Friday, April 18, 2014

தேர்தல் திருவிழா !

ந்தியாவை பொறுத்தமட்டில் தேர்தல் என்பது இத்தேசத்தை ஒன்றினைக்கும் அதன் சினிமாவை போன்றே ஆடல், பாடல், கொண்டாட்டங்களுடன், காமெடி, குத்துவெட்டு, ஆக்சன்களுடன், பெரும்பாலும் எதிர்பாராத முடிவை கொண்ட மாபெரும் ஜனநாயக திருவிழா ! உலகின் மிகபெரிய ஜனநாயக தேசத்தின் தேர்தல் அதன் உண்மையான காரணங்களுக்காக அல்லாமல் வழிதவறிய வேறுபல காரணங்களுக்காக கொண்டாடப்படுகிறது ! முக்கியமாய் அதன் மூலம் ஒரு சில மாதங்களுக்கு செழிக்கும் கறுப்பு பொருளாதாரம் !

தொண்டரடிபொடிகளுக்கு கிடைக்கும் பிரியாணி பொட்டலங்களும் தாராள டாஸ்மார்க் தீர்த்தமும் ! நடுத்தரவர்க்கத்துக்கோ டிவி பெட்டிக்கும் முன்னாலான பொழுதுபோக்கை தாண்டி,

" அஞ்சு வருசம் ஏஸியில இருந்தாலும் இப்ப எங்ககிட்ட ஓட்டு வாங்க வேகாத வெயிலில நடந்துதானே வாரீக "


என்பதான சாடிஸ்ட் மகிழ்ச்சி ! ஐந்து வருட ஏமாற்றங்கள் அனைத்தையும் ஒரே ஓட்டில் புரட்டிபோட முயலும் நப்பாசை !

எதிலும் கலக்காமல் ஒதுங்கி நின்றுகொண்டு அனைத்தையும் குறைகூறும் அறிவுஜீவிகள் !

கெள்கை என உச்சரிக்கும் தலைவரிடம் கொள்கை கேட்டு பேட்டி, பவர் ஸ்டாருக்கும் பக்கம் ஒதுக்கி கருத்து கேட்பு, எரிந்த கட்சி, எரியாத கட்சி, எரிக்கும் கட்சி என அனைத்தையும் அலசி கழுவும் மீனில் நழுவும் மீனாய் ஒரு கருத்துகணிப்பு வெளியிட்டு, இறுதி முடிவை வாக்காளரிடமே விட்டுவிடும் ஊடகங்கள் !

எரியும் கொள்ளியில் ஏதோ ஒரு கொள்ளி ஜெயித்து ஆட்சி அமைத்த சில நாட்களிலேயே டிவி தொகுப்பாளினிகள்,

" ம்ம்ம்...ஹலோ சொல்லுங்க ?! நான் அழகா இருக்கேனா.... தேங்யூ தேங்யூ ! "

என நிகழ்ச்சிகளுக்கு திரும்ப, எல்லாமே ஒரே கதைதானோ என தோன்றும் பல டிவி சீரியல்களுக்கு உச் கொட்டிய நேரம் போக, ஒரு கோடி வெல்வதிலும், தமிழகத்தின்  மாபெரும் குரல் தேடலிலும் மும்முரமாகிவிட்ட பொதுஜனம் ! கள்ளகாதலுனுக்காக கணவனை கொலை செய்த மனைவி பற்றிய பரபரப்பு செய்திக்கு நடுவே அவ்வப்போது ஊடகங்கள் அரசியல் ஊழல்களை வெளிச்சமாக்கும் நேரங்களில் மட்டுமே ஜனநாயக உணர்ச்சி தலைதூக்கும் !

சிறுவயதில் தேர்தல் பற்றிய முதல் செய்திகள் வெளியாகும்போதே எங்களுக்குள் பரபரப்பு பற்றிகொள்ளும் ! வீட்டின் பெரியவர்கள் எந்த கட்சியோ நாங்களும் அந்த கட்சி ! எங்களின் கருத்துகணிப்பு சுவர் விளம்பரங்களை வைத்துதான் ! எந்த கட்சி அதிக சுவர் விளம்பரங்களை வரைந்திருக்கிறதோ அந்த கட்சிதான் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை !

பெரிய கட்சிகளின் அலப்பறைகளுக்கு மத்தியில் எங்கள் ஊரின் அமெச்சூர் அப்பாடக்கர் வேட்பாளர்களின் அலம்பலுக்கும் பஞ்சமிருக்காது !

" நான் மட்டும் ஜெயிக்கலேன்னா தொழில் செய்ய முடியாதும்மா... ! "

எங்கள் தெருவின் பால்காரரோடு அவரின் பசுமாடும் ஓட்டு கேட்டு வரும் !

" எந்த தேர்தல்ன்னாலும் நம்ம ஓட்டு எம்.ஜி.ஆருக்குதாம்மா... ஆனா சங்க தலைவரு நின்னுட்டாருல்ல... தலைவனை ஜெயிக்க வைங்கம்மா ! "

 ரிக்சா ஓட்டுனர்கள் சங்க தலைவருக்கு ஓட்டு சேகரிக்கும் ரிக்சாக்காரர் பாண்டியன் !

