Wednesday, October 15, 2014

தேங்காய்க்குள்ள பாம் !


ஆதலினால் என ஆரம்பித்து கருத்து கந்தசாமியாய் எந்த கருத்தையும் முன்வைக்காமல் வாழ்க்கையில் நடந்த  சம்பவங்களை வெறும் சாட்சியாய், பகடி  பார்வை பார்க்க முயன்றதின் விளைவே இந்த பதிவு !  மிகைப்படுத்தப்பட்டதாக தோன்றினாலும், பெயர்கள் மாற்றப்பட்டிருந்தாலும் ( அடியேன் உட்பட ! )  இந்த  பதிவில் சம்பவங்கள் மற்றும் மனிதர்கள் உண்மையே !

கோவிலுக்கு  தேங்காய் வாங்க போகும் கவுண்டமனி தேங்காய் விலை அதிகமாக இருப்பதை அறிந்து கடுப்பாகி தேங்காய்க்குள் பாம் இருப்பதாக புரளியை கிளப்பிவிட்டுவிடுவார் ! அதை  தொடர்ந்து நடக்கும் களேபரங்களும், உசிலை மணியின் புலம்பலும் கொண்ட தமிழ் சினிமாவின்  " தேங்காய்க்குள்ள பாம்  " காமெடி காட்சியை ( படத்தின் பெயர் உதயகீதம்  ) அறியாதவர்கள் இருக்க முடியாது !

மேலோட்டமாக யோசித்தால் உண்மையில் இப்படியும் நடக்குமா என தோன்றும். ஆனால் விமான நிலையம் போன்ற பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் கொண்ட, " அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் " எனத்தோன்றும் இடங்களில் நடக்கும் சில சம்பவங்களை நிதானமாக யோசித்துப் பார்த்தால் தேங்காய் பாம் காமெடி நிஜ வாழ்க்கையிலும் சாத்தியமே என தோன்றுகிறது !பிரான்ஸ் வந்து ஒரு வருடம் கழித்து முதல் முறையாக ஊர் திரும்புகிறேன்... வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்புபவர்கள் கோட் சூட்டில் தான் வந்திறங்க வேண்டும் என்ற எங்கள் ஊரின் எழுதாத விதியின் பொருட்டு நண்பன் ஒருவனுடன் பாரீஸ் மாநகரெங்கும் கோட் சூட்டுக்காக அலைந்தேன் ! ஆரம்பகால வடிவேலு போன்ற அன்றைய எனது உடல்வாகுக்கு ஐரோப்பிய அளவு கோட்டுகள் பொருந்தவில்லை ! ஒருவழியாக எதோ ஒரு கடையில் என் அளவு கிடைத்தது !

என் அளவு என்பதைவிட,

" இந்த கோட்டில் நீங்கள் அச்சுஅசல் ழாக் சிராக் போல இருக்குறீர்கள் முசியே ! "

என கடைக்காரி டன்கணக்கில் ஐஸ் வைத்து என் தலையில், சாரி உடம்பில் கட்டிவிட்டாள் என்றுதான் சொல்லவேண்டும் ! ( ழாக் சிராக் - அன்றைய பிரான்ஸின் ஜனாதிபதி ! உண்மையில் அந்த கோட் பெரியது !!  ழாக் சிராக்கின் படத்தையும் வடிவேலுவின் படத்தையும் பதிந்துள்ளேன்... அன்று அவள் சொன்னதில் நானும் உச்சி குளிர்ந்தேனே... என்னத்த சொல்ல ?! )


அம்மாவுக்கு, அப்பாவுக்கு, தம்பிக்கு, பாட்டிக்கு, சித்திகள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு , நண்பர்களுக்கு என பட்டியலிட்டு பரிசு பொருட்கள் வாங்கியதில் பெட்டியின் கணம் அதிகமாகிவிட்டது. அனுமதிக்கப்பட்ட நாற்பது கிலோவை தாண்டி இன்னும் அதிகமாக இருபது கிலோ !

பெட்டியை  எடை பார்க்கும்  இடத்திலேயே பிரச்சனை ஆரம்பம்...

இருபது கிலோவை கழித்தே ஆக வேண்டிய கட்டாயம்.... அப்படி செய்தால் ஒரு சித்திக்கு கொடுத்த பொருள் இன்னொரு சித்திக்கு இல்லாமல் பூகம்பம் வெடிக்கும் அபாயம் ( கூட்டுக்குடும்பம் சாமிகளா ! )

பரவாயில்லை... அவங்க முன்னாடி எடுத்துடு... அப்புறமா கைப்பையில வச்சிக்கலாம் ! "

பயண அனுபவமிக்க நண்பர்களின் யோசனை !

பயண நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது... கைப்பையிலோ ஏற்கனவே கணம் அதிகம்  ! இதில் எங்கே இன்னொரு இருபது கிலோவை திணிப்பது ?! முடிந்தமட்டும் திணித்து... கோட் பாக்கெட்டுகளிலெல்லாம் பொருட்களை நிரப்பிக்கொண்டு படுடென்சனாய், வழியனுப்ப வந்திருந்த தாத்தாவின் முன்னால் சட்டென குணிந்து அவரின் கால்களை பட்டென தொட்டு வணங்கினேன் !
 
" கோட்டும் சூட்டுமா விரைப்பா தாத்தாவோட காலுக்கு சல்யூட் வச்சீங்களே தம்பி... "

கூட வந்திருந்த சித்தப்பாவின் நண்பர் இன்றுவரை சொல்லிக்காட்டி கடுப்பேற்றிக்கொண்டிருக்கிறார் !

அடுத்ததாய் கைப்பயை சோதனையிடும் படலம்...

" கைத்துப்பாக்கி வைத்திருக்கிறீர்களா ?!.... "

ஸ்கேனரில் அமர்ந்திருந்த பெண் அதிகாரி சலனமற்ற முகத்துடன் கேட்க, எனக்கு தூக்கிவாரிப் போட்டது !

