Monday, December 15, 2014

விடாது துரத்திய விஷ்ணுபுரம் !



பால்ய வயதில், ஒரு மழைக்கால மாலை நேரத்தில் எனக்கு பரிச்சயமான அட்டை  கிழிந்த  காமிக்ஸில் தொடங்கிய வாசிப்பு என்னை இன்னும் தொடர காரணம் என் பெற்றோர்கள் !

அந்த மாலையிலிருந்து நான் புத்தக புழுவாய் மாறிப்போனேன். வளர்ச்சிக்கு ஏற்ப என் வாசிப்பு ரசனையும் மாற, பள்ளிக்கூடத்துக்கு அடுத்ததாக நான் அதிகம் இருந்தது நூலகங்களில் ! பொது நூலகங்கள் தொடங்கி லெண்டிங் லைப்ரரி வரை ஊரின் அனைத்து நூலகங்களும் எனக்கு அத்துப்படி ! அன்று எனது பெற்றோர்கள் எந்த விதத்திலாவது வாசிப்புக்கு தடைபோட்டிருந்தார்களேயானால் என் வாழ்க்கையே மாறியிருக்கும்... நிச்சயமாக சாமானியனாய் உங்களை தொடர்ந்திருக்க முடியாது ! காமிக்ஸில் தொடங்கி கண்ணில் கண்ட நூல்களையெல்லாம் வாசிக்க தொடங்கிய காலம் வரை எனக்கு எந்த தடையும் போட்டதில்லை அவர்கள் !

 பத்தாம் வகுப்பு தேர்வின்போது நான் வாசித்துக்கொண்டிருந்தது பாலகுமாரனின் இரும்பு குதிரைகள் !

 நானூற்றி பதிமூன்று மதிப்பெண்கள் என ஞாபகம்...

" அந்த கன்றாவியை வாசிக்காமல் இருந்திருந்தா இன்னும் அதிகமா மார்க் எடுத்திருக்கலாம்ல... "

ஒரு சொந்தக்காரர் புலம்ப,

" பள்ளிக்கூட கன்றாவியை மட்டும் படிச்சிட்டு வாந்தியெடுத்து அப்படி ஒண்ணும் அதிகமா வாங்க வேண்டாம் ! "

என் அம்மா சட்டென கூறினார். என் கல்வி மதிப்பெண்களை பற்றி பேசுவதைவிட, நான் படிக்கும் புத்தகங்களை பற்றி மற்றவர்களிடம் பெருமையாக பேசுவார்கள் !

விகடன் பிரசுரம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் பிரான்சில் இருந்தேன். நான் வாங்கி அனுப்ப சொல்லியிருந்த புத்தகங்களில் எய்ட்ஸ் எரிமலையும் ஒன்று ! அந்த புத்தகத்தின் அட்டை தெரியாமல் பைண்ட் பண்ணி அனுப்பி வைத்தார் என் தந்தை ! நான் பிரான்சிலிருந்து குறிப்பிடும் புத்தகங்களுக்க்காக என் பெற்றோரும், குடும்ப நண்பர் தேத்தரவுராஜும் பட்டபாடுகள் சொல்லி மாளாது !

ரண்டாயிரத்தின் தொடக்கம்... இந்தியாவில் முழுவீச்சை அடைந்திருந்த நுகர்வோர்  கலாச்சாரம் எங்கள் ஊரிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருந்த காலகட்டம். எனது பால்யத்தின் அற்புதங்களில் ஒன்றான ரஹ்மானியா பேப்பர் ஸ்டோர்ஸ் எல்லாம் காணாமல் போக ஆரம்பித்த காலம் !
கி.ராஜநாராயணன்


" கொஞ்சம் புக்ஸ் வாங்கனும்... எங்க கிடைக்கும் ? "

பிறந்த ஊருக்கு அந்நியனாய் மாற தொடங்கியிருந்த நான் சொந்தக்காரர் ஒருவரிடம் கேட்டேன்.

" அட நம்ம பரட்டை டீக்கடையிலேயே விக்கிறானே ?! "

அவர் சட்டென கூற, குழம்பினேன் !

