Tuesday, May 6, 2014

நம்மால் முடியும் !

ன்றைய  சமூகத்தின் அனைத்து மட்டத்திலும் அடிக்கடி உச்சரிக்கப்படும் வசனம் அல்லது புலம்பல்...

" ஆமா... நாம மட்டும் யோக்யமா இருந்தா போதுமா...   நம்ம ஒருத்தரால என்ன பண்ண முடியும் ?! "

ஊழல், வன்முறை, ஜாதி மத பிரச்சனைகள் என அனைத்து சமூக பிணிகளுக்கும் நமது பதில் இதேதான் ! ஊரோடு ஒத்து வாழ் என்ற பழமொழி இன்று தவறான காரணங்களுக்காக உபயோகிக்கப்படுகிறது ! சமூகம் என்ற வார்த்தையே நம்மை சாராதது போலவும், சமூகத்தை சுத்தம் செய்யவென ஒரு தேவதூதன் ஒரு நாள் தோன்றுவார் என்ற எண்ணத்துடனும் நமது அன்றாட செயல்பாடுகள் உள்ளன !ரு ஞானி தன் மூன்று சீடர்களை அழைத்து தன் உள்ளங்கையில் இருப்பதை காட்டி அது என்னவென்று கேட்டார்...

ஏதோ பழத்தின் கொட்டை என்றான் முதல் சீடன்.

ஒரு விதை என்று இன்னும் தெளிவாக்கினான் இரண்டாவது சீடன்.

மூன்றாவது சீடனோ,

" குருவே ! உங்களின் உள்ளங்கையில் ஒரு காடு இருக்கிறது ! " என்றான் !

" நீங்கள் இந்த விதையை விதைத்தால் அது விருட்சமாகும்... அதன் கனிகளை உண்ணவரும் பறவைகள் மற்றும் சிறு விலங்குகளால் பல விருட்சங்கள் தோன்றி தோட்டமாகி மேன்மேலும் பல்கிபெருகி காடாகும் ! " என்றான்.

ல நூறு, பல்லாயிரம் மனிதர்கள் ஒன்றுகூடி அமைத்த வாழ்க்கைமுறையே சமூகம். சமூகம் ஒரு காடென்றால், தனி மனிதனும் அவன் சார்ந்த குடும்பமுமே அதன் வித்து ! நாம் வாழும் சமூகத்தில் நல்லவைகள் போலவே தீயவைகளும் ஏதோ ஒரு தனிமனிதனால் ஆரம்பித்துவைக்கபட்டதுதான் ! அதே போல அந்த தீயவைகளை அழித்தொழிக்க புறப்படுவதும் ஒரு தனிமனிதன் தான் ! அஹிம்சை போராட்டம் என்ற அறவழிப்போராட்டம் காந்தி என்ற தனிமனிதரின் சிந்தனையில் உதித்ததுதான். தீண்டாமைக்கு எதிராய் முதலில் கறுப்புசட்டை அணிந்த போது பெரியாரும் தனியர்தான் !

உதாரணமாய் லஞ்சத்தை ஒழிக்க வேண்டுமானால் நான் லஞ்சம் கொடுக்கவோ வாங்கவோ கூடாது என ஒரு தனி மனிதன் உறுதியாக இருந்தால், அவனின் குடும்பத்தை, அவன் பிள்ளைகளை உறுதியாக்கினால் அவனின் செயல் நிச்சயமாய் சமூகத்தில் எதிரொலிக்கும்.

ற்றொரு கதை...

விகடகவியின் வேடிக்கை கவிதையில் மகிழ்ந்த மன்னர் என்ன பரிசு வேண்டுமென கேட்கிறார்,

அதற்கு அந்த விகடகவி,

" நான் கேட்பதை உங்களால் கொடுக்க முடியாது மன்னா ! " என பணிவாக கூறுகிறான் !

"  என்னால் முடியாததும் உண்டோ  ? கேள் ! " என்கிறார் மன்னர்.

" பெரிதாக ஒன்றும் வேண்டாம் மன்னா... சதுரங்க கட்டத்தின் முதல் கட்டத்தில் ஒரு அரிசி மூட்டையை வைத்து இறுதிவரை ஒவ்வொரு கட்டத்தின் எண்ணிக்கையையும் அதே எண்ணிக்கையால் பெருக்கி இறுதியில் எத்தனை மூட்டைகள வருகிறதோ அதனை  பரிசாக தாருங்கள் ! " என கேட்கிறான்.