நொண்டிக்குதிரையாக இருந்தாலும் பரவாயில்லை... கொஞ்சம் கற்பனை குதிரையில் ஏறுங்கள் !

பங்க் கிராப்பும் வழியும் மீசையுமாய், கறுப்பாய்... ஒல்லியாய்... அவன் உருவத்துக்கு கொஞ்சமும் பொருந்தாத நான்கு பட்டன் பிளேசர் கோட் அணிந்த இளைஞன்... மேல் கீழ் பாக்கெட்டுகளிலெல்லாம் ஏதேதோ பொருட்களுடன் பிதுங்கிய கோட் ஏற்ற இறக்கமாக தொங்கிக்கொண்டிருக்கிறது ... கைப்பையில் துப்பாக்கி ! ...

" இ... இல்லையே ! "

" இருக்கிறதே !"

மானிட்டரை பார்த்தப்படி அவள் அழுத்திக் கூற, என் கை கால்கள் தந்தியடிக்க தொடங்கின !

" இ... இருக்க முடியாது... "

" உங்கள் கைப்பையில் ,இருக்கிறது முசியே... இதோ இங்கே ! "

வரும் ஆனால் வராது என்பது போல ஓடிக்கொண்டிருந்த உரையாடலை முடிக்க விரும்புபவள் போல கடுமையாய் கூறி, என் பையின் ஒரு பகுதியை அழுத்தி காட்டினாள் !

என் கண்கள் இருண்டு காதுகள் அடைக்க,

" படிச்சி பெரியாளா வருவான்னு பிரான்ஸ் அனுப்புனா...  பாவி... ஆயுதம் கடத்தி மாட்டிக்கிட்டானே... "

என் குடும்பத்தினரின் தமிழ் சினிமா புலம்பல் அசரீரியாய் காதுகளில் ஒலிக்க...

" இனி அவன் நம்ம வீட்டு வாசலை மிதிக்ககூடாது ஆமா ! "

சொம்பு தண்ணீரை குடித்துவிட்டு, துண்டை உதறியபடி குடும்ப " நாட்டாமை " தாத்தா தீர்ப்பு வாசிக்கும் காட்சி மனதை உலுக்க...

 காலம்,  சத்தியம் பண்ண குழந்தையை தாண்டும் பாக்யராஜ் பட கதாநாயகியின் கால்களைப்போல ஸ்லோ மோஸனில் வழுக்க, பையைத் திறந்தேன்...

" இதோ ! "

எனக்கு முன்னரே என் பையில் கைவிட்ட அதிகாரி அதை எடுத்து என் முகத்துக்கு நேராக  நீட்ட ...

அதுவரையிலும் ஓடிய பேதாஸ் சீன் மாறி பாரதிராஜா பட வெள்ளுடை தேவதைகள் என்னை சுற்றி லலலா பாட தொடங்கினார்கள் ! ( பிரான்ஸ்  ஏர்ப்போர்ட்டிலும் என் கற்பனையில் கிராமிய பெண்கள் தான் ! )அனைவருக்கும் பரிசுப்பொருட்கள் வாங்கிய நான், முபாரக் பதிவில் குறிப்பிட்டிருந்த ராஜா ரெக்கார்டிங் செண்ட்டரின் மகா கெட்ட நண்பர்களுக்காக விதவிதமாய் சிகரெட் லைட்டர்கள் வாங்கியிருந்தேன்... அவற்றில் ஒன்று அச்சு அசலாய் துப்பாக்கியைப்போல !


நூறு அடிக்கு முன்னால் போலீஸைக் கண்டாலே காரணமில்லாமல் கால்கள் நடுங்கும் " ரொம்ம்ம்ப பயந்த " பையன் நான்  ! அப்படிப்பட்ட என்னிடம் துப்பாக்கி வைத்திருக்கிறாயா எனக்கேட்டதும் அனைத்தும் மறந்து தொலைந்ததினால் வந்த வினை !

" பாருங்கள் ! சொன்னேனில்லையா ?.... "

" முசியே என்ன செய்கிறீர்கள் ? இங்கு நெருப்புகொழுத்தக்கூடாது என்று தெரியாதா ?! சரி சரி ! நீங்கள் கொண்டு செல்லலாம்... "

அதீதமான ஆர்வக்கோளாறில் அந்த லைட்டரை பெண் அதிகாரியின் முகத்துக்கு நேராக கொளுத்திக்காட்ட, அடுத்த அலம்பல் !

பதற்றமாய் விலகி கூறியவளிடம் பெரிய கும்பிடாய் போட்டுவிட்டு,

" நீயே வைத்துக்கொள் "

என்றேன் !

" நோ ! நோ ! எனக்கு தேவையில்லை "

( கொடுக்காமலேயே எடுத்துக்கொள்பவர்கள் நம்மூர் அதிகாரிகள்தான் ! ) அவள் பதற, தலையை சுற்றாமல் பக்கத்திலிருந்த குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டேன் ! ( உண்மையாக நண்பர்களே ! )

இன்று நினைத்தாலும் " உஸ்ஸ்... அப்பாடா.... " என வடிவேலுவைப்போலவே தலையை உலுக்கிக் கொள்வேன் ! இந்த சம்பவம் நடந்தது இருபது வருடங்களுக்கு முன்னால் ! அதுவே பாதுகாப்பு கெடுபிடிகள் தூள் பறக்கும் இன்று நடந்தால்....

" ஒரு நிமிடம் முசியே... ! "

மெல்லிய சிரிப்புடன் பெண் அதிகாரி இண்ட்டர்போனை உசுப்பியிருப்பாள்... அடுத்த ஓரிரு நிமிடங்களில் செண்ட்ரல் போலீஸும் ராணுவமும் இணைந்த பாதுகாப்புக் குழுவான  Vigipirate காவலர்கள் பாய்ந்து வந்து என்னை குப்புறத்தள்ளி விலங்கு பூட்டியிருப்பார்கள் !