" வாங்க ! இப்பவே ஒரு நடை போயிட்டு வந்துடலாம்... பய பிஸினசை டெவலப் பண்ணிட்டான்ல... எல்லா பொஸ்த்தகமும் வச்சிருக்கான் ! "

பரட்டை கால ஓட்டத்துக்கு ஏற்ப தொழில் விருத்தி பண்ணிக்கொண்டார் போலிருக்கிறது என்ற மகிழ்ச்சியுடன் கிளம்பினேன் !

" பாத்தீங்களா ?! நான் சொன்னேன்ல... எது வேணுமோ வாங்கிக்குங்க ! "

கடையை நெருங்கிய சொந்தக்காரர் எனக்கு உதவிய மகிழ்ச்சியுடன் கூற...

 பரட்டை பிஸினஸ் டெவலப் பண்ணியிருந்தது உண்மைதான் ! வடை, டீ, போண்டாவுடன்  தமிழின் முன்னணி வார, மாத சஞ்சிரிகைகளும் கடையில் தொங்கின ! 

நம் சமூகத்தின் பெரும்பாலானவர்களுக்கு வார, மாத சஞ்சிரிகைகளுக்கும், புத்தகங்களுக்குமான வித்யாசம் தெரிவதில்லை ! இன்னும் பலருக்கு வாசித்தல் என்றாலே பள்ளி பாட புத்தகங்கள் மட்டும்தான் !

நமது சமூகத்தில் வாசிப்பு பழக்கம் உள்ளவன் வேலைவெட்டி இல்லாதவன் ! கிடைத்த காசையெல்லாம் வீணாய் செலவு செய்யும் பிழைக்கத்தெரியாதவன் ! புத்தகம் வாங்கி கொடுக்கும் நண்பனைவிட குவார்ட்டருக்கு செலவு செய்பவன் " நண்பேன்டா ! "

ஒன்றுக்கும் உதவாத அரசியல் அலும்புகளையும், அரைவேக்காட்டு சினிமா செய்திகளையும் தலைப்புகளாக்கி, இலக்கியத்தரமிக்க எழுத்தாளர்களின் பேட்டியில்கூட அவர்களின் படைப்புகளை பற்றி விரிவாக குறிப்பிடாத, சிலவேளைகளில் அவர்களின் பதில்களை நையாண்டி பேட்டியாக்கி பிரசுரிக்கும் ஊடங்களை கொண்ட சமூகத்தின் மக்கள் இப்படி இருப்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை !

ஒரு நாட்டின் நூலகங்களின் தரத்தை வைத்தே அந்த சமூகத்தின் வாசிப்பு தகுதியை கணித்துவிடலாம். மேலை நாடுகளில் நூலகர் பணிக்கெனவே மேல்நிலை படிப்புகள் உண்டு. அதையும் தாண்டி, பல்வேறு தேர்வுகளுக்கு பின்னரே அந்த பணியில் அமர முடியும். அங்கெல்லாம் நூலகர்கள் தங்கள் நாட்டின் இலக்கியம் தாண்டி உலக இலக்கியம் வரை அனைத்தையும் அறிந்து விரல் நுனியில் வைத்திருப்பார்கள்.

அங்கு குழந்தைகளுக்கு மிக இளம் வயதிலேயே அவரவர் நாட்டின் இலக்கியங்கள், குழந்தைகள் புரிந்துக்கொள்ளக்கூடிய வகையில் எளிமையான படக்கதைகளாய் அறிமுகம் செய்யப்படுகின்றன. முதலாம் வகுப்பு குழந்தைகள் கூட நூலகங்களுக்கு தொடர்ந்து அழைத்து செல்லப்படுகிறார்கள். கலை, இலக்கிய ரசனை அவர்களுக்கு பால்யத்திலிருந்தே பயிற்றுவிக்கப்படுகிறது.

னது பதிணென்பருவத்து நண்பர்களில் ஒருவன் கிரி. கலாட்டா கிரி என்றால் தான் ஊரிலுள்ளவர்களுக்கு புரியும். ஒரு பாட்டில் பீருக்கே சுருதி ஏறி கண்மண் தெரியாமல் கலாட்டாவில் இறங்கிவிடுவான் என்பதால் அந்த பெயர்.