" இதென்ன பிரமாதம் ? "  என முதலில் ஒத்துக்கொண்ட மன்னர் பின்னர் திகைக்கிறார் !

முதல் மூட்டையானது, இரண்டாகி, அடுத்து நாலாகி, நாலாவது கட்டத்திலேயே பதினாறாக பெருகி, இறுதியில் களஞ்சியமே கொடுத்தாலும் பத்தாது என்ற எண்ணிக்கையில் நிற்கிறது !

விகடகவியின் புத்தி சாதுர்யத்துக்காக சொல்லப்படும் இந்த கதையை பற்றி தெனாலிராமன் கதை, பீர்பால் கதை, இந்திய நாடோடி கதை என பல ஆருடங்கள் இருந்தாலும், இதனுள் ஒளிந்திருக்கும் சமூகவிவியல்  கருத்து மிகவும் நுட்பமானது. ( சதுரங்கம் பண்டைய இந்தியாவின் கண்டுபிடிப்பு என்பது கொசுறு தகவல் ! )


னிமனிதனால் துவங்கப்படும் எந்த ஒரு காரியமும் முதலில் மலைப்பானதாக தோன்றுவது இயற்கை. ஆனால் விடாது முயலும் போது, அந்த தனிமனிதனுடன் மற்றொருவர் சேருவார். அந்த இருவருக்காக மேலும் இரண்டுபேர்... ஆரம்பத்தில் தேக்கநிலையில் தொடங்கும் வளர்ச்சியானது ஒரு கட்டத்தில் அதிவேகமாக பரவி முழு சமூகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம் !

ண்பதுகளில் பல சமூகவியல் விஞ்ஞானிகளால் பேசப்பட்டது " நூறாவது குரங்கு விதி "

1952ம் ஆண்டில் ஜப்பானின் ஓக்கினோவா மற்றும் கோஷிவா தீவுகளில் வாழ்ந்த குரங்குகளை பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள் அக்குரங்குகளுக்கு உணவாக சர்க்கரைவல்லி கிழங்குகளை ஹெலிகாப்டர்களிலிருந்து வீசுவது வழக்கம். ஒரு நாள் அப்படி வீசப்பட்ட கிழங்கை பொறுக்கிய ஒரு பெண்குரங்கு கடல் நீரில் அந்த கிழங்கை கழுவிட்டு தின்பதை கண்டனர். மறுநாளும் அந்த குரங்கு கிழங்கை கழுவ, அதனுடன் மேலும் சில குட்டி குரங்குகள் ! இதனை கேலி கெக்கெலிப்புடன் பார்த்துகொண்டிருக்கும் கிழ குரங்குகள் ! அடுதடுத்த நாட்களில் மேலும் பல இளம் குரங்குகள் அந்த பெண் குரங்குடன் சேர்ந்து கிழங்குகளை கழுவி விட்டு தின்ன தொடங்கின !

1952 தொடங்கி 1958 வரை ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக கிழங்கை கழுவும் குரங்குகளை எண்ணிகொண்டிருந்த விஞ்ஞானிகளுக்கு ஒரு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது....

1958ல் குரங்குகளின் எண்ணிக்கை நூறை தொட்ட நாளில்... அந்த தீவின் அனைத்து குரங்குகளும் ஒரு சேர கிழங்குகளை கழுவ கிளம்பின  ! இதையும்விட பெரிய ஆச்சரியம் அதே நாளில், அருகாமை தீவுகளில் இருந்த குரங்குகள்கூட தங்களின் கிழங்குகளை கழுவதொடங்கின !