பி.கு ! : சில நாட்களுக்கு முன்னர் பணி சார்ந்த பயிற்சி வகுப்பு ஒன்றுக்காக கோட் அணியும் தேவை ஏற்பட்டது...

" வாவ் ! உனது உடலமைப்புக்கு பொருந்தும்படியான மாடலில், கலரில் மிக அழகாக இருக்கிறது ! "

என்னுடன் பணிபுரியும் பெண் சிலாகித்தாள் ! ( கோட்டை மட்டும்  தான் !! )

அனுபவமும் காலமும் உடை தேர்வு பற்றிய என் ரசணையை எவ்வளவோ மேம்படுத்தியிருந்தாலும்... மேற்கூறிய சம்பவத்திலிருந்து இன்றுவரை விமான பயணத்துக்கு ஜீன்ஸ் டீ சர்ட்தான் !


.........................................................................................


மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த சில மாதங்களுக்கு பிறகு... இந்தியாவிலிருந்து பிரான்ஸ் திரும்புகிறேன்... நள்ளிரவில் மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைக்கான  வரிசை  ... பாதுகாப்பு சோதனை பணியில் இருந்தது இந்திய எல்லைக்காவல் ராணுவத்தினர் ! ஆங்கிலமும் புரியாது ! ஹிந்தி... ஹிந்தி... ஹிந்தி மட்டுமே !

எனக்கு முன்னால் நின்றிருந்தவரும் என் ஊரை சேர்ந்தவர்தான் ! அவரிடம் பேசி பழகியது கிடையாது என்றாலும் பல முறை பார்த்த நபர். அவர் கொஞ்சம் " செல்லக்கிருக்கு "  என  பழகியவர்கள் கூற கேட்டிருக்கிறேன் !

" க்யா ?! "

அவரது கைப்பையிலிருந்து இரண்டு உரித்த தேங்காய்களை எடுத்து அவரது முகத்துக்கு நேராக  நீட்டி கேட்டார் ஒரு ஜவான் !

" உம்ம்ம்... தேங்கா ! "

" ... "

" கோக்கனெட்... நு..நுவா து கொக்கோ ! "

தனக்கு தெரிந்த தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு என அனைத்து மொழிகளிலும் சொல்ல முயன்றார் அந்த மனிதர் !

"  நை  ! நை !... "

மணிரத்னம் பட கதாபாத்திரத்தையும் விட சிக்கனமாக பேசி, இறுகிய முகத்துடன் தலையாட்டி அனுமதி மறுத்த ஜவான் பக்கத்திலிருந்த குப்பைத்தொட்டியில் தேங்காய்களை போடுமாறு சைகை காட்ட...

" மூதேவி !  தேங்காடா  !.... ம்ம்ம்.... இரு...இரு.... "

சுற்றும் முற்றும் பார்த்தபடி புலம்பியவர் சட்டென திரும்பி எங்களையெல்லாம் விலக்கிக்கொண்டு கொண்டு சற்று தள்ளியிருந்த ஒப்பனை அறை நோக்கி ஓடத்தொடங்கினார் !வாக்கி டாக்கியை பாய்ந்து எடுத்த ஜவான் பாதுகாப்பு படையை விளிக்க, சூழ்நிலை பதற்றமடைய... எங்கள் அனைவரின் பார்வைகளும் ஆண்கள் ஒப்பனை அறையை நோக்கி...

சில நிமிடங்கள்...

இரண்டு தேங்காய்களையும் உடைத்து கைகளில் ஏந்தியபடி குணா பட கமலின் பரவச பார்வையுடன் வெளியே வந்தார் மனிதர் !


" இப்ப பாரு ! வெறும் தேங்காதாண்டான்னு சொன்னேன்ல ! "

" ஜாவ் ! ஜாவ் ! "

தலையில் அடித்துக்கொண்டார் எல்லைக்காவல்படை ஜவான் !

அனைத்து சோதனைகளும் முடிந்து விமான அழைப்பிற்காக காத்திருந்த என்னருகில் வந்து அமர்ந்தார் அந்த மனிதர் !

" தம்பிக்கும் நம்ம ஊருதானா ?... வீட்டு கொல்லையில காய்ச்சது ... ரெண்டு நாள் கறிக்கு உதவுமேன்னு கொண்டு வந்தா... குப்பையில் போடனுமாம்ல ?!...  ஊருல எல்லா பயலும் என்னை பைத்தியம்னு சொல்லிக்கிட்டு திரியறது தெரியும் தம்பி... ஆமா ! நாமெல்லாம் காரியக்கார பைத்தியம்... ! "

 எனது பதில்களையே எதிர்பார்க்காதவர் போல கையிலிருந்த தேங்காய்களை ஒருவித பிரியத்துடன் பார்த்தபடி பேசியவரை ஏறிட்டேன்...

ஒப்பனை அறையின் மேடை கல்லில் மோதிதான் உடைத்திருக்கவேண்டும்... அந்த பரபரப்பிலும் மிகச் சரியான பாதிகளாய், பிசிரின்றி உடைத்திருந்தார் மனிதர் !


" தேங்காய் பாம் " மற்றொரு பதிவிலும் வெடிக்கும் !
இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

70 comments:

 1. Replies
  1. முதல் கருத்துக்கு நன்றி நண்பரே ! இந்திய தினங்கள் இனிமையாக கழிய வாழ்த்துகள். மதுரை விழாவில் கலக்குங்கள் !!!

   நன்றி

   Delete
 2. வித்தியாசமான அனுபவங்களை நகைச்சுவையோடு பகிர்ந்து அசத்திவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. உடனடியாக படித்து கருத்திட்டதற்கு நன்றி நண்பரே !