லோக்கல் எம் எல் ஏவின் தொண்டரடிப்பொடியாகி, எப்படியோ  நூலகத்தில் கடைநிலை ஊழியனாக சேர்ந்தவனை சில வருடங்களுக்கு முன்னர் சந்திக்க நேர்ந்தது... தினத்தந்தியை கூட புரட்டியறியாத கிரி நூலகராக பதவி உயர்வு பெற்றிருந்தான் !

தோப்பில் முகம்மது மீரான்


ந்தியா வரும் ஒவ்வொரு முறையும் புத்தகங்கள் தேடி அலையும் போது ஏற்படும் அனுபவங்களையே ஒரு புத்தகமாக எழுதிவிடலாம் !

கி. ராஜநாராயணின் கோபல்லபுரத்து மக்கள் சாகித்ய அகாடமி விருது பெற்ற நேரம்...  அவர் புதுச்சேரியில் குடியேறியதை பத்திரிக்கைகள் பேசிக்கொண்டிருந்த காலம்...

புதுச்சேரியில்  அந்த புத்தகத்துக்காக அலைந்து கொண்டிருந்தேன் !

" ராஜநாராயணனா ? அவரு யாருங்க ?! "

ஹிக்கின்பாதம்ஸ் புக் ஸ்டாலில் விசாரித்தபோது வந்த கேள்வி !

பல வாரங்கள் விசாரித்து, சென்னையின் முட்டு சந்தின் முனையிலிருந்த ஒரு கடையிலிருந்து " கோபல்லபுரத்து மக்களை " கண்டுபிடித்து பிரான்ஸ் அனுப்பி வைத்தார் நண்பர் தேத்துரவு ராஜ் !

அதே புதுச்சேரியில் அருந்ததி ராயின் " Gods of small things" மற்றும் அப்துல் கலாமின் " wings of fire " ஆகிய ஆங்கில நூல்கள் மிக எளிதாக கிடைத்தன ! பிரதான நேரு வீதியின் பளபள ஷாப்பிங் மால்களின் முகப்பு கண்ணாடியில் பரத்தப்பட்டிருந்தன அந்த நூல்கள்.

பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளின் புத்தக கடைகளில் அவரவர் மொழி புத்தங்களை மட்டுமே காண முடியும் ( ஆங்கிலம் கற்பதற்கான பாட புத்தகங்கள் இதில் சேர்த்தி இல்லை ! ) இவ்வளவுக்கும் ஆங்கில தேசமான இங்கிலாந்து இவர்களுக்கு பக்கத்து வீடு ! பிரபலமான ஆங்கில நூல்களும் " Best  seller " வகைகளும் உடனுக்குடன் மொழிபெயர்க்கப்பட்டு விற்பனைக்கு வருமே தவிர, ஆங்கில மூலத்தை தேடி அலைய வேண்டும் !

நமக்கு புத்தகத்தினுள் என்ன இருக்கிறது என்பது முக்கியமில்லை ! அது ஆங்கிலத்தில் இருந்தால், கையில் கொண்டு போவதில் ஒரு பெருமை !  Gods of small things செம cantroversial என பெருமைப்பட்டுக்கொள்பவர்கள் தி. ஜானகி ராமனின் அம்மா வந்தாள் நாவலை மட்டும் ஏனோ ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் !  ( தி.ஜானகிராமனின் படைப்புகளை நோக்கி என்னை திருப்பியவர் சகோதரர் ஜோசப் விஜு அவர்கள். )

அந்த ஆங்கிலத்தையும் நம்மவர்கள் உருப்படியாக கற்பதில்லை என்பது இன்னும் கொடுமை !

ஜெ. கிருஷ்ணமூர்த்தியின் Freedom from the  known புத்தகம்...  நம்அன்றாட வாழ்வின் அனுபவங்களின் மூலம் அறிந்த மனப்பிம்பங்களிலிருந்து நாம் விடுபட்டால்தான் பிரபஞ்ச உண்மையை உணர முடியும் என்பது இந்த புத்தகத்தின் ஒரு வரி விளக்கம்.