அறிவு ஜீவி பைஜாமாவுடன் நண்பர்கள் புடை சூழ பவனிவரும் நந்தகுமார் அண்ணன் !

" பாட்டி இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க... காலேஜ் பஸ்சை நம்ம தெருவுக்கே திருப்பிவிடறேன் ! "


ஜன்னல் ஓரத்தில் தெரியும் வனஜாக்காவை பார்த்து பேசியபடியே நந்தகுமார் அண்ணன் கொடுக்கும் துண்டு சீட்டை வெடுக்கென பிடுங்கும் பாட்டி,

 " பஸ்சை திருப்பற முகரகட்டையை பாரு ! முதல்ல உன் மூஞ்சை திருப்பனும்டா ! "

அண்ணன் நகர ஆரம்பித்தவுடனேயே நோட்டீசை சாக்கடையில் வீசியடிக்கும் !

" யாருகிட்ட வந்து கொடுக்கற ? தேர்தல் ஆபீசர்கிட்ட சொன்னா என்ன நடக்கும் தெரியும்ல ? "

பூத் ஸ்லிப் கவரை கொடுக்கவந்தவரிடம் தாத்தா கத்திகொண்டிருக்க,

" ஐயோ... கவரு மாறிடிச்சிங்க... "

என பம்மி கொண்டிருந்தார் வந்தவர்.


சிறிது நேரம் கழித்து,

" நண்பா ! படத்துக்கு போலாமா ?! "

என்றபடி வந்த எதிர்வீட்டு காதரின் சட்டை பையில் நீட்டிகொண்டிருந்தது இருபது ரூபாய் தாள் !

" எங்க வீட்டுக்கு வந்த பூத் ஸ்லிப் கவரை நான் வாங்கிட்டேன் ! "

என்றபடி காலரை தூக்கிவிட்டுக்கொண்டான் !  ! தாத்தாவின் கோபத்துக்கான காரணம் அப்போதுதான் புரிந்தது !  எங்களுக்கு " பணநாயகம் " அறிமுகமான நாளது !

ஏதாவது ஒரு பெரிய கட்சியின் வேட்பாளர்தான் எங்கள் தொகுதியில் ஜெயிப்பார். ஜெயித்தது யாராக இருந்தாலும் நன்றி சொல்ல ஊர்வலம் வருபவரை நிறுத்தி பெரிய மாலை ஒன்றை போட்டுவிடுவார் தாத்தா !

" ம்ம்ம்... இனிமே அஞ்சு வருசத்துக்கப்புறம் ஓட்டுகேட்டுதான் வருவ... ஏதாச்சும் நல்லதா பண்ணு ! "

தாத்தாவின் லொல்லுக்கும் பெரிய கும்பிடாய் போட்டுவிட்டு போனவர் அநேகமாய் அடுத்த தேர்தலின்போதுதான் திரும்புவார் !

" என்னா...? உம்ம குடும்பத்துக்காரன் மொத்தமா போட்டிருந்தாகூட அதிக ஓட்டு கிடைச்சிருக்கனுமே ? "

தாத்தாவின் கேள்வியையே காதில் வாங்காதவர்போல பாலை ஊற்றிவிட்டு ஓடுவார் பால்காரர் !

ரிக்சாக்காரர் பாண்டியன் ஒரு வாரத்துக்கு யாருடனும் பேசமாட்டார் !

" என்னாடீ ? இவ்ளோ கம்மி மார்க்கு ? "

ரவிகடை வாசலில் சிகரெட் பிடிக்கும் நந்தகுமார் அண்ணனை கடைக்கண்ணால் பார்த்தபடியே எக்ஸாமே நடக்காத சமயத்தில் மார்க்கை பற்றி பேசும் வனஜாக்கா !

" நாமெல்லாம் யூத்துடா... இன்னும் காலம் இருக்குடா வெல்ல ! "

டி.ராஜேந்தர் பாணியில் நண்பனிடம் சிலும்புவார் அண்ணன் !

தேர்தலின் இறுதி முடிவு தெரிந்த சிறிது நேரத்தில் தன் ஸ்கூட்டரில் ஜெயித்த கட்சியின் கொடியும் மாலையுமாய் கிளம்பிவிடுவார் லோக்கல் காண்ட்ராக்டர் !

" நம்ம பிழைப்பு ஆட்சியில இருக்கறவங்களாலதானே ! என்ன நான் சொல்றது ? "

என சில நாட்களுக்கு பார்ப்பவர்களிடமெல்லாம் கூறிக்கொண்டு திரிவார் !

" டேய் ! அங்கன பாருடா ! நாமதான் கட்சிகட்டி அடிச்சிக்கிட்டிருக்கோம்... அவங்க பிரெண்ட்ஸ்தான்டா ! தேர்தல்ல எப்டி திட்டிக்கிட்டாங்க... "

கல்யாண வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிகொண்டிருந்தபோது கீழே ஒதுக்குபுறமாய் தோளில் கைபோட்டு பேசிக்கொண்டிருந்த ஜெயித்த எம் எல் ஏவையும் அவரிடம் தோற்ற கட்சியின் பிரமுகரையும் காட்டி எங்களுக்கு ஜனநாயக அரசியல் ஒற்றுமையை அறியவைத்தான் பாலகிருஸ்ணா !



