரசொலி இந்திரா காந்தியின் படத்தை ஹிட்லராக சித்தரித்து கேலிச்சித்திரம் வெளியிட்டது.
அவசர நிலைக்கு பிறகான இந்திய அரசியலில் தான் தீவிரமாக எதிர்த்த இந்திராவுடன் " நேருவின் மகளே வருக நிலையான ஆட்சியை தருக " என கருணாநிதி கூட்டணி வைத்துக்கொண்டதை விமர்சிப்பவர்கள்கூட மாநில சுயாட்சி மற்றும் பிராந்திய நலனுக்கான அவரது அயராத உழைப்பை மறுக்கமாட்டார்கள்.
மொழிவாரி மாநிலங்களின் தோற்றம் முதல் மாநில சுயாட்சி கோரிக்கைவரை இந்தியாவின் மாநிலநலன் சார்ந்த அனைத்து இயக்கங்களிலும் முன்வரிசையில் நின்றவர் கருணாநிதி. சுதந்திர தினத்தின் போது மாநில தலைநகரங்களில் அந்தந்த மாநில முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்றுத்தந்தவர் கருணாநிதி.
" ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இங்கே ஓய்வுகொண்டிருக்கிறான் " என தனது கல்லறையில் பொறிக்கப்பட வேண்டும் என்று கருணாநிதியே கேட்டுக்கொண்டதுதான் அவருடன் வாழ்ந்த தலைமுறைக்கும் இனி வரும் தலைமுறைக்கும் அவர் விட்டு செல்லும் செய்தி ! தொடர் தோல்வி தருணங்களை கூட தனக்கு சாதகமான களங்களாக்கி அயராது உழைத்த அவரது போராட்ட குணத்தை ஒவ்வொரு மனிதனும் நினைவில் கொள்ள வெண்டும்.
" இயங்கா விட்டாலும் பரவாயில்லை அவர் இருந்ததே ஒரு தைரியம் " என முதுமையின் உச்சத்தில் இருந்த குடும்பத்தவர் பற்றிய உணர்வே கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவிலும் தோன்றுகிறது...
இனி வரும் காலங்களில் தமிழக அரசியல் பற்றிய விமர்சனங்களும் வரலாறும் கருணாநிதி இருந்த போது, கருணாநிதி இறந்த பிறகு என்ற இரு நிலைகளிலேயே பதியப்படும் !
பட உதவி : GOOGLE
இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.