இதன் தமிழ்மொழியாக்கம் ஒன்றினை படிக்க நேர்ந்தது. தலைப்பு  "உண்மையிலிருந்து விடுதலை " ! ஜே. கே சொல்ல நினைத்ததோ  Freedom from the  known ,  அதாவது அறிந்தவைகளிலிருந்து விடுதலை.  அறிந்தவைகளிலிருந்து மனம் விடுதலை அடைந்தால்தான் உண்மையை காண முடியும். தமிழில் எழுதியவர் புரிந்து கொண்டதோ உண்மையிலிருந்து விடுதலை ! அதாவது  Freedom from the truth !!!

ற்றொரு சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான். ராஜநாராயணன் கரிசல் மக்களின் வாழ்வை கண் முன் நிறுத்தினார் என்றால் இவர் நெல்லை முஸ்லீம் சமூகத்தின் வாழ்வியலை, மும்மதங்கள் கலந்த சமூகத்தின் குழப்பங்களை, அத்தனை கலகங்களுக்கிடையேயும் பாமரனிடம் பொங்கும் மனித நேயத்தை ரத்தமும் சதையுமாய் எழுத்தில் கொடுத்தவர்.

இவரது சாய்வு நாற்காலி, ஒரு கடலோர கிராமத்தின் கதை, கூனன் தோப்பு  போன்ற நாவல்களை எனக்காக தேடி ஒரு நண்பர் படையே அலைந்தது !

மீன்டும் அதே கி. ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் தேடி சென்னையில் அலைந்த போது , பழம்பெரும் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் கிடைத்த அனுபவம்....

புத்தக பிரிவில் நுனிநாக்கு ஆங்கில இளம் பெண்...

தமிழ் புத்தக அடுக்கில் வழக்கம் போலவே பாலகுமாரன் மட்டும் சிரித்து கொண்டிருந்தார்... கூடவே ராஜேஷ் குமார், ராஜேந்திர குமார்.... அவர்களை சுற்றி சமையல் கலை, ஜோதிடம், வாஸ்து.... நட்ட நடுவே,  " முப்பது நாளில் கோடீஸ்வரர் ஆவது எப்படி ? " மற்றும் " சுகமான தாம்பத்ய வாழ்வுக்கு சுவையான யோசனைகள் ! "

" கி. ராஜநாராயணன் எழுதிய  கோபல்ல கிராமம் இருக்கிறதா ? "

புதுச்சேரியின் ஹிக்கின் பாதம்ஸ் ஆசாமியாவது கி.ராஜநாராயணனை யார் என்றுதான் கேட்டார்...

" அதெல்லாம் இங்க கிடையாதுங்க ! "

நான் ஏதோ " அந்த மாதிரி " புத்தகம் கேட்டது போல் பதறினார் நுனிநாக்கு ஆங்கிலி !

சட்டென திரும்பிய என் கண்களில் பட்டது... " அந்த மாதிரி " நூல்களே தான் !  அவற்றில் ஒன்று காம சூத்திரம் முழுவதையும் காமிக்ஸ் வடிவில் கொண்ட புத்தகம் ! மிக உயர்ந்த தரத்திலான ஆங்கில புத்தகம் ! சத்தியமாய் சொல்கிறேன் நண்பர்களே ! நம்மவர்கள் " அந்த சுதந்திரத்துக்கு " உதாரணமாய் அடிக்கடி குறிப்பிடும் பிரான்ஸில் கூட அப்படிப்பட்ட புத்தகத்தை பார்த்ததில்லை நான் !
தி.ஜானகிராமன்


எனக்கு விடலைப்பருவ ஞாபகம்...

எங்கள் ஊரின் பேருந்து நிலையத்தினருகே இருந்த  அந்த பெட்டிக்கடையில் அனைத்து தினசரி, வார, மாத இதழ்களுடன் பருவகாலம் தொடங்கி அவ்வப்போது பெயர் மாறும் குயிலி, டிஸ்கோ, கிளாமர் போன்ற கில்மாக்களும் கிடைக்கும் ! அந்த கடைக்காரர் ஒரு உடல் ஊனமுற்ற இளைஞர். சக்கர நாற்காலியில் வரும் அவரை ஒரு நாள் போலீஸ்க்காரர்கள் இழுத்துபோனார்கள்.

" மாப்ள... ரகசியமா சரோஜாதேவி வித்திருக்கான்டா ! "  என்றான் முபாரக் !