   Delete
 3. இரண்டு தேங்காயைக் கூட வீணாக்க விரும்பவில்லை அவர். நீங்கள் ஒரு லைட்டரை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டீர்களே!

  ReplyDelete
  Replies
  1. படித்ததும் வாய்விட்டு சிரித்துவிட்டேன் நண்பரே... எழுதி, பல முறை படித்து சரிபார்த்த எனக்கே எட்டாதது ! மிக ஆழமாய் உள்வாங்கி வாசித்ததற்கும், உடனடி கருத்துக்கும் நன்றிகள் பல

   Delete
 4. எந்த ஒரு விஷயத்தையும் ஆவலாக படிக்கும் விதத்தில் மாற்றுவதில் நீங்கள் இன்னுமொரு எஸ் விஜயன்.

  தேங்காய் பாம் வெடிக்கப்போகும் இன்னொரு பதிவை ஆவலுடன் படிக்க காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. சமீபகாலமாகwhatsappல் வெளுத்துக்கட்டிக்கொண்டிருக்கும் உங்களை மீன்டும் வலைப்பூவின் பக்கம் வரவழைத்ததில் எனது எழுத்துக்கும் பங்கு உண்டு என்பது நிச்சயம் என்னை பெருமைபடுத்தும் விசயம்தான் !

   மற்றப்படி எஸ். விஜயன் அளவுக்கெல்லாம்...

   அடுத்து ஒரு சீரியஸ் பதிவுக்கு பின்னர் தேங்காய் பாம் மீன்டும் வெடிக்கும் !

   நன்றி

   Delete
 5. எப்பொழுதும் போலவே மிக யதார்த்தமான சற்று வித்தியாசமாய் நகைச்சுவை கலந்த பதிவு!
  ம்ம்..
  போட்டுத்தாக்குங்கள்.!
  திண்டுக்கல் நாகா லட்சுமி திரையரங்கில் காக்கிச்சட்டையும் உதயகீதமும் ரிலீஸ் ஆகி இருந்தன.
  உதய கீதம் பட டிக்கட் கிடைக்காமல் காக்கிச் சட்டைக்குப் போனோம்.
  அடுத்த முறைதான் அப்படம் பார்க்க முடிந்தது. அப்பொழுது ஐந்தாம் வகுப்பு என்று நினைக்கிறேன்.
  நான் பார்த்த நான்காவது படமாய் இருக்கலாம் அது.
  ஏண்டா இந்தக் கதையெல்லாம் என்று கேட்கிறீர்களா...!
  தேங்காயை கவுண்டமணி உடைத்தது உதய கீதத்தில் என்பதாய் என் நினைவு,,,,,,,,,,,,,
  ( இது இப்ப ரொம்ப முக்கியம், ம்ம்ம்...) என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.
  சந்தேகம் என்றால் வேறு யாரிடம் கேட்பது!
  நன்றி அண்ணா!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரரே !

   நீங்கள் சொன்னதுதான் சரி ! உதயகீதம்தான் ! ( திருத்திவிட்டேன் )

   உங்களின் திரைப்பட அனுபவம் பற்றி...

   அந்த காலகட்டத்தில் காக்கிச்சட்டைக்கு டிக்கெட் கிடைக்காமல் உதயகீதம் போனவர்கள்தான் அதிகம்... நீங்கள் உதயகீதம் டிக்கெட் கிடைக்காமல்...

   இந்த சம்பவத்தின் மூலம் தெரிவது என்னவென்றால்... அன்றே நீங்கள் மாற்றி யோசிக்க தொடங்கிவிட்டீர்கள்... இல்லை.... நீங்கள் மைக் மோகனின் ரசிகர் ?!

   ( ரொம்ப தேவைதான்னு புலம்பறீங்க... காமெடி பதிவு இல்லையா ?! அதான் கொஞ்சம் கலாய்ப்பும் அதிகம் ! )

   மீன்டும் நன்றி

   Delete
  2. அய்யோ அண்ணா..
   அன்றே நான் யோசிக்கத் தொடங்கி விட்டேனா....
   இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி நான் கடைசியில் என்ன ஆகப்போறேன்னு எனக்கே தெரியலையே..
   அடடா இது காமடி பதிவில்ல..
   அதுனாலதான் பின்னூட்டத்திலயும் காமடி வருதோ.........?
   அப்பெல்லாம் வீட்ல கூட்டிட்டுப் போற படத்துக்குத்தாண்ணா போகமுடியும்.
   தனியா .... நாம விரும்புற படத்துக்குப் போறதெல்லாம் நினைச்சுக் கூடப் பாத்ததில்லை.
   என்னோட டிமாண்ட் எல்லாம் படத்துக்கு நீங்க போயிக்கோங்க..எனக்கு நான் சொல்ற காமிக்ஸ் வாங்கிக் குடுத்தாப் போதும் என்கிறதுதான்
   அப்பப் படம் பார்க்கறது ஒண்ணும் பெரிசா என்னைக் கவரவில்லைன்னு தான் சொல்லனும்.
   வீட்ல என்னைய விட்டுட்டுப் போக முடியாதுங்கிற நேரத்தில போய்ப் பாத்த விரல் விட்டு எண்ணக் கூடிய படங்கள்ல இதுவும் ஒண்ணுங்கிறதுனால எனக்கு நினைப்பு இருக்கு.
   திண்டுக்கல்லில் இருந்த எங்க சித்தப்பா குடும்பத்தோட பார்த்த படம் இது.
   மற்றபடி,
   அன்றே நான் மாற்றி யோசிக்கத் தொடங்கிவிட்டேன் என்பதெல்லாம் சற்று அதிகப்படி...!
   நன்றி