மண் அப்பியிருக்கும் கிழங்கினை கழுவிவிட்டு உண்ணலாம் என ஒரு பெண் குரங்கின் புத்தியில் உதித்த எண்ணமானது அந்த சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட சதவித குரங்குகளுக்கு தொற்றிய பிறகு, முழு சமூகத்துக்குமான தனிச்சை  குணமாக  மாறிவிட்டது ! (இந்த நிகழ்வை  உதாரணம் காட்டி morphic resonance,  morphic fields போன்ற  கட்டுரைகளும் எழுதலாம் ! )

ஒரு வகையில் இந்த விதியின் அடிப்படையிலேயே நவீன கருத்துகணிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன எனலாம் ! ஆண், பெண், இளையவர், முதியவர், ஏழை, பணக்காரன் என ஒரு சமூகத்தின் அனைத்துமட்டங்களிலிருந்தும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தவர்களின் கருத்தை கேட்டு அதனை கணிதவிதிகளுக்கு உட்படுத்தி முடிவு தீர்மானிக்கப்படுகிறது ! ( ஆனால் நீங்கள் கருத்து கேட்பவர் உண்மை பேச வேண்டும் ! உட்டாலக்கடி என்றால், " என்ன நடந்துச்சி... நான் அவர்கிட்ட கேள்வியை கேட்டேன்... " என நடுவுல கொஞ்சம் பக்கம் காணாமல் போய், கணிப்பு தவறாகிவிடும் ! )

னி இந்த கட்டுரையின் கருவுக்கு வருவோம்...

லஞ்சம் கொடுக்கவும் மாட்டேன், வாங்கவும் மாட்டேன் என ஒரு தனிமனிதன் உறுதியாக நின்று, அதே எண்ணத்தை அவனை சார்ந்த யாராவது ஒரு நபருக்கு தோற்றுவிப்பாரானால்... அந்த இருவர் மேலும் இருவருக்கு.... நால்வர் மேலும் நால்வருக்கு...

சில ஆயிரம் ஜனத்தொகை கொண்ட சிறிய ஊர் ஒன்றில் ஒரு நூறு பேரிடம் ஏற்படும் மாற்றத்தினால் உண்டாகும் தாக்கத்தை எண்ணி பாருங்கள்... தனிமனிதனால் எதுவும் முடியும் என்பது புரியும் ! இது கணிதம் நண்பர்களே ! கணிதம் பொய்க்காது !குடி பழக்கத்தை எடுத்துகொள்வோம்....

அரசாங்கமே விக்குது, குடிக்கறேன் என்பதை நான் குடிப்பதால்தான் அரசாங்கம் விற்கிறது என மாற்றி யோசித்து பாருங்கள் ! குடிப்பவர்களில் கணிசமானோர் குடியை நிறுத்திவிட்டால் மதுக்கடையை திறந்த அரசாங்கமே அதனை மூடவும் செய்யும் ! அதிகம் பேர் குடிக்கிறார்கள் என்ற லாபநோக்கில்தானே திறந்தார்கள் ? குடிப்பவனே இல்லையென்றால் கடை எப்படி இருக்கும் ?

தெருவில் இறங்கி கோஷமிடுவதுமட்டுமே புரட்சியல்ல ! எண்ண மாற்றம், மன உறுதி, நல்ல சிந்தனைகள்  என தனிமனிதனால் முடிந்தது அனைத்துமே ஒருவகை சமூக புரட்சிதான் ! மெளன புரட்சி ! லஞ்சமும், குடியும் உதாரணங்கள் மட்டுமே ! நாம் வாழும் சமூகத்தின் அனைத்து பிரச்சனைகளையும் சாதாரண மனிதர்களால் சரிசெய்ய முடியும் ! ஜாதிமத பேதம் பார்க்க மாட்டேன், குடிக்க மாட்டேன், ஊழலுக்கு ஆதரவாய் செயல்படமாட்டேன், என்னால் இயன்றவரை எளியவருக்கு உதவுவேன் என நாம் ஒவ்வொருவரும் உறுதியாக நின்றால், அந்த உறுதியை நம்மை சார்ந்த ஒரே ஒருவருக்கு ஊட்டினால்....அந்த ஒருவர் மற்றவருக்கு என அடுதடுத்து பரவி காந்தியும், பெரியாரும் கனவு கண்ட சமூகம் நாம் பார்த்திருக்க, இன்னும் சில ஆண்டுகளிளேயே சாத்தியமாகும் !