ஏழை பாழைகளுக்காக சரோஜாதேவியை ஒளித்து விற்றால் குற்றம், மேல்தட்டு ஷாப்பிங் மால்களில் குழந்தைகள் எடுத்து புரட்டகூடிய தூரத்தில் காமசூத்திரம் விற்கலாம்  ! இது ஜனநாயகம் !

ப்போது அலைந்தது சரி, இன்றுதான் இணையத்தின் மூலம் எந்த நூலையும் வாங்கலாமே என கேட்கலாம்...

எனக்கு புத்தகங்களை நேரில் சென்று வாங்க வேண்டும் ! நான் தேடியது கிடைத்த பரவசத்துடன்  பார்த்து , அதன் அட்டையை தடவி, புது வாசனையை முகர்ந்து ...முன் அட்டை கிழிந்த புத்தகத்தை என்னால் வாசிக்க இயலாது !

என்னை சைக்கோ என்று வேண்டுமானாலும் திட்டிக்கொள்ளுங்கள் !

சில மாதங்களுக்கு முன்னர், இந்தியா கிளம்புவதற்கு முன்பாக ஆனந்த விகடனை புரட்டிக்கொண்டிருந்தேன்.  உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்பது போல விகடன் புத்தக கண்காட்சி முதல்முறையாக எனது ஊரில் ! அதுவும் நான் அங்கிருக்கும் சமயத்தில் ! பரவசமாக முகவரியை பத்திரப்படுத்திக்கொண்டேன்.

ஊர் வந்த நாள் முதலாய் அந்த முகவரி தேடி அலைகிறேன்,  கிடைக்கவில்லை ! அந்த தெரு என்னவோ எனக்கு நன்கு தெரிந்ததுதான் ! அங்கு கண்காட்சி நடக்கும் அறிகுறியே இல்லை !

என் பால்ய நண்பனிடம் கேட்டேன்...

" கண்காட்சினா திருவிழா கூட்டம்ன்னு நெனைச்சிட்டியா ? நீ திருந்தவே மாட்டடா ! வா ... "

இரண்டு பெரிய கடைக்களுக்கிடையே சொருகலாய் அந்த புத்தகக்கடை.  இருட்டில் அமர்ந்திருந்த கடைக்காரர் எங்களை கண்டதும் அவசரமாய் விளக்குகளை போட்டார் !

கடையின் நடுவே விகடன் பிரசுர புத்தகங்கள் !

நான் பாய்ந்து பாய்ந்து சேகரிப்பதை பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் ! பணம் செலுத்தும் வரை அனைத்தையும் வாங்குவேன் என்பதை நம்பவில்லை அவர் !

" லெண்டிங் லைப்ரரிக்கா சார் ? "

" ம்ம்ம்... கேக்குறாருல்ல... சொல்லுடா ! "

நக்கலாய் என் நண்பன் !

" இல்ல சார்... படிக்கத்தான் ! "

அவர் என்னை பார்த்ததின் அர்த்தம் மட்டும் இன்னும் விளங்கவில்லை !

சில நாட்கள் கழித்து மற்றொரு புத்தக கண்காட்சியின் விளம்பரம் கண்டேன்... இந்த முறை சற்றே பெரிய கடை.

தி.ஜானகிராமனின் புத்தகங்கள் இருக்கிறதா எனக்கேட்டேன்...

" நிச்சயமாய் இருக்கும் சார்... தோ அங்க பாருங்க ! "

 கை காட்டினார் கடை முதலாளி...

அவர் காட்டியது கண்காட்சி புத்தகங்கள். கிழக்கு பதிப்பக வெளியீடுகள். எனக்கு தெரிந்து தி.ஜானாகி ராமனின் படைப்புகளை கிழக்கு பதிப்பகம் வெளியிடவில்லை. ஆனாலும் ஜெயமோகனின் சில புத்தகங்கள், சாரு நிவேதிதா என அள்ளிக்கொண்டு வந்தேன்.

" கிடைச்சிதா சார் ? "

நான்கு இலக்கத்தில் நான் செலுத்திய தொகை கொடுத்த மகிழ்ச்சியில் கேட்டார் கடைக்காரர்.