பிரான்ஸ் நாட்டின் தேர்தல் எனக்கு இன்றுவரை ஆச்சரியம் ! அதிபர் தேர்தல் அறிவிக்கபட்ட பிறகு தொலைக்காட்சியும், பத்திரிக்கைகளும் மட்டுமே களைகட்டும். கட்சிகளை பற்றியும் கட்சிகளின் தலைவர்கள், அவர்களின் கொள்கைகள் பற்றியும் அரசியல் வல்லுநர்களுடன் கலந்துரையாடல் நடக்கும். முதல் வாரம் நீல கட்சி என்றால் அடுத்த வாரம் பாராபட்சமின்றி ரோஸ் கட்சி பற்றிய கலந்துரையாடல். இங்கே அம்மா, அய்யா, டாக்டர், கேப்டன் அனைவருக்குமே அரசு தொலைக்காட்சியில் ஒரே அளவு அலவன்ஸ் நேரம்தான் ! தினசரி, வார, மாத இதழ்களிலும் அதே !

தேர்தல் நெருங்க, நெருங்க கட்சிகளின் பெரிய தலைகள் தொலைக்காட்சி பேட்டிகளில் தோன்றுவார்கள். பேட்டியின் நடுவே பிடிக்காத கேள்விக்கு எழுந்து போவதெல்லாம் சாத்தியப்படாது ! தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அதிபரும், அவரை எதிர்த்து பிரதானமாய்  போட்டியிடுபவரும் அடுத்தடுத்து பேட்டியளிப்பார்கள். இருவருக்கும் ஒரே நேரம். பேட்டி காண்பவர் அதிபரை Monsieur le President ( Mister President ) என்றே விளிப்பார் ! உச்சகட்டமாய் இரு வேட்பாளர்களும் நேருக்குநேர் பங்கேற்கும் விவாதம். நொடிகளை முதற்கொண்டு கணக்கிட்டு இருவரும் பேசுவதற்கு சம உரிமை !

ஊர் சந்தைகளில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகிப்பது மட்டுமே தன்னார்வலர்கள் என விளிக்கப்படும் தொண்டர்களின் வேலை. பெரும்பாலும் அனைத்து கட்சியினரும் ஒரே இடத்தில் நின்று அவரவர் கட்சியின் பிரசுரங்களை விநியோகிப்பார்கள். சோடா பாட்டில்களெல்லாம் பறக்காது ! நகராட்சி மண்டபங்களில் ஆளுக்கு ஒரு வாரம் என கட்சியினர் கூட்டங்களை ஏற்பாடு செய்வார்கள். நூறு இருநூறு பேர் அமரக்கூடிய மண்டபங்களின் பெரும்பகுதி காலியாக இருக்கும். பேச வரும் தலைவர் கோபித்துகொண்டெல்லாம் போக மாட்டார் !

தேர்தல் இரண்டு கட்டமாக நடக்கும்.தேர்தல் நாளில் ஊர்களின் அனைத்து பள்ளிகளும் வாக்குச்சாவடிகளாக மாற்றப்பட்டிருக்கும். பூத் அதிகாரி, கட்சிகளின் பிரதிநிதிகள், மற்றும் இரண்டு பொது சாட்சிகள் தவிர ஈ காக்காய் இருக்காது ! சாதாரண நாட்களில் தென்படும் போலீஸ் தலைகளை கூட அன்று காணமுடியாது. முதல் சுற்றில் ஐம்பது சதவிகிததுக்கும் அதிகமாக ஒருவர் வாக்குகள் பெற்றால், அவர் வெல்வார். இல்லயென்றால் அதிக வாக்குகள் பெற்ற முதல் இரண்டு பேர் அடுத்தகட்ட தேர்தலுக்கு போட்டியிடுவார்கள். மற்ற கட்சிகள் தங்களின் கொள்கைகளுக்கு ஏற்றபடி இருவரில் ஒருவரை ஆதரிக்கும் அல்லது அவரவர் விருப்பத்துக்கு தேர்வு செய்யும்படி தம் கட்சியினரை அறிவுறுத்தும் !

நான் வேலை பார்க்கும் கம்பெனியின் எல்க்ட்ரீசியன் ஆளும்கட்சியின் நீல கலர் உறுப்பினர் அட்டையை பாக்கெட்டில் சொருகியிருப்பான். ஒரு வருடத்துக்கு முன்னால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு வந்தவனின் பாக்கெட்டில் ஆட்சியை பிடித்த ரோஸ் கட்சியின் உறுப்பினர் அட்டை !

" இனி நாலு வருசத்துக்கு இதுதான் ! "

என அவன் கண்ணடிக்க, எனக்கோ எங்கள் ஊர் லோக்கல் காண்ட்ரக்டரின் ஞாபகம் !


" அவனா நீயி ?! "

என மனதுக்குள் வடிவேலு அங்கலாய்த்தார் !