   Delete
  3. விஜூ அண்ணாவின் நினைவாற்றலை கண்டிப்பா ஆய்வுக்கு உள்ளாகனும் சாம் அண்ணா!
   எல்லா விசயத்தையும் எப்படி தான் நினைவு வச்சுக்கிறார்! என்னை எல்லாம் டக்குனு கண்ணை மூட சொல்லி, இப்போ போட்டிருக்க டிரஸ் கலரை கேட்டாலே மறந்திருப்பேன்:)))))))

   Delete
  4. ஆமாம் சகோதரி... ஆய்வுக்கு உட்படுத்தினால் பல செய்திகள் வெளியே வரும் போல... உதாரணம்... தமிழ்நாட்டில் முதன்முதலாக மைக் மோகனுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்தது சகோதரராக கூட இருக்கலாம் ! ( கோபித்துகொள்ளாதீர்கள் ! பதிவிலிருக்கும் பகடியை பின்னூட்டத்திலும் தொடரவேண்டியது அவசியம் !!! )

   Delete
  5. சகோதரி,
   நீங்க பத்தாதுன்னு சகோதரரையும் இழுத்து விட்டிங்களா கலாய்க்க....?
   திரைப்பட நடிகர்கள் எவரும்இதுவரை என் உள்ளம் கவர்ந்ததில்லை.
   முதன்முதலாக என்பதில் இன்னும் பெருமையுடன் இணையத்து இயங்கும் உங்களுக்கு வேண்டுமானால் ரசிகர் மன்றம் ஆரம்பித்து விடலாம் என் ஊரில்.

   நி்ச்சயமாய் இந்தப் பின்னூட்டம் பகடி இல்லை.
   நன்றி

   Delete
  6. " உங்களுக்கு வேண்டுமானால் ரசிகர் மன்றம் ஆரம்பித்து விடலாம் என் ஊரில்... "

   அப்ப கட்சி கொடியை ரெடி பண்ணிட வேண்டியதுதான் சகோ !


   Delete
 6. "தேங்காய் பாம்" வெடிக்கவில்லை பரவாயில்லை. ஆனால் நீங்கள் போட்ட நகைச் சுவை பாம் வெடித்து நாங்கள் எல்லாம் பலியாகிவிட்டோம் சாமானியரே உங்களுக்குத் தெரியாதா? இந்த கருத்தை பதிவு செய்வதுகூட புதுவை வேலுவின் ஆவிதான் சாமானியரே!
  எங்கே? எங்கே? எங்கே? தேங்காய்க்குள் பாம் வைத்த பாவி எங்கே?
  விடாது உன்னை இந்த ஆவி!
  தொடாது இனி தேங்காயை பாவி!
  (இது ஒரு100 சதவீதம் நகைச் சுவை கருத்து பதிவு)
  புதுவை வேலு
  http://www.kuzhalinnisai.blogspot.fr

  ReplyDelete
  Replies
  1. ரசித்து படித்து ரசிக்கும்படியான கருத்தும் கொடுத்ததற்கு நன்றி !

   தமிழர்களான நமக்கு நம்மையே கிண்டலடித்துக்கொள்ளும் உணர்வு மிக கம்மி !.... இது என்னாலான நகைச்சுவை சீர்த்திருத்தம் !

   இந்த விசயத்தில் இந்தியாவில சர்தார்ஜிகளை மீற முடியாது ! அவர்களின் ஜோக் ஒன்று...

   " இரண்டு சர்தார்ஜிகள் செஸ் விளையாடுகிறார்கள் ! "

   ஜோக் அவ்வளவுதான் ?! புரிகிறதா ?

   நன்றி

   Delete
 7. அன்புள்ள அய்யா,

  ‘தேங்காய்க்குள்ள பாம்’ இருபது வருடங்களுக்கு முன்னால் நடந்ததை இப்பொழுது நடந்ததைப் போல சுவாரசியமாக சொல்லியிருந்தீர்கள்...பாராட்டுகள்.

  வெளிநாட்டிலிருந்து தாய்நாட்டிற்கு வருகின்ற பொழுது ...ஒவ்வொருவரின் எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்ப பொருட்களை வாங்கி வைத்து அதிகச் சுமையுடன் வருவதற்கு பட்ட அனுபவத்தை பகிர்ந்தது நன்றாக இருந்தது.

  சிகரெட் லைட்டர்கள் வாங்கியிருந்தேன்... அவற்றில் ஒன்று அச்சு அசலாய் துப்பாக்கியைப்போல !
  -வாங்கியதை மறந்து தவித்திருக்கிறீர்கள்... இன்று பயணத்தின் பொழுது வசதிக்காக விமான பயணத்துக்கு ஜீன்ஸ் டீ சர்ட்தான் ...அனுபவம் தந்த பாடமோ?

  சாமான்யன் அவர்களே... பிசிரின்றி தேங்காயை உடைத்திருப்பது...உடைக்கச்செய்திருப்பது அருமை.
  -மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்.
  manavaijamestamilpandit.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. அய்யா,

   பிசிரின்றி உடைந்த தேங்காயைப்போலவே உங்களின் கச்சிதமான கருத்து பகிர்வும் அருமை !

   நன்றி

   Delete
 8. இந்த முறை செம காமெடி பதிவு அண்ணா! so, நீங்க இருபது வருசமா பிரான்ஸ் ல இருக்கீங்க:) உங்க குடும்ப அமைப்பு எங்கள் பிறந்த வீட்டின் குடும்பத்தை ஒத்து இருக்கிறது அண்ணா!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோதரி !

   பதினேழு வயதிலேயே பிரான்ஸ் வந்துவிட்டவன் நான் ! அதுவே எனது கனவு என்றெல்லாம் சொல்ல மாட்டேன் ! அன்று நான் நினைத்தது வேறு... வாழ்க்கை எனக்கு கொடுத்து வேறு ! ஆனால் வாழ்க்கை கொடுத்தவற்றில் எந்த குறையுமில்லை... கொடுத்தவற்றில் மிக சிறந்த சிலதில் தலையாய ஒன்றை வெகு சீக்கிரமாய் என்னிடமிருந்து பறித்துவிட்டதே என்ற வருத்தம் மட்டும் உண்டு !