" ஜானகிராமன் இல்லீங்களே... "

" சார் ! ரொம்ப கஸ்ட்டமர்ஸ் ஜானகிராமன் கேக்குறாங்க சார் ! வாங்கி போடுங்க சார் ! "

நான் முடிக்கும் முன்னரே குறுக்கிட்ட கடைப்பெண்னை பார்த்தாரே ஒரு பார்வை... நல்லவேலை அவரது நெற்றிக்கண் திறக்கவில்லை ! அந்த கோபத்துக்கு கடைப்பெண் மட்டுமல்லாது புதகங்களுடன் சேர்ந்து நானும் எரிந்திருப்பேன் !

 இவ்வளவு புலம்பினாலும் புத்தக கண்காட்சிகள், வலைப்பூ சமூகம் என வாசிப்பின் ரசனை நிறைய உயர்ந்திருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்றாலும் வாசிப்பில் நம் சமூகம் கடக்க வேண்டிய தூரம் இன்னும் மிக மிக அதிகம் !
ஜெயமோகன்


ன்னும் தலைப்பை தொடவில்லையே ?... விடாது துரத்திய விஷ்ணுபுரம்...

நீண்ட நாட்களாய் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலை வாங்க ஆவல். விகடன் பிரசுர கடைக்காரரிடம் கேட்டபோது வரவழைத்து தருகிறேன் என்றார். சில நாட்களில் இருப்பு இல்லை என கைவிரித்துவிட்டார். இரண்டாம் கடைக்காரரோ அப்படி ஒரு புத்தகமே இல்லை என சாதித்துவிட்டார் ! நான் சென்ற ஒரு மாத காலத்தில் சென்னை போன்ற நகரங்களுக்கு செல்ல நேரமில்லை !

குடும்ப நண்பர் ஒருவருடன் எனக்கு வீடு கட்டித்தந்த பொறியாளரின் வீட்டுக்கு சென்றிருந்தேன்....

வீட்டு ஹாலில் நான் தேடிய விஷ்ணுபுரம் !

" என் பொண்ணு படிப்பா சார் ! "

என்றவர், அவரது மகளை கூப்பிட்டார்.

இருபதிலுள்ள அந்தப்பெண் விஷ்ணுபுரம் படிப்பதை அறிந்து ஆச்சரியப்பட்டுக்கொண்டே எங்கு வாங்கினாள் என்று கேட்டேன். ஒரு இணைய தளத்தின் பெயரை குறிப்பிட்டது அந்தப்பெண். இன்றைய இளைய தலைமுறையினர் முகநூலுக்கு மட்டுமே லாயக்கு என நான் நினைத்துகொண்டிருந்ததை பொய்யாக்கினாள் அந்தப்பெண் !

ஊர் திரும்ப சில நாட்களே இருந்தன. இணையம் மூலம் வரவழைக்க நாட்கள் போதாது. அதுமட்டுமல்லாமல் எனது ஐரோப்பிய வங்கி அட்டையின் மூலம் இந்தியாவில் பணம் செலுத்த சில நடைமுறை சிக்கல்கள் !

சரி, இந்த முறையும் விஷ்ணுபுர தரிசணம் நமக்கு கிட்டாது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்...

ஊர் திரும்ப போவதை சொல்லிக்கொள்ள எனது ஆசான் திரு. மைக்கேல் ஜோசப் அவர்களை காண சென்றேன்...  ( நான் படித்த பள்ளியின் ஆதர்ஷம் அவர் ! அந்த நல்லாசிரியரை பற்றி சொல்ல நிறைய இருப்பதால் வேறொரு பதிவிடுகிறேன் !  )

எங்கள் பேச்சு வழக்கம் போலவே புத்தகங்கள், வாசிப்பு என ஓடியது.

" யோவ் ! இருய்யா... ஒரு புக் இருக்கு... உனக்கு பிடிக்குமான்னு தெரியல... ! "

சட்டென புத்தக அலமாரியிலிருந்து எடுத்து நீட்டினார்...

விஷ்ணுபுரம் ! 848 பக்க நாவல் !