காந்தியாலும் பெரியாராலும் ஆரம்பிக்கபட்டது ....நம்மால் நிறைவேறும் ! !
இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

24 comments:

 1. நாம் எல்லோருமே ஒரு விஷயம் உடனடியாக முடிந்துவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரம். ஒவொருவராக ஆரம்பித்து என்று முடிவது என்ற ஆயாசம். அதுதான் எல்லோரையும் தயக்கமுறச் செய்கிறது. மேலும் நமக்கு காரியம் ஆகவேண்டும் என்றால் உடனடியாக முடிக்க சத்தமில்லாமல் சம்திங் கொடுக்கத் தயாராகவே இருக்கிறோம்! :))))))

  ReplyDelete
  Replies
  1. வேதனையான உண்மை ! லஞ்சம் உதாரணம் மட்டுமே ! அனைத்து சமூக சீரழிவுகளையும் குற்ற உணர்ச்சியின்றி ஏற்றுக்கொள்ள பழகிவிட்டோம் !

   நன்றி

   Delete
 2. மிக சரியான பதிவு இது...இந்த குரங்கு உதாரணத்தை பலரிடம் சொன்னாலும் நம்மை புரிந்து கொள்வதில்லை.ஒருத்தன் துடைத்து விட்டு சாப்பிடலாம் என்றும் ,ஒருத்தன் சோப் போட்டு சாப்பிட்டாத்தான் நல்லது என்றும் பிரிந்து தூற்றுகின்றனர்.

  தனி மனித ஒழுக்கம் மட்டுமே தீர்வாகும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.இந்த குரங்குகள் சுத்தம் செய்பவனை கொல்லும் குரங்குகளாக உள்ளதுதான் கவலைக்குரியது.

  சுவராஸ்யமான கதைகளோடு அருமையா சொன்னிங்க..அப்படியே நடந்தால் நல்லா இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. " ஒருத்தன் துடைத்து விட்டு சாப்பிடலாம் என்றும் ,ஒருத்தன் சோப் போட்டு சாப்பிட்டாத்தான் நல்லது என்றும் பிரிந்து தூற்றுகின்றனர்... "
   " தனி மனித ஒழுக்கம் மட்டுமே தீர்வாகும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.இந்த குரங்குகள் சுத்தம் செய்பவனை கொல்லும் குரங்குகளாக உள்ளதுதான் கவலைக்குரியது... "

   யதார்த்தமான, யோசிக்கவைக்கும் வரிகள் ! ஆனாலும் நாம் அனைவரும் மனது வைத்தால் சாதி, மத பேதங்களற்ற சமூகம் சாத்தியம்.

   நன்றி

   Delete
 3. உணர வேண்டிய பதிவு.

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே.

   Delete
 4. அருமையான கதைகள் மூலம் சிறப்பான கருத்தை விளக்கிய விதம் மிக நன்று

  ReplyDelete
  Replies
  1. உங்களின் முதல் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி.

   Delete
 5. சுவையான உதாரணங்களுடன், சிறப்பான கட்டுரை! மாற்றம் என்பது நம்மிடம் இருந்து தான் துவங்க வேண்டும் என்பது அனுபவத்தில் உணர்ந்த ஒன்று; எல்லா விஷயங்களிலும் மாற்றிக் கொள்ள இயலா விட்டாலும், சிறு சிறு விஷயங்களில் துவக்கி, அவற்றை என் மகனிடமும் விதைத்து வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. " மாற்றம் என்பது நம்மிடம் இருந்து தான் துவங்க வேண்டும் என்பது அனுபவத்தில் உணர்ந்த ஒன்று; எல்லா விஷயங்களிலும் மாற்றிக் கொள்ள இயலா விட்டாலும், சிறு சிறு விஷயங்களில் துவக்கி, அவற்றை என் மகனிடமும் விதைத்து வருகிறேன். "

   வாழ்த்துகள் ! இதுதான் வேண்டும். நாம் ஒவ்வொருவரும் நம்மால் இயன்ற நல்ல மாற்றங்களை நம் பிள்ளைகளுக்கும் பயிற்றுவிப்போனால் நம்மால் ஒரு தலைமுறைமாற்றமே ஏற்படும்.

   நன்றி

   Delete
 6. சாம்,
  கொஞ்சம் லேட்.
  மாற்றம் என்பது நம்மிடமிருந்து வருவது அதை மற்றவர்களிடம் எதிர்ப்பார்ப்பது வீண் என்பது என் எண்ணம். நல்ல பதிவு. தன்னம்பிக்கை தரும் எனெர்ஜி பூஸ்டர் போல இருக்கிறது உங்களது எழுத்து. பாராட்டுக்கள். மற்றபடி லஞ்சத்தை ஒழிப்பதென்பதெல்லாம் ஒரு விதமான ரம்மியமான கற்பனை.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் காரிகன் !