   நன்றி

   Delete
 9. ஆகா ... நன்றாக சிரிக்க வைத்த பதிவு எனது மூட் அப்செட் மாறி இன்செட்டாகி விட்டது...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பாராட்டு என் பாக்கியம்.

   நன்றி
   சாமானியன்

   Delete
 10. ***அனைவருக்கும் பரிசுப்பொருட்கள் வாங்கிய நான், முபாரக் பதிவில் குறிப்பிட்டிருந்த ராஜா ரெக்கார்டிங் செண்ட்டரின் மகா கெட்ட நண்பர்களுக்காக விதவிதமாய் சிகரெட் லைட்டர்கள் வாங்கியிருந்தேன்... அவற்றில் ஒன்று அச்சு அசலாய் துப்பாக்கியைப்போல ! ***

  நாசமாப் போச்சு போங்க! :)))

  ***ஊருல எல்லா பயலும் என்னை பைத்தியம்னு சொல்லிக்கிட்டு திரியறது தெரியும் தம்பி... ஆமா ! நாமெல்லாம் காரியக்கார பைத்தியம்... ! "***

  எனக்கென்னவோ "தேங்காய் பைத்தியம்" போல இருக்கு! :)))

  ______________
  ***ஸ்கேனரில் அமர்ந்திருந்த பெண் அதிகாரி சலனமற்ற முகத்துடன்***

  "Meet the parents "airport climax" பார்த்து இருக்கீங்களா? :)))

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் வருண் !

   போலீஸைக்கண்டால் காரணாமில்லாமல் கால் நடுங்கும் பழக்கம் எனது இன்றைய, நாற்பதை நெருங்கும் பருவத்தில்தான் மறைந்துள்ளது !

   தேங்காய் பைத்தியம் என்பதைவிட காரியக்காரபைத்தியம் சரியாக இருக்கும் !!

   "Meet the parents "airport climax" பார்த்து இருக்கீங்களா? :)))

   இல்லை பார்த்ததில்லை... நெட்டில் கிடைத்தால் பார்க்கிறேன் !!!

   நன்றி

   Delete
  2. சரி, இந்தாங்க தொடுப்பு.

   http://www.youtube.com/watch?v=6_-kw-0PvJc

   பார்த்து ரசிங்க! :))

   Delete
  3. அடுத்த "பாத்இ" இங்கே!

   http://www.youtube.com/watch?v=pofUsd9hEi8

   Delete
 11. மூச்சடங்க சிரிக்க வைத்த பதிவு சகோ. தேங்காய் bomb உண்மையில் வெடிக்கத் தான் செய்தது சிரிப்பாய் . நன்றி நன்றி !

  ReplyDelete
  Replies
  1. எனக்கு நகைச்சுவை பதிவு வருமா என்ற பயம் இருந்தது... உங்கள் பின்னூட்டம் கண்டதும் இன்னும் எழுத ஆசை வந்துவிட்டது ! ( சொந்த காசுல சூனியம் ?! )

   நன்றி சகோதரி

   Delete
 12. நண்பரே, அருமையான நகைச்சுவை அனுபவ பகிர்வு.
  ரசித்து படித்து சிரித்தேன். நல்ல அனுபவம் தான்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

   Delete
 13. ஹாஹாஹாஹாஹ் நல்ல தேங்காய் பாம்! எத்தனை வருடங்களுக்கு முன் நடந்தது?! நல்ல அருமையான நடை! எல்லோருக்கும் கொடுக்க வேண்டி பொருட்களும் வாங்கி, கோட்டில், கிடைத்த இடங்களில் செருகி...ஹஹஹ் பின்னர் நீங்கள் ஒன்றைக் குப்பைத் தொட்டியில் போட....ம்ம்ம்ம்ம் ..

  தேங்காய் பாவம் அந்த மனிதர்.....நல்ல காலம் அந்தத் தேங்காய்க்குள் சில சமயம் பூ போன்று முழைத்துக் கொண்டு இருக்குமே அது இல்லாமல் இருந்தது....இல்லை என்றால் அதையும் கீறிப் பார்த்திருப்பார்களோ!!!?

  ஆம் ஏர்போர்டில் இந்த செக்கிங்க் சில சமயம் ரொம்பவே முட்டாள் தனமாகக் கூட இருப்பது போலத் தோன்றும்....இது போன்ற செக்கிங்க் செய்து இல்லாத ஒன்றைத் தேடி சாதாரண மனிதர்களிடம்.....உண்மையாகவே பாம் வைத்திருக்கும் மனிதனை விட்டுவிடுவார்கள்....இல்லை என்றால் கடத்தல் பேர்வழிகளை....சூர்யா ஒரு படத்தில் ஏர்ப்ர்டில் கடத்துவாரே அது போல.....சாதாரண மனிதர்கள்தான் பாவம்...

  தங்கள் அனுபவத்தை படக் காட்சிகளுடன் ஒப்பிட்டு ஹஹஹ அருமையாகச் சொல்லியிருக்கின்றீர்கள்..நல்ல அனுபவவ்ப் பகிர்வு.....ரசித்தோம்....

  ReplyDelete
  Replies
  1. ஆழ்ந்து ரசித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றிகள் பல !

   உண்மையாகவே பாம் வைத்திருக்கும் மனிதனை விட்டுவிடுவார்கள்....இல்லை என்றால் கடத்தல் பேர்வழிகளை..

   உங்கள் கூற்று உண்மை ! எனக்கும் பல நேரங்களில் அபப்டி தோன்றினாலும் நமது பதுகாப்புக்குதானே என சமாதானப்படுத்திக்கொள்வேன் !