 இன்னைக்கி சல்தா ஹைன்னு தேசிய புலம்பலா இருக்கறத நம்ம கவுண்டர்தான் அன்னைக்கே சொல்லிட்டாரே....

" அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா ! "

Tuesday, April 1, 2014

காசு, பணம், துட்டு... !






ங்கள் ஊரில் அரவிந்த்சாமி மெடிக்கல்ஸ் மிகவும் பிரபலம். இந்தியன் மெடிக்கல்ஸ் என உரிமையாளர் தேசப்பற்றுடன் பெயர் வைத்திருந்தாலும் அரவிந்த்சாமி மெடிக்கல்ஸ் என்றால்தான் யாருக்கும் புரியும் ! ரோஜா படம் வெளிவந்த சமயத்தில் அந்த கடை திறக்கப்பட்டது. உரிமையாளர் அச்சுஅசல் அரவிந்த்சாமி போலவே இருப்பார் ! இப்போது பெயர்க்காரணம் புரிந்திருக்கும் தானே ? இன்னொரு விசயம், பெரும்பாலானவர்களுக்கு நான் உட்பட அவரின் இயற்பெயர் தெரியாது ! நான் இந்த மெடிக்கல்ஸை பற்றி கூறப்போவது உரிமையாளர் அரவிந்திசாமி போல இருப்பார் என்பதற்காக அல்ல, அவரின் குணத்துக்காக ! எந்நேரமும் வாடிக்கையாளர்கள் நிறைந்திருக்கும் கடையில் பம்பரமாக சுழல்வார் அரவிந்த்சாமி. கடையில் பலர் வேலை செய்தாலும் ஒவ்வொருவரின் மருந்து தாளையும் தானே சரிப்பார்த்த பின்புதான் அனுப்புவார்.

" என்னம்மா அவசரம் ?! மருந்து கடையிலேயும் பரபரக்கறீங்களே... கொஞ்சம் இருங்க... எப்படி சாப்பிடனும்ன்னு எழுதி தரேன்... "

" ஏன் சார் ? வயித்துவலின்னு மாத்திரம்தானே சொன்னீங்க... அதுக்கு ஏன் இந்த மருந்தை எழுதியிருக்கார் டாக்டர் ! ஒரு நிமிசம் சார் ! அவர்கிட்டயே போன் பண்ணி கேட்டுடறேன்... மெடிசின்ல கரெக்ட்டா இருக்கனும் சார் ! "

மிகுந்த சிரத்தையுடன் கவணிப்பது மட்டுமல்லாமல் தன் கடையின் வாடிக்கையாளர்கள் அனைவரையும் பெயருடன் ஞாபகம் வைத்திருப்பார்.

இதெல்லாம் இருபது வருடங்களுக்கு முன்னால் ! சென்ற ஆண்டு ஊருக்கு சென்றிருந்தேன்...  வழுக்கை தலையும் தொப்பையுமாக அரவிந்த்சாமி ! கடையில் வழக்கம் போலவே கூட்டம். கடை பையன்கள் மருந்து விற்பனையில் மும்முரமாக இருக்க, அரவிந்த்சாமியோ செல்போனில் படுபிஸி !

" ம்ம்ம்... சொல்லுங்கம்மா ! வோடா போனுக்கு அம்பது ரூபாவா... இப்ப டாப் அப் ஆயிடும் ! "

" ஹலோ... சொல்லுங்க ! "

தன் முன்னால் பெரிய நோட்புக்குடன் செல்போன் டாப் அப் பிசினஸில் ஆழ்ந்திருந்தார் அரவிந்த்சாமி !

" வாங்க தம்பி ! பாத்து ரொம்ப நாளாச்சில்ல...? விலைவாசியெல்லாம் ரொம்ப ஏறிடிச்சி... எவ்ளோ சம்பாதிச்சாலும் பத்த மாட்டேங்குது ! அதான் சைடுல செல்போனும்... "

" ஏம்பா இந்த மருந்து சரிதானே ? "

" நம்ம கடை பையன் சரியாதாம்மா கொடுப்பான்.... போயிட்டு வாங்கம்மா ! "

என்னை பார்த்ததும் தானாக பேச ஆரம்பித்தவர், மருந்தை சரிபார்க்க கேட்ட மூதாட்டியை அவசரமாய் அனுப்பிவிட்டு மீன்டும் டெலிபோனை கையிலெடுத்தார் !

ற்றொரு நண்பர்...

முறுக்கு, சீடை என வீட்டிலேயே தயார் செய்து விற்க ஆரம்பித்து, படிப்படியாய் முன்னேறி பேக்கரி ஆரம்பித்தார். நல்ல வியாபாரம். சில ஆண்டுகளிலேயே சொந்த வீடு, கார், என வளர்ந்தார்.

" சைடுல ரியல் எஸ்ட்டேட் பண்ணலாம்ன்னு இருக்கேன்.... "

" ஏங்க ? பேக்கரி நல்லா போயிட்டிருக்கு... அதை பார்க்கவே நேரம் இல்லன்னு சொல்லுவீங்க... ? இப்ப எதுக்கு சமந்தம் இல்லாம ரியல் எஸ்ட்டேட் ? "

தனக்கு தெரிந்த தொழிலில் தான் இறங்க வேண்டும் என அடிக்கடி கூறும் அந்த நண்பரிடம் கேட்டேன்.