   " மற்றபடி லஞ்சத்தை ஒழிப்பதென்பதெல்லாம் ஒரு விதமான ரம்மியமான கற்பனை. "

   இன்றைய சமூக யதார்த்தம் உங்களின் வார்த்தைகளின்படிதான் உள்ளது !

   மற்ற எந்த சமூக சீரழிவுகளையும்விட லஞ்சம், பழக்கம் என்பதையும் தாண்டி, நம் ஜீன்களில் படிந்த தலைமுறை தொடர்ச்சியாகிவிட்டது !!!

   நூறுதவிகித ஊழலற்ற ஆட்சிமுறை உலகில் எங்கும் கிடையாதுதான். ஆனால் இந்த தேசத்தின் வித்யாசம் ஊழல்பற்றிய குற்ற உணர்ச்சி கொஞ்சமும் இல்லாமல் போனதுதான்.

   "சம்பளம் பத்தாயிரம்தான்... ஆனா மேல் வருமானமெல்லாம் சேர்த்தால் இருபது நெருங்கிடும்... ! " என லஞ்ச வருமானத்தை போனஸ் பணம் போல சொல்வதற்கு பழகிவிட்டோம் !

   கல்வித்துறையை மட்டும் எடுத்துகொள்வோம்... பணம் கொடுத்தால் காரியம் சாதிக்கலாம் என்ற நிலையில், சுமூகத்தின் வசதியற்றவர்களின் திறமை இதன் மூலம் எப்படி புறக்கணிக்கபடுகிறது என நினைத்தால் வருத்தம் மேலிடுகிறது.

   " மாற்றம் என்பது நம்மிடமிருந்து வருவது அதை மற்றவர்களிடம் எதிர்ப்பார்ப்பது வீண் என்பது என் எண்ணம்... "

   இதையே நாம் ஒவ்வொருவரும் முயற்சித்தால்...

   நன்றி

   Delete
 7. நம்மால் இதெல்லாம் முடியும் தான்.
  ஆனால் முதல் அடி எடுத்து வைக்கும் போதே சறுக்கிறதே....

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வருகைக்கு நன்றி

   முதல் அடி சறுக்கினால்தானே அடுத்த அடியை இன்னும் ஜாக்கிரதையாக எடுத்துவைக்கலாம் ?!

   " சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் " என்ற தமிழ் மூதாட்டியின் வார்த்தைகள் நம் நல்ல முயற்சிகளுக்கும் பொருந்தும்தானே !

   நன்றி
   சாமானியன்

   Delete
 8. மனிதன் தோன்றியது முதல் உள்ள பிரச்சனைதான் "தனி மனித ஒழுக்கம்". மனித இனம் அழியும் வரை தொடரப்போகும் பிரச்சனையும் கூட. சரிசெய்வது முழுவதும் சாத்தியமில்லை. சொல்லப்போனால் அது இயற்கையின் விதிக்கு முரணானது. நல்லதும் கேட்டதும் கலந்ததுதான் இயற்கை. இதை சமன் செய்ய நடைமுறையில் உள்ளதுதான் சட்ட திட்டங்கள். சட்டம் எல்லாருக்கும் பொதுவானது என்பதை சிறு வயது முதல் ஊட்டி வளர்த்தால் ஒரு வேளை மேலை நாடுகளில் உள்ளதுபோல் ஓரளவிற்கு இந்தப் பிரச்சனைகளைச் சமாளிக்கலாம்.

  இப்புடிக்காலாம் சொல்லிக்கினா நம்பளை லூசுன்றாய்ங்கபா...!

  அப்பால... சாமான்யன்... கடிசில வுங் கடியாண்ட வந்து கண்டுக்கினேம்பா...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கு நன்றி நைனா அவர்களே !

   " இதை சமன் செய்ய நடைமுறையில் உள்ளதுதான் சட்ட திட்டங்கள். சட்டம் எல்லாருக்கும் பொதுவானது என்பதை சிறு வயது முதல் ஊட்டி வளர்த்தால் ஒரு வேளை மேலை நாடுகளில் உள்ளதுபோல் ஓரளவிற்கு இந்தப் பிரச்சனைகளைச் சமாளிக்கலாம்... "

   உண்மைதான் ! ஆனால் மேலைநாட்டினரின் நல்ல பழக்கங்களையும் சேர்ந்தல்லவா நம்மவர்களில் பெரும்பாலானவர்கள் எதிர்க்கிறார்கள் ?!