   Delete
 14. சாம்,

  நடைமுறை வாழ்கையில் இதுபோல பல வேடிக்கைச் சம்பவங்கள் சில கணங்களின் அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன. ரசிக்கத்தக்க பதிவு. பாராட்டுக்கள்.

  அந்த தேங்காய்க்குள்ளே வெடிகுண்டு காமடி உதய கீதம் படத்தில் வந்தது. இதுதான் கவுண்டமணியும் செந்திலும் சேர்ந்து நடித்த முதல் படம் என்று நினைக்கிறேன்.

  இன்னும் என்னென்ன வேடிக்கை அனுபவங்களோ? எழுதுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. ரசித்து படித்து ரசணையுடன் பின்னூட்டமிட்டதற்கு நன்றி காரிகன் !

   ஆமாம் ! அந்த படம் உதயகீதம்தான் ! திருத்திவிட்டேன்.

   Delete
 15. எந்த செக்யூரிடி செக்கிற்கும் பயப்படாத உங்கள் நண்பரை பாராட்ட வார்த்தைகளேயில்லை! எத்தனை தைரியமாக தேங்காயை உடைத்துக்காண்பித்திருக்கிறார்!!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அம்மா ! அந்த சம்பவத்தை நினைக்கும் போதெல்லாம் நீங்கள் குறிப்பிட்டதை எண்ணி நான் வியந்ததுண்டு !

   உங்கள் வருகைக்கு நன்றி

   Delete
 16. எனக்கு விமான பயணம்.....விமான நிலையம்.. எதுவும் பரிச்சமில்லை..... நான் சிறுவனாக இருந்த காலத்தில் செத்துப் போன என் அப்பா விமானத்தில் போவதாக மற்றவர்கள் சொல்லி... அதை நானும் என் அப்பாவைக் பற்றி கெட்கும்போது அதை வழிமொழிந்த ஞபாகம்தான் வருகிறது

  ReplyDelete
  Replies
  1. தோழரே,

   வாழ்க்கையின் வலியை, சிறு பின்னூட்டத்தின் வாயிலாக, போகிற போக்கில் பளிச்சென சொல்லவும் முடியுமா ? உங்களின் தனிப்பட்ட விபரங்கள் எனக்கு தெரியாது... நிச்சயம் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவீர்கள்.

   Delete
 17. கருத்து சொல்ல வரவில்லை
  கற்கண்டு தரும் சுவைமிகு வாழ்த்து
  சொல்லவே யாம் வந்தோம் யாதவன் நம்பியாக!

  தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர்உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும்
  அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்

   தீமை இருள் அகன்ற இந்த நன்னாளில் உலகெங்கும் மனிதநேய ஒளி பரவட்டும் !

   Delete
 18. இனிய திருநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்

   தீமை இருள் அகன்ற இந்த நன்னாளில் உலகெங்கும் மனிதநேய ஒளி பரவட்டும் !

   Delete
 19. தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ....!

  ReplyDelete
 20. தங்களின் வாக்கைப் போல... பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடையா முடியவிட்டாலும் வயதில் ஐம்பதை தாண்டி ஐம்பத்து நான்கை அடைந்துவிட்டேன். திரு.சாமானியன் அவர்களே!.........

  ReplyDelete

 21. உங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதயகனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 22. வணக்கம் சகோதரரே!

  என் வலைத்தளத்தில் வந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி!

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
  இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  தேங்காய்க்குள் பாம் நல்ல நகைச்சுவை!
  உண்மையாகவே வாசித்துக் கொண்டு போகும்போது
  காட்சியையும் காணவைத்த உங்கள் கதை நடை மிக இயல்பு!.. சிறப்பு!

  தேங்காயை உடைத்துக் காட்டிய அந்த நண்பரின் துணிவைப்
  பாராட்டாமல் இருக்க முடியவில்லை!

  அதேபோல் உங்களையும் வாழ்த்தாமற் போக மனமில்லை!..:)
  நல்ல நகைச்சுவை! இரசித்தேன்! சிரித்தேன்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. இந்த சாமானியனின் நகைச்சுவையை ரசித்து படித்து, சிரித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி சகோதரி !

   Delete
 23. ஈழப் போராட்டத் தொடக்க காலத்தில தேங்காய் குண்டு, பனங்காய் குண்டு இருந்தது. அதாவது, பெட்டி ஒன்றினுள் இவற்றை வைத்துவிட்டுக் குண்டுப் புரளியைப் பரப்பி விட, காவற்றுறை வந்து திறந்து பார்த்தால் இப்படி இருக்கும்.
  ஆனால், உங்கள் தேங்காய்க்குள்ள பாம்! மாறுபட்டது. நகைச்சுவையுடன் பல மீட்டல்களைத் தந்திருக்கிறது. சிறந்த பதிவு.
  தங்களுக்கும்
  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. எனது சாதாரண நகைச்சுவை பதிவு ஈழப்போராட்டத்தின் நினைவுகளை மீட்டியதில் பெருமை !

   நன்றி

   Delete
 24. ஏர்போர்ட் நிகழ்வுகள் நினைவுகள் அருமை நண்பரே
  வாழ்வில்தான் எத்தனை எத்தனை நகைச்சுவை அனுபவங்கள்
  நன்றி நண்பரே

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அய்யா !

   வாழ்க்கையை விலகி நின்று பார்த்தால் அனைத்துமே வேடிக்கைதான் !

   தங்கள் வருகைக்கு நன்றி

   Delete
 25. ஆயுதம் கடத்தியவன் என்ற முத்திரையில் கிடைக்கும் விமர்சனங்களை நீங்கள் நினைத்தது சிரிப்பை வரவழைத்தது...தமிழ் படங்களின் உபயம் :))
  நீங்க டூயட் முடிந்து வரும்வரைக்கும் அந்தப் பெண்மணி காத்திருந்தாரா சகோ? :)
  நல்ல வேளை வெறும் தேங்காய் தான் உடைத்தார் அவர்...
  அருமையான பதிவு..