" என்ன செய்ய சொல்றீங்க ? பேக்கரி வருமானத்தை காட்டி வீட்டு லோன், கார் லோன்னு எல்லம் வாங்கியாச்சி... இந்த தொழில்லை மட்டும் நம்பினா எல்லாத்தையும் சரிக்கட்ட முடியாதோன்னு பயமா இருக்கு... அதான்... இப்ப ரியல் எஸ்ட்டேட் நல்லா போகுதில்லா ?! "


நுகர்வோர் கலாச்சாரமயமாகிவிட்ட இன்றைய உலகின் தலையாய பிரச்சனை பணப்பற்றாக்குறை.

" எவ்வளவு சம்பாதித்தாலும் பத்த மாட்டேங்குது ! "

என்பதுதான் அனைவரின் புலம்பலாகவும் இருக்கிறது. நமது பணப்பற்றாக்குறைக்கு விலைவாசி உயர்வு மட்டும்தான் காரணமா ? கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் சர்வதேச காரணங்களால் பணவீக்கம் அதிகமாகி அத்யாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது உண்மைதான் என்றாலும் இது மட்டுமே காரணம் கிடையாது. நமது பெற்றோர்களின் காலத்தில் பத்து, இருபது பைசாவுக்கு கிடைத்த தேனீர், நமது பால்யத்தில் எட்டணா, ஒரு ரூபாயாகி இன்று ஐந்து, பத்து ரூபாயாக உயர்ந்துவிட்டது என்றாலும் விலையேற்றம் என்பது காலபோக்கில் அதிகமாகி கொண்டிருப்பதுதான் ! ஆக, நமது இன்றைய பற்றாக்குறை பட்ஜெட்டுக்கு விலைவாசியை தாண்டிய காரணம் நாளுக்கு நாள் அதிகமாகும் தேவைகள் ! நமக்கு தேவையில்லாத பொருட்கள் கூட அன்றாட வாழ்க்கைக்கு அதிமுக்கியம் என விளம்பரம் செய்யப்பட்டு நம் தலையில் கட்டப்படுகின்றன. நாங்கள் தயாரிக்கும் பொருட்களை உபயோகிக்காவிட்டால் கெளரவகுறைச்சல் என்ற தொனியில் அமைகின்றன விளம்பரங்கள். சிகப்பழகு க்ரீம் பூசினால் மட்டுமே மற்றவர்களால் ஈர்க்கப்படுவீர்கள் எனத்தொடங்கி அதிநவீன ஸ்மார்ட்போன் இருந்தால் மட்டுமே நண்பர் குழாம் சாத்தியம் என்பது வரை போகும்  இந்த விளம்பரங்களால், அதிகமாய் விளம்பரம் செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படும் பொருட்களை வாங்குவதே சிறப்பானது என்ற எண்ணம் சமூகத்தின் அனைத்து மட்டத்திலும் படிந்து வருகிறது.


இந்திய சுதந்திரத்துக்கு முன் தேயிலையும், காபிபொடியும் இலவசமாக விநியோகிக்கப்பட்டதாக கூறூவார்கள்.ஒரு கிராமத்தில்  முதன் முதலாய் " தேத்தண்ணி " குடித்துவிட்டு பெரும்பாடுபட்டு இந்த சனியனே வேண்டாம் என அவர்கள் தேயிலையை குப்பையில் வீசுவதை தனது கோபல்லபுரத்து மக்களில் விவரித்திருப்பார் கரிசல் இலக்கியத்தந்தை கி.ராஜநாராயணன். நம் முன்னோர்கள் ஒரு காலத்தில் வேண்டாம் என ஒதுக்கிய டீயும் காபியும் நம் ரத்த ஓட்டமாகவே மாறிப்போனதற்கு  காரணம், இலவசமாய் கொடுத்து பழக்கி, பழகியபிறகு விடமுடியாமல் விலைக்கு வாங்க வைக்கும் மேல்நாட்டு வணிக உத்தி ! அதே உத்தி இன்று செல்போன் முதல் கம்ப்யூட்டர் வரை அனைத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. முதலில் உபயோகித்து பாருங்கள் ! பின்னர் வாங்குங்கள் !

தேவைப்படாது என்றுதான் வாங்கினேன் ஆனால் உபயோகித்து பழகிவிட்டேன்... பண்ணையாரும் பத்மினியும் கதையாகிவிட்டது ! ஆனால் உடனடியாக வாங்க கையில் காசில்லை...

இருக்கவே இருக்கின்றன கிரெடிட் கார்டுகள், பல முறை தவனை திட்டம் இத்யாதி, இத்யாதி ! இவைகளையெல்லாம் நம் தலையில்கட்ட டை கட்டிய இளைஞர்கள், நுனிநாக்கு ஆங்கில பெண்கள் !

" உங்களின் மாத வருமானம் இவ்வளவு வருகிறதே.... இந்த வருமானத்துக்கு இவ்வளவு கடன் தருவோமே... வட்டியும் குறைவு.... "

தேன் தடவிய பேச்சுகள் !