" சார்... நான் இன்னும் ரெண்டு நாள்ல... "

" பரவாயில்லய்யா... எடுத்துக்கிட்டு போ ! நான் படிச்சிடேன்... இதைப்பத்தி நிறைய பேசனும்... முதல்ல படி ! "

இப்படியாக  விடாது துரத்தி என்னை வந்தடைந்தது விஷ்ணுபுரம் !

கல்லூரி ஒன்றில் தான் உரையாற்றியபோது ஒரு மாணவர் எழுந்து எல்லோரும் புரிந்து கொள்வது போல இலகுவான நாவலாக விஷ்ணுபுரத்தை ஏன் எழுதவில்லை என தன்னை கேட்டதற்காக எரிச்சல் அடைந்ததை தனது மற்றொரு நூலில் குறிப்பிட்டிருந்தார் ஜெயமோகன்...

தமிழின் சிறுவர் இலக்கியத்துக்காக மட்டுமே தன் வாழ்நாளை அர்ப்பணித்த வாண்டுமாமா என்ன ஆனார் எனத் தேடாமல், நடிகையின் நாபிச்சுழிக்கு டூப் போட்டது உண்மையா என கலந்துரையாடல் நடத்தும் ஊடங்களை கொண்ட சமூகத்து இளைஞனுக்கு விஷ்ணுபுர காலச்சக்கரம் எப்படி புரியும் ?!




இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

Friday, December 5, 2014

ஒரு ரோஜா மலர்ந்த நொடி !

ந்த முன்னறிவிப்புமின்றி ஒரு மாதத்துக்கும் மேலாக வலையுலகில் சஞ்சரிக்காத இந்த சாமானியனை வலைவீசி தேடிக்கொண்டிருக்கும் நட்புகளுக்கு...

மன்னிக்க வேண்டுகிறேன் !  அனைவரும் நலம். என் நலமறிய துடித்த நெஞ்சங்களின் நலனுக்காக நாளும் பிரார்த்திப்பேன் !

Life Is a Mystery to Be Lived

என்றார் ஓஷோ !

" கண்டவர் விண்டிலார் விண்டவர் கண்டிலார் " என்ற சித்தர் வாக்கும் ஆன்மீகத்துக்கு மட்டுமல்லாது வாழ்க்கை முழுவதுக்குமே பொருந்தும் என தோன்றுகிறது !

சில ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமிய சூபி வாழ்க்கை முறையில் ஈடுபாடு கொண்ட ஒருவரிடம் உரையாடிக்கொண்டிருந்த போது பேச்சு உலக அழிவு பற்றி திரும்பியது !

" உலகின் இறுதி நாளை பற்றி குறிப்பிடாத மதங்கள் இல்லை...விஞ்ஞான உலகமும் உலகின் முடிவை பற்றி ஏதேதோ கூறுகிறது.... எல்லாமே அதிர்ச்சியான செய்திகள்தான் ! மனித சுவடே மறைந்துவிடும் அதிர்ச்சி ! ஆனால் அந்த நாளை பற்றிய இயற்கையின்  ரகசியத்தை முன்னால் கண்டறிய முடியாது... இந்த பூமி அழிய நேரும் நாளில், அந்த இடத்தில் அச்சு அசலாய் வேறொரு பூமியை நிலை நிறுத்தும் சாத்தியத்தைகூட இறைவனால் நிகழ்த்த முடியும் " என கூறினார்  அவர்.

( " இறைவன் இல்லை என்று கூறவில்லை, இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் கூறுகிறேன் " கட்சியை சார்ந்தவர்கள் இறைவனுக்கு பதில் இயற்கை என மாற்றிக்கொள்ளுங்கள் ! )

அற்புதங்களை நம்பாத ஆத்திகர்கள் கிடையாது ! நாத்திகம் பேசும் நண்பர்கள் கூட விஞ்ஞான விதிகளுக்குள்  அடங்கும் " பெரு வெடிப்பு "  ( big bang ) நிகழ்வையும், உயிர் உண்டான முதல் தருணத்தையும் அறியும் போது அற்புதம் என்றே கூவுவார்கள் !! உயிரின் தோற்றத்தையும் உலகின் அழிவையும் விடுங்கள் , நமது அன்றாட வாழ்வில் கூட வாழ்க்கை நமக்காக மறைத்து வைத்திருக்கும் ரகசியங்கள் தான் எத்தனை எத்தனை ?!  அற்புதங்கள் தான் எவ்வளவு ?!