   " இந்த பிஸ்கோத்து பையனையும் கண்டுகினதுக்கு தாங்ஸ்பா ! "

   நன்றி
   சாமானியன்

   Delete
 9. சாம், நல்ல விஷயங்களை சுவாரஸ்யமான மொழிநடையுடனும் அழகிய உதாரணங்களுடனும் குட்டிக்கதைகளுடனும் சொல்லியிருக்கிறீர்கள்.
  வெளிநாடுகளிலிருந்து நம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட வேண்டியது இம்மாதிரியான மனோபாவங்களைத்தான்.
  ஆனால் என்ன செய்கிறார்கள் என்றால் நாகரிகமான விஷயங்கள் என்னவோ அதனை மட்டும் இங்கே கொண்டுவந்து கடை விரித்துவிட்டு நல்ல விஷயங்களையெல்லாம் அந்த நாட்டின் எல்லைகள் தாண்டாமல் 'இவர்கள்' பார்த்துக்கொள்கிறார்கள்.
  கேட்டால் மேலைநாடுகள் எல்லாம் நாகரிகம் என்ற பெயரால் சீரழிந்துகொண்டிருக்கின்றன. கற்புநெறி காக்கப்படுவது நம்நாட்டில் மட்டும்தான் என்பதுபோல் ஏதாவது ஒன்றைச் சொல்லி இந்தியாவுக்கே உரித்தான 'கல்யாண குணங்கள்' எதுவுமே மாறாமல் பார்த்துக்கொள்கிறார்கள். அதனால்தான் பொதுவாழ்வில் இத்தனை சீர்குலைவுகள்.
  உங்களைப் போன்றவர்களின் தொடர்ந்த பரப்புரைகள் இளையதலைமுறையினரிடம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அப்புறம் குரங்குக்கதை போல் ஒட்டுமொத்த சமுதாயம் மாறினாலும் மாறலாம்.

  ReplyDelete
  Replies
  1. அமுதவன் சார் ! உங்களின் முதல் வருகை எனக்கு இன்ப அதிர்ச்சி !

   நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. பிரச்சனை என்னவென்றால் நம் " கலாச்சார காவலர்கள் " மேலை நாட்டினரின் கலாச்சாரம் என இங்கு பரப்புவதெல்லாம் அந்தநாட்டு பெருவணிக நிறுவனங்களின் நுகர்வோர் கலாச்சார உத்திகளைதான் ! இதை தாண்டி நடுநிலையான கண்ணோட்டத்தில் பார்த்தால் நமது சமூகத்தில் சீரழிவுகளும் உள்ளன, அவர்களின் கலாச்சாரத்தில் நல்ல சமூக செய்திகளும் உள்ளன !

   உதாரணத்துக்கு நீங்களே சொன்ன கற்புநெறி ! மேலைநாட்டவரிடமும் கற்புநெறி உண்டென்று நான் சொன்னால் புருவத்தை உயர்த்துவார்கள் ! ஆனால் அதுதான் உண்மை ! இதை பற்றி நிறைய எழுதலாம். எழுதுவோம், ஆரோக்யமாய் விவாதிப்போம் ! ( இதில் வேடிக்கை என்னவென்றால் ஜாதி, மத நம்பிக்கைகள் கடந்த சமூக மூட பழக்கங்களை பற்றி பெரியார் அனைத்தையும் பேசிவிட்டார் ! நாம்தான் அவருக்கும் மத எதிர்ப்பாளர் என்ற ஒற்றை முத்திரைகுத்தி ஒதுக்கிவிட்டோமே ! )

   உங்களை போன்றவர்களின் ஊக்கம் நிச்சயம் எனக்கு தூண்டுகோல்.

   நன்றி
   சாமானியன்

   Delete
 10. பல தகவல்களை (குடி உட்பட) அற்புதமாக சொல்லி உள்ளீர்கள்... பாராட்டுக்கள்...

  தளத்தை + பகிர்வை தவற விட்டு விட்டேன் என்று நினைக்காதீர்கள்... இனி தொடர்வேன்...