 இன்றுராமாயணத்தை எழுதியிருந்தால் கடன் படாதோர் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கைவேந்தன் என எழுதியிருப்பான் கம்பன் !. இன்று வீட்டுமனை கடன், கார் கடன், கம்ப்யூட்டர் கடன் என லோன்களை சேர்க்காத மனிதன் பிழைக்கத் தெரியாதவன் என்ற மாயையை வியாபார நிறுவனங்கள் ஏற்படுத்திவிட்டன ! பெரும் தொழிலதிபர்கள் கூட கடன் வாங்கிதான் தொழிலை பெருக்குகிறார்கள், நமது தேசமே உலக வங்கியிடம் கடன் வாங்கிதான் வளர்ச்சியடைகிறது என வியாக்கியனங்கள் !


அனைத்தும் பணக்காரர்களுக்கு மட்டும்தானா ? நடுத்தர மக்கள் அவர்களுக்கு தேவையானதை தவனையில் வாங்குவது தவறா ?

அந்தப் பொருட்கள் நமக்கு உண்மையாகவே உபயோகமாகும் என்றால் நிச்சம் தவறில்லை. ஆனால் நாம் வாங்கும் அனைத்து பொருட்களும் உண்மையிலேயே நமது தேவைக்காக தானா ? அடுத்த வீட்டிலும், எதிர் வீட்டிலும் கார் வாங்கி விட்டார்கள் என்று நாமும்  தவணையில் வாங்கி போர்டிகோவில் நிறுத்திக்கொள்கிறோமே ! வீட்டுக்கு இரண்டு தெரு தள்ளி வேலையில் இருக்கும் நமக்கு கார் உபயோகப்பட போவதென்னவோ மாதத்தில் ஒன்றிரண்டு முறைதான் ! ஒரு ஸ்மார்ட்போன் வாங்கிய ஆறுமாததுக்குள்ளாகவே மற்றொரு புதிய மாடல் வெளிவர, சந்தைக்கு புதுசை வைத்திருந்தால் தான் மவுசு என வாங்க ஓடுகிறோமே ! நமது ஸ்மார்ட்போனின் அனைத்து செயல்பாடுகளும் நமக்கே தெரியாது ! அவை நமது அன்றாட வாழ்க்கைக்கு தேவையும் கிடையாது ! வாங்கியதால் பழகிக்கொள்கிறோம், பழகியதை விடமுடியவில்லை. இதுதான் பிரச்சனை.

வரவு எட்டணா செலவு பத்தணா என்பதை பெருமையாக கருத தொடங்குவதுதான் ஆபத்து. நமது வருமானம் இவ்வளவுதான் என அறிந்து, அதில் அத்யாவசிய தேவைகளுக்கு ஒதுக்கியது போக மீதியை செலுத்தும் வகையில் நமது கடன்கள் அமையும்வரை பிரச்சனை ஒன்றும் இல்லைதான். வருமானத்தை கணக்கு பார்த்து செலவு செய்த காலம் போய் செலவை ஏற்படுத்திகொண்டு வருமானம் ஈட்ட முயல்வதுதான் ஆபத்தாகிவிடுகிறது ! செய்யும் தொழிலில் கவணம் செலுத்தி, லாபம் பார்த்து மகிழ்ச்சியாய் வாழ்வதற்கும் லாபம் மட்டுமே குறிக்கோளாய் ஓடி களைத்து நிம்மதி இழப்பதற்கும் நிறைய வித்யாசம் உண்டு.

மால்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், கடைகள் தாண்டி கணினி வழியே நம் வீட்டு அறையிலேயே நுகர்வுப்பொருட்கள் அவிழ்ந்து இறையும் இன்றைய காலக்கட்டத்தில் நமது பர்ஸை பத்திரப்படுத்துவது அவசியம். பொருட்களின் தரத்தை பார்க்கும் அதே நேரத்தில் அந்த பொருள் நமக்கு அவசியம் தேவையா என்பதையும் அலசி ஆராய வேண்டியிருக்கிறது. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் என்பது எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ, இன்றைய விளம்பரங்களுக்கு நிச்சயம் பொருந்தும் !

கடன் கொடுக்க கோட், டை அணிந்த பேங்க் ஆபிசர் வருவார்... அந்த கடனை கட்டமுடியாவிட்டால் கடைசியில் கோர்ட் அமீனா வருவார் என்பதை நினைவில் வைத்துகொண்டால் வரவுக்குள் செலவு செய்து சுகமாய் வாழலாம் !

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.






Sunday, March 9, 2014

" வட்டியும் முதலும் " ராஜுமுருகன் !