ஜென் தத்துவத்தில் காத்திருப்புக்கு அளவற்ற முக்கியத்துவம் உண்டு. நாம் எதற்காக காத்திருக்கிறோமோ அதை அடையும் தகுதியை ஏற்படுத்திக்கொள்ள இயற்கை நமக்குகொடுத்த அவகாசமே காத்திருப்பு ! நமக்கு அந்த தகுதி ஏற்படும் நேரத்தில் அந்த அற்புதம் நிகழும்... நாம் நினைத்தது கைக்கூடும் !



நாள் தோறும் தண்ணீர்விட்டு வளர்த்த ஒரு ரோஜா செடி மொட்டுவிட்டு, சட்டென ஒரு காலையில் மலரும் அந்த தருணத்தை கண்டு கொண்டால்... விழுந்து எழுந்து, கால் முட்டிகள் தேய பழகிய மிதிவண்டி நமக்கு வசமான அந்த நொடியை நினைவில் கண்டால்... அந்த அற்புதம் புரியும் !


அப்படி ஒரு அற்புதம்தான் எனக்கும் நிகழ்ந்து... என்னையே மறக்க வைத்தது ! என்னை மறந்ததால், எழுத்தையும் மறக்க நேர்ந்துவிட்டது !

இதனை சொல்ல நான் வெட்கப்படவில்லை...

வாழ்வியல் அனுபவங்களின் மூலம், முக்கியமாய் எனக்கு நேர்ந்த அனுபவங்களின் ஊடே உலகை பார்க்க முயல்பவன் நான் ! எனது அனுபவங்கள் உங்களுக்கு ஏதேனும் நற்செய்திகளை தருமானால் அதற்காக என் வாழ்வை திறந்த புத்தகமாக விரிக்க முயல்பவன் நான் !

அற்புதம் நிகழ்ந்ததை எழுதாதவரையில் என்னால் வேறு எதையும் எழுத முடியாத நிலை... அனைத்தையும் அப்படியே எழுத வேண்டிய நேரமும் கைக்கூடவில்லை என தோன்றுகிறது....

இழக்கக்கூடாதை இழந்து, இனி ஒரு வசந்தத்துக்கு இடமில்லை என இரும்புத்திரையிட்டுக்கொண்டு இரு வேறு பாதையில் சென்றுக்கொண்டிருந்த இரண்டு இதயங்கள்...

 ஏதோ ஒரு புள்ளியில் இருவரின் பாதைகளும் ஒன்றாகிய தருணத்தில், ஒருவர் வாழ்க்கை மற்றொருவருடையதை பிரதிபலிக்கும் ஆச்சரிய அதிர்ச்சியில் திளைத்த நொடியில் அந்த அற்புதம் நிகழ்ந்தது ! அந்த இதயங்களின் இரும்புத்திரை மறைந்து மீன்டும் ஒரு வசந்தம்  ! அவர்களுக்கான வசந்தத்தில் அவர்களுக்கென்றே ஒரு ரோஜா பூத்த தருணம் !


ஆனாலும் அவர்கள் கடக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகம்.... ஆனாலும் காத்திருப்பார்கள்...  ஏனென்றால் காத்திருப்பின் முக்கியத்துவம் அவர்களுக்கு தெரியும்.

இறைவனிடமோ அல்லது இயற்கையிடமோ.... அவர்களின் காத்திருப்பின் பலன்கிட்ட உங்கள் பிரார்த்தனைகளின் கொஞ்சத்தை ஒதுக்குங்களேன் !

( தனிப்பட்ட காரணங்களுக்காக, இந்த சிறு பதிவுக்கான உங்களின் பின்னூட்டங்களுக்கு நான் பதிலிடமாட்டேன். மன்னித்தருளுங்கள் தோழர், தோழியரே ! எனது அடுத்த பதிவு மிக விரைவில். முகம் அறியாத இந்த சாமானியனிடத்தில் நீங்கள் கொண்டுள்ள நட்புக்கும் அன்புக்கும் நன்றி என்ற ஒரு வார்த்தை மட்டும் போதாது. )