  ReplyDelete
  Replies
  1. தமிழ் படங்களின் க்ளிஷே காமெடி டெம்போவுக்காக கற்பனையாய் கலந்தது என்றாலும், துக்க வீட்டில் கூட டி. ராஜேந்தரைப்போல முடியை கோதி அழுபவர்களையும் கொண்டதுதானே நம் சமூகம் ?!!!

   " நீங்க டூயட் முடிந்து வரும்வரைக்கும் அந்தப் பெண்மணி காத்திருந்தாரா சகோ? :)... "

   லொள்ளு ?!!! பெண்மணி என்று பதிவில் குறிப்பிட்டிருந்தாலும் உண்மையில் அந்த அதிகாரி அழகான இளம்பெண்... துப்பாக்கியால லாக் ஆகாம இருந்திருந்தா அந்த பெண்ணுடனேயே டூயட் பாடியிருப்பேனோ என்னவோ ?!!! ( கற்பனையில்தான் !

   வருகைக்கு நன்றி சகோதரி

   Delete
 26. நல்ல அனுபவம் தான் நண்பரே......

  தேங்காய் எல்லோரையும் பாடாய் படுத்துகிறது! :) ரயிலில் எனக்குக் கிடைத்த அனுபவம் பற்றி முன்னர் ஒரு பதிவில் எழுதியதுண்டு!

  http://venkatnagaraj.blogspot.com/2014/08/blog-post_20.html

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கு நன்றிகள் !

   உங்கள் பதிவை படித்தேன்... ரசித்தேன்... சிரித்து பின்னூட்டமும் பதிந்துவிட்டேன் !

   தொடருவோம் !

   Delete
 27. Interesting post. It is always challenging to plan for gifts to relatives and friends and pack it with the limited weight availability. While returning, the challenge will be bringing stuffs for friends

  ReplyDelete
  Replies
  1. நண்பருக்கும் நம்மை போலவே பயண அனுபவம் உண்டோ... திரும்பும்போது நண்பர்களுக்கு மட்டுமா... நம்வீட்டு சமையலறைக்கும் சேர்த்தல்லவா சேகரிக்க வேண்டும் !!!

   வருகைக்கு நன்றி நண்பரே !

   Delete
 28. This comment has been removed by the author.

  ReplyDelete
 29. நன்று உங்கள் பதிவுகள்.எனது சிறு முயற்சியை பாருங்களேன் .என் வலை :
  http://puthumaai.blogspot.in/2014/10/4.html?showComment=1414585922262#c6714334428622279855

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கு நன்றி நண்பரே ! உங்கள் பதிவினை படித்து பின்னூட்டமிட்டுவிட்டேன். தொடர்ந்து எழுதுங்கள்.

   நன்றி

   Delete
 30. சாம் சார்

  நல்ல நகைச்சுவைப் பதிவு . படிக்க சுவையாக இருந்தது . உங்கள் எழுத்து வீச்சு ஒரு அழகு . ரசித்தேன் . உங்களைத் தொடர்வேன் .

  ReplyDelete
  Replies
  1. சார்லஸ் !

   மிகைப்படுத்தி சொல்லவில்லை ! உங்களின் மறுவருகை எனக்கு மிகவும் மகிழ்வான ஒன்று. எனது வலைப்பூவினை நீங்கள் தொடர்வதில் உவகை ! தங்களின் பாராட்டுக்கு நன்றி

   Delete
 31. ஐயா வணக்கம்!

  கம்பன் விழா இனிதே நிறைவுற்றது.
  விழாவைத் தொடா்து அதன் தொடா்பணிகளும் நிறைவுற்றன.

  மிக விரைவில் மின்வலையில் காணொளியைத் தருவேன்.

  நிறைந்த தமிழ்ப்பணியில் இருப்பதால் எல்லாப் பதிவுகளையும் படித்து மகிழ வாய்பின்றி வாழ்கின்றேன்.

  மாதத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமை யாப்பிலக்கணம் வகுப்பையும் இலக்கியச் சந்திப்பையும் நடத்துகிறேன்.
  இயலும் காலங்களில் வருகை தருக.

  மாங்காய் பழுத்தினிக்கும்! மாண்பினிக்கும்! உன்னுடைய
  தேங்காய் வெடிகதை தேனாய் இனித்ததுவே!
  நெஞ்சுள் பதிந்த நினைவுகளை நெய்துள்ளீர்
  கொஞ்சும் தமிழைக் குவித்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 32. நண்பரே என்ன ஆயிற்று உங்களுக்கு ?

  ReplyDelete
 33. சாம்,

  ஏனிந்த திடீர் மவுனம்? புதிய பதிவுகள் எப்போது?

  ReplyDelete
 34. கனவில் வந்த காந்தி

  மிக்க நன்றி!
  திரு பி.ஜம்புலிங்கம்
  திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து

  புதுவைவேலு/யாதவன் நம்பி
  http://www.kuzhalinnisai.blogspot.fr

  ("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)

  ReplyDelete
 35. ஹலோ! நண்பரே !
  இன்று உலக ஹலோ தினம்.
  (21/11/2014)

  செய்தியை அறிய
  http://www.kuzhalinnisai.blogspot.com
  வருகை தந்து அறியவும்.
  நன்றி
  புதுவை வேலு

  ReplyDelete
 36. அண்ணா என்னாயிற்று...?
  மின்னஞ்சல் ஒன்றும் அனுப்பி இருந்தேன்.
  தொடர்பு கொள்ளும் வேறு வழியும் தெரியவில்லை!
  நலம் தானே?

  ReplyDelete