ண்பர் ராஜுமுருகன் அவர்களுக்கு,

வணக்கம் ! ... நண்பர் என ஆரம்பித்தாலும் வட்டியும் முதலும் படித்த லட்சக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன் என்பதை தவிர உங்களுக்கும் எனக்கும் எந்த அறிமுகமும் கிடையாது ! ஏதுமற்ற பருவத்தை அனுபவித்த கடைசி தலைமுறை, தமிழ் காமிக்ஸின் பொற்காலத்தில் வளர்ந்தது, பிட்டுபட கிளுகிளுப்பு என் பால்யம் கிளறிய உங்களின் எழுத்துகளை படிக்கும்போது நீங்களும் என்னை போலவே எழுபதின் இறுதியிலோ அல்லது என்பதின் ஆரம்பத்திலோ பிறந்தவராகத்தான் இருப்பீர்கள் என தோன்றியது... மேலும் என் சக வயதையொத்த மனிதனுக்கு இத்தனை வாழ்வியல் அனுபவங்களா ? இவனால் மட்டும் எப்படி பிளாட்பார கழைக்கூத்தாடி முதல் பங்களா பணக்காரன் வரை அனைத்து மனிதர்களிடமும் மறைந்திருக்கும் மானுடத்தை மாசற்று பார்க்க முடிகிறது என்ற வியப்பே கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் மீது கொண்ட தூரத்து நட்பாய் நண்பரே என விளிக்க வைக்கிறது !

சியில் தொடங்கி இன்பம், துன்பம்,  போராட்டம், புலம் பெயர்வு,  காதல், காமம், நட்பு, துரோகம், இளமை, முதுமை,  ஜனனம், மரணம், என உணர்வுப்பூர்வமான விசயங்கள் , சினிமா, கிரிக்கெட், டாஸ்மார்க் என மிஸ்டர் இந்திய பொதுஜனத்தின் தேசிய வலிநிவாரணிகள் வரை அனைத்தையும் பரிவு மேலோங்கும் ஒரே பார்வையில்....

வ்வொருவருக்கும் ஒவ்வொரு போதை ! உண்மைதான் !! உங்களின் போதை அனைத்து மனிதர்களுக்குள்ளும் ஒளிந்திருக்கும் மனிதம் தேடுவது !!!
ராஜுமுருகன்

நீங்கள் அறிமுகப்படுத்திய ஸ்டான்லி மருத்துவமனை பெரியம்மா தொடங்கி பெரிய சரவணன், இசபெல்லா சிஸ்டர், ஆர்.கே.வி, பத்மனாபன், ஜீ.ஆர்.வாத்தியார், பன்னீர் சார், குணசேகரன் மாமா, நடராஜன் மாமா, பரமு, சரவணன் அண்ணன், சுனிதாக்கா, அப்பார்ட்மென்ட் கட்டிட தொழிலாளர்கள், பாலியல் தொழில் செய்த பெண், டைலர், செருப்பு தைப்பவர்  என நீங்கள் பார்த்த அனைவரையும் வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு ஊர்களில் நாங்களும் சந்தித்திருக்கிறோமே ! எங்கள் ஒவ்வொருவரின் இதயக்குளத்தினுள்ளும் கீர்த்தனாக்களின் நினைவுக்கற்கள் சலனமற்று கிடக்கின்றனவே ! எப்படி முருகன் உங்களுக்கு சாத்தியமாயிற்று ? காலம் எங்களிடமிருந்து களவாடி ஏழுமலை ஏழுகடல்கள் தாண்டி யாரும் அறியமுடியாத இடத்தில்  ஒளித்துவைத்துவிட்ட எங்களின் தேவதைகள் அனைவரையும் தனிமனிதனாய் மீட்டுக்கொடுத்து, எங்களை உங்களின் வட்டியும் முதலுக்கு நிரந்தர கடனாளிகளாக்கிவிட்டீர்களே !

காத்திருப்புகள், வாழ்க்கை முழுவதும்...

உண்மைதான் முருகன் !

" காதல் கைக்கூடிய தருணத்தைவிட அந்த காதலுக்காக காத்திருந்த நாட்கள்தான் புனிதமானது " என ஒஷோ கூறியதுபோல காத்திருப்புகளால் நிறைந்ததுதானே வாழ்க்கை. எதற்காக காத்திருக்கிறோமோ அதற்கு தகுதியானவர்களாக நம்மை முற்றிலும் புடம்போட்டுக்கொள்ள காலம் அளிக்கும் வாய்ப்பு தானே காத்திருப்பு ?!

பொறுப்புகள், துயரங்கள், லட்சியவாதங்கள் ஏதுமற்ற, " ஏதுமற்ற பருவம் பற்றி ",  ஏதுமற்ற பருவம்  என்ற சொற்சேர்க்கை உப்யோகிக்காமல்  சிரீரங்கத்து தேவதைகளில் சிலாகித்த சுஜாதாவுக்கு பிறகு தமிழில் ஏதுமற்ற பருவத்தின் பெருமை போற்றியவர் நீங்கள்தான் முருகன் ! ராஜேந்திரன் அண்ணன் பெட்டிக்கடை தொடங்கி மனோ டைலர்ஸ், சன்மேக்ஸ் ரெக்கார்டிங் சென்ட்டர், நிர்மலா பெண்கள் மேல்நிலை பள்ளி, அம்மையார் காலேஜ், சாந்தி தியேட்டர், மாங்கனி திருவிழா, கந்தூரி, சந்தனக்கூடு வைபவங்கள், கிறிஸ்துமஸ் மெஸ் என எங்களுக்கும் அந்த ஏதுமற்ற பருவத்தில்தானே வாழ்க்கையின் சுவாரஸ்யங்கள் அனைத்தும் அறிமுகமாயின ! கணினி திரையும் தொலைக்காட்சி பெட்டியும் மட்டுமே வெளிஉலகுக்கான சாளரங்களாய் இருக்க, பிறக்கும் முன்பே பெற்றோர்களின் எதிர்காலத்திட்டங்களுக்குள் சிறைவைக்கப்படும் இன்றைய குழந்தைகளுக்கு நீங்கள் பயந்தது போலவே அந்த ஏதுமற்ற பருவச்சோலைகள் கிட்டாத வெற்று அறிவு அடைத்து ரொப்பிய பாலைவன வாழ்க்கைதான் கிட்டும் போலிருக்கிறது.