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் தனபாலன் சார்,

   உங்களின் பாராட்டுக்கு நன்றி.

   கடலையொத்த வலைப்பூ உலகில் என்னை போன்ற புதியவர்களின் பூக்களையும் ரசித்து ஆலோசனைகளும் வழங்கும் உங்களின் பணி நிச்சயம் பாராட்டுக்குரியது.

   விரைவில் சந்திப்போம்.

   Delete
 11. நல் முத்துகளைத் திரட்டி மாலையாக்கியிருக்கிறீர்கள். நல்ல் செய்திகளைக் கதைகள் கலந்து தந்திருக்கிறீர்கள். லஞ்சத்தை ஒழிக்கமுடியும் என்பதே என் கருத்தும். ஒழித்த அல்லது மிகமிகக் குறைத்த நாடுகள் உள்ளனவே! உங்கள் தளத்தைத் தாமதமாகப் பார்த்தமைக்கு வருந்துகிறேன். இனித் தொடர்வேன். தொடர்வோம். நன்றி நண்பரே!

  ReplyDelete
 12. ஐயா,

  தங்களின் வருகை எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி ! இன்னும் சொல்லப்போனால் இன்ப அதிர்ச்சி !!

  தங்களின் பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும், எனது பின்னூட்டத்தை தாங்கள் படித்த கணமே இந்த சிறியவனின் வலைப்பூவுக்கு வந்து வாழ்த்தியிருக்கிறீகள்.
  தங்களின் பின்னூட்டத்தை படித்ததும் இனி எழுதும் பதிவுகளை இன்னும் கவனமாக எழுத வேண்டும் என்ற (நல்ல) ஐயம் ஏற்படுகிறது !

  நன்றியுடன்
  சாமானியன்

  ReplyDelete
 13. ***அரசாங்கமே விக்குது, குடிக்கறேன் என்பதை நான் குடிப்பதால்தான் அரசாங்கம் விற்கிறது என மாற்றி யோசித்து பாருங்கள் ! குடிப்பவர்களில் கணிசமானோர் குடியை நிறுத்திவிட்டால் மதுக்கடையை திறந்த அரசாங்கமே அதனை மூடவும் செய்யும் ! அதிகம் பேர் குடிக்கிறார்கள் என்ற லாபநோக்கில்தானே திறந்தார்கள் ? குடிப்பவனே இல்லையென்றால் கடை எப்படி இருக்கும் ?****

  சாம்: இப்போ எல்லாம் பதிவர்களே குடிப்பதை சாதாரணமாக கட்டுரைகளில் எழுதுறாங்க. அதை தப்புனு சொன்னால் உங்களை பார்த்து சிரிப்பார்கள். நான் எல்லாம் சொல்லிப் பார்த்துவிட்டேன்.. குடி! அட் லீஸ்ட் அதை வந்து விளம்பரப்படுத்தாமலாவது இருனு சொல்லிட்டேன். இதிலென்ன தப்பு?னு "கவுண்டர்" வாதம் செய்றாங்க.. நாடு ரொம்ப வேகமாக முன்னேறிவிட்டது சாம். நாடுவிட்டு நாடு போய்விட்டதால், நம் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நம்மால் சரியாக உணரமுடியவில்லை. நம் சிந்தனைகள் 20 ஆண்டுகள் "பின் தங்கியே" இர்க்கிறது. நிகழ்காலத்தை (மக்கள் மனநிலையை) நம்மால் சரியாக உணர முடியவில்லை என்றே தோன்றுகிறது.

  இதுபோக அடல்ட் கார்னர், நாண்வெஜ்னு சொல்லிக்கிட்டு கேபிள் சங்கர், ஜாக்கி சேகர் போன்றவர்கள், மிகவும் அசிங்கமான போர்ன் சைட்ல வருகிற ஜோக்களை காப்பி பேஸ்ட் பண்ணி பதிவில் சேர்க்கிறார்கள். இதெல்லாம் தப்புனு யாருமே உணாருவதாகத் தெரியவில்லை. இதையெல்லாம் எடுத்துப் பேசினால் நம்ம "வில்லனாகி" விடுவோம், இதுபோல் "ஹீரோக்கள்' நிறைந்த தமிழ் உலகில்..

  ReplyDelete