ல்லது கெட்டது என்ற பாகுபாடில்லாமல் நம் காலத்தின் அத்தனை தருணங்களையும் அழகான சிம்பொனி ஸ்வரங்களாய் நெய்துவிட்ட இளையராஜாவை பற்றி " அலைகடலும் அவரே ஆழ்கடலும் அவரே, அவரை பற்றி எழுதவே போரடிக்கிறது.... " என்ற உங்கள் எழுத்தில் தாயின் மடியில் படுத்துகொண்டு அவளின் தலைவருடல் சுகத்தில் மிதந்து கொண்டே " போதும் விடும்மா ! " என சிணுங்கும் செல்ல அலுப்பு !

ட் பண்ணா...

ஐரோப்பாவில், பாரீஸ் மாநகர்... பனிபடர்ந்த டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தயாராகும் மக்கள் கூட்டம்... பணக்காரர்கள் SAMARITAINE, GALLERY LA FAYETTE போன்ற பெரும் ஷாப்பிங் மால்களில் மொய்க்க, நடுத்தர மக்கள் சூப்பர் மார்க்கெட்டுகளில் வரிசையில் நிற்கிறார்கள். மால்களுக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் வெளியே கடும் குளிரை பொருட்படுத்தாது கையேந்தி நிற்கும் ஏழைகள் ! உரையாடல்களை உற்று கேட்டால்... அரசியல் நிலவரம்... வேலை பிரச்சனை... நேரமின்மை... காதல்... பிரிவு.... நம்பிகை... துரோகம்... ! கண்களை மூடினால் பூகோள எல்லைகள் தொடங்கி சாதி, மதம், மொழி, இனம், கலாச்சாரம் என அனைத்தும் மறந்துவிடுகிறது. சந்தைகளும் திருவிழா கூட்டங்களும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. தாயின் அன்பும், மழலையின் சிரிப்பும், காதலின் கிளுகிளுப்பும், பிரிவின் துயரமும், நட்பின் கதகதப்பும், துரோகத்தின் வலியும், தோல்வியின் கழிவிறக்கமும், இளமை முறுக்கும், முதுமையின் தளர்வும் உலகெங்கும் ஒரே அதிர்வைதான் ஏற்படுத்துகின்றன.

ட் பண்ணா...

பத்திரிக்கைகளில் உங்களின் குக்கூ பட ஸ்டில்ஸ்... படத்தின் ட்ரெய்லர், டீஸர் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது என்ற செய்தி... உங்களின் படம் நிச்சயமாய் தமிழ் சினிமாவை இன்னுமொரு படி மேலேற்றும். நீங்கள் நேசிக்கும் சினிமாவில் உங்களுக்கென ஒரு உயர்ந்த இடம் நிச்சயம். அது உங்களின் காத்திருப்புக்கு கிடைக்கப்போகும் வெற்றி.




ஒன்றை கவணித்தேன். எந்த செய்தியிலும் புதிய இயக்குனர் ராஜுமுருகன் என குறிப்பிடவில்லை. எழுத்தாளர், வட்டியும் முதலும் ராஜுமுருகன் என்றுதான் குறிப்பிடுகிறார்கள் ! உண்மைதான் முருகன் ! வட்டியும் முதலும் மூலமாய் எழுத்தாளராய் தமிழுக்கு மிகமுக்கியமான பங்களிப்பை தந்துள்ளீர்கள் என்றால் அது மிகையாகாது.

ட் பண்ணா...

பெருநதியின் கரையில் உங்களுடன் நாங்களும் விளையாடிக்கொண்டிருக்கிறோம்... " எதுவும் கடந்துபோகும் "  என சலசலக்கும் நதியலை... இருட்டி வெகு நேரமாகிவிட்டது...

" இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு சிசுவும் இறைவன் மனித இனத்தை கைவிடவில்லை என்பதற்கான சாட்சி " என்ற ரவீந்திரநாத் தாகூரின் வார்த்தைகள் மனதில் எதிரொலிக்கிறது...

உங்கள் கையில் பேரொளி வீசும் அன்பு விளக்கு ! தூரத்தில் விடியலின் வெளிச்சம் !

நட்புடன்
சாமானியன்.

 இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.




விகடன் பிரசுரம்
           757, அண்ணா சாலை,
    சென்னை - 600 002